அன்புடையீர் நல்வரவு ,

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,
தேவாங்கர்களாகிய நாம் அனைவரும் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்து வந்தாலும் தேவாங்கர் என்னும் உணர்வு நம்மை ஓன்று சேர்க்கிறது. மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்ற வாக்கிற்கு இணங்க காலத்திற்கு ஏற்ப நாம் நமது குல நிகழ்வுகளை தகுந்த தொழில்நுட்பத்தை கொண்டு பதிவு செய்வது அவசியமான ஓன்று.

இந்த புதியபக்கம் நமது தேவாங்க சமூக செய்திகள்,சடங்குகள்,வரலாறு & அண்மை நிகழ்ச்சிகளை அறிந்துகொள்ளவும் தேவைப்படும் போது பார்க்கவும் உருவாக்கப் பட்டுள்ளது.
உறவுகள் தங்கள் பகுதியில் உள்ள கோவில்&குல தெய்வம் கோவில்களில் நடைபெறும் திருவிழா நிகழ்ச்சிகள் மற்றும் படங்களை இடம்பெற செய்யவும்.

தங்கள் கருத்துக்கள் இந்த தளத்தை மேன்படுத்த உதவும் ஆகயால் தயவுசெய்து கருத்திடவும் . ( தமிழில் கருத்திட தமிழ் எழுதியை பயன்படுத்தவும்)

நன்றி.

5/25/13

பொஜெலாறு வங்குசம், ரெட்டை கம்ப ராயர் கோவில் / கொங்குபட்டி

மனு மகரிஷி


147 .மநு மகரிஷி கோத்ரம்

சிருஷ்டியின் ஆதியில் பூமியைக் காக்க இறைவனால் நியமிக்கப்பட்டவர். இவரால் செய்யப்பட்டது மநுதர்ம சாஸ்திரம்.

ஒவ்வொரு கல்பத்திலும் பதினான்கு மன்வந்திரங்கள் நடைபெறும். மன்வந்திரம் என்பது மநுவின் ஆட்சிக்காலம். ஒரு கல்பத்தினுள் பதினான்கு மநுக்களின் ஆட்சி முடிவுற்றபின் பிரளயம் நடைபெறும்.

தற்பொழுது நடைபெறும் கல்பம் ஸ்வேத வராக கல்பம்.

இக்கல்பத்தின் மநுக்களாவார்.
1) ஸ்வாயம்புவர்
2) ஸ்வாரோசிஷர்
3) உத்தமர்
4) தாமஸர்
5) ரைவதர்
6) சாக்ஷூஷர்
7) வைவஸ்வதர்
8) ஸாவர்ணி
9) தக்ஷஸாவர்ணி
10) ப்ரஹ்மஸாவர்ணி
11) தர்மஸாவர்ணி
12) ருத்ரஸாவர்ணி
13) ரெளச்யர்
14) பௌத்யர் என்போர்
தற்பொழுது நடைபெறும் மன்வந்திரம் ஏழாவதான வைவஸ்வத மன்வந்திரம் ஆகும். "ஸ்வேத வராக கல்பே வைவஸ்வத மன்வந்ரே ", என்னும் மஹா சங்கல்ப மந்திரத்தினால் இதனை உணரலாம்.

விவஸ்வானு என்னும் சூரியனுக்கும், ஸம்க்ஞைக்கும் பிறந்தவர் சிராத்ததேவர் என்ற பெயர் கொண்ட வைவஸ்வதர். இவருடன் யமனும் யமுனையும் பிறந்தனர்.

சென்ற கல்பத்தில் பிரம்மதேவர் யோக நித்திரை அடையும் பொழுது வேதங்கள் நழுவிக் கீழே விழ அவற்றை ஹயக்ரீவன் என்ற அசுரன் கவர்ந்து கொண்டான். சத்தியவிரதன் என்ற அரசன் தர்ப்பணம் செய்து கொண்டு இருக்கையில் அவனுடைய கையில் இருக்கும் தண்ணீரில், சிறு மீன் ஒன்று தோன்றியது. அம்மீனைத் தண்ணீரில் விட மன்னன் முயன்றான். ஆனால் மீனோ தன்னை எடுத்துக்கொண்டு போகும்படி கேட்டது. அரசன் மீனை எடுத்துச் சென்றான். ஒரு பாத்திரத்தில் அதனை விட்டான். உடனே மீன் பாத்திரத்தின் அளவாகப் பெருத்தது.

அது வரவரப் பருத்து ஏரிகள் நதிகள் ஒன்றிலும் அடங்காமல் வளந்தது. இம்மீன் ஸ்ரீ மகாவிஷ்ணுவின் மச்சாவதாரம் என அரசன் உணர்ந்தான். அவதாரமான மீனை எடுத்துக்கொண்டு அதனைச் சமுத்திரத்தில் விடச் சென்றான் சத்தியவிரதன்.

