அன்புடையீர் நல்வரவு ,

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,
தேவாங்கர்களாகிய நாம் அனைவரும் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்து வந்தாலும் தேவாங்கர் என்னும் உணர்வு நம்மை ஓன்று சேர்க்கிறது. மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்ற வாக்கிற்கு இணங்க காலத்திற்கு ஏற்ப நாம் நமது குல நிகழ்வுகளை தகுந்த தொழில்நுட்பத்தை கொண்டு பதிவு செய்வது அவசியமான ஓன்று.

இந்த புதியபக்கம் நமது தேவாங்க சமூக செய்திகள்,சடங்குகள்,வரலாறு & அண்மை நிகழ்ச்சிகளை அறிந்துகொள்ளவும் தேவைப்படும் போது பார்க்கவும் உருவாக்கப் பட்டுள்ளது.
உறவுகள் தங்கள் பகுதியில் உள்ள கோவில்&குல தெய்வம் கோவில்களில் நடைபெறும் திருவிழா நிகழ்ச்சிகள் மற்றும் படங்களை இடம்பெற செய்யவும்.

தங்கள் கருத்துக்கள் இந்த தளத்தை மேன்படுத்த உதவும் ஆகயால் தயவுசெய்து கருத்திடவும் . ( தமிழில் கருத்திட தமிழ் எழுதியை பயன்படுத்தவும்)

நன்றி.

3/31/14

பகுதி நான்கு : பீலித்தாலம்[ 4 ]

பகுதி நான்கு : பீலித்தாலம்[ 4 ]
திருதராஷ்டிரனின் தோளில் இருந்து இறக்கிவிடப்பட்ட காந்தாரியை அரண்மனைச்சேடிகள் வந்து பிடித்துக்கொண்டனர். அவர்கள் விரித்துப்பிடித்த திரைக்குள் அவள் நின்று வெளியே எழுந்துகொண்டிருந்த ஆரவாரத்தை திகைப்புடன் கேட்டுக்கொண்டிருந்தாள். மெல்லிய திரை வழியாக வெளியே நிகழ்பவை தெரிந்தன. களமுற்றத்திலிருந்த பன்னிரு சடலங்களை அகற்றினர். இருபத்தேழு பேர் நினைவிழந்து கிடந்தனர். பதினெண்மர் எழமுடியாது கிடந்து முனகி அசைந்தனர். அவர்களை அகற்றி தரையில் கிடந்த அம்புகளையும் மரச்சிதர்களையும் விலக்கினர்.
களமுற்றத்து ஓரமாக ஒரு பீடத்தில் அமர்ந்திருந்த திருதராஷ்டிரனின் உடலில் இருந்த பன்னிரண்டு அம்புகளையும் பிடுங்கி எடுத்தனர் ஆதுரப்பணியாளர். சந்தனத்தைலத்தையும்,வேப்பெண்ணையையும் சற்றே கொதிக்கச்செய்து அதில் படிகாரம்சேர்த்து வற்றவைத்து அந்தக்கலவையில் மஞ்சள்தூள் சேர்த்துக் குழைத்துச்செய்யப்பட்ட லேபனத்தை காயங்கள்மேல் வைத்து அதன்மேல் சிறியவெப்பத்தில் இளக்கப்பட்ட பன்றிக்கொழுப்பைப் பூசி அது உறைவதற்குள் பன்றிக்குடலில் எடுத்த மெல்லிய சவ்வை வைத்து அழுத்தினர். அது அப்படியே காயங்கள் மேல் கவ்வி ஒட்டிக்கொண்டது. புண்களின் வலியையே அறியாதவனாக தலையை ஆட்டியபடி தனக்குள் மகிழ்ந்து திருதராஷ்டிரன் அமர்ந்திருந்தான்.
அவனுடைய கரியபேருடலை அவள் திரை வழியாகப் பார்த்தாள். தோலுக்குள் தசைகள் இருளுக்குள் பாதாள நாகங்கள் அசைவதுபோலத் தெரிந்தன. ஓருடலுக்குள் பத்துமனிதர்கள் வாழ்வதுபோல. தலையை சுழற்றிக்கொண்டும் பெரிய பற்கள் தெரிய வாயை அசைத்துக்கொண்டும் இருந்த அரக்கவடிவினனைப் பார்த்தபோது அவளுக்குள் என்ன உணர்வுகள் எழுகின்றன என்றே அவளால் உணரமுடியவில்லை. அச்சம்தான் முதலில். அவள் கால்களின் நடுக்கம் அப்போதும் நிற்கவில்லை. விரல்நுனிகள் குளிர்ந்திருந்தன. உடலெங்கும் வியர்வை உப்பாக மாறத்தொடங்கியிருந்தது. வியர்வை உலர்வதுபோல அச்சமும் மறைந்தபோது ஒருவகை பதற்றம் மட்டும் எஞ்சியது. அந்தப்பதற்றம் ஏன் என்று எண்ணியபோது அந்தப் பேருருவம் அளிக்கும் ஒவ்வாமைதான் காரணம் என்று புரிந்துகொண்டாள்.
அவள் எண்ணியிருந்த ஆணுடலே அல்ல அது. அவளுக்குள் சூதர்பாடல்களும் தோழியர்களின் பேச்சுக்களும் கொண்டுவந்து நிறைத்த ஆண்மகன் மெல்லிய உடலும் சிவந்த நிறமும், பிங்கலநிறமான பருந்துச்சிறகுக்குழலும் சிவந்த சாயமிட்ட தாடிக்குள் அழகிய வெண்பல் சிரிப்பும், குறும்பு திகழும் கண்களும், கனிந்த மென்குரலும் கொண்ட இளைஞன். வெண்குதிரையில் விரிநிலத்தில் பருந்தெனப் பாய்பவன். கோடைமழைவானில் மின்னலெனச் சுழலும் ஒண்வாளை ஏந்தியவன். உச்சிமரத்துத் தனிமலர்களை காம்புமட்டும் அறுபட இதழ்குலையாது அம்பெய்து வீழ்த்தும் வில்லவன். எதிரே அமர்ந்திருந்த அரக்கனின் கைகளோ வேங்கையின் அடிமரம்போலிருந்தன. புடைத்தவேர்கள் போல நரம்புகள் ஓட அவை இணைசேரும் மலைப்பாம்புகள் என அசைந்தன. அவன் கண்கள் திறந்தகுங்குமச்சிமிழ் போலத் தெரிந்தன. அவள் திணறும் மூச்சுடன் பார்வையை விலக்கிக் கொண்டாள்.
குலமூத்தார் அவளை திருதராஷ்டிரனுக்கு கையளிப்பதாக அறிவித்ததை அவள் கேட்டாள். தன் உடலில் மெல்லிய சிலிர்ப்பு ஒன்று ஓடியதை, உள்ளங்கால் அதிர்ந்ததை அறிந்ததும் இன்னொன்றை உணர்ந்தாள். அவளுக்காக அவன் வெறும்கைகளால் கதவைப்பிளந்து உள்ளேவந்த அக்காட்சியை அவள் ஆன்மா ஒருபோதும் மறக்கப்போவதில்லை. அவளுடைய ஆழத்தில் வாழ்ந்த ஷத்ரியப்பெண் புளகம்கொண்ட தருணம். ஷத்ரியப்பெண்ணுக்கு வீரன் அளிக்கத்தக்க மாபெரும் பரிசு அது. இன்னொரு ஆணை இப்போது அவள் ஏற்கவேண்டுமென்றால், அவன் அவளுடைய பகற்கனவுகளில் வாழும் அந்தப் பேரழகன் என்றாலும் கூட, இந்த அரக்கனிடம் மற்போரிட்டு வென்றுவரும்படிதான் அவளால் சொல்லமுடியும்.
அவள் மீண்டும் திருதராஷ்டிரனைப் பார்த்தாள். அவனுடைய உடலை காலில் இருந்து தலைவரை கூர்ந்தாள். என்ன ஒரு முழுமை என்று அப்போதுதான் அவளுடைய பெண்ணுடல் கண்டுகொண்டது. ஒவ்வொரு தசையும் அதன் உச்சகட்ட வளர்ச்சியை அடைந்திருந்தன. கால்விரல்நகங்கள் ஒவ்வொன்றிலும் தாரநாகத்தின் தேய்ந்து உருண்டு பளபளப்பான வெண்கல்லின் ஒளிமிக்க பார்வை இருப்பதுபோலப் பட்டது. கருங்கல்லால் செதுக்கப்பட்டதுபோன்ற கணுக்கால்கள். உழலைத்தடியென இறுகிய கெண்டைக்கால். நின்றசையும் குதிரையின் தசைகளைக் காட்டிய பெருந்தொடைகள். எட்டு பாளங்களாக இறுகிய வயிறு. மயிரே இல்லாமல் எருமைத்தோல் என கருமையாகப் பளபளத்த அகன்ற மார்பு. சுருண்ட கரிய தலைமயிர்.
அவள் அப்போதுதான் அவனுடைய விரல்கள் அசைந்துகொண்டே இருப்பதைக் கண்டாள். என்ன செய்கிறான்? அவன் காற்றில் தாளமிட்டுக்கொண்டிருக்கிறான் என்று கண்டுகொண்டாள். சிலகணங்களுக்குள் அவன் உடலே அவனுள் ஓடும் இசைக்கேற்ப மெல்ல அசைந்துகொண்டிருப்பதை உணர்ந்தாள். பாடுகிறானா? உதடுகள் அசையவில்லை. ஆனால் முகம் கனவில் மூழ்கி இருந்தது. இசை கேட்கிறான்! தன்னுள் இருந்து எடுத்த இசையை. அல்லது காற்று அவன் ஆன்மாவுக்கு நேரடியாக அளித்த இசையை.
அவனைச்சுற்றி பல்லாயிரம்பேர் பெருங்கூச்சலிட்டுக்கொண்டிருந்தனர். பெருமுரசுகளும் முழவுகளும் கொம்புகளும் மணிகளும் இலைத்தாளங்களும் ஓசையிட்டன. அங்கிருந்த விழிகளெல்லாமே அவனையே பார்த்துக்கொண்டிருந்தன. ஆனால் அவன் அவர்களிடமிருந்து மிக விலகி இளங்காற்றில் தன்னைத்தானே மீட்டிக்கொண்டிருக்கும் கருங்குளிர்ச்சுனை என இசையாடிக்கொண்டிருந்தான். பாலைவனக் காற்றில் கைவிரித்து நடமிடும் ஒற்றை ஈச்சை மரம் போல. மௌனமாக பொழிந்து உருமாறிக்கொண்டே இருக்கும் பாலை மணற்குன்றுபோல.
அவளுக்கு அவனருகே செல்லவேண்டும் போலிருந்தது. அவன் உடல் ஒரு மாபெரும் யாழைப்போல இசையால் நிறைந்திருக்குமென்று தோன்றியது. அந்த கனத்த கைவிரல்களைப் பற்றிக்கொண்டால்போதும், அதைக் கேட்கமுடியும். அது என்ன இசை? அன்றுவரை அவள் கேட்காத இசை. அவள் உடல் புல்லரித்து கண்கள் கலங்கின. அப்போது அவளறிந்தாள், அவள் அவன் மனைவியாகிவிட்டிருப்பதை. இனி வாழ்நாளெல்லாம் அவள் வேறெதுவுமல்ல என்பதை.
திரைக்குள் வந்த சேடியர் அவள் உடைகளை சீர்படுத்தி குங்குமமும் மங்கலங்களும் அணிவித்தனர். சங்கொலி அறிவிக்க, திரைவிலக்கி அவள் வந்தபோது கூட்டம் கைகளை வீசி அணியணியாகக் கண்கள் மின்ன வாழ்த்தொலி எழுப்பியது. களமுற்றத்திலேயே இளவரசி காந்தாரியை திருதராஷ்டிரனுக்கு கையளித்தனர் ஏழுகுலமூதாதையர். அவன் வந்து அவள் முன் நின்றபோது அவளால் ஏறிட்டுநோக்கவே முடியவில்லை. அவனுடைய மின்னும் கால்நகங்களையே பார்த்துக்கொண்டிருந்தாள். அவனுடைய பெரிய கைகளுக்குள் அவளுடைய சிறிய கைகளை பிடித்து வைத்து அதை வண்ணம் தோய்த்த பனையோலையால் கட்டினார் குலமூத்தார். அவளுடைய வெண்ணிறக் கை அவனுடைய கரிய கைக்குள் யானை மருப்பில் வெண்தந்தம்போலத் தெரிந்தது. அவனுடைய உள்ளங்கை கல்போன்றிருந்தாலும் உயிர்துடிப்பு கொண்டிருந்தது.
குலமூத்தார் நன்மணம் அறிவிக்க, கூடி நின்ற லாஷ்கரர்கள் கூச்சலிட்டபடி தங்கள் ஆயுதங்களை வானோக்கி வீசினர். வாழ்த்தொலிகளும் முரசொலிகளும் சேர்ந்து காந்தாரநகரியே பெருமுரசு போல வானைநோக்கி உறுமியது. ஏழுமூதாதையரும் அந்த மணநிகழ்வுக்கு அனுமதி அளித்த செய்தியை அவர்களின் நிமித்திகன் கூவியறிவித்ததும் அரண்மனை முரசு இமிழத்தொடங்கியது. அரண்மனைக்குள் மங்கலக்குறுமுரசும் கொம்புகளும் ஓசையிட்டன. வைதிகர் நிறைக்கலம் ஏந்தி நீர்தெளித்து வேதமோதி வழியொருக்க, சூதர் இசைமுழக்க, குடையும் கவரியும் செங்கோலும் துணைவர, மணிமுடி சூடி முழுதணிக்கோலத்தில் சுபலரும் அவர் துணைவியான சுகர்ணையும் களமுற்றத்துக்கு வந்தனர். அங்கிருந்த அனைவரும் வாழ்த்தொலி எழுப்பினர்.
