அன்புடையீர் நல்வரவு ,

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,
தேவாங்கர்களாகிய நாம் அனைவரும் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்து வந்தாலும் தேவாங்கர் என்னும் உணர்வு நம்மை ஓன்று சேர்க்கிறது. மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்ற வாக்கிற்கு இணங்க காலத்திற்கு ஏற்ப நாம் நமது குல நிகழ்வுகளை தகுந்த தொழில்நுட்பத்தை கொண்டு பதிவு செய்வது அவசியமான ஓன்று.

இந்த புதியபக்கம் நமது தேவாங்க சமூக செய்திகள்,சடங்குகள்,வரலாறு & அண்மை நிகழ்ச்சிகளை அறிந்துகொள்ளவும் தேவைப்படும் போது பார்க்கவும் உருவாக்கப் பட்டுள்ளது.
உறவுகள் தங்கள் பகுதியில் உள்ள கோவில்&குல தெய்வம் கோவில்களில் நடைபெறும் திருவிழா நிகழ்ச்சிகள் மற்றும் படங்களை இடம்பெற செய்யவும்.

தங்கள் கருத்துக்கள் இந்த தளத்தை மேன்படுத்த உதவும் ஆகயால் தயவுசெய்து கருத்திடவும் . ( தமிழில் கருத்திட தமிழ் எழுதியை பயன்படுத்தவும்)

நன்றி.

5/4/13

22 .கரசக மகரிஷி கோத்ரம்

கா்க்க மகரிஷி என்னும் பெயர் பெற்றவர் இவர். இப்பெயர்தான் கரசக் என்று மருவி இருக்கின்றது. கா்க்கர் ஆதிசேஷனை உபாசித்து அவரிடம் ஜோதிட வித்தயினை வேண்டிப் பெற்றார். இம்முனிவரால் செய்யப்பட்டது கா்க்கஸம்ஹிதை எனப்படும்.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

காசம்தவரு :- காசாம்பூ ஒருவகைச் செடி. இதன் அடியில் தெய்வ வழிபாடு செய்பவர்.
நரஸ்திரம்வாரு :- நரசிம்ம வழிபாடு செய்பவர்.
ரெட்ளவாரு :- இவர்கள் ஆந்திராவில் ரெட்டிகளுடன் அதிகமான வியாபாரத் தொடர்பு உடையவர்.
சாச்சவாரு :-
தம்மசவாரு :-

21 .கபில மகரிஷி கோத்ரம்

மஹரிஷி வரலாறு :- கர்த்தமப் பிரஜாபதியைப் பிரஜைகளைச் சிருஷ்டி செய்யுமாறு பிரம்மா ஆணையிட்டார். ஆணையை ஏற்ற அவர் ஸரஸ்வதி நதிக்கரையில் பிந்து ஸரோவரம் என்ற புண்ய தீர்த்தக் கரையில் தவம் செய்தார்.

பகவான் விஷ்ணு அவருக்குத் தரிசனம் தந்தார். நீ ஸ்வாயம்பு மனுவின் பெண்ணான தேவஹூதியை மணம் செய்துகொள். உனக்கு ஒன்பது பெண்களும் ஒரு மகனும் பிறப்பர். நானே உனக்கு மகனாய்ப் பிறப்பேன் என்று வரம் அருளினார். தத்வ வித்தையை உலகினுக்கு உணர்த்த பகவான் கபிலராய் அவதாரம் செய்தான்.

தன் ஒன்பது பெண்களையும் கர்த்தம பிரஜாபதி ஒன்பது ரிஷிகளுக்கு மணமுடித்துத் தந்தார்.

கர்த்தமரின் பெண்கள் - அவர்தம் கணவன்மார்கள்
1) கலா - மரீசிமகரிஷி
2) அனசூயா - அத்ரி மகரிஷி
3) சிரத்தா - அங்கீரஸர்
4) ஹவிர்ப்பூ - புலஸ்தியர்
5) கதி - புலஹர்
6) க்ரியா - கிரது
7) க்யாதி - ப்ருகு
8) அருந்ததி - வசிஷ்டர்
9) சாந்தில - அதர்வர்
கர்த்தமர் மகன் கபிலரைத் தம் மனைவியிடம் ஒப்புவித்துத் தவம் செய்யச் சென்றார்.

தேவஹூதி, மகனே! எனக்கு உத்தமமான ஞானத்தை உபதேசம் செய் என்று வேண்டினாள். கபிலர் தம் தாய்க்குச் சாங்கியம், யோகம் என்னும் மார்க்கங்களையும் அவைகளுக்கும் பக்திக்கும் உள்ள சம்பந்தத்தினையும் விஸ்தாரமாக உபதேசித்தார்.

இவ்வுபதேசத்தினால் அவள் சகல சந்தேகங்களும் நீங்கி பகவானை உபாசித்து முக்தி அடைந்தாள்.

ஸகர சக்ரவர்த்தி அசுவமேத யாகம் செய்தார். அசுவமேதயாகக் குதிரையை இந்திரன் பாதாளம் கொண்டு போய் கபில முனிவருக்குப் பின் கட்டினான். ஸகர புத்திரர்கள் குதிரையின் நிமித்தம் தவம் செய்து கொண்டு இருந்த கபிலரை இம்சிக்க; அவர் கண் திறந்து பார்த்தார். அவர் பார்வையிட்டு அவர்கள் சாம்பல் ஆயினர்.

தவத்தில் அவர் இருந்து கண் விழிக்குங்கால் கபிலரின் முதல் பார்வையில் படுபவர் அனைவரும் எரிந்து சாம்பல் ஆவர்.

பின் அம்சுமான் குதிரையை வேண்டி முனிவரிடம் வந்தான். குழந்தாய்! குதிரையைக் கொண்டு செல். சகரனிடம், கொடு. இது இந்திரனின் சூழ்ச்சி என்றார்.

சுவாமி! தங்களுக்குக் குற்றம் இழைத்த இவர்கள் நற்கதி அடைய அருள் செய்யுங்கள் என அம்சுமான் வேண்டினான்.

