அன்புடையீர் நல்வரவு ,

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,
தேவாங்கர்களாகிய நாம் அனைவரும் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்து வந்தாலும் தேவாங்கர் என்னும் உணர்வு நம்மை ஓன்று சேர்க்கிறது. மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்ற வாக்கிற்கு இணங்க காலத்திற்கு ஏற்ப நாம் நமது குல நிகழ்வுகளை தகுந்த தொழில்நுட்பத்தை கொண்டு பதிவு செய்வது அவசியமான ஓன்று.

இந்த புதியபக்கம் நமது தேவாங்க சமூக செய்திகள்,சடங்குகள்,வரலாறு & அண்மை நிகழ்ச்சிகளை அறிந்துகொள்ளவும் தேவைப்படும் போது பார்க்கவும் உருவாக்கப் பட்டுள்ளது.
உறவுகள் தங்கள் பகுதியில் உள்ள கோவில்&குல தெய்வம் கோவில்களில் நடைபெறும் திருவிழா நிகழ்ச்சிகள் மற்றும் படங்களை இடம்பெற செய்யவும்.

தங்கள் கருத்துக்கள் இந்த தளத்தை மேன்படுத்த உதவும் ஆகயால் தயவுசெய்து கருத்திடவும் . ( தமிழில் கருத்திட தமிழ் எழுதியை பயன்படுத்தவும்)

நன்றி.

5/21/13

எதையும் பிளான் பண்ணி பண்ணனும்

நிர்மலா ஹாஸ்பிடல். 

பரபரப்புடன் காணப்பட்டாள் சுமதி. 

"டாக்டர்... இப்போ எப்படி இருக்கார்.?" 

"கொஞ்சம் சிவியர் அட்டாக்தாம்மா...நிறைய பிளட் கிலாட் இருக்கு.ஹெவியான இன்ஜெக்சன் போட்டிருக்கோம்.மானிடரிங் நடக்குது." 

 "ரொம்ப சீரியஸா டாக்டர்,,?" 

 "ம்ம்ம்...இதுக்கு முன்னாடி இதுபோல வந்திருக்கா..?" 

 "இதுதான் பர்ஸ்ட் டாக்டர்.காலையில ஆபிஸ் போறதுக்கு பைக்க எடுத்தாரு.அப்படியே நெஞ்சு வலிக்குதுன்னு உட்கார்த்து விட்டார்."

 "சரி.நான் மாத்திரை எழுதித் தாறேன் .டெய்லி சாப்ட சொல்லணும்..." 

"மாத்திரையில சரியாகிடுமா டாக்டர்."

 "ஆகலாம்.ஆகாமலும் போகலாம்..." 

"அப்படினா ஆபரேசன் செஞ்சிடுங்க டாக்டர். " தாமதிக்காமல் சொன்னாள். 

"நீங்கள் அவருடைய மனைவியா..? வாரிசு இருக்காங்களா..?"

 தயக்கத்துடன், "ஆமா டாக்டர்.இரண்டாவது மனைவி.வாரிசு எதுவும் இல்லை.முறைப்படி விவாகரத்து வாங்கிட்டுதான் திருமணம் செய்தார்."

 "ஆபரேசன் -னா நிறைய செலவாகுமேம்மா..." 

 "அதைப்பற்றி கவலையில்லை டாக்டர்.நீங்கள் உடனே ஆபரேசன் செய்யுங்கள்.முடிந்தவுடன் பணம் கட்டுகிறேன்." 

"சாரிம்மா..இங்கே ஆபரேசன் செய்யும் முன்பே மொத்தப் பணத்தையும் கட்டவேண்டும்." 

"இப்போ கையில ஏதும் பணமில்லையே டாக்டர்.." 

"ஆபரேசன் முடிந்த பிறகு மட்டும் எங்கிருந்து பணம் வரும்...? "

 "அவரை நான் பத்து லட்ச ரூபாய்க்கு இன்ஸ்யூர் செய்திருக்கேன்..."

 (டாக்டர் மைன்ட் வாய்ஸ்.. "அடி நாசமத்துப்போறவ...என் 'கைராசி'யைப் பத்தி நாலு பேருகிட்ட விசாரித்துட்டுதான் வந்திருக்கா..." )

அடியேன் அளிக்கும் தண்டனை !