மீன் அவனைத் தடுத்தது. சத்தியவிரதா! இன்றைக்கு ஏழாவது நாள் மூன்று லோகங்களும் ஜலப்பிரளயத்தால் மூடப்பெரும். அப்போது ஒரு படகு நீ இருக்கும் இடத்திற்கு வரும். சகல ஒளஷதிகள், விதைகள் மிருகங்கள், ஸப்தரிஷிகளுடன் நீ படகில் போய் இரு! படகு காற்றால் அசைக்கப்படும் பொழுது நீ ஒரு சாப்பத்தால் படகை என் தேகத்தில் இணைத்துக் கட்டு. நான் பிரளய ஜலத்தில் சஞ்சரித்துக் கொண்டே பிரம்மா விழிக்கும் வரை உன்னைக் காப்பாற்றுவேன். உத்தமமான பிரம்மவித்தையை உனக்கு உபதேசிக்கின்றேன். சூட்சுமமான அவ்வித்தையை உணர்ந்து கொள்! என்று அருளி மறைந்தது.

இந்தச் சத்திய விரதனே! சிரார்த்த தேவர் ஆகி இம் மன்வந்திரத்தின் மநுவாக ஆட்சி புரிகின்றனர்.

இனி சென்ற கல்பத்தில் சிவபிரானின் பாலநேத்திரம் எனப்படும் நெற்றிக் கண்ணிலிருந்து அக்நிமது என்பவர் அவதாரம் செய்து தேவர்கள் மகரிஷிகள் முதலான அனைவருக்கும் ஆடையும், பூநூலும் வழங்கினார். இந்த ஸ்வேதவராக கல்பத்தின் துவக்கத்தில் ஆடையற்றிருந்த தேவர்கள் பிரம்மாவை வேண்ட பிரம்மா அனைவரயும் சிவபிரானிடம் அழைத்துச் சென்று பெருமானே! உம் இதயத்தில் சாயுஜ்ஜியம் பெற்று இருக்கின்ற அக்நி மநுவை வஸ்திரங்களும், பூநுலூம் தருதற்கு அனுப்ப வேண்டும் என்று சிவபிரானிடம் வேண்டிக் கொண்டார்.

எனவே தேவாங்க அவதாரம் முன் கல்பத்தில் நெற்றிக் கண்ணில் இருந்து உதித்த அக்நிமது.

இந்தக் கல்பத்தில் தேவர் முதலான ஏழு அவதாரங்கள் எனத் தெளிந்து உணர்தல் வேண்டும்.

இக்காரணத்தால் தேவாங்கர் மநுர்குல தேவாங்கர் என அழைக்கப்படுகின்றனர்.

மநீஷ : பாலசசஷூம்ச அக்நிநாமநூருத்தித: பிரபதிஸ் ஸூர்ய கோவிந்தோ தேவாங்கோ தேவப்ராஹ்மண;

என்ற பிரம்மாண்ட புராணச் சுலோகம் காண்க.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

பொஜ்ஜேலாரு :- போஜள்ளி என்னும் ஊரைப் பூர்வீகமாகக் கொண்டவர்.

கஞ்சுகாவடியவரு :- கஞ்சுகா - ரவிக்கை. கஞ்சுகாதானம், ரவிக்கை தானம் செய்தவர். ஸ்ரீ சைலத்தில் இவர்கள் தெய்வங்களுக்கு ரவிக்கைத் துண்டு இன்றும் தருகின்றனர்.

ஆவுலபல்லிதவரு :- ஆவுனஹள்ளி என்னும் ஊரினர்.

உங்குராலதவரு :- மோதிரம் அணிந்தவர்.

கன்னிகாதானதவரு :- கன்னிகாதானம் நடக்க உதவியவர். திருமணம் செய்து கொள்ளச் சக்தியற்றவர்களுக்குப் பொருள் உதவி செய்து திருமணம் நடக்க உதவியவர்.

இத்தருமத்தினை மாபெரும் தருமமாகத் தேவாங்கர் கருதினர். இன்றும் தேவாங்கர் பலர் திருமணச் சேலை, வேட்டிகள் எடுத்துத் தருவது, தாலி செய்து தருவது முதலான பல திருமணம் தொடர்பான தருமங்களை ஜாதி வேறுபாடு கருதாமல் செய்து வருகின்றனர்.

இந்நூற்றாண்டில் இத்தருமத்தினைத் தம் வாழ்நாளில் செய்து பெரும் பெயர் பெற்ற பெருந்தகை. சர்.பிட்டி.தியாகராஜ செட்டியார் ஆவார். இப்பெருமானின் இல்லத்தில் புது வேட்டிகளும் சேலைகளும் எப்பொழுதும் தயாராக இருக்கும். திருமணம் என்று யார் சென்றாலும் மணமகனுக்கு வேட்டி துண்டு ஆகியனவும், மணமகளுக்குச் சேலை, ரவிக்கை, தாலி ஆகியனவும் வேறுபாடு கருதாமல் தானம் செய்த உத்தமர் இவர்.

