அன்புடையீர் நல்வரவு ,

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,
தேவாங்கர்களாகிய நாம் அனைவரும் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்து வந்தாலும் தேவாங்கர் என்னும் உணர்வு நம்மை ஓன்று சேர்க்கிறது. மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்ற வாக்கிற்கு இணங்க காலத்திற்கு ஏற்ப நாம் நமது குல நிகழ்வுகளை தகுந்த தொழில்நுட்பத்தை கொண்டு பதிவு செய்வது அவசியமான ஓன்று.

இந்த புதியபக்கம் நமது தேவாங்க சமூக செய்திகள்,சடங்குகள்,வரலாறு & அண்மை நிகழ்ச்சிகளை அறிந்துகொள்ளவும் தேவைப்படும் போது பார்க்கவும் உருவாக்கப் பட்டுள்ளது.
உறவுகள் தங்கள் பகுதியில் உள்ள கோவில்&குல தெய்வம் கோவில்களில் நடைபெறும் திருவிழா நிகழ்ச்சிகள் மற்றும் படங்களை இடம்பெற செய்யவும்.

தங்கள் கருத்துக்கள் இந்த தளத்தை மேன்படுத்த உதவும் ஆகயால் தயவுசெய்து கருத்திடவும் . ( தமிழில் கருத்திட தமிழ் எழுதியை பயன்படுத்தவும்)

நன்றி.

2/11/14

பகுதி ஆறு : தீச்சாரல்[ 8 ]

பகுதி ஆறு : தீச்சாரல்[ 8 ]
விந்தியமலையின் தென்மேற்குச்சரிவில் விதர்ப்ப நாட்டின் அடர்காடுகளுக்கு அப்பால் திட இருள் போல எழுந்த கரும்பாறைகளால் ஆன குன்றுகள் சூழ்ந்து மறைத்த சுகசாரிக்கு வியாசர் வந்துசேர்ந்தபோது அவரது தலைமயிர் சடைக்கற்றைகளாக மாறி மண்திரிகள் போல கனத்து தோளில் கிடந்தது. தாடி காற்றில் பறக்காத விழுதுகளாக நெஞ்சில் கிடந்தது. உடம்பெங்கும் மண்ணும் அழுக்கும் நெடும்பயணத்தின் விளைவான தோல்பொருக்கும் படிந்து மட்கி உலர்ந்த காட்டு மரம்போலிருந்தார்.
சுகசாரியைப்பற்றி அவர் ஒரு சூதர்பாட்டில் கேட்டிருந்தார். அங்கே கிளிகள் மனித மொழிபேசும் என்றார் சூதர். காடெங்கும் பச்சைப்பசுங்கிளிகள் இலைக்கூட்டங்கள் போல நிறைந்திருப்பதனால் அந்தக்காடே பகலெல்லாம் வேள்விக்கொடி ஏறிய சாலை போலிருக்கும் என்றார் சூதர். அங்கு செல்லும் வழியையும் அவர்தான் சொன்னார். ‘விந்தியமலை கங்காஸ்தானத்தை அள்ளிவைத்திருக்கும் உள்ளங்கைபோன்றது. அந்தக்கையின் விரலிடுக்கு வழியாக வழிந்தோடும் சிறிய நதிகளின் பாதையில் சென்றால் தட்சிணத்தை அடையலாம். தட்சிணத்தின் தலையாக இருப்பது விதர்ப்பம்.’
விந்தியனை அடைந்து அந்த சிறிய மலையிடுக்கை கண்டடையும் வரை கீழிறங்க ஒரு வழி இருப்பதையே அவர் உணரவில்லை. காடு வழியாக அருகே நெருங்கிய ஒற்றையடிப்பாதை பெரிய மலையில் முட்டி காணாமல் போயிற்று. ஆனால் காட்டுக்குள் மேயவிடப்பட்டிருந்த பசுக்கூட்டம் ஒன்று தலையை ஆட்டி கழுத்துமணிகளை ஒலிக்கச்செய்தபடி கனத்த குளம்பொலியுடன் இயல்பாகச் செல்வதைக் கண்டு அதை பின்தொடர்ந்தார்.
மழைநீர் வழிகண்டுபிடித்து ஒழுகிச்செல்வது போல பசுக்கள் இரு மலைகளுக்கு நடுவே சென்றன. அங்கே வெண்ணிறச்சரடு போல ஒரு சிறு நீரோடை நூற்றுக்கணக்கான பாறைகளில் விழுந்து விழுந்து நுரைத்து பளிங்கு மரம் கீழிருந்து எழுந்தது போல கீழே இறங்கிச்சென்று கொண்டிருந்தது. அந்த ஓடை அறுத்து உருவாக்கிய இடைவெளி பெரும் கோடைவாயில் எனத் திறந்து, பலகாதம் ஆழத்துக்குச் சுருண்டு கீழே சென்று, பச்சைப்படுங்காட்டில் முடிந்தது. காட்டுக்குமேல் வெண்பட்டாக மேகம் பரவியிருந்தது.
பாறைகளின் நடுவே பெரிய பாறைகளைத் தூக்கிப்போட்டு வளைந்து செல்லும் பாதை ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. கோடைகாலத்தில் அப்பாதையை திருவிட நாட்டுக்குச் செல்லும் வணிகர்கள் பயன்படுத்தி வந்தனர் என்பது ஆங்காங்கே அவர்கள் கட்டியிருந்த நிழல்குடில்களில் இருந்து தெரிந்தது. பாறை இடுக்குகளில் அவர்கள் பொதிகளை ஏற்றிச்சென்ற அத்திரியின் சாணி உலர்ந்து படிந்திருக்கக் கண்டார். உதிர்ந்த தானியங்கள் முளைத்த கதிர்கள் சரிந்துகிடக்க அவற்றில் சிறுகிளிகள் எழுந்து பறந்துகொண்டிருந்தன.
