அன்புடையீர் நல்வரவு ,

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,
தேவாங்கர்களாகிய நாம் அனைவரும் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்து வந்தாலும் தேவாங்கர் என்னும் உணர்வு நம்மை ஓன்று சேர்க்கிறது. மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்ற வாக்கிற்கு இணங்க காலத்திற்கு ஏற்ப நாம் நமது குல நிகழ்வுகளை தகுந்த தொழில்நுட்பத்தை கொண்டு பதிவு செய்வது அவசியமான ஓன்று.

இந்த புதியபக்கம் நமது தேவாங்க சமூக செய்திகள்,சடங்குகள்,வரலாறு & அண்மை நிகழ்ச்சிகளை அறிந்துகொள்ளவும் தேவைப்படும் போது பார்க்கவும் உருவாக்கப் பட்டுள்ளது.
உறவுகள் தங்கள் பகுதியில் உள்ள கோவில்&குல தெய்வம் கோவில்களில் நடைபெறும் திருவிழா நிகழ்ச்சிகள் மற்றும் படங்களை இடம்பெற செய்யவும்.

தங்கள் கருத்துக்கள் இந்த தளத்தை மேன்படுத்த உதவும் ஆகயால் தயவுசெய்து கருத்திடவும் . ( தமிழில் கருத்திட தமிழ் எழுதியை பயன்படுத்தவும்)

நன்றி.