குண்டதவரு :- ஸ்ரீ சௌடேஸ்வரி அம்மன் திருவிழாவில் அக்நி குண்டம் இறங்க முன்னுரிமை பெற்றவர். தம் இல்லத்தில் அக்நிஹோத்ரம் முதலான யாககுண்ட காரியங்களைத் தவறாது செய்பவர்.

கொண்டதவரு :- வடகர்நாடகம் தென்மகாராஷ்டிரம் பகுதிகளில் கொண்டதவரு வங்குசத்தினர் அதிகமாக வசிக்கின்றனர். இவர்கள் மலைகளில் தெய்வ வழிபாடு செய்கின்றனர்.

கோகலதவரு :- வஸ்திர தானம் செய்தவர்.

சாமந்திதவரு :- குலதெய்வத்திற்குச் சாமந்திப் பூ மாலை சாத்தி வழிபடுபவர்.

சிருங்காரதவரு :- அலங்காரத்தில் விருப்பம் மிக்கவர்.

சிவஞானதவரு :- சிவ ஞானம் பெற்றவர்.

தட்டிதவரு :- தட்டி நெய்பவர்.

தாசுமையதவரு :- பெருமாளை வழிபடுபவர். தாசர்களை வழிபடுபவர்.

தாலீபத்ரதவரு :- தாலீபத்ரம் - பனை ஓலை. ஓலைச்சுவடிகள் வைத்து இருந்தவர். முன் நாட்களில் ஜாதகம், திருமண நிச்சயங்கள் முதாலானவை ஓலைகளில் எழுதப்படும். அதற்கான ஓலைகளை வைத்து இருந்தவர்.

துபாகினவரு ;- அம்மனுக்குரிய 32 விருதுகளில் துப்பாக்கியும் ஒன்று, துப்பாக்கி விருது பிடிப்பவர்.

நாகார்ஜூனதவரு :- நாகார்ஜூன மழைப் பகுதியைப் பூர்வீகமாகக் கொண்டவர்.

பாபகதவரு :- நேர்வகிடு எடுத்துக் கொள்பவர்.

பாபட்லதவரு :- வகிடு எடுத்துத் தலை அலங்காரம் செய்து கொள்பவர்.

பால்யதவரு :- பாலர்களுக்கு உணவு தானம் செய்தவர். இன்னும் ஸ்ரீ ராமநவமி முதலான விழாக் காலங்களில் " அயிக்குளு விருந்து " என சிறுவர்களுக்கு விருந்திடும் பழக்கம் உள்ளது.

பாலேலாரு :- பாலபரமேஸ்வரியை வழிபடுபவர்.

பிண்டிகூரதவரு :- பிண்டி - மாவு, கூரம் - பதார்த்தம் மாவுப் பதார்த்தங்களை விரும்பி உண்பவர்.

பிருந்தாவனதவரு :- துளசி மடம் - வீட்டில் பிருந்தாவனம் கட்டி வழிபடுபவர்.

பில்வபத்ரதவரு :- வில்வ தளைகளால் பூசனை செய்பவர்.

புல்லகதவரு :- ஆண்மை மிக்கவர்.

பென்னாகரதவரு :- பென்னாகரம் என்னும் ஊரினர்.

போஜனதவரு :- போஜன மரத்தடியில் வழிபாடு செய்பவர்.

முக்கரதவரு :- மூக்குத்தி அணிபவர்.

முத்யாலதவரு :- முத்துக்களை அணிபவர். முத்து வணிகர்.

முத்கலதவரு :- முத்கலம் - ஒரு வகைச் செடிப்பூ. இப்பூ பூத்து இருக்கும் செடிக்கடியில் வீட்டுத் தெய்வ வழிபாடு செய்பவர்.

ரெட்டிபல்லிதவரு :- அநந்தபூர் கதிரி செல்லும் வழியில் உள்ள ரெட்டிபல்லி என்னும் ஊரைப் பூர்வீகமாகக் கொண்டவர்.

கோசலதவரு :- கோசல தேசத்தைச் சேர்ந்தவர்.

தத்வதவரு :- தத்துவ ஞானம் மிக்கவர்.

பஞ்சாட்சரியதவரு :- பஞ்சாட்சர மந்திர ஜெபம் செய்பவர்.

பட்டாதவரு :- மன்னர்களிடம் பட்டயம் பெற்றவர். பட்டக்காரராக இருக்க குருபீடாதிபதிகளிடமும், சிம்மாசனாதிபதிகளிடமும் பட்டயம் பெற்றவர்.

அச்சாச்சாரிதவரு, கம்மிகாவனதவரு, கரெதவரு, குந்தியம்தவரு, கூகடிதவரு, தாளம்தவரு, நாகாப்பரதவரு, பீரம்தவரு, போஜிதவரு, போஜூலதவரு, முடெதவரு, ரட்டிதவரு, ரெட்டிதவரு, விய்யாதிதவரு, சில்வாரொளி பாலிதாரு.

