அன்புடையீர் நல்வரவு ,

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,
தேவாங்கர்களாகிய நாம் அனைவரும் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்து வந்தாலும் தேவாங்கர் என்னும் உணர்வு நம்மை ஓன்று சேர்க்கிறது. மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்ற வாக்கிற்கு இணங்க காலத்திற்கு ஏற்ப நாம் நமது குல நிகழ்வுகளை தகுந்த தொழில்நுட்பத்தை கொண்டு பதிவு செய்வது அவசியமான ஓன்று.

இந்த புதியபக்கம் நமது தேவாங்க சமூக செய்திகள்,சடங்குகள்,வரலாறு & அண்மை நிகழ்ச்சிகளை அறிந்துகொள்ளவும் தேவைப்படும் போது பார்க்கவும் உருவாக்கப் பட்டுள்ளது.
உறவுகள் தங்கள் பகுதியில் உள்ள கோவில்&குல தெய்வம் கோவில்களில் நடைபெறும் திருவிழா நிகழ்ச்சிகள் மற்றும் படங்களை இடம்பெற செய்யவும்.

தங்கள் கருத்துக்கள் இந்த தளத்தை மேன்படுத்த உதவும் ஆகயால் தயவுசெய்து கருத்திடவும் . ( தமிழில் கருத்திட தமிழ் எழுதியை பயன்படுத்தவும்)

நன்றி.

5/17/13

ஸ்ரீசைலமும் தேவாங்கரும்

    ஆக்கம்:தேவாங்கர் செம்மல் வைணவக்கடல் புலவர் மா.கிருஷ்ணமூர்த்தி(சேலம்) 
    மங்கலமான சிவபெருமான் கோவில் கொண்டிருக்கும் திருத்தலங்களுள் சிறப்பானது ஸ்ரீசைலம் ஆகும்.  ஆந்திர மாநிலத்தில் உள்ளது இத்திருத்தலம். 
   கர்னூல் மாவட்டம் ஆத்மகூர் தாலுக்காவில் உள்ள நல்லமலை என்றும் கருமலை என்றும் பெயர் பெற்ற மலை முகடுகளுக்கிடையே இத்திருத்தலம் அமைந்துள்ளது. 
     மூர்த்தி, தலம், தீர்த்தம் என்ற மூன்றினாலும் புகழ் பெற்றது.  இங்கு கிருஷ்ணாநதி வடதிசை நோக்கிப் பாய்கின்றது.  இங்கு இதற்கு பாதாள கங்கை என்று பெயர்.
     கடல் மட்டத்திலிருந்து 1500 அடிகள் உயரத்தில் அமைந்துள்ளது.  பூகோள ரீதியாக 16:12 வடரேகை 78 டிகிரி 5 கிழக்கு ரேகையில் சிறப்புறுகின்றது.
      சுவாமியின் திருநாமம் ஸ்ரீமல்லிகார்ஜுன மூர்த்தி அம்பாள், ஸ்ரீபிரமராம்பா. 
       பன்னிரெண்டு ஜோதிர்லிங்கங்களுள் ஒன்றாக இருக்கின்றார் ஸ்ரீமல்லிகார்ஜுன மூர்த்தி.  18 சக்தி பீடங்களுள் ஒன்று ஸ்ரீபிரம்மராம்பாவின் பீடம்.  அஷ்ட ஐஸ்வர்யங்களின் பிறப்பிடம் ஆகவும், பராசர மகரிஷி, பாரத்வாஜ மகரிஷி இவர்கள் தவம் புரிந்த புண்யசேத்திரமாகவும் விளங்குகின்றது. 
      யுகங்கள் நான்கிலும் ஆலயப் பெருமைகள் பேசப்படுகின்றன. 
 1.கிருதயுகத்தில் ஹிரண்ய கசிபு பூஜை செய்துள்ளார்.
2.திரேதாயுகத்தில் தமது வனவாச காலத்தில் சீதா தேவியுடன் ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி சேவிதத்துடன், இருவரும் லிங்கப் பிரதிஷ்டை செய்துள்ளனர்.  இராமபிரதிஷ்டித தசசகஹ்ர லிங்கம் என்றும் சீதா பிரதிஷ்டித சகஸ்ரலிங்கம் என்றும் லிங்கங்கள் இன்றும் இங்கு வழிபடப்படுகின்றன. 
3. துவாபரயுகத்தில் பாண்டவர் இச்சேத்திரத்தில் தங்கி இருந்தனர்.
1.ஸத்யோஜாதலிங்கம்,
2.வாம தேவ லிங்கம்,
3.தத்புருஷலிங்கம்,
4.ஈசானலிங்கம்,
5.அகோரலிங்கம்
என்ற ஐந்து லிங்கங்களைப் பிரதிஷ்டை செய்தனர்
.  இவ்வைந்து லிங்கங்களுக்கும் இன்றும் பூசனைகள் நடைபெறுகின்றன. 
4. கலியுகத்தில் ஆதிசங்கரர் தங்கியிருந்து தவம் புரிந்தார்.

