அன்புடையீர் நல்வரவு ,

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,
தேவாங்கர்களாகிய நாம் அனைவரும் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்து வந்தாலும் தேவாங்கர் என்னும் உணர்வு நம்மை ஓன்று சேர்க்கிறது. மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்ற வாக்கிற்கு இணங்க காலத்திற்கு ஏற்ப நாம் நமது குல நிகழ்வுகளை தகுந்த தொழில்நுட்பத்தை கொண்டு பதிவு செய்வது அவசியமான ஓன்று.

இந்த புதியபக்கம் நமது தேவாங்க சமூக செய்திகள்,சடங்குகள்,வரலாறு & அண்மை நிகழ்ச்சிகளை அறிந்துகொள்ளவும் தேவைப்படும் போது பார்க்கவும் உருவாக்கப் பட்டுள்ளது.
உறவுகள் தங்கள் பகுதியில் உள்ள கோவில்&குல தெய்வம் கோவில்களில் நடைபெறும் திருவிழா நிகழ்ச்சிகள் மற்றும் படங்களை இடம்பெற செய்யவும்.

தங்கள் கருத்துக்கள் இந்த தளத்தை மேன்படுத்த உதவும் ஆகயால் தயவுசெய்து கருத்திடவும் . ( தமிழில் கருத்திட தமிழ் எழுதியை பயன்படுத்தவும்)

நன்றி.

12/20/13

தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் முடிய) பொதுப்பலன்கள்

தனுசு
(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் முடிய)

பொதுப்பலன்2014-ஆம் ஆண்டு தனுசு ராசியிலும், மூல நட்சத்திரத்திலும் பிறக்கிறது. தனுசுவுக்கு 10-ஆம் இடமான கன்னி லக்னத்தில் வருடம் பிறப்பதால் இவ்வருடம் எல்லா வகையிலும் ஏற்றமும் யோகமும் உள்ளதாக விளங்கும். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் உருவாகும். எதையும் திறம்பட நிறைவேற்றி சாதித்து பேரும் புகழும் பெருமையும் அடையலாம். செய்யும் தொழிலாகட்டும்- வியாபாரமாகட்டும்- பணியாகட்டும் எல்லாவற்றிலும் முத்திரை பதிக்குமளவு முன்னேற்றமும் வெற்றியும் எதிர்பார்க்கலாம். தேக ஆரோக்கியத்திலும் தெளிவும் பூரணசுகமும் உண்டாகும். பொருளாதாரத்தி லும் குறைவில்லாமல் சரளமான நிலையும் திருப்தியும் உண்டாகும். சிலர் சேமிப்புத் திட்டங்களில்- வைப்புநிதியில் முதலீடு செய்யலாம்.

7-ல் குரு. 11-ல் சனி, ராகு நிற்க, அவர்களை ராசிநாதன் குரு பார்ப்பதால் திருமணத் தடை விலகும். குருபார்வை (ராசிநாதன்) 11-ஆம் இடம், ஜென்ம ராசி, 3-ஆம் இடங்களுக்குக் கிடைக்கிறது. "ஒரு கல்லில் இரு மாங்காய்' என்பது போல- குரு ராசிநாதன் என்பதோடு 2014-ஆம் வருட  ராசிநாதனும் என்பதால் அரசில் வரிக்குவரி சர்சார்ஜ் (வாட்வரி) போட்டு வசூலிப்பது போலவும்- சம்பளத்துக்குமேல் ஊக்கத்தொகை (இன்சென்டிவ்) வழங்குவது போலவும் (இது தவிர போனஸும் உண்டு) உங்களுக்கு இரட்டிப்பு யோகம் உண்டாகும்; லாபம் உண்டாகும். 

வேலை பார்க்கும் இடத்திலும் உங்களுடைய உண்மையான உழைப்புக்கும் விசுவாசத்துக்கும் நேர்மைக்கும், நியாயமான பலனும் பயனும் உயர்வும் உண்டாகும். இதுவரை முதலாளிகளைக் காக்கா பிடித்து, கோள் சொல்லி தங்கள் காரியங்களை சாதித்துக் கொண்டவர்களின் சாயம் வெளுத்துப்போகும். நிர்வாகத்தினருக்கு அசல் எது, போலி எது- நல்லவர் யார், கெட்டவர் யார் என்ற உண்மை புலப்பட்டு, களையெடுப்பு செய்து உங்களைப் போன்ற உண்மையானவர்களுக்கு உயர்வு தருவார்கள். 

