அன்புடையீர் நல்வரவு ,

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,
தேவாங்கர்களாகிய நாம் அனைவரும் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்து வந்தாலும் தேவாங்கர் என்னும் உணர்வு நம்மை ஓன்று சேர்க்கிறது. மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்ற வாக்கிற்கு இணங்க காலத்திற்கு ஏற்ப நாம் நமது குல நிகழ்வுகளை தகுந்த தொழில்நுட்பத்தை கொண்டு பதிவு செய்வது அவசியமான ஓன்று.

இந்த புதியபக்கம் நமது தேவாங்க சமூக செய்திகள்,சடங்குகள்,வரலாறு & அண்மை நிகழ்ச்சிகளை அறிந்துகொள்ளவும் தேவைப்படும் போது பார்க்கவும் உருவாக்கப் பட்டுள்ளது.
உறவுகள் தங்கள் பகுதியில் உள்ள கோவில்&குல தெய்வம் கோவில்களில் நடைபெறும் திருவிழா நிகழ்ச்சிகள் மற்றும் படங்களை இடம்பெற செய்யவும்.

தங்கள் கருத்துக்கள் இந்த தளத்தை மேன்படுத்த உதவும் ஆகயால் தயவுசெய்து கருத்திடவும் . ( தமிழில் கருத்திட தமிழ் எழுதியை பயன்படுத்தவும்)

நன்றி.

2/15/14

பகுதி ஏழு : தழல்நீலம்[ 4 ]

பகுதி ஏழு : தழல்நீலம்[ 4 ]
கங்கையின் கரையில் அக்னிபதம் என்னும் தன்னுடைய தவச்சாலையின் முன்பிருந்த ஆலமரத்தடியில் அமர்ந்து அக்னிவேசர் மாணவர்களுக்கு தனுர்வேதத்தின் கதையைச் சொன்னார். பிரஜாபதியான பிருதுவிற்கு அந்தர்த்தானன் என்றும் வாதி என்றும் இரு மைந்தர்கள் பிறந்தனர். கண்ணுக்குத்தெரியாமல் பெருவெளியில் வாழும் ஆற்றலின் வடிவம் அந்தர்த்தானன். வெளியில் ஒரு முடிவிலாக்கூந்தல் பெருக்காக விரவிக்கிடந்த சிகண்டினி என்னும் துணைவியில் அவனுக்கு மின்னலாக மகனொருவன் உதித்தான். அந்த மைந்தன் ஹாவிர்த்தானன் என்று அழைக்கப்பட்டான்.
விண்ணகத்தின் துகள்களையெல்லாம் அவியாக உண்டு வளர்ந்தெழுந்த ஹாவிர்த்தான பிரஜாபதி அக்கினிகுலத்தில் பிறந்தவளும் பன்னிரண்டாயிரம்கோடி யோஜனை நீளம்கொண்ட கதிராக விரிந்து பரந்தவளுமான தீஷணையை மணந்தான். விண்ணகப்பெருவெளியில் முளைத்தெழுந்த பொன்னிற தர்ப்பைபோல அவர்களில் பிராசீனபர்ஹிஸ் பிறந்தான். அவர்களுக்கு சுக்ரன், கயன், கிருஷ்ணன், விரஜன், அஜினன் என்னும் மேலும் ஐந்து மைந்தர்கள் பிறந்தனர். அவர்கள் பிரம்மாவின் இச்சைப்படி வெளியை படைப்பால் நிறைத்தனர்.