கற்பாதை வழியாக காட்டுக்குள் இறங்கி காட்டுப் பழங்களையும் கிழங்குகளையும் ஓடைமீன்களையும் உண்டபடி வியாசர் பகல்கள் முழுக்க பயணம் செய்தார். இரவில் உயரமான மலைப்பாறை மேல் ஏறி அங்குள்ள ஏதேனும் குகையிடுக்கில் தங்கினார். எதிரிகளால் சூழப்பட்டு துரத்தப்பட்டவர் போல சென்று கொண்டே இருந்தார். முதல் இடையர்கிராமத்தில் சுகசாரிமலை பற்றி விசாரித்துக்கொண்டு மேலும் நடந்தபோதெல்லாம் பயணத்தை இயக்கும் இரு விசைகளே அவரை முன்னகர்த்தின. கிளம்பிய இடத்தில் இருந்து வெளியேறும் வேகம், இலக்காகும் இடத்தை எதிர்நோக்கும் ஆவல். ஏதோ ஒரு தருணத்தில் அதை அடைந்துவிட்டோம் என்று உணர்ந்தகணமே கால்கள் தயங்கின.
கீழே இறங்கி அவர் அடைந்த முதல் கிராமம் சதாரவனத்தின் முகப்பு என்றார்கள். சதார வனத்தில் அவர் சந்தித்த ஒரு தமிழகத் துறவிதான் சுகசாரி மலையைப்பற்றி முழுமையான விவரணையை அளித்தார். அவர் இமையமலைக்கு சென்று கொண்டிருந்தார். பாதையோரத்தில் யாரோ ஒரு வணிகன் கட்டிவிட்டிருந்த தர்மசத்திரத்தின் முன்னால் இரவில் வெறும்பாறைமீது மல்லாந்து படுத்து விண்மீன்கள் நிறைந்த வானை பார்த்துக்கொண்டிருந்தார் அவர். கன்னங்கரிய நிறமும் நுரைபோன்ற தலைமுடியும் தாடியும் புலிக்கண்களும் கொண்ட நெடிய மனிதர். கைவிரல்களில் இருந்து எப்போதும் ஒரு தாளம் காற்றில் பரவிக்கொண்டிருந்தது.
சத்திரத்துப் பொறுப்பாளரான மூதாட்டியும் மகளும் கைநிறைய வெண்சங்குவளையல்களும் கழுத்தில் புலிக்கண்கள் போன்ற சோழிகளாலான மாலையும் அணிந்து நெற்றியில் ஒரு கழுகுச்சின்னத்தை பச்சை குத்தியிருந்தார்கள். மாலையில் பயணிகள் அதிகமிருக்கவில்லை. பெரும்பாலும் திருவிடத்து சிறுவணிகர்கள். அவர்கள் மூதாட்டி கொடுத்த தீயில்சுட்ட அப்பத்தையும், தொன்னையில் கொடுக்கப்பட்ட கொதிக்கும் புல்லரிசிக்கஞ்சியையும் வாங்கிக்கொண்டு வந்து ஆங்காங்கே சிறிய குழுக்களாக அமர்ந்து உண்டுகொண்டிருந்தனர். அவர்களின் அத்திரிகளும் கழுதைகளும் குதிரைகளும் ஒன்றாகச் சேர்த்து கட்டப்பட்டு, கழுத்துமணிகளின் ஒலி சேர்ந்தெழ, முன்னால் போடப்பட்ட உலர்ந்த கோதுமைத்தாளை மென்றுகொண்டிருந்தன.
வியாசர் கையில் உணவுடன் நாற்புறமும் பார்த்தபோது அந்த தட்சிணத்துறவியைப் பார்த்து அவர் அருகே சென்றார். அப்பத்தை கஞ்சியில் தோய்த்து உண்டபின் அருகே ஓடிய ஓடையில் கைகழுவிவிட்டு வந்து அந்தப்பாறையில் அமர்ந்தார். துறவி சற்று ஒதுங்கி இடம் விட்டார். வியாசர் குளிர்ந்த பாறையில் அமர்ந்துகொண்டார். நீண்ட நடைபயணத்தின் அலுப்பை உடல் உணர்ந்தது. ஒவ்வொரு தசைநாரும் மெல்லமெல்ல இறுக்கத்தை இழந்து தளர்ந்து படிந்தது. துறவி விண்மீன்களையே பார்த்துக்கொண்டிருந்தார்.
“இன்னும் மூன்றுநாட்களில் மழைக்காலம் தொடங்கும்” என்றார் வியாசர். அவர் துறவியிடம் பேச விரும்பினார். அவரது கால்களைப்பார்த்தபோது அவர் சென்ற தூரம் தெரிந்தது. “ஆம், அங்கே திருவிடநாட்டில் இப்போதே மழை தொடங்கியிருக்கும்” என்றார் துறவி.
“நீங்கள் திருவிடத்தில் இருந்து வருகிறீர்களா என்ன?” என்றார் வியாசர். “ஆம்” என்றார் துறவி. “எங்கே செல்கிறீர்கள்?” துறவி விண்மீன்களைப் பார்த்தபடி “வடக்கே” என்றார். “ஏன்?” என்றார் வியாசர். “ஏனென்றால்… நான் தெற்கே பிறந்தமையால்” என்றார் துறவி.