7-ல் உள்ள குரு திருமணத் தடைகளைப் போக்கி மனைவி யோகம்- கணவர் யோகத்தைத் தருவார். பரிகாரம் செய்து மாதக்கணக்கில் ஆகியும் பலன் கிடைக்கவில்லையே என்று கலங்கித் தவித்தவர்களுக்கும், வருடத் தொடக்கத்தில் தை முதல் சுபகாரிய பேச்சுவார்த்தை ஆரம்பமாகி, வைகாசிக்குள் திருமணம் கூடிவிடும்.

அடுத்து குரு ஜூன் மாதம் மிதுனத்தில் இருந்து கடகத்துக்கு மாறி உச்ச பலம் பெற்று 2-ஆம் இடத்தை பார்க்கும்போது குடும்பத்தில் குழந்தை சத்தம் கேட்கும். புதிதாக திருமணமானவர்களுக்கும்- திருமணமாகி பல ஆண்டுகள் உருண்டோடியும் வாரிசு உருவாகவில்லையே என்று கவலைப்பட்டவர் களுக்கும் வாரிசு உதயமாகிவிடும்.

குருப்பெயர்ச்சி: இந்த வருடம் 13-6-2014-ல் குருப்பெயர்ச்சி. மிதுனத்தில் இருக்கும் குரு- தனுசு ராசிக்கு 8-ஆம் இடமான கடகத்துக்கு மாறுவார். "எட்டினில் குரு- வாலி பட்டமிழந்தது' என்பது பாடல். ஆனாலும் குரு கடகத்தில் உச்சம் என்பதும், குரு தனுசு ராசிக்கு மூலத் திரிகோண ராசிக்கு 8- ஆம் இடத்தில்தான் உச்சம் பெறுவார் என்பதும், 2014-  வருட ராசிநாதன் குரு என்பதும் வருட லக்னத்துக்கு கன்னிக்கு 11-ல் உச்சம்பெறுவது என்பதும் சிறப்பம்சங்கள். எனவே அட்டம குரு உங்களைப் பொறுத்த வரையில் கெட்டது செய்யமாட்டார் என்பது நிச்சயம்!

ஏற்கெனவே நான் அடிக்கடி எழுதுவதுபோல ராசிநாதன் அல்லது லக்னநாதனுக்கு தோஷமில்லை என்பதோடு, வருட ராசிநாதன் என்ற முறையிலும் 8-ல் குரு கெட்ட பலன் நடத்தாது. உச்சம் பெற்ற ராசிநாதன் 12-ஆம் இடம், 2-ஆம் இடம், 4-ஆம் இடங்களைப் பார்க்கக்கூடும். அதனால் சுபவிரயங்கள் நிறைய உண்டாகும். மங்கள விரயம்- ஆதாய விரயம் எனலாம். செலவுக்கேற்ற வகையில் தன வரவும் உண்டாகும். வரவு வந்துகொண்டே இருந்தால் செலவைப் பற்றி சிந்திக்க வேண்டாமே! 4-ஆம் இடத்தை குரு பார்ப்பதால் கல்வி, கேள்வி, பூமி, வீடு, வாகனம், சுகம், தாயன்பு போன்ற 4-ஆம் இடத்துப் பலன்களும் யோகபலன்களாகவே அமையும். மாணவர்களின் படிப்பு, லட்சியம் ஈடேறும். படித்து முடித்தவர்களுக்கு படிப்புக்கேற்ற வேலையும் சம்பாத்தியமும் உண்டாகும். 

குரு வக்ரம்: வருடம் ஆரம்பிக்கும்போதே குரு வக்ரமாகத்தான் இருக்கிறார். மார்ச் 12 வரை வக்ரம். குரு 7-ல் (மிதுனத்தில்) வக்ரம் என்பதால், அனுகூலமான பலன்தான். திருமணத் தடை விலகுவதோடு, திருமணமானவர்களுக்கு மன ஒற்றுமை மகிழ்ச்சியான உறவும் நட்பும் மலரும். கணவரால் மனைவிக்கும் மனைவியால் கணவருக்கும் அன்பும் ஆதரவும் பெருகும். அன்யோன்யம் நெருக்கமாகும்.

