அன்புடையீர் நல்வரவு ,

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,
தேவாங்கர்களாகிய நாம் அனைவரும் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்து வந்தாலும் தேவாங்கர் என்னும் உணர்வு நம்மை ஓன்று சேர்க்கிறது. மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்ற வாக்கிற்கு இணங்க காலத்திற்கு ஏற்ப நாம் நமது குல நிகழ்வுகளை தகுந்த தொழில்நுட்பத்தை கொண்டு பதிவு செய்வது அவசியமான ஓன்று.

இந்த புதியபக்கம் நமது தேவாங்க சமூக செய்திகள்,சடங்குகள்,வரலாறு & அண்மை நிகழ்ச்சிகளை அறிந்துகொள்ளவும் தேவைப்படும் போது பார்க்கவும் உருவாக்கப் பட்டுள்ளது.
உறவுகள் தங்கள் பகுதியில் உள்ள கோவில்&குல தெய்வம் கோவில்களில் நடைபெறும் திருவிழா நிகழ்ச்சிகள் மற்றும் படங்களை இடம்பெற செய்யவும்.

தங்கள் கருத்துக்கள் இந்த தளத்தை மேன்படுத்த உதவும் ஆகயால் தயவுசெய்து கருத்திடவும் . ( தமிழில் கருத்திட தமிழ் எழுதியை பயன்படுத்தவும்)

நன்றி.

12/22/13

மேஷம் (அசுவினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய) பொதுப்பலன்கள்

மேஷம்
(அசுவினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய)

பொதுப்பலன்கள்
ஆங்கிலப் புதுவருடம் 2014 கன்னி லக்னத்திலும் தனுசுராசியிலும் பிறக்கிறது. மேஷ ராசிக்கு 6வது லக்னத்திலும், 9வது ராசியிலும் பிறக்கிறது. மேஷ ராசிநாதன் செவ்வாய் கன்னி லக்னத்தில் நின்று உங்கள் ராசியை 8-ஆம் பார்வை பார்க்கிறார். 9-க்குடைய குரு 9-ஆம் இடத்தைப் பார்ப்பதுடன், 10-க்குடைய சனியையும் பார்க்கிறார். அத்துடன் உச்ச சனியும் 10-க்குடையவர் 9-ஆம் இடத்தைப் பார்க்கிறார். எனவே தர்மகர்மாதிபதி யோகம் உங்களுக்கு அதி அற்புதமாக இருக்கிறது. அதைவிட சிறப்பு 5-க்குடைய சூரியன் 9-ல் நின்று 9-க்குடைய குருவின் பார்வையையும்; ராசிநாதன் செவ்வாயின் பார்வையையும் பெறுகிறார். மேலும் 2014 என்பது 7- கேதுவின் எண். கேதுவும் ஜென்ம ராசியிலேயே இருக்கிறார். 6, 8, 12- ஆம் இடங்கள் சுத்தமாக இருக்கின்றன. 6-ல் செவ்வாய் இருந்தாலும், அவர் ராசிநாதன் என்ற அடிப்படையில் தோஷமில்லை. 6-க்குடைய கெடுபலன் நடக்காது.

இத்தனை சிறப்பம்சங்கள் உங்கள் ராசிக்கு இருப்பதால் இந்த வருடம் உங்களுக்கு எல்லா வகையிலும் சிறப்பான பலன்கள்தான் நடக்கும் என்று ஆணித்தரமாகச் சொல்லலாம். வேலை, உத்தியோகம் இல்லாதோருக்கு படிப்புக்கேற்ற வேலையும், திருப்தியான ஊதியமும் கிடைக்கும். ஏற்கெனவே வேலையில் இருந்தும் நல்ல வருவாய் இல்லாமலும், வேலைப் பளுவுக்கு ஏற்ற சம்பாத்தியம் இல்லாமலும், உண்மையான உழைப்புக்கேற்ற ஊதியமும் பாராட்டும் இல்லாமலும் மனம் நொந்து மகிழ்ச்சியற்று இருப்போருக்கு, இந்தப் புதுவருடத்தில் பதவி உயர்வும் ஊதிய உயர்வும் திருப்தியான இடமாற்றமும் ஏற்படும்.

அதேபோல சொந்தத் தொழில் துறையில் "நித்திய கண்டம் பூரண ஆயுசு' என்றும், "சாண் ஏற முழம் வழுக்க' என்றும், "வரவு எட்டணா செலவு பத்தாணா' என்றும் இழுத்துப்பறித்து தொழிலை வலுக்கட்டாயமாக ஓட்டியவர்களுக்கு 2014-ல் நல்ல முன்னேற்றமும் திருப்பமும் உண்டாகும். தொழில் உங்களைக் காப்பாற்றவேண்டும் என்பதுதான் முறை! ஆனால் கடந்த காலத்தில் கடன் உடன் வாங்கி, தவணை வாங்கி தொழிலை நீங்கள் காப்பாற்றி வந்தீர்கள். அதாவது வெறுங்கடையாகப் போடாமலும், கதவை அடைக்காமலும், சரக்குளை வாங்கிக்குவித்து கேட்டு வருகிறவர்களுக்கு இல்லை என்று சொல்லாமல் வியாபாரம் செய்தீர்கள். சமயத்தில் லாபம் இல்லாவிட்டாலும் பரவாயில்லை- அசல் தேறினால் போதும் என்றும் சரக்கு விற்றால் போதும் என்றும் நினைத்தீர்கள். அப்படியும் கூட்டம் வரவில்லை. பக்கத்து கடைக்காரர் கூடுதல் விலைக்கு விற்றாலும் அங்கேதான் கூட்டம் கட்டியேறியது. வரும் தை மாதம் முதல் (ஜனவரி 14-ல் இருந்து) பக்கத்துக் கடைக்குப்போன வாடிக்கையாளர்கள் எல்லாம் உங்கள் கடையைத் தேடிவர ஆரம்பித்துவிடுவார்கள். உங்கள் சரக்கு நல்ல சரக்கு- விலையும் குறைவு என்ற உண்மையை உணர்ந்து ஆதரவு தருவார்கள். அதுதான் நேரம் காலம் என்பது! தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது அதுதான்!

இன்னும் சிலர் பழைய தொழிலை அபிவிருத்தி செய்வதோடு, சிலர் புதிய தொழிலையும் தனியாகவோ கூட்டாகவோ ஆரம்பிக்கலாம். உணவு, காப்பி, ஜூஸ் கடை, ஸ்டேஷனரி, நூல், ஜவுளி, இரும்பு யந்திரம், வாகனம், ஜெராக்ஸ், மின்தொடர்பு சாதனம் போன்ற தொழில்கள் எல்லாம் மிகச் சிறப்பாக இருக்கும்! ஜாதகரீதியாக லக்னம் அல்லது ராசியில் ராகு- கேது சம்பந்தம் இருந்தாலும், அல்லது ராகு- கேது தசாபுக்தி நடந்தாலும் "எக்ஸ்போர்ட்ஸ்' தொழிலும் ஆரம்பிக்கலாம்.

7-ல் சனி- ராகு இருப்பது களஸ்திர தோஷம்- மாங்கல்ய தோஷம் என்றாலும், 2014 கிரக சஞ்சாரத்தால் தோஷம் எல்லாம் நீங்கி உடனே திருமணம் கூடிவிடும். அதாவது குரு மிதுனத்தை விட்டு மாறுவதற்குள். (7-க்கு குருபார்வை இருக்கும்போதே) தடைப்பட்ட திருமணம் கூடிவிடும். ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஜாதகரீதியாக தோஷம் இருந்தால் அல்லது 30 வயது தாண்டியும் திருமணம் செட்டாகாமல் இருந்தால், பெண்கள் பார்வதிகலா சுயம்வர ஹோமமும், ஆண்கள் கந்தர்வ ராஜஹோமமும் செய்து கலச அபிஷேகம் செய்துகொள்ளலாம். இதனால் திருமணத் தடை நீங்குவது மட்டுமல்ல; நல்ல மண வாழ்க்கையும் மகிழ்ச்சிகரமான, மனநிறைவான குடும்பமும் அமையும்.

ஏற்கெனவே திருமணமாகிப் பலவருடம் புத்திரபாக்கியம் இல்லாமல் ஏங்கித்தவித்தவர்கள்- புதுவருடத்தில் வாஞ்சாகல்ப கணபதி புத்திர ஹோமமும், சந்தான பரமேசுவர ஹோமமும், சந்தான கோபாலகிருஷ்ண ஹோமமும் செய்து தம்பதிகள் கலச அபிஷேகம் செய்துகொண்டால் உடனே வாரிசு யோகம் அமையும். சேங்காலிபுரம் அல்லது சேந்தமங்கலம் சென்று தத்தாத்ரேயரை வழிபட்டால் ஆண்வாரிசு அமையும். பெண் வாரிசு வேண்டுவோர் திருக்கடையூர் அபிராமியம்மனை வழிபடலாம். 

கடந்த காலத்தில் நோயின் பிடியில் சிக்கித் தவித்து ஒவ்வொரு டாக்டராகப் பார்த்தும் முழுமையான குணம் ஏற்படாதவர்களும்; அலோதிபதி, சித்தா, ஆயுர்வேதம், ஹோமியோபதி, யுனானி, அக்குபஞ்சர் (மருந்தில்லா வைத்தியச் சிகிச்சை) என்று மாறி மாறி ட்ரீட்மெண்ட் எடுத்தும் எந்த முன்னேற்றமும் இல்லாமல்- கிரகக் கோளாறா, செய்வினைக் கோளாறா, குடியிருப்பு வாஸ்துகுற்றமா என்று புலம்பிக் குழம்பியவர்களுக்கும் 2014-ல் உடனடி தீர்வும் நல்ல மாறுதலும் உண்டாகும்.

அதேபோல கடந்த காலத்தில் தவிர்க்க முடியாத செலவினங்களினால் வரவுக்கு மீறிய விரயங்களால் வட்டிக்கு வாங்கி கட்டமுடியாமல் கலங்கித் தவிப்பவர்களுக்கும் நல்லவழி பிறக்கும். வருட லக்னம் 6-ஆவது லக்னம். 6-ஆம் இடம் என்பது எதிரி, கடன், வைத்தியச் செலவு ஆகிய பலனைக் குறிக்கும். அங்கு ராசிநாதன் செவ்வாய் இருப்பதாலும் 6-க்குடைய புதன் 5-க்குடைய சூரியன் சாரம் பெற்று சூரியனோடும் சேர்ந்து, குரு- செவ்வாய்- சனி- ராகு இவர்களால் பார்க்கப்பட்டதாலும் எதிரி, கடன், வைத்தியச் செலவு போன்ற 6-ஆம் இடத்துத் தொல்லைகள் எல்லாம் வேரோடு வீழ்ந்துவிடும்!