5/23/13

தேவலமன்னன் செய்த போர்கள்

தேவாங்க மன்னன் இவ்வாறு எல்லாச் சிறப்புகளும் பெற்று வீற்றிருக்கும் நாளில், தேவர்கள், அணிவதற்கு அழகான ஆடைகள் பெற்ற மகிழ்ச்சியில் குதூகலமுற்று ஆடைகளை அணிந்து கொண்டு, ஆடையின்றி நிர்வாணத்தோடு இருந்த அரக்கர்கள் முன்போய் சிரித்துப்பேசி கேலி செய்தனர். இதைப் பொறுக்காத அரக்கர்கள் தங்கள் மன்னன் வச்சிரதந்தன் பால் சென்று அரசே! தேவர்கள் பல நிறமான அழகிய ஆடைகளை அணிந்து கொண்டு எங்கள் முன் வந்து நம்மை மதியாமல் " நிர்வாணிகள் நாணமற்றவர்கள் " என்று சிரித்துக் கேலி செய்து இகழ்ந்து பேசினார்கள் என்றனர். இதைக் கேட்ட வச்சிரதந்தன் தனது உடன் பிறந்த புலிமுகனையும் சர்ப்ப நாவனையும் உடனே வரவழைத்துத் தம்பிகளே ! ஆடை அணிந்த அகம்பாவத்தால் தேவர்கள் நம்மை மிக மிக எள்ளிப் பேசினார்களாம். தேவாங்கனோ தேவர்களுக்கு ஆடைகள் வழங்கி நம்மைப் புறக்கணித்தான். கயிலை நாதனாவது நமக்கும் ஆடைகள் வழங்குமாறு தேவாங்கனுக்குச் சொல்லியிருக்கலாம். அவரும் அவ்வாறு செய்யவில்லை. அதனால் இப்போதே நாம் படைகளைத் திரட்டிக் கொண்டு தேவருலகம் சென்று தேவேந்திரனை முதலில் அழிக்க வேண்டும். பின் அவனுக்குத் துணைவரும் பிரம்ம விஷ்ணுக்களை வெல்லவேண்டும். இச்செயலைக் கேள்வியுற்று நம்மைப் புறக்கணித்த ஈசன் கலங்க வேண்டும். இத்தகைய வெற்றியை நாம் அடைந்திடல் வேண்டும். என்று சினம் பொங்கக் கர்ச்சித்தான். இதைக் கேட்ட தம்பியர் இருவரும் "அண்ணலே! தேவேந்திரனை வெல்வது அரிதன்று. ஆனால் அவனுக்கு உதவியாக வரும் திருமாலை வெல்வது எளிதல்ல. இதற்கு முன்னும் நாம் போரில் திருமாலிடம் தோற்றுள்ளோம். அதனால் மீண்டும் இப்போது இந்நிலையில் போருக்குப் போவது சரியென்று படவில்லை " என்றனர். அதன் பின் மூவரும் கலந்து பேசி, சிவபெருமானை நோக்கித் தவஞ்செய்து அவனிடம் தக்க வரங்களைப் பெற்றுக் கொண்டு, போருக்குப் போவது என்று முடிவு செய்தனர். முடிவின் படி மூவரும் சிவபெருமானை நோக்கிக் கடுந்தவஞ் செய்தனர். தவத்திற் கிணங்கிப் பெருமானும் அவர்கள் முன் தோன்றி ' நீங்கள் விரும்பும் வரம் யாது? ' என்று கேட்டார். அரக்கர்கள் " சூரியன் தோன்றாமல் உலகம் எப்போதும் இருளில் இருக்க வேண்டும் " என்று கேட்டனர். அதற்குச் சிவபெருமான் ' சூரியன் உதிக்காவிடில் விண்ணுளோரும் மண்ணுளோரும் வாழமுடியாது. வேத ஒழுக்கமும் பிறவும் அழியும். அதனால் இதை விட்டு வேறு வரம் கேளுங்கள்' என்றார். உடனே அரக்கர்கள் சிவபெருமானை வணங்கிப் " பெருமானே! ஒரு ஆண்டு காலமேனும் உலகம் இருளில் இருக்குமாறு அருள் செய்யுங்கள் " என்றனர். சிவ பரம் பொருள் ' அவ்வாறே தந்தோம் ' என்று அருளி மறந்தார். அப்போதே உலகம் இருண்டு விட்டது. அதைக்கண்ட அரக்கர்கள் மகிழ்ச்சிப் பெருமிதத்துடன் வீரமகேந்திரம் என்னும் தமது நகரை அடைந்தனர். அரக்கர் தலைவன் வச்சிரதந்தன் அரக்கர்கள் உள்ள இடங்களுக்கெல்லாம் தூதுவர்களை அனுப்பி அரக்கர் சேனைகளை வரவழைத்தான். எல்லா அரக்கப் படைகளும் வீரமகேந்திரபுரியில் ஒன்று கூடி போர்க்கோலம் கொண்டன. படைபலத்தைக் கண்ட வச்சிரதந்தன் வெற்றி உறுதி எனத்துணிந்து போர்க்கோலம் பூண்டு தம்பியர் இருவரும் அவர்கள் மக்கள் நால்வருமாக நால்வகைப் படைகளுடன் போர் முரசு முழங்க வானநாடு சென்று அமராவதி நகரைச் சூழ்ந்து கொண்டான். இதையறிந்த இந்திரனும் பெரும் படைகளைத் திரட்டிக் கொண்டு போர்க்களம் போந்து அரக்கரை எதிர்த்தான். இருபடைகளுக்கும் இடையே பெரும் போர் நடந்தது. போரில் தேவர்கள் தோற்று ஓடினர். வெற்றிவாகை சூடிய வச்சிரதந்தன் மகிழ்ச்சி ஆராவாரத்துடன் படைகளோடு வீரமகேந்திரம் அடைந்தான். அரக்கர்களிடம் தோற்று ஓடிய அமரர் தலைவனும் அமரர்களும் ஒன்று திரண்டு யாவருக்கும் பதியாம் பசுபதியைக் காணத் திருக்கயிலையை அடைந்தனர். பெருமான் முன் சென்று பணிந்து இனிது ஏத்தி. அரக்கரிடம் போரிட்டுத் தோற்று ஓடிய துன்பச் செய்தியைச் சொல்லி, அத்துன்பத்தினின்றும் காத்து ரட்சிக்குமாறு வேண்டினார். அவர்கள் வேண்டுகோளைச் செவிமடுத்த சிவபெருமான் அவர்களுக்கு அபயம் அளித்து தேவாங்க மன்னனை உள்ளத்தே எண்ணினார். இறைவன் திருக்குறிப்பை உணர்ந்த தேவாங்க மன்னன் அக்கணம் அங்கு வந்து சேர்ந்தார்.அரனடி பணிந்து நின்றார்.நின்ற தேவலனை நோக்கிச் சிவபெருமான் " தேவர்களை வருத்தும் அசுரர்களைப் போரில் வென்று மீள்க " என்று பணித்தார். இறைவனிடம் இக்கட்டளையை பெற்ற தேவலர் இறைவனை வணங்கி விடை பெற்றுக் கொண்டு, இந்திரனை நோக்கி " இனி அஞ்சவேண்டாம். உன் படைகளுடன் நீ அமர நாட்டுக்குப் போ. நான் ஆமோத நகரம் சென்று படைகளைத் திரட்டிக் கொண்டு மீண்டும் இங்கு வருகிறேன் " என்றார். இந்திரன் அமரநாடு செல்ல, தேவாங்க மன்னன் தன் நாட்டுக்குச் சென்று பெரும்படைகளைத் திரட்டிக் கொண்டு தேவலோகம் சேர்ந்தார். தேவேந்திரனையும் தேவபடைகளையும் கூட்டிக்கொண்டு கயிலைச் சாரலை அடைந்து போர் முரசங் கொட்டினார். போர்ப்பறை கேட்டதும் வச்சிரதந்தன் தனது படைகளுடன் போர்க்களம் அடைந்தான். இருவரிடைப் பெரும் போர் மூண்டது. போரில் வச்சிரதந்தன் தோல்வியுற்றுப் புறமுதுகு காட்டி ஓடித் தனது படைகளுடன் மகேந்திரம் சேர்ந்தான்.

தேவலரின் ஆட்சியும் மக்கட்பேறும்

தேவாங்க மன்னனின் ஆட்சியில் பகைவர்கள் வணங்கினர். நால்வகை வருணத்தாரும் தமக்குரிய நெறியில் நின்றனர். அறநூல் முறைப்படி யாவரும் வாழ்ந்தனர். முப்பத்திரண்டு அறங்கள் எங்கும் சிறந்தன. நாட்டில் பகையே இல்லை. புலியும் மானும், எலியும் பாம்பும் பகை மறந்து நட்போடு பழகின. தவக்குறைவும் மகப்பேறின்மையும் எவரிடத்தும் இல்லை. நற்குணம், அன்பு, நன்மை, உறுதி, கருணை, மெய்யுணர்வு, கல்வி நாளுக்கு நாள் நாட்டில் ஓங்கி வளர்ந்தன. அதனால் நாட்டில் அழிவோ வறுமையோ அலைச்சலோ இல்லை. இவ்வாறு எல்லாச் சிறப்புகளும்பெற்று விளங்கிய சகர நாட்டைத் தேவலமன்னன், தன் கீழ் வாழும் முடிமன்னர்கள் அன்புடன் திறை செலுத்த, நீதியோடு ஆட்சி புரிந்து வந்தார். அந்நாளில் தேவதத்தை கருத்தரித்து மூன்று மக்களை ஈன்றாள். இவர்களுக்குத் திவ்யாங்கன், விமலாங்கன், தவளாங்கன் எனப் பெயரிட்டு நன்கு வளர்த்தார். இவர்களும் மணப்பருவம் எய்தியதும் இவர்களுக்கு சூரியதேவனின் புதல்விகள் பிரபை பத்மாட்சி கமலாட்சி என்பவர்களை மணமுடித்து வைத்தார். பின் மூத்தமகன் திவ்யாங்கனுக்கு மணிமுடி சூட்டி ஆட்சியை நல்கி மகிழ்ந்தார். மன்னனின் மற்றோர் மனைவி நாககன்னி சந்திரரேகையும் ஒரு மகவை ஈன்றாள். அக்குழந்தைக்குச் சுதர்மன் என்று பெயரிட்டு வளர்த்தார். அவனும் எல்லா கலைகளையும் கற்றுணர்ந்து வல்லவனானான். அது சமயம் குசைத் தீவை ஆளும் சூரசேனன் என்னும் மன்னன் ஆமோத நகர் மீது பெரும் படையோடு போருக்கு வந்தான். தேவாங்க மன்னன் பெரும் படை கொண்டு எதிரியுடன் போரிட்டு சூரசேனனைக் கொன்று அவன் ஆண்ட குசைத் தீவையும் கைப்பற்றித் தன் மகன் சுதர்மனை அந்நாட்டுக்கு மன்னனாக முடிசூட்டி ஆட்சியில் அமர்த்தினார். பின் சுதர்மனுக்கு அவந்தி நாட்டு மன்னனின் மகள் புட்கலையை மணம் செய்வித்தார். இவ்வாறு மக்கள் சிறக்கத் தவம்புரி மறையவரும் உலக மக்களும் போற்றும்படியாக குபேரனை ஒத்துச் செல்வ வாழ்வில் சிறப்புற்று ஓங்கி இருந்தார்.