அயோத்தி அரசன் ராமபிரான், மக்களின் மனநிலையை அறிய எண்ணினார். சாதாரண மனிதனின் கோலத்தில் தம்பி லட்சுமணனுடன் சென்றார். ஆற்றங்கரையில் அதுவரை பார்த்திராத துறவி ஒருவரைப் பார்த்தார். ஆச்சார சீலராகக் காட்சி தந்தார் அவர்.
ஆற்றில் மூழ்கி தனது அனுஷ்டானங்களை முடித்துக் கொண்டு, பிறகு ஜபம் செய்யத் தொடங்கினார் துறவி. சிறிது நேரத்தில், ஹோமம் செய்வதற்கான சமித்துகளை எடுத்துக் கொண்டு அமர்ந்தார். சரி இவர் வேள்விதான் செய்யப் போகிறார் என்று எண்ணி, ஓர் ஓரத்தில் அமர்ந்து அவர் செய்வதை கவனித்தார் ராமபிரான்.
துறவியோ, கையில் வைத்திருந்த துணி மூட்டையில் இருந்து, மாவு எடுத்து பாத்திரத்தில் இட்டுப் பிசைந்து, சமித்துகளில் தீ மூட்டி, ஆறு ரொட்டிகளைச் சுட்டார். இரண்டில் தேனும், இரண்டில் நெய்யும், மீதி இரண்டில் ஊறுகாயும் தடவி வைத்தார். பிறகு மீண்டும் ஜபம் செய்தார். சிறிது நேரம் சென்றது. கண்திறந்த துறவி, ரொட்டிகளை எடுத்து வைத்து, சாப்பிட அமர்ந்தார்.
அந்த நேரம், பசியால் வாடிய பெரியவர் ஒருவர் அவ்வழியே வந்தார். பார்க்க பரிதாபமாக இருக்கவே, துறவி அவரை அழைத்து, ஊறுகாய் தடவிய ரொட்டிகளைக் கொடுத்து உண்ணச் சொன்னார். மீண்டும் கண் மூடி தியானத்தில் ஆழ்ந்தார்.
திரும்பவும் கண்விழித்து எழுந்து, தேன் தடவிய இரண்டு ரொட்டிகளை எடுத்துக் கொண்டு சாப்பிட அமர்ந்தார். அந்த நேரம் வாடிய நிலையில் ஒரு சிறுமி அவ்வழியே வந்தாள். அவளைப் பார்த்து இரக்கப்பட்ட துறவி, அந்த ரொட்டியை அவளுக்குக் கொடுத்து சாப்பிடச் சொன்னார். பிறகு மீதி இருந்த நெய் தடவிய ரொட்டியை எடுத்துக் கொண்டு ஆற்றங்கரைக்குச் சென்றார். ரொட்டிகளை சிறிதுசிறிதாகப் பிய்த்து, மீன்களுக்குப் போட்டார். பிறகு திரும்பி வந்து, சமித்துகள் எரிந்த சாம்பலை எடுத்து பாத்திரத்தில் வைத்து, ஆற்று நீரை அதில் சேர்த்து, சாம்பலைக் கரைத்து குடித்துவிட்டு அமர்ந்தார்.
துறவியின் இந்த செய்கை, ராமபிரானுக்கு ஆச்சரியத்தை அளித்தது. நேரே துறவியிடம் சென்று அவர் செய்கைக்கான காரணத்தைக் கேட்டார்.
துறவி சொன்னார்: ”ஸ்நானம் செய்து முடித்து ஜபத்தில் அமர்ந்தேன். அப்போது, பையில் இருந்த மாவுதான் நினைவுக்கு வந்தது. அந்த மாவினை ரொட்டி சுட்டு, தேனும் நெய்யும் கலந்து சாப்பிட வேண்டும் என்று மனது ஆசைப்பட்டது. அந்த மனதை திருப்திப்படுத்த வேண்டும் என்பதற்காக ரொட்டி சுட்டேன்…”
”ரொட்டி சுட்டீர்கள் சரி… ஆனால் நீங்கள் ஏன் அவற்றை உண்ணவில்லை ஸ்வாமி?” – கேட்டார் ராமபிரான்.
”துறவி என்பவன் புலன்களை அடக்க வேண்டும். எவ்வளவோ முயற்சி செய்து அடக்கினேன். ஆனால், மனது மட்டும் அவ்வப்போது அடம் பிடிக்கிறது. அதன் போக்கில் விட்டு, பிறகுதான் அதற்கு தண்டனை தரவேண்டும். சாம்பலாகப் போகும் இந்த உடலுக்குள் இருந்து கொண்டு, என்னமாய்ப் படுத்துகிறது இந்த மனது?! அதனால், இந்தச் சாம்பல்தான் இன்று ஆகாரம் என்று மனதுக்குக் கட்டளையிட்டு அதையே சாப்பிட்டேன். இதுதான் அடங்க மறுக்கும் மனத்துக்கு அடியேன் அளிக்கும் தண்டனை!” என்றார் மெதுவாக!