வியாசர் மெல்லிய அங்கதத்துடன் “அப்படியென்றால் வடக்கே பிறந்த நான் தெற்குநோக்கிச் செல்லவேண்டுமா என்ன?” என்றார். “ஆம், பாரதவர்ஷம் ஞானியின் கையில் கிடைக்கும் விளையாட்டுப்பாவை. எந்தக்குழந்தையும் பாவையின் அறியாத பகுதியையே திரும்பிப்பார்க்கும்.”
அந்த கவிப்பேச்சு உருவாக்கிய மதிப்புடன் “என் பெயர் கிருஷ்ண துவைபாயனன்” என்று வியாசர் தன்னை அறிமுகம் செய்துகொண்டார். “நீங்கள் வேதங்களை தொகுத்தவர் அல்லவா?” என்று அவர் பரபரப்போ வியப்போ சிறிதும் இன்றி கேட்டார். வியாசர் “ஆம், நான்தான். என் தந்தையின் ஆணைப்படி அதைச்செய்தேன்” என்றார்.
“என் பெயர் தென்மதுரை மூதூர் சித்திரன் மைந்தன் பெருஞ்சாத்தன். முதுகுருகு, தண்குறிஞ்சி என்னும் இருநூல்களை நானும் யாத்துள்ளேன்” என்றார் துறவி. “நாம் சந்திப்பதற்கு ஊழ் அமைந்திருக்கிறது. அது வாழ்க!” வியாசர் “பாண்டியநாட்டைப்பற்றி நான் ஓரளவு அறிந்திருக்கிறேன்” என்றார். “கொற்கையின் முத்துக்களின் அழகை பாடியிருக்கிறேன்.”
சாத்தன் புன்னகைத்து “அவை என் முன்னோரின் விழிகள். கடலுள் புதைந்த எங்கள் தொல்பழங்காலத்தைக் கண்டு பிரமித்து முத்தாக ஆனவை அவை. அவற்றின் ஒளியில் இருக்கின்றன என் மூதாதையர் வாழ்ந்த ஆழ்நகரங்கள். ஆறுகள், மலைகள், தெய்வங்கள். அன்று முதல் இன்றுவரை அந்த அழியாப்பெருங்கனவையே நாங்கள் உலகெங்கும் விற்றுக்கொண்டிருக்கிறோம்.”
தன்முன் பாரதவர்ஷத்தின் பெருங்கவிஞர் ஒருவர் அமர்ந்திருப்பதை வியாசர் உணர்ந்தார். எஞ்சிய அறிவாணவத்தை அகற்றிவிட்டு அவர் மனம் முழுமையாகவே பணிந்தது.
“கண்ணால் ஞானத்தை அடையவிரும்புபவன் பாரதவர்ஷத்தை காண்பானாக” என்றார் சாத்தன். “வியாசரே, என்றோ ஒருநாள் உங்கள் முதற்சொல்லை அறிய நீங்களும் தென்னகம் ஏகவேண்டியிருக்கும். அங்கே உங்கள் ஊழ்கத்தின் வழிச்சொல்லை உங்கள் தெய்வங்கள் கொண்டுவந்து அளிப்பர்.”
“நான் எப்படி அதைத்தேடிச்செல்வது?” என்றார் வியாசர் பணிவுடன். “வலசைப்பறவைகளுக்கு வானம் வழிசொல்லும்….” என்றார் சாத்தன். வானைச்சுட்டி “விண்மீன்கள் என்னிடம் சொல்லும் வழி ஒன்று உள்ளது. வடக்கே… வடக்கே ஏதோ ஓர் இடம். என் சொல்லைத்தேடி நான் செல்கிறேன்.”
வியாசர் தனக்குள் எழுந்த அலையை உணர்ந்தார். கைகூப்பி “குருநாதரே, தங்களை நான் சந்திக்கவைத்த ஆற்றலின் நோக்கத்தை அறியமாட்டேன். அதன் எண்ணம் ஈடேறுவதாக!” என்றார்.
“நீங்கள் உங்கள் மைந்தரைத்தேடிச் செல்கிறீர்கள் அல்லவா?” என்றார் சாத்தன். “இன்னும் நூறுநாழிகைத் தொலைவில் இருவிரல் முத்திரையென எழுந்த இரு பெரும் பாறைகளுக்கு நடுவே செல்லும் பாதை சுகசாரிமலைக்கு வழியாகும்.”
VENMURASU_EPI_34
ஓவியம்: ஷண்முகவேல்
[பெரிதுபடுத்த படத்தின்மீது சொடுக்கவும்]
“தாங்கள் சுகனை சந்தித்தீர்களா?” என்றார் வியாசர். “ஆம்… நான் தட்சிணமேட்டில் ஏறும்போது ஒரு கிளி இனியகுரலில் வேதமந்திரம் ஒன்றை முழுதுரைப்பதைக் கேட்டேன். வியப்புடன் அக்கிளியைப் பின் தொடர்ந்து சென்றேன். செல்லும்தோறும் வேதமந்திரங்களை உரைக்கும் பல கிளிகளைக் கண்டேன். அவை சுகமுனிவர் வாழும் சுகசாரி மலைக்கிளிகள் என்றனர் ஊரார். நான் அக்கிளிகளைத் தொடர்ந்து சுகசாரிமலைக்குச் சென்றேன். மோனத்தில் அமர்ந்த இளம் முனிவரைக் கண்டு வாழ்த்துரைசெய்து மீண்டேன்” என்றார் சாத்தன்/
“அவன் என் மகன்” என்று வியாசர் முகம் மலர்ந்தார். “அவனுக்கு எட்டு வயதாகும்வரை நானே அவனுடைய ஆசிரியனாக இருந்து வேதவேதாங்கங்களை கற்றுக்கொடுத்தேன். அதன்பின் மிதிலைநகரின் ஜனகமன்னரிடம் அவனை அனுப்பினேன். காட்டிலேயே வளர்ந்த அவன் நாடும் நகரும் அரசும் அமைச்சும் கண்டு தேறட்டும் என்று நினைத்தேன். அரசமுனிவரான ஜனகர் அதற்கு உகந்தவர் என்று தோன்றியது.”
