அன்புடையீர் நல்வரவு ,

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,
தேவாங்கர்களாகிய நாம் அனைவரும் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்து வந்தாலும் தேவாங்கர் என்னும் உணர்வு நம்மை ஓன்று சேர்க்கிறது. மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்ற வாக்கிற்கு இணங்க காலத்திற்கு ஏற்ப நாம் நமது குல நிகழ்வுகளை தகுந்த தொழில்நுட்பத்தை கொண்டு பதிவு செய்வது அவசியமான ஓன்று.

இந்த புதியபக்கம் நமது தேவாங்க சமூக செய்திகள்,சடங்குகள்,வரலாறு & அண்மை நிகழ்ச்சிகளை அறிந்துகொள்ளவும் தேவைப்படும் போது பார்க்கவும் உருவாக்கப் பட்டுள்ளது.
உறவுகள் தங்கள் பகுதியில் உள்ள கோவில்&குல தெய்வம் கோவில்களில் நடைபெறும் திருவிழா நிகழ்ச்சிகள் மற்றும் படங்களை இடம்பெற செய்யவும்.

தங்கள் கருத்துக்கள் இந்த தளத்தை மேன்படுத்த உதவும் ஆகயால் தயவுசெய்து கருத்திடவும் . ( தமிழில் கருத்திட தமிழ் எழுதியை பயன்படுத்தவும்)

நன்றி.

2/13/14

பகுதி ஏழு : தழல்நீலம்[ 2 ]

பகுதி ஏழு : தழல்நீலம்[ 2 ]

அடர்காட்டில் தனித்தபிடியானை போல சென்றுகொண்டிருந்த அன்னையை சிகண்டினியும் நிருதனும் தொடர்ந்துசென்றனர். அன்று பகலும் அவ்விரவும் அவள் சென்றுகொண்டே இருந்தாள். காலையொளி காட்டுமீது பரவியபோது நடுவே வட்டமாகக் கிடந்த வெற்றிடமொன்றைச் சென்றடைந்தாள். அடியில் பெரும்பாறை இருந்ததனால் மரங்கள் முளைக்காதிருந்த அந்த நிலத்தில் மண்ணிலிருந்து எழுந்த நீராவியில் விழுந்த இளவெயில் குளமெனத்தேங்கியிருந்தது. அதில் சிறுபூச்சிகள் ஒளியுடன் சுழன்றுகொண்டிருந்தன. செழித்த புற்களின் இலைகளில் இருந்த சிறுசிலந்திவலைகளில் நீர்த்திவலைகள் ஒளிவிட்டன. மெல்லிய சிலந்திவலைக் குகைகளுக்குள் இருந்து அன்னைச்சிலந்திகள் வெளிவந்து அசைவை கவனித்தன.
அங்கிருந்த சிறிய பாறையில் அன்னை அமர்ந்தாள். வழக்கம்போல முன்னும் பின்னும் ஆடாமல் தலைகுனிந்து அமைதியாக அமர்ந்திருந்தாள். அவள் முகத்தை மறைத்துத் தொங்கிய சடைவிழுதுகள் இளங்காற்றில் அவ்வப்போது ஆடின. அருகே ஒரு மரத்தடியில் கைகூப்பியபடி நிருதன் அமர்ந்திருந்தான். சிகண்டினி விலகிச்சென்று காய்கனிகளையும் கிழங்குகளையும் தேடிச்சேமித்து அவள்முன் கொண்டுவந்து வைத்தாள். அவற்றை அவள் உண்ணவில்லை. நிருதனும் எதையும் உண்ணவில்லை. மாலைவரை அவ்விடத்தில் இருவரும் இரண்டு தொன்மையான சிலைகள் போல அமர்ந்திருந்தனர். காட்டுக்குள் வெயில்வட்டங்கள் அணைந்து இருள் பரவத்தொடங்கியதும் அன்னை நிமிர்ந்தாள். கையசைவால் நிருதனை அருகே அழைத்தாள்.