உன் பேரன் பகீரதன்! ஆகாய கங்கையைப் பூமிக்கு கொண்டு வருங்கால் அதன் நீர்பட்டு இவர்கள் நற்கதி அடைவர் என்று வரமீந்தார் கபிலர்.

கங்கா ஸாகரம் என்னும் இடத்தில் இன்றும் யோக சமாதியில் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றார். இப்பொழுதும் அவ்விடம் யாத்திரைக்குரிய புனிதத்தலமாக விளங்குகின்றது.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

ஸ்ரீ கன்சுவாரு :- காஞ்சிபுரத்தை ஸ்ரீ கன்சு என்று பெயர். ஆந்திராவிலும் ஸ்ரீ கன்சு என்ற ஊர் இருக்கின்றது. இவ்வூர்களில் ஒன்றினைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
ஆரபுவாரு :- ஆராக்கீரை தொடர்பான பெயர்.
உட்ளவாரு :- நீர் ஊற்றினுக்குத் தெலுங்கில் உட்ள என்று பெயர். இயற்கையாய்ப் பெருகும் நீர் ஊற்றின் அருகில் வீட்டுத் தெய்வத்தை வணங்குவதை வழக்கமாகக் கொண்டவர்.
சுகுண தவரு :- சு+குணம் = மிக நல்ல குணத்தைக் கொண்டவர்கள்.
கௌரதவரு :- கௌரி தேவியை வீட்டுத் தெய்வமாக வணங்குபவர்கள்.
தக்காவாரு :- செட்டிகாரர், எஜமானர் என்பன போல் ஒரு கௌரவப் பெயர்.
தந்துலதவரு :- நூலுதவரு :- தந்து - நூல்; இரண்டும் நூல் பற்றி வந்த பெயர்.
திரிபுரதவரு :- திரிபுரம் சம்ஹாரம் செய்த சிவபிரானின் மேன்மையை எண்ணி; இச்செயலின் உயர்வால் திரிபுரசம் ஹரமூர்த்தியைப் பூசிப்பவர்.
தவனம்வாரு :- மருக்கொழுந்து போல் வாசனைமிக்க ஒரு வகை இலை. கலச திரவியங்களுடன் இதுவும் ஒன்று. இதனைத் தானம் செய்ததாலோ, வேறு காரணங்களாலோ இப்பெயர் வந்துள்ளது.
நடபுலவாரு :- நடந்து கொண்டே இருப்பவர்.
நூகுலவாரு :- நொய்யரிசிச் சோறு உண்பவர்.
பசுபுலேட்டிவாரு :- பசுபுலேட்டி என்பது ஆந்திராவில் உள்ள ஓர் ஆறு. அவ்வாற்றங்கரையில் வசித்தவர். அப்பகுதியைப் பூர்வீகமாகக் கொண்டவர். தமிழிலில் இவ்வாற்றிற்கு மஞ்சள் ஆறு என்று பெயர்.
பச்சலதவரு :- பச்சைக்கல் நகையை அணிபவர்.
பந்தாரிதவரு :- பந்தாரி ஒரு வகைச் செடி. இச்செடி அடியில் வீட்டுத் தெய்வத்தை வணங்குபவர்.
பரடிதவரு :- பரடிபல்லி ஆந்திராவில் கர்நூல் ஜில்லாவில் உள்ள ஓர் ஊர். இவ்வூரைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
பந்துலுவாரு :- ஆசிரியருக்குத் தெலுங்கில் பந்தலு என்று பெயர். இவர்கள் ஆசிரியராகச் சேவை செய்பவர்.
பேடம்வாரு :- பூசனைச் சாமான்களுள் பேடம் என்பது ஒன்று. ரதம் போன்ற அமைப்பில் இருக்கும். இதனைத் தானம் செய்ததால் பெற்ற பெயர்.
முரகலதவரு :- முறுக்கான குணம் கொண்டவர்.
வஜ்ராலவாரு :- வஜ்ஜிரம் - வைரம் ; வைரநகை அணிபவர். வைர வணிகம் செய்தவர்.
பசுபதி :- பசுபதியான பசுபதீசுவரரை வீட்டு தெய்வமாக வணங்கி வருபவர்.
மரகதவாரு ;- மரகத வணிகம் செய்தவர்.
தோள்ளவாரு :-
முருகிவாரு :-
முர்வம்புவாரு :-

20 .கண்வ மகரிஷி கோத்ரம்

மகரிஷி வரலாறு :- விசுவாமித்திரருக்கும் மேனகைக்கும் பிறந்த மகள் சகுந்தலை. இச் சகுந்தலையைக் கண்வ முனிவர் கருணையுடன் வளர்த்தார். வேட்டை நிமித்தமாக காட்டிற்கு வந்த துஷ்யந்தன் சகுந்தலையைக் கண்டான். இருவரும் இதயம் மாறிக் குடியேறினர். கந்தர்வ முறையில் சகுந்தலையைக் கைப்பிடித்தான் மன்னன்.

நாடு திரும்பியவன் சகுந்தலையை மறந்தான். கண்வர் அனைத்தையும் அறிந்தார். அவர்களின் திருமணத்தை அங்கீகரித்தார். சகுந்தலை ஆண் மகவு ஒன்றனைப் பெற்றாள். இக் குழந்தைதான் புகழ் பெற்ற பரதன். இவ்வுத்தமன் பெயராலேயே இந்திய நாடு பரத கண்டம் என்று அழைக்கப்படுகின்றது.

சகுந்தலையை மறந்திருந்த துஷ்யந்தினிடம் அவளையும் மகனையும் முனிவர்கள் புடைசூழ கண்வர் அனுப்பி வைத்தார்; என்பன போன்ற வரலாறுகளை உலகமகா கவியான காளிதாசன் தம் சாகுந்தலம் என்னும் காவியத்தில் கூறியுள்ளான்.