“ரகுகுல ராமனின் துணைவி சீதையன்னையின் தந்தை ஜனகரையே நான் நூல்வழி அறிந்திருக்கிறேன்” என்றார் சாத்தன். வியாசர் “அந்த ஜனகரின் வழிவந்தவர் இவர். கற்றறிந்தும் உற்றறிந்தும் துறந்தறிந்தும் அனைத்துமறிந்த அரசர். அவரது அவையில் சென்று இவன் அமர்ந்தான். ஒவ்வொருநாளும் அங்கே நிகழும் நூலாய்வையும் நெறியாய்வையும் கற்றான்” என்றார்.
வியாசர் சொன்னார். ஒருநாள் ஜனகமன்னர் தன் அவையில் ஓர் அறவுரை நிகழ்த்துகையில் அறம் பொருள் இன்பம் மூன்றையும் அறிபவனுக்கே வீடு திறக்கும் என்றார். அவ்விதி எந்நூலில் உள்ளது என்று சுகன் கேட்டான். அது நூலில் உள்ள நெறியல்ல கண்முன் இயற்கையில் உள்ள நெறி என்றார் ஜனகர். மலர் பிஞ்சாகி காயாகித்தான் கனிய முடியும் என விளக்கினார்.
ஆனால் சுகன் அந்நெறி எளிய உயிர்களுக்குரியது என்றான். கீழ்த்திசையில் நாளும் உதிக்கும் சூரியன் உதித்த மறுகணமே ஒளிவீசத் தொடங்குகிறதல்லவா என்றான். ஜனகர் அதைக்கேட்டு திகைத்தார். பின்பு அறமும் பொருளும் இன்பமும் அறியாத இளைஞன் நீ. நூல்களில் சொல்லப்பட்டிருக்கும் ஒரு விடுகதைக்கு பதில் சொல், அதன்பின் நீ சொல்வதை நான் ஏற்கிறேன் என்றார்.
“அந்த வினா பழைய நூல்களில் பலவாறாக சொல்லப்பட்டிருக்கிறது” என்றார் வியாசர். உத்தாலகர் என்ற முனிவருக்கு ஸ்வேதகேது என்று ஒரு மைந்தன் இருந்தான். தந்தை தன் ஞானத்தையெல்லாம் அளித்து அந்த மைந்தனை பேரறிவுகொண்டவனாக ஆக்கினார். ஒருநாள் அவர்கள் இருவரும் காட்டில் தவம்செய்துகொண்டிருக்கையில் அங்கே முதிய பிராமணர் ஒருவர் வந்தார்.
அப்பிராமணர் உத்தாலகரின் அழகிய மகனைப்பார்த்து, இந்த வனத்தில் உங்களுக்கு எப்படி இவ்வளவு அழகிய மைந்தன் பிறந்தான் என்று கேட்டார். உத்தாலகர், என் மனைவி என்னுடன் தவச்சாலையில் இருக்கிறாள். என் தவத்தை அவளும் பகிர்ந்துகொள்கிறாள் என்றார்.
அந்தப்பிராமணர் அறிவிலும் அழகிலும் குறைந்தவர். கண்பார்வையும் அற்றவர். அவர் சொன்னார். நான் வயது முதிர்ந்தவன். எனக்கு மைந்தர்கள் இல்லை. நீர்க்கடன் செய்ய ஆளில்லாத இல்லறத்தானாகிய நான் நரகத்தீயில் விழுவதற்குரியவன். இந்தவயதில் இனிமேல் எனக்கு எவரும் பெண்ணை தரப்போவதில்லை. ஆகவே உன் மனைவியை எனக்குக் கொடுத்துவிடு. என் குழந்தை ஒன்றை அவளிடம் பெற்றபின் உன்னிடமே அனுப்பிவிடுகிறேன். அதன்பின் அவர் உத்தாலகரின் குடிசைக்குள் நுழைந்து அவரது மனைவியை கையைப்பிடித்து இழுத்துச்செல்லத் தொடங்கினார்.
உத்தாலகரின் மனைவி தவத்தால் மெலிந்தவள், கடும் உழைப்பால் தளர்ந்தவள். அவளுக்கு அந்த முதியபிராமணனை பிடிக்கவுமில்லை. ஆனால் அவள் கூடவே சென்றாள். ஸ்வேதகேது ஓடிச்சென்று அந்தப்பிராமணரைப்பிடித்து நிறுத்தினான். என் தாயை இதற்கு அனுப்பமுடியாது என்று சொன்னான். இது அவளுக்கு துயரத்தை அளிக்கிறது, அவள் பெண்மையை இது அவமதிக்கிறது என்றான்.