நிருதன் அருகே சென்று வணங்கியதும் அந்த நிலத்தில் தெற்கு மூலையில் இருந்த பாறைமேட்டை சுட்டிக்காட்டினாள். அவன் அவள் சொல்வதை புரிந்துகொண்டதுபோல தலையசைத்தபின் காட்டுக்குள் சென்றான். சற்று நேரத்தில் உலர்ந்த மரம் ஒன்றை இழுத்துவந்தான். அதை கற்பாறைகளால் அடித்து ஒடித்து சுள்ளிகளாக ஆக்கி அந்தப் பாறைமேல் நீளமாக குவிக்கத்தொடங்கினான். அதை பொருளறியாமல் பார்த்துக்கொண்டிருந்த சிகண்டினி ஏதோ ஒரு தருணத்தில் புரிந்துகொண்டு திகைப்புடன் எழுந்து நின்றாள். ஆனால் அன்னையை நெருங்க அவள் துணியவில்லை. அவள் அவ்விறகுக்குவியல் சிதையாக ஆவதை அசையாவிழிகளுடன் பார்த்துக்கொண்டிருந்தாள்.
பின்பு அன்னை திரும்பி அவளைப்பார்த்தாள். சிகண்டினி சென்று அன்னையின் அருகே நின்றாள். முதலில் அவளை அடையாளம் காணாததுபோல அன்னையின் சுருங்கிய செவ்விழிகள் அதிர்ந்தன. பின்பு கண்களுக்குள் வாசல் திறந்தது. சுருண்ட கரிய நகங்களும் வெந்துசுருங்கிய சருமமும் கொண்ட அன்னையின் கை அவளை நோக்கி நீண்டது. அவள் நெருங்கியதும் அந்தக்கையை அவள் தலைமேல் வைத்தாள். மெல்லச்சரிந்து அவள் தோளைத் தழுவி இடையை அடைந்து நின்றது கரம். “மகனே சிகண்டி” என்றாள் அன்னை.
முதன்முதலாக அவள் பேச்சைக் கேட்ட சிகண்டினியின் பிடரியிலும் முதுகிலும் மயிர்க்கூச்செறிந்தது. அந்தக்குரல் அவளறிந்த அன்னையின் மிருக ஓசை அல்ல. பொன்மணியும் வேய்ங்குழலும் கலந்த இனிமை அதிலிருந்தது. பாறைமுகட்டின் கரிய தேன்கூடு கனிந்து துளித்துச் சொட்டுவதுபோல அவளிலிருந்து அது வந்தது. “மகனே, சிகண்டி…நீதானா?” என்றாள். “நீ என்னுடன்தான் இருக்கிறாயா?”
தெய்வச்சிலை கண்திறந்து பேசியதைக் கண்டவள் போலிருந்த சிகண்டினி அன்னையின் உடலை நெருங்கி நின்று “அன்னையே நான் பெண்…என் பெயர் சிகண்டினி” என்றாள். இல்லை இல்லை என்பதுபோல தலையசைத்தாள் அன்னை. “சிகண்டி…நீ சிகண்டி…நீ என் மகன்” என்றாள்.
சிகண்டி ஒருமுறை இமைத்தபின் திடமான குரலில் “ஆம்” என்றான். நெய்கொதித்து ஆவியாவதுபோலஅன்னை உடலில் இருந்து அவள் உயிர் பெருமூச்சுகளாக வெளிவந்துகொண்டிருந்தது. “நான் காசிமன்னன் மகள் அம்பை. அஸ்தினபுரியின் பீஷ்மனால் ஆன்மா அழிக்கப்பட்டு பித்தியானவள். அகத்தின் கனலில் எரிந்து பேயானவள்” என்றாள் அன்னை.
மெல்லமெல்ல அவள் உடலில் இருந்த மிருகத்தன்மை ஒழுகிச்சென்றதை, கருகிச்சுருண்டு சேறும் அழுக்கும் படர்ந்த உடலிலேயே பெண்மை குடியேறியதை சிகண்டி வியப்புடன் பார்த்தான். “மகனே, நீ எனக்காகச் செய்யவேண்டிய கடமை ஒன்றிருக்கிறது” என்றபோது அது கைவிடப்பட்ட பெண்ணின் கோரிக்கையாகவே ஒலித்தது.
“சொல்லுங்கள்” என சிகண்டி தலையசைத்தான். முதன்முதலாக அவள் கண்களில் கண்ணீரைப் பார்த்தான். மட்கிய மரப்ப‌ட்டைபோன்ற கன்னங்களில் விழுந்த கண்ணீர் சுருக்கங்களில் பரவி தாடையில் சொட்டியது. “இனித்தாளமுடியாது. ஒவ்வொரு கணமும் என்மேல் மலையெனக்குவிகிறது. இந்த வதையை முடிக்கவிழைகிறேன்.”