நான்கெல்லைகள் :(வாசல்கள்):
        ஒவ்வொரு சேத்திரத்திற்கும் நான்கு எல்லைகள் குறிப்பிடப்படுவது வழக்கம். அதன்படி, 384 கி.மீ. நீள அகலம் கொண்ட இம்மாபெரும் சேத்திரத்திற்கு பிரகாசம் மாவட்டத்தில் உள்ள திரிபுராந்தகம் கிழக்கு வாசல் என்றும் கடப்பா மாவட்டத்தில் உள்ள சித்தவடம் தெற்கு வாசலாகவும், மெகபூப் நகர் மாவட்டத்தில் உள்ள அலம்புரம் மேற்கு வாசலாகவும் உமாமஹேஸ்வரம் வடக்கு வாசலாகவும் உள்ளதுடன்  புஷ்பகிரி சேத்திரம் தென்கிழக்கிலும் (ஆக்னேயம்), சோமசீல சேத்திரம் தென்மேற்கிலும்(நைருதி) சங்கமேஷ்வர சேத்திரம் வடமேற்கிலும் (வாயு) எல்லேஸ்வர சேத்திரம் வடகிழக்கிலும் (ஈசானம்) என திசைகள் நான்கிலும் கோணத்திசைகள் நான்கிலும் என வாயில்கள் நான்கு உபவாயில்கள் நான்கு என்று எட்டு வாயில்கள் புராணங்களில் சிறப்புறச் சொல்லப்பட்டுள்ளன. 
    மேலும் சிங்கவேள் குன்றம் என்று 4000 திவ்வியப் பிரபந்தங்களில் சிறப்புற்றுள்ள அஹோபில  சேத்திரத்திற்கு ஸ்ரீசைலம் சபா மண்டபமாக உள்ளது. 
ஆலய மகிமையை விரித்துரைக்கும் நூல்கள்:
இதிகாசங்களில் இராமாயணம், மஹாபாரதம் என்ற இரண்டிலும் ஸ்ரீசைல பெருமைகள் பேசப்படுகின்றன.  18 புராணங்களிலும் ஸ்ரீசைலம் காணப்படுகிறது. 
        கந்த புராணம் ஸ்ரீசைல காண்டம் என ஒரு காண்டத்தையே அதன் பெருமை கூற ஒதுக்கி உள்ளது. 
       ஆதிசங்கர பகவத் பாதர் இங்கு தவம் செய்துதான் சிவானந்த லகரி இயற்றினார்.  இவர் தமது யோக தாராவளி என்ற நூலில்ஸித்திம் ததாவித மனோநிலையம் ஸமாதௌ ஸ்ரீசைல ச்ருங்குயரேஷு கதோபல ப்ஸ்ய”(இந்த ஸ்ரீசைல கற்குகைகளிலேயே தான் முக்தி அடைய வேண்டும்) என்று விரும்புவது இத்திருத்தல மகிமையை விளக்குவது ஆகும்.
        சைவசமயக் குரவர்கள் நால்வரில் சரியைத் திருத்தொண்டினால் ஞானம் பெற்ற திருநாவுக்கரசு நாயனார் இம்மல்லிகார்ச்சுன மூர்த்தியை தரிசித்தார்.  தென்கயிலாய மூர்த்தியான இப்பெருமானைத் தரிசித்து ஆளும் நாயகனின் கையிலையின் இருக்கை காணவேண்டும் என்று திருக்கையிலாய யாத்திரை புறப்பட்டா என்பது பெரியபுராண வரலாறு.
ஸ்ரீசைலத்தை அரசாண்ட மன்னர் பரம்பரைகள்:
1) சாதவாகனர்கள் : கி.பி.முதல் நூற்றாண்டு முதல் மூன்றாம் நூற்றாண்டு வரை.
2) மூன்றாம் நூற்றாண்டின் பின் இட்வாக மன்னர்கள். 
3) இட்வாகு குலமன்னன் புருஷதத்துவைப் பல்லவ மன்னன் சிம்மவர்மன் வென்று பல்லவ நாட்டுடன் ஸ்ரீசைலத்தை இணைத்துப் பல்லவன் சிம்மவர்மன் அரசாண்டான். 
4) நான்காம் நூற்றாண்டின் பிற்பகுதியில் கிருஷ்ணா, கோதாவரி நதிகளுக்கிடைப்பட்ட பகுதிகளை விஷ்ணுகுண்டியர்கள் அரசாண்டார்கள். 
5) ஆறாம் நூற்றாண்டின் ஆரம்ப காலங்களில் பல்லவர்களிடம் இருந்து கடம்பர் ஆட்சிக்கு ஸ்ரீசைலம் வந்தது.
6) ஆறாம் நூற்றாண்டின் மத்தியில் தெலுங்குச் சோழர்களின் ஆட்சிக்கு உட்பட்டது.
7) எட்டாவது நூற்றாண்டில் சாளுக்கிய வம்சத்தைச் சேர்ந்த கீர்த்தி வர்மனை ராஷ்டிரகூடர்களின் தண்டிதுர்கா என்பவன் வெற்றி கொண்டு ஆண்டான்.  கி.பி.973 வரை ஸ்ரீசைலம் ராஷ்டிர கூடர் வசம் இருந்தது.
8) கி.பி.973 ல் சாளுக்கியர் ராஷ்டிரகூடரை வென்று ஸ்ரீசைலத்தைத் திரும்பவும் கைப்பற்றினர். 
9) சாளுக்கியருக்கும் சோழ மன்னர்களுக்கும் இடையே நடந்த போரைப் பயன்படுத்திக் கொண்டு கொங்கு மன்னன் ஸ்ரீசைலத்தைக் கைப்பற்றினார்.  கி.பி.1162 வரை இவர்கள் ஆட்சியில் ஸ்ரீசைலம் இருந்தது. 
10) கி.பி.1162 முதல் காகதீய மன்னர்கள் ஆளுகைக்கு உட்பட்டது ஸ்ரீசைலம்.
11) கி.பி.1323 ல் டில்லி சுல்தான்களால் காகதீயரின் 2 வது பிரதாபருத்திர சக்கரவர்த்தி சிறை பிடிக்கப்பட்டு, டெல்லி செல்லும் வழியில் மாண்டு போனார்.  அப்போது 72 ஆந்திர சிற்றரசர்கள் முகமதியருடன் போரிட்டு இந்து சாம்ராஜ்யத்தை ஏற்படுத்தினர்.இவர்களுள் அத்தங்கியை அரசாண்ட வேமா ரெட்டி  முக்கியமானவர்.  இவர்தான் கொண்ட வீட்டிரெட்டி ராஜாவாக அழைக்கப்பட்டார்.  இவர்கள் காலத்தில் ஸ்ரீசைலத்திற்கும் பாதாள கங்கைக்கும் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டன. 
12) ரெட்டி ராஜாக்களுக்குப் பின் விஜயநகர மன்னர்கள் அரசாண்டார்கள்.  கிருஷ்ண தேவராயர் காலத்தில் பற்பல திருப்பணிகள் செய்யப்பட்டன.
13) இதன்பின் வீரசிவாஜி மராட்டிய சைனியம் ஒன்றை ஆலயப் பாதுகாப்பிற்கு ஏற்படுத்தினார். 
14) இதன்பின், ஒளரங்கசீப்பின் அதிகாரத்திற்கு உட்பட்டு ராபீம்சிங் கவர்னர் ஆனார்.
15) அதன்பின் ஹைதராபாத் நவாப்புகள் வசம் ஆயிற்று. 
16) நவாப் நிஜாம் அலிகான் அசப்ஜா கி.பி.1782 ல் ஸ்ரீஸ்ரீஸ்ரீசிருங்கேரி ஜகத்குருவிடம் ஸ்ரீசைலத்தையும் அதன் சுற்றுப்புறங்களையும் ஒப்புவித்து விட்டான். 
17) மேற்கண்ட நவாபே தன் நாட்டின் தென்பகுதியை ஆங்கிலேயரின் கிழக்கிந்திய கம்பெனிக்கு ஒப்படைக்கும் போது ஸ்ரீசைலத்தையும் சேர்த்து ஒப்புவித்து விட்டான். 
18) ஆங்கிலேயர்கள் ஆலய பரிபாலத்தை புஷ்பகிரி பீடாதிபதிகளிடம் 1840 ல் ஒப்புவித்தனர். 
19) இம்மடாதிபதிகள் ஆலயத்தைச் சரிவர நிர்வகிக்காததால் ஜில்லா கோர்ட் நிர்வகித்தது. 
20) 1949 ல் அறநிலையத் துறையிடம் ஒப்புவிக்கப்பட்டு இன்றுள்ள  நிலைக்கு மாற்றங்கள் பெற்றது.  காலத்தையும் வென்று நிர்வாகம், அரசர்களையும் வென்று தான் மட்டும் கம்பீரமாக நிற்கிறது  ஸ்ரீசைலம்.
சேலமும், ஸ்ரீசைலமும்:-
          தேவாங்க ஜகத்குரு பீடங்கள் ஐந்தனுள் இரண்டாவது பீடம் ஸ்ரீசைலம்.  இன்று இப்பீடாதிபதிகள் ராஜமுந்திரியில் வசிக்கின்றனர்.  தேவாங்க சத்திரம் ஒன்று இங்கு விளங்கி வருகின்றது.  இங்குக் கோயில் கொண்டுள்ள மல்லிகார்ச்சுன மூர்த்தி தேவாங்க கோத்திரங்களுள் பலவற்றிகு வீட்டு தெய்வமாக (கிருஹ தெய்வமாக)) விளங்கி வருகின்றார்.  மல்லையா, பெட்டது மல்லையாத, மல்லிங்கர் மல்லிகார்ச்சுனர் என்ற பல பெயர்களில் தேவாங்கர் இம்மூர்த்தியை வணங்கி வருகின்றனர்.  போடி நாயக்கனூரில் அகஸ்திய மகரிஷி கோத்திரத்தாரும், சேலம் முதலான பகுதியில் மாண்டவ்ய மகரிஷி கோத்திரத்தாரும், முத்து மகரிஷி செவ்வலேரு குலத்தாரும் இன்னும் பல கோத்திரத்தாரும் மல்லிகார்ச்சுன மூர்த்தியை வணங்கி வருகின்றனர். 