பிராமணர் சொன்னார். நெறிநூல்களின்படி எனக்கு ஒரு மைந்தனைப்பெற உரிமை உண்டு. அதற்கு நான் இவளைக் கொண்டுசெல்வதும் சரியே. மகனை ஈன்றளித்தல் பெண்ணுக்கு எவ்வகையிலும் இழிவல்ல, பெருமையே ஆகும். தொல்முறைப்படி ஓர் அரணிக்கட்டையை பதிலுக்குப் பெற்றுக்கொண்டு நீ இவளை விட்டுவிடு.
உத்தாலகரும் அவர் சொல்வது முறைதான், அவர் நரகத்துக்குச் செல்ல நாம் அனுமதிக்கலாகாது என்றார். மைந்தரை பெற்றுவிட்டுச் செல்லாத ஒருவரை இறைசக்திகள் தண்டிக்கும். அந்தத் தூய கடமையை அவர் செய்யட்டும் என்றார்.
ஸ்வேதகேது அந்தப் பிராமணரைப் பிடித்து விலக்கிவிட்டு கடும் சினத்தின் கண்ணீருடன் தன் வலக்கையில் தர்ப்பையை எடுத்துக்கொண்டு “எதன்பொருட்டானாலும் நான் இதை அனுமதிக்கமுடியாது. என் அன்னையை இன்னொருவன் தீண்டுவதை நான் விலக்குகிறேன். இனிமேல் இவ்வுலகில் இந்தப் பழைய நெறிகள் எதுவும் இருக்கலாகாது என நான் வகுக்கிறேன், என் தவத்தின்மேல் ஆணை” என்றான்.
அதைக்கண்ட பிராமணர் “உத்தாலகரே, நீர் நூலறிந்தவர். நீர் சொல்லும், நான் நீர் சொல்வதைச் செய்கிறேன். இவர் சொல்வது பிழை என்றால் நீர் உம் தவ வல்லமையால் இவரைப் பொசுக்கும்” என்று கூவினார். ஆனால் உத்தாலகர் ஒன்றும் பேசாமல் திரும்பி காட்டுக்குள் சென்றுவிட்டார். திரும்பி வரவேயில்லை.
“நெறிநூல்களான யமசுருதி நாரதசுருதி அனைத்திலும் உள்ளது இக்கதை. இதிலுள்ள கேள்வி என்னவென்றால் ஏன் உத்தாலகர் ஒன்றும் சொல்லாமல் திரும்பிச்சென்றார் என்பதுதான்” என்றார் வியாசர்.
சாத்தன் புன்னகைத்துக்கொண்டு “இதற்கு உங்கள் மைந்தர் என்ன சொன்னார்?” என்றார். “இவ்வினாவுக்கு எவரும் சரியான பதிலை சொன்னதேயில்லை. கதைகேட்ட ஒவ்வொருவரும் அந்தப்பிராமணர்மீது சினம்கொண்டு ஸ்வேதகேது சொன்னவை சரியே என்பார்கள். அது சரி என்பதனால்தான் உத்தாலகர் திரும்பிச்சென்றார் என்று விளக்குவார்கள். அது சரியான விடை அல்ல என்று என் மகன் சொன்னான்” என்றார் வியாசர்.
மிருகங்கள் நடந்தும், பறவைகள் பறந்தும், புழுக்கள் நெளிந்தும் அறத்தை அறிந்துகொள்கின்றன. அவையறியும் அறம் ஒன்றே, பிறப்பை அளித்தலே உடலின் முதற்கடமை. மண்ணில் தன் குலத்தையும் அக்குலத்தில் தன் ஞானத்தையும் விட்டுச்செல்வது மட்டுமே மனித வாழ்வின் இறுதியுண்மை என மனிதர்களும் கருதிய காலத்தின் அறத்தையே உத்தாலகரும் அந்தப்பிராமணரும் சொன்னார்கள். அவர் மனைவியும் அதை ஏற்றுக்கொண்டாள் என்று சுகன் ஜனகருக்குச் சொன்னான்.
அந்த அறத்தில் அனைத்தும் பிறக்கும் குழந்தைகளால் நியாயப்படுத்தப்படுறது. ஆனால் அக்குழந்தைகள் திரும்பிநின்று அது பிழையெனச் சொல்லும்போது அந்தக்காலம் முடிவுக்கு வந்துவிடுகிறது. தாய்தந்தையரின் கற்பொழுக்கம் பிள்ளைகளால் கட்டுப்படுத்தப்படும் புதியகாலம் பிறந்துவிட்டது. இனி அதுவே உலகநெறியாகும் அதை உணர்ந்தே உத்தாலகர் ஒன்றும் சொல்லாமல் காட்டுக்குள் சென்றார் என்று சுகன் அவ்வரங்கில் சொன்னான்.
“அன்று ஜனக மன்னர் என் மகனைநோக்கி நீ நூறாண்டு வாழ்ந்து கனிந்தவன் போல் பேசுகிறாய். உனக்கு முதல்மூன்று வாழ்வுமுறைமையும் தேவை இல்லை. நீ சூரியன் போன்று எப்போதும் ஒளியுடையவனாக இருப்பாய் என வாழ்த்தினார்…” என்றார் வியாசர். “அங்கிருந்து அவன் என்னிடம் வந்து சேர்ந்தான். அவனை என்னால் உணரமுடியவில்லை. அவனிடம் மீண்டும் மீண்டும் இல்லறம் பற்றிச் சொன்னேன்.”