பிராசீனபர்ஹிஸ் ஊழித்தொடக்கத்தில் பூமியெங்கும் பரவியிருந்த நீலக்கடல்மேல் பொன்மேகம்போல பரவிக்கிடந்தான். சூரியன் கிழக்கே எழுந்ததும் பொன்னிறம் கொண்ட கடலில் இருந்து சுவர்ணை என்னும் தேவதை எழுந்து வந்ததை அவன் கண்டான். அவள்மேல் காதல்கொண்ட பிராசீனபர்ஹிஸ் பொலிவுபெற்றான். அவனுடைய ஒளிவெள்ளம் பொன்மழைக்கதிர்களாக சுவர்ணையின் மேல் விரிந்தது. அக்கதிர்கள் சுவர்ணையின் கருவில் பத்து மைந்தர்கள் ஆயினர். அந்த பத்துபேரும் பிரசேதஸ்கள் என்றழைக்கப்பட்டனர்.
பிராசீனபர்ஹிஸின் கதிர்கள் மண்ணில் பட்ட இடங்களில் இருந்து தர்ப்பையும் நாணல்களும் மூங்கில்களும் உருவாகி வந்தன. பிரஜாபதிகளான பத்து பிரசேதஸ்களும் அவற்றைக்கொண்டு தங்களுக்குள் விளையாடிக்கொண்டனர். அவர்களின் கைகளிலிருந்தும் கருத்தில் இருந்தும் தனுர்வேதம் உருவாகியது. அவர்களில் இளையபிரஜாபதியான பிரசேதஸ் ஒருநாள் ஒரு மூங்கில் துளைவழியாக காற்றாக ஓடி விளையாடிக்கொண்டிருந்தபோது அவனையறியாமலேயே அவன் இளம் உதடுகளிலிருந்து தனுர்வேதம் பாடல்களாக ஒலித்தது.
அருகே தவத்தில் அமர்ந்திருந்த வேதரிஷியான பிரகஸ்பதி அதைக்கேட்டார். அவர் தன் கரையில்லா நினைவாற்றலால் அதை உள்வாங்கி பதித்துக்கொண்டார். பின்பு அதை ஆதிமொழியில் எட்டுலட்சம் பாடல்களில் பிரவேஸாஸ்திர பிரகாசம் என்னும் பெருநூலாக இயற்றி தன் மாணவர்களுக்கு சொல்லிக்கொடுத்தார். அவரது மாணவரான சுக்ரர் அதை வேதமொழியில்  நான்குலட்சம் பாடல்களாக ஆக்கினார். அதை ஐந்து உபவேதங்களில் ஒன்று என வியாசர் வகுத்தார். கிருஷ்ணயஜுர்வேதத்தின் அங்கமாக நிலைநிறுத்தினார்.
“புல்நுனியால் பிரபஞ்சத்தை பிரம்மத்தையும் அறியும் கலையான தனுர்வேதம் காலப்போக்கில் மெல்லமெல்லச் சுருங்கி வெறும் வில்வித்தையாகியது. அதன் ஐந்தாயிரம் பாடல்கள் மட்டுமே இன்று எஞ்சியிருக்கின்றன. அதில் சஸ்திர பகுதியை நான் என் தந்தை பாரத்வாஜமுனிவரிடமிருந்து கற்றேன். அகத்தியமுனிவரிடமிருந்து நிசஸ்திரப்பகுதியையும் கற்றேன். இந்தமண்ணுலகில் அறத்தை நிலைநாட்டுவதற்கு சொல் முதல்தேவை. சொல்லுக்குத் துணையாக என்றுமிருப்பது வில். அதுவாழ்க!”
“ஓம்! ஓம்! ஓம்!” என்று சீடர்கள் முழங்கினர். அவர் தன் முன் இருந்த இளம் மாணவர்களை நோக்கி புன்னகை புரிந்தார். “இந்தப்புராணத்தில் இருந்து இரண்டு வினாக்களைக் கேட்கிறேன்” என்றார். “பிராசீனபர்ஹிஸின் கதிர்கள் சுவர்ணையில் பிரசேதஸ்களாயின. மண்ணில் தர்ப்பையாயின. அப்படியென்றால் அவை பாதாளத்தில் எவையாக வளர்ந்தன? தேவருலகில் எப்படி முளைத்தன?”மாணவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.அக்னிவேசர் “சொல்லத்தெரிந்தவர்கள் சொல்லலாம்” என்றார்.