42 .கௌண்டல்ய கௌண்டின்ய மகரிஷி கோத்ரம்

இம்மகரிஷி அநந்த பத்மநாப சுவாமி விரத்தினால் சித்தியடைந்தவர். வேறு வரலாறு புலப்படவில்லை.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

கொத்ததவரு :- புதியவர்கள்.
தேவனதவரு :- தேவஸ்தானத்தில் ஊழியம் செய்பவர். ஆலயங்களில் சேவை செய்பவர்.
கேகத்திதவரு :- சே = கை; கையும் கத்தியுமாக இருப்பவர்.
கொப்பலதவரு :- மைசூரில் பெல்காம் அருகில் கொப்பல் என்னும் ஊர் இருக்கின்றது. அவ்வூரைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
கொம்பாலதவரு :- வெப்பாலை மரத்தடியில் வீட்டுத் தெய்வ வழிபாடு செய்பவர்.
கோபாலதவரு :- வேணுகோபால சுவாமியை வீட்டுத் தெய்வமாக வழிபடுபவர்.
பந்துலுதவரு :- பந்துலு=ஆசிரியர்; ஆசிரியர் பணி செய்தவர்.
பாபனபல்லெதவரு :- ஆந்திராவில் பாபனபெல்ல என்னும் ஊர் இருக்கின்றது. அவ்வூரைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
மீசாலதவரு :- மீசையழகுள்ளவர்
தாடிவாலு :- தாடியழகுள்ளவர்
யர்ராதவரு :- யர்ரா - சிகப்பு நிறம்; சிவந்த மேனி உடையவர்.

41 .கெளசிக மகரிஷி கோத்ரம்

கௌசிக மகரிஷி பிரம்மரிஷி ஆவார்.இவரின் தந்தை குத்சக மகரிஷி ஆவார்.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

அந்தலதாரு - ஏந்தேலாரு :- அந்தலதாரு என்னும் பெயர் தான் ஏந்தேலாரு என்று மருவி வழங்குகின்றது. அந்தலம் என்பது சிலம்பு போன்ற ஒருவகைக் கழல். இதனை வீரத்தின் சின்னமாக ஒற்றைக் காலில் அணிவர்.
கும்மடியவரு :- கும்மிடிப்பூண்டி என்னும் ஊரைப் அவ்வூரைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
கொப்பலதவரு :- மைசூர் மாநிலத்தில் கொப்பல் என்னும் ஊரைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
திலகதவரு :- நெற்றியில் கஸ்தூரித் திலகம் அணிபவர்.
மதுராதவரு :- வடமதுரையைப் பூர்வீகமாகக் கொண்டவர். இவ்வடமதுரை முக்தி தரும் ஏழு நகரங்களுள் ஒன்று.
எதுகலூருதவரு :- யதுலுருதவரு என்றும் இவ்வங்குசம் வழங்கப்படுகின்றது. ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள ஓர் ஊர் எதுகலூர் என்பது. அவ்வூரைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
தம்பூரதவரு :- தம்புரா - வீணை கொண்டு இசைப்பாடித் திகழ்ந்தவர்.
எக்கலதவரு :- எக்கலாதேவி என்னும் தெய்வத்தை வீட்டுத் தெய்வமாக வணங்குபவர்.
லக்கிம்செட்டுதவரு :- மிக்க அதிர்ஷ்டசாலிகள்.
ஜபதவரு :- ஜபதபங்கள் சிரத்தையுடன் செய்பவர்.
நோபிதவரு :-
கௌம்சிக தேவரிஷி கோத்ரம் என்பதும் இக்கோத்ரமும் ஒன்றே.
சிக்கனதவரு :-
பெனகனதவரு :-
பெகினதவரு :- என்ற மூன்று வங்குசங்கள் இதனுள் வருகின்றன.

40 .கும்ப சம்பவ மகரிஷி கோத்ரம்

அகத்தியருக்குக் கும்பசம்பவர் என்று காரணப்பெயர். கும்பத்தில் இருந்து பிறந்தவர். என்பது இதன் பொருள். அகத்திய மகரிஷி கோத்ரமும் கும்பசம்பவ மகரிஷி கோத்ரமும் ஒன்றே. இதனுள் காணப்படும் வங்குசங்கள் அனைத்தும் ஒன்றே. இவ்வடமொழிப் பெயரின் பொருளை அறியாமல் தனிக் கோத்ரமாகக் கோத்து இருக்கின்றனர்.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

கரிகெதவரு :- கரிகெ - அருகம்புல். அருகினால் வழிபடுபவர்.
துப்படிதவரு :- துப்பட்டி நெய்பவர்.
விஞ்சாமரதவரு :- ஸ்ரீ சௌடேஸ்வரி அம்மனுக்கு வெண்சாமரம் வீசுபாவர்.