13-6-2014-ல் குருப்பெயர்ச்சி. மேஷ ராசிக்கு 3-ல் மறைவாக இருந்த குரு 4-ஆம் இடமான கடகத்துக்கு மாறி அங்கு உச்சபலம் பெறுவார். கடக குரு மேஷ ராசிக்கு 8-ஆம் இடம் விருச்சிகத்தையும், 10-ஆம் இடம் மகரத்தையும், 12-ஆம் இடம் மீனத்தையும் பார்க்கப் போகிறார். அதனால் தொழில் விருத்திக்காகவும், குடும்பத்தில் நல்ல காரியங்களுக்காகவும், சுபச் செலவுகளும் பணப்பற்றாக்குறையை சமாளிக்க கடன்படும் சூழ்நிலையும் ஏற்படும். கடன் வாங்குவது என்பது ஒரு கௌரவப் பிரச்சினைதானே. அதுதான் 8-ஆம் இடத்துப் பலன்! எனக்குத் தெரிந்த கௌரவமான குடும்பத்தைச் சேர்ந்த  ஒருவர் ஒரு அவசரத் தேவைக்காக 20 பவுன் நகையை அடகுவைத்து கடன் வாங்கித் தருமாறு ஒரு நண்பரிடம் சொன்னார். தான் போனால் வெளியில் தெரிந்துவிடும் என்று ஒரு தயக்கம். அந்த நண்பரோ அடகு வைக்கும்போது தனது தேவைக்கும் சேர்த்து அதிகமாக பத்தாயிரம் ரூபாய்க்கு கடன் வாங்கி எடுத்துக்கொண்டார். இரண்டு மாதத்தில் அடகு நகையைத் திருப்ப நகைக்கு சொந்தக்காரர் பணம் கொடுத்தபோதுதான் உண்மை தெரிந்தது. என்ன செய்வது? அவர் வாங்கிய கடனுக்கும் சேர்த்து இவரே கொடுத்தார். இதுவும் 8-ஆம் இடத்துப் பலன்தான்!

21-6-2013-ல் ராகு- கேது பெயர்ச்சி! இதுவரை ஜென்மத்தில் நின்ற கேது 12-ஆம் இடம் மீனத்துக்கும், 7-ல் நின்ற ராகு 6-ஆம் இடம் கன்னிக்கும் மாறுவார்கள். ராகு- கேது பெயர்ச்சி மேஷ ராசிக்கு அற்புதமான- யோகமான பெயர்ச்சி. 6-ம் 12-ம் பாப ஸ்தானங்கள். அங்கு நிற்கும் பாப கிரகங்கள் மேற்படி பாப பலனை அழித்துவிடும். அதாவது வீண்விரயம், அவப்பெயர், நஷ்டம் இவற்றை இல்லாமல் செய்துவிடும். அதேபோல ராகுவும் எதிரி, கடன், வைத்தியச் செலவு, போட்டி, பொறாமைகளையும் இல்லாமல் அழித்துவிடும். அதாவது மைனஸ் ல மைனஸ் = பிளஸ் என்ற கணக்குத்தான். எனவே, குருப்பெயர்ச்சியும் ராகு- கேது பெயர்ச்சியும் மேஷ ராசிக்கு மிகமிக யோகமான பெயர்ச்சியாகும்!

16-12-2014-ல்தான் சனிப்பெயர்ச்சி. மேஷ ராசிக்கு 8-ல் சனி வருவதால் அட்டமச் சனி ஆரம்பம். ஆரம்பத்தில் சனி விசாகம் 4-ல் இருப்பார். விசாகம் குரு நட்சத்திரம். குரு 9-க்குடையவர்; சனி 10-க்குடையவர். மேலும் கடகத்தில் உச்சம் பெறும் குரு- விருச்சிகத்திலுள்ள அட்டமச் சனியைப் பார்க்கப் போவதால் தர்மகர்மாதிபதி யோகம் ஆகும். ஆகவே அட்டமச் சனியைப் பற்றி மேஷ ராசிக்காரர்கள் அதிகம் கவலைப்பட வேண்டாம்; அலட்டிக் கொள்ள வேண்டாம்; கற்பனை பயம் அடையவேண்டாம். அதைப்பற்றி 2015- ஆண்டு பலனில் அல்லது சனிப்பெயர்ச்சி பலனில் விரிவாகக் காண்போம். 

மாதவாரிப் பலன்கள்


ஜனவரி


தொழில் முன்னேற்றம், புது முயற்சிகளில் வெற்றி, கௌரவம், மதிப்பு, மரியாதை இவற்றில் குறைவில்லை. தொடர்ந்து கடன், வட்டிச் செலவு வைத்தியச் செலவு இருக்கத்தான் செய்யும். இருந்தாலும் பொருளாதாரம் தடையில்லாமல் சரளமாகப் புரளும் என்பதால், எல்லாப் பிரச்சினைகளையும் எளிதாகச் சமாளித்துவிடலாம். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தன்வந்தரி மந்திர ஜெபம் செய்யவும்.

பிப்ரவரி


சூரியன் மாத முற்பகுதியில் பத்திலும், பிறகு பதினொன்றிலும் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் மங்கள சுப காரியங்கள் நிறைவேறும். சிலருக்கு வாகன யோகமும் வாகன மாற்றமும் உண்டாகும். மனைவி வழி அல்லது சகோதர வழி உறவினர்களால் சகாயமும் ஆதரவும் உண்டாகும். தேக ஆரோக்கியத்தில் தெளிவும் முன்னேற்றமும் எதிர்பார்க்கலாம். கட்டட வேலை செய்கிறவர்களுக்கு புதிய ஒப்பந்தங்களும் அல்லது வெளிநாட்டு வாய்ப்புகளும் ஏற்படும். சிலருக்கு குடியிருப்பு மாறும் அமைப்பும் உண்டாகும். எதிர்காலத்தைப் பற்றிய தன்னம்பிக்கையும் தைரியமும் உருவாகும். பொருளாதார வளர்ச்சிக்கு சொர்ண ஆகர்ஷண பைரவ மந்திர ஜெபம் செய்யவும். 

மார்ச்


மாத முற்பகுதிவரை சூரியன் கும்பத்தில் நின்று குருவின் பார்வையைப் பெறுகிறார். திரிகோணாதிபதிகள் இருவரும் திரிகோணமாக இருப்பதால் குருவருளும் திருவருளும் ஒருசேர, உங்களுக்கு நற்பலன்கள் உண்டாகும். மனதில் வகுத்த திட்டங்கள் எல்லாம் மனம்போல நிறைவேறும். சுக்கிரனும் கும்பத்தில் இருப்பதால், குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் ஆனந்தமும் உருவாகும். பிள்ளைகள் வகையில் நல்லவை நடக்கும். திருமணத்தடை விலகும். வாரிசு  யோகம் அமையும். சம்பாத்திய யோகமும் சேமிப்பு யோகமும் பெருகும். மாதப் பிற்பகுதியில் சூரியனும், மாதக் கடைசியில் புதனும் மீனத்துக்கு மாறுவதால் காரியத்தடை அல்லது காலதாமதம் ஏற்படாலாம்; கவனம்.

ஏப்ரல்


சூரியனும் புதனும் மீனத்தில் (12-ல்) மறைகிறார்கள். பிள்ளைகள் வகையில் சில தொல்லைகள் ஏற்படலாம். அல்லது கவலை உண்டாகலாம். புதன் நீசம் என்பதால் சத்ருஜெயம், கடன் நிவர்த்தி, நோய், வைத்தியச் செலவு நிவர்த்தி, புதிய வேலை வாய்ப்பு அல்லது தொழில் அபிவிருத்தி முயற்சி, மணமாகாத கன்னிப்பெண்களுக்கு கல்யாண யோகம் உண்டாகும். குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் உண்டாகும். உறவினர்களின் வருகையால் கலகலப்பு ஏற்படும். செவ்வாயும் சனியும் வக்ரம் என்பதால் காரணமில்லலாத விரக்தியும் அல்லது செய்முயற்சிகளில் குறுக்கீடுகளும் தடைகளும் காணப்படும். சனிக்கிழமை காலபைரவருக்கு மிளகு தீபம் ஏற்றவும். செவ்வாய்க்கிழமை முருகனுக்கு செவ்வரளி மாலை சாற்றவும். 

மே


செவ்வாயும் சனியும் தொடர்ந்து வக்ரம் என்றாலும், 11-ஆம் தேதி செவ்வாய் வக்ரநிவர்த்தி அடைவதால் 6-ஆம் இடத்து கெடுதல்கள் குறையும். அதாவது கடன், வட்டி குறையும். வைத்தியச் செலவும் விலகும். நோய் குணமாகும். சத்ரு தொல்லைகளும் விட்டுவிலகிவிடும். 10-க்குடைய சனி தொடர்ந்து வக்ரமாக இருந்தாலும், குருவின் சாரம் பெறுவதால் தொழில் மேன்மையும் வளர்ச்சியும் உண்டாகும். லாபஸ்தானத்தை குரு பார்ப்பதால் லாபமும் சேமிப்பும் எதிர்பார்க்கலாம். 4-ஆம் இடத்துக்கு உச்ச சனி பார்வை கிடைப்பதால், காலி மனை வாங்கிப் போடலாம். ரியல் எஸ்ட்டேட்   தொழிலில் இறங்கலாம். செவலூர் பூமிநாத சுவாமியை வழிபடலாம்.

ஜூன்


இம்மாதம் குரு பெயர்ச்சியும் ராகு- கேது பெயர்ச்சியும் ஏற்படுகிறது!இம்மாதம் 21-ஆம் தேதி (ஆனி-7) ராகு- கேது பெயர்ச்சி ஆகிறது. மீனத்துக்கு கேதுவும் கன்னிக்கு ராகுவும் மாறுவார்கள். ஜூன் 13-ல் குருப்பெயர்ச்சி!

தாய்வழி உறவினர்களால் சிலருக்கு அன்புத் தொல்லைகளும் தவிர்க்க முடியாத சுப விரயச் செலவுகளும் ஏற்படலாம். அல்லது அவர்களுக்காக நீங்கள் பொறுப்பேற்று வாங்கிக் கொடுத்த கடன் பாக்கியை நீங்களே கட்டுகிற சூழ்நிலை ஏற்படலாம். கும்பகோணம்- குடவாசல் அருகில் சேங்காலிபுரம் சென்று தத்தாத்ரேயரையும் கார்த்தவீர்யார்ஜுன யந்திரத்தையும் பூஜித்தால் வரவேண்டிய பணம் வசூலாகும். 

ஜூலை


இந்த மாதம் 14-ஆம் தேதி செவ்வாய் கன்னியிலிருந்து துலா ராசிக்கு மாறுவார். செவ்வாய், சனி சேர்க்கை. இது நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு. குரு 4-ல் உச்சம். பிரார்த்தனை பலத்தால் குடும்பத்தில் ஏற்படும் குழப்பங்களை தவிர்க்கலாம். உடன்பிறந்தோர் வகையில் சிலருக்கு பிரச்சினைகளும் கவலைகளும் ஏற்பட்டு விலகிவிடும். பொருளாதாரத்தில் பிரச்சினை இல்லை. தேவைக்கேற்ற வரவும் வரவுக்கேற்ற செலவும் இருக்கும். விரயஸ்தானத்தில் (12-ல்) கேதுவும் சத்ருஸ்தானத்தில் (6-ல்) ராகுவும் மாறியிருக்கிறார்கள். எனவே பூமி, வீடு சம்பந்தமான சுபமுதலீடு செய்யலாம். அதற்காக கடன் வாங்கலாம். அது சுபக்கடன். உங்கள் கனவுத் திட்டங்கள் நிறைவேற திருவாலி லட்சுமிநரசிம்மரை வழிபடவேண்டும். சீர்காழியில் இருந்து திருநாங்கூர் 9 கிலோமீட்டர். அங்கிருந்து கீழச்சாலை வழியே திருவாலியை அடையலாம். 