தேவாங்க முனிவரின் ஐந்தாவது அவதாரம் வரரிஷி அவதாரம். இவ்வவதார காலத்தில் மாடு மேய்த்துக் கொண்டிருந்தான் கவிரத்தினன் என்று பெயர் கொண்ட ஒருவன். வரரிஷி தம் கருணையாலும் காளிதேவியின் வரபலத்தினாலும் கவிரத்தினன் என்ற கல்வியறிவு சிறிதும் இல்லாத அவனை உலக மகாகவியான காளிதாசனாக மாற்றினார். காளிதாசன் வரரிஷியின் சீடன்

" காளிதாசுனகுனு கவுலதார யொசங்கி காசி ரட்சிஞ்சின காளி சரணு....... ஸ்ப்த நகர நிவாஸினி சரணு சரணு சவுடமாம்பிக மமு ப்ரோவு சரணு சரணு " என்னும் தண்டக பத்யம் உணர்த் துவதனைக் காண்க.

கண்வ முனிவர் தவம் செய்கையில் அவரைப் புற்று மூடியது. அப்புற்றிடமாக முனிவரிடம் தவம் அனைத்தும் ஒரு மூங்கிலாக வளர்ந்தது. பிரம்ம தேவன அம்மூங்கிலைக் கொண்டு மூன்று வில் செய்தான்.

1) காண்டீபம் - பிரம்ம தனுசு என்றும்
2) பினுகம் - சிவதனுசு என்றும்
3) சார்ங்கம் - விஷ்ணு தனுசு என்றும் அழைக்கப்படுகின்றன.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

அஜதவரு :- அஜன் - பிரம்மதேவன்; பிரம்மனை வழிபாடு செய்தவர்.
அங்கம்தவரு :- உடல் அங்கங்கள் வன்மை பெற்றவர்.
அந்தலெதவரு :- அந்தலம் - சிலம்பின் வடிவம் பெற்ற ஒரு வகைக் கழல். இதனை வீரச்சின்னமாக ஒற்றைக் காலில் அணிபவர்.
ஆபரணதவரு :- ஆபரணங்கள் அதிகமாக அணிந்து கொள்பவர்.
இண்டிவாரு :- அநேக வீடுகள் சொந்தமாகக் கட்டிக் கொண்டு வாழ்பவர்.
வஜ்ஜிரதவரு :- வஜ்ஜிரம் பற்றி வந்த பெயர்.
குந்திலவாரு :- குங்குலியவாரு என்பது இவ்வாறு வழங்கப்படுகிறது. பூசனையில் குங்குலிய தூபம் பயன்படுத்துபவர்.
சாரசூத்திரதவரு :- அறுவகைச் சூத்திரங்களில் ஒன்று சாரசூத்ரம் என்பது. இச் சூத்திரத்தில் வல்லவர்.
தூர்வாங்கிரம்தவரு :- தூர்வாங்கிரம்= அருகம்புல். அருகம்புல் கொண்டு பூசனை நிகழ்த்துபவர்.
பந்தருவாரு :- ஆந்திராவில் கிருஷ்ண ஜில்லாவில் உள்ள ஓர் ஊர் பந்தர். அவ்வூரைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
பெம்பலவாரு 

19 .உஷன மகரிஷி கோத்ரம்

சுக்ராச்சாரியாருக்கு உஷனன் என்பது பெயர் தாங்கியவர் சுக்ரர் ஆன வரலாறு மஹாபாரதம் சாந்தி பருவத்தில் காணப்படுகின்றது.

உஷனர் சிறந்த அறிவு நுணுக்கமும் தவ சித்தியும் கைவரப் பெற்றவர். ஒருமுறை இவர்தம் யோக பலத்தால் மறைந்தார். குபேரன் ஸ்தம்பித்து விட்டான். குபேரனின் தனம் - செல்வம் மறைக்கப்பட்டது. பின் உஷனர் குபேரனை விட்டு நீங்கினார்.

இதனால் வருத்தங்கொண்ட குபேரன் சிவபிரானிடம் முறையிட்டான். உஷனர் மீது கோபம் கொண்ட சிவபிரான் தம் சூலத்தை வில்லாக வளைத்தார். உஷனரைத் தன் வாயிலிட்டு விழுங்கினார். ஈசுவரனின் திருவயிற்றினுள் சஞ்சரித்தார் முனிவர். சிவபிரானின் யோகாக்னி அவரைத் தகிக்க தாங்க மாட்டாது சிவனைத் துதித்துக் கொண்டு அவர் வயிற்றிலிருந்து வெளிப்பட்டார். அவர் மீது கோபம் கொண்ட இறைவன் சூலத்தை ஓங்கக் கருணாகரியான அம்பிகை முனிவர் மீது கொண்ட கோபத்தைக் கைவிடச் செய்தாள். அம்பிகையின் புருஷகாரத்தினால் உஷனர் இறைவனின் வயிற்றில் இருந்து வெளிப்பட்டதால் இவர் சுக்ரர் எனப்பட்டார்.

தேவ குருவைக் காட்டிலும் மந்திர பலத்தில் இவர் விஞ்சியவர். தேவகுருவே தன் மகன் கசனை இவரிடம் வித்தை கற்க அனுப்பித் தமக்குத் தெரியாத மிருத்யு சஞ்சீவி மந்திரம் கற்றார்.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

தாரதம்மியதவரு :- தராதரம் அறிந்து பேசுபவர்கள்.
சிருங்காரகவியவரு :- அணிநலன்கள் சிறக்க அழகான கவிதைகள் இயற்றுபவர்.
பாலகவியவரு :- சிறு வயதிலேயே கவிபாடும் ஆற்றல் பெற்ற அதிசயவான்கள்.
ருத்ர வீணையதவரு :- ருத்ர வீணை என்னும் ஒருவகை வீணை வாசிப்பில் வல்லவர்கள்.
குறிப்பு :- இக் கோத்ர வங்குசப் பெயர்களைக் கொண்டு பார்த்தால் இக்கோத்திரத்தார் அனைவரும் சிறந்த கலை வல்லுனர்கள் எனத் தெரிகின்றது.