அவள் சொல்லாமலேயே அனைத்தையும் அவன் அறிந்துகொண்டான். சொற்களில்லாமலேயே அனைத்தையும் சொல்லிக்கொண்டும் இருந்தான். அன்னை தன் கரங்களை நீட்டி அவற்றைப்பார்த்தாள். திகைத்தவள்போல சிலகணங்கள் விழிமலைத்து அமர்ந்திருந்தபின் நெஞ்சை உலைத்த விம்மலுடன் மீண்டாள். “மகனே, இந்த நெருப்பு என் இப்பிறவியை எரித்துவிட்டது. அடுத்த பிறவியிலாவது எனக்கு விடுதலைவேண்டும். அதை நீயே எனக்கு அளிக்கவேண்டும்.”
“செய்கிறேன்” என்றான் சிகண்டி. “நீ பீஷ்மரைக் கொல்லவேண்டும்” என்று அன்னை சொன்னாள். சிகண்டி அவள் கையைப்பற்றி “கொல்கிறேன்” என்றான்.
திடுக்கிட்டவள்போல அம்பை நிமிர்ந்து அவனைப் பார்த்தாள். “உனக்கு அவர் யாரெனத்தெரியுமா?” என்றாள். சிகண்டி மெல்லிய திடமான குரலில், “யாராக இருந்தால் என்ன?” என்றான். அவள் கைகள் மேல் தன் கைகளைவைத்து மெல்லிய குரலில் “அது நிகழும்” என்றான் .
“நீ பீஷ்மரை போர்க்களத்தில் கொல்லவேண்டும். அவர் நெஞ்சை என் பெயர்சொல்லி விடும் உன் வாளி துளைத்தேறவேண்டும்” என்றாள். அவள் கைகள் சிகண்டியின் கைகளைப்பற்றியபடி நடுங்கின. சிகண்டி “ஆம்” என்றான்.
அன்னையின் பேய்முகத்தில் அழகியபுன்னகை ஒன்று எழுவதை சிகண்டி பார்த்தான். அவள் அவன் இருதோள்களையும் பிடித்துக்கொண்டாள். பெருமூச்சுடன் “ஆம், நீ அதைச்செய்வாய். ஒற்றை இலக்குக்காக மட்டுமே வாழ்பவன் அதை அடைந்தாகவேண்டுமென்பது பெருநியதி…இப்போதே அக்காட்சியைப் பார்த்துவிட்டேன்.. பீஷ்மர் உன் அம்பு துளைத்த நெஞ்சில் இருந்து வழியும் குருதியுடன் களத்தில் கிடக்கிறார்…. நீ என் கனல்…” என்றாள்.
சிகண்டியின் தலையில் கைவைத்து அன்னை சொன்னாள் “மகனே, நீ பாஞ்சாலனிடம் செல். காசிமன்னனின் மகன் நீ என்று சொல். அவன் உன்னை தன் மகனாக ஏற்றுக்கொள்வான். கற்கவேண்டியவற்றை எல்லாம் கற்றுக்கொள். உன் கை வில்லுக்கு முன் பாரதவர்ஷத்தின் எந்த மன்னனும் நிற்கலாகாது. பீஷ்மர் அறிந்த நீ அறியாத ஏதுமிருக்கக்கூடாது” என்றாள். சிகண்டி தலையசைத்தான்.
பெருமூச்சுடன் அன்னை சொன்னாள் “என்கதையை சூதர்கள் பாடிக்கேள். அன்னையை நீ அறிவாய்.” “நான் பிறிதொன்றல்ல”என்று சிகண்டி சொன்னான். அன்னை கண்ணீருடன் பெருமூச்சுவிட்டாள். “இப்பிறவியை எனக்களிக்கிறாய் மகனே. கடன் இனி என்னுடையது. இனிவரும் ஏழுபிறவிகளில் உனக்கு மகளாகி என் கடனைக் கழிப்பேன். உனக்களிக்க இவ்வன்னையிடம் இருப்பது இந்தக்கண்ணீரன்றி ஏதுமில்லை.”
அவன் தலைமேல் கைவைத்து அன்னை சொன்னாள், “உன்னுடன் அன்னையின் கண்ணீர் என்றுமிருந்து வழிகாட்டும். அழியாத ஒன்றுக்கென்றே வாழ்பவன் சிரஞ்சீவி மகனே. நீ என்றென்றும் சொல்லில் வாழ்வாய்” என்றாள். சிகண்டி தலைவணங்கி அன்னையின் அருட்சொல்லை ஏற்றுக்கொண்டான்.