மான்தோலாடை அணிந்து பிராமணர்களுக்குரியமுறையில் தோள்முடிச்சை இடப்பக்கமாக போட்டிருந்த, முன் சிகை களைந்த இளைஞன் எழுந்து வணங்கி “ஆசிரியரை வணங்குகிறேன். பாதாள உலகில் நாகங்களின் செம்பொன்னிற நாக்குகளாக அவை மாறின. நாகங்களின் சரங்கள் நாக்குகளே. விண்ணுலகில் தேவர்களின் பொன்னிறத்தலைமயிராக அவை மாறின” என்றார். அக்னிவேசர் புன்னகையுடன் “குருவருள் உனக்கு என்றும் உண்டு துரோணா” என்றார்.
அப்போது பாஞ்சாலத்தின் அரச ரதம் வருவதை ஒரு மாணவன் ஓடிவந்து அக்னிவேசரைப் பணிந்து அறிவித்தான். “சோமகசேனர் நோயுற்றிருக்கிறார் என்றல்லவா அறிந்தேன்” என்றபடி எழுந்த அக்னிவேசர் தன் முன்புலித்தோலாடையை வலமுடிச்சாக அணிந்து நீள்சிகையுடன் அமர்ந்திருந்த துருபதனாகிய யக்ஞசேனனிடம் “இளவரசே, உனது அரசிலிருந்து ஏதேனும் செய்தி வந்ததா?” என்றார். யக்ஞசேனன் பதற்றத்துடன் “இல்லை, நேற்றுமாலை அங்கிருந்து என் சேவகன் வந்தான். சிறியதந்தை நலத்துடனிருப்பதாகவே சொன்னான்” என்றான்.
ரதம் வந்து நின்று அதிலிருந்து ஸாரணர் இறங்குவதை அக்னிவேசர் கண்டார். அவர் பின்னால் கனத்த கரிய உடலும் மார்பிலும் தோளிலும் விழுந்த நீண்ட முடியும் இடைசுற்றி மார்பை வளைத்த நீலப்பட்டாடையும் அணிந்த இளைஞன் இறங்குவதைக் கண்டு கூர்ந்து கவனித்தபடி நின்றார். அவர்கள் தவச்சாலை வளைப்பில் இறங்கி நேராக அவரை நோக்கி வந்தனர். அருகே நெருங்கியதும் அந்த இளைஞனிடமிருந்த வேறுபாட்டை அக்னிவேசர் புரிந்துகொண்டார். அவன் முலைகள் சிறுநொங்குபோல கனத்து உருண்டு நின்றன. கூந்தலிழை இரு முலைகள் நடுவே வழிந்தது. மீசையும் தாடியும் இணைந்து தேனிக்கூடு போல ஆகிவிட்டிருந்தன.
மேற்கொண்டு அவனை பாராமலிருக்கும்பொருட்டு அக்னிவேசர் பார்வையைத் திருப்பி தன் மாணவர்களைப் பார்த்தார். அவர்கள் கண்களில் எல்லாம் அருவருப்பும் ஏளனமும் தெரிந்தன. யக்ஞசேனன் கசப்புடன் தலைகுனிந்துகொண்டான். “யக்ஞசேனா, உன் சிறியதந்தையின் ஆயுதசாலை அதிபரல்லவா அது?” என்றார் அக்னிவேசர். “ஆம், ஆசிரியரே. அவர் பெயர் ஸாரணர்” என்றான் யக்ஞசேனன் . “உடன் வருபவன் யார்?”
யக்ஞசேனன் தலைகுனிந்து “சென்ற வாரம் அவன் என் சிறியதந்தையை வந்து சந்தித்தான் என்று ஒற்றன் சொன்னான். அவனை பாஞ்சாலத்தின் இளவரசனாகவும் எனக்குத் தம்பியாகவும் உத்தர பாஞ்சால மன்னர் அறிவித்திருக்கிறார்.”