39 .குத்தால மகரிஷி கோத்ரம்

மகரிஷி வரலாறு புலப்படவில்லை. ஆனால் குதாலதவரு என்னும் வங்குசத்தினர் இவரை வழிபடுகின்றனர்.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

கொத்துதவரு :- பெயர் விளக்கம் புலப்படவில்லை.
கொத்ததவரு :-

38 .குத்ஸக மகரிஷி கோத்ரம்

மகரிஷி வரலாறு :- கடகம் என்னும் ஊரில் வாழ்ந்தவர் இம்முனிவர். இவரின் மகன் தான் கௌசிக மகரிஷி. குத்ஸகர் தம் மகனுக்கு ஏற்ற பெண் வேண்டும் எனப் பெண் தேடினார். உசத்திய மகரிஷியின் பெண் விருந்தை என்பாள் அழகாலும் குனங்களாலும் மிக்கவள் என கேள்விப்பட்டார். உசத்தியரிடம் பெண் கேட்கப் புறப்பட்டார்.

விருந்தையை ஒருநாள் காட்டுயானை ஒன்று துரத்த உயிர் பிழைக்க ஓடிய விருந்தை மடு ஒன்றில் தவறி விழுந்து உயிர் விட்டாள். இந்நிலையில் பெண் கேட்க வந்த குத்ஸகர் செய்தியைக் கேள்விப்பட்டார். விருந்தையை உயர்ப்பிக்கத் தவம் செய்தார். அப்போது காட்டுயானை ஒன்று குத்ஸகரைத் தூக்கிக் கொண்டு காட்டினுள் சென்றது. யானையிடம் அதன் பூர்வீகத்தைக் கேட்டார் முனிவர்.

ஐயனே! நான் தனதத்தன் என்ற பெயர் உள்ளவன். தரும நெறியைக் கைவிட்டேன். பொன்னாசையால் ரசவாதம் செய்தேன். அந்தப் பாதகத்தால் யானை உருப் பெற்றேன். என்றது யானை.

கருணை வள்ளலான முனிவர் தம் தவ வன்மையின் ஒரு பாகத்தை யானை உருக் கொண்டவனுக்குத்தர அவன் சாபம் நீங்கித் தேவ உருக்கொண்டு சுவர்க்கம் சென்றான்.

மீண்டும் தவம் இயற்றி விருந்தையின் உயிரை யமதர்மன் அருளால் மீட்டார். அதன் பின் விருந்தையைத் தம் மகன் கௌசிகனுக்கு மணமுடித்தார். பின் தவம் இயற்றச் சென்றார்.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

கோணங்கிதவரு :- நகைச்சுவை உணர்வு மிக்கவர். தம்பேச்சாலும் அங்கசேட்டைகளாலும் சிரிக்கச் செய்பவர்.
தம்பூரிதவரு :- தம்பூரா என்னும் இசைக் கருவி வாசிப்பதில் வல்லவர்.
ஜாஜிதவரு - ஜாஜிமல்லினதவரு :- ஜாதி மல்லிப்பூவால் வழிபாடு செய்பவர்.
கொம்மனதவரு :-

வரதந்து வரதந்திர மகரிஷி


பூளவாடி ராமலிங்க சவுண்டேஷ்வரி அம்மன் கோவில் கோப்புகள்182 .வரதந்து வரதந்திர மகரிஷி கோத்ரம்

மகரிஷி வரலாறு சரியாகப் புலப்படவில்லை, காளிதாசனின் ரகுவம்ச காவியத்தில் இம்மகரிஷியின் வரலாற்றுக் குறிப்பு ஒன்று காணப்படுகிறது. செவி வழிக் கேள்வியாக சில செய்திகள் கிடைத்தன அவை வருமாறு :-

வரதந்து மகரிஷியிடம் முனிவர் ஒருவர் சீடராய் இருந்து வேதங்களைக் கற்றார். முனிவரின் வித்யாப்பியாசம் முடிந்தவுடன் வரதந்து மகரிஷிக்கு அவர் குருதட்சிணை கொடுக்க விரும்பினார்.

ஆனால் வரதந்து மகரிஷியோ குருதட்சிணை வேண்டாம் என மறுத்தார். சீடர் வற்புறுத்தவே அவர் குறுதட்சிணை ஏற்க ஒப்புக்கொண்டார்.

குருதட்சணை நிமித்தமாக முனிவர் விஸ்வஜித் என்னும் மன்னனிடம் சென்றார். மன்னன் விஸ்வஜித் முனிவரின் சீடர். தன் குருவின் குருவிற்குக் குறுதட்சிணை கொடுக்க விஸ்வஜித் விரும்பினான்.

ஆனால் அன்று முன்தினம் தான் விஸ்வஜித் தான் செய்தயாக முன்னிலையில் தன் பொன் பொருள் அத்தனையும் தானம் செய்து விட்டு, மண் பாத்திரத்தில் உண்ணும் நிலையில் இருந்தான்.

இந்நிலையில் குருதட்சினைக்குரிய பொன்னுக்கு என்ன செய்வது! என்று ஆலோசித்தான். தன் நால்வகைப் படைகளுடன் குபேரன் மீது போர் தொடுப்பது என்ற முடிவினுக்கு வந்து படைகளைச் சித்தம் செய்ய ஆணையிட்டான்.