        சேலம் என்ற பெயர் பண்டைய தமிழ் இலக்கியங்களிலும் கீதையிலும் காணப்படுகின்றது.  சேலம் என்ற பெயரைத் தேவாங்கர்கள்தான் சூட்டியுள்ளனர். “சேலாஜின குசுமோஎன்பது கீதையின் வரி. 
ஆஜினம்= மான்தோல்
குசும= தர்பைப்புல்
சேலா என்பதற்குப் பட்டு வஸ்திரம் என்று ஸ்ரீமத் ராமானுஜர் பொருள் கொண்டுள்ளார்.  எனவே, ராமானுஜர் காலமான சுமார் ஆயிரம் ஆண்டுகட்கு முன்பு தேவாங்கர் இங்கு பட்டு வஸ்திரம் நெய்து வாழ்ந்து இருந்தனர் என்று தெரிகின்றது. 
    சிலப்பதிகாரத்திற்கு முந்தையது பெருங்கதை என்ற உதயணன் சரிதம்.  இக்காவியத்தில் சேலம் திருத்தி என்ற தொடர் வருகின்றது. 
    சுமார் 1500  ஆண்டுகட்கு முற்பட்ட பண்டைய உரையாசிரியர் ஒருவர் பெருங்கதைக்குக் குறிப்புரை எழுதியுள்ளார்.  அவர் சேலம் என்ற சொல்லுக்கு சேல் வடிவமைந்த சேலைகளை நெய்வோர் வாழும் ஊர் என்று எழுதி இருக்கின்றார். 
    சேல் என்றால் கெண்டை மீன்.  மீன் வடிவங்களை சேலையில் அமைத்து நெய்து வாழ்ந்து இருக்கின்றனர் நம் குல முன்னோர்.  சிலப்பதிகாரத்தின் பண்டைய உரையாசிரியர் ஆன அடியார்க்கு நல்லார் தம் உரையில் ஆடைவகைகளைக் குறிப்பிடும் பொழுது தேவாங்கம் என்று குறிப்பிடுகிறார். 
     பண்டைய நாளில் தேவாங்கர் குடிபெயரும் பொழுது ஒற்றைக் குடும்பமாகக் குடிபெயர்வது இல்லை.  இதற்குக் காரணம் நெசவுத் தொழிலே ஆகும். 
     அதிகாலை விடிந்ததும், விடியாததுமாக மடிப்புக் கட்டுவது நம் வழக்கம். குளிர்காற்று நீங்கி வெயில் உறைக்க ஆரம்பித்தால், பாவு நூல்கள் ஒன்றோரு ஒன்று பின்னி விடும்.  அப்படி ஆயின் நெய்வதற்குச் சிரமம்.
   இன்றும் ஒரு மடிப்பை நீட்டி அதைச் சுற்றுவதற்குக் குறைந்தது மூன்று பேர் தேவை.  இக்காரணத்தால் நம்மவர் குடிபெயரும் பொழுது, தேவாங்கர் வாழ்ந்த பகுதிக்கு மட்டும் தான் குடியேறுவார்.  அல்லது பல குடும்பங்களாக தொழில் முறைக்காகக் குடிபெயர்ந்து உள்ளனர். 
      குளிர்ந்த காற்றினுக்குக் கன்னடத்தில்,  சைலகாளிஎன்று பெயர்.  சைலஎன்ற சொல் மலையையும்  குறிக்கும்.  குளிச்சியையும் குறிக்கும்.
   இம்மாவட்டத்தில் குடியேறிய தேவாங்க மக்கள் சேர்வராயன் ஏற்காடு மலையின் குளிர்ந்த காற்றையும்,  மலைப் பகுதியையும் கருத்தில் கொண்டு இங்குக் குடியேறி இருக்கின்றனர்.  தங்களின் குருபீடத்தையும் மலையையும் குளிர்ந்த காற்றினையும் கருத்தில் கொண்டு சைலம் என்று பெயரிட்டு மகிழ்ந்து உள்ளனர்.  இதுவே பிற்காலத்து சேலம் என்று மருவி இருக்கின்றது. 
இன்றும் சேலம் மாவட்டத்தில் நெசவுத் தொழிலே முதன்மை பெற்று உள்ளது. 
    இவ்வளவு தூரம் ஸ்ரீசைலத்தை ஆராய வேண்டிய அவசியம் தான் என்ன? அன்றும் சரி இன்றும் சரி ஸ்ரீசைலம் தேவாங்கரின் வாழ்க்கை சரித்திரம் இவற்றுடன் பின்னிப் பிணைந்து நீரும் நீரும் கலந்தாற்போல் கலந்து உள்ளது. 
தேவதாசமைய்யனும் ஸ்ரீசைலமும்: ‘
    தேவாங்க அவதாரங்கள் ஏழு.1)தேவலர், 2) வித்யாதரர், 3)புஷ்பதந்தன், 4)வேதாள மகரிஷி, 5)வர்ருசி, 6)தேவசாலி, 7)தேவதாசமைய்யன் என்பனவாம். 
     இவ்வேழாவது அவதார காலத்தில், தாசமைய்யன் அவர்கள் மிகமிக நீண்ட கொடித் துணி ஒன்றனை நெய்து மல்லிகார்ச்சுன மூர்த்திக்குத் துவஜ ஆரோகணம் செய்தார். இது ஒரு சிவராத்திரி அன்று நிகழ்நத்து. 
     இத்துணிக்கு என்ன விலை தரலாம் என்று கேட்ட பொழுது, ஒருவர் மூன்று விரலை நீட்டி மூன்று உலகங்களையும் விலையாகத் தரலாம் என்றாராம். அப்போது திருமாலின் சக்கரம் வந்து மூன்று விரல்களையும் அறுத்துவிட்டதாக கர்ணபரம்பரைச் செய்தி கூறுகின்றது.
       திருமாலின் நாபிக்  கமல நூல், ஸ்ரீசவுடேஸ்வரியின் கங்கண மகிமையால் வளர்ந்த நூல் சாட்சாத் தாசமைய்யனே நெய்தது எனில் அதற்கு விலைதான் ஏது?
       இக்கொடித்துணியின் பேரழகில் திரு உள்ளம் பறிகொடுத்த ஸ்ரீமல்லிகார்ச்சுன மூர்த்தி என்ன வரம் வேண்டும் கேளுங்கள் என்றார். 
       சிறந்த தவயோகியான தாசமைய்யன் ,”சுவாமி!நீர் இங்கு மல்லிகார்ச்சுனன் என்ற திருநாமத்துடன் விளங்குகின்றீர். நீங்கள் என் குலத்திற்குப் பிரதானமான இராமலிங்கேசுவரர் என்ற திருநாமத்துடன் என் தலைநகர் ஆமோத நகருக்கு எழுந்தருள வேண்டும் என்றும் இச்ஸ்ரீசைலத்தில் பவுராம்பிகை என்ற திருநாமத்துடன் விங்கும் அன்னை என் தேவாங்க குலத்திற்குரிய ஸ்ரீசவுடேஸ்வரியாக ஆமோத நகருக்கு எழுந்தருள வேண்டும் என வேண்டினார். 
    இவ்வார்த்தைக் கேட்டு இறைவன் மகிழ்ந்தான்.  நான் இராமலிங்கேசுவரராக வருகின்றேன். அம்பிகையிடம் நீரே நேரில் கேட்டுக் கொள்க! என்றருளினார்.        அம்மையிடம் கேட்டபோது அவள், " என்னைத் திரும்பப் பாராது அழைத்துச் செல்க! "  என்றருளினாள். "திரும்பப் பாராது அழைத்துச் சென்றால் நீர் வருவதையும் வராததையும் எங்ஙனம் அறிந்து கொள்வது"என வினவ,"என் பாதச் சிலம்பொலியைக் கேட்டு அழைத்துச் செல்க"! எனப் புனிதவாய் மலர்ந்தாள்.
      ஸ்ரீசைலத்தில் இருந்து தேவாங்கரின் தலைநகர் ஆமோத பட்டணம் நோக்கி, இப்புனித ஊர்வலம் மகிழ்வுடன் புறப்பட்டது. 
         சோதனைகள் இல்லையெனில் வாழ்வில் சாதனைகள் ஏது? காட்டாறும் அதில் ஓடிய நீரும் சோதனையாக அமைந்தக. 
        தேவாங்கருக்காக வேதங்கள் கொஞ்சும் பாதச் சிலம்பணிந்த திருவடிகள் சிவக்க நடந்தனள்.  ஸ்ரீசவுடேஸ்வரி காட்டாற்றிலும் இறங்கி நடந்தாள்.  நீரினுள் சிலம்பு மூழ்கியதால், சிலம்பொலி கேட்கவில்லை.  அன்னை வரவில்லையோ என்ற ஐயத்தினால் திரும்பிப் பார்த்தனர் தேவாங்கர்கள்.  தன் ஆணையை மீறியதால் அன்னை அவ்விடத்திலேயே நீரினுள் மறைந்தாள்.  துன்ப மின்னல்கள் தாக்கின.  அழுதனர்; அரற்றினர்;கரைந்தனர்; முடிவில்லாத் துன்பத்தினால் துவண்டனர்.  துவண்டோருக்கு அருமருந்தான இராமலிங்கேசுவரர் இதம் மொழிந்தார். 