நிருதன் வந்து வணங்கினான். அன்னை அவனை நோக்கித்திரும்பினாள். “நிருதரே, இதன்பின் உங்கள் இல்லம் திரும்புங்கள். என் சிதைச்சாம்பலைக் கொண்டு சென்று நீங்களும் உங்கள் குலமும் உங்கள் சிறுதங்கைக்கு நீர்க்கடன் செய்யுங்கள். உங்கள் குலத்தில் நான் என்றென்றும் பிறந்துகொண்டிருப்பேன்” என்றாள். நிருதன் “தங்கையே, அது என் தவப்பயன்” என்றான்.
கற்களை உரசி நிருதன் ஏற்றிய நெருப்பு மெல்லச்சிவந்து படபடவென்ற ஒலியுடன் பொற்சிறகுகள் கொண்டு எழுந்தது. அண்டபேரண்டங்களை துப்பும் ஆதி நாகத்தின் செந்நா என தழல் மேலெழுந்து பொறிகிளப்பியது. அலகிலா எல்லைவரை நிறைந்த இருளில் பொறிகள் விழுந்து மறைய காடு மெல்லிய காற்றோடும் மூச்சொலியாகச் சூழ்ந்திருந்தது. அன்னை எழுந்து சிகண்டியின் தலையைத் தொட்டாள். நிருதனின் பாதங்களைத் தொட்டபின் மெல்ல நெருப்பைநோக்கிச் சென்றாள். காதலனை அணுகும் பெதும்பை என தளரும் காலடிகளுடன். பின்பு பசித்தழும் குழந்தையை நோக்கிச்செல்லும் அன்னைபோல.
தீ அவள் உடலில் பிரதிபலித்து அவள் செவ்விழிகள் சுடர்ந்த இறுதிக்கணத்தை சிகண்டி தன் நெஞ்சில் பதித்துக்கொண்டான். அருகே சென்ற கணம் அவளில் நெருப்பு தழலாடியது. அவளே ஒரு செந்தழலாகத் தெரிந்த மறுகணத்தில் நெருப்பின் இதழ்கள் விரிந்து அவளை உள்ளே அள்ளிக்கொண்டன. செந்திரை அசையும் பல்லக்கிலேறுவது போல அவள் எரிசிதைமேல் ஏறிக்கொண்டாள்.
தலைமேல் தூக்கிய கரங்களுடன் அலறியபடி நிருதன் தரையில் விழுந்தான். புற்பரப்பில் முகத்தைப்புதைத்து இருகைகளாலும் செடிகளைப்பற்றியபடி மண்ணுக்குள் புதைந்து விடமுயலும் மண்புழு போல உடல் நெளிந்தான்.
நின்ற இடத்தில் அசையாமல் சிகண்டி நின்றிருந்தான். அவன் முகத்தில் சிதைநெருப்பின் செம்மை அலையடித்தது. நெருப்புக்குள் அன்னையின் கரிய கைகால்களின் அசைவை, கருஞ்சடைகள் பொசுங்கும் நாற்றத்தை, அவளுடன் எம்பி விழுந்து எரிவிறகில் மெல்லப்படிவதை, அவள் உடல் திறந்து ஊன்நெய் சொட்டி சிதை நீலச்சுவாலையாவதை, உண்டுகளித்த செந்தழல்கள் நின்று நடமிடுவதை இமையா விழிகளுடன் அவன் பார்த்துக்கொண்டிருந்தான். பின்பு அவன் களம்படும் கணம் வரை விழிமூடவில்லை என்றனர் சூதர். அவன் துயிலறிந்ததே இல்லை. அவன் கண்ணிமைத்ததேயில்லை என்று அவர்களின் பாடல்கள் பாடின.
VENMURASU_EPI_36
ஓவியம்: ஷண்முகவேல்
[பெரிதுபடுத்த படத்தின்மீது சொடுக்கவும்]
இரவெல்லாம் இடியோசையுடன் முழங்கி அதிர்ந்த வானம் மறுநாள் காலை பொழியத்தொடங்கியது. சிதை எரிந்த சாம்பலில் கரியும் வெள்ளெலும்புகளும் நீரில் கரைந்து வழிவதைக் கண்டபின் சிகண்டி திரும்பி காட்டுக்குள் சென்றான். கொடிபின்னிச்செறிந்த அடர்காட்டுக்குள் சென்றுகொண்டே இருந்தான். எங்கோ அக ஆழத்திலிருந்து அவன் செல்லவேண்டிய இலக்கை கால் அறிந்திருந்தது என நடந்தான்.