தேவாங்கர்களின் திருமண முறைகள்

திருமண உறவுமுறைகள்


தேவாங்கர் சமுதாயத்தினர் தந்தை வழியை ஆதாரமாகக் கொண்டுள்ளதால் அவர்களின் குழந்தைகள் தந்தை சார்ந்துள்ள வங்குசம் (வம்சம்) அவர்களுடைய வங்குசமாகக் கொளளப்படுகிறது. தங்கள் வங்குசம் தவிர பிற வங்குசத்தைச் சேர்ந்தவர்களை திருமணம செய்து கொள்ளும் வழக்கம் கடைப்பிடிக்கப்படுகிறது.


திருமண நிச்சயதார்த்த சடங்குகள்

* மணமகள் இல்லத்தில் தேவாங்கர் சாதியின் ஊர்த் தலைவரான செட்டிமைக்காரர் மற்றும் ஊர்ப் பெரியோர்கள் முன்னிலையில் நிச்சயதார்த்தம் நடைபெறுகிறது. * மணமகன் வீட்டார் சீர்வரிசைத் தட்டுகளுடன் மணமகள் வீட்டிற்கு வந்து தேவாங்கர் சாதியின் ஊர்த் தலைவரான செட்டிமைக்காரர் மற்றும் ஊர் பெரியோர்கள் முன்னிலையில் மணமகளை நிச்சயதார்த்தம் செய்து மணப்பெண்ணை அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ள வேண்டும். * தேவாங்கர் சாதியின் ஊர்த் தலைவரான செட்டிமைக்காரரிடம் மணமகன் வீட்டார் அந்த ஊர் தேவாங்கர் சாதி அமைப்பில் நிர்ணயித்துள்ள பணம் செலுத்தி மணப்பெண்ணை நிச்சயதார்த்தம் செய்து அனுப்பி வைக்கும்படி கேட்டுக் கொள்ள வேண்டும். * மணபெண்ணுக்கு மணமகன் வீட்டாரும், மணமகள் வீட்டாரும் சீர்வரிசைகள் செய்து நலுங்கு வைக்க வேண்டும். * இதன் பின்பு மணப்பெண் தேவாங்கர் சாதியின் ஊர்த் தலைவரான செட்டிமைக்காரர் மற்றும் ஊர்ப் பெரியோர்களிடம் வணங்கி வாழ்த்துக்களையும், நல்லாசிகளையும் பெற்றுக் கொள்ள வேண்டும். * இதன் பிறகு மணமகன் வீட்டார் மணப்பெண் உறவினர்களைத் திருமணத்திற்கு வருகை தந்து சிறப்பிக்குமாறு அனைவரது முன்னிலையிலும் கேட்டுக் கொள்ள வேண்டும்.

திருமணச் சடங்குகள்

முகூர்த்த நாளின் முதல் நாள் இரவு மணமக்கள் தாய்மாமன்களால் வழங்கப்பட்ட ஆடைகளை அணிந்து கொண்டு ஊர்வலம் வரவேண்டும். இப்போது இது வழக்கத்தில் அருகி வருகிறது.

வீரமாஸ்தி கும்பிடுதல்

தேவையான பொருட்கள்

மணமக்கள் அணிந்து கொள்ள தலா 2 ஜதை வேஷ்டிகள் வீதம் – 4 ஜதைகள் ஈரிழை சிவப்பு துண்டுகள் – 4 கூரை புடவை ( கோலமல சேலை ) – 1 செட் தாலி, கால் மிஞ்சு அங்குநூல், காதோலை கருமணி, திருமஞ்சனம், மஞ்சள், குங்குமம், கற்பூரம், ஊதுபத்தி முதலியன.. - பூஜை முடிந்தபின் மணமகனுக்கு தாய்மாமன் மிஞ்சு அணிவிக்க வேண்டும்.

இரவு விருந்து (கை நீர் சொம்பு வழங்குவது)

மணமகன் வீட்டினர் தன்னுடைய தேவாங்கர் சாதியின் ஊர்த் தலைவரான செட்டிமைக்காரருக்கும், மணப்பெண் வீட்டாருக்கும் கை நீர் சொம்பு வழங்க வேண்டும். செட்டிமைக்காரர் ஸ்தல பெத்தருக்கும், மணப்பெண் வீட்டார் சொந்தக்காரருக்கும் தங்களிடம் உள்ள கைநீர் சொம்பைக் கொடுத்து விருந்துக்கு அழைக்க வேண்டும். மணமகன் வீட்டினர் தன்னுடைய சொந்தக்காரருக்குக் கை நீர் சொம்பு கொடுத்து உறவினர்கள் அனைவரையும் இரவு விருந்துக்கு அழைக்க வேண்டும்.

பூஜை

தேவாங்கர் சாதியின் ஊர்த் தலைவரான செட்டிமைக்காரர் அமர கம்பளி விரித்து வைக்க வேண்டும். அவரிடம் மணமக்கள் குடும்பத்தினர் திருமணத்தை நல்ல முறையில் சமுதாயத்திற்குரிய பூஜைகள் மற்றும் சடங்குகளைச் செய்து வைக்கும்படி கேட்டுக் கொள்ள வேண்டும்.