        "தேவாங்கரே! அஞ்சாதீர். நீர் என் நெற்றிக் கண் வழிவந்தவர்கள்.  அன்னையின் ஆணையை மீறிய வருத்தத்தினால் மறைந்து இருக்கின்றாள்.  எனினும், உங்கள் மீது மாறாத அன்பும் அருளும்  கொண்டு உள்ளாள்.

         கையில் வாளாயுதம் வைத்துக் கொண்டு உள்ளீர். அவ்வாளினால் அன்னையை வருக வருக என்று கூறி, உங்கள் அங்கங்களைச் சேதித்துக் கொள்ளுங்கள்.  உங்களின் துன்பத்தை அவள் பொறுக்க மாட்டாள்.  வெளிப்பட்டு விடுவாள்" என்று ஆலோசனை கூறினார். இறைவனின் இத மொழிகளைக் கேட்ட நம் முன்னோர் வாளாயுதத்தை உருவினர்.  சிரசின் மீதும் தோள்கள் மீதும் மார்பின் மீதும், "தல்லீ பராக்! பாம்மா பா" என்ற வீர மொழிகளைக் கூவிக்  கொண்டு வாளாயுதங்களை வீசினர்.

       தேவாங்கரின் அங்கங்கள் சேதம் அடைந்தன.  அருளே!  வடிவமான அந்த மஹாசக்தி பொறுப்பாளா என்ன?   

       நூலைக் காத்துக் கொடுத்தவள்; தேவாங்கரின் குல மகள். நீரினுள் இருந்து வெளிப்பட்டு அருள் புரிந்தாள்.
       
       இவ்வருள் வரலாற்றைத் தான் இன்றும் நாம் சக்தி அழைப்பு என்று கொண்டாடுகின்றோம்.  அன்று தேவாங்கர் அலகு சேவை செய்து அன்னையை அழைத்து வருகின்றோம். 

ஸ்ரீசைலத்தில் இன்று தேவாங்கரின் உரிமை:
      அன்று தேவதாசமைய்யன் கொடித்துணி ஏற்றி மகிழ்ந்தார்.  ஸ்ரீசைலத்தில் சிரவாத்திரியன்று, இதனை நினைவூட்டும் விதத்தில்  ஸ்ரீசைலத்தில் தேவாங்கரின் வழிபாடு சிவராத்திரி விழாவில் நடைபெறுகின்றது.
      
      ஸ்ரீசைலத்தைச் சுற்றியுள்ள சீராளா முதலான ஊர்களில் தேவாங்கர் வாழ்ந்து வருகின்றனர்.  இங்கு தேவாங்க நெசவாளர் வீடுகளில் இரண்டு தறிகள் உள்ளன.  காலையில் எழுந்து நீராடித் தூய்மையாக சுவாமி தறியில் ஒரு முழம் நெய்து விட்டு அதன் பின் தம் ஜீவனத் தறியில் நெசவு நெய்வார்கள்.  வீட்டில் இரண்டு தறிகள் இருக்கும். ஒன்று சுவாமித் தறி.  மற்றது ஜீவனத் தறி.  சுவாமித் தறியில் ஆண்டு முழுக்க நெய்யும் துணி 365 முழம் இருக்கும்.