அரம்பையின் சாபம்

இனி தேவல முனிவர் சிவபெருமானிடம் விடைபெற்றுக் கொண்டு கயிலையை விட்டு தன் நாட்டுக்குத் திரும்பினார். திரும்பி வரும் வழயில் எழில் மிகுந்த சோலையும் அதில் பன்னிறப் பூக்கள் நிரம்பிய தடாகம் ஒன்றும் இருக்கக் கண்டார். மிகுந்த மகிழ்ச்சியோடு களைப்புத் தீர அந்த தடாகத்தில் குளித்து விட்டு அதன் கரை மீது அமர்ந்தார். கயிலையில் தேவலரும் தேவர்களும் கூடியிருந்த தேவசபையில் நாட்டியமாடிய தேவ கன்னியரில் ஒருவளான அரம்பை, தேவலரின் பேரழகில் ஈடுபட்டு மனதைப் பறிகொடுத்திருந்தாள். தேவலரைத் தனிமையில் சந்திக்கக் காலம் எதிர்நோக்கி இருந்தாள். தேவலர் பூஞ்சோலையில் தனித்து இருப்பதை அறிந்து அவர் முன் தோன்றினாள். பக்கத்திற் சென்றாள். அமுதொழுகப் பேசி தன் காதலைப் புலப்படுத்தினாள். இவளது காதலையும் காதற் பேச்சுக்களையும் கேட்ட தேவலர் சிவ சிவ என்று காதுகளைப் பொத்திக் கொண்டார். 'அரம்பையே! நான் ஒரு பிரம்மச்சாரி. காம இச்சை சிறிதும் இல்லாதவன். உன் காதலுக்கு நான் உரியவன் அல்லன். உன்னை நாடும், உன் விருப்பத்திற்கு ஏற்ற தேவேந்திரனும் தேவர்களும் தேவ உலகில் உள்ளனர். அவர்களிடம் போ. மேலும் கணிகையர் உறவு, புகழ், புண்ணியம், அறிவு, மனவுறுதி, குணம், தவம் யாவற்றையும் அழித்து பாவக்கடலில் ஆழ்த்தும். ஆதலால் என்னை விட்டு நீங்கி உன்னை விரும்பும் தேவர்களிடம் போய் உன் விருப்பத்தை நிறைவேற்றிக்கொள்' என்று மொழிந்தார். இதைக் கேட்ட அரம்பை மனம் புழுங்கி, என்னைச் சாதாரண அரம்பை மகளிரில் ஒருவளென எண்ணி என் பெருமையை அறியாதவர் போல் பேசுகின்றீர்கள். பற்பல யாகங்களை முறையாகச் செய்து முடித்த முனிவர்களுக்கே என்னுடைய போக இன்பம் கைகூடும். என்று ஆதிநூல்கள் பகர்வதை அறியீர் போலும். தவத்தின் மிக்க அத்திரி முனிவர் போன்ற தவசிரேட்டா்களெல்லாம் என்னை விரும்பி மோன நிட்டையை விட்டு என்னை அணுகினர். எனினும் நான் அவர்களைக் கூடினேன் அல்லேன். நீரோ வலிய வந்த என்னைப் புறக்கணிக்கின்றீர். இது முறையல்ல என்று வாதிட்டாள். இவ்வாறு அரம்பை கூறிய பேச்சுகளுக்கும் வாதங்களுக்கும் முனிவர் அசைந்து கொடுக்கவில்லை. அதனால் அரம்பை முனிந்து " நீ பகைவரிடம் தோல்வியுற்றுக் கட்டுண்டு துன்புருவாயாக" என்று சாபமிட்டு அமரருலகம் சென்றடைந்தாள். சாபம் பெற்ற தேவலமுனிவர் இதுவும் இறைவன் திருவருளே என்று எண்ணி மனங்கலங்காது ஆமோத நகரை அடைந்தார்.

