அன்புடையீர் நல்வரவு ,

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,
தேவாங்கர்களாகிய நாம் அனைவரும் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்து வந்தாலும் தேவாங்கர் என்னும் உணர்வு நம்மை ஓன்று சேர்க்கிறது. மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்ற வாக்கிற்கு இணங்க காலத்திற்கு ஏற்ப நாம் நமது குல நிகழ்வுகளை தகுந்த தொழில்நுட்பத்தை கொண்டு பதிவு செய்வது அவசியமான ஓன்று.

இந்த புதியபக்கம் நமது தேவாங்க சமூக செய்திகள்,சடங்குகள்,வரலாறு & அண்மை நிகழ்ச்சிகளை அறிந்துகொள்ளவும் தேவைப்படும் போது பார்க்கவும் உருவாக்கப் பட்டுள்ளது.
உறவுகள் தங்கள் பகுதியில் உள்ள கோவில்&குல தெய்வம் கோவில்களில் நடைபெறும் திருவிழா நிகழ்ச்சிகள் மற்றும் படங்களை இடம்பெற செய்யவும்.

தங்கள் கருத்துக்கள் இந்த தளத்தை மேன்படுத்த உதவும் ஆகயால் தயவுசெய்து கருத்திடவும் . ( தமிழில் கருத்திட தமிழ் எழுதியை பயன்படுத்தவும்)

நன்றி.

6/4/13

66 .சாந்திராயண மகரிஷி கோத்ரம்

மகரிஷி வரலாறு :- எல்லோருடைய பாவங்களையும் நீக்கும் ஒரு விரதம் சாந்திராயண விரதம். இவ்விரதத்தினை உலகினுக்கு எடுத்து ஓதியவர். இம்மகரிஷி. எனவே இவ்விரதம் இவர் பெயராலேயே வழங்கப்பட்டு இருக்கின்றது. தானும் இவ்விரதத்தை நன்கு அனுஷ்டித்தார்.

சந்திராயண விரதத்தை அனுஷ்டிக்கும் முறை :- கிருஷ்ணபட்சத்தில் முடிநீக்கிச் சவரம் செய்து கொள்ள வேண்டும். வெள்ளை வஸ்திரம் உடுத்துக் கொண்டு முஞ்சைப்புல் அரைஞாண் கட்டிக் கொள்ள வேண்டும். பிரம்மச்சரிய விரதத்தைக கடுமையாக அனுஷ்டிக்க வேண்டும். வளர்பிறை பிரதமை முதல் விரதத்தைத் தொடங்க வேண்டும். பலாசமரத்தால் செய்த தண்டத்தை ஏந்த வேண்டும்.

தூய்மையான இடத்தில் அக்நியைவைத்து அதில்

1) ஆகாரம்
2) ஆஜ்யபாகம்
3) பிரணவம்
4) வ்யாஹ்ருதி
5) வாருணம்

என்னும் பஞ்ச ஹோமங்கள் செய்ய வேண்டும்.

அதன்பின்
1) சத்யம்
2) விஷ்ணு
3) பிரும்மரிஷி
4) பிரும்மா
5) விச்வதேவர்
6) பிரஜாபதி
என்னும் ஆறு ஹோமங்கள் செய்து அதன்பின் பிராயச்சித்தஹோமம் செய்து அதற்கடுத்து சாந்தி ஹோமம் செய்ய வேண்டும்.

இவ்விதம் பதின்மூன்று ஹோமங்களினால் அக்நிகாரியம் செய்து முடித்து, அக்நிஸோமனை வணங்கி ஸ்நாநம் செய்து அனுட்டானங்களை முடித்துக் கொண்டு கைகளைத் தூக்கிச் சூரியனைப் பார்க்க வேண்டும். பின் இருகைகளையும் குவித்துப் பிரதட்சிணம் செய்ய வேண்டும்.

ருத்ரசூக்தம் - விஷ்ணு சூக்தம் - பிரம்ம சூக்தம் என்னும் இவற்றில் ஒன்றனையாவது அல்லது வேறு சூக்தங்களில் ஒன்றனையாவது 100 அல்லது 1000 முறை ஜெபிக்க வேண்டும்.