ஆகஸ்டு


மேஷ ராசிக்கு 7-ல் செவ்வாயும் சனியும் சேர்க்கை. குரு கடகத்தில் உச்சம். அவரை உச்ச சனி பார்க்கிறார். அதாவது உச்சனை உச்சன் பார்ப்பது நல்லதல்ல. என்றாலும் ராசிநாதனோடு சேர்ந்த சனி- தர்மகர்மாதிபதி பார்வை என்பதால்- விசேஷ நன்மைகளும் பலன்களும் நடக்கும். சிலருக்கு விபரீத ராஜயோக பலன்கள் உண்டாகும். உடல் ஆரோக்கியம், தேக சுகம், தொழில் மேன்மை, பொருளாதார உயர்வு, தேவைகளின் பூர்த்தி, செல்வச் சிறப்பு எல்லாம் உண்டாகும். அதேசமயம் திருமண வயதில் உள்ளவர்களுக்கு காதல் திருமணம், கலப்புத் திருமணம் நடக்கலாம். 

செப்டம்பர்


இம்மாதம் ராசிநாதன் செவ்வாய் 8-ல் விருச்சிக ராசிக்கு மாறினாலும் அது ஆட்சிவீடு என்பதால் மறைவு தோஷம் இல்லை. உங்கள் பெருமை, திறமை எல்லாம் சிறப்பாக இயங்கும். அதேசமயம் எந்த காரியத்தைத் தொட்டாலும் எடுத்தோம் முடித்தோம் என்பதில்லாமல் கடின முயற்சியோடும், கடுமையாகப் பாடுபட்டும்தான் நிறைவேற்ற வேண்டும். அதில் ஒரு திருப்தி என்னவென்றால் முடிவில் நினைத்ததுக்குமேல் ஒருபடி அதிகமாகவே நிறைவேற்றி விடலாம். அதாவது 100-க்கு 110 சதவிகிதம் என்ற கணக்கில் சாதிக்கலாம். மேஷ ராசிக்கு 9-க்குடைய குரு 4-ல் உச்சம் பெற்று 10-ஆம் இடத்தைப் பார்ப்பதும், 10-க்குடைய சனி 9-க்குடைய குருவைப் பார்ப்பதும் தர்மகர்மாதிபதி யோகம் என்பதே காரணம்.

அக்டோபர்


இம்மாதம் கிரகநிலைகள் அனுகூலமாக இருப்பதால் உங்கள் விருப்பம்போல் எல்லாம் நடக்கும். 4-ஆம் இடத்து உச்ச குருவை தனுசு செவ்வாயும் உச்ச சனியும் பார்ப்பது யோகம். ஏற்கெனவே குறிப்பிட்டது போல ராசிநாதன் சம்பந்தத்தால் உச்சனை உச்சன் பார்த்த தோஷம் நீங்கும். தொடுக்கும் காரியங்கள் யாவும் தோல்வியின்றி தொய்வின்றி வெற்றிபெறும். கொடுக்கல்- வாங்கல் சரளமாக இருக்கும். வாக்கு நாணயம் காப்பாற்றப்படும். குடும்பத்துக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்கள் வாங்கலாம். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியான நிகழ்ச்சிகள் இடம்பெறும். 

நவம்பர்


மாத முற்பகுதி வரை சூரியனும் சனியும் 7-ல் இருப்பது குற்றமானாலும், கடகத்தில் வக்ர குரு உச்சம் பெற்று கேந்திரம் பெறுவதால் தோஷம் நிவர்த்தி. குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகளும், கணவன்- மனைவிக்குள் சிறுசிறு கருத்துவேறுபாடுகளும் உருவானாலும், அவை பாதிக்காது. அது ஊடல்தான்; வாடல் இல்லை. நீரடித்து நீர் விலகாது. வள்ளுவர் சொன்னதுபோல "ஊடுதல் காமத்துக்கு இன்பம்.' மனைவியின் பேரில் சிலர் அசையாச் சொத்துகள் வாங்கலாம் அல்லது பொன், பொருள் சேர்க்கை ஏற்படலாம். 

டிசம்பர்


கார்த்திகை 15-ல் (டிசம்பர் 1-ல்) குருப்பெயர்ச்சி. மார்கழி 1-ல் (டிசம்பர் 16-ல்) சனிப்பெயர்ச்சி. 4-ல் உள்ள குரு 5-ஆம் இடத்துக்கு மாறி மேஷ ராசியை பார்க்கிறார். துலாச் சனி மேஷ ராசிக்கு 8-ல் சனி அட்டமச் சனியாக மாறுவார். அரசு வேலையில் இருப்போருக்கு தேவையற்ற இடப்பெயர்ச்சியும் பிரச்சினைகளும் ஏற்படலாம். பொருளாதாரத்தில் அல்லது சொந்தத் தொழில் துறையில் சங்கடங்களும் சஞ்சலங்களும் தோன்றி மறையும். மதுரை அருகில் மாணிக்கவாசகர் பிறந்த ஊரான திருவாதவூர் சிவன் கோவிலில் கால பைரவரும் சனீஸ்வரரும் அருகருகே இருக்கிறார்கள். சனிபகவானின் குருநாதர் பைரவர். இங்குசென்று வழிபடவும். 

அஸ்வினி நட்சத்திரக்காரர்களுக்கு:


2014-ஆம் வருடம் திரிஜென்ம நட்சத்திரத்தில் (மூலம்) பிறப்பதால், செல்வாக்கும் சீரும் சிறப்பும் உண்டாகும். தேக சுகமும் சௌக்கியமும் உண்டாகும். பூர்வ புண்ணிய பாக்கியம் பெருகும். கும்பகோணத்துக்கு முன்னால், சுவாமிமலை போகும் பாதையில் திருவலஞ்சுழி என்னும் தலம் உள்ளது. அங்குள்ள சுவேத விநாயகரை வழிபட, காரியத்தடை விலகி வெற்றியாக கை கூடும்.

பரணி நட்சத்திரக்காரர்களுக்கு:


2014-ஆம் வருடம் 9-ஆவது பரம மைத்ர (அதிநட்பு) தாரையில் உதயமாவதால் பொருளாதார மேம்பாடும், வாழ்க்கையில் பிடிப்பும், ஆர்வமும் அக்கறையும் பொறுப்பும் உடையதாக இருக்கும். மகிழ்ச்சியும் திருப்தியும் உண்டாகும். இந்த ஆண்டில் எதிர்கால இனிய வாழ்க்கைக்கு நல்ல அஸ்திவாரம் அமையும். கும்பகோணம்- சூரியனார் கோவில் அருகில் சுக்கிரன் தலம் கஞ்சனூர் உள்ளது. அங்கு வெள்ளிக்கிழமை சென்று வழிபடவும்.

கார்த்திகை நட்சத்திரக்காரர்களுக்கு:


2014-ஆம் வருடம் மைத்ர (நட்பு) தாரையில் (8-ஆவது) பிறப்பதால், பொதுவாக 2014-ல் உங்களுக்கு தைரியமும் நண்பர்களின் உதவியும் சகோதர ஒற்றுமையும் மனைவி, மக்கள், குடும்பச் சூழ்நிலையில் மனநிறைவும் மகிழ்ச்சியும் உண்டாகும். கும்பகோணம் ஆடுதுறை அருகில் சூரியனார் கோவில் சென்று ஞாயிறன்று வழிபடவும். 

ரிஷபம் (கிருத்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசீரிஷம் 2-ஆம் பாதம் முடிய) பொதுப்பலன்கள்

ரிஷபம்
(கிருத்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசீரிஷம் 2-ஆம் பாதம் முடிய)

பொதுப்பலன்கள்
ஆங்கிலப் புதுவருடம் 2014- உங்கள் ரிஷப ராசிக்கு 5-ஆவது லக்னம் கன்னியிலும், 8-ஆவது ராசி தனுசு ராசியிலும் பிறக்கிறது. ரிஷப ராசிக்கு 8-வது ராசி என்பதால் இந்த வருடம் உங்களுடைய ஆரோக்கியம், தேக சௌக்கியத்துக்கு சில கெடுதல்களை ஏற்படுத்தினாலும், வருட ராசிநாதன் குரு 2-ல் இருந்து 8-ஆம் இடம் தனுசு ராசியைப் பார்ப்பதால் தோஷம் விலகும். மேலும் ரிஷப ராசிக்கு ராஜயோகாதிபதி சனி உச்சம் பெற்று அவரும், 6-ல் உள்ள ராகுவும் தனுசு ராசியைப் பார்ப்பதால், 8-ஆம் இடத்துக் கெடுதல்கள் உங்களை அணுகாது. அதுமட்டுமல்ல; 7, 12-க்குடைய செவ்வாயும் வருட லக்னமான கன்னியில் (5-ல்) நின்று 8-ஆம் இடத்தைப் பார்ப்பதாலும் ஆயுள், ஆரோக்கியம் ஆகியவற்றுக்கு கேடு கெடுதியில்லை.

அதேசமயம் 8-ஆம் இடம் என்பது அகௌரவம், அபகீர்த்தி, விபத்து, பீடை, விசனம் ஆகியவற்றைக் குறிக்கும் இடம் என்பதால், ஏதோ ஒரு வகையில் உங்களுக்கு எதிரிகளால் இடையூறுகளும் பிரச்சினைகளும் ஏற்படத்தான் செய்யும். உங்கள் வளர்ச்சியிலும் செல்வாக்கிலும் சாதனையிலும் பொறாமை கொண்டவர்கள் புழுதிவாரித் தூற்றினாலும், உங்கள் பெருமையும் திறமையும் புகழும் எந்த வகையிலும் குறையாது; பாதிக்காது! "திட்டத்திட்ட திண்டுக்கல் - வைய வைய வைரக்கல்' என்று வேடிக்கையாகச் சொல்லுவார்கள்! கரிக்கட்டைக்கு பட்டை தீட்டமாட்டார்கள். நீங்கள் வைரம். அதனால் வைரத்துக்குத்தான் பட்டை தீட்டுவார்கள். அதனால் போட்டியாளர்களின் பொறாமைப் பேச்சுக்கள் உங்களுக்கு பட்டை தீட்டுவதாக கருதிக்கொண்டால் ஜொலிப்பீர்கள்- கேரட் மதிப்பு கூடிவிடும்! தங்கத்தை மெருகு கொடுக்க தணலில்போட்டு வாட்டுவது போல எண்ணிக்கொள்ளுங்கள்!

2014- எண் கணிதப்படி 7- கேதுவின் எண். கேது ராசிக்கு 12-ல் மறைந்திருந்தாலும் மகரச் சுக்கிரனுக்கு 4-ல் இருக்கிறார். ராசிநாதன் சுக்கிரன் 9-ல் இருக்க 9-க்குடைய சனி ராசிக்கு 6-ல் இருக்க சுக்கிரனும் சனியும் பரிவர்த்தனை. 6-ஆம் இடம் தொழில் ஸ்தானமாகிய 10-ஆம் இடத்துக்கு பாக்கியஸ்தானம். எனவே உங்களுடைய தொழில், வியாபாரம், வேலை, உத்தியோகம் எல்லாவற்றிலும் முன்னேற்றமும் வெற்றியும் லாபமும் இந்த வருடத்தில் அற்புதமாக இருக்கும்.