காலகம் என்ற அந்த அடர்வனத்தின் நடுவே ஸ்தூனகர்ணன் என்னும் யட்சனின் ஆலயம் இருந்தது. அப்பகுதியில் வேடரும் மேய்ப்பரும் மூலிகைதேடும் மருத்துவரும் செல்வதில்லை. பன்னிரண்டு ஆண்டுகளுக்கொருமுறை நாற்பத்தொருநாள் நோன்பிருந்த சூதர்கள் பந்தங்களுடனும் குடைகளுடனும் அக்காட்டுக்குள் புகுந்து ஸ்தூனகர்ணனின் சிற்றாலயத்தை அடைந்து பூசை செய்தனர். செங்குருதித் துளிகள் போன்ற செவ்வரளிமலர்களை சூட்டி, வறுத்த தானியப்பொடியில் மனிதக்குருதி சொட்டி உருட்டி ஆறு திசைக்கும் வீசி அவனுக்குப் படையலிட்டு வணங்கி மீண்டனர்.
மூன்று பக்கமும் கரியபாறைகள் சூழ்ந்த அந்த அடர்வனப்பசுமைக்குள் எப்போதும் மழைத்தூறலிருந்தது. நீரோடைகளன்றி வழியில்லாத அக்காட்டுக்குள் குகைகளில் இரவு தங்கியும் மலைக்கிழங்குகளை உண்டும் ஏழுநாட்கள் பயணம்செய்து சிகண்டி ஸ்தூனகர்ணனின் ஆலயத்தைச் சென்றடைந்தான். அப்பகுதியில்  பாறையின் கரிய வாய் எனத் திறந்த குகையிடுக்குக்குள் ஊறித்தேங்கிய சிறுசுனையின் மறுகரையில் ஸ்தூனகர்ணனின் சிறுசிலை இருந்தது. ஒருபகுதி தாமரை ஏந்திய பெண்ணாகவும் மறுபகுதி சூலமேந்திய ஆணாகவும் இருந்த சிலை மழையீரத்தில் களிபடிந்திருந்தது.
சிலையைநோக்கி சில கணங்கள் நின்றபின் அருகே இலைகளைப்பறித்துப்போட்டு இருக்கை அமைத்து சிகண்டி அமர்ந்துகொண்டான். இருகைகளையும் மடியில் கோர்த்தபடி இமையா விழிகளால் சிலையை நோக்கி அமர்ந்தான். நாட்கள் கழிந்தபோது சிலை கண்விழித்து அவனை நோக்கத் தொடங்கியது. அதன் பார்வையைச் சந்தித்த அவன் பிரக்ஞை நடுங்கியது. நெற்றியில் உந்தப்பட்ட கடா என எம்பி முன்சென்றது. உச்ச கட்ட அழுத்தத்தில் செயலிழந்து அசைவழிந்தது. பின்பு அந்தச்சிலை மட்டும் அங்கே இருந்தது.
நீர்சுழித்த சிறுதடாகம் படிகம்போல அசைவற்றிருக்க அதில் ஸ்தூனகர்ணன் தோன்றினான். மணிமுடியும் செங்கோலும் ஏந்திய அரசனாக வந்து நின்று “பெண்ணே நீ கோருவதென்ன என நீ அறிவாயா?” என்றான். “ஆம்” என்றான் சிகண்டி. “பிறவி என்பது முடிவற்றசங்கிலியின் ஒரு கண்ணி என்றறிக. இப்பிறவியை நீ மாற்றிக்கொண்டால் உன் வரும் பிறவிகளனைத்தையும் சிதறடிக்கிறாய். சென்ற பிறவிகளின் ஒழுங்கை குலைக்கிறாய். உன்னையும் உன் முன்னோர்களையும் வரும் தலைமுறைகளையும் இருளில் ஆழ்த்துகிறாய்” என்றான் ஸ்தூனகர்ணன்.
“என் சித்தத்தின் ஒரு சொல்லிலும் மாற்றமில்லை” என்றான் சிகண்டி. “ஒருகணத்தில் என் அகம் ஆணாகிவிட்டது. நான் உன்னிடம் ஆணுடலை மட்டுமே கோருகிறேன்.” ஸ்தூனகர்ணன் நீரில் மூழ்கிமறைந்தான். மீண்டும் சிகண்டி தன் கண்முன் கற்சிலையைக் கண்டான். பாறைப்பரப்பை முட்டிமுட்டித் துளைக்கமுயலும் கருவண்டுபோல அதன் முன் தவமிருந்தான். அச்சிலையின் விழிகளில் தன் பிரக்ஞையின்  வேகத்தால் மோதிமோதித்திறந்தான்.