கங்கணம் கட்டும் போது அரணை ஒட்ட தேவையான பொருட்கள்

அரணை முட்டிகள் - 6 முச்சளம் - 6 மொந்தை - 4 ஊசி மூடிகள் - 2 மண் தீபங்கள் - 7 மண் தூபக்கால்- 2 * பூஜை அறையை சாணத்தால் மெழுகிக் கோலமிட்டு அதன் மேல் பச்சரிசியை பரப்ப வேண்டும். பூஜையில் வைக்கப்படும் அரணை முட்டிகள் மற்றும் மொந்தையில், பச்சை பயறு, அரிசி, அச்சு வெல்லம், மஞ்சள் கொம்பு, வெற்றிலை பாக்கு, விபூதி, குங்குமம், பூ ஆகிய பொருட்களை சிறிது போட்டு வைக்க வேண்டும். * அரணை முட்டிகளை முச்சளங்களினால் கவிழ்த்து மூட வேண்டும். மாவிளக்கு 7 தயார் செய்ய வேண்டும். அவைகளில் இரண்டினை முச்சளத்தின் மீதும் மீதி 5விளக்குகளை மொந்தையின் முன்புறம் வரிசையாக வைக்க வேண்டும். விளக்குகளுக்கு நல்லெண்ணெய் மட்டும் பயன்படுத்த வேண்டும். * கங்கணம் கட்டும் பூஜை அறையில் கத்திரிக்காய் -3, வெள்ளைப் பூண்டு -3, அச்சு வெல்லம், மஞ்சள் கொம்பு, வெற்றிலை பாக்கு, மல்லிகை பூ ஆகியவற்றை கோர்த்து மூன்று செட் தயார் செய்து அவைகளை வரிசையாக தொங்கவிட வேண்டும். குண்ட்டை (படமரம்) வைத்து அதன் மீது வண்ணான் மாத்து போட வேண்டும். * கம்பளியில் செட்டிமைக்காரருக்கு வலதுபுறம் மணமகன் வீட்டாரும், இடதுபுறம் மணமகன் வீட்டாரும், அமர வேண்டும். முதலில் மணமகன் வீட்டார் சம்பந்திக்கு சந்தனம் தடவ வேண்டும். பிறகு மணமகள் வீட்டார் சம்பந்திக்கு சந்தனம் தடவ வேண்டும். * முதலில் மணப்பெண் வீட்டினரும், மணமகன் வீட்டினரும், மூன்று முறை தனித்தனியாக தங்களின் வங்குசம், கோத்திரம், வம்சப் பெரியோர்களின் பெயர், மணமக்களின் பெயர் ஆகியவைகளை மூன்று முறை கூறி மூன்றாவதாக சொல்லும் போது மணப்பெண் கொடுப்பதாக மணமகன் வீட்டாரிடம் கூறி, தாம்பூலம் மாற்றிக் கொள்ள வேண்டும். * கம்பளியில் அமர்ந்திருப்பவர்களுக்கு சந்தனம் கொடுத்து தாம்பூலம் வழங்க வேண்டும்.

கங்கணம் கட்ட தேவையான பொருட்கள்

மஞ்சள்துணி, மஞ்சள் கொம்பு, கம்பளி கயிறு இரும்பு வளையம், வெற்றிலை பாக்கு, மணமகன் கையில் வைத்துக் கொள்ள ஜம்புதாடிக் கத்தி.

கம்பளியில் செட்டிமைக்காரர் முன்னால் வைக்கப்பட்டுள்ள ஓலைப் பேழையில் இருக்க வேண்டிய பொருட்கள்

வெற்றிலை பாக்கு, பூ 21 செட், எலுமிச்சம் பழம் 2, வாழைப்பழம் 2, சந்தனக் கிண்ணம், அட்சதை, கற்பூரம், ஊதுபத்தி.

செட்டிமைக்காரர் வசம் மணமக்கள் வீட்டினர் மஞ்சள் முடிப்பு கொடுத்தல்

* மணமகன் வீட்டினர் மஞ்சள் துணியில் மஞ்சள் கொம்பு, வெற்றிலை பாக்கு, பூ, பணம் வைத்து முடி போட்டு செட்டிமைக்காரரிடம் கொடுக்க வேண்டும். * மணமகள் வீட்டார் மஞ்சள் துணியில் மஞ்சள் கொம்பு, வெற்றிலை பாக்கு, பூ வைத்து முடிபோட்டு செட்டிமைக்காரரிடம் கொடுக்க வேண்டும். * செட்டிமைக்காரர் இரண்டு மஞ்சள் முடிப்புகளில் பணம் உள்ள மஞ்சள் முடிப்பினை அவிழ்த்து குறிப்பிட்ட பணத்தை எடுத்துக் கொண்டு அதை முடி போட்டு மணமகள் வீட்டாரிடம் கொடுத்து, பணத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். மணமக்கள் சொந்தக்காரர்கள் செட்டிமைக்காரரிடம் இருந்து மஞ்சள் முடிப்பினன பெற்றுச் சென்று மணமக்களுக்கு கங்கணம் கட்ட வேண்டும். * மணமக்கள் செட்டிமைக்காரர் மற்றும் பெரியோர்களை வணங்க வேண்டும். * மணமக்கள் கங்கணம் கட்டிக் கொண்ட பிறகு, மணப்பந்தலை விட்டு வெளியிடங்களுக்கு செல்லக்கூடாது. * அட்சதையைக் கம்பளியில் உள்ளவர்களுக்கு மட்டும் வழங்க வேண்டும்.