சுபலரின் வலப்பக்கம் மைந்தர்களான அசலனும் விருஷகனும் சகுனியும் நிற்க இடப்பக்கம் பட்டத்தரசி சுகர்ணையும் விருஷ்டி, சுதமை, சித்ரை, பத்மை என்னும் நான்கு மனைவியரும் நின்றனர். பின்னால் அமைச்சர்கள் நின்றனர். நிமித்திகர் கோலைத்தூக்கியதும் அமைதி எழுந்தது. அவர் மாமன்னர் சுபலர் தன் பிற பத்து மகள்களையும் அஸ்தினபுரியின் அரசனாகிய திருதராஷ்டிரனுக்கு அளிக்கவிருப்பதாக அறிவித்ததும் மக்கள் வாழ்த்தொலி எழுப்பினர்.
சுகதரும் சத்யவிரதரும் வந்து அழைக்க பீஷ்மரும் திருதராஷ்டிரனும் விதுரனும் முன்னால் சென்றனர். அஸ்தினபுரியின் அரண்மனைப்பெண்களும் அணிப்பரத்தையரும் பின்னால் தொடர்ந்தனர். சேவகர்களும் பரத்தையரும் அஸ்தினபுரியில் இருந்து கொண்டுவந்திருந்த மங்கலப்பொருட்களை காந்தாரமன்னனுக்கு வழங்கினர். அவற்றைப் பெற்றுக்கொண்டு சுபலர் முதலில் காந்தாரியான வசுமதியை தர்ப்பையணிந்த விரல்களால் பொற்கிண்ணத்து நீரை ஊற்றி திருதராஷ்டிரனுக்கு கன்னிக்கொடை அளித்தார். அதன்பின் சுபலர் சத்யவிரதை, சத்யசேனை, சுதேஷ்ணை, சம்ஹிதை, தேஸ்ரவை, சுஸ்ரவை, நிகுதி, சுபை, சம்படை, தசார்ணை என்னும் பத்து மகள்களையும் திருதராஷ்டிரனுக்கு அளித்தார்.
அங்கிருந்தே அரசகுலத்தவர் ஏழு ரதங்களில் லாஷ்கரர்களுடன் கிளம்பி ஆரியகௌசிகை ஆற்றங்கரைக்குச் சென்றனர். காந்தாரி ரதத்தில் இருந்தபடி திரையின் இடைவெளிவழியாக வெளியே ஓடிய பாலைநிலத்தைப் பார்த்துக்கொண்டிருந்தாள். ஆரியகௌசிகை ஆற்றின் சரிவு மிக ஆழமானது. ஆனால் உள்ளே நீர் குறைவாகவே ஓடியது. பாம்புச்சட்டைபோல கரிய நீர் வெயிலில் அலைமின்னிக் கிடந்தது. அதன்கரையில் நின்றிருந்த தொன்மையான வேங்கை மரத்தின் அடியில் இருந்தது மரு, இருணை, ஃபூர்ணி, காமலை, கிலை, ஆரண்யை என்று அழைக்கப்பட்ட லாஷ்கரர்களின் ஆறுதேவதைகளின் ஆலயம்.
நெடுங்காலம் அந்த ஆலயம் இயற்கையான கற்பாறையை செதுக்கி உருவாக்கப்பட்ட பீடத்தின்மேல் நிறுவப்பட்ட ஆறு கற்களாகவே இருந்தது. சுபலரின் காலகட்டத்தில்தான் அந்தப்பாறையை உள்ளடக்கி மரத்தாலான கூரைகொண்ட சிறியகட்டடம் எழுப்பப்பட்டது. பாலை மண்ணின் நிறங்களான சாம்பல், செங்காவி, மஞ்சள், தவிட்டு நிறம், வெண்மை, கருமை ஆகியவற்றால் ஆனவையாக இருந்தன அந்தக் கற்கள். நெடுங்காலம் முன்பு ஏதோ மூதாதையர் கைகளால் செதுக்கப்பட்ட ஒழுங்கற்ற வடிவம் கொண்ட குத்துக்கற்கள்மேல் கண்கள் மட்டும் செவ்வண்ணத்தால் வரையப்பட்டிருந்தன.
லாஷ்கரப் பூசகர் ஆறு அன்னையருக்கும் குருதிபூசை செய்தனர். திருதராஷ்டிரனும் இளவரசியரும் குருதியுணவை உண்டபின் பன்னிருமுறை அன்னையரைச் சுற்றிவந்து வணங்கினர். பூசனை முடிந்தபின் லாஷ்கரப்பூசகர்கள் மேற்குநோக்கி கண்களைத் திருப்பியபடி அசையாமல் காத்துநின்றனர். ஒருநாழிகை நேரம் அவர்கள் அசையாமல் நிற்க பிறரும் நின்றனர். விதுரன் அவர்கள் காற்றுக்காக காத்துநிற்கிறார்கள் என்று புரிந்துகொண்டான்.
ஒன்றும் நிகழவில்லை. ஆனால் ஒருபூசகர் மெல்லியகுரலில் ஏதோ சொன்னார். மற்றவர்களும் ஆமோதித்தனர். நெடுந்தொலைவில் சருகுகள் மிதிபடும் ஒலி போல ஏதோ கேட்டது. காற்று மூங்கில்துளைகள் வழியாகச் செல்லும் ஒலி போல மெல்லிய ஓசை கேட்டதா இல்லையா என மயக்களித்துக் கடந்துசென்றது. பின்னர் வானில் ஒளி குறையத்தொடங்கியது. அதற்கேற்ப நிலம் மங்கலடைந்து இருண்டது. மேலும் மேலும் ஒளி சிவந்தபடியே வந்தது. காய்ந்து வற்றி முறுகும் தேன்பாகு போல. சற்றுநேரத்தில் செம்பழுப்புநிறப் படிகம் வழியாகப் பார்ப்பதுபோல பாலை இருண்ட ஒளிகொண்டது. உறையத்தொடங்கும் குருதி போல சிவந்து சிவந்து இருளாகியது.
மேற்குவானில் ஒரு சிவந்த திரை எழுவதை காந்தாரி கண்டாள். மிகவேகமாக அது வானில் தூக்கப்பட்டது. மெல்லொளிபரவிய வானை அது மூடியபடியே வந்தது. அதனுள் நூற்றுக்கணக்கான அலைமுனைகள் திரண்டு வருவதை அதன்பின் கண்டாள். எழுந்து தலைக்குமேல் அவை தெரிந்த கணத்தை அவள் சரிவர உணர்வதற்குள் புழுதிப்புயல் அவர்கள் மேல் மூடி மறுபக்கம் நெடுந்தொலைவுக்குச் சென்றுவிட்டிருந்தது. மூச்சுவிடுவதற்காக முகத்தை துணியால் மூடியபடி அவர்கள் குனிந்து நின்றிருந்தனர். அலையலையாக புழுதி அவர்களை அறைந்தது. கூரிருள் சூழ்ந்த மௌனத்துக்குள் புயலின் ஒங்காரம் மட்டும் நிறைந்திருந்தது.
புயலில் நிற்பது ஒருவகை ஊழ்கம் என்று காந்தாரி பலமுறை உணர்ந்திருந்தாள். புயலையல்லாமல் வேறெதையுமே நினையாமல் காலம் அணைந்து கருத்தணைந்து நின்றுகொண்டிருக்கும் நிலை அது. ஆனால் முதல்முறையாக சிலகணங்களுக்குள் அவள் திருதராஷ்டிரனை நினைத்தாள். அவனுக்குப்பழக்கமில்லாத புயல் அவனை அச்சுறுத்துமோ என்ற எண்ணம் வந்ததும் அவள் மெல்ல கைகளை நீட்டி அவன் இடக்கையைப் பிடித்துக்கொண்டாள்.
VENMURASU_EPI_71__
ஓவியம்: ஷண்முகவேல்
[பெரிதுபடுத்த படத்தின்மீது சொடுக்கவும்]
துயில் விழிப்பதுபோல அவள் மீண்டு வந்தபோது அவளைச்சுற்றி முழுமையாகவே இருட்டு நிறைந்திருந்தது. இருளுக்குள் ஒரு ரீங்காரம் போல வெகுதொலைவில் புயல் கடந்துசெல்லும் ஒலி கேட்டது. மெல்ல மேலைவானில் திரை நகர்ந்து ஒரு இடைவெளி உருவாகியது. புன்னகை மலர்ந்து விரிநகையாவதுபோல அது விலகியது, அவர்களைச் சுற்றி மங்கிய ஒளி பரவியது.
அவர்களனைவரும் செம்மண்சிலைகள் போல நின்றிருந்தனர். அவள் திரும்பி திருதராஷ்டிரனைப் பார்த்தாள். அவனுடைய பெரிய தோள்களில் இருந்து மெல்லியபுழுதி வழிந்துகொண்டிருந்தது. அவள் அப்போதுதான் மறுபக்கம் விதுரன் அவனுடைய வலக்கையைப் பற்றியிருப்பதைக் கண்டு தன் கையை விட்டாள். அதற்குள் விதுரன் அவள் கண்களைச் சந்தித்து புன்னகை புரிந்தான்.
விதுரன் திருதராஷ்டிரனிடம் “அரசே தங்கள் உடலைத் தூய்மையாக்குகிறேன்” என்றபின் ஆடையால் திருதராஷ்டிரனின் தோள்களையும் மார்பையும் தட்டத் தொடங்கினான். காந்தாரி தன் பார்வையை வேறுபக்கம் திருப்பிக்கொண்டு முழுக்கவனத்தையும் அவன் மேலேயே வைத்திருந்தாள். குலப்பூசகர் குனிந்து அன்னையின் முற்றத்தில் கிடந்த கற்களை எண்ணினர். நூற்றியொரு கற்கள் இருந்தன. குலமூத்தார் லாஷ்கர மொழியில் ஏதோ சொல்ல மற்ற லாஷ்கரர் உரக்கச் சிரித்தனர்.
“என்ன சொல்கிறார்கள்?” என்று விதுரன் மெல்லிய குரலில் சத்யவிரதரிடம் கேட்டான். “முற்றத்தில் புயல்கொண்டுபோடும் கற்களை எண்ணி பிறக்கப்போகும் குழந்தைகளை கணிப்பது வழக்கம். நூற்றியொரு கற்கள் விழுந்திருக்கின்றன” என்றார் சத்யவிரதர். விதுரன் புன்னகைசெய்தான். அந்தச்செய்தி காந்தார சேவகர்கள் மற்றும் சேடிகள் வழியாகப் பரவுவதையும் இளவரசிகள் அனைவரும் நாணுவதையும் புன்னகை செய்வதையும் கவனித்தான்.
“விதுரா, மூடா… ஒன்றை கவனித்தாயா?” என்றான் திருதராஷ்டிரன். “இத்தனை பெரிய புயல் மந்திரஸ்தாயியில்தான் ஒலிக்கிறது.” விதுரன் “நான் அதை கவனிக்கவில்லை” என்றான். திருதராஷ்டிரன் “நான் அதை மட்டுமே உணர்ந்தேன். மிகப்பிரம்மாண்டமான ஒரு குழல்வாத்தியத்தை மிகமிக மெல்ல வாசிப்பதுபோலிருக்கிறது அதன் நாதம்… புயலோசை ஒருவகையில் செவ்வழிப்பண்ணை ஒத்திருக்கிறது” என்றான். மேலே பேசமுடியாமல் கைகளைத் தூக்கினான். “என்னால் சொல்லமுடியவில்லை. விதுரா, முன்பொருநாள் வைதிகரான பாடகர் ஒருவர் திருவிடத்தில் இருந்து வந்தாரல்லவா? அவர் ஒரு சாமவேத நாதத்தைப் பாடிக்காட்டினாரே!”
“ஆம்” என்றான் விதுரன். “அவர் பெயர் சுதாமர். பவமானன் என்னும் நெருப்பின் மைந்தனை ரிஷி சத்யன் பாடியது.” “அதன் வரிகளைச் சொல்” என்றான் திருதராஷ்டிரன். விதுரன் சிறிது சிந்தித்துவிட்டு அவ்வரிகளைப் பாடினான்.
பேரோசையிடும் நதியலை போல
குரலெழுப்பியபடி உனது வல்லமைகள்
எழுந்து வருகின்றன!
ஒளிவிடும் கூரம்புகள்
போலப் பொங்கி வருக!
சூரியனுக்கு உறவினனே,
விண்ணகத்தில் நீ பெருகும்போது
உன் பொழிவில் திளைப்பவர்களின்
மும்மொழிகள் வானோக்கி எழுகின்றன!
அன்புக்குரிய மது நிறைந்த பவமானனை
ஒளிவிடும் கற்களால் வழிபடுவோம்!
இனியவனே, கவிஞனே,
இறைவனின் இடத்தை சென்றடைபவனே,
இந்தப் புனிதவேள்வியிலே பொழிக!
மகிழ்வளிப்பவனே,
பாலொளிக்கதிர்களாக பெருகுக!
இந்திரனின் வயிற்றில் சென்று நிறைக!
“ஆம்…” என்றான் திருதராஷ்டிரன். கைகளை மேலே தூக்கி ஒலியெழாச் சொற்களின் உந்தலை உடலால் வெளிப்படுத்தி “அவ்வரிகளை இன்றுதான் உணர்ந்தேன். இப்போது வந்தவன் பவமானன். சூரியமைந்தன். அவனைக்கண்டு மண் எழுப்பும் மும்மொழி வானோக்கி எழும் நாதத்தைக் கேட்டேன். காயத்ரி சந்தம்….உதடுகளில் எழாமல் காதை அடையாமல் கருத்தில் நிறையும் சந்தம் அது. மந்திரஸ்தாயி. ஆம்…மண்ணிலுள்ள அனைத்து கற்களும் வைரங்களாக மாறி அவனை வணங்கின. கோடானுகோடி கூரம்புகளின் ஒளியுடன் பாலின் வெண்மையுடன் அவன் பெருகி வானை நிறைத்தான்.”
காந்தாரி அவன் முகத்தையே விழிமலர்ந்து பார்த்துக்கொண்டிருந்தாள். அப்பால் பீஷ்மர் கைகாட்ட பலபத்ரர் வந்து “அரசே, சோலைக்குச் செல்லலாமென பிதாமகர் ஆணையிட்டார்” என்றார். விதுரன் கைகளைப் பிடிக்க திருதராஷ்டிரன் நடந்தான். அவனுக்குள் அந்தவேதவரிகள் இசைக்கப்படுவதை அவன் முகம் காட்டியது. கனவில் மிதந்து செல்பவன் போல அவன் நடப்பதைக் கண்டு நின்றபின் அவள் பார்வையை விலக்கிக் கொண்டாள். விதுரன் காந்தாரியை நோக்கி புன்னகை செய்துவிட்டுச்சென்றான்.