ஒருவன் “அவனா அவளா?” என்றான். மற்ற மாணவர்கள் மெல்ல நகைத்தனர். “ஏளனம் தேவையில்லை” என்று அக்னிவேசர் உரத்தகுரலில் சொன்னார். “இளையவர்களே, படைப்பில் அழகு அழகற்றது, நல்லது கெட்டது, தேவையானது தேவையற்றது என்ற அனைத்துப்பிரிவினைகளும் நாம் செய்துகொள்வதென்று அறியுங்கள். அதைச்செய்யும் ஒவ்வொருமுறையும் பிரம்மனிடம் மன்னிப்பு கோருங்கள். அவற்றை பிரம்மனின் விதி என எண்ணிக்கொள்ளும் மூடன் அந்த ஒவ்வொரு எண்ணத்துக்கும் என்றோ பதில்சொல்லக் கடமைப்பட்டவன்.”
“அவனை உத்தரபாஞ்சாலத்தின் மீட்பனாக சோமகசேனர் நினைக்கிறார்” என்று யக்ஞசேனன் சொன்னான். “என்னை என் தந்தை தங்கள் குருகுலத்துக்கு அனுப்பியதுமே அவர் அச்சம் கொண்டிருந்தார். இப்போது என்னைத் தடுக்கும் ஆற்றலென அவனை நினைத்து அனுப்பியிருக்கிறார்” என்றான். அக்னிவேசர் “அவனை ஏன் இங்கே என்னிடம் அனுப்பியிருக்கிறார் உன் சிறியதந்தை?” என்றார். யக்ஞசேனன் பேசாமல் நின்றான்.
அருகே வந்த ஸாரணர் வணங்கி “பாரத்வாஜரின் குருகுலத் தோன்றலும் தனுர்வேதநாதருமாகிய அக்னிவேசமுனிவரை வணங்குகிறேன்” என்றார். “இவர் எங்கள் இளவரசர், சிகண்டி என்று அழைக்கப்படுகிறார். உத்தர பாஞ்சாலத்தின் அனைத்து அரசத்தகுதிகளும் இவருக்கு எங்கள் மன்னரால் அளிக்கப்பட்டுள்ளன.”
தலைவணங்கிய சிகண்டி “ஆசிரியருக்கு வணக்கம்” என்றான். அக்னிவேசர் சிகண்டியை கூர்ந்து சிலகணங்கள் நோக்கி “உன் பெயரையும் உடையையும் தவறாக அணிந்திருக்கிறாய் என நினைக்கிறேன்” என்றார். “மேலும் நான் உன் ஆசிரியனும் அல்ல.”
சிகண்டி “நான் எப்படி இருக்கவேண்டுமென நானே முடிவெடுத்தேன்” என்றான். அக்னிவேசர் அவனை சிலகணங்கள் பார்த்துக்கொண்டிருந்தார். அவனை அவரால் புரிந்துகொள்ளமுடியவில்லை. “உன் தேவை என்ன?” என்றார். “நான் உங்கள் மாணவனாக ஆகவேண்டும். தனுர்வேதத்தை கற்றுத்தெளியவேண்டும்.”
VENMURASU_EPI_38
ஓவியம்: ஷண்முகவேல்
[பெரிதுபடுத்த படத்தின்மீது சொடுக்கவும்]
“இங்கே நான் ஆண்களான பிராமணர்களுக்கும் ஷத்ரியர்களுக்கும் மட்டுமே வில்வித்தை கற்றுத்தருகிறேன்” என்றார் அக்னிவேசர். “அவ்விரு வர்ணத்தவர் மட்டுமே முறைப்படி குருமுகத்தில் இருந்து ஆயுதவித்தை கற்கமுடியுமென்பது நூல்விதியாகும். வைசியர் தேவையென்றால் வில்வித்தை கற்ற ஷத்ரியனை தனக்குக் காவலாக அமைத்துக்கொள்ளலாம். சூத்திரர்கள் உயிராபத்து நேரவிருக்கையில் மட்டும் ஆயுதங்களை கையிலெடுக்கலாம் என்று சுக்ர ஸ்மிருதி வகுத்துள்ளது.”