ஸ்தலது கொம்பு விவரம்

அரச மரத்தின் அடிப்பாகத்தில் பிரம்மனும், நடுவில் விஷ்ணுவும், நுனியில் சிவனும் வாசம் செய்கின்றனர். எனவே ஸ்தலது கொம்பு திருமூர்த்திகளுக்கு வணக்கம் செய்யப்படுகிறது என்பது ஐதீகமாகும். மணமகன் மணவறையில் அமர்வதற்கு முன் பிள்ளையார் கோவிலுக்கு செல்ல வேண்டும்.

பூஜைக்கு தேவையான பொருட்கள்

அரசமரக் கொம்பு, மஞ்சள் கொம்பு, மண் தீபம், அச்சு வெல்லம், பச்சரிசி 1 படி, தேங்காய் -3, பழம் -2, வெற்றிலை பாக்கு, கற்பூரம், ஊதுபத்தி, வாழை இலை, குங்குமம்

பூஜை முறை

* கோவிலில் அரச இலையில் பச்சரிசி வெல்லம் வைத்து பூஜை செய்ய வேண்டும். * மணமகன் பிள்ளையார் கோவிலுக்கு செல்லும் போது மணமகனின் சகோதரி மேற்கண்ட பூஜைப் பொருட்களுடன் புது கூடையில் மணமகன் அணிந்து கொள்ளும் மஞ்சள் வேஷ்டி, பணம் மற்றும் புது பாய் எடுத்துச் செல்ல வேண்டும். * பூஜைக்கு கொண்டு செல்லும் 3 தேங்காய்களில் 1 பிள்ளையாருக்கும், 2 வது தேங்காய் பஜனை கோவிலுக்கும், 3 வது தேங்காய் மணமகளின் மடியில் பச்சரிசியுடன் வைத்து கட்டிக் கொள்ளவும் வேண்டும். * மணமகன் பிள்ளையார் கோவிலுக்கு போகும்போது தாய்மாமன் கொடுத்த அங்கவஸ்திரத்தை வலது தோள் மீதும், மஞ்சள் வேஷ்டியை இடது தோள் மீதும் அணிந்து செல்ல வேண்டும். பூஜை முடித்து வரும்போது மணமகளின் சகோதரி மணமகனுக்கு பாத பூஜை செய்து ஆரத்தி எடுக்க வேண்டும். மணமகனுக்கு பால், பழம் கொடுக்க வேண்டும். தாலி கட்டிய பின் கம்பளி விரித்தல் * செட்டிமைக்காரர் உறவினர் முன்னிலையில் மணமக்களின் தாய்மாமன்கள் கட்டிய கங்கணத்தை அவிழ்த்து அதையும் ஜம்புதாடி கத்தியையும் செட்டிமைக்காரர் வசம் ஒப்படைத்தல், செட்டிமைக்காரர் மணமகன் வீட்டாரிடம் பணம் பெற்று கங்கண துணியில் வைத்து மஞ்சள் முடிப்பை மணமகள் வீட்டாரிடம் கொடுத்து பணத்தை எடுத்துக் கொள்ள சொல்ல வேண்டும். காலி மஞ்சள் முடிப்பை மணமகன் வீட்டாரிடம் கொடுக்க வேண்டும். பின் இரு வீட்டாரிடமிருந்தும் கங்கண முடிப்பை செட்டிமைக்காரர் பெற்றுக் கொள்ள வேண்டும். * செட்டிமைக்காரர் வரிசைப்படி வங்குசதாரர்களை அழைத்து செலவு சம்பாரம் கொடுத்து மரியாதை செய்ய வேண்டும்.

56 .சரசுஜாத மகரிஷி கோத்ரம்

மகரிஷி வரலாறு புலப்படவில்லை.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

அனந்ததவரு :- அநந்த பத்மநாப சுவாமியை வழிபடுபவர். அநந்தன் - ஆதிசேஷன். அவன்மீது பள்ளிகொண்டபெருமாளை வணங்குபவர்.
தம்பதிதவரு :- வாரந்தோறும் வெள்ளிக் கிழமைகளில் தம்பதிபூசனை செய்து, அவர்களுக்கு வேண்டியனவற்றைத் தான தர்மமாக வழங்குபவர்.
போளெம்தவரு :-

ஸ்ரீ காயத்ரி வீரகுமாரர்கள் சேவா சங்கம், சேலம்.


