அன்புடையீர் நல்வரவு ,

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,
தேவாங்கர்களாகிய நாம் அனைவரும் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்து வந்தாலும் தேவாங்கர் என்னும் உணர்வு நம்மை ஓன்று சேர்க்கிறது. மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்ற வாக்கிற்கு இணங்க காலத்திற்கு ஏற்ப நாம் நமது குல நிகழ்வுகளை தகுந்த தொழில்நுட்பத்தை கொண்டு பதிவு செய்வது அவசியமான ஓன்று.

இந்த புதியபக்கம் நமது தேவாங்க சமூக செய்திகள்,சடங்குகள்,வரலாறு & அண்மை நிகழ்ச்சிகளை அறிந்துகொள்ளவும் தேவைப்படும் போது பார்க்கவும் உருவாக்கப் பட்டுள்ளது.
உறவுகள் தங்கள் பகுதியில் உள்ள கோவில்&குல தெய்வம் கோவில்களில் நடைபெறும் திருவிழா நிகழ்ச்சிகள் மற்றும் படங்களை இடம்பெற செய்யவும்.

தங்கள் கருத்துக்கள் இந்த தளத்தை மேன்படுத்த உதவும் ஆகயால் தயவுசெய்து கருத்திடவும் . ( தமிழில் கருத்திட தமிழ் எழுதியை பயன்படுத்தவும்)

நன்றி.

6/2/13

செளடேஸ்வரி அம்மன் கோவில் மஹா கும்பாபிஷேகம், கோவில்வழி
64 .சாங்கியாயன மகரிஷி கோத்ரம்

ரிக்வேதம் ஓதிய மகரிஷி. பராசருக்கும் தேவ குருவான பிருஹஸ்பதிக்கும் தத்துவம் உபதேசித்தவர். இவரைச் சங்கு மகரிஷி என்றும் அழைக்கின்றனர்.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

குடகோலதவரு - குடிகேலாரு :- இப்பெயர்தான் குடிகேலாரு என மருவி வழங்கப்படுகின்றது. ரம்பம் போல் இருக்கும் வளைந்த நெல்லரிவாளுக்குத் தெலுங்கில் குடகோலி என்றும் கன்னடத்தில் குடகோல என்றும் பெயர்.
இவர்கள் செல்வந்தர்களாக நில புலன்கள் மிக்கவர்களாக வாழ்ந்து இருக்கின்றனர். அறுவடைக்காக ஏராளமான குடகோலிகளை வீட்டில் வைத்து இருக்கலாம். அல்லது குடகோலிகளைத் தயாரித்து வியாபாரம் செய்து இருக்கலாம்.
உம்மிடிதவரு :- ஆந்திராவில் உள்ள உம்மிடி என்னும் ஊரைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
கற்பூரதவரு :- ஸ்ரீ சௌடேஸ்வரி அம்மனுக்கும், மற்ற ஆலயங்களுக்கும் கற்பூரம் கொடுக்கும் தொண்டு செய்தவர்.
கொண்டவன்தவரு :- இருமலைகளுக்கு இடையே இருக்கும் மலைவளைவுகள் சந்துகள் இவற்றினுக்குக் கொண்டவன்க என்று பெயர். இவ்விடங்களைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
செங்கல்வதவரு :- பூசனைக்குக் குறிப்பாக செங்கல்வ மலர்களைப் பயன்படுத்துபவர்.
மோஹனதவரு :- பாசம் மிகுந்தவர், அன்பு கொண்டவர்.
பூரணயதவரு :- இவ்வம்சத்தில் பூரணய்யா என்பவர் புகழ் பெற்று இருந்து இருக்கலாம். அவருடைய வம்சம்.