50 .சங்கு மகரிஷி கோத்ரம்

இம் மகரிஷி சாங்கியாயன மகரிஷி என அழைக்கப்படுகின்றார். ஓயாது ரிக்வேதம் ஓதிக் கொண்டு இருந்த மகரிஷி இவர். பராசரருக்கும் தேவகுருவான பிருஹஸ்பதிக்கும் தத்துவம் உபதேசித்தவர் இம்மகரிஷி.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

குடகோலதவரு அ குடிகேலாரு ;- ரம்பம்போல் உள்ள நெல்லரிவாள். இதனுக்குத் தெலுங்கில் குடகோலி என்றும் கன்னடத்தில் குடகோல் என்றும் பெயர். இப்பெயர்தான் குடிகேலாரு என மாறி உள்ளது.
இவர்கள் மிக்க செல்வந்தர்களாக நிலபுலன்களோடு வாழ்ந்து இருந்தவர்கள். அறுவடைக்காக ஏராளமான குடகோலிகளை வைத்து இருந்து இருக்கின்றனர். குடகோலிகளை வியாபாரம் செய்து இருக்கலாம்.

49 .சதாநந்த மகரிஷி கோத்ரம்

பிரம்மதேவனின் பேரர். கௌதம மகரிஷிக்கும் அகலிகைக்கும் பிறந்தவர். இவர் மிகச்சிறந்த தவசி. இவர் தவம் செய்யுங்கால்; எங்கே இந்திர பதவி அடைந்து விடுவாரோ என்று பயந்த இந்திரன் இவர் தவத்தை கெடுக்க ஊர்வசியை அனுப்பினான்.

சதாநந்தரின் மகன் கிருபாச்சாரி, மகள் கிருபி, இக்கிருபியைத் துரோணாச்சாரியார் மணந்து கொண்டார். அஸ்வத்தாமன் என்னும் மகனைப் பெற்றனர் துரோணர் தம்பதிகள். பாரதப் போர் முடிந்த பின்னும் சாகாது இருந்தவர்களுள் கிருபாச்சாரி ஒருவர்.

இராமபிரான் மிதிலைக்குச் சென்ற போது விசுவாமித்திரர் புகழை இராமமூர்த்திக்கும்; ஜனகருக்கு இராமபிரான் புகழையும் கூறியவர் சதாநந்தர். ஜனக மன்னருடைய புரோகிதர் இச்சதாநந்தர். சீதாபிராட்டிக்கு இவர் குலகுரு ஆகிறார்.