நண்பகலில் பொன் பாத்திரம், வெள்ளிப் பாத்திரம், தாமிரப் பாத்திரம், மண் பாத்திரம், அந்திமரப் பாத்திரம் என இவற்றில் ஒன்றில் ஏழு வீடுகளில் மௌனமாய்ப் பிட்சை கொண்டு கிடைத்த அன்னத்தை ஏழு உருண்டைகள் செய்து

1) சூரியன்
2) பிரம்மன்
3) அக்நி
4) ஸோமன்
5) வருணன்
6) விச்வே தேவர்கள்

இவர்களுக்குக் கொடுத்து மிகுந்த ஒரு உணவு உருண்டையை வளர்பிறையில் சிறிது சிறிதாகப் பெரிதாக்கியும் தேய்பிறையில் சிறிது சிறிதாகச் சிறிதாக்கியும் உண்ணல் வேண்டும் என்பது இவ்விரத விதியாகும். இது பாவநீக்கத்திற்குக் குறிக்கப்பட்டது.

இவ்விரதம் இம்முனிவர் பெயரால் சாந்திராயண விரதம் எனவும் சந்திரனின் வளர்ச்சி தேய்தல் போல உணவினை வளர்த்தும் சுருக்கியும் செய்யப்படுகிறதாதலின் சாந்திராயணம் எனவும் வழங்கப்படுகிறது.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

சகுணதவரு :- சகுணம் சொல்வதில் வல்லவர். இதனைச் ச+குணம் எனப்பிரித்தால் நற்குணம் நிரம்பியவர் என்று பொருள்படும்.
ரஜததவரு ;- ரஜதம் = வெள்ளி, வெள்ளி வணிகம் செய்தவர்.
மதஞ்சாராதவரு :- சைவம், வைணவம் என எம்மதத்தையும் சாராமல் அனைத்தையும் சமரசமாகக் கொண்டவர். சகல மதங்களின் சாரத்தை அறிந்தவர்.

அகத்தியர்


குரு:சிவபெருமான்

காலம்:4 யுகம் 48 நாட்கள்

சீடர்கள்:போகர், மச்சமுனி

சமாதி:திருவனந்தபுரம்

18 சித்தர்களில் முதன்மையானவர். சித்தர்களின் தலைவர். தமிழுக்கு பல சித்த மருத்துவ முறைகளை வழங்கியவர். கடுந்தவமியற்றி பல சித்திகளை பெற்றவர். தமிழ் இலக்கிய விதிமுறையான அகத்தியம் எனும் நூலை எழுதியவர். போகர், மச்சமுனி இவரின் சீடர்களாவர். திருவனந்தபுரம் அனந்தசயன திருத்தலத்தில் சமாதியடைந்ததாகக் கூறப்படுகிறது.