அடுத்து 2014 நவம்பரில் மீண்டும் குரு வக்ரம் அடைந்து, 2015 மார்ச் வரை வக்ரகதியிலேயே இருப்பார். அக்காலம் குரு உச்சகதியாக விளங்குவதால் கெடுதலுக்கு இடமில்லை. 8-ஆம் இடம் அதிர்ஷ்ட ஸ்தானம் என்றும் சொல்லப்படும். எனவே குருவின் வக்ரத்தில் எதிர்பாராத அதிர்ஷ்டமும் யோகமும் உண்டாகும். திடீர் தனப்ராப்தியும் கிடைக்கும். தொழில், வேலை, உத்தியோகத்திலும் திருப்திகரமான திருப்பம் உண்டாகும். வக்ரத்தில் உக்ரபலன் நற்பலன் என்பது விதி.

குரு அஸ்தமனம்: 2014 ஜூலை முதல் ஒரு மாதம் (ஆகஸ்டு வரை) குரு அஸ்தமனமாக இருப்பார். இக்காலம். குரு நின்ற இடம் அல்லது பார்த்த இடங்களில் துர்ப்பலன் நடக்கும். அப்போது குரு கடகத்தில் (8-ல்) இருப்பதால் வீண்பயம், கவலை, சஞ்சலம், ஏமாற்றம், நல்லது செய்தாலும் பொல்லாப்பு போன்ற பலன்களைச் சந்திக்கக் கூடும். சில நல்லகாரியம் முடியப்போகும் தருணத்தில் எதிர்பாராத தடையாகிவிடும். மனம் தடுமாறும். ஜாதக தசாபுக்திகள் பாதகமாக இருந்தால் வீண் பழிச்சொல், அபகீர்த்தி, பீடை, சிறுவிபத்து, காயம்  போன்ற பலன்களும் நடக்கலாம். அம்மாதிரி சந்தர்ப்பத்தில் குருவின் அஸ்தமன தோஷம் பாதிக்காமல் இருக்க சென்னை, பாடியில் (திருவலிதாயம்) உள்ள சிவன்கோவிலில் தட்சிணாமூர்த்தியையும், மயிலாடுதுறை, வள்ளலார் கோவில் என்ற பகுதியில், சிவன்கோவில் உள்ள மேதா தட்சிணாமூர்த்தியையும், வியாழனன்று வழிபடவேண்டும். 

ராகு- கேது பெயர்ச்சி: 21-6-2014-ல் ராகு- கேது பெயர்ச்சி வருகிறது. தனுசு ராசிக்கு 11-ல் இருந்த ராகு 10-ஆம் இடம் கன்னிக்கு மாறுகிறார். 5-ல் இருந்த கேது 4-ஆம் இடம் மீனத்துக்கு மாறுகிறார். ஏற்கெனவே ராகு- கேது இருந்த இடங்கள் அற்புதமான இடங்கள்- யோகமான இடங்கள். ஜூன் மாதம் மாறப்போகும் இடங்கள் சுமாரான இடங்கள்தான். என்றாலும் ராகுவும் கேதுவும் அசுப கிரகங்கள். அவர்களுக்கு கேந்திரஸ்தானங்கள்தான் பலம். ஆகவே ராகு 10-லும் கேது 4-லும்  வருவதால் அவை கேந்திரஸ்தானங்கள் என்பதால் ராகு- கேது நற்பலன்களையே செய்வார்கள். ராகு 10-ல் இருப்பதால் தொழில் விருத்தி, புதிய தொழில் ஆரம்பம், புதிய வேலைவாய்ப்பு யோகங்களை எதிர்பார்க்கலாம்.

ராகு 4-ஆம் இடத்தையும், 12-ஆம் இடத்தையும், 8-ஆம் இடத்தையும் பார்க்கப்போவதால், வெளிநாட்டு வாசம், வெளிநாட்டு வேலை கிடைக்கலாம். சிலர் வேலை விஷயமாக வெளிநாடு போகலாம். மலைப்பிரதேசம் போய் வேலை பார்க்கலாம். 8-ஆம் இடத்தையும் 9, 12-ஆம் இடத்தையும் ராகு பார்ப்பதால், ஜாதக தசாபுக்திகள் பாதகமாக இருப்பதால் வெளிநாடு போன சிலர் ஏதாவது பிரச்சினை காரணமாக உடனே திரும்ப நேரலாம். செலவழித்த தொகை நஷ்டமாகிவிடும். சிலர் கடன் வாங்கி வெளிநாடு போயிருந்தால் அந்தக் கடன் பெரும் சுமையாகிவிடும்.