“ஆனால் ஒருநாள் நானும் அவனும் நீர்நிலை ஒன்றைக்கடந்து சென்றோம். முன்னால் அவன் சென்றான். நான் பின்னால் சென்றேன். அந்நீர்நிலையில் ஏராளமான இளம்பெண்கள் நீராடிக்கொண்டிருந்தனர். அவர்கள் அவனை பொருட்படுத்தவேயில்லை. ஆனால் நான் அருகே சென்றதும் அனைவரும் ஆடைகளை அள்ளி உடலை மூடிக்கொண்டனர். சிலர் ஓடிச்சென்று நீரில் மூழ்கினர்…. அது என்னை அவமதிப்பது என்று எனக்குப்பட்டது. அவர்களிடம் ஏன் அப்படிச்செய்தார்கள் என்று கேட்டேன். உங்கள் மகன் கண்களில் முற்றிலும் காமம் இல்லை, அவன் வந்ததையே நாங்களறியவில்லை என்று சொன்னார்கள். அன்றுதான் அவனை நான் அறிந்தேன்.”
“அன்று உங்களையும் அறிந்துகொண்டீர்கள் இல்லையா?” என்று சாத்தன் சிரித்தார். “அதன்பின் அது நிறுவப்பட்டதையும் அறிந்தீர்கள்.” வியாசர் அதிர்ந்து ஏதும் சொல்லாமல் அவரைப்பார்த்தார். “ஆகவேதான் இத்தனைதூரம் நடந்து உங்கள் மைந்தரைக் காணச்செல்கிறீர்கள்…”
வியாசர் உடலைவிட்டு உயிர் பிரிவதுபோன்ற மெல்லிய துடிப்புடன் “ஆம்…” என்றார். “தாங்கள் அனைத்தையும் அறியும் நுதல்விழிதிறந்தவர் சாத்தரே… குரு அறியாத சீடனின் அகம் என ஏதுமிருக்க இயலாது.” பெருமூச்சுடன் சற்றுநேரம் தன்னில் மூழ்கி இருந்தபின் “முதலிரு நாட்களும் என் காமமும் அகங்காரமும் கண்ணை மறைத்திருந்தன. மூன்றாம் நாள் முழுநிலவு. நானும் முழுமையை அன்று உணர்ந்தேன். அன்றிரவு என் சொற்கள் ஒளிகொண்டிருந்தன. அவை தொட்டவை அனைத்தும் ஒளி கொண்டன…” என்றார்.
“ஆனால் மறுநாள் காலை நான் என்னை வெறும் வெளியில் கிடக்கும் வெற்றுடல்போலக் கண்டு கூசினேன். என்னையே வெறுத்து ஓடிச்சென்று நீரில் விழுந்தேன். நீர் என்னை தூய்மைப்படுத்தவில்லை என்று கண்டு மந்திரங்களில் நீராடினேன்… ஒவ்வொன்றாலும் மேலும் மேலும் அழுக்காக்கப்பட்டேன்.” வியாசர் வேண்டுபவர் போல தன் கைகளை நெஞ்சுடன் சேர்த்துக்கொண்டார்.
வியாசர் “என் அகம் எரிகிறது சாத்தரே” என்றார். “பிழையையும் சரியையும் பிரித்தறியும் ஆற்றலை இழந்துவிட்டேன்” துயரத்துடன் தலையை கையால் பற்றிக்கொண்டார். “ஆசைகளையும் அகங்காரத்தையும் வெல்லமுடியாதவனுக்கு ஞானமே விஷம். நான் செய்தவை எல்லாமே சரிதான் என வாதிடவே நான் அடைந்த ஞானம் எனக்கு வழிகாட்டுகிறது. அதைவெறுத்து பிய்த்துவீசினால் அவை திரண்டு என்னை குற்றம் சாட்டி கடித்துக் குதறுகின்றன. துரத்தி வந்து எள்ளி நகையாடுகின்றன.”
கண்ணீருடன் இரு கைகளையும் விரித்து வியாசர் சொன்னார், “எதற்காக நூல்களைக் கற்றேன்? எளிய மிருகம்போன்ற வாழ்க்கை எனக்கிருந்தால் இந்தத் துயரம் இருந்திருக்காது… ஒவ்வொரு கணமும் அம்மூன்று நாட்களும் பெருநோய் போல பெருகிப்பெருகி என்மேல் படர்கின்றன…என்னுள் வெறுப்பு நிறைகிறது. வெறுப்பு என்பது கொல்லும் விஷம்…சுயவெறுப்போ ஆலகாலம்.”
சாத்தன் மாறுதலற்ற முகத்துடன் விண்மீன்களைப் பார்த்துக்கிடந்தார். வியாசர் “விண்மீன்களிடம் நேரடியாகப் பேசுபவர் நீங்கள். உங்களிடம்தான் நான் சொல்லமுடியும்…அதற்காகவே நான் உங்களை சந்தித்திருக்கிறேன்… இந்த விண்மீன்களுக்குக் கீழே நான் அனைத்தையும் சொல்லவிரும்புகிறேன் சாத்தரே. இக்கணம் இப்புவியில் எனக்கிணையான பெரும் பாவி எவருமில்லை” என்றார்.
கண்ணீரும் கொந்தளிப்புமாக வியாசர் சொல்லிமுடித்ததும் சாத்தன் விண்மீன்கூட்டத்தை நோக்கியபடி புன்னகைசெய்தார். “கோடானுகோடி விண்மீன்கள்…கோடானுகோடி உயிர்கள். கோடானுகோடி வாழ்க்கைகள். இதில் பாவமென்ன புண்ணியமென்ன? கடலலைக் குமிழி நிலையற்றது. கடலே காலவெளியில் ஒரு வெறும் குமிழி…” என்றார்.