      இங்ஙனம் பல தேவாங்கரும் நெய்யும் துணிகளை ஒன்று திரட்டிக் கொண்டு வருவார்கள்.  இத்துணிக்கு 'தலபாகலு' என்று பெயர். 

       சிவராத்திரிப் பூசனை நான்கு ஜாமங்களில் நடைபெறும் பூசனை ஆகும்.  மாலை 6 மணி முதல் 9 மணி வரை முதல் ஜாமம்.  இரவு 9 மணி முதல் 12 மணி வரை இரண்டாம் ஜாமம். நடுநிசி 12 மணி முதல் 3 மணி வரை மூன்றாம் ஜாமம். 3 மணி முதல் 6 மணி வரை நான்காம் ஜாமம்.  பூசனை விபரங்கள் விரிக்கில் பெருகும்.  இந்நான்கு ஜாமங்களுள் இரண்டாம் ஜாமமான இரவு 9 மணி முதல் 12 மணியில் கடைசி 24 நிமிடங்களும், மூன்றாம் ஜாமமான நடுநிசி 12 மணி முதல் 3 மணியில் முதல் 24 நிமிடங்களும் என 48 நிமிடங்கள், அதாவது இரவு 11 மணி 36 நிமிடங்களிலிருந்து 12 மணி 24 நிமிடங்கள் வரையிலான 48 நிமிடங்கள் மஹாநிசிக் காலம் என்று பெயர்.  இந்த நேரம் தான் சிவராத்திரியில் லிங்கோத்பவர் உற்பத்தி ஆன காலம். 

     இம்மஹாநிசிக் காலத்தில் லிங்கோத்பவர் உற்பத்தி ஆகும் காலத்தில் ஸ்ரீசைல ஆலயத்தின் உள்ளேயிருந்து அனைவரும் வெளியேற்றப்பட்டு விடுவார்கள்.  தேவாங்கர் மட்டும் ஆலயத்தினுள் திகம்பரராக இருப்பார். திகம்பர ஸ்வாமியான மல்லிகார்ச்சுன மூர்த்திக்கு தேவாங்கர் திகம்பரராக இருந்து வேமாரெட்டி கோபுரத்தில் இருந்து நந்தி வரை இத்தலபாகலு துணியைச் சுற்றிப் பூசிப்பார். 

      இந்நடைமுறை இன்றளவும் கடைபிடிக்கப்படுகின்றது. 
    
       படைவீடு ஜகத்குரு 32 வது பட்டம் சென்ன ஓம் ஸ்ரீசாம்பலிங்க மூர்த்தி ஸ்வாமிகள் இதனைக் 'கம்மி பாவாடலு' என்று தெரிவித்து இருந்தார்.

      இப்பெயர் நடைமுறையில் தலபாகலு என்று அழைக்கப் பெறுகின்றது.  புராண காலம் தொட்டு இன்றளவும் இத்திருத்தலம் தேவாங்கருடன் பின்னிப் பிணைந்து உள்ளது.

       இவ்வரலாறு முதலானப் புனிதங்களை நேரில் ஆய்வு செய்ய வேண்டும் என்று பல்லாண்டுகளாக ஆசை கொண்டிருந்தேன்.  என்னுடைய விருப்பம் நிறைவேறும் காலமும் வந்தது.   
           ஸ்ரீசைலம் வரலாறு முதலானப் புனிதங்களை நேரில் ஆய்வு செய்ய வேண்டும் என்று பல்லாண்டுகளாக ஆசை கொண்டிருந்தேன்.  இவ்வாசையை கொடை வள்ளல் பெருந்தகை திரு.எஸ்.கே.சுப்பிரமணியம் செட்டியார் அவர்களும் அவர்கள் பத்தினியார் திருமதி கலாமணி அம்மையார் அவர்களும் அன்புடன் நிறைவேற்றி வைத்தனர்.

       அந்தத் திருநாள் 21.06.2009 சனிக்கிழமை ஆகும். சேலத்தில் இருந்து உயர்திரு.எஸ்.கே.சுப்பிரமணியம் செட்டியார், அவர் தம் பத்தினியார் திருமதி. கலாமணி அம்மையாரும், திருப்பூர் உயர்திரு.சண்முகம் அவர்தம் துணைவியார் திருமதி கௌசல்யா அவர்களும் உயர்திரு.எஸ்.கே.மதேஸ்வரன், திருமதி செல்வி.குத்தாம்புள்ளி,  வீராசாமி சாஸ்திரிகள் அவர்தம் பத்தினியார் திருமதி ருக்குமணி, சிவசண்முக சாஸ்திரி மற்றும் நான் என பத்து பேர் அடங்கிய குழுவாகச் சென்றோம்.

        புகைவண்டி, தங்குமிடம், பேருந்து என அனைத்தும் குளிர்சாதன அமைப்பிலே வள்ளல் பெருந்தகை திரு.எஸ்.கே.எஸ். அவர்கள் அழைத்துச் சென்றார்.

          கைக்குழந்தைகளை கவனத்துடன் வளர்க்கும் தாய் தந்தையர் போல் திரு.எஸ்.கே.எஸ்.தம்பதியரும் அவர் தம் தம்பி எஸ்.கே.எம். தம்பதியினரும் அனைவரையும் கண்ணின் கருமணி போல் பாதுகாத்தது அவருடைய அன்பினையும், ஆய்வில் உள்ள ஆர்வத்தையும் காட்டியது.  

           மல்லிகார்ச்சுன மூர்த்திக்கும் பூசனைப் பொருள்களும் பவுராம்பிகை அம்மனுக்கு பட்டும் சாத்தி வழிபட்டனர்.

          ஸ்ரீசைலத்தில் தேவாங்கர் சத்திரத்தில் தங்கினோம்.  திரு.எஸ்.கே.சுப்பிரமணி செட்டியார், கலாமணி அம்மையாரின் புகைப்படம் சத்திரத்தில் அழகூட்டியது.  தேவாங்கர் சத்திரத்திற்கு நம் வள்ளல் பெருந்தகை நிரம்பப் பொருள் உதவியும் அன்னதான நன்கைடையும் வழங்கி உள்ளார். 

         எனவே, சத்திரத்தில் எங்களுக்கு ராஜஉபசாரமும் உணவும் அன்புடன் வழங்கப்பட்டது. 
 
         ஆண், பெண் என்ற வேறுபாடின்றி சத்திரத்துப் பணியாட்களுக்குச் சட்டை, வேஷ்டி, சேலை, ஜாக்கெட் துணி என வஸ்திர தானத்தை நம் பெருந்தகை தம்பதியினர் வழங்கி மகிழ்ந்தனர்.

        மல்லிகார்ச்சுன மூர்த்திக்கு வீரசைவர் வழிபாடு நிகழ்த்துகின்றனர். பவுராம்பிகைக்கு அந்தணர்கள் வழிபாடு நடத்துகின்றனர்.  