55 .சம்பு மகரிஷி கோத்ரம்

மகரிஷி வரலாறு புலப்படவில்லை.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

ஜானதவரு :- கீர்த்தி உடையவர். அறிவு நுணுக்கம் உள்ளவர்.
அங்கதவரு :-

காயத்ரி தேவி சின்னாலபட்டி


சின்னாலபட்டி ராமலிங்க சவுண்டேஷ்வரி அம்மன்


54 .சந்திரகுல மகரிஷி கோத்ரம்

இவர் ஸ்ருங்கி ரிஷியாவார். சேலத்தில் கடுபுலதவரு என்னும் கடுபேலாரு தங்களைச் சந்திர மகரிஷி கோத்ரம் என்று கூறிக்கொள்கின்றனர். இவர்கள் சந்திர ஜடாதர மூர்த்தியையும் சந்திரனையும் வழிபடும் பழக்கம் கொண்டு இருக்கின்றனர். சந்திரஜடாதரனை; சந்திரன் வழிபடுவதால் தங்கள் ரிஷியும் அவரே என எண்ணி இருக்கலாம். இக்கோத்ர ரிஷி கலைக்கோட்டு மாமுனிவர் எனப்படும் ரிஷ்ய ஸ்ருங்கர் ஆவார்.
மகரிஷியின் வரலாறு ஸ்ருங்கி மகரிஷி கோத்ரத்தில் காண்க. இம் மகரிஷியும் ஸ்ருங்கி ரிஷியும் ஒருவரே.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

கடுபேலாரு :- கடுப்பு - வயிறு. வயிறு பற்றி வந்த ஒரு பெயர்.
சன்னமொசலிதவரு :- தெலுங்கில் முதலைக்கு மொசலி என்று பெயர். இவர்கள் மகராசனம் இட்டு யோகம் செய்வார்கள்.
கூர்மதவரு :- கூர்மாவதாரத்தை வழிபடுபவர்.
கொஜ்ஜம்தவரு :- கொஜ்ஜனதவரு என்பது மருவி கொஜ்ஜம் என வழங்குகின்றது. ஆந்திராவில் உள்ள கொஜ்ஜனம் என்னும் ஊரைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
தர்மபுரம்தவரு :- அனந்தப்பூர் மாவட்டத்தில் உள்ள தர்மபுரம் என்னும் ஊரைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
நந்தவரம்தவரு :- ஆந்திராவில் கர்நூல் மாவட்டம் நந்தியால் தாலுக்கா பானியம் புகை வண்டி நிலையத்தில் இருந்து நான்கு மைல் தூரத்தில் உள்ள ஓர் ஊர் நந்தவரம்.
" சௌடேஸ்வரி நின்னு சாலபூஜலு சேய " என்னும் தண்டகத்தில் " நந்தவரமந்து நெலெ கொன்ன நைகதாம்ப " என்று நந்தவரம் என்னும் ஊர் பற்றி குறிப்பிடப் பட்டுள்ளது.
நரசிம்மதவரு :- நரசிம்மமூர்த்தியை வழிபடுபவர்.
பாரததவரு :- மஹாபாரதத்தில் வல்லவர். பாரதப் பிரசங்கம் செய்பவர்.
பர்வத வஸ்திராலதவரு :- பர்வதம் எனில் ஸ்ரீ சைலம். ஸ்ரீ சைலத்திற்குக் கொடித் துணி நெய்து கொண்டு செல்லும் திருப்பணி செய்பவர்.
குறிப்பு : - ஒரு முழ அகலத்தில் தினம் ஒரு முழமாக நெய்து 365 நாட்களில் 365 முழம் நெய்து முடித்து அதனை எடுத்துக் கொண்டு சென்று ஆலயத்திற்குக் கொடித்துணியாக வழங்குபவர். தேவாங்கரின் ஏழாவது அவதாரம் முதற்கொண்டு இன்றளவும் இத்திருப்பணி நடைபெறுகின்றது.
மாணிக்யதவரு :- மாணிக்க நகை அணிபவர். மாணிக்க வியாபாரம் செய்தவர்.
ருத்திராட்சினவரு :- குடும்பத்தில் ஆண் பெண் இருபாலரும் ருத்திராட்சம் தரிப்பவர்.
ஷடாட்சரிதவரு :- ஆறெழுத்து மந்திரம் உச்சரிப்பவர். சுப்ரமண்ய சுவாமியை வழிபடுபவர்.
அந்தெலதவரு, அந்தேதவரு, தவனதவரு, துஸ்ஸாதவரு, தூஸெம்தவரு, நுன்காதவரு, பீரதம்தவரு, ஜினகதவரு.