மீன கேது 10-ஆம் இடத்தையும், தனுசு ராசிக்கு 2-ஆம் இடம், 6-ஆம் இடங்களையும் பார்க்கப் போவதால் கடன், வட்டி கையைப் பிடிக்கும். இருந்தாலும் தொழில் தொடரும்; பாதிக்காது. மேலும் மீன கேதுவை உச்ச குரு பார்ப்பதாலும், கன்னி ராகு கடக குருவைப் பார்ப்பதாலும், இருவருக்கும் குரு சம்பந்தம் கிடைப்பதால்- நல்லாரோடு இணைந்திருப்பது நன்று என்ற அடிப்படையில் ராகு- கேது பெயர்ச்சி உங்கள் கௌரவம், மதிப்பு, மரியாதைக்கு பாதிப்பு ஏற்படுத்தாது. கடமை காரியங்களையும் தடுக்காது.

ராகு- கேது பெயர்ச்சிக்கு உங்களுக்குச் சாதகமாக பலன்தர- விழுப்புரம் மாவட்டம், தும்பூர் நாக கன்னியம்மன் கோவில் சென்று வழிபடவும். (ஆமத்தூர்-திருவட்டப்பாறை) முக்தாம்பிகையம்மன் உடனுறை   அபிராமேஸ்வரர் கோவில் சென்று வழிபடலாம். 

சனிப்பெயர்ச்சி: 16-12-2014-ல் சனிப்பெயர்ச்சி. துலா ராசியில் இருக்கும் சனி விருச்சிக ராசிக்கு மாறுவதால், தனுசு ராசிக்காரர்களுக்கு ஏழரைச் சனி ஆரம்பம். முதல் சுற்று நடப்பவர்களுக்கு மங்கு சனி; இரண்டாம் சுற்று நடப்பவர்களுக்கு பொங்கு சனி; மூன்றாம் சுற்று நடப்பவர்களுக்கு மரணச்  சனி என்று சொன்னாலும், ஆயுள் குற்றம் பண்ணாது.  பயப்படவேண்டாம்  90 வயதுக்குமேல் வாழ்கிறவர்கள் மூன்று சனிகளையும் சந்தித்திருப்பார்கள். மரணத்துக்குச் சமமான வேதனை என்று எடுத்துக்கொள்ளலாம். 

மாதவாரிப் பலன்கள்

ஜனவரி 


இம்மாதம் இலக்கியம், கலை போன்ற துறைகளிலும் ஆன்மிகத்திலும் ஈடுபாடு அதிகம் ஏற்படும். வியாபாரம், தொழில் துறையிலும் ஆர்வம் காட்டி லாபம் பார்க்கலாம். பொருளாதாரம் திருப்தியாக அமைந்தாலும் அதற்கென்று ஏதாவது ஒரு செலவு வந்து சேமிக்கமுடியாதபடி ஆகும். இருந்தாலும் மனதில் வருத்தமோ சலிப்போ குறையோ தென்படாது. இறைக்கிற கிணறுதான் ஊறும் என்று சமாதானம் அடையலாம்.

பிப்ரவரி


உங்கள் தகுதி, திறமை, ஆற்றலுக்கேற்ற அளவு பலனும் பயனும் உண்டாகும். உங்கள் கௌரவமும் பாதுகாக்கப்படும். தொழில், உத்தியோகம், வேலையில் ஆர்வம், அக்கறையோடு செயல்பட்டு மேலிடத்தாரின் பாராட்டைப் பெறலாம். சிலர் வேறு வேலை அல்லது வெளிநாட்டு வேலைக்கு முயற்சிக்கலாம். காலதாமதமாகப் பலன்தரும். முயற்சியைக் கைவிடவேண்டாம்.

மார்ச்


5, 12-க்குடைய செவ்வாய் 1-ஆம் தேதி முதல் வக்ரம் அடைவார். 11-5-2014 வரை வக்ரம். 10-ல் உள்ள செவ்வாய் வக்ரம் அடைவது நற்பலன்தான். வியாபாரம், தொழில், உத்தியோகத்தில் முன்னேற்றமும் வெற்றியும் உண்டாகும். புதிய முயற்சிகளும் கைகொடுக்கும். 5-க்குடையவர் 10-ல் இருந்து 5-ஆம் இடத்தைப் பார்ப்பதால், பிள்ளை வகையில் நல்லவை நடக்கும். வாரிசுயோகம் உண்டாகும். பிள்ளைகள் சம்பாத்தியம் சமய சஞ்சீவியாக உதவும். சனியின் வக்ரமும் உங்களுக்கு சாதகமாகவே அமையும்.  லாபம்தான்! 