தேவசாலி அவதாரம்

வீரருத்திரன் சகர நாட்டை ஆண்டு வரும் போது கோமளை வயிற்றில் சுகுணன் என்னும் மகன் பிறந்தான். அவன் திருமணப்பருவம் அடைந்ததும் சத்தியாவதி என்னும் அரச கன்னியை மணந்தான். பின் அவனுக்கு மணிமுடிசூட்டி ஆட்சியை அவனிடம் ஒப்படைத்து விட்டு வீரருத்திர மன்னன் தன் மனைவியுடன் தவஞ்செய்யக் காட்டுக்குப் போனான். ஆட்சிக்கு வந்த சுகுணன் யாவரும் போற்றும்படியாக நல்லாட்சி நடத்தி வந்தான். அந்நாளில் வரமுனி இயற்றிய நூல்களைக் கற்றறிந்த சிலர் சிவயோகத்தை முறையாகப் பயின்று அதனால் வரும் பேரின்பப் பயனை அடையக் கருதினர். சிவயோகமோ குருவின் துணையின்றி பயின்று பலன் காணமுடியாது. அதனால் அவர்கள் பெரிதும் கலக்கமுற்றனர். சனகன் சனந்தனன் சனாதனன் சனற்குமாரன் என்னும் நால்வரும் பிரம்மாவின் புத்திரர்கள். இவர்கள் நால்வரும் நான்மறை ஆறங்கமுதலான எல்லாக் கலைகளையும் கற்றவர்கள். நூற்கேள்வியும் உடையவர்கள். எனினும் ஒரு குருவை நாடினர். குருவில்லா வித்தை பாழ்தானே? ஆதி முதற்குரு தட்சணா மூர்த்தியல்லவா/ அதனால் அவரையே நாடி இந்நால்வரும் கயிலைக்குப் போனார்கள். அப்போது சிவபெருமான் உமை அம்மையைப் பிரிந்து கல்லால மரத்தடியில் யோகியாய் வீற்றிருந்தார். முனிவர்கள் நால்வரும் அவரை அணுகி, ' அருட்கடலே! வேதாகமங்களைக் கற்றறிந்தும் மனம் அடங்கவில்லை. மன அடக்கம் பெற்று உய்யும் வண்ணம் வேதாகமங்களின் உட்பொருளை உபதேசித்து அருள வேண்டும் ' எனப் பிரார்த்தித்தனர். பெருமானும் அவர்களை அமர்த்தி சிவாகமங்களில் கூறியுள்ள பதி பசு பாசப் பொருளை உணர்த்திப் பின் முப்பொருள் உண்மையைச் சின்முத்திரை காட்டி மௌனமுற்றுயோகத்தில் அமர்ந்தார். முனிவர்களும் மனம் ஒடுங்கி ஞானநிலையை உணர்ந்தனர். எனவே எவ்வளவு தான் கற்றிருந்தாலும் குரு உணர்த்த உணரப்பெற்றாலன்றி கற்ற கல்வி பயனில்லாமற்போகும் என்பது உணரத்தகும். இதைச் சாத்திரங்களும் சாற்றுகின்றன. எனவே சற்குருவை நாடி முனிவர்கள் தவம் கிடக்க, அவர்கள் தவத்திற் கிரங்கி குருமூர்த்தி ஒருவரை அனுப்ப இறைவன் திருவுளம் பற்றினான். அப்போது அருகிருந்த வரமுனியை நோக்கி ' நீ உன் பேரன் சுகுணனுக்கு மகனாய்ப் பிறந்து சிவயோக நெறியை முனிவர்களுக்கும் மற்ற பக்குவிகளுக்கும் உணர்த்தி மீண்டும் என்னை வந்து அடைவாயாக' என்று அருளினார். அதன்படி வரமுனி சுகுணனுக்கு மகனாய்த் தோன்றினார். தேவசாலி என்னும் பெயரையும் பெற்றார். பெற்றோரும் புவிமன்னரும் சான்றோரும் போற்றும்படியாக ஞானச்செல்வராக வளர்ந்தார். சிவயோகம் பயின்று அதன் பயனை அடைய விரும்பிய அறிஞர் பலர் தேவசாலியை குருவாக ஏற்று அவரை சூழ்ந்தனர். அவரும் குருபரனாகி வந்தவர்க்கெல்லாம் அட்டாங்க யோகத்தை விளக்கி உணர்த்தினார். இவ்வாறு அட்டாங்க யோகத்தை தேவசாலி, விரும்பி வந்து கேட்டவர்க்கெல்லாம் விளக்கிக் கூறினார். கேட்டுணர்ந்த பலர் யோகப் பயிற்சியில் இறங்கினர். யோகம் பயின்ற மாணவர்களுக்கு அவரவர்கள் பக்குவத்துக் கேற்ப பயிற்சிகளை அளித்து வந்தார். வந்தவர்க்கெல்லாம் சலிப்பின்றி தக்கவாறுயோகத்தையும் ஒழுக்கத்தையும், உணர்த்தியும் பயிற்றியும் வந்தார். அதனால் நாடெங்கும் தெய்வ பக்தியும் ஓழுக்கமும் சிறந்தோங்கியது. மகனின் அறிவு ஆற்றல்களைக் கண்டு மகிழ்ந்த சுகுணபூபதி ஆட்சியை மகனிடம் ஒப்படைத்து விட்டுத் தவஞ்செய்ய மனைவியுடன் காட்டுக்குப் போனார். தேவசாலி, யோகிக்கு யோகியாகவும் ஆட்சிக்குச் சிறந்த மன்னனாகவும் இருந்து பகைவரும் போற்ற நல்லாட்சி நடத்தி வந்தான். அப்போது பட்டத்தரிசி சுகதருணி கருவுற்று ஒரு ஆண்மகனை ஈன்றாள். இவனுக்கு சசிசேகரன் என்னும் பெயரைச் சூட்டி அறிவு ஒழுக்கங்களில் சிறந்த மகனாக வளர்த்தான். இவன் கனகரங்கன் மகள் உத்தமியை மணந்து ஆட்சிப் பொறுப்பை ஏற்க, தேவசாலி மன்னன் தன் மனைவியுடன் கயிலையை அடைந்து சிவபெருமான் அடிக்கீழ் அமர்ந்தான். தந்தைக்குப் பின் ஆட்சி நடத்திய சசிசேகரன் இரத கஜ துரக பதாதி என்னும் நால்வகைப் படைகளையும் பெருக்கிப் பகையின்றி நாட்டைச் செழிக்கச் செய்து மன்னர் மன்னனாக வாழ்ந்தான். அப்போது அவனுக்கு ஒரு ஆண்மகன் பிறந்தான். அவனுக்கு வாமதேவன் என்று பெயரிட்டு வளர்த்தான். அவன் மணப்பருவம் அடைந்ததும் விதர்ப்பநாட்டு மன்னன் மகள் கமலலோசனையை மணஞ்செய்வித்தான். பின், தான் தன் மனைவியுடன் தவஞ்செய்யக் காட்டுக்குப்போனான். வாமதேவனின் ஆட்சிக்காலத்தில் மதபேதங்கள் பல கிளைத்தன. சைவப்பயிர் வாடியது. அதனால் மக்களிடையே மருள்நிலை படர்ந்தது. இவ்வாறு பல சமயத்தவர் உண்மையான அன்புச் சமயத்தை அழுத்தித் தமது சமயத்தை மக்களிடையே பரவவிட்டு இம்மை மறுமை வாழ்க்கையைக் கெடுத்து வந்தனர். எங்கும் சமயவாதங்களும் பூசலும் நிலவின. ஒழுக்கநிலை கெட்டு அமைதி குன்றி இருந்தது. அன்பும் அருளும் மறைந்து மருள் நிரம்பி இருந்தது. உலகெங்கும் சுற்றிவரும் நாரதர் ஆமோத நகரை அடைந்தார். அப்போது அங்கு சமயபேதங்கள் என்னும் பெருங்கிளைகள் பெருத்து ஓங்கி இருந்த காரணத்தால் மேலாண சைவப்பயிர் தலை தடுமாறி இருக்க எங்கும் அறியாமை இருள் சூழ்ந்திருக்கக் கண்டார். இந்த அவலநிலையைக் கண்ட நாரதர். திருக்கயிலைக்குப்போய் சிவபெருமானை அணுகி 'எல்லாவற்றுக்கும் ஆதாரமாய் எல்லா உயிர்களிலும் நிரம்பியுள்ள பெருமானே! உலகில் புன்மைசேர் மதங்கள் பலவும் தலைதூக்கி இருப்பதால் மக்கள் செய்யத்தக்கன இவை செய்யத்தகாதன இவை என்ற விதிவிலக்குகளை அறியாமல் குழப்பமுற்றுள்ளனர். ஆதலால் கருணாமூர்த்தியாகிய தாங்கள் அவர்களிடை சைவப்பயிர் தழைத்தோங்கச்செய்து அம்மக்கள் உய்யுமாறு அருள்பாலிக்க வேண்டும்' என்று இறைஞ்சினார். இதைக் கேட்ட சிவபெருமான் தமது அருகில் வீற்றிருந்த தேவசாலியை விளித்து ' குற்றமற்றவனே! நீ உன்னுடைய புத்திரனான சசிதேவனின் மகன் வாமதேவ மன்னனுக்கு மகனாய்த் தோன்றி, குருநாட்டு மன்னனின் மகளாய்த் தோன்றும் உன் மனைவியை மணந்து நாட்டை ஆள்வாயாக. அப்போது தீமை பயக்கும் மதமாறுபாடுகளையெல்லாம் நீக்கி உறுதிபயக்கும் வீரசைவநெறியை நல்லோர் யாவரும் மேற்கொள்ளும்படியாகச் செய்து நிலைநாட்டி மீண்டும் உன்மனைவியுடன் என்னை அடைந்து மற்றீண்டுவாரா நெறியை அடைவாயாக' எனப்பணித்தார். பணியை ஏற்ற தேவசாலி இறைவன் ஆணைப்படி வாமதேவமன்னனுக்கு மகனாய் அவதரித்தான்.