3/30/14

பகுதி நான்கு : பீலித்தாலம்[ 3 ]

பகுதி நான்கு : பீலித்தாலம்[ 3 ]
கோட்டைவாயிலில் இருந்து காந்தாரபுரியின் அமைச்சர்கள் சுகதர் தலைமையில் சூழ, இரண்டு இளவரசர்களும் முழுதணிக்கோலத்தில் கையில் மங்கலப்பொருள்களுடன் வந்து மணமகனையும் சுற்றத்தையும் எதிர்கொண்டழைத்தனர். சகுனியும் விருஷகனும் கைகளில் வலம்புரிச்சங்கு, ஒற்றைமுனை உருத்திரவிழிக்காய், மஞ்சள் பட்டு, மலைத்தேன், மஞ்சள்மலர், ஏடு, ஆயுதம், பொன், நெய்தீபம், மண் ஆகிய பத்து மங்கலப்பொருட்கள் பரப்பிய தாலங்களுடன் வந்தனர். அவர்கள் இருபக்கமும் குடையும் கவரியும் ஏந்திய சேவகர்கள் வர பின்னால் அமைச்சர்கள் வந்தனர். சூதர்கள் இடப்பக்கமும் வைதிகர் வலப்பக்கமும் வந்தனர். சூதர்களின் இசையும் வேதமுழக்கமும் இசைந்து மீட்டின. தொடர்ந்து பாவட்டங்களும் கொடித்தோரணங்களும் நிலைத்தோரணங்களும் ஏந்திய சேவகர்களின் வரிசைகள் வந்தன.
சகுனியை முதல்பார்வையிலேயே விதுரன் அறிந்துகொண்டான். மெலிந்த சிறிய வெண்சுண்ண நிற உடலில் நாய்க்குட்டியின் அடிவயிறுபோல மெல்லிய செந்நிறப்புள்ளிகள் நிறைந்திருந்தன. பிங்கலநிறமான தலைமுடி பருந்தின் இறகுகள் போல தோளில் விழுந்திருந்தது. செந்நிறம்பூசப்பட்ட மெல்லிய தாடி புகைச்சுருள் போல சற்று ஒட்டிய கன்னங்களை நிறைத்திருக்க மிகமெல்லிய செவ்வுதடுகள் வாள்கீறிய புண் எனத்தெரிந்தன. மெலிந்த ஒடுங்கிய மூக்கு. பெரிய குரல்வளை கொண்ட கழுத்து. இறுகிய தோள்கள் சற்று முன்னால் வந்து கூனல்போன்ற தோற்றதை அளித்தன. தொடர்ந்த வில்பயிற்சியால் இறுகிய தசைகளில் நரம்புகள் ஊமத்தைப்பூவிதழின் நீலரேகைகள் போலப்பரவியிருந்தன.
அவன் கண்களை தற்செயலாகச் சந்தித்தபோதுதான் அவன் தானறியாமல் தன்னைப் பார்த்துக்கொண்டிருப்பதை விதுரன் உணர்ந்தான். ஓநாய்களுக்குரிய பழுப்புக் கண்கள். அவற்றில் சலிப்பும் விலகலும் கலந்த பாவனை இருந்தது. விதுரனின் கண்களைச் சந்தித்தும்கூட அவை எந்த உரையாடலையும் நிகழ்த்தாமல் இயல்பாக விலகிக்கொண்டன. அவன் திரும்பியபின் விதுரனும் திரும்பிக்கொண்டான். ஆனால் அவனுக்கு தன்னை மிக நன்றாகத் தெரியும் என்றும் எப்போதும் தன்னை கவனித்துக்கொண்டிருக்கிறான் என்றும் விதுரன் உணர்ந்தான்.
சகுனி முன்னால் வந்து பீஷ்மரை வணங்கினான். பீஷ்மர் அவன் தலையில் கைவைத்து ஆசியளித்தார். அவர் கண்களால் ஆணையிட்டதும் விதுரன் திருதராஷ்டிரனை தோள்தொட்டு மெல்ல முன்னால் தள்ள அவன் தடுமாறி வந்து நின்றான். அவனுடைய தோற்றம் அனைத்துவிழிகளிலும் தழலில் நீர்த்துளி விழுந்ததுபோன்ற மிகமெல்லிய அசைவொன்றை உருவாக்கியதை விதுரன் கண்டான். நீரோடையில் ஒழுக்கு தடைபட்டு பின் மீள அந்த அசைவின் தடம் ஒழுகிச்செல்வதுபோல சூதரின் இசையிலும் வேதநாதத்திலும் வந்த அந்தக் கணநேரத்தடுமாற்றம் ஊர்வலத்தின் இறுதி வரை பரவிச் செல்வதைக் காணமுடிந்தது.
திருதராஷ்டிரன் தலையை கோணலாகச் சரித்து முன்னால் வந்த ஒலிகளுக்குச் செவிகூர்ந்தவனாக உதடுகளை இறுக்கியபடி நின்றான். சகுனி கண்களை அசைக்க விருஷகன் முன்னால் வந்து அந்த மங்கலத்தாலத்தை திருதராஷ்டிரனிடம் நீட்டினான். திருதராஷ்டிரனின் கைகளைத் தொட்டு அதை வாங்கச்செய்தான் விதுரன். ஆனாலும் திருதராஷ்டிரன் சரியாகப்பிடிக்காமல் தட்டு மெல்லச்சரிய அதை விதுரன் பிடித்துக்கொண்டான். சகுனி திருதராஷ்டிரனை நோக்காமல் தன் கையிலிருந்த தட்டை பீஷ்மரிடம் நீட்டினான். அந்த அவமதிப்பை உணர்ந்தகணத்தை பீஷ்மரின் உடலெங்கும் உணரமுடிந்தது. ஆனால் அவர் கைநீட்டி அதைப் பெற்றுக்கொண்டார்.
விருஷகன் குனிந்து திருதராஷ்டிரனின் பாதங்களில் சேவகர் பொற்குடத்தில் அளித்த நறுமணநன்னீரை மும்முறை இலைத்தொன்னையால் அள்ளி விட்டான். வெண்பட்டால் கால்களைத் துடைத்து வெண்மலர்களையும் மஞ்சள் அரிசியையும் பொற்துளிகளையும் அள்ளிப் போட்டு பூசனை செய்தான். காந்தாரபுரியின் இலச்சினை அடங்கிய மணிமோதிரத்தை சுகதர் பொற்தட்டில் வைத்து நீட்டினார். திருதராஷ்டிரன் தன் கையை நீட்டியபோது அனைவருக்குமே தெரிந்தது, அந்த மோதிரம் அவனது சிறுவிரலுக்குக் கூடப் போதாது என்று. அவன் பெரிய உடல் கொண்டவன் என்பதனாலேயே அதை அவர்கள் பெரிதாகச் செய்திருந்தாலும் அவ்வளவு பேருருவை அவர்கள் உய்த்திருக்கவில்லை.
மோதிரத்தை எடுத்த விருஷகன் சகுனியை நோக்கினான், பீஷ்மர் “அதை பிறகு போட்டுக்கொள்ளலாம் விருஷகா. தர்ப்பைமோதிரம் அனைத்தையும் விடப் புனிதமானது” என்றார். ஒரு வைதிகர் தன் தட்டில் இருந்த தர்ப்பையை மோதிரமாகச் சுருட்டி அளிக்க அதை திருதராஷ்டிரனின் விரலில் விருஷகன் அணிவித்தான். அவனது கைகளைப்பற்றிக்கொண்டு அவன் “அஸ்தினபுரியின் மைந்தரே காந்தாரநாட்டுக்கு வருக” என்று மும்முறை சொன்னான். மங்கலஇசை செவிகளை மூடியது. வைதிகர் வேதம் ஓதியபடி நிறைகலத்து நன்னீரை வெற்றிலையால் அள்ளி அவன்மீது தெளித்தனர்.
திருதராஷ்டிரன் நகர்நுழைந்தபோது கோட்டைமேலிருந்து மலர்கள் அவன் மேல் பொழிந்தன. அவன் அந்தமலர்கள் படும்போதெல்லாம் உடல்சிலிர்த்து அம்மலர்கள் வந்த திசைகளை நோக்கி தன்னை அறியாமலேயே திரும்பமுயன்றான். அவனுடைய அணிகள்மேல் தங்கிய மலர்களை கைகளால் தட்டிக்கொண்டான். “அரசே, அவை மலர்கள்” என்று விதுரன் மெதுவாக அவன் காதில் சொன்னான். “தெரிகிறது” என்றான் திருதராஷ்டிரன். பற்களைக் கடித்தபடி “ஏன் இத்தனை ஓசை? என் செவிகள் அதிர்கின்றன” என்றான். விதுரன் “அரசே, அது மாமங்கலஓசை…” என்றான். “இது எந்த இடம்?” “கோட்டைவாசல்… நாம் உள்ளே சென்றுகொண்டிருக்கிறோம்.” “ரதங்களைக் கொண்டுவரச்சொல்!” விதுரன் திடமாக “அரசே, நாம் ஊர்கோலம் சென்றுகொண்டிருக்கிறோம். நகரமக்கள் தங்களைக் காணவேண்டுமல்லவா?”
அதைச் சொல்லியிருக்கக் கூடாதென்று விதுரன் என்ணிக்கொண்டான். திருதராஷ்டிரன் உடல் மேலும் கோணலடைந்தது. தோள்கள் முன்குறுகின. அவன் தரையில் பரப்பப்பட்டிருந்த மரவுரிக்கம்பளத்தில் கால்தடுக்கத் தொடங்கினான். அவன் விழப்போக பிடித்துக்கொள்ளும்படி ஆகிவிடுமோ என்று விதுரன் அஞ்சினான். அவர்கள் நகரத்தின் அரசவீதியில் செல்லும்போது விதுரன் மெல்லமெல்ல வாழ்த்தொலிகள் அவிந்துகொண்டிருப்பதை கவனித்தான். ஒரு கட்டத்தில் படைவீரர்கள் மட்டுமே வாழ்த்தொலிகளை எழுப்பிக்கொண்டிருந்தனர்.
சற்று நேரத்தில் நகர் மக்கள் முற்றிலுமாகவே வாழ்த்தொலி எழுப்புவதை நிறுத்திவிட்டு திருதராஷ்டிரனையே நோக்கிக் கொண்டிருந்தனர். மக்கள் நிறுத்திவிட்டதை உணர்ந்த சுகதர் கைகாட்ட நூற்றுவர் தலைவர்கள் தங்கள் வீரர்களிடம் கைகாட்ட அவர்கள் மேலும் மேலும் உரக்க வாழ்த்தொலி எழுப்பினர். ஆனால் மெதுவாக அதுவும் நின்றுவிட்டது. அவர்கள் வெறுமே வாத்தியங்களின் ஒலி மட்டும் துணைவர நடந்துகொண்டிருந்தனர்.
சகுனி விதுரனின் அருகே வந்து விழிகளால் சந்தித்து உதடுகள் மட்டும் அசைய “அமைச்சரே, தாங்கள்தான் அஸ்தினபுரியின் சூதமைந்தர் விதுரன் என நினைக்கிறேன்” என்றான். “ஆம்” என்றான் விதுரன். சகுனி “எங்கள் குலவழக்கப்படி தாங்கள் அந்த சிறியகோட்டைவாயில் முன்னால் நின்றுவிடவேண்டும். அதுதான் பழைய காந்தாரத்தின் கோட்டைவாயில். அதற்குமேல் தங்களை இங்குள்ள லாஷ்கரக்குலமூதாதையர் வந்து எதிரேற்று முன்னால் கொண்டுசெல்வார்கள். அதன்பின்னர்தான் இந்தப் பாலைநிலம் தங்களை ஏற்கிறது என்று பொருள்” என்றான். அவன் பார்வையில் அதே சலிப்புற்ற பாவனை. அது சகுனி பயின்று கண்களுக்குள் போட்டுக்கொண்டிருக்கும் திரை என்று விதுரன் அறிந்தான்.
விதுரன் பீஷ்மரிடம் அதைச் சொன்னான். அவர் தலையசைத்தார். அந்த உள்கோட்டையை கோட்டை என்றே சொல்லமுடியாதென்று விதுரன் நினைத்துக்கொண்டான். செங்குத்தாக ஆளுயரமான கற்களை நாட்டி வைத்திருந்தனர். அதன் வாயில்போன்ற அமைப்பில் நான்கு ஆள் உயரமுள்ள இரு பெரிய மரத்தூண்கள் நின்றன. இரண்டுபேர் கைசுற்றிப் பிடிக்கத்தக்க அளவுக்குப் பெரியவை. அவை நெடுநாட்களாக அங்கே காற்றிலும் வெயிலிலும் நின்றிருப்பதை அவற்றின் மேலே இருந்த பொருக்கு காட்டியது.
அது செம்மைசெய்யப்படாத மரம் என்ற எண்ணம் முதலில் வந்தது. மேலும் நெருங்கியபோதுதான் அது நுணுக்கமாகச் செதுக்கப்பட்ட சிற்பங்கள் செறிந்தது என்று புரிந்தது. பாலைவனத்தின் அனைத்து உயிர்களும் அதில் இருந்தன. அடித்தளம் முழுக்க நாகங்கள். மேலே ஓநாய்களும் ஒட்டகங்களும் கழுதைகளும் காட்டுஆடுகளும். உச்சியில் சிறகு விரித்து கீழே நோக்கிய செம்பருந்து. அது லாஷ்கரர்களின் குலத்தூண் என்று விதுரன் புரிந்துகொண்டான். வேசரத்தின் தண்டகப் பழங்குடிகள் தங்கள் ஊர்முகப்புகளில் அவ்வாறு எல்லைத்தூண்களை அமைப்பதுண்டு என்று சூதர்கள் பாடிக்கேட்டிருந்தான்.
அந்தத் தூண்களுக்கு அப்பால் விரிந்த பெருங்களமுற்றத்தில் செம்பருந்தின் இறகுகள் செருகப்பட்ட ஓநாய்த்தோல் தலையணிகளும் மரத்தாலான கவசங்களும் அணிந்து கைகளில் தங்கள் அதிகார தண்டங்களுடன் ஏழு லாஷ்கர மூதாதையர் நின்றிருந்தனர். அம்பு, வேல் போன்ற ஆயுதங்கள் ஏந்தி அவர்களின் குலத்தைச்சேர்ந்த நூறு இளைஞர்கள் பின்னால் நின்றனர். முற்றத்துப்பின்னால் பிறைவடிவில் காந்தாரத்தின் மூன்றடுக்கு அரண்மனை நூற்றுக்கணக்கான சாளரங்களுடனும், உப்பரிகைகளுடனும், வலப்பக்கம் அந்தப்புரமும் இடப்பக்கம் அமைச்சகமும் இணைந்திருக்க இரு சிறகுகளையும் விரித்து தலையை நீட்டிய செம்பருந்து போல நின்றிருந்தது.
அவர்கள் எழுவரும் திருதராஷ்டிரனை உற்றுப்பார்ப்பதைக் கண்டதுமே திருதராஷ்டிரன் விழியிழந்தவன் என்பதை அவர்கள் அப்போதுதான் அறிகிறார்கள் என்று விதுரன் தெரிந்துகொண்டான். மிருகங்களைப்போல உணர்வுகள் அவ்வப்போது உடலசைவுகளிலேயே தெரிய அவர்கள் திருதராஷ்டிரனை நோக்கினர். ஒருவர் சற்று குனிந்து வேட்டைமிருகத்தைப் பார்ப்பதைப்போல கவனித்தார். இருவர் பின்னடைந்து விலகிச்செல்ல முயல்பவர் போலிருந்தனர். மூவர் ஏதும் புரியாமல் பார்ப்பதுபோலத் தெரிந்தனர். ஒருவர் இரு கைகளையும் விரித்து மற்போருக்கு இறங்கப்போகிறவர் போலிருந்தார்.
பிறகு ஒரேகணத்தில் எழுவரும் மாறிமாறி தங்கள் மொழியில் உரக்கப்பேசிக்கொள்ளத் தொடங்கினர். பேச்சையே தங்கள் உடலால் நிகழ்த்துபவர்கள்போல கைகளையும் தலையையும் ஆட்டி வாயைத்திறந்து விழிகளை உருட்டி பேசினர். மூத்தவர் உரக்க குரல்கொடுத்து தன் தண்டத்தைத் தூக்க அவர்கள் அப்படியே பேச்சு அறுபட்டு அமைதியாயினர். அவர் அறிவிப்பதுபோல ஏதோ சொன்னார். அவர்கள் அனைவரும் தங்கள் கைகளைத் தூக்கி ஒலியெழுப்பி அதை ஆமோதித்தனர். அவர் திரும்பி வேகமாக நடந்து விலக அவரை பிறரும் தொடர்ந்தனர்.
VENMURASU_EPI_70_
ஓவியம்: ஷண்முகவேல்
[பெரிதுபடுத்த படத்தின்மீது சொடுக்கவும்]
சுற்றிலும் கூடியிருந்த காந்தாரமக்கள் அனைவரும் திகைத்துப்போயிருப்பதை விதுரன் கண்டான். சகுனி சுகதரிடம் அவர்களிடம் சென்று பேசும்படி மெல்லிய குரலில் சொல்ல அவரும் விருஷகனும் அவர்களைநோக்கி ஓடினார்கள். பீஷ்மர் சகுனியிடம் “நீங்கள் முன்னரே அவர்களிடம் திருதராஷ்டிரன் விழியிழந்தவன் என்று சொல்லியிருக்கவேண்டும்” என்றார். சகுனி “அது இங்கு வழக்கமில்லை” என்று சொன்னதும் விதுரன் திரும்பி அவனைப் பார்த்தான். அவர்கள் விழிகள் சந்தித்துக்கொண்டன.
அங்கேயே அவர்கள் காத்து நின்றனர். மூச்சொலிகளும் கனைப்புகளும் ஆயுதங்களும் நகைகளும் குலுங்கும் ஒலிகள் மட்டும் கேட்டுக்கொண்டிருந்தன. பெண்கள் நிற்கமுடியாமல் கால்களை மாற்றிக்கொண்டு இடை ஒசிய பெருமூச்சுவிட்டு ஆடைநுனியால் உடல்வியர்வையைத் துடைத்தனர். திருதராஷ்டிரன் “விதுரா, மூடா… என்ன நடக்கிறது இங்கே?” என்றான். “சில சடங்குகள்…” என்றான் விதுரன். “ஏன் ஓசையே இல்லை?” “அது இங்குள்ள வழக்கம் அரசே.”