ஏப்ரல்


தமிழ்ப் புத்தாண்டு ஜய வருடப்பிறப்பு அதுவும் அஸ்த நட்சத்திரம், கன்னி ராசியில் பிறக்கிறது. தனுசுவுக்கு 10-ஆம் இடம். எனவே தமிழ்ப் புத்தாண்டும் உங்களுக்கு தொழில், வாழ்க்கையில் நல்ல திருப்பத்தையும் முன்னேற்றத்தையும் கொடுக்கும். புதுவருடம் உங்கள் கனவுத் திட்டங்களையெல்லாம் நிறைவேற்றும். முக்கியமாக இனி நோயில்லை- வைத்தியச் செலவுமில்லை.

மே


கோட்சாரம் அனுகூலமாக இருப்பதால் உங்கள் ஆசைகளும் விருப்பங்களும் லட்சியங்களும் நிறைவேறும். பெற்றோர் அல்லது குடும்பத்தார் நேர்ந்துகொண்ட தெய்வப் பிரார்த்தனைகளை எல்லாம் நிறைவேற்றிவிடலாம். சமுத்திரஸ்நானம்- தங்கத்தேர் பிரார்த்தனையெல்லாம் நிறைவேறும். சிலர் திருப்பதி சென்று முடிகாணிக்கையைச் செலுத்தலாம். காசி, ராமேஸ்வரம், ஷீர்டி ஸ்தல யாத்திரையும் போகலாம். 

ஜூன்


இம்மாதம் குருப்பெயர்ச்சி ஜூன் 13-ல். ராகு- கேது பெயர்ச்சி ஜூன் 21-ஆம் தேதி. இருபெயர்ச்சிகளும் அற்புதப் பெயர்ச்சிகளாக அமைகிறது. குருப்பெயர்ச்சி, ராகு- கேது பெயர்ச்சி பலன் தனிப் புத்தகமாக வெளிவருகிறது. முழுமையான பலனை அப்போது தெரிந்து கொள்ளவும். குரு உச்சம். ராகு- கேது கேந்திரம். உங்கள் வெற்றிக்கு அவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். ஆரோக்கியம், பொருளாதாரம், கல்வி, எல்லாவற்றிலும் பிளஸ் பாயிண்டு- பாஸ்மார்க்தான்.

ஜூலை


இம்மாதம் சில காரியங்களில் அசுரவேகமும், சில காரியங்களில் ஆமைவேகமுமாக பலன் நடக்கும். எதுவானாலும் இறைவனை நம்பி- தன்னம்பிக்கையோடும் தன்னார்வத்தோடும் செயல்படுங்கள். "தெய்வத்தால் ஆகாது எனினும் முயற்சி தன் மெய்வருத்தக் கூலிதரும்' என்ற குறளின் நெறிப்படி உங்களுக்குப் பலன் உண்டாகும். கூடியவரை வெளியில் யாரிடமும் உங்கள் நடவடிக்கைகளை மனம் திறந்து வெளியிடவேண்டாம். திருஷ்டியாகிவிடும்.

ஆகஸ்டு 


இந்த மாதமும் உங்களுக்கு அவ்வப்போது நல்லது நடக்கும். சிலசமயம் வரவுக்குமேல் செலவும், பணியில் ஓய்வு ஒழிச்சல் இல்லாத கடும் உழைப்பும் காணப்படலாம். தேவையற்ற இடம் மாறுதலும் டென்ஷனும் ஏற்படலாம். அரசியலில் இருப்போருக்கு கடுமையான மறைமுக எதிர்ப்பும் இடையூறுகளும் ஏற்படலாம். எதையும் தாங்கும் இதயத்தோடு செயல்படவும். 

செப்டம்பர்


இந்த மாதம் வருமானப் பெருக்கம் ஏற்படும். கடன் உபாதைகள் விலகும். போட்டி, பொறாமைகள் அகலும். பணப்புழக்கம் தாராளமாகும். குடும்பத்தினரை சந்தோஷப்படுத்துவீர்கள். அவர்கள் விரும்பியதை வாங்கிக் கொடுப்பீர்கள். வேலையில் திருப்தியும் முன்னேற்றமும் உண்டாகும். குலதெய்வம், இஷ்ட தெய்வத்தின் அருள் கிட்டும்.