இதனைக் குபேரன் கேள்விப்பட்டான். மன்னனின் வீரம் தன்னை வென்று விடும் என்று நினைத்து, போரைத் தவிர்க்க விரும்பினான். அன்று இரவு மன்னனின் நகர் முழுவதும் பொன்மழை பொழிந்தான் குபேரன். எனவே போர் நின்றது. மன்னனிடம் குருவிட்குச் செலுத்த வேண்டிய பொன்னை மட்டும் பெற்றுக்கொண்டு முனிவர் புறப்பட்டார். வரதந்து மகரிஷி குருதட்சிணை பெற்றார். மற்ற பொன் முழுதும் நகர மக்களுக்குத் தானம் செய்தான் விஸ்வஜித்.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

கப்பேலாரு, கபாலதவரு :- கபாலதவரு என்ற பெயரே கப்பேலாரு என மருவி வழங்கப்படுகிறது. பிரம்ம கபாலம் வைத்து ஸ்ரீ ராஜராஜேஸ்வரியை வழிபடும் வழக்கம் உடையவர்.
ஆஸ்யதவரு :- ஹாஸ்யம் - நகைச்சுவை. இவர்கள் நவரசங்களுள் ஒன்றான நகைச்சுவை உணர்வு மிக்கவர். சிரிக்கச் சிரிக்கப் பேசுபவர்.
கபிலதவரு :- கபில முனிவரால் ஸ்தாபிக்கப் பெற்ற கபிலேஸ்வரரைக் குடும்ப தெய்வமாக வணங்குபவர். ( கங்கை கடலுடன் கலக்கும் இடத்தில் கபிலேஸ்வரர் ஆலயம் விளங்குகின்றது. கல்கத்தாவில் இருந்து நூறு மைல் தூரத்தில் இவ்வாலயம் உள்ளது. ஆண்டு முழுவதும் இவ்வாலயம் தண்ணீருக்குள் முழுகி இருக்கும். தை மாதம் முதல் நாளிலிருந்து மூன்று நாட்கள் தண்ணீர் மூன்று மைல் தூரம் தள்ளி ஓடுகின்றது. இம் மூன்று நாட்களில் மட்டும் ஆலயம் மணலில் வெளிப்பட்டுத் தோன்றும். அப்பொழுது லட்சக் கணக்கான மக்கள் இக் கபிலேஸ்வரரைத் தரிசித்து பேரு பெறுகின்றனர்.)
கப்பெரெதவரு :- கபாலத்தைக் கப்பரெ என்று கூறுவது வழக்கம். ஒருவகைப் பாத்திரத்திற்கும் கப்பரை என்று பெயர்.
கோட்டூராரு :- கோட்டூரைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
கைலைதவரு :- கயிலைநாதனை வழிபடும் வழக்கம் உள்ளவர்.
சென்னாதவரு :- சென்னாரவல்லியை வீட்டுத் தெய்வமாக வழிபடுபவர்.
நாபதவரு :- நாபம் ஒருவகைக் கல். இக்கல்லில் விக்கிரகம் செய்து வழிபட்டவர்.
பம்மிடிதவரு :- பம்மிடி - அகல் விளக்கு. அகல்விளக்கு செய்து தானம் கொடுத்தவர். இவர்களின் வழிபாட்டில் அகல்விளக்கு முக்கிய இடம்பெரும்.
பாரததவரு :- பாரதப் பிரசங்கம் செய்தவர்.
மச்சதவரு :- மச்சாவதாரத்தை வழிபட்டவர்.
மஹாதனதவரு :- மிகுந்த தனம் படைத்தவர்.
மால்யதவரு :- ஆலயங்கட்கு மாலைக்கட்டித் தருபவர்.
இண்டாதவரு :- சிக்கனம் மிக்கவர்.
ஸ்ரீ ராமனதவரு :- ஸ்ரீ ராமனை வழிபட்டவர்.
வரதந்திதவரு :- கோத்திர ரிஷிப் பெயரே வங்குசப் பெயராக உள்ளது. ஒன்று கோத்ர ரிஷியான வரதந்து மகரிஷியை வீட்டுத் தெய்வமாக வழிபட்டிருக்கலாம். அ தந்திரம் - நூல். வரதந்து மகரிஷியால் செய்யப்பட்ட நூல் வரதந்திரமாக இருக்கலாம். இந்நூலை ஓதியதால் ஏட்பட்ட பெயராக இருக்கலாம்.
பாததவரு :- பாதுகாபூசனை செய்பவர். சிவபாதுகா, விஷ்ணுபாதுகா, தேவிபாதுகா, குருபாதுகா, என இவற்றை வழிபடுபவர்.
பரததவரு :- பரதசாஸ்திரத்தில் வல்லவர்.
கப்பேதவரு, சன்னாதவரு, திஸ்னேதவரு, பஸ்ஸாதவரு, பிஸாததவரு, பிஸ்ஸாதவரு.