நேரம் செல்லச்செல்ல நின்றவர்கள் அனைவருமே பொறுமையிழந்தனர். திருதராஷ்டிரன் “ஏன் தாமதம்? என்ன நடக்கிறது?” என்றான். “ஒன்றுமில்லை அரசே” என்றான் விதுரன். “மகள்கொடைக்கு ஏதேனும் தடையா?” என்று திருதராஷ்டிரன் கேட்டான். “இல்லையே” என்று விதுரன் சொன்னதுமே புரிந்துகொண்டு “யார்? யார் தடைசொல்கிறார்கள்? இப்போதே அவர்களை அழிக்கிறேன்” என்று இருகைகளையும் அறைந்துகொண்டு திருதராஷ்டிரன் கூச்சலிட்டான். “அரசே, அமைதியாக இருங்கள்… இது மக்கள்முன்னிலை” என்று விதுரன் சொன்னான்.
விருஷகன் ஓடிவந்தான். பீஷ்மரிடம் “பிதாமகரே, பொறுத்தருளவேண்டும். ஆதிகுல மூத்தவர்கள் அவர்கள். அவர்களுக்குரியது இந்நகரம். அவர்கள் ஆணையில்லாமல் இந்நகரை நாங்கள் ஆளமுடியாது” என்றான். பீஷ்மர் “என்ன சொல்கிறார்கள்?” என்றார். “இளவரசியை விழியிழந்தவருக்கு மணம்புரிந்துகொடுக்க அவர்களுக்கு விருப்பமில்லை. விழியிழந்தவர்களை பாலையை ஆளும் செம்பருந்தும் ஓநாயும் நாகங்களும் ஏற்பதில்லை என்கிறார்கள். அனல்காற்றுகள் அவருக்கு ஆசியளிக்கா என்கிறார்கள்.” திருதராஷ்டிரன் அதைக்கேட்டு “யார்? யார் அதைச் சொல்கிறார்கள்?” என்று கூவியபடி அத்திசை நோக்கித் திரும்பினான். “அரசே, அமைதி. நான் அனைத்தையும் விளக்குகிறேன்” என்றான் விதுரன்.
பீஷ்மர் பொறுமையை இழப்பது அவரது கண்களில் தெரிந்தது. “என்னதான் சொல்கிறார்கள்?” என்றபோது அவர் குரலிலும் அதுவே வெளிப்பட்டது. அதற்குள் அனைத்து லாஷ்கரர்களும் கூட்டமாக பின்வாங்கி விலகிச்செல்வதை விதுரன் கண்டான். ஆயுதங்களைத் தூக்கி ஆட்டி ஆர்ப்பரித்தபடி அவர்கள் உள்ளே ஓடினார்கள். அவர்களுடன் அங்கே கூடிநின்ற மக்களும் ஓடுவது தெரிந்தது. “விதுரா, மூடா, என்ன ஓசை அது? அது போர்க்கூச்சல்… ஆம் போர்க்கூச்சல்தான் அது” என்றான் திருதராஷ்டிரன்.  ”மகள்கொடை மறுக்கிறார்களா? யார்? எங்கே நிற்கிறார்கள்? அதைமட்டும் சொல்!”
சுகதர் ஓடிவந்தார். சகுனியின் காதில் அவர் ஏதோ சொல்ல சகுனி தலையை ஆட்டியபிறகு பீஷ்மரிடம் சொல்லும்படி கண்களைக் காட்டினான். சுகதர் பீஷ்மரிடம் சென்று “பிதாமகரே, இங்குள்ள சடங்குகளை தாங்கள் புரிந்துகொள்ளவேண்டும். இங்குள்ள எட்டு பழங்குடிக்குலங்களை ஒட்டுமொத்தமாக லாஷ்கரர் என்று அழைக்கிறோம். லாஷ்கர் என்றால் வலிமையான தசைகொண்டவர்கள் என்று பொருள். அவர்கள் மொழியில் லாஷ்கரர் என்றால் படைவீரகள். இந்தக்காந்தார நிலமே அவர்களுக்குரியது. இங்கு வந்து அவர்களின் பெண்களை மணந்த ஆயிரம் ஷத்ரியர்களிடமிருந்துதான் காந்தார அரசகுடும்பமும் ஷத்ரியகுலமும் உருவாகியது. இன்றும் இங்குள்ள குடிகளில் பெரும்பாலானவர்கள் லாஷ்கரர்கள்தான். ஷத்ரியர்கள்கூட லாஷ்கர குலமூதாதையருக்குக் கட்டுப்பட்டவர்கள்.”
“என்ன சொல்கிறார்கள்?” என்று மிக மெல்லிய குரலில் கேட்டார் பீஷ்மர். “காந்தார மரபுப்படி இங்குள்ள அனைத்துப் பெண்களும் லாஷ்கரர்கள்தான். ஷத்ரியப்பெண்களும் இளவரசிகளும் அவர்களுக்குச் சொந்தமானவர்கள் என்பதுதான் இங்குள்ள நம்பிக்கை. மகற்கொடை நடத்தவேண்டியவர்களே அவர்கள்தான்.” பீஷ்மர் கோபத்துடன் ஏதோ சொல்ல வருவதற்குள் சுகதர் வணங்கி “அவர்கள் விழியிழந்தவருக்கு மகள்கொடை மறுக்கிறார்கள். இளவரசியரை தங்கள் தொல்லூருக்குக் கொண்டுசெல்லவிருக்கிறார்கள்.”
திருதராஷ்டிரன் அதைக்கேட்டதும் சினத்துடன் திரும்பி “யார்? யார் மறுக்கிறார்கள்?” என்றான். பீஷ்மர் கண்களைக் காட்ட விதுரன் “அரசே, அதுவும் ஒரு சடங்கு… தாங்கள் வாருங்கள்” என அவனை கைப்பிடித்து விலக்கி கொண்டுசென்றான். “என்ன நடக்கிறது? என்ன நடக்கிறது?” என்று விதுரனின் தோளைப்பற்றி உலுக்கினான். “நான் சொல்கிறேன் அரசே… பொறுங்கள்” என்றான் விதுரன்.
தூண்கோட்டைக்கு அப்பால் லாஷ்கரர்கள் அந்தப்புரத்தில் இருந்து பெருங்களமுற்றத்தை நோக்கி பெரிய சக்கரங்கள் கொண்ட மூன்று கூண்டுவண்டிகைளை கையாலேயே இழுத்துவருவதை விதுரன் கண்டான். அவை பிற வண்டிகளை விட இருமடங்கு பெரியவையாக இருந்தன. லாஷ்கரர் இளவரசியரை அவற்றுக்குள் வைத்திருக்கிறார்கள் என்று நன்றாகவே தெரிந்தது. களமுற்றத்துக்கு அப்பால் அரண்மனையில் இருந்து அவ்வண்டிகளைத் தொடர்ந்து ஓடிவந்த ஆயுதமேந்திய அரண்மனைக் காவலர்கள் பின்னாலிருந்து வந்த ஆணைகளுக்குக் கட்டுப்பட்டவர்களாக மெதுவாக நின்றுவிட வண்டிகள் சகடங்கள் தரையில் பரப்பப்பட்ட கற்பரப்பில் சடசடவென ஓசையிட்டு முன்னால் வந்தன.
ஆயுதங்களை மேலே தூக்கி கூச்சலிட்டபடி லாஷ்கரர்கள் அந்த வண்டிகளைச் சுற்றி எம்பி எம்பிக் குதித்து ஆர்ப்பரித்தபடி அவற்றின் நுகங்களைத் தூக்கி ஒட்டகங்களைக் கொண்டுவந்து பூட்டினர். மூங்கில்கழிகள் மேல் கூட்டப்பட்ட வைக்கோல்போர் போன்ற ஒட்டகங்கள் கடிவாளம் இழுபட பாதாளநாகம்போல கழுத்தை வளைத்து தொங்கிய வாய் திறந்து கனைத்தன. அவற்றின் உடலில் கட்டப்பட்டிருந்த தோல்வடங்களில் நுகங்கள் பிணைக்கப்பட்டன. லாஷ்கரர்கள் அவற்றைச்சுற்றி விற்களும் வேல்களும் வாள்களும் இரும்புக்குமிழ்வைத்த பெரிய உழலைத்தடிகளுமாக சூழ்ந்துகொண்டு பற்கள் தெரிய கண்கள் பிதுங்க கூச்சலிட்டனர். ஒட்டகங்கள் ஒலிகேட்டு திகைத்து வாலை அடித்துக்கொண்டு ஒலியெழுப்பின. அவை கால்மாற்றிக்கொள்ள வண்டிகளும் திகைத்து கிளம்ப முற்பட்டு தயங்கி நிலையழிவதுபோலத் தோன்றியது. குலமூதாதையர் அத்திரிகளில் ஏறிக்கொண்டனர்.
பீஷ்மர் உரக்க “இவர்களை இப்போதே விரட்டி இளவரசியரைக் கொண்டுசெல்ல என்னால் முடியும்” என்றார். சுகதர் “ஆம், தங்கள் வில்லுக்கு நிகரில்லை என பாரதவர்ஷமே அறியும்… ஆனால் இங்குள்ள மக்கள் அதை காந்தார அரசின் தோல்வியென்றே கொள்வார்கள். இந்த மணவுறவின் அனைத்து நோக்கங்களும் அழியும் பிதாமகரே” என்றார். “என்ன செய்யவேண்டும்…அதைமட்டும் சொல்லும்” என்றார் பீஷ்மர். சகுனி “அவர்களிடம் மீண்டும் பேசிப்பார்க்கிறேன்…” என்றான்.
விதுரன் திருதராஷ்டிரனிடம் “அரசே, இதுதான் நடக்கிறது. இங்குள்ள பழங்குடிகள் தங்களுக்கு மகற்கொடை மறுக்கிறார்கள். தாங்கள் விழியிழந்த அமங்கலர் என்று குற்றம்சாட்டுகிறார்கள்” என்றான். திருதராஷ்டிரன் இருகைகளையும் இறுகப்பிணைத்து தோளிலும் கழுத்திலும் நரம்புகள் புடைத்தெழ யானைபோல மெல்ல உறுமினான். “நாம் திரும்பிச்செல்வதே நல்லதென்று நினைக்கிறேன் அரசே. இங்கே ஏராளமான லாஷ்கர வீரர்கள் ஆயுதங்களுடன் இருக்கிறார்கள். நம்மால் அவர்களை வெல்லமுடியாது. நமக்கு இவ்வாய்ப்பு தவறிவிட்டது என்றே கொள்வோம்.”
திருதராஷ்டிரன் மேலும் உரக்க உறுமினான். அவன் தோளில் தசைகளை நரம்புகள் மந்தரமலையை வாசுகி உருட்டியது போல அசைக்கத் தொடங்கின. “என்ன நடக்கிறது?” என்றான். விதுரன் “அரசே, நம் எதிரே மூன்று கூண்டுவண்டிகள் வருகின்றன. அவற்றில் அவர்கள் இளவரசியரை சிறைப்பிடித்து கொண்டுசெல்கிறார்கள்” என்றான். திருதராஷ்டிரன் தணிந்த குரலில் “எங்கே கொண்டுசெல்கிறார்கள்?” என்றான். “தங்கள் ஊருக்கு. இங்கிருந்து சென்றுவிட்டால் அவர்களிடமிருந்து இளவரசியரை நாம் மீட்கமுடியாது.”
திருதராஷ்டிரன் தன் இருபெரும் கரங்களையும் பேரோசையுடன் அறைந்துகொண்டான். அவனுடைய போர்க்கூச்சல் கேட்டு அனைவரும் பதறிவிலக தன்னருகே நின்றவர்களை இருகைகளாலும் தூக்கி பக்கங்களில் வீசியபடி திருதராஷ்டிரன் முன்னால் பாய்ந்து சென்றான். அவனுடைய காதுகளும் சருமமும் நாசியும் பார்வைகொண்டன. அங்கிருந்த ஒவ்வொரு பொருளும் அசைவும் அவனுக்குத் தெரிந்தது. அவன் காலடிகள் உறுதியுடன் மண்ணை அறைந்தன.
அவன் தன்னெதிரே வந்த லாஷ்கர வீரர்களை வெறுங்கையால் அறைந்தே வீழ்த்தினான். மதகு திறந்து பீரிடும் நீர்வேகத்தால் அள்ளி வீசப்பட்டவர்கள் போல அவர்கள் வானில் கால்சுழல எழுந்து தெறித்தனர். அவன் கால்களுக்குக் கீழே விழுந்தவர்கள் மிதிபட்டு அலறி நெளிந்தனர். அறைபட்டவர்கள் அனைவரும் அக்கணமே கழுத்து முறிந்து சிலகணங்கள் உடல் வலிப்புற்று உயிர்துறந்தனர். வெயிலில் வீசப்பட்ட புழுக்குவைபோல அங்கே மனித உடல்கள் நெளிவதை காந்தாரமக்களும் வீரர்களும் கைகள் துவள விழிகள் வெறிக்க வாய் உலர நோக்கினர். புல்வெளியில் மலைப்பாறை உருண்ட தடம்போல திருதராஷ்டிரன் சென்ற வழி தெரிந்தது.
திருதராஷ்டிரன் எதிரே வந்து முட்டிய முதல் ஒட்டகத்தை ஒரே அறையில் சுருண்டு விழச்செய்தான். அது கீழே விழுந்து கழுத்தையும் கால்களையும் அசைத்தபடி துடித்தது. அந்த வண்டியை நுகத்தைத் தூக்கி அப்படியே சரித்து உள்ளிருந்த பெண்களை பின்பக்கம் வழியாகக் கொட்டிவிட்டு வண்டியையே கைகளால் தூக்கிச் சுழற்றி அவனை அணுகியவர்களை அறைந்து தெறிக்கச்செய்தபின் வீசி எறிந்தான். லாஷ்கரர் அவன் மேல் எறிந்த வேல்களும் எய்த அம்புகளும் அவனுடைய பெரிய உடலில் பட்டுத் தெறித்தன. சில அவன் தசைகளில் தைத்து நின்று ஆடின. அவன் வாள்களை கைகளாலேயே பற்றி வீசி எறிந்தான். உடலெங்கும் குருதி வழிய வாய் திறந்து வெண் பற்களின் அடிப்பகுதி தெரிய வெறிகூவியபடி அவன் போரிட்டான். லாஷ்கரர் கையில் வேல்நுனிகள் புயல்பட்ட புதர்முட்கள் என ஆடின.
அதற்குள் லாஷ்கரர் சிலர் கடைசி வண்டியை அப்படியே பின்னால் இழுத்துச்சென்று அருகே இருந்த அரண்மனை முகப்பு நோக்கிச் சென்றனர். அதனுள்ளிருந்து காந்தாரியை அவர்கள் இறக்கி தூக்கிக்கொண்டு சென்று உள்ளே புகுந்து கதவுகளை மூடிக்கொண்டனர். கதவு இழுபட்டு கூச்சலிட்டு பெரு விசையுடன் மூடும் ஒலியைக் கேட்ட திருதராஷ்டிரன் தன் வழியில் வந்த ஓர் அத்திரியையும் இரு கழுதைகளையும் அவை அடிவெண்மை தெரிய மண்ணில் விழுந்து அலறி கால் துடிக்கும்படி தூக்கி வீசியபடி எஞ்சிய லாஷ்கரர்களை அறைந்து வீழ்த்திக்கொண்டு அக்கதவை நோக்கிச் சென்றான். அந்தப் பெருங்கதவை கால்களால் பேரொலியுடன் ஓங்கி மிதித்தான். அது பிளந்து நெளிய கைகளால் அதை அறைந்து சிம்புகளாக பிய்த்துத் தெறிக்கவிட்டான்.
உள்ளே நுழைந்து இருகைகளாலும் மார்பில் ஓங்கி அறைந்தபடி போர்க்கூச்சல் விடுத்தான். வேல்களும் வாள்களுமாக அவனை நோக்கிச்சென்ற முதல் இரு வீரர்கள் அறைபட்டு விழ இருவர் தூக்கிச் சுவரில் வீசப்பட்டதும் அந்த மண்டபத்தின் மூலையில் நின்றிருந்த காந்தாரி கைகூப்பியபடி “அரசே, நான் காந்தார இளவரசி வசுமதி. உங்கள் மணமகள்” என்றாள். அருகே இருந்த தூணை ஓங்கி அறைந்து மண்டபத்தின் மரக்கூரையை அதிரச்செய்து வெறிக்குரல் எழுப்பியபடி சென்று அவளை ஒரேகையால் சிறுகுழந்தை போலத்தூக்கி தன் தோள்மேல் வைத்துக்கொண்டு வெளியே வந்தான்.
அவனைப்பார்த்ததும் வெளியே நிறைந்திருந்த பல்லாயிரம் விழிகள் அறிந்த மொழியனைத்தையும் மறந்து சித்திரமலர்களாயின. தலையைச் சுழற்றியபடி ஒரு கையைத் தூக்கியபடி தோளில் காந்தாரியுடன் வெளியே வந்த திருதராஷ்டிரன் நிமிர்ந்து அந்த களமுற்றத்தில் நின்றான். அவனைச்சுற்றி மண்ணில் நெருப்பெழுந்த புதர்கள் என உடல்கள் துடித்துக்கொண்டிருந்தன. களத்தில் வண்டிகளின் மரச்சிம்புகளும் தெறித்த ஆயுதங்களும் சிதறிக்கிடந்தன. இடக்கையால் குருதி வழிந்துகொண்டிருந்த விரிந்த மார்பிலும் பெருந்தொடையிலும் ஓங்கி அறைந்து மதகரி என அவன் பிளிறினான்.
போர்நிகழ்ந்துகொண்டிருந்தபோது சிறிதும் அசையாமல் அத்திரிகள் மீது அமர்ந்து அதைப்பார்த்துக்கொண்டிருந்த ஏழு குலமூதாதையரும் அந்த ஒலிகேட்டு முகம் மலர்ந்தனர். மூத்தவர் தன் தண்டை மேலே தூக்கினார். பிறர் கூச்சலிட்டபடி தங்கள் தண்டுகளை மேலேதூக்க மொத்தநகரமே உச்சக் களிவெறி கொண்ட பெருங்கூச்சலாக வெடித்து எழுந்தது.