விடைக் கொடியை இழத்தல்

வித்தையுத்தேசன் தன் மந்திர சக்தியால் தேவேந்திரனின் தூதுவனைப்போல் உருமாறி ஆமோத நகரை அடைந்தான். தேவாங்க மன்னனின் முன் போய் நின்று வணங்கி, ' மன்னர் மன்னா! நான் தேவேந்திரனின் தூதுவன் வச்சிரதந்தன் மீண்டும் பெரும் படைகளுடன் பொன்னகரம் வந்து வளைத்துக் கொண்டு போர் புரிந்தான். போரில் தேவர்கள் யாவரும் தோற்று ஓடி மறைந்து வாழ்கின்றனர். அரக்கரை வென்று பொன்னகரைக் காப்பதற்கு விடைக் கொடியாலன்றி வேறெதனாலும் முடியாது. அதனால் அதை தங்களிடமிருந்து பெற்றுவருமாறு தேவேந்திரன் அனுப்பியுள்ளான். அருள் கூர்ந்து அக்கொடியைக் கொடுத்து உதவ வேண்டும்' என்று வணங்கி நின்றான். அசுரன் சொன்ன சொல்லை உண்மை என நம்பிய தேவாங்க மன்னன் நந்திக்கொடியை அவனிடம் கொடுத்தனுப்பிவிட்டார். கொடியைப் பெற்ற அசுரன் பெருமகிழ்ச்சியோடு விரைந்து சென்று கொடியை வச்சிரதந்தனிடம் சேர்ப்பித்தான். நந்திக்கொடியைப் பெற்ற அசுரமன்னன் பெருங்களிப்பில் மூழ்கினான். சேனைகளைத் திரட்டிக் கொண்டு மீண்டும் தேவர்கள் மீது போருக்குப் போனான். விண்ணாட்டை அடைந்தான். அமராவதி நகரை வளைத்துக் கொண்டு போர்ப்பறை அறைவித்தான். இதை அறிந்த தேவேந்திரன் படைகளுடன் அசுரரை எதிர்த்தான். அசுரர் படை பலமிக்கதாயிருப்பதை அறிந்து தேவல மன்னனை உதவிக்கு வருமாறு, ஓலை கொடுத்து தூதனை அனுப்பினான். தூதுவன் சொன்ன செய்திகளை அறிந்த தேவாங்கன் " நேற்றனுப்பிய நந்திக்கொடிகையிலிருக்க நம்மை ஏன் இந்திரன் அழைக்கின்றான்? இதில் ஏதோ சூது இருக்கிரது' என்று ஐயுற்றார். உடனே படைகளுடன் அமராவதி நகருக்கு விரைந்து சென்றார். அங்கு சென்ற பின் அசுரர்களின் கபடநாடகம் வெளிப்பட்டது. போரில் தேவர்கள் தோற்றனர். தேவாங்க மன்னன் அசுரர்களிடம் சிறைப்பட்டார். சிறை பிடித்த தேவலமுனிவரை அசுரன் கொல்லாது தன்னாட்டுக்கு அழைத்துச் சென்றான். அரம்பையின் சாபம் பலித்துவிட்டது. நாட்டை அடைந்த அசுரமன்னன் தேவலமுனிவரைக் கொண்டு தனது குலமக்களும் ஆடைகளைப் பெறவேண்டும் என்று திட்டமிட்டான். அதனால் அவரைச் சிறைக் கைதியாக நடத்தாமல் மரியாதைக்குரிய ஒருவராக வைத்து நடத்தினான். தலைமைப் பதவியையும் கொடுத்தான். பின் தன் வளர்ப்பு மகள் பத்மினியை மணக்குமாறு வேண்டினான். அரக்க மகளை மணக்க முனிவர் தயங்கினார். அப்போது அக்னி தேவன் அங்கு தோன்றி பத்மினி என்னுடயை மகள். அக்னி தத்தை என்பது அவள் பெயர். இம்மன்னன் என்னுடயை நண்பன். அதனால் என் மகளை இங்கு நான் வளர்க்க விட்டேன். அவளும் வளர்ந்து வருகின்றாள். தாங்கள் தயங்காது இவளை மணக்கலாம். என்று கூறித் தானே முன்னின்று மணத்தை முடித்து வைத்தான். இம்மணத்தில் இவர்களுக்கு சாலன் அலன் பெலன் என்னும் மூன்று மக்கள் பிறந்தனர். இவர்களுக்குத் தேவலர் நெசவுத் தொழிலைக் கற்றுக் கொடுத்தார். அவர்களும் நெய்யும் தொழிலை நன்கு கற்று ஆடைகளை அழகாக நெய்து அசுரர்களுக்கு வழங்கினார்கள். இந்நிலையில் தேவலர் தமது நாட்டுக்குத் திரும்பிச் செல்ல விரும்பினார். தமது விருப்பத்தை அசுரமன்னனுக்கு அறிவித்தார். அவனும், ஆடைகளைத் தனது மக்களும் பெற வேண்டும் என்ற விருப்பம் நிறைவேறி விட்டதால் தடை சொல்லாமல் விடை கொடுத்து அனுப்பினான். தேவலமுனிவரும் அவர்களிடம் விடைபெற்றுக் கொண்டு தமது நாட்டை அடைந்தார். ஆமோத நகரை சிறப்பாக ஆட்சி நடத்தி வந்தார்.