       ஆலயத்தின் வலப்புறத்தில் மராட்டிய இந்து சாம்ராஜ்யத்தை நிறுவிய வீர சிவாஜிக்கு அன்னை பவானி வீரவாள் வழங்கும் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. 
 
      ஆலயத்தின் வடபுறம் நோக்கி ஓடும் கிருஷ்ணா நதி பாதாள கங்கையாக உருவெடுத்துப் பாய்கின்றது.  நாகார்ச்சுன சாகர் அணைக்கட்டும் இருக்கிறது.  பாதாளம் நோக்கிச் செல்வது போல் எங்கள் ஊர்தி பயணித்தது. 

       படித்துறை வரை ஊர்திகள் செல்கின்றன.  படிகளில் இறங்கி ஆனந்தமாக பாதாள கங்கை ஸ்நானம் அனைவரும் செய்தோம். 

        அடுத்து எங்கள் பயணம் மஹாநந்தியை நோக்கி இருந்தது.  ஆலயத்துள் சென்றோம்.  அற்புதமான இயற்கைத் தீர்த்தம் நந்திக் குளத்தில் நிரம்பிக்  கொண்டே இருக்கின்றது. பின் வழிந்து நீர் ஓடையாக வெளிப்படுகின்றது.  உடலுக்கும் மனதுக்கும் மிக மிக இனிமை பயந்தது அந்த இதமான நீராட்டம். 

       நீராட்டம் என்பது இறைவனோடு கலத்தல் என்ற ஆண்டாள் தத்துவத்தின் உண்மையை எடுத்துக் காட்டியது.  ஆலயத்தின் உள் நுழைந்து,பரிவார மூர்த்திகள் சகிதம் இறைவனை தரிசித்துக் கொண்டு நந்தவரம் நோக்கிப் பயணித்தோம். 

      நந்தவர ஸ்ரீசவுடேஸ்வரி 
       மானம் போற்றி யமகாதேவி ஆவாள் இப்பெருமாட்டி.  அலகு சேவைசெய்யும் பொழுது சொல்லப்படும் தண்டகங்கள் பல உண்டு.  இத்தண்டகங்கள் பரம்பரை பரம்பரையாகச் சொல்லப்பட்டு வருவனவாம்.  தமிழ்நாட்டில் தெலுங்கு, கன்னடம் என இரு மொழிகளில் இத்தண்டகங்கள் வழக்கில் இருந்து வருகின்றன. நந்தவரத்தைக் குறிக்கும் தண்டகங்கள் நூற்றுக் கணக்கில்  ஆங்காங்கே பரவி இருக்கின்றன. 

       இத்தண்டகங்கள் நமது கலாச்சாரம், பண்பாடு, வழிபாடு, நமது பூசனை முறைகள், நாகரீகம் மற்றும் நமது ஆட்சிமுறை, நாம் வாழ்ந்த நாடுகள், ஊர்கள், தேவாங்க மன்னர்கள், அவர்களது வலிமை என எண்ணற்ற செய்திகளைத்  தாங்கி மிளிர்கின்றன.  இத்தண்டகங்கள் அனைத்தும் நமது பொக்கிஷங்கள்.  நமது களஞ்சியங்கள். 

         நந்தவரமுன்ன நெலெகொன்ன நயகதாம்பா ஸ்ரீவீரகல்யாணி சௌடதாம்பா என்று நந்தவர தண்டகங்கள் நிறைவு பெறும். 

       நந்தவரம் என்ற ஊர் ஆந்திர மாநிலத்தில் உள்ளது.  நந்தியால் தாலுக்காவில் இருந்து மதன பள்ளி செல்லும் வழியில் உள்ளது. 

        நமது பாராளுமன்றத் தொகுதிகளுள்  ஒன்று நந்தியால் ஆகும்.  இத்தொகுதியில் இருந்துதான் முன்னாள் பாரதப் பிரதமர் அமரர் நரசிம்மராவ் அவர்கள் தேர்தலுக்கு நின்று பாராளுமன்ற உறுப்பினர், மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் என்ற பதவிகளை வகித்து  நிறைவாகப் பாரதப்  பிரதமராகவும் ஆட்சி புரிந்தார்.  

      நரசிம்ம ராவ் அவர்கள் இப்பகுதியில் உள்ள நந்த வைதீகர்கள் என்கிற அந்தணர் வகுப்பைச் சார்ந்தவர்.  இப்பிராமணரகளுக்கு இன்றும் நந்த வைதீகர்கள் என்று பெயர் நிலவி வருகின்றது. 

         நந்தவைதீகர்கள் அனைவருக்கும் ஸ்ரீசவுடேஸ்வரி குலதெய்வமாக விளங்கி வருகிறாள்.

          பிரதமர் ஆன பின்பு ஒருநாள் நரசிம்மராவ் அவர்கள் இத்திருக்கோவிலுக்கு விஜயம் செய்து ஸ்ரீசவுடேஸ்வரியை வழிபட்டு ஆசிபெற்றுச் சென்றார். மைனாரிட்டி  என்று இருந்து அரசை முறையாக ஐந்து ஆண்டுகள் காப்பாற்றி ஆட்சி புரிந்த அதிசயத்தை உலகம் கண்டது. 

        தேவாங்கரின் குல மகள்,  தேவாங்கரின்  குல தெய்வம் அந்தணர்க்கு எவ்வாறு குலதெய்வம் ஆனது என்பதை படவீடு  ஜகத்குரு  அவர்கள் கூறி அருளி இருந்தார்.  இவ்வாலயத்திற்கு பலமுறை விஜயம் செய்து இருக்கிறார். 

      வரலாறு இது தான்.  நந்தவர தண்டகங்கள் இவ்வரலாற்றை விளக்குகின்றன.

        நந்தவரம் முதலான பகுதிகளை ஒரு காலத்தில் நந்தவர்மன் என்ற மன்னன் ஆட்சி புரிந்தான்.  இம்மாமன்னனுக்கு காசி யாத்திரை சென்று விஸ்வநாதரையும் விசாலாட்சியையும் வணங்க வேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டது. 

      காசி யாத்திரை புறப்படும் பொழுது மன்னனுக்குப் பிறிதொரு எண்ணம் தோன்றியது.  யாத்திரை ஒரு புண்ணியம்.  நமது செலவில் நந்த வைதீகரையும் அழைததுச் சென்றால் புண்ணியம் இரட்டிப்பாகும் என்று சிந்தித்துத் தன்னுடன் நந்தவைதீகர்களையும் அழைத்துச் சென்றான். 

       காசி விசாலாட்சியின் சன்னிதியில் மன்னன் வழிபடும் பொழுது அந்தணர்க்குத் தானம் ஏதேனும் வழங்கினால் புண்ணியம் மும்மடங்கு ஆகுமே என்ற சிந்தனை தோன்ற ஏழு கிராமங்களை விசாலாட்சியின் முன்னர் அந்தணர்க்குத் தானமாக வழங்கினான். 