சதாநந்தரின் இன்னொரு மகன் சத்தியத்திருதி.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

ஹிரேமனெயவரு - இருமனேரு :- பெரியவர்கள்; பெரியவீட்டுக்காரர்கள். புத்திர காமேஷ்டி யாகத்தில் உதித்த பத்தாயிரம் குழுந்தைகளில் முதல் குழந்தைக்குச் சதாநந்தர் தீட்சை செய்து இருக்கலாம்.

செட்டிகாரரிடம் மரியாதைகள் பெறும்போது மற்ற கோத்ரத்தார் எழுந்து நின்று] மரியாதை பெறுகின்றனர். ஆனால் ஹிரேமனெயவர்களுக்கு அவர்கள் இருக்கும் இடம் சென்று மரியாதை கொடுக்கப்படும் சம்பிரதாயம் மேற்கண்ட கருத்தினை உறுதிப்படுத்துகின்றது.

வங்குசப் பெயரினையும், சம்பிரதாயத்தையும் இணைத்துப் பார்க்கின்ற போது இவர்கள் முதல் குழந்தையின் வம்சாவழியினர் என்பது விளங்கும்.

ஹிரேமனெயவரு என்ற பெயர்தான் இருமனெயவரு என்று மாறியிருக்கின்றது.
அங்கடிதவரு :- அங்கடி - கடை; கடைகட்டி வியாபாரம் செய்தவர்.
அங்கப்பதவரு :- இவ்வங்குசத்தோர் மூத்த மகனுக்கு அங்கப்பன் என்றும், மகளுக்கு அங்கம்மா என்றும் பெயர் சூட்டுவர். அங்கப்பன் என்பவர் வம்சம்.
ஆரேதவரு :- ஆராக்கீரையைக் கொண்டு வைத்தியம் செய்தவர்.
அம்பட்டிதவரு :- சித்தூர் மாவட்டம் மதபல்லி தாலுக்காவில் உள்ள ஒரு சிற்றூர் அம்பட்டி. அவ்வூரைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
அஸ்வபதிதவரு :- ஏராளமான குதிரைச் செல்வத்துடன் வாழ்ந்து வந்தவர். குதிரையை வாகனமாகப் பயன்படுத்திக் கொண்டவர். இவ்வங்குசத்தினர் குதிரேனாரு என்ற பெயருடன் தொட்டுபெல்லாபுரத்தில் இன்றும் வாழ்கின்றனர்.
கடிகெலதவரு :- கடகம் என்னும் நகை அணிந்தவர்.
கணபதிதவரு :- விநாயக விரத கல்ப முறைப்படி விரதம் இருப்பவர்.
கோகர்ணதவரு :- கோகர்ண சேஷத்திரத்தைப் ஊரைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
கோடம்தவரு :- நகைச்சுவை உணர்வு மிக்கவர். சிரிக்கச் சிரிக்கப் பேசுபவர். தன் செயலாலும் சொல்லாலும் சிரிக்கச் செய்பவர்.
கோடூரிதவரு :- நெல்லூர் ஜில்லாவில் உள்ள கோடூர் என்னும் ஊரைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
கௌரீஜனதவரு :- கௌரி தேவியைப் பூசித்து ஸ்ரீ கௌரி தேவியின் அருள் பெற்றவர்.
தாராபுரதவரு :- தாராபுரத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
துர்க்கதவரு :- துர்க்கம் - மலை; மலையைச் சார்ந்து வாழ்ந்தவர். பெட்டதாரு என்று கன்னடத்தில் இப்பெயர் வழங்குகின்றது.
கொணபர்த்திதவரு :- சித்தூர் ஜில்லாவில் உள்ள கொணாபர்த்தி என்னும் ஊரைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
பொம்மனதவரு :- பொம்மண்ண சுவாமியை வீட்டு தெய்வமாக வணங்குபவர்.
ராகதவரு :- அம்மன் திருவிழாவில் எடுக்கும் ஜோதிக்கு ராகதீபம் என்று பெயர்.