மலர்முடி அணிந்த அணங்கின் தோற்றத்தில் ஸ்தூனகர்ணன் தோன்றினாள். “நீ இழப்பது ஒவ்வொரு கணமும் வளரும். அந்த மலையின் அடியில் சிறுகூழாங்கல்லாக ஒருநாள் உன்னை நீ உணர்வாய்” என்றாள். “ஆம், நான் அடைவதற்கொன்றுமில்லை” என்றான் சிகண்டி.
மூன்றாம்முறை கனிந்த பார்வையும் நீண்டவெண்தாடியும் கொண்ட தாதையின் தோற்றத்தில் ஸ்தூனகர்ணன் தோன்றினான். “குழந்தை, நான் சொல்வதை நீ புரிந்துகொள்ளவில்லை. யுகயுக மடிப்புகளில் இம்மாற்றத்தைச் செய்த எவரும் நலம்பெற்றதில்லை. துயரத்தின் மீளாப்பெருநரகில் அவர்கள் இன்றும் வாழ்கிறார்கள்” என்றான். “அதை நான் அறியவேண்டியதில்லை” என்றான் சிகண்டி. திகைத்து நின்ற ஸ்தூனகர்ணன் நீரில் மறைந்தான். மீண்டும் சிலையாக நின்ற அவன் முன் கூழாங்கல்லை அடைகாக்கும் பறவைபோல சிகண்டி அமர்ந்திருந்தான்.
மூதன்னை வடிவில் தோன்றிய ஸ்தூனகர்ணன் “நீ என் புதல்வி. உன்னிடம் இறுதியாகச் சொல்கிறேன். உன் வாழ்நாளெல்லாம் ஒரு நற்சொல்லைக்கூட நீ கேட்டறியமாட்டாய்” என்றாள். “நான் அதை எதிர்நோக்கவுமில்லை” என்று சிகண்டி பதில் சொன்னான். “என் அன்னையின் ஆணைக்கு அப்பால் சிந்தனை என்ற ஒன்று எனக்கில்லை.” துயரம் நிறைந்த புன்னகையுடன் ஸ்தூனகர்ணன் தன்கையை நீட்டினான். அதில் ஒளிவிடும் வைரம் ஒன்றிருந்தது.
அவன் ஆணைப்படி அதை வாங்கி விழுங்கிய சிகண்டி தனக்குள் அதன் கூரியமுனைகள் குத்திக்கிழிப்பதன் வலியை அறிந்தான். அவனிடமிருந்து ஒழுகிய குருதி அந்தத் தடாகத்தில் நிறைந்தது. அவனுக்குள் காலம் பொறித்திருந்த குழந்தைகள் துடிக்கும் சதைத்துண்டுகளாக, மெல்லிய வெள்ளெலும்புகளாக, மென்கரங்களாக, குருத்துக்கால்களாக, பூவிரல்களாக வெளிவந்து குளத்தில் தேங்கின. அவற்றின் பதைபதைத்த கண்கள் மீன்களாக குருதிநீரில் துள்ளின. அவற்றின் அழுகை வண்டுகளின் ஒலியென அவனைச்சூழ்ந்தது. கடைசியாக அவன் கருப்பை தோலுரிந்த சர்ப்பம் போல வெளியே வந்து குருதிச்சுழிப்பில் விழுந்து அமிழ்ந்தது. அதில் தோன்றிய ஸ்தூனகர்ணன் துயரம் நிறைந்த புன்னகையுடன் மறைந்தான்.
பன்னிரண்டாவது நாள் மெலிந்துலர்ந்த உடல் வற்றிய கால்கள்மேல் நிற்கமுடியாது ஊசலாட, குகைச்சுவர்களைப் பற்றியபடி நடந்து வெளிவந்தான் சிகண்டி. அருகே நின்ற கிழங்கொன்றைப் பிடுங்கித்தின்றபோதுதான் தன் வயிற்றை, அவ்வயிற்றை ஏந்திய உடலை, அவ்வுடலில் வாழும் தன்னை உணர்ந்தான். நீர் அருந்துவதற்காக அங்கிருந்த ஓடைச்சுனையில் குனிந்தபோது தன் முகத்தைப்பார்த்தான். அதில் எலியின் உடல்போல மெல்லிய மீசையும் தாடியும் முளைக்கத்தொடங்கியிருந்ததைக் கண்டான்.