18 .உபமன்யு மகரிஷி கோத்ரம்

ரிஷி வரலாறு :- வியாக்ரபாத மகரிஷியின் குமாரர் என்பது ஆதித்ய புராணம். த்ருமன்யு என்பவரின் புத்திரர் என்பது சிவ ரகஸ்யத்தின் கருத்து. இவர் பிறந்த பின் தாய்ப்பால் இன்மையால் அரிசி மாவினைச் சர்க்கரை கலந்து ஐந்து வயது வரை ஊட்டினாள் தாய். இவரின் தாய் இவரை எடுத்துக்கொண்டு தன் சகோதரராகிய வசிஷ்ட முனிவர் ஆசிரமம் சென்றாள். அங்கு வஷிஸ்டரின் பத்தினியான அருந்ததி தேவியார் ஓமம் செய்து மீதம் இருந்த காமதேனுவின் பாலைத்தர, அதனை ஒரு மாதம் வரை உண்டு வளர்ந்தார்.

பின் அன்னை; மகனுடன் தம் ஆசிரமம் சென்றாள். அங்கு பழையபடி அரிசி மாவும் சர்க்கரையும் கரைத்துக் கொடுக்க அது வேண்டாம் காமதேனுவின் பாலே வேண்டும் என அழப் பூர்வத்தில் சிவபூசனை செய்தவர்க்கே அது கிடைக்கும் எனத் தாய் சொன்னாள்.

பின் தம் தந்தையிடம் தீட்சை பெற்றுத் திரிகூட மலையில் தவம் மேற்கொண்டார். சிவபிரான் இவருக்குக் காட்சி தந்து பாற்கடலை இவருக்குத் தந்தார்.

ஒரு முறை இவர் அதிதிகளுக்கு உணவு படைத்தது அந்தப் பரிகலத்தை வெளியில் எறிந்தார். அந்த எச்சம் அங்கு சாபத்தினால் பல்லி உருக்கொண்டு இருந்த தம்பதியர் இருவர் தலையில் பட தலை பொன்னுருவம் அடைந்தது. பூர்வ ஞானம் பெற்ற இருவரும் உபமன்யு முனிவரைத் துதித்து அவரால் தீர்த்த யாத்திரை செய்து சாப விமோசனம் பெற்றனர்.

மரிசீ முனிவரால் பேயுரு அடையுமாறு சில முனி குமாரர்கள் சாபம் பெற்றிருந்தனர். அவர்கள் உபமன்யு முனிவரின் தவத்தைக் கெடுக்க வர பஞ்சாட்சர மந்திரம் ஜெபித்து அவர்களின் பேயுருவை ஒழித்தார்.

இவரைச் சோதிக்க எண்ணிய சிவபிரான் இந்திரன் உருக்கொண்டு வந்து சிவ நிந்தனை செய்ய அகோராஸ்திர மந்திரம் ஜெபித்து விபூதி எடுத்து இந்திரன் உருவின் மீது வீசினார். அதனை நந்தி தேவர் தடுத்தவுடன் வேதனை கொண்டு சிவநிந்தனை கேட்டபின் உயிர்விட முயலுகையில் சிவபிரான் தரிசனம் தந்து வேண்டிய சித்திகளைக் கொடுத்தார்.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

சுகமிகயதவரு :- மிக்க சுகபோகங்களுடன் வாழ்ந்தவர்.
சூரியதவரு :- சூரிய வழிபாடு செய்பவர் . சூரியனை வீட்டுத் தெய்வமாகக் கொண்டவர்.
ஹெக்கடியதவரு :- ஹெக்கடி என்னும் வித்தையில் வல்லவர்.
மோடியதவரு :- மோடி போன்ற வித்தையில் வல்லவர்.
சுப்பண்ணதவரு :- சுப்பண்ணன் என்பவரின் வம்சா வழியினர்.
இக்கோத்திரத்தில் மேலும் காணப்படும் வங்குசங்கள் ஜரீகெயதவரு, சஞ்ஜெயதவரு, சூருமெயயதவரு

17 . இந்திரமனு இந்திரத்தூய்ம்ம தேவ மகரிஷி கோத்ரம்

இம்மூன்று ரிஷிப்பெயர்களும் ஒன்றுபோல் விளங்குகின்றன. வேறு வரலாறு புலப்படவில்லை.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

அமராவதிவாரு :- தவத்தினால் இந்திரனின் தலைநகரம் செல்லும் ஆற்றல் பெற்றவர்.
தேவலோகம்வாரு :- தம் நற்குண நற்செய்கைகளால் தாம் வாழும் இடத்தை தேவலோகம் போல் ஆக்குபவர். தவத்தால் தேவலோகம் சென்று மீளும் சக்தி உடையவர்.
கௌடனவாரு :- கன்னட நாட்டின் செட்டிகாரரை கெளடா என்று அழைப்பது வழக்கம். ஆந்திராவில் சேனாதிபதி எனவும் செட்ரு எனவும் அழைக்கின்றனர்.
பஸவ பத்திரியவரு :- பஸவபத்ரி என்பது ஒருவகை இலை. மணம் மிக்கது. பூசனைக்கு இவர்கள் இவ்விலைகளைப் பயன்படுத்துவர்.
ஹள்ளியவரு :-

16.ஆசுவலாயன மகரிஷி கோத்ரம்

ரிஷி வரலாறு :- விசுவாமித்ர மகரிஷியின் குமாரர். வேதத்தில் வல்லவர். சிறந்த தவசி. மானுட வாழ்வில் பதினாறு விதமான சமஸ்காரங்கள் இருக்கின்றன. அவை கர்ப்பதானம் முதலாக அந்தியேஷ்டி முடிவாகப் பதினாறாம். இவையே ஷோடஷ கர்மாக்கள் எனப்படும்.

தேவாங்கர் அனைவரும் ரிக்வேதிகள். ரிக்சாகையை அனுஸந்திக்க வேண்டியவர்கள்.

இப்பதினாறு காரியங்களுக்கும் உள்ள ரிக்வேத மந்திரங்களை ஆசுவலாயனர் தொகுத்து வழங்கினார். தேவாங்கர் அனைவரும் ஆசுவலாயன சூத்திரத்தைச் சார்ந்தவர். எனவே ஒவ்வொரு காரியச்சடங்கையும் ஆசுவலாயன சூத்ர மந்திரங்களைக் கொண்டு செய்துக் கொள்ள வேண்டும்.