3/29/14

பகுதி நான்கு : பீலித்தாலம்[ 2 ]

பகுதி நான்கு : பீலித்தாலம்[ 2 ]
அஸ்தினபுரியில் இருந்து கிளம்பிய மணமங்கல அணியில் இருபது கூண்டுவண்டிகளில் முதல் இரு வண்டியில் மங்கலப்பரத்தையரும் அடுத்த இரு வண்டிகளில் சூதர்களும் நிமித்திகர்களும் இருந்தனர். தொடர்ந்த இரண்டு வண்டிகளில் அரண்மனைப்பெண்கள் வந்தனர். ஆறு வண்டிகளில் அவர்களின் பயணத்துக்குரிய உணவும் நீரும் பாலையில் கூடாரம் அமைப்பதற்கான மரப்பட்டைகளும் தோல்கூரைச்சுருள்களும் இருந்தன. எட்டு வண்டிகள் நிறைய அஸ்தினபுரியின் மணப்பரிசுகள் நிறைந்திருந்தன.
பீஷ்மரும் விதுரனும் பேரமைச்சர் யக்ஞசர்மரும் தங்களுக்குரிய கொடிரதங்களில் வந்தனர். அவர்களுக்குப்பின்னால் அஸ்தினபுரியின் அமைச்சர்களான பலபத்ரரும் தீர்க்கவியோமரும் லிகிதரும் வந்தனர். அவர்களுக்கு நடுவே திருதராஷ்டிரனின் பொன்முகடுள்ள வெண்குடைரதம் வந்தது. அவற்றைச்சூழ்ந்து இருநூறு குதிரைவீரர்கள் விற்களுடனும் வேல்களுடனும் வந்தனர். அவர்கள் அனைவரும் இரும்பால் அடியமைக்கப்பட்ட தோல்காலணிகளும் மெல்லிய பருத்தி ஆடைகளும் அணிந்திருந்தனர். பாலையை அறிந்த வேடர்கள் எழுவரும் சூதர்கள் எழுவரும் முன்னால் சென்ற குதிரைகளில் கொடிகளுடன் அவர்களை வழிநடத்திச்சென்றனர்.
மாத்ரநாட்டுக்கும் கூர்ஜரத்துக்கும் சிபிநாட்டுக்கும் தூதனுப்பி அவர்களின் நாடுகள் வழியாகச் செல்ல அனுமதிபெற்று சிந்துவின் ஏழு இளையநதிகளையும் கடந்து அவர்கள் காந்தாரத்தை அடைய இரண்டு மாதமாகியது. பெண்கள் இருந்தமையால் அவர்கள் காலையிலும் மாலையிலும் மட்டும் பயணம்செய்தனர். மதியமும் இரவும் சோலைகளிலும் குகைகளிலும் சூதர்களின் பாடல்களைக் கேட்டபடி ஓய்வெடுத்தனர்.
அதற்குள் முறைப்படி பாரதவர்ஷத்தின் அனைத்து மன்னர்களுக்கும் காந்தாரியை திருதராஷ்டிரன் மணம்கொள்ளப்போகும் செய்தி அறிவிக்கப்பட்டிருந்தது. மன்னர்கள் அனுப்பிய மணவாழ்த்துத் தூதுக்கள் அஸ்தினபுரியை வந்தடைந்துகொண்டிருந்தன. கங்கைக்கரை ஷத்ரியர்களான அங்கனும் வங்கனும் சௌபனும் காசியில் பீமதேவனின் அரண்மனையில் மகதமன்னன் விருஹத்ரதன் தலைமையில் கூடி ஆலோசனை செய்த தகவல் சத்யவதியை ஒற்றர்கள் வழியாக வந்தடைந்தது.
விதுரன் திருதராஷ்டிரனின் ரதத்தில்தான் பெரும்பாலும் பயணம் செய்தான். தேர்த்தட்டில் அமராது நின்றுகொண்டே வந்த திருதராஷ்டிரன் நிலையழிந்து திரும்பித்திரும்பி செவிகூர்ந்து உதடுகளை மென்று கொண்டிருந்தான். பெரிய கரங்களை ஒன்றுடன் ஒன்று கோர்த்துக்கொண்டு தோள்களை இறுக்கி நெகிழ்த்தான். எடைமிகுந்த அவன் உடல் ரதம் அசைந்தபோது ரதத்தூணில் முட்டியது. ஒருகையால் தூணைப்பிடித்தபடி மோவாயை தூக்கி, உதடுகளை இறுக்கினான். அவன் விழிக்குழிகள் அதிர்ந்து துள்ளிக்கொண்டே இருந்தன.
அரண்மனை விட்டு கிளம்பியதுமே அவன் படகில் ஏற்றப்பட்ட யானைபோல மாறிவிட்டதை விதுரன் கவனித்திருந்தான். திருதராஷ்டிரனின் உலகம் ஒலிகளால் ஆனது. நெடுநாள் உளம்கூர்ந்தும் உய்த்தும் ஒவ்வொரு நுண்ஒலியையும் அவன் பொருள்கொண்டு நெஞ்சில் அடுக்கி ஓர் உலகைச் சமைத்திருந்தான். அஸ்தினபுரியைக் கடந்ததும் அவனறியா நிலத்தின் பொருள்சூடா ஒலிகள் அவனை சித்தமழியச்செய்துவிட்டன என்று தோன்றியது. அவன் சருமம் முரசின் தோல்போல அதிர்ந்துகொண்டிருந்தது. சருமத்தாலேயே கேட்பவன் போல சிறிய ஒலிக்கெல்லாம் அதிர்ந்தான். ஒவ்வொரு ஒலியையும் ’விதுரா மூடா, அது என்ன? என்ன அது?’ என்று கேட்டுக்கொண்டிருந்தான்.
ஆனால் காந்தாரத்தின் பெரும்பாலைக்குள் நுழைந்ததும் அந்தப்பெருநிலம் முழுக்க நிறைந்துகிடந்த அமைதி அவன் உடலிலும் வந்து படிவதாகத் தோன்றியது. இருகைகளையும் மார்பின்மேல் கட்டியபடி ரதத்தட்டில் நின்று செவிகளாலேயே அவ்விரிவை அறிந்துகொண்டிருந்தான். காற்று மலைப்பாறைகளினூடாக இரைந்தோடுவதை, மலையிடுக்கில் மணல்பொழியும் ஒலியை, எங்கோ எழும் ஓநாயின் ஊளையை அனைத்தையும் தன் பேரமைதியின் பகுதியாக ஆக்கிக்கொண்டது பாலை. அவனும் அதில் முழுமையாக தன்னை இழந்திருந்தான்.
அஸ்தினபுரியின் மணமங்கலக்குழு முந்தையநாள் நள்ளிரவில் தாரநாகத்தின் மறுகரையை அடைந்ததுமே அவர்களின் வருகையை அறிவிக்கும் கொடி காந்தாரநகரியின் கோட்டை முகப்பில் ஏறியது. பெருமுரசம் அவர்களை வரவேற்கும் முகமாக மும்முறை முழங்கியது. நகரமெங்கும் ஒருமாதகாலமாக மெல்லமெல்லத் திரண்டு வந்துகொண்டிருந்த மணநாள் கொண்டாட்டத்துக்கான விழைவு உச்சம் அடைந்தது. அனைத்து தெருக்களிலும் களிகொண்ட மக்கள் திரண்டனர். இல்லமுகப்புகளெல்லாம் தோரணங்களாலும் கொடிகளாலும் வண்ணக்கோலங்களாலும் அணிகொண்டன.
அவர்கள் தாரநாகத்தின் கிழக்குக் கரையில் இருந்த பவித்ரம் என்னும் சோலையில் வந்து சேர்ந்தனர். அந்தச் சோலை அரச விருந்தினர்களுக்காகவே பேணப்பட்டது. அங்கே அவர்களை எதிர்கொள்ள சத்யவிரதர் தலைமையில் காந்தாரத்தின் அமைச்சும் ஏவலரும் காத்திருந்தனர். பாலைவனப்பாதையில் மங்கலஅணி வருவதை தூதர் வந்து சொன்னதும் சத்யவிரதர் முன்னால் சென்று அதை எதிர்கொண்டார். முகமனும் வாழ்த்தும் சொல்லி அழைத்துச்சென்றார்.
வண்டிகள் அங்கே நுகம்தாழ்த்தின. ரதங்கள் கொடியிறக்கின. ஸாமியும் பிலுவும் செறிந்த பவித்ரத்துக்குள் மூன்று ஊற்றுமுகங்களில் ஒன்றில் மிருகங்களும் இன்னொன்றில் அரசகுலமும் இன்னொன்றில் பிறரும் நீர் அருந்தினர். காந்தார வீரர்கள் சமைத்த ஊனுணவை உண்டு மரங்கள் நடுவே கட்டப்பட்டிருந்த ஈச்சைப்பந்தல்களில் அரசகுலத்தவர் தங்கினர். வீரர்கள் மரங்களுக்குக் கீழே கோரைப்புல் பாய்களை விரித்துப் படுத்துக்கொண்டனர்.
பவித்ரத்தில் ரதமிறங்கியதுமே திருதராஷ்டிரன் அமைதியற்றவனாக “இது எந்த இடம்? காந்தாரநகரியா? ஏன் ஓசைகளே இல்லை?” என்று கேட்டான். “விதுரா, மூடா, எங்கே போனாய்?” என்று கூச்சலிட்டான். விதுரன் அவன் அருகே வந்து “அரசே, நாம் காந்தாரநகரிக்குள் நுழையவில்லை. இது நகருக்கு வெளியே உள்ள பாலைப்பொழில். இங்கே இரவுதங்கிவிட்டு நாளைக்காலையில்தான் நகர்நுழைகிறோம்” என்றான்.
திருதராஷ்டிரன் “இங்கே யார் இருக்கிறார்கள்? யாருடைய குரல்கள் அவை?” என்றான். “அவர்கள் காந்தார நாட்டு வீரர்கள் அரசே” என்றான் விதுரன். “ஏன் இத்தனை சத்தம்?” “அவர்கள் நம்மை உபசரிக்கிறார்கள்.” “என்ன ஓசை அது, வண்டிகளா?” என்றான் திருதராஷ்டிரன். விதுரன் “அரசே, அவர்கள் நம் பயணத்துக்கான ஒருக்கங்களைச் செய்கிறார்கள். ரதங்களை தூய்மை செய்யவேண்டுமல்லவா?” என்றான்.
திருதராஷ்டிரன் “ஆம்…ஆம்” என்றான். “நான் அணியலங்காரங்கள் செய்யவேண்டுமே? என் ஆடைகளெல்லாம் வேறு வண்டிகளில் வருகின்றன என்றார்களே?” “அதற்கு இன்னும் நெடுநேரமிருக்கிறது. தற்போது தாங்கள் இளைப்பாறலாம் அரசே” என்றான் விதுரன். திருதராஷ்டிரன் “இல்லை சேவகர்களை வரச்சொல். என் ஆடைகளைக் கொண்டுவர ஆணையிடு… நான் நீராடவேண்டும்… நகைகளைப்பூட்ட நேரமாகும் அல்லவா?” என்றான். விதுரன் “அரசே, இது நள்ளிரவு. தாங்கள் படுத்துக்கொள்ளுங்கள். நாளை முழுக்க தங்களுக்கு இளைப்பாற நேரமிருக்காது” என்றான்.
திருதராஷ்டிரன் தலையை ஆட்டியபடி “நான் இன்றிரவு துயிலமுடியுமெனத் தோன்றவில்லை விதுரா…” என்றான். “என் வாழ்க்கையில் இதுபோல ஒருநாள் வந்ததில்லை. இனி ஒன்றை நான் அறியவும் மாட்டேன் என்று நினைக்கிறேன்.” இருகைகளையும் தொழுவதுபோல மார்பில்  அழுத்தி தலையை கோணலாக ஆட்டியபடி அவன் சொன்னான் “என் வாழ்க்கை முழுவதும் நான் மகிழ்வுடன் எதையும் எதிர்பார்த்ததில்லை விதுரா. மிக இளம்வயதுகூட எனக்கு நினைவிருக்கிறது. என் வாயருகே வரும் உணவுதான் நான் அறிந்த வெளியுலகம். அது விலகிச்சென்றுவிடும் என்ற அச்சம்தான் என் இளமையை ஆட்டிவைத்த ஒரே உணர்ச்சி. ஆகவே உணவு என்னருகே வந்ததுமே நான் இரு கைகளாலும் அதை அள்ளிப்பற்றிக்கொள்வேன்.”
விதுரன் “அரசே, தாங்கள் களைத்திருக்கிறீர்கள்” என்றான். “ஆம்… ஆனால் என் அகம் கலைந்துவிட்டது. நான் என்ன சொல்லிக்கொண்டிருந்தேன்? ஆம், உணவு கிடைக்காமலாகிவிடும் என்னும் பேரச்சம். விதுரா, இன்று நான் பாரதவர்ஷத்தின் தலைமையான தேசத்தின் அரசன். ஆனால் இன்றுகூட எனக்கு உணவு கிடைக்காமலாகிவிடும் என்ற அச்சம் என்னுள் எப்போதும் உள்ளது. ஒரு தட்டில் உணவுண்ணும்போது அருகே கையெட்டும் தொலைவில் மேலும் உணவு இருந்தாகவேண்டும் என்று எண்ணுவேன். இல்லை என்றால் அந்த அச்சம் என் அகத்தில் முட்டும். அது கடும்சினமாக வெளிப்படும். சேவகர்களைத் தாக்கியிருக்கிறேன். இளமையில் பலமுறை அன்னையையே தாக்கியிருக்கிறேன்” திருதராஷ்டிரன் சொன்னான்.
“அதில் வியப்புற ஏதுமில்லை அரசே” என்றான் விதுரன். “அனைத்து மனிதர்களுக்குள்ளும் அவர்களின் இளமையில் வந்துசேரும் சில அச்சங்களும் ஐயங்களும் இறுதிவரை தொடர்கின்றன.” திருதராஷ்டிரன் பெருமூச்சுடன் “ஆம்… நான் பெருநில மன்னன். தொல்குடி ஷத்ரியன். பேரறிஞனான தம்பியைக் கொண்டவன். ஆனாலும் நான் விழியிழந்தவன். என் உணவை நானே தேடிக்கொள்ளமுடியாது. இந்த உலகம் எனக்கு உணவளிப்பதை நிறுத்திவிட்டால் நான் ஓரிருநாளில் இறப்பேன். தனியாக இருக்கையில் எண்ணிக்கொள்வேன், இந்த உலகில் இதுவரை எத்தனை கோடி விழியிழந்தவர்கள் உலகத்தால் கைவிடப்பட்டு பசித்து இறந்திருப்பார்கள் என்று…” என்றான்.
தன் நெகிழ்வை விலக்கும்பொருட்டு திருதராஷ்டிரன் சிரித்தான். “தத்துவமாகச் சொல்லப்போனால் உனக்கெல்லாம் பிரம்மம் எப்படியோ அப்படித்தான் எனக்கு இந்த உலகம். எங்கும் சூழ்ந்திருக்கிறது. ஏதேதோ ஒலிகளாக உணரவும் முடிகிறது. ஆனால் அறிந்துகொள்ளமுடியவில்லை. அதைப்பற்றி நானறிந்ததெல்லாமே நானே கற்பனை செய்துகொண்டது மட்டும்தான்.” மேலும் உரக்கச் சிரித்தபடி “உயர்ந்த சிந்தனை, இல்லையா?” என்றான்.
விதுரன் “நீங்களும் சிந்திக்கமுடியும் அரசே” என்றான். “ஆனால் அதன்பின் இசைகேட்க பொறுமையற்றவராக ஆகிவிடுவீர்கள்” என்று சிரித்தான். திருதராஷ்டிரனும் சிரித்து தன் தொடையில் அடித்து “ஆம், உண்மை. நீ இசைகேட்பதை நான் கேட்டிருக்கிறேன். உன் உடல் பீடத்தில் அசைந்துகொண்டே இருக்கும்.” விதுரன் சிரித்தபடி “அதை உணர்ந்துதான் நீங்கள் என்னை நெடுநேரம் இசை முன் அமரச்செய்கிறீர்கள் என்றும் நானறிவேன்” என்றான். திருதராஷ்டிரன் வெடித்துச்சிரித்து தலையாட்டினான்.
“படுத்துக்கொள்ளுங்கள்” என்றான் விதுரன். “துயில் வராமலிருக்காது. வரவில்லை என்றாலும் உடல் ஓய்வுகொள்ளுமல்லவா?” திருதராஷ்டிரன் அம்மனநிலையிலேயே நீடித்தான். “நான் சொல்லிக்கொண்டிருந்தது என்ன?” என்றான். தலையை கைகளால் தட்டியபின் “ஆம்… விதுரா, இதோ இன்றுதான் நான் மகிழ்வுடன் ஒன்றை எதிர்பார்க்கிறேன். அச்சமும் ஐயமும் பதற்றமும் கொண்ட எதிர்பார்ப்புகளையே அறிந்திருக்கிறேன். இது இனிய அனுபவமாக இருக்கிறது. நெஞ்சுக்குள் உறையடுப்பின் கனல்மூட்டம் இருப்பதைப்போல இருக்கிறது” என்றான்.
“ஆம், இனிய உணர்வுதான்” என்றான் விதுரன். திருதராஷ்டிரன் “நீ அதை அறியவே போவதில்லை மூடா. நீ கற்ற நூல்கள் அனைத்தும் குறுக்கே வந்து நிற்கும். இந்த உணர்ச்சிகளை எல்லாம் சொற்களாக மாற்றிக்கொண்டு உன் அகத்தின் வினாக்களத்தில் சோழிகளாகப் பரப்பிக்கொள்வாய்” என்றான். விதுரன் சிரித்து “என்னை தங்களைவிட சிறப்பாக எவர் அறியமுடியும்?” என்றான். “ஆம் அரசே, உண்மைதான். மானுட உணர்வுகள் எதையும் என்னால் நேரடியாக சுவைக்கவே முடியவில்லை. அவையெல்லாம் எனக்குள் அறிவாக உருமாறியே வந்து சேர்கின்றன. அறிதலின் இன்பமாக மட்டுமே அனைத்தையும் அனுபவிக்கிறேன்.”
“ஆனால் அரசே, நான் அறியும் இன்னொன்று உள்ளது. ஏடுகளில் நான் இன்னொரு முறை வாழ்கிறேன். அங்கே இருப்பது அறிவு. ஆனால் அவ்வறிவு திரும்ப என்னுள் அனுபவங்களாக ஆகிவிடுகிறது. காவியங்களில்தான் நான் மானுட உணர்வுகளையே அடைகிறேன் அரசே. வெளியே உள்ள உணர்வுகள் சிதறிப்பரந்த ஒளி போன்றவை. காவியங்களின் உணர்வுகள் படிகக்குமிழால் தொகுக்கப்பட்டு கூர்மை கொண்டவை. பிற எவரும் அறியாத உணர்வின் உச்சங்களை நான் அடைந்திருக்கிறேன். பலநூறுமுறை காதல் கொண்டிருக்கிறேன். காதலை வென்று களித்திருக்கிறேன், இழந்து கலுழ்ந்திருக்கிறேன். இறந்திருக்கிறேன். இறப்பின் இழப்பில் உடைந்திருக்கிறேன். கைகளில் மகவுகளைப் பெற்று மார்போடணைத்து தந்தையும் தாதையும் முதுதாதையுமாக வாழ்ந்திருக்கிறேன்.”