வியாசர் அவரையே பார்த்துக் கொண்டிருந்தார். “நீர்வழிப்படும் புணைபோன்றது வாழ்க்கை. ஆகவே பெரியோரை வியக்கவும் மாட்டேன். சிறியோரை இகழ்தலும் மாட்டேன். பிழையை வெறுப்பதுமில்லை. நிறையை வணங்குவதுமில்லை” என்றார் சாத்தன். பிறகு சிரித்துக்கொண்டே திரும்பி “வியாசரே, நீர் இதுவரை செய்தவை ஏதும் உமது பணிகள் அல்ல. செய்யவிருப்பதே உமது பணி” என்றார்.
“என்ன செய்யப்போகிறேன்?” என்றார் வியாசர். “அதை நான் அறியேன். ஆனால் பெருநிகழ்வொன்றின் தொடக்கத்தைக் காண்கிறேன். முதற்புலவன் புற்றுறைவோன் முன்பொருநாள் அன்புடன் அமர்ந்திருந்த அன்றில்பறவைகளில் ஒன்றை வேடன் வீழ்த்தக்கண்டு விட்ட கண்ணீருக்கு நிகரானது நீர் இப்போது விட்ட கண்ணீர்த்துளி” சாத்தன் சொன்னார்.
வியாசர் சொல்லிழந்து பார்த்துக்கொண்டிருந்தார். “எங்கள் தென்னகத் தொல்மொழியில் கடல்கொண்ட பெருங்காவியங்கள் பல உண்டு. கருநிறமும் வெண்ணிறமும் கூர்ந்து இணைந்து ஒளியாவதே காவியம் என முன்னோர் வகுத்தனர். உம்முள் மூன்றையும் உணர்ந்துவிட்டீர்.”
“நான் செய்யவேண்டியது என்ன?” என்றார் வியாசர். “உமது அகம் வழிகாட்டி அழைத்துச்செல்லும் வழியில் செல்க. ஆம், நீர்வழிப்படும் புணை போல” என்று சாத்தன் சிரித்தார்.
இரவில் விண்மீன்கள் வெளித்த முடிவின்மையைப் பார்த்தபடி வியாசர் அக்கரும்பாறைமேல் கிடந்தார். அருகே மெல்லிய மூச்சொலியுடன் சாத்தன் துயின்றுவிட்டிருந்தார். ஒரு மனிதர் அருகிருக்கையில் அவ்வுணர்வே உருவாகாத விந்தையை வியாசர் மீளமீள எண்ணிக்கொண்டார். நேர்மாறாக விண்மீன்களின் பெருவிரிவு ‘இதோ நீ இதோ நீ’ என்றே சொல்லிக்கொண்டிருந்தது. மின்னி மின்னி. திரும்பத்திரும்ப.
காலையில் வணிகர்கள் கிளம்பும் ஒலிகேட்பது வரை அவர் பேசமறுத்து பிரக்ஞையுடன் விளையாடிக்கொண்டிருந்த விண்மீன்களையே பார்த்துக்கொண்டிருந்தார். நெடுமூச்சுடன் பார்க்கையில் சாத்தன் அருகே இல்லை என்று உணர்ந்தார்.
அன்றும் மறுநாளும் நடந்து சுகசாரி மலையடிவாரத்தில் இருந்த ரிஷபவனம் என்ற இடையர் கிராமத்தை அடைந்தார். அவர்கள் மலையேறிச்செல்லும் வழி ஒன்றைக் காட்டினர். அங்கு இரவு தங்கி காலையில் அவர்கள் அளித்த பால்கஞ்சியை அருந்தியபின் மலையேறத்தொடங்கினார். மலையிறங்கிச் சென்ற கிளி ஒன்று வானிலேயே ஸ்வாஹா என்று சொல்லிச்சென்றதைக் கேட்டு மெய்சிலிர்த்து கைகூப்பி நின்றுவிட்டார்.
மேலும் மேலும் கிளிகள் வந்துகொண்டே இருந்தன. வேதமந்திரங்கள் மரங்களில், செடிகளில், வானூர்ந்த காற்றில் விளைந்தன. கண்களில் நீர் வழிய மலை ஏறிச்சென்றார். அங்கு செல்லச்செல்ல அங்குவருவதற்காகவே அவ்வளவுதொலைவு வந்தோம் என்று உறுதிகொண்டார்.
இனியமலைச்சாரல் அது. பழமரங்களும் பூமரங்களும் செறிந்த பொழில்களின் பசுந்தொகை. காட்டின் பிரக்ஞைபோல நீர் ஒலி கேட்டுக்கொண்டே இருந்தது. கரிய பாறைகள் காலையின் இனிய மென்மழைச்சாரலால் நனைந்து கருமையாக ஒளிவிட்டன. அவற்றின் இடைவெளிகளில் மலை சிரிக்கும் வெண்பற்கள்போல அருவிகள் நுரைத்து வழிந்தன.
மலையிறங்கி காட்டுக்குள் புகுந்த நீரோடை ஒன்றின் கரையில் அவர் நின்றிருக்கையில் மேலே இருந்த மலைக்குகையில் இருந்து படியிறங்கி சுகன் வருவதைக் கண்டார். முதல் அசைவிலேயே அது தன் மகன் என தனக்குள் இருந்த தொல்விலங்கு அறிந்துகொண்ட விந்தையை வியந்தார். சுகன் ஆடையற்ற உடலுடன் இறகு ஒன்று காற்றில் மிதந்திறங்குவதுபோல வந்து, வானத்தால் உள்ளங்கையில் வைத்து மெதுவாக மண்ணில் இறக்கப்பட்டான்.