        இனிதாக யாத்திரை நிறைவு பெற்று அனைவரும் திரும்பினர்.  அந்தணர்கள் வசதியுடன் வாழ்ந்ததால் மன்னன் தானமாக வழங்கிய கிராமங்களைச் சுவாதீனம் செய்து கொள்ளவும் இல்லை.  அதற்கான ஆவணங்களையும் பெறவில்லை. 

        சில காலம் கழிந்த பின்னர், கடும் பஞ்சம் ஒன்று நிலவியது.  அனைவரையும் பஞ்சம் வாட்டியது.  அந்தணர் சபை கூடியது.  மன்னன் தானமாக வழங்கிய கிராமங்களைச் சுவாதீனப்படுத்திக் கொள்ளாதது தவறு.  ஏழு கிராமங்களும் நமக்கு சுவாதீனமாகி இருந்தால், இப்பஞ்சம் நம்மை பாதித்திருக்காது. 

        இப்போது மன்னனிடம் செல்வோம்.  அக்கிராமங்களைக் கேட்போம் என்று அந்தணர் மன்னனின் கோட்டைக்ககுச் சென்றனர்.  மன்னனை வாழ்த்தி நின்றனர்.  வந்த சேதியை மன்னன் கேட்டான்.  காசியாத்திரையின் போது விசாலாட்சியின்  சன்னிதியில் அவள் திருமுன் தானமாக வழங்கிய ஏழு கிராமங்களையும் சுவாதீனப்படுத்திக் கொடுத்து அதற்குச் சாசனம் வழங்க வேண்டும் என்றனர். 
         பலருக்கு முன் அந்தணர்கள் இவ்வாறு கேட்டது மன்னனுக்கு அவமானமாகத் தோன்றியது. பழையதையெல்லாம் ஏன் பேசுகின்றீர்? புதிதாக ஏதேனும் வேண்டுமானல் கேட்டுப் பெறுங்கள் என்றான் நந்தவர்மன். இல்லை இல்லை புதிதாக ஒன்றும் வேண்டாம் முன்பு தருவதாகச் சொன்ன அந்த ஏழு கிராமங்கள் தான் வேண்டும் என்றனர்.
             நந்தவர்மனுக்குச் சினம் தோன்றியது. அந்தணர்களே யாத்திரைச் சென்றது நினைவில் இருக்கின்றது.  உங்களை அழைத்துச் சென்றதும் நினைவில் இருக்கின்றது.  தானம் கொடுத்தாக நினைவு இல்லை.  ஏதேனும் சாட்சி இருந்தால் கூறுங்கள் என்றான்.  வயிறு எரிந்த நந்த வைதீகர்கள் அந்த விசாலாட்சி தான் சாட்சி என்றனர்.    
       ஆயின் அந்த விசாலாட்சி வந்து சாட்சி சொன்னால் தருகிறேன். இப்போது செல்லுங்கள் என மன்னவன் கூற,அவமானத்துடன் திரும்பினார்கள் அந்தணர்கள்.
       வரும் வழியில் நந்தவரம் ஸ்ரீசவுடேஸ்வரியின் திருக்கோவிலில் கோலாகலமானத் திருவிழா.  தல்லிபராக்“ (தாய்வருகின்றாள்) என்று தேவாங்கர்கள் அன்னை ஸ்ரீசவுடேஸ்வரிக்கு அலகு சேவை செய்து, அவளை உரிமையுடன்  அழைத்து வரும் கண் கொள்ளாக் காட்சியைக் கண்டு களித்தனர்.  ஞானோதயம் பிறந்தது.  காசியில் குடி கொண்டவளும் மதுரையில் வீற்றிருப்பவளும் காஞ்சியில் இருப்பவளும் என விசாலாட்சி, மீனாட்சி, காமாட்சி என மூவராக விளங்குபவள் இந்த ஈசனின் பத்தினி.  சிம்மக் கொடியேள் ஆன இச்சவுடேஸ்வரி தானே? என்று உணர்ந்து, நம் அன்னை முன் சென்று பணிந்து நின்றனர்.  அன்னையே! நீயே அனைத்தும் என உணர்ந்தோம். பரப்பிரம்ம மகா சக்தியே! விசாலாட்சியாய் நின்ற உன் முன் தானே மன்ன் எங்களுக்கு கிராம தானம் வழங்கினான். இன்று சாட்சி கேட்கிறான்.  அழிவில்லாத சாட்சி நீதான்.  நீ எங்களுக்காக நந்தவர்மன் முன் சாட்சி சொல்ல வருக ! இல்லையெனில் உன் திருமுன் தலையைத் துண்டித்துக் கொண்டு மாளுகின்றோம் என்றுரைத்து தேவாங்கரின் வாளாயுதங்களை வாங்கித் தங்கள் கழுத்தில் புதைக்கச் சென்றனர்.
        தேவாங்கரின் கருணை மாதா தற்கொலையைத் தடுத்தாள்.  தான் நந்தவர்மனிடம் சாட்சி சொல்லப் புறப்பட்டாள். 
        தெய்வம் வருகின்றது என்றவுடன் மன்னன் கோட்டைக்கு வெளியே வந்து அம்பிகையை வரவேற்றான்.  மன்னா! அந்தணர்க்குத் தானம் வழங்கியது சத்யமே!” என்று சத்ய பூரணி புகன்றாள்.  தன் தவறினுக்கு வருந்தி மன்னன் நந்த வைதிகர்களுக்கு கிராம தானம் வழங்கினான். 
       சாட்சி பலிகினி விசாலாட்சி என்று அன்னைக்கு திருநாமம்.  நந்தவர ஸ்ரீசவுடேஸ்வரியை அந்தணர்கள் அன்று முதல் குல தெய்வமாக வணங்கினர்.
     அந்தணர் வட்டாரங்களில் ஸ்ரீசவுடேஸ்வரிக்கு ஆலயங்கள் எழுப்பினர்.  தேவாங்கருடன் அந்தணர்களும் ஸ்ரீசவுடேஸ்வரியை வணங்க ஆரம்பித்தனர். 
       இத்துடன் அனைத்தும் மங்களகரமாக நிறைவேறி இருப்பின் இக்கட்டுரை எழுத எனக்குத் தோன்றி இருக்காது. 
இனி வரும் வரலாறு திருப்பங்கள் பல கொண்டது.
      நந்தவரம் திருக்கோவிலில் அந்தணர்கள்  தேவாங்கர்கள் என இருபாலரும் வணங்கி வழிபட்டு வந்தனர். நாளடைவில் ஆலய நிர்வாகம் தேவாங்கர் கையில் இருந்து அந்தணர்கள் கைக்குச் சென்றது. 