“அறிதலை மறுக்கும் உரிமை எவருக்கும் இல்லை” என்றான் சிகண்டி. “ஆம், அது உண்மை. ஆனால் நதி தடைகளால்தான் பாசனத்துக்கு வருகிறது. தடைகள் மூலமே சமூகமும் உருவாக்கப்படுகிறது. தடைகளை விதிக்காத சமூகம் என ஏதும் இப்புவியில் இல்லை. தடைகளின் விதங்கள் மாறலாம், விதிகள் மாறுபடலாம், அவ்வளவுதான். தடைகளை மீறுதலே குற்றமென சமூகத்தால் கருதப்படுகிறது. குற்றங்களை தண்டிக்கும் அதிகாரத்தையே அரசு என்கின்றன நூல்கள்” என்றார் அக்னிவேசர்.
“அறிவை ஏன் தடுக்கவேண்டும்?” என்று சிகண்டி சினத்துடன் கேட்டான். “ஏனென்றால் அறிவு என்பது அதிகாரம். அதிகாரம் பொறுப்புகளுடன் பிணைக்கப்பட்டிருக்கவேண்டும். எப்பொறுப்பை ஒருவன் வகிக்கிறானோ அப்பொறுப்புக்குரிய அறிவு மட்டுமே அவனுக்கு அளிக்கப்படவேண்டும். பொறுப்புடன் இணையாத அதிகாரம் அழிவை உருவாக்கும். அதுவே சமூகத்தை உருவாக்கும் முறையாக உருவாகிவந்துள்ளது” என்றார் அக்னிவேசர்.
சிகண்டி சினத்துடன் தலையை அசைத்தபடி ஏதோ சொல்லவந்தான். “நீ அறிவுடையவன் என்று காண்கிறேன். இந்த வினாவுக்கு பதில் சொல். ஓர் அடர் கானகத்தில் ஐந்து திருடர்கள் பயணி ஒருவனைத் தாக்கி அவன் பொருளைத் திருடி அவன் மனைவியையும் குழந்தையையும் கவர்ந்துசெல்ல முயல்கிறார்கள். அப்போது அவ்வழியாக ஒருவர்பின் ஒருவராக ஒரு சூத்திரனும் வைசியனும் ஷத்ரியனும் பிராமணனும் வருகிறார்கள். அக்கொடுமையை கண்ணால் கண்டபின்னரும் ஐவரை தனியாக எதிர்க்கமுடியாதென என்ணி அஞ்சி அவர்கள் நால்வருமே உயிர்தப்பி ஓடிவிட்டனர். சுக்ர ஸ்மிருதியின்படி அந்நால்வருக்கும் மன்னன் அளிக்கவேண்டிய தண்டனை என்ன?”
சிகண்டி பேசாமல் பார்த்து நின்றான். “சூத்திரனை ஒருநாள் அரசனுக்கோ குலத்துக்கோ கொடையுழைப்புக்கு விதிக்கவேண்டும், அவ்வளவுதான். ஏனென்றால் வீரம் அவன் கடமையும் இயல்பும் அல்ல. வைசியனுடைய சொத்தில் நான்கில் ஒருபங்கை அரசுக்கோ குலத்துக்கோ பறிமுதல் செய்யவேண்டும். ஏனென்றால் அவன் தேடியசெல்வம் அறமுடையதாக இருக்க வாய்ப்பில்லை. அவன் அந்நால்வரையும் எதிர்த்திருக்கவேண்டும். தன் சொத்துக்கள் அனைத்தையும் அத்திருடர்களுக்கு அளிப்பதாகச் சொல்லி மன்றாடியிருக்கவேண்டும்” என்றார்.