சனி, ராகு- கேது சம்பந்தப்பட்டதால், படித்து முடித்து வேலை தேடும் வாலிபர்கள் குவைத்- அரபு நாடுகளுக்கும், மலேசியா, சிங்கப்பூர் போன்ற கிழக்கு நாடுகளுக்கும் நைஜீரியா, அமெரிக்கா போன்ற மேலைநாடுகளுக்கும் போய் வேலை பார்க்கலாம். வாய்ப்புகள் தேடிவரும். வருவதைப் பயன்படுத்திக் கொள்ளவும். ஏற்கெனவே வெளிநாடுகளில் வேலைபார்ப்போருக்கு இந்தப் புதுவருடம் கூடுதல் சம்பளம் - அதிக நன்மைகள்- பலன்களை உண்டாக்கும். சிலர் வெளிநாட்டிலேயே வேறு இடங்களுக்கு மாறலாம்.

4-ஆம் இடத்துக்கு (சிம்மத்துக்கு) திரிகோணத்தில் (5-ல்) தனுசு ராசியில் சூரியன், புதன், சந்திரன் சேர்க்கையாகவும், குரு, செவ்வாய், சனி, ராகு பார்வையும் கிடைப்பதால் கடன் வாங்கி வீடு, மனை, பிளாட் வாங்கலாம். டூவீலர் அல்லது கார் வாங்கும் யோகமும் உண்டு. படிக்கும் மாணவர்களுக்கு 2014-ல் மேற்படிப்பு, பட்டம் வாங்கும் யோகமும்- தடையில்லாத கல்வியும் உண்டாகும். தாயின் அன்பும் ஆதரவும் நோயற்ற வாழ்வும் தேக ஆரோக்கியமும் உண்டு. வாயும் வயிறுமாக இருக்கும் பெண்கள் "தாய் வேறு சேய் வேறு' என்று சுகப்பிரசவம்- மக்கட் பேறு அடையலாம். 

வருடத் தொடக்கத்தில் 2-ல் உள்ள குரு ஜூன் மாதம் 13-ஆம் தேதி 3-ல் கடகத்தில் உச்சம் அடைவார். குருவுக்கு 3-ஆம் இடம் சுமாரான இடம் தான் என்றாலும், ரிஷப ராசிக்கு 8, 11-க்குடைய குரு தைரிய ஸ்தானத்தில் உச்சம் பெற்று 7-ஆம் இடத்தையும், 9-ஆம் இடத்தையும், 11-ஆம் இடத்தையும் பார்க்கிறார். அதனால் திருமணமாகவேண்டிய ஆண்களுக்கும், பெண்களுக்கும் திருமணத் தடை விலகி நல்ல மனைவி- நல்ல கணவன் அமைவார். திருமணமாகி ஒருவரையொருவர் புரிந்துகொள்ளாமல் பிரிந்து வாழும் தம்பதிகளும், இக்காலகட்டத்தில் ஒன்றுசேர்ந்து நன்று வாழலாம். இன்றுபோல் என்றும் இன்பம் துய்க்கலாம்.

நல்ல கணவன் அமைய பெண்கள் பார்வதி சுயம்வரகலா ஹோமமும், நல்ல மனைவி அமைய ஆண்கள் கந்தர்வ ராஜஹோமமும் செய்துகொள்வது அவசியம். அதேபோல பிரிந்து வாழும் தம்பதிகள் இணைந்து வாழ பதிகமன ஹோமமும், சதிகமன ஹோமமும் செய்து கலச அபிஷேகம் செய்து கொள்ளலாம். 

9-ஆம் இடத்தை குரு பார்ப்பதன் பலனாக தகப்பனார் அல்லது பாட்டனார் வகையில் பூர்வீகச் சொத்துப்பிரச்சினைகள் இருந்தால் கடக குருப்பெயர்ச்சிக்கு பிறகு பிரச்சினைகள் எல்லாம் சுமுகமாகத் தீர்ந்து அனுபவத்துக்கு வரும். ராஜபாளையத்திலிருந்து தென்காசி பாதையில் வாசுதேவநல்லூருக்கு பக்கத்தில் தாருகாபுரம் என்ற ஊர் உள்ளது. அங்கு தலைவன்கோட்டை ஜமீனுக்குப் பாத்தியதைப்பட்ட மத்தியஸ்தநாதர் கோவில் இருக்கிறது. மிகப்பழமையான சிவன்கோவில். அம்பாள் அகிலாண்டேஸ்வரி. சிவனைச் சுற்றிவரும் பிராகாரத்தில் தட்சிணாமூர்த்தி நவகிரங்களோடு காட்சியளிக்கிறார். இப்படி நவகிரக தட்சிணாமூர்த்தி இங்கும் உண்டு; தஞ்சைமாவட்டம் கும்பகோணம் பக்கமும் உண்டு. நவகிரக தோஷம் இருந்தால் மாறிவிடும். சென்னையிலிருந்து ஆந்திரா போகும் பாதையில் பெரியபாளையம், ஊத்துக்கோட்டை வழி சுருட்டப்பள்ளி என்ற ஊரில் சிவன்கோவிலில் தாம்பத்திய தட்சிணாமூர்த்தி சந்நிதி இருக்கிறது. தட்சிணாமூர்த்தி மடியில் அம்பாளை வைத்திருப்பதுபோல விசேஷ விக்கிரகம். இவரை வழிபட்டால் குடும்பத்தில் கணவன்- மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் இருந்தால் மறைந்துவிடும்.

கடகம் 3-ஆம் இடம். அங்கு உச்சம் பெறும் குரு உங்களுக்கு மனோதைரியத்தையும், எதிர்காலத்தைப் பற்றிய நம்பிக்கையையும், உற்றார். உறவினர்கள், உடன்பிறப்புகளின் உதவியையும் ஆதரவையும் தருவார்.

11-ஆம் இடத்தை குருபார்ப்பதால், எதிர்பாராத வெற்றி, லாபம், முன்னேற்றத்தையும் ஏற்படுத்தும். வழக்கு, வியாஜ்ஜியங்கள் இருந்தால் அதில் உங்களுக்கு சாதகமான அனுகூலமான தீர்ப்பு கிடைக்கும். மூத்த சகோதர- சகோதரி வகையில் நன்மை உண்டாகும். சிலர் எப்போதோ பல வருடங்களுக்கு முன்பு- விளையாட்டாக ஊருக்கு ஒதுக்குப்புறமான இடத்தில் காலி மனையை குறைந்த விலைக்கு வாங்கிப்போட்டிருப்பார்கள். அன்று அதை வாங்கும்போது குடும்பத்தில் உள்ளவர்கள் "வேஸ்ட்' என்று விமர்சனம் செய்தார்கள். இப்போது அதையொட்டி நான்கு வழிப்பாதை (பைபாஸ் ரோடு) வரப்போவதால், அந்த இடத்தின் மதிப்பும் மவுசும் கூடிவிடும். அதனால் உங்கள் இடத்தில் பெட்ரோல் பங்க் அமைக்கவும் அல்லது ரெஸ்ட்டாரண்ட் கட்டவும் திட்டமிட்டு உங்களை அணுகலாம். ஒன்றுக்கு பத்துமடங்கு வாங்கிய விலைக்குமேல் அதை "ஆஃபர்' செய்யலாம். அதனால் நல்ல லாபம் கிடைக்கலாம். அல்லது அந்தத் திட்டத்தை நீங்களே நிறைவேற்ற முயற்சிக்கலாம். 

இப்படித்தான் கோவையில் ஒரு  கோடீஸ்வரர் மெயின் ரோட்டில் கோடிக்கணக்கில் செலவு செய்து ஒரு ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் (மால்) கட்டினார். அவர் சொன்ன தொகைக்கு மேல் ஒரு கோடி ரூபாய் அதிகம் கொடுத்து ஒரு அரசியல்வாதி விலைக்கு வாங்கிவிட்டார். பல தலைமுறைக்கு பயன்படும் திட்டமாகிவிட்டது. விற்றவருக்கும் யோகம்; வாங்கியவருக்கும் யோகம்! அதிர்ஷ்ட லட்சுமி பார்வை கிடைக்கும்போது அபரிமிதமான யோகம் தேடிவரும். அதை யாராலும் தடுத்து நிறுத்தமுடியாது. அதைத்தான் விவேகானந்தர் "ஒருவருக்கு கிடைக்கும் என்ற அமைப்பு இருந்தால் அதைத் தடுக்க எந்த சக்தியாலும் முடியாது' என்றார்.

இந்த வருடம் 13-6-2014-ல் குருப்பெயர்ச்சி வருகிறது. ஜூன் மாதம் 21-ஆம் தேதி ராகு -கேது பெயர்ச்சியும் வருகிறது. கடந்த ஒன்றரை வருடகாலமாக துலா ராசியில் இருந்த ராகு- இப்போது கன்னி ராசிக்கும், மேஷத்தில் இருந்த கேது மீன ராசிக்கும் மாறுவார்கள்.

ரிஷப ராசிக்கு 5-ல் ராகு- 11-ல் கேது இருப்பது ஒரு திருப்புமுனைதான். உங்கள் மனதில் அரித்துக்கொண்டிருந்த பல பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்கும். 5-ஆம் இடம் பிள்ளைகள் ஸ்தானம். பிள்ளைகள் வகையில் திருமணம், வாரிசு, தொழில் உயர்வு, வாழ்க்கை முன்னேற்றம் போன்ற நல்ல காரியங்கள் எல்லாம் தடைப்பட்டு தாமதப்பட்டு கலங்கிய பெற்றோர்களுக்கு, சுபமங்கள சேதிகள் கைகூடி மகிழ்ச்சியை ஏற்படுத்தும். அதேபோல பிள்ளைகளுக்குள் "ஈகோ' உணர்வும், நீயா நானா என்ற போட்டி இருந்த நிலையும் மாறி சுமுகத் தீர்வு ஏற்படும். இதெல்லாம் கடகத்துக்கு குருமாறியதும் நடக்கும். கடக உச்ச குரு 9-ஆம் இடத்தில் உள்ள கேதுவை பார்ப்பதால் அந்த பலன் ராகுவுக்கும் சேரும். 

குறிப்பாக ராகு தசை, கேது தசை அல்லது அவரவர் புக்தி நடந்தாலும் அனுகூலமான பலன்களை எதிர்ப்பார்க்கலாம். ராகு- கேது பெயர்ச்சிக்கு காளஹஸ்தி, தென்காளஹஸ்தி எனப்படும் உத்தமபாளையம், கும்பகோணம் அருகில் திருநாகேஸ்வரம், வாலாஜாபேட்டை தன்வந்திரி ஆரோக்கிய பீடம், காரைக்குடி நாகநாதர் கோவில், நயினார் கோவில்- ஆகிய இடங்கள் சென்று வழிபடலாம். 

மாதவாரிப் பலன்கள்


ஜனவரி


சுக்கிரன் மகரம், தனுசுவில் வக்ரகதியாக சஞ்சாரம். சாதக பாதகங்களும், ஏற்ற இறக்கங்களும் உள்ள மாதம். அடிப்படை வாழ்க்கை வசதிகளுக்கு எந்த குறையும் இருக்காது. போட்டி, பொறாமைகளும், எதிர்ப்பு இடையூறுகளும் தணிந்துவிடும். விரோதிகளும் பணிந்துவிடுவர். நீண்டநாள் முயற்சி கனிந்து வரும். வெற்றி தேவதை மாலை அணிவித்து வரவேற்கும். தேக ஆரோக்கியத் தில் மட்டும் தீவிர கவனம் தேவைப்படும். கூடியவரை புதிய திட்டங்களையும் புதிய முயற்சிகளையும் தள்ளிப் போடவும். அல்லது வேகமில்லாமல் நிதானமாகச் செயல்படவும். (குரு வக்ரம்).