அக்டோபர்


எதைத் தொட்டாலும் அதில் தேக்கத்தையும் தடை, தாமதங்களையும் சந்தித்து வந்த உங்களுக்கு, இந்த மாதம் "நினைத்தோம்- முடித்தோம்' என்ற திருப்திநிலை உண்டாகும். உடல்நலத்திலும் சுகமும் ஆரோக்கியமும் உண்டாகும். சில நேரம் எதிர்ப்புகளையும் சமாளிக்கவேண்டியிருக்கும். உங்கள் வளர்ச்சியில் பொறாமை கொண்டவர்கள்தான் மறைமுக எதிர்ப்பு வேலையில் இறங்குவார்கள்.

நவம்பர்


வேலை அல்லது உத்தியோகத்தில் ஏதாவது ஒரு சலனம் ஏற்பட்டு மனதில் சஞ்சலம் உண்டாகும். ஆனாலும் அது நிரந்தரமல்ல; நிலையானதுமல்ல. சிறிது நாளில் அது மாறிவிடும், மறைந்துவிடும். வியாபாரிகள் முதலீடு செய்யும்போது மிகவும் யோசித்து- ஆராய்ந்து செயல்படவேண்டும். கூட இருப்பவர்களின் ஆலோசனை சிலசமயம் சரியானதாகவும் இருக்கலாம்; சில சமயம் தவறானதாகவும் இருக்கலாம். யார் யோசனையையும் கேளாமல், உங்கள் மனம் என்ன சொல்லுகிறதோ- எது உங்களுக்கு சரியாகப்படுகிறதோ அதைத் துணிவோடு செய்யவும்.

டிசம்பர்


டிசம்பர் 16-ஆம் தேதி சனிப்பெயர்ச்சி. 11-ஆம் இடத்திலிருக்கும் சனி பகவான் 12-ஆம் இடம் விருச்சிகத்துக்கு மாறுவார். அப்போது விருச்சிக ராசிக்கு ஏழரைச் சனி ஆரம்பிக்கும். இக்காலம் முதல் சுற்றாக இருந்தால் மங்கு சனி- கெடுதலாக நடக்கும். இரண்டாம் சுற்றாக இருந்தால்- பொங்கு சனி யோகமாக இருக்கும். மூன்றாம் சுற்றாக இருந்தால் (65 வயதுக்குமேல் இருந்தால்) மரண வேதனையான பலன்களை அனுபவிக்கவேண்டும். அதில் சந்திர தசையோ சந்திர புக்தியோ நடந்தால்தான் பாதிக்கும். மற்றவர்களுக்கு பிரச்சினை இல்லை.

மூல நட்சத்திரக்காரர்களுக்கு:


2014-ஆம் ஆண்டு உங்கள் நட்சத்திரத்திலும், உங்கள் ராசியிலும் உதயமா   வதால் உங்களுக்கு யோகமான பலன்தான். ராசிநாதன் குரு சஞ்சாரமும் நட்சத்திரநாதன் கேது சஞ்சாரமும் வருடம் முழுவதும் அற்புதமாக இருப்பதால், உங்களுக்கு குருவருளும் திருவருளும் பரிபூரணமாகத் திகழும். முயற்சிகளில் வெற்றியும் திருப்தியும் நிலைக்கும். குடும்பத்தில் வாழ்க்கையில் நட்பும் ஒற்றுமையும் பிரியமும் இணக்கமும் இனிக்கும். உங்கள்மேல் நல்ல  அபிப்பிராயமும் நல்லெண்ணமும் கொண்டோரின் உதவியும் ஆதரவும் உங்களுடைய முன்னேற்றத்துக்கு உதவும்.

பரிகாரம்: திண்டுக்கல் அருகில் கசவனம்பட்டி சென்று, ஜோதி நிர்வாண மௌன சுவாமி ஜீவசமாதியை வழிபடவும். பிள்ளையார்பட்டி கற்பக விநாயகரையும் வழிபடவும்.