வியாசர் அவனைநோக்கிச் சென்றார். கணம் கணமாக. மகன் என்ற சொல்லன்றி ஏதுமில்லாதவராக. போதம் அனைத்து சிந்தனைகளையும் இழந்து மடியில் தவழ்ந்த மகனாக மட்டும் அவனைப்பார்க்க ஆரம்பித்தது. “சுகதேவா, என் செல்லமே” என்று அழைத்தார். சுகன் திரும்பி அவரைப்பார்த்து புன்னகைசெய்தான்.
அவன் தன்னை அடையாளம் காணவில்லை என்று உணர்ந்து “சுகதேவா, நான் உன் தந்தை கிருஷ்ண துவைபாயனன்” என்றார். நீரில் பரவும் காலையொளி போல பரவசம் நிறைந்த கண்களுடன் “நானா?” என தன் மார்பில் கைவைத்து கேட்டான். “நீ சுகன்…என் மகன்” என்றார் வியாசர். நெடுநாட்களுக்குப்பின் தன்னை உணர்ந்த சுகன் எக்களிப்புடன் இரு கைகளையும் விரித்து “தந்தையே!” என்றான்.
முதன்முதலில் அவன் அச்சொல்லை சொல்லக்கேட்ட அந்நாள் என மெய் சிலிர்த்து துடித்தோடிச்சென்று அவனை அள்ளி மார்போடணைத்துக்கொண்டு மூச்சுமுட்டும்படி இறுக்கிக்கொண்டார் வியாசர். பின்பு விலக்கி அவனது மெல்லிய தோள்களை, இளம் முகத்தில் புகைபோல படர்ந்திருந்த தாடியை, மலரிதழ்போன்ற சிறு உதடுகளை, கைக்குழந்தையின் கண்களை கண்ணீர் மறைத்த தன் கண்களால் பார்த்தார். ‘என் மகன்! என் மகன்! என் மகன்!’ என்னும் இனிய மந்திரமாக அவரது அகம் இருந்தது அப்போது.
பின்பு தன்னுணர்வு கொண்டு அவனை விட்டு விலகி இரு கைகளையும் கூப்பிக்கொண்டு “சுகதேவா, நீயே என் ஞானாசிரியன். சாவை அஞ்சி மருத்துவனை நாடி வருவதுபோல உன்னைத்தேடி வந்தேன்… என்னை காத்தருள்க” என்று சொல்லி முழந்தாளிட்டு வேண்டினார்.
சுகசாரி குகைக்குள் அவன் இருக்க அவன் காலடியில் அமர்ந்து விம்மியும் கண்ணீர்விட்டும் வியாசர் அனைத்தையும் சொன்னார். “சுகதேவா, நீ நீதி சொன்ன அந்தக்கதையை இன்று தற்செயலாக நினைவுகூர்ந்தேன். நானறியவேண்டியதும் அதைப்போன்ற ஒரு முடிவே. குலநீதி சொல்லும் நியோகமுறைப்படியே நான் செய்தவை அமைந்தன. ஆனால் என் நெஞ்சு காலத்துக்கு அப்பால் நோக்கித் திகைக்கிறது…” என்றார்.
“தந்தையே, மண்ணில் ஒழுக்கமென ஏதுள்ளது? அன்றிலின் ஒழுக்கம் காக்கைக்கு இல்லை. தட்சிணத்தின் ஒழுக்கம் அஸ்தினபுரியிலும் இல்லை. கருணைகொண்ட செயல்கள் அனைத்தும் ஒழுக்கமே” என்றான் சுகன்.
“நான் கருணையோடிருந்தேன் என்றால் ஏன் என் மனம் தவிக்கிறது? தவறு செய்துவிட்டேனா என்று ஒவ்வொரு புல்புழுவிடமும் ஏன் கேட்கிறேன். தீர்ப்பு சொல்லவேண்டியவர்கள் என்னில் தொடங்கிய தலைமுறையினர்… அவர்கள் சொல்லப்போவதென்ன என்று நான் எப்படி அறிவேன்?” என்றார். “…உன் மனம் ஒரு படிகவெளி…காலங்களை எல்லாம் உன்னால் காணமுடியும்…நீ சொல்!”
“தந்தையே, அவற்றை நான் ஒரு சொல்லில் சொல்லமுடியாது. கோடி சொற்களால் சொல்லவேண்டியவர் நீங்கள்” என்றான் சுகன். “நீங்கள் சிரஞ்சீவியாக இருந்து உங்கள் உயிர்முளைத்த வனத்தின் வாழ்வனைத்தையும் காணுங்கள்!”
வியாசர் திடுக்கிட்டு “நானா?” என்றார். “என்ன சொல்கிறாய்?” சுகன் சிரித்தான். “ஆம், உன் சொல் காலத்தின் சொல்…அது நிகழும்” என்றார் வியாசர். பின் நடுங்கும் கைகளைக் கூப்பியபடி “ஆனால் சுகதேவா, இது வரமா சாபமா?” என்றார்.
சுகன் அதைக் கேட்கவில்லை. கிளிகள் வேதமந்திரங்களுடன் குகைக்குத்திரும்ப ஆரம்பித்தன. அவற்றின் கால்களில் இருந்து தானியமணிகள் அவன் மேல் பொழிந்தன. அவன் இன்னொரு கிளிபோல அவற்றைப் பொறுக்கி உண்ணத் தொடங்கியிருந்தான்.