பிப்ரவரி


இந்த மாதம் உங்களுக்கு தொழில் முயற்சிகளில் ஆர்வமும் வேகமும் உண்டாகும். உங்கள் வேகத்துக்கேற்ற வகையில் பயனும் பலனும் உண்டாகும். குறுகிய காலத்திட்டங்களில் இறங்கி நிறைய சம்பாதிக்கும் வழிமுறைகளைப் பின்பற்றுவீர்கள். ஆனால் நேர்மையான வழியில்தான் சம்பாத்தியம் இருக்கும். முறைகேடான வழிகளில் இறங்கமாட்டீர்கள். அதர்ம வழியில் வரும் செல்வம் எப்போதும் ஆபத்தைத்தான் உண்டாக்கும். அதனால் அதைத் தவிர்க்கவும். இந்த மாதமும் குருவின் வக்ரகதி தொடருகிறது. நிதானம் தேவை. 

மார்ச்


மிதுனத்தில் உள்ள குரு மூன்று மாதத்துக்குமேல் வக்ரமாக இருக்கிறார். அதனால் உங்களுக்கு பொருளாதாரத்தில் சிக்கலும் பற்றாக்குறையும் நெருக்கடியும் காணப்படலாம். வாக்கு நாணயத்தைக் காப்பாற்றுவதிலும் கஷ்டமாகத் தெரியலாம். ஆகவே யாருக்கும் எந்த வாக்குறுதியும் கொடுக்காமல், ஆகட்டும் பார்க்கலாம் என்ற காமராஜர் பாலிஸியைக் கடைப்பிடித்தால், கௌரவத்துக்கும் புகழுக்கும் கேடுவராது! இந்த மாதம் 12-ஆம் தேதி குரு வக்ரநிவர்த்தி அடைவதால் சொல்லும் செயலும் அற்புதமாக இருக்கும். செய்வதைத்தான் சொல்லுவீர்கள்; சொல்லுவதைத்தான் செய்வீர்கள். குருவின் வக்ரநிவர்த்திக்கு குச்சனூர் வடகுரு ஸ்தலம் சென்று வழிபடலாம்.

ஏப்ரல்


இந்த மாத மத்தியில் தமிழ்ப் புதுவருடம் ஜயவருடம் பிறக்கிறது. 14-4-2014 திங்கள்கிழமை காலை 6.12 மணி அளவில் தமிழ் வருடப் பிறப்பு மேஷ லக்னம், அஸ்த நட்சத்திரம், கன்னி லக்னம், தமிழ்ப் புதுவருடப் பிறப்பு உங்களுக்குமிக அனுகூலமாகவே அமைகிறது. தொழில் முன்னேற்றம், வேலையில் உயர்வு, சம்பாத்தியம், சேமிப்பு கூடுதல்! உங்கள் ராசிக்கு 12-ஆவது லக்னத்திலும், 5-ஆவது ராசியிலும் தமிழ்ப்புத்தாண்டு பிறப்பதால், குடும்பத்தில் சுபமங்களச் செலவுகள் உண்டாகும். நீண்டகாலக் கனவுகள் கைகூடும். திட்டங்கள் வெற்றியடையும். அவரவர் விருப்பப்படி இஷ்ட தெய்வ ஆலயங்கள் சென்று வழிபடவும். தஞ்சாவூர்- ஒரத்தநாடு வழி பரிதியப்பர் கோவில் சென்று பாஸ்கரேஸ்வர சுவாமியை வழிபடலாம். சூரியன்- சிவனை வழிபட்டு சாப விமோசனம் பெற்ற தலம். 

மே


இந்தமாத முற்பகுதியில் சிறுசிறு பிரச்சினைகளும் குழப்பமும் ஏற்பட்டாலும், உங்களுடைய பிரார்த்தனையும் தெய்வ வழிபாடும் உங்களைக் காப்பாற்றும். பிச்சைக்காரனில் இருந்து கோடீசுவரன் வரை யார்தான் பிரச்சினை இல்லாமல் இருக்கிறார்கள். எல்லாருக்குமே பிரச்சினைதான். முற்றும் துறந்த முனிவர்களுக்கும் பிரச்சினை! காவியணிந்த சன்யாசிகளுக்கும் பிரச்சினை. ஆனால் எல்லாப் பிரச்சினையும் இல்லாமல் காத்து அருளக்கூடியவர் கடவுள் ஒருவரே! மற்றபடி உறவோ சொந்தமோ அதிகாரிகளோ பதவியோ பணமோ நமது பிரச்சினைகளுக்குத் தீர்வு தராது. இறைவன் ஒருவனே நமது தேவைகளைப் பூர்த்திசெய்யக் கூடியவன். 

ஜூன்


இம்மாதம் இரண்டு கிரகப்பெயர்ச்சி! 13-6-2014-ல் குருப்பெயர்ச்சி. 2-ல் உள்ள குரு 3-ல் கடகத்தில் உச்சமாவார். 7-ஆம் இடம், 9-ஆம் இடம், 11-ஆம் இடங்களைப் பார்க்கப் போவதால் திருமணத்தடை விலகும். நல்ல மணவாழ்வு அமையும். வாரிசு யோகமும் உருவாகும். பூர்வ புண்ணிய பாக்கியம் பெருகும்! தொழில், லாபம், பதவி முன்னேற்றமும் உண்டாகும். அடுத்து 21-6-2014-ல் ராகு- கேது பெயர்ச்சி. ரிஷப ராசிக்கு ராகு- கேது மாறும் இரண்டு இடங்களும் அற்புதமான இடங்கள். உங்கள் கனவுகள் நனவாகும். திட்டங்கள் வெற்றியடையும். எண்ணங்கள் ஈடேறும். தேடியவை கிடைக்கும். குருப்பெயர்ச்சிக்கு குரு ஸ்தலமும், ராகு- கேது பெயர்ச்சிக்கு ராகு ஸ்தலமும் சென்று வழிபடவும்.  

ஜூலை


தேவைக்கேற்ற அளவு பண வரவு இருந்தாலும், அதற்குமேல் தேவைகளும் கூடிவிடும். அதனால் பற்றாக்குறையை சமாளிக்க அறிந்தவர் தெரிந்தவர்களிடம் கடன் வாங்கும் அவசியமும் உண்டாகும். மகள்- மாப்பிள்ளை வகையில் அல்லது மகன்- மருமகள் வகையில் மகிழ்ச்சியும் சுபச்செலவுகளும் உண்டாகும். அவர்களின் புதுமுயற்சி பட்ஜெட்டுகளில் ஏற்படும் பற்றாக்குறையைச் சரிக்கட்ட உங்கள் உதவியை நாடலாம். நீங்களும் மனமுவந்து உதவிசெய்யலாம். உங்கள் வசம் கையிருப்பு ரொக்கம் இல்லாவிட்டாலும் நகைகளை வைத்தோ ஜாமீன் பொறுப்பேற்று கடன் வாங்கியோ உதவி செய்வீர்கள். தங்க நகை என்பது எப்போதும் தங்கும் நகையல்ல- அடகு வைக்கப் பயன்படப் பங்குபெறும் நகைதான். 

ஆகஸ்டு


இந்த மாதம் எதிர்பாராத மருத்துவச் செலவுகள் உங்களை முற்றுகையிடும். உங்களுக்கோ அல்லது குடும்பத்தில் மற்றவர்களுக்கோ வைத்தியச் சிகிச்சை செலவுகள் ஏற்படலாம். சகோதர உறவுகளில் சில வருத்தமூட்டும் சம்பவங்கள் இடம்பெறும். குடும்பத்தில் பெரியவர்களின் சொல்லுக்கு கட்டுப்பட்டு, விட்டுக்கொடுத்து நடப்பது நல்லது. விட்டுக்கொடுப்பவன் கெட்டுப்போக மாட்டான் என்பது விதி. சொந்த பந்தங்களில், உறவு முறையில், நீரடித்து நீர் விலகாது என்பதை உணர்ந்து செயல்பட்டால் பகையில்லை- பழிவாங்கும் நடவடிக்கையும் இல்லை. எது எப்படியிருந்தாலும் பொருளாதாரம் நிறைவாக இருப்பதால் எல்லா பிரச்சினைகளையும் சமாளித்து விடலாம்.  

செப்டம்பர்


இம்மாதம் சுக்கிரன் சிம்ம ராசியில் சஞ்சாரம். மாதக்கடைசியில் கன்னியில் நீசம்! பொருளாதாரம் வரவு- செலவு திருப்திகரமாக இருக்கும். நிலபுலங்களால் ஆதாயம் எதிர்பார்க்கலாம். ரியல் எஸ்ட்டேட் தொழில் சிறப்பாக அமையும். நல்ல திருப்பங்கள் உண்டாகும். புதிய நண்பர்களின் அறிமுகமும் அவர்களால் சில முக்கிய உதவிகளும் ஆதரவுகளும் உண்டாகும். ராஜாங்க காரியங்களிலும் உங்களுக்கு சாதகமான சூழ்நிலை உண்டாகும். வியாபாரம் கைகொடுக்கும். வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். கும்பகோணம் குடவாசல் வழி- சேங்காலிபுரம் சென்று தத்தாத்ரேயரை வழிபட்டால் வரவேண்டிய பணம் வசூலாகும். ஆலயத்தொடர்புக்கு: நாகசுப்பிரமணியம், செல்: 94872 92481.

அக்டோபர்

இந்த மாதம்  புதுமுயற்சிகளில் ஈடுபடாமல் மாமூல் பணிகளில் முழுமையான கவனம் செலுத்தலாம். எதிலும் அகலக்கால் வைக்காமல் நிதானமாக, கருத்தாகச் செயல்பட்டால் சிறு நஷ்டம்கூட வராமல் பாதுகாக்கப்படலாம். லாபம் வந்தாலும் வராவிட்டாலும் நஷ்டம் வராமல் இருப்பதே வியாபாரம்! அரசியல்வாதிகளுக்கு இது ஆகாத மாதம். கலைத்துறையினருக்கு கணிப்பு மேலோங்கும் மாதம். பணியாளர்களுக்கு இனிமையான மாதம். மனைவியின் ஒத்துழைப்பும் ஆலோசனையும் உங்கள் எதிர்காலத்துக்கு நல்ல அஸ்திவாரமாக அமையும். பிள்ளைகளின் வளர்ச்சியில் அக்கறை காட்டுவீர்கள். 

நவம்பர்


இந்த மாதம் குருவின் சஞ்சாரம் மிகவும் அனுகூலமாக கைகொடுத்து உதவும். சிலர் "ஈகோ' உணர்வாலும் அல்லது அனுசரிப்புத் தன்மை இல்லாததாலும் உங்கள் அருமை பெருமையை உணர்ந்து உங்களைத் தேடிவந்து உறவு கொண்டாடலாம். நீங்களும் நடந்த நிகழ்ச்சிகளை மறந்து கடந்த காலத்தை மனதில் வைத்துக்கொள்ளாமல் பெருந்தன்மையோடு   நேசக்கரம் நீட்டி ஏற்றுக்கொள்ளலாம். தொழிலதிபர்களும் வியாபாரிகளும் உற்சாகமாகச் செயல்பட்டு உன்னதமான லாபங்களை சேமிக்கலாம். தேக ஆரோக்கியத்தில் தெளிவு எதிர்பார்க்கலாம்.