“சிகண்டியே சுக்ர ஸ்மிருதியின்படி அப்பிராமணன் அங்கே சென்று அவர்களை தர்ப்பையைக் கையில் பற்றியபடி தீச்சொல் இட்டிருக்கவேண்டும். அவன் நெறிமீறாதவன் என்றால் அச்சொல் எரியாகியிருக்கும். அது நிகழாமையால் அவனை ஒருவருடம் வேள்வி விலக்குக்கு தண்டிக்கவேண்டும். அவன் தன் நெறிகளில் நிற்கிறானா என அவன் ஆசிரியன் கண்காணித்துச் சொன்னபின்னரே விலக்கு நீக்கிக் கொள்ளப்படவேண்டும். ஆனால் ஷத்ரியனுக்கு என்ன தண்டனை தெரியுமா? அதுவே பாரதவர்ஷத்தின் அனைத்து நாடுகளிலும் இன்றும் கடைபிடிக்கப்படுகிறது.”
அக்னிவேசர் சொன்னார் “அந்த ஷத்ரியன் அங்கேயே போரிட்டு மடிந்திருக்கவேண்டும். கையில் ஆயுதமில்லாவிட்டால் கற்களாலும் கைகளாலும் போரிட்டிருக்கவேண்டும். அநீதியின் முன் போரிட்டு உயிர்விடாதிருந்த பெருங்குற்றத்துக்காக அவனையும் அவனுடைய மொத்தக்குலத்தையும் அந்நாட்டு மன்னன் கொன்றுவிடவேண்டும். அக்குலத்தில் ஒருவன் அறம்பிழைக்கிறான் என்றால் அது அக்குலத்தில் குருதியில் இருக்கும் குணமேயாகும். அதை வாழவிடலாகாது. அக்குலத்தின் குருதியிலிருந்து பிறிதொரு குழந்தை மண்ணுக்கு வரக்கூடாது.”
திகைத்து நின்ற சிகண்டியை நோக்கி அக்னிவேசர் “அந்தப்பொறுப்பு உனக்கு தேசத்தாலும் சமூகத்தாலும் மரபாலும் அளிக்கப்படாதபோது ஆயுதவித்தையை நீ கற்பது பொறுப்பற்ற அதிகாரம் என்றே பொருள். எந்த நெறிநூலுக்கும் நீ கட்டுப்பட்டவனல்ல. நீ ஆணுமல்ல பெண்ணுமல்ல. உன் கை வில் இச்சமூகத்துக்கோ தேசத்துக்கோ காவல் அல்ல. நீ மொத்த மனிதர்களுக்கும் எதிர்தரப்பாகக் கூட இருக்கலாம். உனக்குக் கற்றுக்கொடுக்கப்படும் வித்தையால் நாளை நாடும் குடிகளும் தொல்லைப்படலாம். ஆகவேதான் உனக்கு தனுர்வித்தை மறுக்கப்பட்டுள்ளது. விலகிச்செல்” என்றார்.
கண்கள் சற்றே விரிய உறுமலின் ஒலியில் சிகண்டி சொன்னான் “என் அன்னையின் சொல்லன்றி எனக்கு எக்கடமையும் இல்லை.” “அப்படியென்றால் பாரதவர்ஷத்தில் எந்த குருகுலத்திலும் உனக்கு கல்விகிடைக்காது” என்றார் அக்னிவேசர். “என்னை நீங்கள் ஏற்கவேண்டும். அல்லது கொல்லவேண்டும்” சிகண்டி சொன்னான். “அதற்கு நான் மறுத்தால்?” என்றார் அக்னிவேசர்.
“அறைகூவும் எதிரியை எதிர்கொண்டேயாகவேண்டியவன் ஷத்ரியன். எடுங்கள் உங்கள் வில்லை” என்றான் சிகண்டி. நாணேற்றிய வில்லைத் தூக்கி சுண்டியபடி “இங்கே இப்போதே முடிவுசெய்வோம்.”