ஆசுவலாயனர் கூறும் ஷோடச கர்மாக்கள் வருமாறு :-
1) கர்ப்பாதனம்
2) பும்சவனம்
3) சீமந்தம்
4) ஜாதகர்மம்
5) நாமகர்ணம்
6) சூடாகர்மம்
7) நிஷ்கிரமணம்
8) அன்னப்பிராசினம்
9) கர்ணவேதம்
10) உபநயனம்
11) வேதாரம்பம்
12) சமாவர்த்தனம்
13) விவாகம்
14) வானப்பிரஸ்தம்
15) சன்யாசம்
16) அந்தியேஷ்டி
என்பனவாகும்.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

ககனதவரு :- ஆகாசதவரு :- தவ ஆற்றலால் ஆகாய மார்க்கமாய்ச் செல்லும் ஆற்றல் பெற்றவர். வானளாவப் புகழ் கொண்டவர்.
குஞ்சம்வாரு :- நூல் பாவு செய்யும் குஞ்சம். இதனைச் செய்து தருபவர்.
சூரிவாரு :- சூரத்தனம் செய்பவர். சிறந்த வீரர்கள்.
நாரதவாரு :- நாரதமுனியைப் போன்றவர். நன்மையால் முடியும் கலகத்தைச் செய்பவர்.
நாரதரைப் போன்ற வேதக் கல்வியும், இசை ஞானமும் உடையவர். ஓயாது நாரணனைப் பூசிப்பவர்.
மத்தெளவரு ;- " மிருதங்க தவரு " என கன்னடத்தில் இப்பெயர் வழங்குகின்றது. மத்தள வாசிப்பில் வல்லவர்.
மருமாமிளவாரு :- 'மருமாமிள" என்ற ஊரைச் சார்ந்தவர்.
யதமெட்டுவாரு :- மெட்டு என்பது மேட்டு நிலத்தைக் குறிக்கும். யதமெட்டு என்னும் ஊரைச் சேர்ந்தவர்.

15.ஆஸ்ரித மகரிஷி கோத்ரம்

மகரிஷி வரலாறு புலப்படவில்லை.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

உஜ்ஜயினிதவரு :- உஜ்ஜயினி சென்று வீட்டுத் தெய்வம் வழிபடும் வழக்கம் உள்ளவர். அவ்வூரில் வசித்தவர்.
தேஜதவரு :- தவத்தாலும் ஆன்ம ஞானத்தாலும் வந்த ஒளி உள்ளவர். குறிப்பு :- தேஜா = குதிரை; குதிரை முதலான செல்வங்களை உடையவர். ஆஸரித தேவ மகரிஷி கோத்ரம் என ஒன்று காணப்படுகின்றது. மேற்கண்ட வந்குசங்களே இதிலும் காணப்படுவதால் இவ்விரண்டும் ஒரு கோத்ரமாய் இருக்கலாம்.
முத்தினதவரு:

14.ஆனந்த பைரவி மகரிஷி கோத்ரம்

மகரிஷி வரலாறு புலப்படவில்லை.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

சலாசனம்தவரு :- யோகாசனங்களில் சலாசனம் என்பது ஒருவகை. அந்த ஆசனம் போட்டு அமர்ந்து பூசனை செய்பவர்.

முக்தாபுரம்வாரு:- குண்டக்கல் அருகில் உள்ள முக்தாபுரத்தை சேர்ந்தவர்கள்.

13.ஆத்ரேய மகரிஷி கோத்ரம்

திருவல்லிக்கேணியில் பெருமாளைப் பிரதிஷ்டை செய்து பூசித்த ஒரு மகரிஷி.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

கெளரா பத்தினிதவரு :- கௌரி தேவியை வீட்டுத் தெய்வமாக பூசிப்பவர்.

12.அஸ்ர மகரிஷி கோத்ரம்

மகரிஷி வரலாறு புலப்படவில்லை.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

கோடிவாரு - கோடிதவரு :- கோடி என்னும் எண்ணிக்கையை பெயருடன் வைப்பவர். தனக்கோடி, நவகோடி என்பன போன்ற பெயர்கள் வைத்துக்கொள்பவர்.

11.அரித்ஸ மகரிஷி கோத்ரம்

பன்னிரன்டாவது மன்வந்திரத்துத் தேவர். இத்தெய்வத்தின் பெயர் தாங்கிய மகரிஷி இவர்.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

சௌனகதவரு :- பிரும்மபுத்திரர் சௌனகர். இம்மஹரிஷியை வீட்டுத் தெய்வமாக வணங்குபவர். இஷ்ட தெய்வமாகவும் கொண்டவர்.
ஜோளிகையதவரு :- ஜோல்னாபை என இக்காலத்தில் அழைக்கப்படுகின்றது. தோளில் இந்த ஜோளியைக் கட்டிக்கொண்டு உபாதனம் செய்து அதனால் தெய்வ வழிபாடு செய்பவர். எனவே இவர்களின் பற்றற்ற வாழ்க்கை விளங்கும்.
கேஸனதவரு :- அழகான தலைமுடி உள்ளவர்.
தேஜதவரு :- தவத்தாலும் ஆத்ம ஞானத்தாலும் மிகுந்த ஒளி உள்ளவர்.
உத்தானதவரு :- தானம் எனில் தருமம். உத்தானம் என்பது மிகச் சிறப்பாக உயர்ந்த தானங்களைத் தாராளமாகச் செய்பவர். தனக்கு என எதனையும் வைத்துக் கொள்ளாமல் இருப்பதை அனைத்தையும் தானம் செய்யும் வள்ளல் தன்மை கொண்டவர்.

10.அமர மகரிஷி கோத்ரம்

மகரிஷி வரலாறு புலப்படவில்லை.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

சர்ஜாதவரு :- சர்ஜா என்பது சிவலிங்கம் வைக்கும் பெட்டி. இப்பெட்டியினைத் தானம் செய்வதை வழக்கமாகக் கொண்டவர்.
அச்சுததவரு :- அச்சுதன் ஆன திருமாலை வீட்டு தெய்வமகாக் கொண்டவர். அவரைப் பூசிப்பவர்.
சஜ்ஜன்தவரு, ஆகதவரு, கல்லனதவரு என்பனவும் இக்கோத்ரத்தில் காணப்படுகின்றன.