மூலவர் இல்லாத அம்மன் திருக்கோவில் சிரசே பிரதானம்

மூலவர் இல்லாத அம்மன் திருக்கோவில் சிரசே பிரதானம்: பின்னணி என்ன?
 
        பொதுவாக, திருக்கோவில் என்றால் மூலவருடன் அழகுற அமைந்திருக்கும்.  ஆனால் மூலவர் இல்லாத திருக்கோவில் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?  அதுவும் ஸ்ரீ சவுடேஸ்வரியம்மன் திருக்கோவில்.  திண்டுக்கல் மாவட்டத்தில் சித்தையன் கோட்டை பேரூராட்சி உள்ளது.  (செம்பட்டியிலிருந்து அடிக்கடி டவுண் பஸ் இந்த ஊருக்குச் செல்கிறது).  இங்கு தேவாங்கர் குலத்தைச் சேர்ந்த சின்னுக் கொட்லார், லத்திகாரர் உள்ளிட்ட பல்வேறு வம்சத்தினருக்கு குல தெய்வக் கோவில் உள்ளது. 
     ஒவ்வொரு வருடமும் சிவராத்திரியன்று சித்தையன் கோட்டை விழி பிதுங்கி நிற்கும் அளவிற்குப் பல்வேறு ஊர்களிலிருந்தும் குல தெய்வ வழிபாட்டிற்காக, மக்கள் வந்து கூடுவர்.  அந்த அளவிற்குப் பிரசித்திப் பெற்ற சித்தையன் கோட்டையில் குறிப்பாக தேவாங்கர் குலம் கப்பலேறு வம்சத்திற்குப் பாத்தியப்பட்ட அருள்மிகு ஸ்ரீசவுடேஸ்வரியம்மன் ஆலயம் உள்ளது.  இங்கு மூலவர் இல்லை.  வெள்ளியால் இழைக்கப்பட்ட ஸ்ரீசவுடேஸ்வரியம்மன் படம் மட்டுமே உள்ளது. 
     அம்மன் படத்திற்கு பூஜை செய்யும்பொழுது, படத்திற்குப் பின்புறமாகச் சென்று பூஜை நடத்தப்படுகிறது.  படத்திற்குப் பின்புறம் கூந்தலுடன் கூடிய அம்மன் சிரசு பெட்டியில் வைக்கப்பட்டுள்து. 
     ஒவ்வொரு சிவராத்திரியன்றும், குல தெய்வ வழிபாடு நடத்தும் கப்பலேறு வம்சத்தினர் இரு ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே அந்த பெட்டியில் உள்ள அம்மன் சிரசை எடுத்து அபிஷேகங்கள் செய்து, கூந்தலை உலர்த்தி பின் அலங்காரம் செய்து பக்தர்களின் தரிசனத்திற்காக வைக்கின்றனர். 
      சின்னாளபட்டி, சித்தையன்கோட்டை, திண்டுக்கல், திருப்பூர், மற்றும் தமிழகத்தின் பல பகுதியிலிருந்தும், பெங்களூர்  போன்ற வெளி மாநிலங்களிலிருந்து கப்பலேறு வம்சத்தைச் சேர்ந்த அண்ணன் தம்பிமார்கள் சிவராத்திரியன்று குல தெய்வ வழிபாடு நடத்த இத்திருக்கோவிலுக்கு வருகின்றனர்.
அதேபோன்று, கடந்த மாதம் 12 ஆம் தேதி நடைபெற்ற சிவராத்திரியன்று அம்மன் சிரசை எடுத்து அபிஷேகம் செய்து, கூந்தல் அலங்காரம் செய்து, பக்தர்களின் தரிசனத்திற்காக வைத்தனர்.  இந்நிகழ்ச்சியில் கப்பலேரு வம்ச தாயாதிகள் பெருந்திரளாகக் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். 
      இத்திருக்கோவிலில் தினமும் பூஜை செய்யப்படுகிறது.  தினமும் காலை  சின்னாளப்பட்டியிலிருந்து வந்து பூசாரி பூஜை செய்கிறார்.இத்திருக்கோவிலின் தலைவர் திரு.ராமையா வயோதிகத்தின் காரணமாக தெளிவாகப் பேச இயலவில்லையாதலால் அவரிடம் இத்திருக்கோவில் பற்றித் தெரிந்து கொள்ள இயலவில்லை.  எனவே மற்றவர்களிடம் இத்திருக்கோவிலைப் பற்றி விசாரித்த பொழுது செவி வழிச் செய்தி ஒன்று கூறப்படுகிறது. 
    முன்னொரு காலத்தில் கப்பலேறு வம்சத்தைச் சேர்ந்த அழகானப் பெண்ணைக் கண்டு அப்பகுதி ஜமீன்தார் மயங்கியுள்ளார்.  அப்பெண்ணை அடைதல் வேண்டி பல்வேறு முயற்சிகளில் இறங்கியுள்ளார்.  இந்நிலையில் ஜமீன்தார்ரிடமிருந்து அப்பெண்ணைக் காப்பாற்ற ஏற்பட்ட சண்டையின் பொழுது அப்பெண்ணின் சிரசு கொய்யப்பட்டு கொல்லப்பட்டதாகவும், அப்பெண்ணின் சிரசையே கப்பலேறு வம்சத்தினர் இன்றும் வணங்கி வருவதாகவும் கூறுகின்றனர். 
     முதன் முதலில் அப்பெண் சிரசு கொய்யப்பட்ட  காட்டில் சென்று முன்னோர்கள் வணங்கி வந்ததாகவும், பின்னாளில் சித்தையன் கோட்டையில் கோவில் எழுப்பி வழிபட்டு வருவதாகவும் கூறுகின்றனர். 