ராகம் - பிரீதி, ஆசை என்பது பொருள். ஆசையுடன் விரும்பி ஜோதி எடுப்பவர் என்று பொருள்.

நம் குலத்தின் ஆதிபுருஷர் தேவலர். அவர் ஜோதிஸ்வரூபமாக அவதாரம் செய்தார். அதனை எண்ணிப் பார்க்கும் வகையிலும் தேவலப் பரப்பிரம்மத்தினின்றும் சௌடேஸ்வரி என்னும் சிற்ஜோதி பிறந்தது என்று வேதங்கள் முழங்குவதையும் கருத்திற்கொண்டு ஜோதி எடுத்து வழிபடுகிறோம்.

ஹிரேமனெயவரு :- சக்தி

அந்தலதவரு :- எந்தேலாரு - சாமுண்டி

லத்திகார்ரு :- லதாலதவரு - ஜோதி

கப்பேலாரு :- குண்டம்

என சேலம் நகரில் தற்போது நடைமுறை இருந்து வருகின்றது.

ஆனால் ஹிரேமனெயவரு ஜோதி எடுப்பவர்என வங்குசம் வருகின்றது.

ஐந்து கத்திகை மனைகாரர்களில் யார் வேண்டுமானாலும் சக்தி அழைக்கலாம். சாமுண்டி அழைக்கலாம். ஜோதி எடுக்கலாம், குண்டம் மிதிக்கலாம் என்று புலப்படுகிறது.

இவற்றைக் கவனிக்கும் போது கத்திமனைக்காரர்கள் இன்னின்னார் இன்னின்னவற்றைத்தான் அழைக்க வேண்டும் என்ற நிபந்தனை இல்லையென்று தெரிகின்றது.
உங்குதவரு :- உங்குகிண்ணம் - குழந்தைக்குப் பால் ஊற்றும் கிண்ணம். இவ்வங்குசத்தார் குழந்தைகட்குப் பால் வழங்கும் தருமம் செய்தவர்கள்.
ஹிமத்கேதாரதவரு :- இமயமலையில் உள்ள கேதாரநாத் என்னும் தலத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
தொட்டமனெயவரு :- பெரிய வீட்டுக்காரர். ஹிரேமனெயவரு என்பதுவும் இதுவும் ஒரே பொருளைக் குறிக்கும் இரண்டு பெயர்கள்.
பாணிலாறு : - பாணதவரு :- 32 விதமான விருதுகளில் பாணம் ஒன்று.
கர்னாதவரு :- கோகர்ணதவரு என்ற வந்குசம்தான் கர்னாதவரு என்று வழங்கப்பட்டிருக்கிறது.
பதகதவரு :- மன்னர்களிடம் பரிசுப் பதக்கங்கள் பெற்றவர். பதக்கம்என்பது பதகம் என மருவி வந்துள்ளது.
பன்தெனதவரு, பாகடிதவரு, பிடிதவரு, மாடலிதவரு, வாபட்ணதவரு, ஜன்தினதவரு, ஜாதினதவரு, ஜீவகட்டுதவரு, பீரணெயவரு, மாமனியதவரு, சுருகியவரு, சூரிமெயதவரு, அங்கபந்துனிதவரு, இங்குதவரு, கோரஸதவரு, கோரண்டதவரு, கோரேதவரு, தேவசதவரு, பட்டுதவரு என்பனவும் இக்கோத்ரத்தில் காணப்படுகின்றன.

48 .சதுமுக மகரிஷி கோத்ரம்

இவர் சதுமுக மகரிஷி என்று அழைக்கப்படுகின்றார். பராசர மகரிஷியின் குமாரர்கள் அறுவருள் இவர் ஒருவர். இவருடைய மற்ற சகோதரர்கள் தத்தன், அநந்தன், நந்தி, பருதிபாணி, மாலி என்போராவார்.