9.அத்திரி மகரிஷி கோத்ரம்

மகரிஷி வரலாறு :- இம்மகரிஷி கடுமையான தவவிரதம் உடையவர். அசுரர்கள் ஒருமுறை இவரை நெருப்பில் தள்ளி விட்டனர். அசுவினி தேவர்கள் மகரிஷியைக் காப்பாற்றினர்.
ரிக்வேதம் 9-6-7; 10-143 வது ரிக்குகளுக்கும்
ஸாமவேதம் 1-4, 6-4, 8-7 வது சூக்தங்களுக்கும் இவர் கர்த்தா.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

அங்கம்தவரு :- பெருத்த வலிமையான உடல் உடையவர்.
அமராஜூலதவரு :- அமரகோசம் என்னும் நிகண்டில் வல்லவராகி அதனை அனைவருக்கும் கற்பித்தவர்.
கலம்தவரு :- கலம் கலமாக நெல்லைத் தானம் செய்தவர்.
குண்டாவாரு :- உடல் பெருத்து குண்டாக இருப்பவர்.
சம்புடதவரு :- விபூதி சம்புடத்துடன் எப்போதும் காட்சி தருபவர். யாத்ரா தானப் பொருள்களுள் விபூதி சம்புடம் ஒன்று. அதனைத் தானம் செய்வதை வழக்கமாகக் கொண்டவர்.
திருமண்வாரு :- திருமண் அணிபவர்.
துண்டாவாரு :- வெட்டொன்று துண்டிரண்டு எனக் கச்சிதமாகப் பேசுபவர்.
பண்டாரம்வாரு :- ஸ்ரீ சௌடேஸ்வரியின் பிரசாதமான மஞ்சள் ஸ்ரீ பண்டாரத்தைத் தட்டுக்களில் இட்டு ஊர்வலம் கொண்டு வருபவர். இது பண்டாரமெரவணெ என்று அழைக்கப்படுகின்றது.
பிர்ஜாவாரு :- பிர்ஜாவூர் என்னும் ஊரைச் சார்ந்தவர். ஆந்திராவில் இவ்வூர் உள்ளது.
மல்லிகார்ஜூனதவரு :- மல்லிகார்ஜூன சுவாமியைத் தம் வீட்டு தெய்வமாக வணங்குபவர். இவ் வங்குசத்தார் தம்மூத்த மகனுக்கு மல்லிகார்ஜூனன் என்றும் மூத்த மகளுக்கு மல்லிகா என்றும் பெயர் சூட்டுகின்றனர்.
மால்யம் வாரு :- திருக்கோயிலுக்கும், சுவாமிக்கும் பூமாலை கட்டித் தருவதைத் தருமமாகக் கொண்டவர்.
முடுபுலதவரு :- கொள்ளேகாலம் அருகில் முடுகுதுறை என்னும் ஊர் இருக்கின்றது. இங்கு 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பஞ்சலிங்க தரிசனம் என்னும் விழா இன்றளவும் சிறப்பாக நடந்து வருகின்றது. அவ்வூரிலிருந்து வந்தவர்.
லிங்க தவரு :- லிங்க தீட்சை செய்து கொள்பவர். லிங்க தீட்சை தருபவர். இவ்வங்குசத்தார் ஆண் பெண் பேதம் இன்றி லிங்க தீட்சை செய்து கொள்வர்.
வர்ஜவாரு :- தீமையைத் தள்ளி வாழ்பவர்.
வீரணம்வாரு :- இப்பெயர்தான், வீரண்ணா என்று வழங்குகின்றது. இவ்வங்குசத்தார் ஸ்ரீ சௌடேஸ்வரி அன்னையின் திருவிழாவில் வீரமுஷ்டி வேடம் அணிவதை வழக்கமாகக் கொண்டவர்.
அந்திலவாரு, சக்கனவாரு, பௌஜூலவாரு, யக்கலவாரு, யத்கலவாரு, யெக்கலவாரு என்பனவும் இக்கோத்ரத்தில் காணப்படுகின்றன.

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,
இந்த புதியபக்கம் நமது தேவாங்க சமூக செய்திகள்,சடங்குகள்,வரலாறு & அண்மை நிகழ்ச்சிகளை அறிந்துகொள்ளவும் தேவைப்படும் போது பார்க்கவும் உருவாக்கப் பட்டுள்ளது.

http://devanga2013.blogspot.in/

8.அதிவி மகரிஷி கோத்ரம்

மகரிஷி வரலாறு புலப்படவில்லை.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

தோலவாரு :- பூணுலில் தீட்டுப்படாமல் இருக்க, மான்தோல் புலித்தோல் இவற்றில் அமர்பவர். கடமான் தோலில் அமர்ந்து தவம் செய்யின் ஞானம் சித்திக்கும். வேங்கைப்புலித் தோலில் அமர்ந்து தவம் செய்தால் மோட்சம் சித்திக்கும். இதனால் இவ்வங்குசத்தார் சிறந்த தவசிகள் என்பது விளங்கும்.

7.அதித மகரிஷி கோத்ரம்

மகரிஷி வரலாறு :- வைராசனுக்கும் சம்பூதிக்கும் விஷ்ணுவின் அம்சமாய் உதித்த ஒரு மகான் ஆவார்.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

ருணம்வாரு :- வருணதேவனைப் பூசிப்பவர். இவ்வங்குசம் வாருணம் வாரு எனவும் அழைக்கப்படுகின்றது.
பன்வெனவாரு 

6.அட்சய தேவரிஷி கோத்ரம்

க்ஷ்யம் குறைதல். அக்ஷ்யம் எனில் எக்காலத்தும் குறையாது இருத்தல். எனவே எக்காலத்தும் குறையாது நிரம்பி தவவன்மை உடைய ஒரு மகரிஷி இவர்.வேறு வரலாறு புலப்படவில்லை.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

தொட்டதாலயவரு :- பெரிய தாலியை அணிபவர். இவ்வங்குசத்தில் பெண்கள் அணியும் தாலி மற்றவர் அணிவதைவிடப் பெரியது.
பெடகேரியவரு :- பெடகேரி என்னும் ஊர் வடகர் நாடகம் தார்வாரில் இருக்கின்றது. இவ்வூர்க்காரர்கள்.