மூங்கிலணை காமாட்சி அம்மன் கோவில்
காஞ்சி காமாட்சி அம்மனுக்கு அடுத்தபடியாக புகழ் பெற்று விளங்குவது தேவதானப்பட்டி மூங்கிலணை காமாட்சி அம்மன்.

தேனி மாவட்டத்திலிருக்கும் சில முக்கியக் கோயில்களில் ஒன்று பெரியகுளம் வட்டம் தேவதானப்பட்டி எனும் ஊரில் அமைந்துள்ள கோயில் மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில்....
காஞ்சி காமாட்சியே மூங்கிலணை காமாட்சி அம்மனாக இருந்து வருவதால் காஞ்சியைப் போல் இங்கும் புதிய காரியங்களை தொடங்க அனுமதி பெற கௌலி குறி கேட்டலும் வழக்கமாக உள்ளது. 

காஞ்சி காமாட்சியம்மன் கோயிலில் இருப்பது போல் இங்கும் அம்மன் பூஜை மண்டப மேல் விதானத்தில் கௌலி உருவம் உள்ளது.

சிவபெருமானை நோக்கிக் கடுமையான தவம் புரிந்து பல அரிய வரங்களைப் பெற்றிருந்த, வங்கிசபுரி எனும் நகரைத் தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்த
சூலபாணி எனும் அசுரன் மன்னன் ..தனக்கு தன்னைக்காட்டிலும் அதிக வலிமையுடன், தான் பெற்ற அரிய சக்திகளுடன் ஆண் மகன் ஒருவன் பிறக்க வேண்டும் என்ற அரிய வரத்தின்படி பிறந்த வச்சிரதந்தன் என்ற அசுரன்
காட்டுப் பகுதியிலிருந்த தவசிரேஷ்டர்களையும், வேத விற்பன்னர்களையும் கொடுமைப்படுத்தத் தொடங்கினான்.

அவன் பிறப்பிலேயே பல்வேறு சக்திகளைப் பெற்றிருந்ததால் அவனை யாராலும் எதிர்க்க முடியவில்லை.

துர்க்கையம்மனாக வந்து வதம் செய்த காஞ்சிகாமாட்சியம்மன், அசுரனைக் கொன்ற பாவம் நீங்க மஞ்சள் நீராடிய பின்பு தலையாறு நீர்வீழ்ச்சிக்கருகே மூங்கில் புதருக்குள் தவம் இருந்தாள்.

எதேச்சையாக இதை பார்த்துவிட்ட பசு மேய்க்கும் ஒருவருக்கு கண் பார்வை பறிபோனதையறிந்த அவ்வூர் ஜமீன்தாரும் பூஜை செய்து வழிபட்டார்.

அம்மன் அசரீரியாக ., ஒரு வாரம் கழித்து ஆற்றில் வரும் வெள்ளத்தில் மூங்கில் பெட்டியில் அமர்ந்து வரும் என்னை எடுத்து வழிபட்டால் கண்பார்வை தெரியும் என்று கூற, அதன்படியே பெட்டி வந்தது. அதை எடுத்து வழிபட்டு அந்த இடத்தில் சின்ன குச்சு கட்டி வழிபட்டனர்.

மூங்கில் பெட்டியில் மஞ்சளாற்றில் மிதந்து வந்து மூங்கில் புதர்களில் அணைத்து நின்றதால் மூங்கிலணை காமாட்சி அம்மன் என வழங்கப்படுகிறது..
அடைத்த கதவுக்குதான் பூஜை என்றாலும் கதவுக்கு உள்ளே 16 கால் மண்டபமும் அதன் முன் கர்ப்பகிரகமும் உள்ளது.கருவறை திறக்கப்பட்டதே இல்லை.