டிசம்பர்


இந்த மாதம் சனிப்பெயர்ச்சி. துலாச் சனி- விருச்சிக ராசிக்கு மாறுவார். சனிப்பெயர்ச்சி அடுத்துள்ள இரண்டரை வருடமும் உங்களுக்கு அனுகூலமாகவே அமையும். குருவின் சாரத்தில் (விசாகத்தில்) சனி இருப்பதாலும் கடக குருவின் பார்வையைப் பெறுவதாலும் ஏழாமிடத்துச் சனி உங்களுக்கு நல்ல பலனையே தரும். பொதுவாக டிசம்பரில் பிற்பகுதி 15 நாள்கள் சனிப்பெயர்ச்சி, குருப்பெயர்ச்சி இவற்றால் பெரிய மாறுதல்கள் எதுவும் நடந்துவிடப் போவதில்லை. வழக்கம்போல எல்லாம் நடக்கும். ஜாதக தசாபுக்திகளை பொறுத்துத்தான் நல்லதோ கெட்டதோ நடக்கும். இருந்தாலும் சனிப்ரீதியாகவும் குருப்ரீதியாகவும் குச்சனூர் சென்று வரலாம். திருநள்ளாறு போகலாம். ஆலங்குடி போகலாம். 

கார்த்திகை நட்சத்திரக்காரர்களுக்கு:


2014-ஆம் வருடம் மைத்ர தாரையில் (நட்பு தாரையில்) 8-ஆவது நட்சத்திரத்தில் பிறப்பதால், உங்களுக்கு தைரியமும், நண்பர்களின் உதவியும், மனைவி, மக்கள், குடும்பச் சூழ்நிலையில் மனநிறைவும் மகிழ்ச்சியும் உண்டாகும். சகோதர சகாயம் ஏற்படும். கும்பகோணம் ஆடுதுறை அருகில் சூரியனார் கோவில் சென்று ஞாயிறன்று வழிபடவும். 

ரோகிணி நட்சத்திரக்காரர்களுக்கு:


2014-ஆம் ஆண்டு ரோகிணிக்கு 16-ஆவது நட்சத்திரம். (மூலம்) 7-ஆவது வதை தாரையில் பிறப்பதாலும், ரிஷப ராசிக்கு 8-ஆவது ராசியில் வருடம் பிறப்பதாலும் இந்த வருடம் உங்களுக்கு சோதனை ஆண்டாக இருக்கலாம். சில கௌரவப் பிரச்சினைகளை சந்திக்கக் கூடும். காரியத்தடை, தாமதம், ஏமாற்றங்களைத் தவிர்க்க பிரதோஷ வழிபாடு அவசியம். சிவகங்கையில் பஸ் ஸ்டாண்ட் பின்புறம் சந்திரன் வழிபட்டு சாப விமோசனம் பெற்ற சசிவர்ண ஈசுவார் கோவிலில் திங்கள்கிழமை வழிபடலாம்.

மிருகசீரிட நட்சத்திரக்காரர்களுக்கு:


2014-ஆம் ஆண்டு மூல நட்சத்திரத்தில் பிறக்கிறது. அது மிருகசீரிடத்துக்கு 15-ஆவது நட்சத்திரம். 6-ஆவது ஸாதக தாரை- சுபதாரை. எனவே இந்த வருடம் உங்களுக்கு எல்லாம் சாதகமாகவும் அனுகூலமாகவும் அமையும். மேலும் சந்திரனுக்கு 7-ல் குரு நிற்பதால் கெஜகேசரி யோகம். ஆகவே சத்ரு, போட்டி, பொறாமை எல்லாம் விலகியோடிவிடும். பகையாளிகள் எல்லாம் பயந்து ஒதுங்கிவிடுவார்கள். அல்லது சரணடைந்து சமாதானமாகி விடுவார்கள். வைத்தீஸ்வரன் கோவில் சென்று முத்துக்குமார சுவாமியை வழிபட சத்துரு ஜெயம் உண்டாகும். 

மிதுனம் (மிருகசீரிஷம் 3-ஆம் பாதம் முதல், திருவாதிரை, புனர்பூசம் 3-ஆம் பாதம் முடிய) பொதுப்பலன்கள்

மிதுனம்
(மிருகசீரிஷம் 3-ஆம் பாதம் முதல், திருவாதிரை, புனர்பூசம் 3-ஆம் பாதம் முடிய)

பொதுப்பலன்கள்
ஆங்கிலப் புதுவருடம் 2014 கன்னி லக்னம், தனுசு ராசி, மூல நட்சத்திரத்தில் பிறக்கிறது. மிதுன ராசிக்கு 4-ஆவது லக்னம்- 7-ஆவது ராசி- வருட லக்னாதிபதி புதன்- உங்கள் ராசியாதிபதியும் புதன். உங்கள் ராசிக்கு இரண்டும் கேந்திரம்! எனவே இந்த வருடம் உங்களுக்கு இனிய வருடமாகவும் ஏற்றமிகு வருடமாகவும் அமையும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

வருடத் தொடக்கத்தில் மிதுன ராசிநாதன் புதனும், வருட ராசிநாதன் குருவும் பரிவர்த்தனையாக இருப்பதும் தனிச்சிறப்பு. குரு மிதுனத்திலும் புதன் தனுசுவிலும் பரிவர்த்தனை. பொதுவாக ஜனன ஜாதகத்தில் பரிவர்த்தனை கிரகங்கள் இருந்தாலும் அல்லது தர்மகர்மாதிபதி யோகம் இருந்தாலும் அந்த ஜாதகத்தில் எந்த கிரகங்கள் சோதனையைத் தந்தாலும் அவற்றைக் கடந்து சமாளிக்க முடியும். வலுவாக சாதனை புரியலாம். இழந்த பதவி, செல்வங்களை மீண்டும் பெறலாம் என்பது பொது விதி!

2014-ல் மேற்சொன்ன இரண்டு யோகமும் உண்டு. குருவும் சனியும் பரிவர்த்தனை- மிதுன ராசிக்கு 9-க்குடைய சனியை 10-க்குடைய குரு பார்ப்பதால் தர்மகர்மிதிபதி யோகம். எனவே மற்ற ராசிக்காரர்களைவிட மிதுன ராசிக்குக்கும் கன்னி ராசிக்கும் 2014 சூப்பர் வருடமாக அமையும். 

ராசிநாதன் புதனை சனியும் செவ்வாயும் ராகுவும் பார்ப்பதும் சிறப்பு. கடந்த காலத்தில் வேலை- உத்தியோகத்தில், தொழில்துறையில் பல வகையிலும் நஷ்டப்பட்டவர்களுக்கும் கஷ்டப்பட்டவர்களுக்கும் இந்த வருடம் சொந்தத் தொழில் யோகமும், உத்தியோகத்தில் உயர்வும், முன்னேற்றமும் உண்டாகும். திருமணமாகாதவர்களுக்குத் திருமண யோகம், திருமணமானவர்களுக்கு வாரிசு யோகமும் உண்டாகும்.

7-ஆம் இடத்தை சனி, ராகு, செவ்வாய் பார்ப்பது குற்றம்தான் என்றாலும், மிதுன ராசிநாதனும் வருட லக்னாதிபதியுமான புதன் 7-ல் இருப்பதோடு, வருட ராசிநாதன் குரு பார்ப்பதால் தோஷம் நீங்குகிறது. அதேபோல் 5-ஆம் இடத்துக்கும் குருபார்வை இருப்பதோடு 5-க்குடைய சுக்கிரனும் 8-க்குடைய வரும் பரிவர்த்தனை யோகம்! அப்படியே திருமணத் தடையும் தாமதமும் இருந்தால், ஆண்கள் கந்தர்வராஜ ஹோமமும், பெண்கள் பார்வதி சுயம்வரகலா ஹோமமும் செய்து கொள்ளலாம்.

அதேபோல ஜாதகத்தில் புத்திர தோஷம் இருந்தால் வாஞ்சா கல்ப கணபதி ஹோமமும், புத்திர ப்ராப்தி ஹோமமும், சந்தான பரமேசுவர ஹோமமும்,  சந்தான கோபாலகிருஷ்ண ஹோமமும் செய்தால் வாரிசு யோகம் பெறலாம். கம்பத்தில் ஒரு நண்பர் செல்வந்தர். 16 வயதில் ஒரே ஆண் மகன். படிப்பில் மிகத் தெளிவு. திடீரென்று ஒருநாள் டூவீலர் விபத்தில் இறந்துவிட்டான். காரணம் பார்த்தபோது குடும்பத்தில் சமராகு தோஷம். அதன்பிறகு பள்ளத்தூரில் எனது குருநாதரிடம் சூலனிதுர்க்கா ஹோமமும் மேலே சொன்ன மூன்று புத்திர ப்ராப்தி ஹோமமும் செய்யப்பட்டது. அடுத்து (18 வருடங்களுக்குப் பிறகு) இன்னொரு ஆண் குழந்தை பிறந்து, அவன் இப்போது மருத்துவப்படிப்பு படிக்கிறான். அதனால் ஹோமத்திற்கு நல்லபலன் உண்டு என்பது அனுபவரீதியான உண்மை. இதுபற்றி தினசரி ஹோமம் நடக்கும் தன்வந்திரி பீட ஸ்தாபகர் யாகபுருஷர் "முரளிதர ஸ்வாமிகள் "அக்னி ஹோமங்கள் அல்லலைத் தீர்க்குமா' என்னும் தொடரை வாராவாரம் "பாலஜோதிடம்' வார இதழில் எழுதி வருகிறார்.

தொழில் காரகன் சனி- ராகுவோடு சேர்ந்து தொழில் ஸ்தானம் 10-க்கு 8-ல் இருப்பதால், சிலருக்கு தொழில், வேலை சம்பந்தமான பிரச்சினைகளும் சங்கடங்களும் இருக்கலாம். ஆனால் மிதுன குரு சனியையும் ராகுவையும் பார்ப்பதோடு, 2014 ஜூன் மாதம் கடகத்தில் குரு உச்சம் பெற்று தொழில் ஸ்தானம் மீனத்தைப் பார்க்கப்போவதால், தொழில் சம்பந்தப்பட்ட யோகங்கள் தோல்வியில்லாமல் நடக்கும். தொட்டது துலங்கும்!

சம்பளத்துக்கு இருப்போர் சொந்தத் தொழில் தொடங்கலாம். குறைந்த சம்பளத்தில் குமுறுகிறவர்கள் நிறைந்த சம்பளத்தில் வேலை மாறலாம். அல்லது வெளிநாடு போகலாம்; கை நிறைய சம்பாதிக்கலாம். வெளிநாட்டில் சேமித்த பணத்தைக்கொண்டு உள்ளூரில் வீடு, மனை, வாகன யோகங்களை அமைத்துக்கொள்ளலாம். தகப்பனார் காலத்திலிருந்தே சொந்தவீடு என்பது கனவு வீடாக இருந்த நிலைமாறி நனவாகும்; நிஜமாகும். என்.ஆர்.ஐ வகையில் வங்கிக்கடனும் வாங்கி வீட்டைக் கட்டலாம். 

நான் நினைவு தெரிந்த நாள் முதல் சுமார் 100 வீடுகளுக்கு மேல் மாறியவன். பொன்னமராவதி அருகில் பூமிநாத சுவாமி ஆரண வல்லியம்மன் கோவில் சென்று பூஜை செய்த பிறகு சொந்த இடம் வாங்கினேன். வெளிநாட்டில் வேலை செய்த இளையமகன் பேரில் வங்கிக்கடனும் கிடைத்தது. 70 வயதுக்குமேல் சொந்த வீட்டில் அமரும் பாக்கியம் கிடைத்தது. நீங்களும் செவலூர் சென்று பூமிநாதரை வழிபடலாம்.