5.அஞ்சன தேவரிஷி கோத்ரம்

மகரிஷி வரலாறு புலப்படவில்லை.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

நாண்யதவரு :- ஒழுக்கத்துடன் நாணயத்துடன் வாழ்பவர்.
பங்காரதவரு :- பங்காரு - தங்கம்; தங்கமான குணம் கொண்டவர். பொன் நகை அணிவதில் விருப்பம் கொண்டவர். பொன் வணிகம் செய்பவர்.
ரத்நதவரு :- நவரத்தின வணிகம் செய்பவர். நவரத்தினங்கள் அணிவதில் விருப்பம் கொண்டவர்.

4. அச்சுத மகரிஷி கோத்ரம்

மகரிஷி வரலாறு :- அச்சுதன் - எக்காலத்தும் அழிவில்லாதவன். திருமாலின் திருநாமங்களுள் ஒன்று. இப்பெயர் தாங்கிய மகரிஷி இவர். வேறு வரலாறு புலப்படவில்லை.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

ரத்நாலவாரு :- நவரத்தின வணிகம் செய்பவர். ரத்தினங்களை விரும்பி அணிபவர்.

3. அசிதேவ மகரிஷி கோத்ரம்

மகரிஷியின் வரலாறு :- மஹாபாரதத்தினுள் இம்முனிவர் பெயர் பல இடங்களில்காணப்படுகின்றது.இம் முனிவர் வியாசரின் மாணாக்கரில் ஒருவர். இந்திரப்பிரஸ்தத்தில் தருமன் அரசாண்டு கொண்டிருந்தபோது நாரதர்அவனிடம்வந்தார். திரிலோகங்களிலும் சஞ்சாரம் செய்து தாம் கண்ட சபைகளின் சிறப்புகளையெல்லாம் தருமனின் வேண்டுகோளின் படி கூறினார்.

ஆயிரம் ஆண்டுகள் மனதை அடக்கி பிரம்ம விரதம் என்னும் தவம செய்து முடித்துப் பிரம்ம சபைக்குச் சென்றேன். பிரம்மசபை சொல்லுக்கெட்டா வடிவங்களையும் பிரகாசத்தையும் கொண்டது.

உபபிரம்மாக்களும் அகத்தியரும் அஸிதரும் தேவலருமான மஹரிஷிகள் அங்கிருந்தனர் என்று நாரதர் கூறினார். இம்மஹரிஷிகள் இருப்பது சபைக்குச் சிறப்பு என்றார் நாரதர். கீதையில் விபூதி யோகத்தில் " அஸிதோ தேவலோ " என்ற ஸ்லோகத்தில் அசிதர் தேவலர் இவர்களால் வணங்கப்படும் பெருமை கண்ணனுக்கு இருக்கின்றதென்று அர்ச்சுணன் கூறுகின்றான்.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

அந்தலதவரு - ஏந்தேலாரு :- அந்தலம் என்பது ஒருவகைக் கழல். காற்சிலம்பு போன்றது. இச்சிலம்பினை ஒற்றைக்காலில் அணிபவர். இப்பெயர்தான் ஏந்தலதவரு, ஏந்தேலாரு என மருவியிருக்கின்றது.
அமராஜூலதவரு :- அமரகோசம் என்னும் நிகண்டில் வல்லவர். இந்நிகண்டினை அனைவருக்கும் கற்பித்தவர்.
கடுபுலதவரு :- கடுப்பு என்பது தெலுங்கு மொழியில் வயிற்றைக் குறிக்கும். வயிற்றினை ஒட்டி வந்த பெயர்.
திருமன்வாறு :- திருமண் - நாமம் இட்டுக் கொள்பவர்.
பந்தாருதவரு :- பந்தாரி என்பது ஒரு வகைச் செடி. இச் செடியருகில் தம் க்ருஹ தேவதையை வீட்டு தெய்வமாக வணங்குபவர்.
பௌஞ்சலதவரு :- இவர்களுக்கு உஞ்சதவரு என்றும் பெயர். மாங்கல்யம், பூணுல் இவற்றை தானம் செய்பவர்.
ஆகலிவாரு :- ஆகலி செட்டு என்பதும் ஆகலி என்பதும் ஒருவகை மரம்.இம்மரத்தடியில் தம் தெய்வத்தை வணங்குபவராக இருக்கலாம்.பசிக்கும் ஆகலி எனப்பெயர்.
வர்ஜாவாரு :- தீமைகளைத் தள்ளி வாழ்பவர்.

2. அகர்ச்ச மகரிஷி கோத்ரம்

மகரிஷியின் வரலாறு புலப்படவில்லை.உரோமகருஷணருக்கும் சுகுருக்கும் மாணாக்கராக அகரத்த விருஷணர் என்பவர் இருந்தார் . அகர்ச்ச மகரிஷியும் இவரும் ஒருவரா ? இல்லை வேறானவர்களா ? என்பது புலப்படவில்லை.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

அதிகானதவரு :- கானம் - சங்கீதம்; சங்கீதத்தில் தெளிந்த ஞானம் உள்ளவர். இக்கலையில் வல்லவர். மிக இனிமையாக பாடக்கூடியவர்.
மன்டூகதவரு :- மண்டூக பூஜா விதிப்படி பூசனை செய்பவர்.
கார்யதவரு :- தங்கள் காரியத்தில் அதிக கவனம் செலுத்துபவர். காரியங்கள் செய்து முடிப்பதில் திறமையானவர்.
பத்யதவரு :- அடிக்கடி பட்டினி கிடந்தது நோன்பு நோற்பவர்.
முத்கலதவரு :- முத்கல மகரிஷியை வீட்டுத் தெய்வமாக வணங்குபவர்

1.அகத்திய மகரிஷி கோத்ரம்

ரிக் வேதத்தில் அகத்தியருடைய பிறப்பு கூறப்படுகின்றது. கடும் விஷங்களை நீக்கக் கூடிய மந்திரங்களை அகத்தியர் செய்தார். அவை ரிக் வேதத்தில் 1 - 191 வது ரிக்காக விளுங்குகின்றன. இதனை மௌனமாய் உச்சரிக்கச் சகல விஷத் தொல்லைகளும் நீங்கும். கேலன் என்ற மன்னனுக்குப் புரோகிதராய் இருந்தார். அப்போது ரிக்வேதத்தில் 1 -165 -192 -ல் இருக்கும் ரிக்குகளைச் செய்தார்.