அக்னிவேசர் வியப்புடன் “என்னிடம் போர்புரிய வருகிறாயா?” என்றார். “என்னுடன் போர்புரிய இன்று இப்பாரதத்தில் மூவரே உள்ளனர். பரத்வாஜரும் பரசுராமரும் பீஷ்மருமன்றி எவரும் என் முன் அரைக்கணம்கூட நிற்கமுடியாது” என்றார். “ஆம், அறிவேன். ஆனால் உங்களிடமிருந்து கற்கவில்லை என்றால் உங்கள் கைகளால் மடிவேன்” என்றான் சிகண்டி.
அக்னிவேசர் கைநீட்ட ஒரு மாணவன் வில்லை அவரிடம் அளித்தான். அம்பறாத்தூணியை தோளில்மாட்டிய மறுகணம் மெல்லிய பறவை சிறகடித்து எழுந்து அமர்வதுபோல அக்னிவேசர் பின்வாங்கி கால்நீட்டி மடிந்தார். நடனம்போல மெல்லிய கரம் பின்னால் பறந்து வில்லின் நாணை பூங்கொடி போல வளைத்தது. நாணேறியதை வில் விடுபட்டதை எவரும் காணவில்லை. ஆடித்துண்டில் இருந்து ஒளிக்கதிர் எழுவதுபோல அவரிடமிருந்து கிளம்பிய அம்பு சிகண்டியின் சிகையை வெட்டிவீசியது.
உரக்க உறுமியபடி நாணொலி விம்ம சிகண்டி திரும்ப அம்புகளால் அவரைத் தாக்கினான். அவனுடைய கனத்த கால்களில் அப்பகுதியின் புற்களும் வேர்களும் சிதைந்தன. கூழாங்கற்கள் சிதறிப் பறந்தன. ஆனால் அக்னிவேசர் நின்ற இடத்தில் அவர் சென்றபின் புற்கள் தென்றல்பட்டு மடிந்தவை போல மெல்ல நிமிர்ந்தன. அவரது அம்புகள் அவன் ஆடையைக் கிழித்து வீசின. அவன் தோளிலும் தொடையிலும் பாய்ந்து இறங்கி இறகுநடுங்கி நின்றன. ஆனால் அவன் சற்றும் திரும்பவில்லை. அவன் அம்புகள் அக்னிவேசரை உரசிச்சென்றன. அவருக்கு சுற்றும் மண்ணில் பாய்ந்து நின்றன. ஒரு அம்பு அவரது புஜத்தை கீறிச்சென்றது.
“போதும், போய்விடு. நான் உன்னைக்கொல்ல விரும்பவில்லை” என்றார் அக்னிவேசர். “இந்தப்போரில் இரு முடிவுகள்தான்” என்றபடி மூர்க்கமாக முன்னால் பாய்ந்தான் சிகண்டி. அவன் அம்புகள் பட்டு அருகில் நின்ற மரங்களின் கிளைகள் வெட்டுப்பட்டு விழுந்தன. பாறை ஒன்றை அறைந்த அம்பு நெருப்பெழ ஒலித்து உதிர்ந்தது. உறுமியபடி அவன் மேலும் மேலும் என முன்னால் பாய்ந்தான். அவன் மார்பைக் கீறிய அம்பு அவனை நிலத்தில் வீழ்த்தியது. அக்கணமே மேலும் மூர்க்கத்துடன் கூவியபடி நிலத்தை கையாலறைந்து அவன் எழுந்தான். அவன் வில்லை அக்னிவேசர் ஒடித்தார். அவன் கையில் வெறும் அம்புடன் அவரை நோக்கிப்பாய்ந்துவந்தான்.