அங்கு அம்மன் பெட்டிக்குள் இருப்பதாக வருடம் ஒருமுறை கர்ப்பகிரக கூரை மேயும் ராஜகம்பளத்தார் கூறுகின்றனர்.

இந்த தேவதானப்பட்டி, தேனி மாவட்டம் பெரியகுளத்திற்கும் வத்தலக்குண்டுக்கும் நடுவே உள்ளது. இங்குள்ள அம்மனுக்கு சிலையோ விக்ரகமோ இல்லை. கர்ப்பகிரகத்திற்கு முன் உள்ள அடைக்கப்பட்ட கதவிற்கு தான் பூஜை நடைபெறுகிறது. உடைக்காத தேங்காயும், உரிக்காத வாழைப்பழமும்தான் படைக்கப்படுகிறது. குலதெய்வம் எதுவென்று தெரியாதவர்கள் இந்த அம்மனை குலதெய்வமாக வழிபடலாம்.

இங்கு ஆடு, மாடு, கோழி பலியிடுவது கிடையாது. பொங்கல் வைக்கும் பழக்கமும் இல்லை.

துள்ளு மாவுதான் சிறப்பான நைவேத்தியம்.

தேவதானப்பட்டி கோயிலுக்கு மேற்கே 3 கி.மீ., தொலைவில் மஞ்சளாறு அணைக்கு மேல் உள்ள அருவியில் அம்மாமெச்சு என்று ஒரு இடம் உள்ளது. அங்கிருந்துதான் இந்த அம்மன் இருந்த பெட்டி மிதந்து வந்ததாக கூறப்படுகிறது.

இங்கு மூலவரோ, உற்சவரோ கிடையாது. எனவே 5 நாள் திருவிழா காலத்தில் முதல் நான்கு நாட்கள் கோயில் அருகில் உள்ள ஆற்றுக்கு மூங்கில் தட்டில் மா, பலா, வாழைப்பழம், தேங்காய், மாலை, அபிஷேக சாமான் எடுத்து செல்வர். கோடாங்கி நாயக்கர் மேள தாளத்துடன் பூஜை பொருள்களை கோயிலுக்கு எடுத்துவந்து இரவு முழுவதும் வைத்திருப்பார். மறுநாள் காலையில்தான் பூஜை செய்கின்றனர்.  இதற்கு பள்ளயம் என்று பெயர். 5வது நாள் வரும் பள்ளயம் ஜமீன்தார் வீடு செல்லும்.

நெய் வாங்கி ஊற்றுவது நேர்த்திக்கடனாக உள்ளது. திருவிழா காலத்தில் சேரும் இந்த 50  பானை நெய் வருடம் முழுவதும் தீபத்திற்கு உபயோகிப்பர். இந்த நெய்பானைகளில் ஈயோ எறும்போ மொய்ப்பதில்லை.

காமாக்காள் திவசம் : பூசாரி நாயக்கர் பரம்பரையில் வந்த கடைசி ஜமீன்தார் மனைவி காமாக்காள். இவர் தன் கணவர் மறைவிற்கு பின் ஒரே மகனுடன் கோயில் கட்டடத்தில் தங்கி அம்மனுக்கு சேவை செய்து வந்தார்.

இந்த காமாக்காள் அம்மனிடம் நேரில் பேசும் சக்தி பெற்றவர். இவர் இரவில் தனியே கோயிலுக்கு செல்வதில் பயந்த மகன், தானும் அம்மனை பார்க்க தாய் தடுத்தும் கேளாமல் தாயுடன் சென்றான். இதனால் அவர் தலை வெடித்து இறந்தான்.

காமாக்காள் தை மாதம் ரத சப்தமியில் மறைந்தார். அம்மனின் வாக்குப்படி ராஜ கம்பள நாயக்கர் அவருக்கு திவசமிட்டனர். அதுமுதல் ஒவ்வொரு வருடமும் ரத சப்தமியில் கோயிலில் காமகாக்காள் திவசம் கொடுக்கப்படுகிறது. காமாக்காள், அவரது மகன் இருவரின் சமாதியும் கோயிலுக்கு கிழக்கே ஒரு பர்லாங் தூரத்தில் உள்ளது.

திவசம் முடிந்த அன்றே கோயிலின் முகூர்த்தக்கால் நடப்படுகிறது.

பகைவர்கள் வெல்லும் சக்தியை மூங்கிலணை காமாட்சி அம்பாள் தருகிறாள்.

 திருமண வரம், குழந்தை வரம், தொழில் மற்றும் மன அமைதி ஆகியவை கிடைக்கப் பெறலாம்..


மைசூர் சாமுண்டீஸ்வரி அம்மன் திருக்கோவில்

போடி மாநகர் ( தொட்டு மொக்கு ) பெரியகும்பிடு விழா அழைப்பிதழ்