      அறவோராய் இருக்க வேண்டிய அந்தணர்கள் அறத்தை மறந்தனர்.  புதிய ஆணையைப் பிறப்பித்தனர். ராஜகோபுர வழியாக அந்தணர்கள் மட்டுமே வந்து வழிபடவேண்டும்; தேவாங்கர் ராஜகோபுர வாசல் வழி வரக்கூடாது.  வேண்டுமானால் ராஜகோபுரத்தை விட்டு பின்புறமாக வந்து வணங்கிக் கொள்ளலாம் என்று ஏதோ வள்ளல்கள் போல் பேசினர். 
    நம்மவர் சபை கூடியது.  அந்தணர்கள் நம்மை வழிபட வேண்டாம் என்று கூறவில்லை.  முன்னால் சென்று வணங்கினால் என்ன? பின்னால் சென்று வணங்கினால் என்ன? எப்படியோ அவளை வணங்குவோம் என்று தமக்குள் சமரசம் செய்து கொண்டனர்.  ஆலயத்தின் மேற்குப் புறமாக பக்கவாட்டில் ஒரு சிறிய இடுப்புக் கதவை வைத்து இவ்வழியே தேவாங்கர் வரலாம் என்றனர். 
  இந்த ஏற்பாடு மகாதேவிக்குப் பிடிக்கவில்லை.  ஆலயமே தேவாங்கருக்குச் சொந்தமானது.  இடையில் வந்து ஆலய நிர்வாகத்தைக் கைப்பற்றிதோடு அல்லாமல் தேவாங்கருக்குப் பின்வழி காட்டுகின்றனரே என்று கொதித்தாள்.  கருவறையை விட்டு வெளியேறினாள்.  தேவாங்கர் வரும் வழி என்றனரே, அந்த வழிக்கு எதிரில் உள்ள சிறிய சுரங்கத்தினுள் சென்று தேவாங்கர் வரும் வழிக்கு எதிரே அமர்ந்து காட்சி தந்தாள்.
        தேவாங்கரின் குலமகள், தேவாங்கரின் குல தெய்வம்  தேவாங்கரின் மானத்தை காத்தாள்.  அந்தணர்கள் அலறினர்.  தவற்றை உணர்ந்து தேவாங்கரிடமும் அன்னையிடமும்  மன்னிப்பு பெற்றனர். மன்னிப்பது தெய்வ சுபாவம் அன்றோ.  இன்றும் அச்சுரங்கத்தினுள் அவள் விக்ரகம் அமர்ந்த நிலையில் உள்ளது.  கருவறையினுள் சுதை விக்ரகம் காணப்படுகிறது.  நம் மானம் காத்த மகாதேவியன்றோ அவள்.
நந்த வர ஸ்ரீசௌடேஸ்வரி திருக்கோவில் 
          ஏழுநிலை கொண்ட ராஜகோபுரம் கம்பீரமாக நம்மை வரவேற்கின்றது
.  ஆலயத்தின் முன் மரத்தால் ஆன திருத்தேர் அழுகுற விளங்குகின்றது.  அன்னையின் சிம்ம வாகனம் அழுகுற அமைந்து உள்ளது.  ஆலயத்தின் இடப்புறம் காலபைரவர் அமைந்து இருக்கின்றார்.  ஆலயத்தைச் சுற்றி கருங்கல்லால் ஆன மதிற்சுவர் எழுந்துள்ளது.  இக்கருங்கல் மதிற்சுவரை இடித்துத் தான் தேவாங்கர் ஆலயத்தின் உள்ளே வர வழி அமைத்தனர்.  கருவறைக்கு முன்பாக ஒரு சிறிய மண்டபம் அமைந்துள்ளது.  இதில் மகாமேடு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இம் மேடுவினுக்கு பிராமண பூசனை நடைபெறுகின்றது. கருவறை அன்னைக்கு தேவாங்கர் பூசனை செய்கின்றனர்.  மகாமேடுவின் முன் சுற்றிலும் பக்தர்கள் அமர்ந்து கொள்ள மஞ்சள் குங்குமத்தினால் அர்ச்சனை செய்து வைக்கின்றனர்.  அந்த அந்தண அர்ச்சகர்.  நமது குழுவினருடன் சிவசண்முக சாஸ்திரிகள் வந்து இருந்த காரணத்தால் அவர் தமது வெண்கலக் குரலால் சங்கல்ப்ப மந்திரத்தின் அர்ச்சனையை அற்தபுதமாகச் செய்து வைத்தார்.  அந்தணர் அதிசயத்துடன் பார்த்து நின்றார்.  கருவறைக்கு வெளியே சுவரை ஒட்டி இருபுறமும் இரண்டு சித்தர்களின் சுதைச் சிற்பங்கள் உள்ளன.  இங்குத் தவம் புரிந்து மோட்சம் பெற்ற சித்தர்கள் எனத் தெரிவித்தனர்.  அனைவரும் கருவறைக்குள் நுழைந்து நமது அன்னையை வலம் வந்து தரிசித்து மகிழ்ந்தோம்.   
     திரு.எஸ்.கே.எஸ்.தம்பதியினர் அன்னைக்கு பட்டுப் புடவைகள், பட்டாடைகள் சமர்ப்பிக்க அவை அன்னைக்கு அணிவிக்கப்பட்டன.  அன்று நம் அன்னைக்கு நூற்றுக் கணக்கான புடவைகளைப் பக்தர்கள் செலுத்தினார்கள்.  கர்நாடக மாநிலத்திலிருந்து பெல்காம், ஹாசன்  முதலான பகுதிகளில் இருந்து வந்த தேவாங்கர்கள் உரத்த குரலில் தண்டங்கங்களைச் சொல்லி நம்மை மகிழவைத்தனர்.  அவர்களுடன் பேசிய போது மாதம் ஓரிரு முறை நந்தவரம் வந்து அன்னையைத் தரிசிப்பதை வழக்கமாக கொண்டு இருப்பதாகத் தெரிவித்தனர்.  பாரதப் பிரதமர் ஆன பின் நரசிம்மராவ் இங்கு வந்து சாந்தி ஹோமம் முதலான ஹோமங்கள் செய்து வழிபட்டு உள்ளார்.  தேவாங்கரின் மானம் மரியாதைகளுக்குச் சாட்சியாக விளங்கும் நந்தவர ஸ்ரீசவுடேஸ்வரியைத் தரிசிக்கும் பாக்கியத்தை நமக்கு வள்ளல் பெருந்தகை குமரன் பட்டு மாளிகை உரிமையாளர் திரு எஸ்.கே. சுப்ரமணிய செட்டியார் கலாமணி தம்பதியினர் நமக்கு வழங்கினார்கள்.  இவர்களது இப்பேருதவியினால் ஸ்ரீசைலத்தில் தேவாங்கர் உரிமையையும் அந்தணரிடம் இருந்து தேவாங்க தெய்வப் பிராமணர் மானத்தைக் காத்த இம்மஹாதேவியான நமது குல தெய்வத்தைத் தரிசிக்கும் பேறு பெற்றோம். 
   இவர்களது  திருத்தொண்டு என்றென்றும் சிறக்கவும் அவர்கள் அனைவரும் அன்னை அருளால் அனைத்தும் பெற்று வளமுடன் வாழ அன்புடன் பிராத்திக்கிறோம்.

No comments:

Post a Comment