மிதுன ராசிக்கு 4-ஆவது இடமான கன்னியில் 2014-ஆம் வருடம் பிறப்பதால், ஜாதக அமைப்பு நன்றாக இருந்தால் 2014-ல் உங்களுக்கு சொந்த வீடு, வாகன யோகம் அமைந்துவிடும்.

9-ஆம் இடம் பூர்வ புண்ணியஸ்தானம். அதற்குடைய சனி உச்சம் பெற்று 4-க்குடைய புதனைப் பார்ப்பதால் சிலர் பூர்வீக இடத்தை நல்ல விலைக்கு விற்று புதிய வீடு வாங்கலாம்; அல்லது கட்டலாம். பூமிகாரகன் செவ்வாயும் புதனைப் பார்க்கிறார்.

ஜென்மத்தில் குரு நிற்பதாலும், புதனும் சூரியனும் ஜென்ம ராசியைப் பார்ப்பதாலும் உங்களுடைய செல்வாக்கு மேன்மையடையும்; திறமை, கௌரவம், செயல்பாடு ஆகியவற்றுக்கு முக்கியத்துவமும் மதிப்பும் உண்டாகும். கலைத்துறையிலும், பொதுவாழ்க்கையிலும். ஆன்மிகத்துறை யிலும், அரசியலிலும் ஈடுபட்டுள்ளோருக்கு பாராட்டும் மரியாதையும் பரிசும் கிட்டும். புதன் ஜோதிடகாரகன் என்பதால், ஜோதிட சம்பந்தமான ஆய்வும் மேற்கொள்ளலாம். ஜோதிடராக பரிமளிக்கலாம். வாக்குபலிதத்திற்கு இஷ்ட தெய்வ உபாசனை மேற்கொள்ளலாம்.
அச்சுத் தொழிலுக்கும், மருந்து வகையறாவுக்கும் புதன் அதிபதியாவார். அதனால் பிரிண்டிங், மெடிக்கல் போன்ற துறையிலும், ஏஜென்ஸி கமிஷன் அடிப்படைத் தொழில் துறையிலும் ஈடுபடலாம். அதிர்ஷ்ட வாய்ப்புகள் வாசலைத் தேடிவந்து கதவைத் தட்டும். வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்வது உங்கள் பொறுப்பு!

7-ஆம் இடத்தை சனி, செவ்வாய், ராகு பார்ப்பதால், வாலிப வயதுடைய ஆண்களுக்கும் பெண்களுக்கும் காதல் திருமணம் அல்லது கலப்புத் திருமணம் நடக்க வாய்ப்புண்டு. 7-ஆம் இடத்தை 7-க்குடைய குருவே பார்ப்பதால், அது பெற்றோர் அல்லது பெரியோர் அனுமதியுடன் நடக்கும் எனலாம். ஆரம்பத்தில் சில எதிர்ப்புகளும் குழப்பங்களும் காணப்பட்டாலும் முடிவில் முழு சம்மதத்துடன் நிறைவேறும்.

இந்த வருடம் முக்கியமான இரண்டு கிரகப் பெயர்ச்சிகள் ஏற்படுகின்றன. 13-6-2014-ல் குருப்பெயர்ச்சி. மிதுன ராசியில் இருக்கும் ஜென்ம குரு, 2-ஆம் இடமான கடகத்தில் உச்சம் பெறுவார். 7, 10-க்குடையவர் 2-ல் உச்சம் பெறுவது 100-க்கு 100 யோகமாகும்! கடக குரு 6-ஆம் இடத்தையும், 8-ஆம் இடத்தையும், 10-ஆம் இடத்தையும் பார்க்கப்போகிறார். 10-க்குடையவரே 10-ஆம் இடத்தைப் பார்ப்பது பலம்தான். அதனால் முன்னர் குறிப்பிட்டது போல தொழில் வளம் பெறும்; நலம் பெறும்; பலம் பெறும். கடகம் சந்திரன் ராசி! சந்திரன், சூரியன் ராஜகிரகம். எனவே 10-க்குடையவர் அங்கு இருப்பதால், அரசு வேலை கிடைக்க வாய்ப்புண்டு. அரசு வேலையில் இருப்போருக்கு உயர்வுண்டு; முன்னேற்றமுண்டு, 

21-6-2013-ல் ராகு- கேது பெயர்ச்சி. துலா ராசியில் நிற்கும் ராகு கன்னி ராசிக்கும், மேஷ ராசியிலிருக்கும் கேது மீன ராசிக்கும் மாறுவார்கள் இந்த இரு ராசிகளும் மிதுனத்துக்கு கேந்திர ராசிகளாகும். ராகு 4-ல், கேது 10-ல். எனவே ராகு- கேது பெயர்ச்சிகளும் உங்களுக்கு அற்புதமான பலன்களைத் தரும். தேக ஆரோக்கியம், தாயன்பு, கல்வி உயர்வு, பூமி, வீடு, வாகன சுகம் ஆகிய நன்மைகளையும்; தொழில் முன்னேற்றம், பதவி உயர்வு, முயற்சிகளில் வெற்றி ஆகிய நன்மைகளையும் தரும். 

மாதவாரிப் பலன்கள்


ஜனவரி


இந்த மாதத்தில் ஏற்கெனவே செய்துவரும். தொழிலில் சீரான வளர்ச்சியை சந்திக்கலாம். அரசுவேலை அல்லது தனியார் பணியில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். நிலபுலங்கள் அல்லது குடியிருப்பு மனை சேர்க்கையோ அல்லது அவற்றை ஆதாயமான விலைக்கு விற்று லாபம் பார்ப்பதோ அல்லது சொத்துப் பரிவர்த்தனையோ நடக்கும். சுக்கிரனும் சனியும் அனுகூலமாக உலவுவதால் கணவன்- மனைவி தாம்பத்திய வாழ்க்கையில் சந்தோஷமும் திருப்தியும் உண்டாகும். கலைஞர்கள்- உழைப்பாளிகளுக்கு சிறப்பான மாதம். தெய்வப்பணிகளில் அல்லது பொதுப்பணியில் ஈடுபட்டுள்ளோருக்கும் பாராட்டும் மதிப்பும்  கிடைக்கும். 

பிப்ரவரி


இந்த மாதம் சூரியன், செவ்வாய், ராகு- கேது, சனி ஆகியோரது சஞ்சார பலம் சாதகமாக அமைவதால், தொழில் துறையில் வளர்ச்சி காணலாம். அரசியல்வாதிகளுக்கு மதிப்பு உயரும். குடும்பத்தில் சலசலப்பு குறைந்து கலகலப்பு உண்டாகும். சில காரியங்கள் வழவழா என்று இழுக்கும். சில காரியங்கள் சட்டிசுட்டது கைவிட்டது என்று பட்டென்று முடிந்துவிடும். கொடுக்கல்- வாங்கல், வரவு- செலவு நன்றாக இருந்தாலும்கூட- உங்களிடம் பணம் வாங்கியவர்கள் சொன்னபடி திருப்பித்தரமாட்டார்கள். ஆனால் நீங்கள் கொடுக்க வேண்டியவர்களுக்கு மட்டும் நாணயமாகத் திருப்பிக் கொடுத்துவிடுவீர்கள். 

மார்ச்


இந்த மாதம் சனி வக்ரம் அடைவார். நான்கு மாதங்கள் வக்ரத்திலேயே இருப்பார். (ஜூன் முடிய). செவ்வாயும் கன்னியில் வக்ரம் அடைவார். பொதுவாக அஸ்தமனத்தைவிட வக்ரம் நற்பலன் தரும் என்றாலும், ஜாதக தசாபுக்திகளை அனுசரித்தே நற்பலனோ துர்ப்பலனோ நடக்கும். 5-ல் சனி, ராகு; 4-ல் செவ்வாய். எனவே பிள்ளைகள் வகையில் சிலர் தொல்லைகள் அனுபவிக்கலாம். சிலருக்கு சுகக்கேடு அல்லது தாயார் வரவு வகையில் சலனம் ஏற்படலாம். சிலருக்கு இடப்பெயர்ச்சி, குடியிருப்பு மாற்றம் அல்லது ஊர் மாற்றம் ஏற்படலாம். சொந்தத் தொழில் அல்லது தரகுத் தொழில் செய்கிறவர்களுக்கு சில காரியங்கள் முடிவுக்கு வருவதுபோல் தெரியும். கடைசி நேரத்தில் கைநழுவிப்போய்விடும். நடப்பது நன்மைக்கே என்று சாந்தியடையலாம்.

ஏப்ரல்


இந்த மாதம் 14-ல் தமிழ்ப் புதுவருடம் பிறக்கிறது. அஸ்த நட்சத்திரம், கன்னி ராசி, மேஷ லக்னம். உங்கள் ராசிக்கு 4-ஆவது ராசி, 11-ஆவது லக்னம். தமிழ்ப் புத்தாண்டு மிகமிக அற்புதமாகவும் லாபகரமாகவும் அமையும். கடந்த காலத்தில் அனுபவித்த சங்கடங்களும், சஞ்சலங்களும் புதுவருடத்தில் அடியோடு மாறிவிடும். ஆனந்தமும் திருப்தியும் உண்டாகும். பக்தி மார்க்கத்திலும் ஞானமார்க்கத்திலும் ஈடுபாடு உண்டாகும். அதனால் மனதில் நிறைவும் மகிழ்ச்சியும் மலரும். தொழில் வளர்ச்சியடையும். வேலையில் நிலவிய கிளர்ச்சி மறையும். பொருளாதார நெருக்கடி நிலைமாறி, சரளமான பணப்புழக்கமும் தாராளமான வரவு- செலவும் உண்டாகும். 

மே


இந்த மாதம் பெரிய மாறுதல்கள் ஏதுமில்லாத அளவில் எல்லாம் வழக்கம்போல செயல்படும். குடும்பத்தில் விருந்தினர் வருகையும் உபசார செலவும் ஒரு பக்கம் கலகலப்பும் களிப்பும் ஏற்படுத்தினாலும், இன்னொரு பக்கம் தவிர்க்க முடியாத செலவுகளையும் அதிகரிக்கும். சிலருக்கு கேளிக்கை  விருந்துகளில்- விழாக்களில் பங்கெடுத்து செலவு செய்யும் அமைப்பும்; சிலருக்கு இன்பச் சுற்றுலா போகும் அமைப்பும் ஏற்படலாம். ஜாதக தசாபுக்தி பாதகமாக இருந்தால் பயணத்தாலும், பழக்கவழக்கத்தாலும், உணவுக் கட்டுப்பாடு இல்லாத காரணத்தாலும் ஆரோக்கியம் பாதிக்கப்படும். சுக ஸ்தானத்தில் செவ்வாய் இருப்பதால் அறுவை சிகிச்சை செய்யவேண்டிய ஆலோசனையும் சிலருக்கு உண்டாகலாம். சிங்கம்புணரி சித்தர் முத்து வடுக நாதர் வாத்தியார் கோவில் சென்று வழிபட்டால் ஆபரேசனை தவிர்க்கலாம். 