பூராட நட்சத்திரக்காரர்களுக்கு:


உங்கள் நட்சத்திரத்துக்கு 9-ஆவது நட்சத்திரத்தில் (மூலம்) 2014-ஆம் ஆண்டு பிறப்பதால்- பரம மைத்ர தாரையாகும். மிகுந்த நட்பு எனப்படும். சுக்கிரன் தனுசு ராசிக்கு 6, 11-க்குடையவர். எதிர்பாராத சுபச்செலவுகள் ஏற்படும். சிலருக்கு குடும்ப நன்மைக்காக சுபக்கடன் வாங்கும் யோகமும் உண்டாகும். சொந்தம், சுற்றத்தார், உறவினர்களுடன் விருந்து, விழா, பூஜை, வழிபாடு, கோவில் தரிசனம் போகலாம். சிலர் சீரடி பாபா கோவில் போய்வரலாம்.

பரிகாரம்:  கும்பகோணம் அருகில் கஞ்சனூர் சென்று வழிபடலாம். சேங்கனூர் என்ற இடத்திலிருந்து இரண்டு கிலோமீட்டரில் திருவெள்ளியங் குடி எனும் தலம். சுக்கிரன் குருடான தன் கண் நலம்பெற வணங்கிய தலம். அத்துடன் சென்னை திருவள்ளூர்- திருத்தணி பாதையில் நான்கு வழிச்சாலையில், ஆற்காடு குப்பம் சித்தர் அனுமந்த சுவாமிகள் ஜீவசமாதி சென்று வழிபடவும். தொடர்புக்கு: தனபால் சுவாமி அலைபேசி: 96266 48022.

உத்திராட நட்சத்திரக்காரர்களுக்கு:


2014-ஆம் ஆண்டு மூல நட்சத்திரத்தில் பிறக்கிறது. உங்கள் நட்சத்திரம் உத்திராடத்திலிருந்து மூலம் 8-ஆவது தாரை (26 -ஆவது நட்சத்திரம்) மைத்ர தாரை- நட்பு தாரை. எனவே இந்த ஆண்டு உங்களுக்கு அனுகூலமான ஆண்டாகவே அமையும். பணப்புழக்கம் தாராளமாக இருக்கும். அரசு வேலையில் இருப்போர் சக பணியாளர்களின் ஆதரவோடு செயல்படலாம். தடைப்பட்ட நிகழ்ச்சிகள் நடைபெறும். உத்திராடம் சூரியன் நட்சத்திரம்- சூரியன் உங்களுக்கு பாக்கியாதிபதி. எனவே பொன்னும் பொருளும் சேரும். பாக்கியம் பால்போல் பொங்கும்.

பரிகாரம்:  கும்பகோணம் அருகில் சூரியனார் கோவில் சென்று நவகிரக மூர்த்திகளை வழிபடவேண்டும். சூரிய பகவான் உஷா- பிரத்யுஷா தேவியா ரோடு மூலஸ்தானத்தில் அருள்பாலிக்கிறார். அத்துடன் திருவண்ணா மலையில் யோகி ராம்சுரத்குமார் அதிஷ்டானம் சென்று வழிபடவேண்டும். மணக்குள விநாயகர் தெரு வழியாகச் செல்லவும். 20-2-2001-ல் மாசிமாதம் உத்திராட நட்சத்திரத்தில் பரிபூரணம் அடைந்தவர்.கள்

துலாம் (சித்திரை 3-ஆம் பாதம் முதல், சுவாதி, விசாகம் 3-ஆம் பாதம் முடிய) பொதுப்பலன்கள்

துலாம்
(சித்திரை 3-ஆம் பாதம் முதல், சுவாதி, விசாகம் 3-ஆம் பாதம் முடிய)

பொதுப்பலன்கள்
2014-ஆம் ஆண்டு துலா ராசிக்கு 3-ஆவது இடம் தனுசு ராசியிலும் 12-ஆவது இடம் கன்னி லக்னத்திலும் பிறக்கிறது. 2014-ஆம் வருட ராசி நாதன் குரு உங்கள் ராசிக்கு 9-ல் நின்று உங்கள் ராசியைப் பார்ப்பதால் செல்வாக்கும் சொல்வாக்கும் குறையாது. திட்டமிட்ட செயல்களைத் திருப்திகரமாக செயல்படுத்தலாம். "எங்கெங்கு காணினும் சக்தியடா' என்று மகாகவி பாரதியார் பாடிய மாதிரி இவ்வருடம் எங்கெங்கும் வெற்றி எதிலும் வெற்றி- தங்கு தடையில்லாமல் தன்னிகரில்லாத வெற்றி என்று வெற்றிகீதம் இசைக்கலாம்.