ஸ்ரீசைலம் மாண்பு

ஒவ்வொருவரும் தலங்கள் தோறும் சென்று புண்ணிய தீர்த்தங்களாடி மூர்த்திகளை வழபட வேண்டும். ஆன்மீக வாழ்க்கைக்கு இது மிக மிக அவசியமாகும். தேவதாச மன்னனும் இம்முறையை மேற்கொண்டு தலயாத்திரை சென்றான். பலதலங்களுக்குச் சென்று தீர்த்தங்களாடி மூர்த்திகளை வழிபட்டுக் கொண்டு ஸ்ரீசைலம் அடைந்தார். ஸ்ரீ சைலம் இலிங்க மூர்த்தி பன்னிரண்டு ஜோதிர்லிங்கங்களில் ஒன்று. வீரசைவர்களுக்கு இது முக்கியமான தலமாகும். இது மல்லிகார்சுனம் சீர்ப்பதம் என்றும் பெயர் பெரும் இதற்கு மருதமரம் தலவிருட்சம். இது திருஞானசம்பந்தர் திருநாவுக்கரசர் சுந்திரமூர்த்திகள் ஆகிய மூவரால் பாடப்பெற்றது. சிலாதமுனிவரின் புதல்வர் திருநந்திதேவர் தவஞ்செய்து இம்மலையருப் பெற்று இறைவனைத் தாங்கிவருவதாக ஸ்ரீகச்சியப்பர் கூறுகின்றார். இத்தலத்தைச் சிவமகாபுராணம் பெருமைப்படுத்திக் கூறியுள்ளது. சங்கரர் சிவானந்தலகரியில் இரு சுலோகங்களால் இப்பெருமானைத் துதித்துள்ளார். இராமபிரான் இராவணனைக் கொன்ற பாவம் நீங்கச் சீதையோடு இங்கு வந்து சிவபிரானை வழிபட்டு பாவநீக்கம் பெற்றார். பாண்டவர்கள் இங்கு வந்து வழிபட்டுள்ளனர். பீமன் தவஞ்செய்த இடம் பீமகுண்டம் எனப்பெயர்பெற்றுள்ளது. சந்திராவதி என்னும் அரசகுமாரி பெருமானை மல்லிகை மலரால் வழிபட்டு பேறு பெற்றாள். கோயிலுக்குச் செல்லும் வழியில் சாட்சி விநாயகர் உள்ளார். கோயில் மூலமூர்த்தி இருக்கும் கருவறைக்கு வடக்கில் ஆதி மல்லிகார்சுனர் என்னும் சிவலிங்கமூர்த்தி உளது. சந்திராவாதி பூசித்த மூர்த்தி இது. இதற்குச் சிறிது வடக்கே சகஸ்திரலிங்கேசரும் இவர் கோயிலுக்குப் பின் பலிபீடமும் வீரபத்திரர்கோயிலும் உள்ளன. இதன் பக்கத்தில் மல்லிகைப் பொய்கையும் அதன் நடுவே வசந்த மண்டபமும் உள்ளன. கருவறைக்கு மேற்கே பஞ்சபாண்டவர் ஸ்ரீதேவி குமாரசுவாமி பஞ்ச நந்தீஸ்வரர் இராஜராஜேஸ்வரர் ஆகியோர் கோயில்கள் கொண்டு உள்ளனர். அம்பிகை கோயில் மேற்கே உயரமான இடத்தில் உள்ளது. அதனருகே ஆயிரம் லிங்கங்கள் உள்ளன. பாதாள கங்கையின் அருகே நரசிங்கமூர்த்தி எழுந்தருளியுள்ளார். மகாசிவராத்திரி விழா இங்கு சிறப்பாக நடைபெறும். அப்போது திரளான மக்களும் வழிபடக் கூடுவர். அபிஷேகநீரும் பூஜா திரவியங்களையும் எடுத்துச் சென்று அபிஷேகம் செய்து வழிபடலாம். சிறப்பு மிக்க ஸ்ரீசைலம் வந்து தங்கிய மன்னன் தேவதாசமையன் பவுராம்பிகையோடு கூடிய மல்லிகார்சுன நாதரை நாளும் வழிபட்டு வந்தார். அப்போது மாசிமாதம் சிவராத்திரி விழா வந்தது. இவ்விழாவை மிகச்சிறப்பாக நடத்தி வழிபட விரும்பினார். துவஜாரோகணம் செய்து விழாவைத் துவக்குவது மரபு. கொடிமரம் மிகப்பெரிய மரம். அதற்கு ஆனவாறு 12 முழ அகலம் 60 முழ நீளமும் உடைய அழகான துணியைத் தானே நெய்து அதைக் கொடிமரத்தில் கட்டி கொடியேற்றி விழாவைத் துவக்கி வைத்தார். அன்றிரவு நான்கு யாமமும் விரதம் இருந்து முறைப்படி வழிபாடு செய்தார். இவர் வழிபாட்டை ஏற்று இறைவன் அம்மையுடன் எழுந்தருளி ' அப்பனே! நீ விரும்பும் வரம் யாது?' எனக்கேட்டார். அதற்குத் தேவதாசமய்யன் அடியேன் கட்டும் திருக்கோயிலில் எம்மை எல்லாம் அருள் சுரந்து காத்து இரட்சிக்கும் சவுடாம்பிகை அம்மையோடு தாங்களும் எழுந்தருளிக் கோயில் கொண்டு அடியேனது குல மக்களைக் காத்தருள வேண்டும் ' என்று தொழுது நின்றார். இறைவனும் அவ்வாறே வரமருளி மறைந்தார். தேவதாசமய்யன் அங்கிருந்து ஆமோத நகரை அடைந்து பற்பல மணிகளலான அழகிய பெரிய கோயில் ஒன்றை ஆகம முறைப்படி எழுப்பிக் கும்பாபிஷேகம் செய்து 'அம்மையோடு தாங்களும் எழுந்தருளி ஆட்கொள்ளவேண்டும்' என்று இறைவனைப் பணிந்தார். சிவபெருமானும் சௌடநாயகியோடு தானும் கோயில் கொண்டருளி கருணைபாலித்தார். தேவதாசமய்யன் முக்கட் குழகனுக்கு இராமலிங்க நாதன் எனத்]திருநாமம் சூட்டி இராமலிங்க சௌடேஸ்வரியை பக்தி சிரத்தையுடன் வழிபட்டான். சிவபூஜையில் திகழ்ந்து தேவதாசமய்யன் மனைவியோடு கயிலையை அடைந்து சிவபெருமானை வணங்கி நின்றார். சிவபெருமானும் கிருபையோடு தேவதாசமையனுக்கும் அவன் மனைவி திலதாவதிக்கும் முத்தியை அருளி ஆட்கொண்டான்.