ஜூன்


இந்த மாதம் குருப்பெயர்ச்சியும் ராகு- கேது பெயர்ச்சியும் ஏற்படுகிறது! குரு மிதுன ராசியிலிருந்து 2-ஆம் இடம் கடகத்துக்கு மாறுவார். அங்கு உச்ச பலம் அடைவார். அதனால் பொருளாதாரத்தில் நிறைவு ஏற்படும். வாக்கு நாணயம் காப்பாற்றப்படும். வரவேண்டிய பணம் வசூலாகும். அரசு வழக்குகள் சாதகமாகும். தொழில் சிக்கல் தீரும். துலா ராகு- கன்னி ராசிக்கும், மேஷ கேது- மீன ராசிக்கும் மாறுவார்கள். இருவரும் பாபகிரகங்கள் கேந்திரத்தில் மாறுவதால் உங்களுக்கு நற்பலன்கள்தான். குருப்பெயர்ச்சிக்கு விரும்பிய குரு ஸ்தலம் போகலாம். ராகு- கேது பெயர்ச்சிக்கு உத்தமபாளையம், திருநாகேஸ்வரம், காளஹஸ்தி, சீர்காழி, கீழ்ப்பெரும்பள்ளம் போன்ற தலங்களுக்குப் போகலாம். 

ஜூலை


ராகு- கேது பெயர்ச்சியும் குருப்பெயர்ச்சியும் உங்களுக்கு அனுகூலமான பலன் தருவதோடு, இந்த மாதம் செவ்வாயும் துலா ராசிக்கு மாறுவார். சனியும் வக்ரநிவர்த்தியடைந்து அற்புதப்பலன்களைத் தருவார். உங்களுடைய செல்வாக்கு சீர் பெறும். தொழில் வளம் பெறும். தேக சுகம் நலம் சீர் பெறும். தனம், வருமானம் பெருகும். "ஆகும் காலம் மெய்வருந்த வேண்டாம்; போகும் காலம் கதவை அடைக்கவேண்டாம்' என்பார்கள். இப்போது எல்லாமே ஆகும் காலம். எனவே அதிகமாக உடலை வருத்தி கஷ்டப்படவேண்டாம். கடின முயற்சியும் செய்யவேண்டாம். எல்லாம் எளிதாக ஈடேறும். 

ஆகஸ்டு


போனமாதம் போலவே இந்த மாதமும் தொடர்ந்து நல்லதாகவே நடக்கும். நல்லநேரம் இருந்தால் கும்பிடப்போன தெய்வம் எதிரில் வரும் என்பார்கள். கெட்ட நேரம் இருந்தால் பரபரப்பாக விழுந்தடித்து கோவிலுக்குப் போனாலும் நடை சாத்தி கதவு மூடிவிடும். 10 மணி இண்டர்வியூக்கு 8 மணிக்கே புறப்பட்டாலும் போக்குவரத்து ஸ்தம்பித்து ரூட்மாறி போய் சேர 12 மணி ஆகிவிடும். ஜூலை 15-ல் துலாத்துக்கு மாறிய செவ்வாய்- அங்கிருக்கும் சனியோடும் சேர்ந்து மாதம் முழுவதும் தங்குவதால், ஒருசிலருக்கு மனதை பாதிக்கும் நிகழ்ச்சிகள் நடக்கும். சிலர் காதல் விவகாரத்தில் மாட்டிக்கொண்டு வாட்டம் அடைவார்கள். எச்சரிக்கை தேவை.

செப்டம்பர்


செவ்வாய், சனி சேர்க்கை விலகிவிடுகிறது. அஸ்தமன புதனும் உதயம் ஆகிறார். குருவின் அஸ்தமனமும் நீங்கிவிட்டது. எனவே ஈடுபடும் காரியங்களிலும் செயல்களிலும் உங்கள் திறமை வெளிப்படும். சாதனைகள் புரியலாம். சங்கடங்களும் சஞ்சலங்களும் பிரச்சினைகளும் குறையும். சிலருக்கு தாய்- தந்தையரால் நன்மை ஏற்படும். சிலருக்கு பிள்ளைகளினால் ஆதரவும் உதவியும் கிடைக்கும். சிலருக்கு திருமண வாழ்வில் நிலவிய வருத்தங்கள் நீங்கும். பிரிந்திருந்த தம்பதிகள் இணைந்திட வழிபிறக்கும். பொருளாதாரம்- பண வரவு- செலவு, கொடுக்கல்- வாங்கல் எல்லாம் திருப்திகரமாக இருக்கும்.

அக்டோபர்


கோட்சார கிரகங்கள் சாதகமாகவே இருப்பதால் குறித்தபடி எல்லாம் நடக்கும். நண்பர்கள், உற்றார்- உறவினர்கள் வகையிலும் குடும்பத்திலும் மகிழ்ச்சிகரமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஆடை, பொன் ஆபரணங்கள் சேரும். வீட்டுக்குத் தேவையான கட்டில், பர்னிச்சர், கிரைண்டர், ஃபிரிட்ஜ் போன்ற பொருள்களை வாங்கலாம். சிலர் வீட்டுக்கு ஏஸி வசதியும், யு.பி.எஸ் வசதியும் செய்யலாம். செலவோடு செலவாக இவற்றைச் செய்வதற்கு குடும்பத்தில் எதிர்ப்புத் தெரிவித்தாலும், உங்கள் திட்டம்போல எல்லாவற்றையும்  செயல்படுத்தலாம். புதுமணத் தம்பதிகளுக்கு தலைத் தீபாவளி கொண்டாட்டம்! 

நவம்பர்


கடந்த மாதம் பண்டிகைச் செலவுகளால் வரவுக்கு மீறிய செலவுகளும்,  எதைச்செய்வது எதைவிடுவது என்று புரியாமலே எல்லாவற்றையும் ஒரே நேரத்தில் செய்துமுடித்ததால் பொருளாதாரம் பாதித்திருக்கலாம். அதைச் சரிக்கட்ட இந்த மாதம் கடன் கொடுப்பவர்களைத் தேடி அலைவீர்கள். கடனும் கிடைக்கும். அதேசமயம் கடன் கேட்பதிலும் வாங்குவதிலும் ஒரு கட்டுப்பாடும் இலட்சியமும் வேண்டும். தகுதியானவர்களிடம்தான் கடன் வாங்கவேண்டும். தகுதியற்றவர்களிடம் கடன் வாங்கினால் கடைசியில் மரியாதை கெட்டு போராட்டத்தைச் சந்திக்க நேரிடும். கடன் பிரச்சினை விஸ்வரூபம் எடுக்காமல் இருக்க கும்பகோணம் அருகில் திருச்சேறை சென்று கடன் நிவர்த்தீஸ்வரரை வழிபடவும். கோவில் தொடர்புக்கு: சுந்தரமூர்த்தி  குருக்கள், செல்: 94437 37759.

டிசம்பர்


இந்த மாதக் கடைசியில் சனிப்பெயர்ச்சி. டிசம்பர் 16-ல் துலா ராசியில் இருக்கும் சனி விருச்சிக ராசிக்கு மாறுவார். நடுவில் சிம்மத்தில் வக்ரமடையும் குருவும் டிசம்பரில் கடகத்துக்கு மாறுவார். விருச்சிக சனியை கடக குரு பார்க்கக்கூடும். மிதுன ராசிக்கு 9-க்குடைய சனிக்கு 10-க்குடைய குரு பார்வை என்பதால் தர்மகர்மாதிபதி யோகம் ஆகும். 2015- ஜூலை வரை கடகத்தில் குரு உச்சம்! எனவே புதிய ஆடை, அணிமணிகள், ஆடம்பரப் பொருள்கள் சேர்க்கை உண்டாகும். சிலர் மலிவுவிலைப் பொருட்கள் வாங்கலாம். சிலர் புதிய வாகனம்- டூவீலர் அல்லது கார் வாங்கலாம். சிலர் நிலத்தில் முதலீடு செய்யலாம். சுப முதலீடுதான். 

மிருகசீரிட நட்சத்திரக்காரர்களுக்கு:


2014-மூல நட்சத்திரத்தில் பிறக்கிறது. அது மிருகசீரிடத்துக்கு 15-ஆவது நட்சத்திரம்- 6-ஆவது ஸாதக தாரை, சுபதாரை. எனவே இந்த வருடம் உங்களுக்கு எல்லாம் சாதகமாகவும் அனுகூலமாகவும் இருக்கும். மிருகசீரிடம் முன்னிரண்டு  பாதம் (1, 2) ரிஷப ராசியிலும், பின்னிரண்டு பாதம் (3, 4) மிதுன ராசியிலும் அடங்கும். ரிஷப ராசியைவிட மிதுன ராசிக்காரர்களுக்கு இக்காலம் இனிமையான- யோகமான காலமாக அமையும். மிதுன குரு கடகத்தில் உச்சமானாலும் அந்த யோகம் தொடரும். வைத்தீஸ்வரன் கோவில் சென்று முத்துக்குமார சுவாமியையும், தன்வந்திரி பகவனையும் வழிபடலாம்.

திருவாதிரை நட்சத்திரக்காரர்களுக்கு:


திருவாதிரை- ராகுசாரம். 2014 பிறப்பது மூல நட்சத்திரத்தில். இது கேது சாரம். ராகுவும் கேதுவும் ஒரே கிரகம்- தலையும் வாலும். திருவாதிரைக்கு மூலம் 14-ஆவது நட்சத்திரம். (5-ஆவது தாரை). அது பகை தாரை. எனவே தேவையற்ற கவலைகளும் கற்பனைகளும் பயமும் ஏற்படலாம். குடும்பத்தில்  குழப்பம், வாக்குவாதங்கள், சர்ச்சை, சஞ்சலம் போன்றவை உண்டானாலும், குரு மிதுன ராசியிலும் மூலம் தனுசு ராசியிலும் இருக்க, குருபார்வை தனுசு ராசிக்குக் கிடைப்பதால் கெடுதல் விலக இடமுண்டு. திண்டுக்கல் மலைக்கு மேற்குப்புறம் (பின்புறம்) ஓத சுவாமிகள் ஜீவசமாதி உள்ளது. புரட்டாசி திருவாதிரை குரு பூஜை. அங்குசென்று வழிபடவும்.

புனர்பூச நட்சத்திரக்காரர்களுக்கு:


புனர்பூசம் குரு நட்சத்திரம். அதற்கு இந்த வருடம் பிறக்கும் மூல நட்சத்திரம் 13-ஆவது நட்சத்திரம். (4-ஆவது க்ஷேம தாரை). ஆகவே 2014-ல் உங்களுக்கு எல்லா வகையிலும் யோகமாகவும் க்ஷேமமாகவும் அமையும். பூமி, வீடு, வாகனயோகம் போன்ற நன்மைகள் நடக்கும். மாணவர்களுக்கு கல்வி மேன்மை ஏற்படும். எல்லாருக்கும் தேக சுகமும் ஆரோக்கியமும் திருப்திகரமாக இருக்கும். பொருளாதாரத்திலும் போதிய நிறைவும் திருப்தியும் எதிர்பார்க்கலாம். திருமணமாகாதவர்களுக்குத் திருமண யோகம் உண்டாகும். குருப்பெயர்ச்சிக்குப் பிறகும் அந்த யோகம் தொடரும். நாமக்கல் அருகில் சேந்தமங்கலம் சென்று தத்தாத்ரேயரை வழிபடவும்.  பாலசுப்பிரமணியம் அர்ச்சகர், செல்: 93454 38950.