“அது எப்படி?” என்று கேட்ட திருதராஷ்டிரன் உடனே புரிந்துகொண்டு “இசையில் நிகழ்வதுபோலவா?” என்றான். “ஆம்” என்றான் விதுரன். “எனக்கு விழியில்லை. ஆகவே நான் இசையில் எனக்கென ஒரு வாழ்க்கையை அமைத்துக்கொள்கிறேன். நீ எதற்காக அதைச்செய்யவேண்டும்? உன்முன் வாழ்க்கை கங்கை போலப் பெருகி ஓடுகிறதே” என்றான் திருதராஷ்டிரன். விதுரன் புன்னகைசெய்து “அரசே, ஒரு கனியை உண்ணும்போது அந்த முழுமரத்தையும் சுவைக்கத்தெரியாதவன் உணவை அறியாதவன்” என்றான்.
மறுநாள் அதிகாலை முதல்சாமத்தின் முதல்நாழிகை சிறந்த நேரம் என்று கணிகன் சொன்னான். மணக்குழு இரண்டாம்சாமத்தின் முதல் நாழிகையில் நகர்நுழையலாம் என்று காந்தாரநகரியில் இருந்து அமைச்சர் செய்தி அனுப்பியிருந்தார். அதிகாலையில் அவர்கள் அச்சோலையிலிருந்து கிளம்பினார்கள். இரவிலேயே ரதங்களும் வண்டிகளும் தூய்மைசெய்யப்பட்டு கொடிகளாலும் திரைச்சீலைகளாலும் தோரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தன. வண்டிகளின் வளைவுக்கூரைகளில் புதுவண்ணம் பூசப்பட்டிருந்தது. பெண்கள் இருளிலேயே நீராடி புத்தாடைகளும் நகைகளும் மங்கலச்சின்னங்களும் அணிந்திருந்தனர். தீட்டிக் கூர் ஒளிரச்செய்த ஆயுதங்களும் தூய உடைகளும் அணிந்த வீரர்கள் இலைகளால் நன்றாகத் துடைத்து உருவிவிடப்பட்டு பளபளத்த சருமம் கொண்ட குதிரைகள் மேல் அமர்ந்துகொண்டனர்.
பீஷ்மரும் அமைச்சர்களும் ஆடையணிகளுடன் ரதங்களுக்குச் சென்றனர். திருதராஷ்டிரன் இரவில் துயிலாமல் படுக்கையில் புரண்டபடியே இருந்தான். பின் முன்விடியலில் எழுந்து அமர்ந்துகொண்டு பெருமூச்சுகள் விட்டான். சேவகனை அழைத்து விதுரனை எழுப்பும்படி ஆணையிட்டான். விதுரன் குளித்து ஆடைமாற்றி வரும்போது திருதராஷ்டிரனை சேவகர்கள் நறுமணநீரில் குளிக்கவைத்து மஞ்சள்பட்டாடை அணிவித்து நகைகளைப் பூட்டிக்கொண்டிருந்தனர்.
சிரமணி முதல் நகவளை வரை நூற்றெட்டு வகை பொன்மணிகள் பூண்டு இறையேறிய விழாவேழம் போலத் தெரிந்த திருதராஷ்டிரனை விதுரன் சற்றுத்தள்ளி நின்று பார்த்தான். தோள்வளைகள், கங்கணங்கள், கழுத்து மணியாரங்கள், முத்தாரங்கள், செவிசுடரும் வைரக்குண்டலங்கள், இடைவளைத்த பொற்கச்சையும் இடையாரம் தொடையாரம் கழலணியும் கறங்கணியும்… மனித உடலை அவை என்ன செய்கின்றன? பாறையை பூமரமாக்குகின்றன. தசையுடலை ஒளியுடலாக்குகின்றன. மானுடனை தேவனாக்குகின்றன. யானைமருப்பின் மலர்வரியை, மயில்தோகையின் நீர்விழிகளை, புலித்தோலின் தழல்நெளிவை மானுடனுக்கு அளிக்க மறுத்த பிரம்மனை நோக்கி அவன் சொல்லும் விடைபோலும் அவ்வணிகள்.
விதுரன் சேவகனை அழைத்து கண்ணேறுபடாமலிருப்பதற்காகக் கட்டும் கழுதைவால் முடியால் ஆன காப்பு ஒன்றை கொண்டுவரச்சொல்லி அவனே திருதராஷ்டிரனின் கைகளில் கட்டி விட்டான். அவனுடைய கல்லெழுந்த தோள்களை தன் மென்விரல்களால் தொட்டபோது எப்போதும்போல அவன் இருமுறை அழுத்தினான். இந்த விழியிழந்த மனிதனின் கைகளைத் தொடும்போது நானறியும் துணையை, என் அகமறியும் தந்தையை நானன்றி அவனும் அறியமாட்டான். என் அகமும் புறமும் செறிந்து என்னை ஆயிரம் திசைகள்நோக்கி அலைக்கழிக்கும் பல்லாயிரம் விழிகளெல்லாம் இவனுக்கென்றே எழுந்தன என்று இன்று அறிகிறேன்….
“என் மோதிரங்கள் எங்கே?” என்றான் திருதராஷ்டிரன். “அரசே மோதிரங்கள் அணிவிக்கப்பட்டிருக்கின்றன” என்று சேவகன் சொன்னான். “மூடா, என் கோமேதக மோதிரம் கலிங்கத்திலிருந்து வந்தது… அதைக்கொண்டு வா…” என்றான் திருதராஷ்டிரன். “விதுரா, மூடா, எங்கே போனாய்? இந்த மூடர்கள் என் மணிமாலைகளை கொண்டுவராமலேயே விட்டுவிட்டார்கள்…”
விதுரன் “அரசே, இப்போதே மணிமாலைகள் சற்று அதிகமாக தங்கள் கழுத்தில் கிடக்கின்றன” என்றான். திருதராஷ்டிரன் கைகளால் மணிமாலைகளைத் தொட்டு வருடி எண்ணத் தொடங்கினான். சேவகன் வந்து “அரசே, பிதாமகர் ரதத்தில் ஏறிவிட்டார்” என்றான். “என்னுடைய கங்கணங்களில் வைரம் இருக்கிறதா?” என்றான் திருதராஷ்டிரன். விதுரன் “அரசே, அனைத்தும் வைரக்கங்கணங்கள்தான்… கிளம்புங்கள்” என்றான். “விதுரா, நீ என்னுடைய ரதத்திலேயே ஏறிக்கொள்” என்றான் திருதராஷ்டிரன். “நகர் நுழைகையில் நீங்கள் மட்டுமே ரதத்தில் இருக்கவேண்டும் அரசே” என்றான் விதுரன். “அதுவரை நீ என்னுடன் இரு… நீ பார்த்தவற்றை எனக்குச் சொல்” என்றான் திருதராஷ்டிரன்.
இருள்விலகாத நேரத்தில் குளிரில் மயிர்சிலிர்த்த குதிரைகள் இளவெம்மையுடன் ஓடிக்கொண்டிருந்த தாரநாகத்தைக் கடந்து மறுபக்கம் ஏறின. ரதங்களும் வண்டிகளும் கூட நீரில் இறங்கி மணலில் சகடங்கள் கரகரவென ஒலியெழுப்ப ஆரங்கள் நீரை அளைய மறுபக்கம் சென்றன. “ஆழமற்ற ஆறு… மிகக்குறைவாகவே நீர் ஓடுகிறது. ஆகவே நீர் வெம்மையுடன் இருக்கிறது” என்றான் விதுரன். “விண்மீன்கள் தெரிகின்றனவா?” என்று திருதராஷ்டிரன் கேட்டான். “ஆம் அரசே, நீரில் நிறைய விண்மீன்கள்” என்றான் விதுரன். திருதராஷ்டிரன் “விஹாரி ராகம் பாடிக்கேட்டபோது அவற்றை நான் பார்த்தேன். பாலைவனநதியில் விண்மீன்கள் விழுந்துகிடக்கும்” என்று சொல்லி தலையை ஆட்டினான்.
VENMURASU_EPI_69
ஓவியம்: ஷண்முகவேல்
[பெரிதுபடுத்த படத்தின்மீது சொடுக்கவும்]
மணல்மேட்டில் ஏறி மறுபக்கம் சென்றதுமே விதுரன் தொலைவில் தெரிந்த காந்தாரநகரியின் கோட்டையைப்பார்த்தான். காலையொளி செம்மைகொள்ளத்தொடங்கியிருந்தது. சோலையிலிருந்து பறவைகள் காந்தாரநகரி நோக்கிப் பறந்துகொண்டிருந்தன. கோட்டை களிமண்ணால் கட்டப்பட்டதுபோல முதல்பார்வைக்குத் தோன்றியது. அப்பகுதியின் மணல்பாறைகளின் நிறம் அது என்று விதுரன் அறிந்திருந்தான். அவ்வளவு தொலைவிலேயே அந்தப்பாறைகள் ஒவ்வொன்றும் மிகப்பெரியவை என்பது தெரிந்தது. கோட்டைக்குச் செல்லும் பாதை கற்பாளங்கள் பதிக்கப்பட்டதாக இருந்தது. அவற்றில் ரதசக்கரங்கள் ஓசையிட்டு அதிர்ந்தபடி ஓடின.
கோட்டையின் வடக்கு எல்லையில் புழுதிக்குள் வினைவலர் வேலைசெய்துகொண்டிருப்பது தெரிந்தது. அங்கே கோட்டை இன்னமும் கட்டிமுடிக்கப்படவில்லை என்பதை உணர்ந்ததும் விதுரன் புன்னகைசெய்தான். அங்கே யானைகளே இல்லை என்பதுதான் கோட்டைகட்டுவதை அவ்வளவு கடினமான பணியாக ஆக்குகிறது என்று தெரிந்தது. ஆனால் கோட்டை கட்டப்பட்டால் அது எளிதில் அழியாது. கோட்டையை அழிக்கும் மழையும் மரங்களும் அங்கே இல்லை. கோட்டையை வெல்வதற்கு எதிரிகளும் இல்லைதான் என்று எண்ணி மீண்டும் புன்னகைசெய்துகொண்டான்.
“மிகப்பெரிய கோட்டையா?” என்றான் திருதராஷ்டிரன். “நம் கோட்டையைவிடப்பெரியதா?” விதுரன் “நம் கோட்டை தொன்மையானது” என்றான். அவன் சொல்லவந்ததைப் புரிந்துகொண்டு திருதராஷ்டிரன் “அவர்கள் அத்தனை பெரிய அச்சம் கொண்டிருக்கிறார்களா என்ன?” என்றான். அந்த நகைச்சுவையை அவனே ரசித்து தலையாட்டி நகைத்தான். கோட்டை மெதுவாக விதுரன் பார்வை முன் வளர்ந்துகொண்டிருந்தது. அதன் உச்சியில் காவல்மாடங்களில் பறந்த கொடிகளின் ஈச்ச இலை இலச்சினை தெரிந்தது.
“நான் நேற்றிரவு நினைத்துக்கொண்டேன், நீ அனைத்து மனிதருக்கும் இளமைக்கால அச்சங்களும் ஐயங்களும் நீடிக்கும் என்றாய். உன் இளமைக்கால அச்சம் என்ன?” என்றான் திருதராஷ்டிரன். விதுரன் திரும்பி திருதராஷ்டிரனைப்பார்த்து சிலகணங்கள் அமைதியாக இருந்தான். “நீ அதை உள்ளுறை எண்ணமாக வைத்திருக்கிறாய் என நினைக்கிறேன்” என்றான் திருதராஷ்டிரன். “என்னிடம் நீ அதைச் சொல்லத் தயங்கலாம். ஆனால் நீ சொல்லியே ஆகவேண்டும் என்றுதான் நான் சொல்வேன். சொல்லவில்லை என்றால் என் கைகளால் உன் மண்டையை உடைக்கவும் தயங்கமாட்டேன்.” சட்டென்று சினம் கொண்டு உரத்தகுரலில் “அப்படி நானறியாத அகம் உனக்கு எதற்கு? நீ அறியாத அகம் என எனக்கு ஏதும் இல்லையே?” என்றான்.
விதுரன் “தங்களிடம் நான் எதையும் மறைப்பதில்லை அரசே” என்றான். “என் அச்சத்தை நீங்களும் அறிந்திருப்பீர்கள். நான் வியாசரின் மைந்தன். நியோகமுறைப்படி மாமன்னர் விசித்திரவீரியரின் மைந்தனாக வைதிக ஏற்பு பெற்றவன். இக்கணம் வரை நான் பேரரசியின் மடியில்தான் வளர்ந்திருக்கிறேன். ஆயினும் நான் சூதன். எங்கோ அந்த அவமதிப்பு எனக்கு நிகழும் என்று என் அகம் அஞ்சிக்கொண்டுதான் இருக்கிறது.”
“ஆம் அது உண்மை” என்றான் திருதராஷ்டிரன் தலையை உருட்டியபடி. “உனக்கு அது நிகழலாம். அதைத்தவிர்க்கவேண்டுமென்றால் நான் இறந்தபின் நீ வாழக்கூடாது.” அவன் முகம் கவனம் கொள்வதுபோல மெல்லக் குனிந்தது. “நம் அரண்மனையில் எவரேனும் என்றேனும் உன்னை அவமதித்திருக்கிறார்களா?” விதுரன் திருதராஷ்டிரனின் கைகளைப்பற்றி “இல்லை அரசே. நீங்கள் கொள்ளும் சினத்துக்கு தேவையே இல்லை” என்றான்.  திருதராஷ்டிரன் தன் கைகளை ஒன்றோடொன்று ஓங்கி அறைந்துகொண்டு “எதுவும் என்னிடம் வந்துசேரும். சற்று தாமதமானாலும் வந்துசேரும்… நீ மறைக்கவேண்டியதில்லை” என்றான்.
காந்தாரநகரியின் கோட்டைமேல் பெருமுரசங்கள் முழங்கத் தொடங்கின. ஒன்றிலிருந்து ஒன்றாகத் தொடுத்துக்கொண்டு அவை இடியொலி போல நகரமெங்கும் ஒலித்தன. நூற்றுக்கணக்கான யானைகள் சேர்ந்து பிளிறியதுபோல கொம்புகள் எழுந்தன. “மிகப்பெரிய கோட்டைவாயில்” என்று விதுரன் தன்னையறியாமலேயே சொல்லிவிட்டான். திருதராஷ்டிரன் தலையசைத்தான். “நகரின் மாளிகைமுகடுகள் தெரிகின்றன” என்றான் விதுரன்.
“நீ என்ன நினைக்கிறாய்?” என்று திருதராஷ்டிரன் கேட்டான். விதுரன் அவன் கேட்பது புரியாமல் “எதைப்பற்றி?” என்றான். “இந்த இளவரசியை நான் மணப்பதைப்பற்றி?” விதுரன் பதில் சொல்வதற்குள் திருதராஷ்டிரன் தொடர்ந்தான் “பேரழகி என்றார்கள். விழியிழந்த நான் அப்படியொரு அழகியை மணப்பது அநீதி, இல்லையா?” விதுரன் “நான் என்ன சொல்வேன் என உங்களுக்குத்தெரியும் அரசே” என்றான்.
“ஆம், அவளை நான் மணப்பது நீதியே அல்ல. ஆனால் அப்படி நான் எண்ணப்புகுந்தால் என்னால் உயிர்வாழவே முடியாது. அதை சிறியவயதிலேயே அறிந்துகொண்டேன். முன்பொருமுறை தோன்றியது. நாளெல்லாம் வெறுமே அமர்ந்திருக்கும் எனக்கு எதற்கு உணவு என்று. சிலகணங்களிலேயே கண்டுகொண்டேன். அந்தச்சிந்தனையின் எல்லை ஒன்றே ஒன்றுதான். நான் உயிர்வாழ்வதே தேவையற்றது. ஆகவே இங்கே நான் உண்ணும் ஒவ்வொரு துளி நீரும் ஒவ்வொரு துண்டு உணவும் தேவையான எவருக்கோ உரியது. ஆகவே நான் அவற்றை உண்பதே அநீதியானது.”
திருதராஷ்டிரன் தன் தலையை இடக்கையால் வருடினான். “நான் மிருககுலத்தில் பிறந்திருந்தால் பிறந்த நாளிலேயே இறந்திருப்பேன். அரசனாகியபடியால் மட்டும்தான் உயிர் வாழ்கிறேன். விதுரா, இங்கே உணவை உருவாக்குபவனின் பார்வையில் நான் வாழ்வதே ஓர் அநீதிதான். இந்தப் பெரிய உடல் முற்றிலும் அநீதியால் உருவானதுதான். அதை உணர்ந்த கணம் மேலும் வெறியுடன் அள்ளி உண்ணத் தொடங்கினேன். அந்த நீதியுணர்வை என்னிடமிருந்து நானே விலக்கிக்கொள்ளும் காலம் வரைக்கும்தான் நான் உயிர்வாழமுடியும். ஆகவே உணவு வேண்டும் என்று கேட்டேன். உடைகள் நகைகள் வேண்டுமென்று கேட்டேன். அரசும் அதிகாரமும் தேவை என்று நினைக்கிறேன். மனைவிகள் குழந்தைகள் பேரக்குழந்தைகள் அனைத்தும் எனக்கு வேண்டும். செல்வம் போகம் புகழ் என எல்லா உலகின்பங்களும் எனக்குத்தேவை… ஆம் ஒன்றைக்கூட விடமாட்டேன். ஒன்றைக்கூட!”
அனைத்துப்பற்களையும் காட்டி சிரித்துக்கொண்டு திருதராஷ்டிரன் சொன்னான் “எனக்கு இப்படி ஒரு பேரரசின் அரசிதான் தேவை. அவள் பாரதவர்ஷத்திலேயே பேரழகியாகத்தான் இருக்கவேண்டும். அத்தனை ஷத்ரியர்களும் நினைத்து நினைத்து ஏங்கும் அழகி. அத்தனை மன்னர்களும் பாதம் பணியும் சக்ரவர்த்தினி. அவள்தான் எனக்குள் வாழ்க்கையைக் கொண்டுவந்து நிறைக்கமுடியும். நான் முழுமையாக உயிர்வாழ்வது ஒன்றுதான் என்னை இப்படி உருவாக்கிய தெய்வங்களுக்கு நான் அளிக்கும் விடை.” திருதராஷ்டிரனின் முகத்தைப்பார்த்தபடி விதுரன் சொன்னான், “அரசே, ஷாத்ரம் என்னும் குணத்தின் மிகச்சரியான இலக்கணத்தையே நீங்கள் சொன்னீர்கள். நீங்கள் முற்றிலும் ஷத்ரியர்.”

