அன்புடையீர் நல்வரவு ,

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,
தேவாங்கர்களாகிய நாம் அனைவரும் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்து வந்தாலும் தேவாங்கர் என்னும் உணர்வு நம்மை ஓன்று சேர்க்கிறது. மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்ற வாக்கிற்கு இணங்க காலத்திற்கு ஏற்ப நாம் நமது குல நிகழ்வுகளை தகுந்த தொழில்நுட்பத்தை கொண்டு பதிவு செய்வது அவசியமான ஓன்று.

இந்த புதியபக்கம் நமது தேவாங்க சமூக செய்திகள்,சடங்குகள்,வரலாறு & அண்மை நிகழ்ச்சிகளை அறிந்துகொள்ளவும் தேவைப்படும் போது பார்க்கவும் உருவாக்கப் பட்டுள்ளது.
உறவுகள் தங்கள் பகுதியில் உள்ள கோவில்&குல தெய்வம் கோவில்களில் நடைபெறும் திருவிழா நிகழ்ச்சிகள் மற்றும் படங்களை இடம்பெற செய்யவும்.

தங்கள் கருத்துக்கள் இந்த தளத்தை மேன்படுத்த உதவும் ஆகயால் தயவுசெய்து கருத்திடவும் . ( தமிழில் கருத்திட தமிழ் எழுதியை பயன்படுத்தவும்)

நன்றி.

6/6/14

கதை சொல்லும் திருவிழா!

கதை சொல்லும் சவுண்டாத்தா திருவிழா!
        பாட்டன் முப்பாட்டன் சொன்ன செவிவழிக் கதைகளும், அதையட்டிய வில்லுப் பாட்டும், கணியன் பாட்டும் ஆயிரமாயிரம் நீதி சொல்லும் நம் வாழ்க்கைக்கு! அப்படி ஒரு தெய்வக் கதையோடு துவங்குகிறது ஒரு திருவிழா! ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தில் இருந்து சுமார் 6 கி.மீ தொலைவில் உள்ளது தாசப்பக்கவுடர்புதூர் (நால்ரோடு). மக்கள் குடியிருக்க வசதியாக தாசப்பக்கவுடர் என்பவர் தன் நிலத்தை தானமாகத் தந்தாராம். அவருடைய பெயரிலேயே திகழ்கிறது இந்த ஊர்! இந்த ஊரின் மையத்தில் கோயில்கொண்டு அருள்பாலிக்கும் ஸ்ரீராமலிங்க சௌடேஸ்வரி அம்மனுக்கும் ஸ்ரீராமலிங்கேஸ்வரருக்கும்தான் கதை சொல்லி திருவிழா நடத்துகிறார்கள்.இந்தக் கோயிலில், தைப்பொங்கல் விசேஷம்! விழாவின் ஓர் அங்கமாக... அன்று காலை, கோயிலுக்கு மேற்கே இருக்கும் கிணற்றடிக்குச் சென்று அம்மனை அழைத்து வரும் வைபவம் நடைபெறும். அப்போது, 'சக்தி, சாமுண்டி, ஜோதியம்மா... பாம்மா... பாதாயே’ எனும் முழக்கத்துடன் அம்மன் ஊர்வலம் நகர, கூடவே ஒவ்வொரு குடும்பத்திலிருந்தும் வரும் இளைஞர்கள் (வேண்டிக் கொள்பவர்கள் மட்டும்), தங்கள் கைகளிலும் மார்பிலுமாக கத்தி போட்டபடி, நெசவாளர்கள் உருவான கதையை பாடலாகப் பாடியபடியே அம்மனை அழைத்து வருவார்களாம்!ஆதிகாலத்தில் தேவர்கள், ரிஷிகள், மனிதர்கள் அனைவரும் ஆடையின்றி அவதிக்குள்ளானார்களாம். ஆகவே, எல்லோரும் ஒன்றுசேர்ந்து ஈசனிடம் சென்று முறையிட்டனர். அவர்களுக்கு அருள திருவுளம் கொண்ட சிவபெருமானும், தன் அங்கத்திலிருந்து ஜோதி பிரகாசத்துடன் தேவல முனிவரைத் தோற்றுவித்து, ''மகாவிஷ்ணுவின் உந்தித் தாமரை நூலை வாங்கி வந்து, இவர் களுக்கு ஆடை தயார் செய்து கொடு'' என்று பணித்தாராம்.
அதன்படியே தேவல முனிவர், மகாவிஷ்ணு வைத் தரிசித்து உந்தித் தாமரை நூல் பெற்றுத் திரும்பும் வழியில் அசுரர்கள் அவரைப் பிடித்து துன்புறுத்தினர். அவர் அம்பிகையைப் பிரார்த்தித்து அபயக்குரல் எழுப்பினார். அக்கணமே சிம்மவாகினியாகத் தோன்றிய அம்பிகை அசுரர்களை வதம் செய்தாளாம்.

       அப்படிப் போரிடும்போது அசுரர்களின் ரத்தத் துளிகளில் இருந்து புதிது புதிதாக அசுரர்கள் உருவாக, அசுரர்கள் சிந்தும் ரத்தத்தைப் பருகும்படி சிம்மத்துக்குக் கட்டளையிட்டாள் அம்பிகை. சிம்மமும் அப்படியே செய்தது. ஆனாலும் போரின் இறுதியில், சிம்ம வாகனத்தின் காது மடல்களில் இருந்த ரத்தத் துளிகள்...அசுரகுணம் நீங்கப் பெற்று மனிதர்களாக உருப்பெற்றன! அவர்களை, தேவல முனிவருக்கு உதவியாக இருக்கும்படி ஆணையிட்டுச் சென்றாளாம் அம்பிகை.தேவல முனிவரும் உந்தித் தாமரை நூலினால் அனைவருக்கும் ஆடைகள் நெய்து கொடுத்தார். இவரின் வழிவந்தவர்களே, ஸ்ரீராமலிங்க சௌடேஸ்வரி அம்மனை வழிபடும் தேவாங்க சமூகத்தினர் (சிவபெருமானின் அங்கத்திலிருந்து உருவானவர்கள் தேவாங்கர்) எனவும், இவர்களின் நெசவுத் தொழிலுக்கு உதவியாக இருப்பவர்கள் சிங்குதாரர்கள் எனவும் சொல்கிறது அந்தக் கதை!

இங்கு வந்து அம்மனுக்குப் புடவை சார்த்தி வழிபட்டால், நமது குறைகள் அனைத்தும் தீரும் என்பது நம்பிக்கை. மேலும், 'கல்யாணத் தடை அகலவும், குழந்தைப்பேறு வாய்க்கவும் ஸ்ரீசௌடேஸ்வரி அம்மனை மனதார வேண்டிக் கிட்டா, எல்லா வரமும் கைகூடும்’ என்கிறார்கள் அம்பாளின் திருவருளை அனுபவத்தில் உணர்ந்த பக்தர்கள்."நெசவாளர்களின் வாழ்வைக் காக்கும் அந்த அம்பிகையை நாமும் வழிபடுவோம்; நம் தொழில் சிறக்கவும் குலம் செழிக்கவும் அருள்புரிவாள் ஸ்ரீசௌடேஸ்வரி!"நன்றி சக்தி விகடன்