அகத்திய மாமுனி காலத்தைக் கடந்த, காலத்தை வென்ற ஒரு மாமுனியாவர். முன்பிறப்பில் அவருக்கு ஜடராக்கினி, தஹராக்கினி என்பன பெயர்கள் எனபாகவதம் அறிவிக்கின்றது.

ஸ்வாயம்புவ மன்வந்திரத்தில் தத்தோளி என்ற திருநாமத்துடன்விளங்கினார் என விஷ்ணு புராணமும் முழங்குகிறது.

இவற்றால் அகத்தியரின் அளவற்ற பெருமைகள் விளங்கும்.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

லத்திகார்ரு :- லதாலதவரு என்னும் பெயர்தான் லத்திகார்ரு என மருவி உள்ளது. லதா என்றால் கொடி என்று பொருள். இவர்கள் கொடிபோல் எங்கும் பரந்து படர்ந்து இருப்பர். எனவே லதாலதவரு என்னும் பெயர் பெற்றனர்
பசுபுலதவரு :- திருமணத்தில் மஞ்சள் கொம்பு மரியாதை பெறுவதாலும் ஸ்ரீ சௌடேஸ்வரி அம்மன் திருவிழாவிற்கு மஞ்சள் பண்டாரம் தரும் திருப்பணியைச் செய்வதாலும் பெற்ற பெயர்.
முத்தினதவரு :- மன்னன் ஒருவனக்கு முத்து ஒன்றின் விலை மதிப்பினைப் பற்றிய சந்தேகம் ஏற்பட்டது. மற்றவர்களால் தீர்க்கமுடியாத அச்சந்தேகத்தைத் ததீர்த்து முத்தின் சரியான மதிப்பைக் கூறியதால் மன்னன் மகிழ்ந்து சன்மானங்கள் வழங்கினான்.அம்மரியாதை இன்று முத்தின வீளேவு என்று தரப்படுகின்றது .
மண்டோதரியவரு :- சிறந்த பத்தினிப் பெண் ஆன மண்டோதரியை வீட்டு தெய்வமாக வணங்குபவர்.
கரிகெதவரு :- கரிகெ - அருகம்புல் . அருகம்புல் கொண்டு வழிபாடு நடத்துபவர்.
கிருஷ்ணராய பூஷண தவரு :- இப்பெயர் கிருஷ்ணாய பூஷணம் வாரு என வழங்கப்படுகின்றது. விஜய நகர சாம்ராஜ்ய சக்ரவர்த்தி கிருஷ்ண தேவராயர் அவரிடம் பூஷணங்கள் - ஆபரணங்கள் - சன்மானமாகப் பெற்றவர்.
சரிகெதவரு :- சரியை, கிரியை, யோகம், ஞானம் என்பன சாதன சதுஷ்டயம் எனப்படும். இவற்றுள் சரியை என்னும் கர்மாவில் உயர்ந்தவர்.
சிரிகஞ்சுவாரு :- கோபத்தை விட்டவர். அமைதியானவர்.
துப்பட்டிவாரு :- துப்பட்டி நெய்வதில் சிறந்தவர்.
மிஞ்சிலாரு :- காலில் மிஞ்சு அணிந்தவர். (கால் விரலில் அணியும் அணி இது.)
முக்கரதவரரு :- முக்கரம் - மூக்குத்தி; மூக்குத்தி அணிந்தவர்.
முத்கரதவரு :- காயத்ரிதேவியின் வழிபாட்டிற்கு உரிய முத்திரைகள் இருபத்தி நான்கு. அதில் முத்கரமுத்திரை ஒன்று. சங்கு சக்கரங்களை தோளில் பொறித்துக் கொள்வதுபோல் தம் தோளில் முத்கர முத்திரையை தரித்துக் கொண்டவர்.
விஞ்சாமரதவரு :- ஸ்ரீ சௌடேஸ்வரி அம்மனுக்கு வெண்சாமரம் வீசும் திருத்தொண்டு செய்பவர்.
ஸ்யாமபுரதவரு :- ஸ்யாமபுரத்தில் வசித்தவர்.
காடிலவாரு, போசாவாரு, லப்பிவாரு, வுங்கரவாரு என்பனவும் இக்கோத்திரத்தில் காணப்படுகின்றன. லதிகார்ருக்கு உரிய வீளேவு மரியாதைகள் அர்ச்சக வீளேவு. - இது பூசாரி வீளேவு என்று சொல்லப்படுகின்றது. முத்தின வீளேவு சின்னஞ்செட்டி வீளேவு.

அகத்திய மகரிஷி கோத்ரத்தைச் சார்ந்த கூழவாடு சின்னஞ்செட்டி என்பவர் கடும் பஞ்ச காலத்தில் எல்லோர்க்கும் உணவளித்துக் காப்பாற்றினார். அதனை நன்றியுடன் நினைத்துப் பார்க்கும் வீளேவுதான் சின்னஞ்செட்டி வீளேவு ஆகும்.

பூசாரி வீளேவு என்பதும் அர்ச்சக வீளேவு என்பதும் ஒன்றே.

அகத்திய, சதானந்த, கௌஷிக, வரதந்து மற்றும் ஜமதக்னி என்னும் ஐந்து கோத்ரத்தாருக்கும் இவ்வீளேவு பொதுவாம்.