3/28/14

பகுதி நான்கு : பீலித்தாலம்[ 1 ]

பகுதி நான்கு : பீலித்தாலம்[ 1 ]
அமைச்சர் சத்யவிரதரின் ஆணைப்படி ஏழு சூதர்கள் மங்கலவாத்தியங்களுடன் நள்ளிரவில் கிளம்பி காந்தாரநகரியின் தென்கிழக்கே இருந்த ஸ்வேதசிலை என்ற கிராமத்தை விடிகாலையில் சென்றடைந்தனர். முன்னரே புறா வழியாக செய்தி அனுப்பப்பட்டிருந்தமையால் அந்த ஊரின் முகப்பிலேயே சூதர்கள் கையில் குழந்தைகளை ஏந்திய ஏழுஅன்னையர்களால் எதிர்கொண்டு அழைக்கப்பட்டு சிறுகிணைகளும் கொம்புகளும் முழங்க ஊருக்குள் கொண்டுசெல்லப்பட்டனர். ஊர்மக்கள் கூடி அவர்களை வாழ்த்தி ஊர்மன்றுக்குக் கொண்டுசென்றனர்.
ஸ்வேதசிலை என்பது எட்டு சுண்ணாம்புப்பாறைகள் கொண்ட நிலம். அப்பாறைகளுக்குள் இயற்கையாக உருவானவையும் பின்னர் வீடுகளாகச் செப்பனிடப்பட்டவையுமான குகைகளில் நூற்றியிருபது குடும்பங்கள் வாழ்ந்தன. லாஷ்கரர்களின் தொன்மையான பூசகர்குலம் அங்கே வாழ்ந்தது. அதன் தலைமையில் இருந்த ஏழுகுலமூத்தாரும் காலையிலேயே எழுந்து தங்கள் மரபுமுறைப்படி செம்பருந்தின் இறகுபொருத்திய தலையணியும் ஓநாய்த்தோலால் ஆன மேலாடையும் அணிந்து கைகளில் அவர்களின் குலச்சின்னமான ஓநாய்முகம் பொறிக்கப்பட்ட தடிகளுடன் கல்பீடங்களில் அமர்ந்திருந்தனர். சூதர்கள் அவர்களைக் கண்டதும் தங்கள் கைத்தாளங்களையும் சங்குகளையும் முழக்கி வாழ்த்தொலி எழுப்பினர். அவர்கள் முறைப்படி இடக்கையைத் தூக்கி வாழ்த்தினர்.
அரசர் கொடுத்தனுப்பிய பரிசுகளை சூதர்கள் குலமூத்தார் முன் வைத்தனர். நெல், கோதுமை, கொள், தினை, கம்பு, கேழ்வரகு, துவரை, மொச்சை, இறுங்கு என்னும் ஒன்பதுவகை தானியங்களும் அத்தி, திராட்சை, ஈச்சை என்னும் மூன்றுவகை உலர்கனிகளும் பட்டு, சந்தனம், தந்தம் ஆகிய மூவகை அழகுப்பொருட்களும் செம்பு, பொன், வெள்ளி நாணயங்களும் அடங்கிய பரிசுக்குவையை அவர்களுக்குப் படைத்து வணங்கி காந்தார இளவரசி வசுமதிக்கும் அஸ்தினபுரியின் இளவரசர் திருதராஷ்டிரனுக்கும் மணமுடிவு செய்யப்பட்டுள்ள செய்தியை அறிவித்தனர்.
அச்செய்தியை அவர்கள் சொன்னதுமே ஏழு குலமூத்தாரும் தென்மேற்குமூலையை நோக்கினர். முதல்மூத்தார் அங்கே மிக உச்சியில் பறந்துகொண்டிருந்த செம்பருந்தைக் கண்டு முகம் மலர்ந்து ‘சக்ரவர்த்தியைப் பெறுவாள்’ என நற்குறி சொன்னார். சூதர்கள் முகம் மலர்ந்தனர். மாமங்கலநாளுக்கான சடங்குகளை குலமூத்தார் நடத்தியளிக்கவேண்டுமென்ற மன்னனின் கோரிக்கையை சூதர்கள் அவர்களுக்குச் சொன்னார்கள். குலமூத்தார் எழுந்து பரிசுப்பொருட்களைத் தொட்டு அவற்றை ஏற்றுக்கொண்டபோது அக்குலப்பெண்டிர் குலவையிட்டனர்.
அன்றுமாலையே ஏழுகுலமூத்தாரும் கழுதைகளில் ஏறி காந்தாரபுரத்துக்குச் சென்றார்கள். அவர்களின் பெண்கள் கைகளில் சிறுவில்லும் அம்புகளும் தோளில் பையில் குடிநீரும் ஈசல்சேர்த்து வறுத்துப் பொடித்து உருட்டிய மாவுருண்டைகளுமாக பாலைநிலத்தின் எட்டுத்திசைநோக்கி பயணமானார்கள். பூத்த பீலிப்பனையின் ஓலையில் அரசகுமாரிக்கு தாலிசுருட்டவேண்டுமென்பது விதி. பாலைநிலத்தில் தாலிப்பனை மிக அரிதாகவே இருந்தது. கிளம்பிச்சென்ற இருபத்திரண்டு பெண்களில் எவரும் தாலிப்பனை தரையில் நிற்பதைக் கண்டதில்லை. மங்கலத்தாலி சுருட்டுவதற்கு கொண்டுவரப்படும் தாலிப்பனையோலைகளை மட்டுமே கண்டிருந்தனர். தாலிப்பனை வாழ்நாளில் ஒரே ஒருமுறைதான் பூக்குமென்பதையும், அந்த மலரே மலர்களில் மிகப்பெரியதென்பதையும் அவர்கள் வழிவழியாகக் கேட்டறிந்திருந்தனர்.
குலத்தின் மூத்தஅன்னை சூர்ணை தாலிப்பனையை எப்படித்தேடுவதென்று அவர்களுக்கு சொல்லிக்கொடுத்தாள். தாலிப்பனை பாலைவனத்தின் இயல்பான மரம் அல்ல. அதற்கு நீர் தேவை என்பதனால் நீரோடைகளின் அருகேதான் அது நிற்கும். ஆனால் நீர்நிலைகளின் விளிம்புகளில் அது நிற்பதுமில்லை. குன்றுகளில் ஏறி நின்று நோக்கினால் பாலைமண்ணுக்கு அடியில் ஓடும் நீரோட்டங்களை மேலே பசுமைக்கோடுகளாக பார்க்கமுடியும். அந்தக்கோடுகள் இலைப்பனைகளும் புதர்ப்பனைகளும் ஈச்சைகளும் கொண்டவை. அவற்றில் இருந்து மிக விலகி தனியாக தன்னைச்சுற்றி ஒரு வெட்டவெளி வட்டத்தை உருவாக்கிக் கொண்டு நிற்பது தாலிப்பனையாக இருக்கும்.
லாஷ்கரப்பெண்கள் இருபத்திரண்டு வழிகளில் பதினெட்டு நாட்கள் பாலைநிலத்தில் தாலிப்பனையைத் தேடிச்சென்றார்கள். அதிகாலை முதல் வெயில் எரியும் பின்காலை வரையும் வெயில்தாழும் முன்மாலை முதல் செவ்வந்தி வரையும் அவர்கள் தேடினர். செல்லும்வழியில் வேட்டையாடி உண்டும் தோல்குடுவையில் ஊற்றுநீர் நிறைத்தும் பயணத்தை விரிவாக்கிக் கொண்டனர். சோலைகளின் மரங்களின் மேல் இரவும் மதியமும் உறங்கினர்.
ஏழாம்நாள் கிரணை என்ற பெண் முதல் தாலிப்பனையைக் கண்டடைந்தாள். பெருந்தவத்தில் விரிசடையையே ஆடையாகக் கொண்டு நிற்கும் மூதன்னை போல அது நின்றிருந்தது. அதன் தவத்தை அஞ்சியவைபோல அத்தனை மரங்களும் விலகி நின்றிருக்க அதைச்சுற்றிய வெறும்நில வட்டத்தில் சிறிய புதர்கள்கூட முளைத்திருக்கவில்லை. காற்று கடந்துசென்றபோது அது குட்டிபோட்டு குகைக்குள் படுத்திருக்கும் தாய்ப்பன்றி போல உறுமியது.
மேலும் எட்டு தாலிப்பனைகளை அவர்கள் கண்டடைந்தனர். எவையுமே பூத்திருக்கவில்லை. அன்றிரவு அவர்களின் ஊரிலிருந்து எழுந்த எரியம்பு அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று வினவியது. திரும்புவதா வேண்டாமா என்று அவர்கள் தலைவியிடம் விசாரித்தனர். அன்னையர் ஊரில்கூடி சூர்ணையிடம் பெண்களைத் திரும்பிவரும்படிச் சொல்லலாமா என்று கேட்டனர். ‘பெண்களே, காந்தாரிக்கு மணம்முடியுமென ஆறு பாலையன்னைகளும் விதித்திருந்தால் எங்கோ அவளுக்கான தாலிப்பனை பூத்திருக்கும். பூக்கவேயில்லை என்றால் அவள் மணமுடிப்பதை அன்னையர் விரும்பவில்லை என்றுதான் பொருள்’
மேலும் தேடும்படி எரியம்பு ஆணையிட்டது. பெண்கள் விரியும் வலையென இருபத்திரண்டு கோணங்களில் மேலும் பரவிச்சென்றனர். பதினெட்டாவது நாள் அவகாரை என்ற பெண் ஒருமலைச்சரிவில் பூத்துநின்ற தாலிப்பனையைக் கண்டு பிரமித்து கண்ணீர்மல்கினாள். அந்த இளம்பனை தரைதொட்டு பரவிய பச்சை ஓலைகள் உச்சிவரை பரவியிருக்க மண்ணில் வைக்கப்பட்ட மாபெரும் பச்சைக்கூடை போலிருந்தது. அதன்மேல் மாபெரும் கிளிக்கொண்டை போல அதன் வெண்ணிற மலரிதழ்கள் விரிந்து நின்றிருந்தன.
VENMURASU_EPI_68
ஓவியம்: ஷண்முகவேல்
[பெரிதுபடுத்த படத்தின்மீது சொடுக்கவும்]
அவகாரை அதை நோக்கியபடி எந்த எண்ணமும் அற்ற சித்தத்துடன் நின்றிருந்தாள். நுண்ணிய சரங்கள் கொத்துக்கொத்தாகத் தொங்கிய கிளைகளுடன் நின்றிருந்த அந்த மலர் மாபெரும் நாணல்கொத்துபோலிருந்தது. நாரையின் இறகுகளைக் கொத்தாக்கியது போலிருந்தது. அவள் நிலையழிந்தவளாக அதைச்சுற்றிச் சுற்றி நடந்தாள். ஆனால் அதை நெருங்க அவளால் முடியவில்லை. பின்பு ஏதோ ஒரு கணத்தில் அவளுடைய சரடுகள் அறுபட மண்ணில் விழுந்து விசும்பி அழத்தொடங்கினாள்.
இரவில் அவள் எய்த எரியம்பைக் கண்டு மறுநாள் காலையில் அங்கே இருபக்கங்களில் இருந்த பெண்களும் வந்து சேர்ந்தனர். அவர்கள் அந்த மரத்தில் ஏறி கிழக்கே விரிந்த தளிர் ஓலை ஒன்றையும் மூன்று பூமடல்களையும் வெட்டி எடுத்துக்கொண்டார்கள். அவர்கள் ஊரை அடைந்தபோது மற்றபெண்களும் திரும்பிவிட்டிருந்தனர். அவர்களை அன்னையர் ஊர்முகப்பில் குருதிசுழற்றி வரவேற்று உள்ளே கொண்டுசென்றனர். மூதன்னை சூர்ணையின் முன் அந்த ஓலையையும் மலரையும் வைத்தபோது சுருக்கங்கள் அடர்ந்த முகம் காற்றுபட்ட சிலந்தி வலைபோல விரிய புன்னகைசெய்து தன் வற்றிப்பழுத்த கரங்களை அவற்றின்மீது வைத்து அருளுரைத்தாள்.
ஓலையும் மலரும் லாஷ்கரப் பெண்களால் காந்தாரபுரிக்கு ஊர்வலமாகக் கொண்டுசெல்லப்பட்டன. முன்னால் ஏழுபெண்கள் கொம்புகளையும் முழவுகளையும் முழக்கியபடிச் சென்றனர். பின்னால் ஏழுபெண்கள் தலைமேல் ஏற்றிய பனையோலைப்பெட்டிகளில் ஓநாயின்தோல், செம்பருந்தின் இறகு, உப்பிட்டு உலர்த்திய முயலிறைச்சி, கழுதையின் வால்மயிர் பின்னிச்செய்த காலுறைகள் போன்ற பரிசுப்பொருட்களைச் சுமந்துகொண்டு சென்றனர்.
அவர்கள் காந்தாரநகரியை அடைந்ததும் நகரிலிருந்து மங்கலைகளான நூற்றியெட்டு பெண்களும் நூற்றியெட்டு தாசிகளும் சூதர்கள் இசைமுழங்க வந்து எதிர்கொண்டு அழைத்துச் சென்றனர். முன்னரே வந்திருந்த ஏழுகுலமூதாதையரும் அங்கே அரண்மனைக்கு கிழக்காக இருந்த பெரிய முற்றத்தில் மூங்கில்நட்டு அதில் மஞ்சள்நிறமான மங்கலக்கொடியை ஏற்றியிருந்தனர். அதன்கீழே நடப்பட்ட வெற்றிலைக்கொடி தளிர்விட்டெழுந்து மூங்கிலில் சுற்றிப்படர்ந்து ஏறத்தொடங்கியிருந்தது. பந்தலைச்சுற்றி ஈச்சையிலைகளை முடைந்துசெய்த தட்டிகளாலும் மூங்கில்களாலும் கட்டப்பட்ட மாபெரும் பந்தல் எழுந்துகொண்டிருந்தது.
தாலிப்பீலிகளை பந்தல்நடுவே இருந்த வட்டவடிவமான மண் மேடையில் வரையப்பட்ட மாக்கோலம் நடுவே இருந்த மண்கலத்தில் கொண்டுசென்று வைத்தனர். அதன் முன்னால் வரையப்பட்டிருந்த பன்னிரு களங்கள் கொண்ட சக்கரத்தின் நடுவே இருந்த சிறியபீடத்தில் தாலிப்பனையோலை வைக்கப்பட்டது. குலமங்கலைகளும் பொதுமங்கலைகளும் மஞ்சள்தானியங்களையும் மலரிதழ்களையும் அதன்மேல் போட்டு வணங்கினர்.
பந்தல் மங்கலம் முடிந்த செய்தியை நிமித்திகர் சென்று அரசருக்குச் சொன்னார்கள். மஞ்சள் ஆடையும் மங்கலஅணிகளும் அணிந்து செங்கழுகின் இறகு பொருத்திய மணிமுடியுடன் சுபலர் பந்தலுக்கு வந்தார். அவருக்கு வலப்பக்கம் அசலனும் பின்னால் சகுனிதேவனும் விருஷகனும் வந்தனர். இடப்பக்கம் சுகதர் வந்தார். பந்தலில் பணிகளை நடத்திக்கொண்டிருந்த சத்யவிரதர் ஓடிச்சென்று மன்னரை வணங்கி பந்தலுக்குள் அழைத்துச்சென்றார்.