சகோதரர்கள் அறுவரும் சிருபிராயத்தில் முதலை உருக்கொண்டு சரவணப் பொய்கையுள் புகுந்து விளையாடினர். பொய்கையில் இருந்த மீன்கள் சில இறந்து மிதந்தன. பொய்கைக்கு நீராட வந்தார் பராசரர். தம்மக்களின் விளையாட்டைக் கண்டு கோபம் கொண்டார்.

தகாதவை செய்து மீன்களைக் கொல்வித்தமையால் நீர் சரவணப் பொய்கையிலேயே மீன்களாக மாறுவீர் எனச் சபித்தார். தந்தையால் சாபம் பெற்ற அறுவரும் சாபவிமோசனம் வேண்ட, சரவணப் பொய்கையில் குமரக்கடவுள் அவதாரம் செய்வார். அவர் பொருட்டு உலக நாயகியாகிய உமையம்மை தரும் பால் இப்பொய்கையில் சிந்தும். அப்பாலை உண்ண உங்கட்குச் சாபம் விமோசனம் ஆகும் என அருள் செய்தார் பராசரர்.

குமரக் கடவுள் ஆறுதிருமேனிகளுடன் சரவணப் பொய்கையில் திருவிளையாடல் புரிந்தருளினான். மகனை அள்ளி அணைக்க ஆர்வம் கொண்ட பார்வதிதேவியார் சரவணப் பொய்கைக்கு எழுந்தருளி, ஆறுதிருமேனிகளையும் அள்ளி அணைத்து ஒரு திருமேனி ஆக்கினாள். எனவே அன்று முதல் முருகனும் கந்தன் என்னும் திருநாமம் பெற்றனன். அன்னை அருளுடன் அவனுக்கு ஊட்டிய ஞானப்பால் பொய்கையில் சேர அதனை மீன் வடிவம் கொண்ட அறுவரும் உண்டு சாபம் நீங்கினர்.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

கத்திதவரு :- கத்தி வழிபாடு செய்பவர். ஸ்ரீ சௌடேஸ்வரி அன்னைக்கு வீரகுமாரர்கள் கத்தி போட்டுக் கொண்டு அலகு சேவை செய்வது மரபு. இக்கத்திகள் புனிதம் வாய்ந்தவை ஆதலின், இன்றும் பலர் பூசனை அறையில் கத்திகளை வைத்து வழிபடுகின்றனர்.
குலபக்திதவரு :- தம்குல பக்தி மிக்கவர்.
புலிபாகலதவரு :- துர்க்கையின் வாகனமான புலி வழிபாடு செய்பவர்.
பூஷணந்தவரு :- ஆபரணம் அணிவதில் விருப்பம் மிக்கவர்.
போகதவரு :- சுகபோகமாக வாழ்பவர்.
முலிகினதவரு :- கோபம் மிக்கவர்.
பூசம்தவரு :- பூச நட்சத்திரத்தில் தவறாது விழா நடத்தி வழிபாடு செய்பவர்.
அட்யம்தவரு, அவன்டதவரு, ஆட்ரதவரு, ஆண்ட்ரதவரு, தும்மினிதவரு, பிசனதவரு, பிச்சினதவரு, புச்சகிஞ்சிதவரு, புச்சலதவரு, ரெட்ளதவரு.

47 .சங்கர்ஷண மகரிஷி கோத்ரம்

மகரிஷி வரலாறு ;- சூரியதேவனைப் பூசிக்கும் முறையினையும், சூரிய அர்ச்சனை மந்திரங்களையும் ரிஷிகளுக்குக் கூறியவர். வேறு வரலாறு புலப்படவில்லை.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

ஸ்ரீ காகுளதவரு :- ஆந்திராவில் உள்ள ஸ்ரீ காகுளம் என்னும் ஊரைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
சாகரதவரு :- சாகரம் - சமுத்திரம்; சமுத்திரக்கரை நகரினைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
சன்னுகிடுசுதவரு :-

தேவாங்கர் குல ஜெகத் குரு ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ தயானந்தபுரி சுவாமிகள்