அக்னிவேசர் தன் பிறையம்பை எடுத்து அவன் தலையைத் துண்டிப்பதற்காக எய்தார். அது நாண்விட்டெழுந்த அதேகணத்தில் மேலெ நின்றமரத்திலிருந்து உதிர்ந்த காய் அதில்பட்டு அதைத் திசைமாறச்செய்தது. தன் கழுத்தை மின்னலெனக் கடந்துசென்ற அந்த அம்பைக்கண்டு முகத்தில் சிறு சலனம்கூட இல்லாமல் அம்பை அவரை நோக்கி வீசினான் சிகண்டி
அக்னிவேசர் கையைத் தூக்கியபடி நின்றார். “நில்! நீ இப்பாரதவர்ஷத்தின் மாபெரும் வீரர்களில் ஒருவனாகப்போகிறவன்’ என்றார். ‘அத்துடன் உன்னை மகத்தான ஆசி ஒன்று காத்து நிற்கிறது’
‘அது என் அன்னையின் ஆசி. நான் அவள் ஆணைக்காகவே வாழ்கிறேன்’ என்றான் சிகண்டி. அக்னிவேசர் அவனைக் கூர்ந்து நோக்கி ‘உனக்கு அனைத்து ஆசிகளையும் அளிக்கிறேன். உனக்கு என் தனுர்வித்தையை கற்பிக்கிறேன். ஆனால் எனக்கு நீ மூன்று உறுதிகளை அளிக்கவேண்டும்” என்றார். சிகண்டி “நான் எந்த உறுதியையும் அளிக்கமுடியாது. தங்களுக்கு மட்டும் அல்ல, மண்ணில் எவருக்கும் நான் எச்சொல்லையும் கொடுக்கமாட்டேன். நான் ஒற்றை இலக்கை மட்டுமே கொண்டவன்” என்றான்.
அக்னிவேசர் தாடியை நீவியபடி மேலும் கூர்மையடைந்த கண்களுடன் “சரி, முறைப்படி நான் உன்னிடம் குருதட்சிணை கோரமுடியும்…” என்றார். சிகண்டி “அதையும் நான் அளிக்கமுடியாது. என் ஏழுபிறப்புகளும் என் அன்னைக்குரியவை” என்றான்.
அக்னிவேசர் “உன் அன்னை…” என்று சொல்லவந்த கணமே அனைத்தையும்புரிந்துகொண்டார். நடுங்கியபடி தன் இரு கரங்களையும் விரித்தார். “குழந்தை, என் அருகே வா. என்னுடன் சேர்ந்து நில்!” என்றார். சிகண்டி அருகே வந்ததும் அவனை தன் மார்புடன் அணைத்துக்கொண்டார். “ரஜோகுணத்தை ஆள்பவன் ஷத்ரியன். நீ ஒவ்வொரு அணுவிலும் ஷத்ரியன். என் வித்தையெல்லாம் உன்னுடையது” என்று அவன் தலையில் கையை வைத்தார்.
கண்கள் கலங்க நடுங்கும் கையுடன் அக்னிவேசர் சொன்னார் “பிறரை வாழ்த்துவதுபோல செல்வம், போகம், மைந்தர், அரசு, புகழ், ஞானம், முக்தி எதையும் நீ அடையும்படி நான் வாழ்த்தமுடியாது என்பதை நான் அறிவேன் மகனே. உன் அன்னையின் பொருட்டு காலகால மடிப்புகள் தோறும் அவமதிப்பையும், வெறுப்பையும், பழியையும் மட்டுமே பெறுபவனாக வந்து நிற்கிறாய். மானுடனுக்கு பிரம்மம் இட்ட தளைகள் அனைத்தையும் கடந்தவன் நீ. கர்மத்தை யோகமாகக் கொண்ட ஞானியை தெய்வங்கள் அறியும். எளியவனாகிய இந்த ஆசிரியன் யுகபுருஷனாகிய உன் முன் பணிந்து உன்னை வாழ்த்துகிறேன் மகனே, நீ வெல்க!” என்றார்.