பந்தலின் நடுவே அமைந்திருந்த மங்கலமேடைக்கு வலப்பக்கம் மணமேடையும் இடப்பக்கம் அரசர்களுக்கான பீடங்களும் இருந்தன. பந்தலுக்கு முன்னால் வேள்விக்கூடம் தனியாக இருந்தது. சுபல மன்னர் வந்து அமர்வதற்கு முன் பீடங்களை வைதிகர் நிறைக்கல நீர் தெளித்து தூய்மைசெய்தனர். அவர் அமர்ந்ததும் அவர்மேல் நீரையும் மலர்களையும் தூவி வாழ்த்திய பின்னர் அவர்கள் பந்தலைவிட்டு வெளியேறினர்.
குலமூத்தார் வந்து வணங்கி மன்னரிடம் மங்கலத்தாலி செய்வதற்கான அனுமதியைக் கோரினர். அரசர் அளித்த அனுமதியை நிமித்திகன் மும்முறை முறைச்சொற்களில் கூவ குலமூத்தார் தங்கள் தண்டுகளைத் தூக்கி அதை ஆமோதித்தனர். ஒருவர் அந்த இளையபனையில் இருந்து மெல்லிய பொன்னிறமான ஓலைத்துண்டு ஒன்றை வெட்டினார். அதில் எழுத்தாணியால் காந்தாரகுலத்தின் சின்னமான ஈச்சை இலையையும் அஸ்தினபுரியின் சின்னமான அமுதகலசத்தையும் வரைந்தார். அதன்மேல் மஞ்சள்கலந்த மெழுகு பூசப்பட்டது. அதை இறுக்கமான சுருளாகச் சுருட்டி மஞ்சள்நூலால் சுற்றிச்சுற்றி இறுக்கிக் கட்டினார். அதன் இரு முனைகளிலும் மெழுகைக்கொண்டு நன்றாக அடைத்தார். அதை மூன்றுபுரிகள் கொண்ட மஞ்சள் சரடில் கட்டினார்.
அந்நேரம் முழுக்க மங்கலவாத்தியங்களும் குரவைஒலிகளும் எழுந்துகொண்டிருந்தன. கட்டிமுடித்த தாலிக்காப்பை ஒரு சிறிய தட்டில் பரப்பிய மஞ்சள்அரிசி மீது வைத்து பொன்னும் மலரும் துணைசேர்த்து இருவகை மங்கலைகளிடம் கொடுத்தனுப்பினர். அவர்கள் தொட்டு வாழ்த்தியபின் வந்த தாலி அரசரின் முன் நீட்டப்பட்டது. சுபலரும் மைந்தர்களும் அதைத் தொட்டு வணங்கியதும் அது கொண்டுசெல்லப்பட்டு முன்னால் நின்ற மங்கலக் கொடித்தூணில் கட்டப்பட்டது.
அவ்வாறு மேலும் பத்து தாலிகள் செய்யப்பட்டன. அவை கொடித்தூணில் கட்டப்பட்டதும் இருவகை மங்கலைகள் குடத்தில் இருந்த நீரை பொற்கரண்டியால் தொட்டு வெற்றிலைச்செடிக்கு விட்டனர். குலமூத்தார் கைகாட்ட கொம்புகளும் பெருமுழவுகளும் எழுந்ததும் சடங்கு முடிந்தது. அரசர் முதலில் வெளியேறினார். தொடர்ந்து குலமூத்தார் ஒவ்வொருவராக வெளியேறினர். பந்தல் ஒழிந்ததும் சூதர்கள் மேடைமுன் ஈச்சைப்பாயில் வந்தமர்ந்து கிணைகளையும் ஒற்றைநாண் யாழ்களையும் மீட்டி அங்கே வந்திருந்த தேவர்கள் ஒவ்வொருவருக்காக நன்றி சொல்லி அவர்கள் திரும்பச்செல்லும்படிக் கோரி பாடத்தொடங்கினர்.
அருகே இருந்த அரண்மனையின் உப்பரிகையில் மான்கண் சாளரம் வழியாக அதை காந்தாரியான வசுமதி பார்த்துக்கொண்டிருந்தாள். அவள் அருகே அவளுடைய தங்கைகளும் வெவ்வேறு சாளரத்துளைகள் வழியாக நோக்கிக்கொண்டிருந்தனர். சத்யவிரதை, சத்யசேனை, சுதேஷ்ணை, சம்ஹிதை, தேஸ்ரவை, சுஸ்ரவை, நிகுதி, சுபை, சம்படை, தசார்ணை ஆகிய பத்து தங்கைகளும் சுபலரின் நான்கு மனைவிகளுக்குப் பிறந்தவர்கள். கடைசித்தங்கையான தசார்ணைக்கு பதிநான்கு வயதாகியிருந்தது. அவள் மட்டும் சாளரம் வழியாக வெளியே பார்க்காமல் அந்தப்புரத்தின் ஒவ்வொரு தூணாகத் தொட்டு எண்ணிக்கொண்டு ஓர் எல்லையில் இருந்து இன்னொரு எல்லைக்கு ஒற்றைக்காலில் ஓடிக்கொண்டிருந்தாள். அவளுடைய எண்ணிக்கை ஓட்டத்தில் தவறிக்கொண்டிருந்தது.
அவள் நின்று குழம்பி மீண்டும் முதல் தூணைத் தொட்டதைக்கண்டு அவளுடைய மூத்தவளான சம்படை சிரித்துக்கொண்டு பீடத்தில் அமர்ந்தபடி தன் காலை ஆட்டினாள். அவள் அணிந்திருந்த பெரிய பட்டு மலராடையின் கீழ்ப்பகுதி அலையடித்தது. தசார்ணை அக்காவிடம் ‘போ’ என தலையை அசைத்துவிட்டு தன் மலராடையைத் தூக்கி இடுப்பில் செருகிக்கொண்டு மீண்டும் ஒற்றைக்காலில் குதித்து ஓடினாள். ஒரு தூணைத் தொடப்போகும்போது அவளுடைய கால் நிலத்தில் ஊன்றிவிட்டது. அவள் திரும்பி சம்படையைப்பார்க்க சம்படை வாய்பொத்திச் சிரித்தாள்.
‘அக்கா’ என்றபடி தசார்ணை ஓடிவந்து வசுமதியின் சேலைநுனியைப் பிடித்தாள். “என்னடி?” என்று வசுமதி சினத்துடன் கேட்டாள். அந்த முகச்சுளிப்பைக் கண்டு தயங்கி ஒன்றுமில்லை என்று தசார்ணை தலையாட்டினாள். மூத்தவளான சத்யவிரதை “என்னடி விளையாட்டு? போ, பீடத்தில் போய் அமர்ந்திரு” என்று அதட்டினாள். சிறிய செவ்விதழ்களை பிதுக்கியபடி நீலக்கண்களில் கண்ணீர் ததும்ப தசார்ணை பின்னால் காலெடுத்துவைத்தாள்.
வசுமதி சிரித்தபடி “வாடி இங்கே, என் கண்ணல்லவா நீ” என்றபடி எட்டி தசார்ணையின் மெல்லிய கைகளைப்பிடித்து அருகே இழுத்து அணைத்துக்கொண்டாள். “என்னடி? அக்காவிடம் சொல்…” என்றாள். தசார்ணை சம்படையைச் சுட்டிக்காட்டி “அவள் என்னைப்பார்த்துச் சிரிக்கிறாள்” என்றாள். “ஏய் என்னடி சிரிப்பு? அடி வாங்கப்போகிறாய்” என்று சம்படையை நோக்கிச் சொல்லி கண்களாலேயே சிரித்தாள் வசுமதி. சம்படை மீண்டும் வாய்பொத்திச் சிரித்தபடி வளைந்தாள். “சொல்லிவிட்டேன், இனிமேல் சிரிக்கமாட்டாள்” என்று வசுமதி சொன்னாள்.
“நான் ஒற்றைக்காலைத் தூக்கிக்கொண்டு நூறுமுறை அந்தப்புரத்துத் தூண்களை எண்ணுகிறேன் என்று சொன்னேன். அதற்கும் அவள் சிரித்தாள்” என்றாள் தசார்ணை. “சரி நீ நூறுமுறை எண்ணவேண்டாம். ஐம்பதுமுறை எண்ணினால்போதும்” என்றாள் வசுமதி. சரி என்று தலையாட்டியபின் காதுகளைத் தாண்டி வந்து விழுந்த குழல்கற்றையை அள்ளிச்செருகியபடி தசார்ணை மீண்டும் தன் மலராடையை இடுப்பில் செருகிக்கொண்டாள்.
சத்யவிரதை காந்தாரியின் அருகே வந்து அமர்ந்துகொண்டு “அஸ்தினபுரி காந்தாரபுரியைவிட பெரிய நகரம் என்றார்களே அக்கா, உண்மையா?” என்றாள். சத்யசேனை “பெரியதாக இருந்தால் என்ன? நீ என்ன நகரத்திலா உலவப்போகிறாய்? நீயும் நானும் அந்தப்புரத்தில்தானே இருக்கப்போகிறோம்” என்றாள். காந்தாரி “நீ எவ்வளவு நகை வைத்திருக்கிறாய்?” என்று சத்யசேனையிடம் கேட்டாள். “என் அம்மா தந்த நகைகள்தான்… உள்ளே என் கருவூலப்பெட்டியில் இருக்கின்றன” என்றாள் சத்யசேனை. காந்தாரி சிரித்தபடி “நீ போடமுடியக்கூடிய அளவுக்குமேல் உனக்கு நகைகள் எதற்கு?” என்றாள்.
சத்யசேனை “அவை என் நகைகள்…” என்று சொல்லவந்ததுமே காந்தாரி என்ன சொல்கிறாள் என்று புரிந்துகொண்டாள். சத்யவிரதை புன்னகைசெய்து “நாம் எவற்றைப் பயன்படுத்துகிறோமோ அவையல்ல, எவற்றை வைத்திருக்கிறோமோ அவையே நம் செல்வம்” என்றாள். காந்தாரி சிரித்தபடி “இல்லை சத்யை, நாம் எவற்றையெல்லாம் துறக்கும் உரிமைகொண்டிருக்கிறோமோ அவையே நம் செல்வம். மற்றவை நம்முடையவையே அல்ல” என்றாள்.
“நீங்கள் எவற்றைத் துறக்கப்போகிறீர்கள் அக்கா?” என்றாள் சத்யவிரதை. “இந்த நகரத்தை, என் சுற்றத்தை, என் இளமைக்காலத்தை” என்று காந்தாரி சிரித்துக்கொண்டே சொன்னாள். ஆனால் மற்றபெண்களின் கண்கள் மாறுபட்டன. சத்யவிரதை “நீங்கள் காந்தாரத்துடன் அஸ்தினபுரியையும் அடையத்தானே போகிறீர்கள் அக்கா” என்றாள். “ஆம் அப்படித்தான் எண்ணிக்கொண்டிருந்தேன்” என்றாள் காந்தாரி. “ஆனால் சற்றுமுன் என் தாலி எழுதப்படுவதைக் கண்டபோது அது உண்மை அல்ல என்று தோன்றியது. நான் காய்த்து கனியான இந்த மரத்தில் இருந்து உதிர்கிறேன். அங்கே நான் முளைக்கலாம். ஆனால் இனி இது என் இடமல்ல. இவர் எவரும் என் உறவினரும் அல்லர்.”
அவர்கள் பேசாமல் நோக்கியிருந்தனர். தசார்ணையை சம்படை துரத்திப்பிடிக்க இருவரும் கூவிச்சிரித்தனர். தசார்ணை உதறிவிட்டு ஓட சம்படை சிரித்துக்கொண்டே துரத்தினாள். “இனி சில மாதங்கள் கழித்து நான் இங்கு வந்தாலும் இங்கு பிறத்தியாகவே எண்ணப்படுவேன்” என்று காந்தாரி சொன்னாள். “அது அந்த ஓலை எழுதப்படும் வரை எனக்குத் தோன்றவில்லை. அந்த எழுத்துக்களைப் பார்த்தபோது இன்னொருமுறை என் தலையில் எழுதப்படுவதாக உணர்ந்தேன்.”
சத்யவிரதை காந்தாரியின் கைகளைப்பற்றியபடி “ஆம் அக்கா, நானும் அவ்வாறே உணர்ந்தேன்” என்றாள். “என் மனம் படபடத்ததில் எதுவுமே கண்ணுக்குத் தெரியாததுபோல இருந்தது. அந்த ஓசைகள் மட்டும் என்னைச் சூழ்ந்திருந்தன” என்றாள். காந்தாரி அவள் கையைப்பற்றியபடி “அச்சம் தேவையில்லை. நாம் இங்கு வாழும் வாழ்க்கைதான் எங்கும். ஷத்ரியப்பெண்ணுக்கு ஷத்ரியர்களைப் பெறுவதைத்தவிர வேறு வாழ்க்கை இல்லை” என்றாள்.
சுதேஷ்ணை சிரித்தபடி “நேற்று என் சூதச்சேடியிடம் நம் பதினொருவரையும் அஸ்தினபுரியின் இளவரசர் மணக்கப்போவதைச் சொன்னேன். திகைத்துப்போய் பதினோரு பேரையுமா என்றாள். பாவம் மிகவும் இளையவள்” என்றாள். “அது எங்குமுள்ள வழக்கம்தானே? ஒருகுடும்பத்து அரசகுமாரிகளை ஒரே மன்னருக்குத்தான் அளிப்பார்கள். முடியுரிமைப்போர் நிகழலாகாது என்பதற்காக” என்று சத்யவிரதை சொன்னாள்.
“இல்லை, அவள் சொன்னாள்…” என்று சொல்லவந்த சுதேஷ்ணையை “போதும்” என்று சொல்லி சத்யவிரதை நிறுத்தினாள். காந்தாரி சிரிப்புடன் “சொல்லடி” என்றாள். சுதேஷ்ணை “இல்லை அக்கா” என்றாள். “தாழ்வில்லை, சொல். நாம் இன்னும் மங்கலநாண் அணியவில்லை” என்றாள் காந்தாரி. சுதேஷ்ணை கசப்பான சிரிப்புடன் “அவர்கள் ஊரில் ஒரு பழமொழி உண்டாம். கண்ணில்லாதவன் தோளில்தான் பத்து அம்பறாத்தூணி தொங்கும் என்று.”
சொல்லிமுடித்தபோதுதான் அப்பழமொழியின் இழிந்த உட்பொருளை சுதேஷ்ணை உணர்ந்தாள். நாக்கைக் கடித்தபடி காந்தாரியைப் பார்த்தாள். காந்தாரி புன்னகை மாறாமல் “அவளிடம் சொல், மலைக்கழுகுகள் மரங்களில் கூடணைவதில்லை, கரும்பாறைகளையே தேர்ந்தெடுக்கின்றன என்று” என்றாள்.