3-ஆம் இடம் தைரிய ஸ்தானம், சகாய ஸ்தானம், நட்பு ஸ்தானம், சகோதர ஸ்தானம். அப்படிப்பட்ட 3-ஆவது ராசியில் புதுவருடம் பிறப்பதோடு, அந்த ராசிநாதனே (குரு) உங்கள் ஜென்ம ராசியைப் பார்ப்பது விசேஷம்தான். ஆறு மாதம் கழித்து குரு 10-ஆம் இடமான கடகத்துக்கு மாறுவார். மாறினாலும் உச்சபலம் அடைவதால் வருடம் முழுக்கமுழுக்க அந்த யோகமும் வெற்றியும் தொடரும்.

நண்பர்களின் ஆதரவும், உடன்பிறந்தோரின் ஒத்துழைப்பும் உங்களுக்கு மன தைரியத்தையும் துணிவையும் தரும். 9-ஆம் இடம் பூர்வபுண்ணிய ஸ்தானம். பிதுரார்ஜித சொத்துகளைக் குறிக்கும் ஸ்தானம். துலா ராசிக்கு 6-க்குடைய குரு 9-ல் நிற்பதால், பூர்வீக சொத்து பங்குபாகங்களில் சகோதரிகளும் உரிமை கொண்டாடலாம். ஏற்கெனவே அவர்கள் திருமண காலத்திலேயே பொன்னாபரணங்கள், பண்டம் பாத்திரம், சீர்வரிசை என்று சிறப்பாக செய்துவிட்டபடியால், இனி இருக்கும் சொத்துகளில் பெண்பிள்ளைகள் உரிமை கொண்டாட முடியாது. கொண்டாடக்கூடாது என்று நீங்கள் கோரிக்கை வைக்கலாம். இருந்தாலும் அது செயல்படுமா என்பது அன்னையின் விருப்பப்படியே நடக்கலாம்.

அப்படியே பஞ்சாயத்து செய்து ஏதோ பேருக்கு ஒரு குறிப்பிட்ட தொகையைக் கொடுத்து சமாதானப்படுத்தலாம். ராஜபாளையம்- தென்காசிப் பாதையில், வாசுதேவநல்லூரிலிருந்து ஐந்து கிலோமீட்டரில் தாருகாபுரம் உள்ளது. பஞ்சபூதத் தலங்களில் அது நீர் (அப்பு) ஸ்தலம். சுவாமி மத்தியஸ்தநாதர். அம்பாள் அகிலாண்டேஸ்வரி. ஒரு காலத்தில் பாண்டிய மன்னனுக்கும் சேர மன்னனுக்கும் ஏற்பட்ட விவகாரத்தில் சுவாமியே மத்தியஸ்தம் பண்ணி சமரசப்படுத்தியதாக வரலாறு! இந்தக் கோவிலில் இன்னொரு சிறப்பு- தட்சிணாமூர்த்தி சிலையில் சனகாதி முனிவர்கள் நான்கு பேரோடு நவகிரகங்களும் பீடத்தைச் சுற்றி காட்சியளிக்கிறார்கள். இவரை வழிபடுவதால் நவகிரகங்களும் அனுக்கிரகங்களாக ஆசீர்வதிப்பார்கள் என்பது ஐதீகம். அத்துடன் பஞ்சாயத்து விவகாரத்திலும் உங்களுக்கு சாதகமான தீர்ப்பு உண்டாகும்.

12-ஆவது விரய ஸ்தானத்தில் ஆங்கிலப் புத்தாண்டு பிறப்பதால், இந்த வருடம் தவிர்க்க முடியாத செலவுகளும் ஏற்படும் என்றாலும் அவை சுபமங்களச் செலவுகளாகவே அமையும். ராசியில் யோகாதிபதியான சனி உச்சம் பெறுவதாலும், 2, 7-க்குடைய செவ்வாய் கன்னியா லக்னத்தில் இருப்பதாலும் குடும்பத்தில் சுபச் செலவுகள் உண்டாகும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணயோகமும், வாரிசு வேண்டுவோருக்கு வாரிசு யோகமும் உண்டாகும். 9-க்குடைய புதனும் 3-க்குடைய புதனும் பரிவர்த்தனையாக இருப்பதும் ஒரு காரணம்.

துலா ராசிநாதன் சுக்கிரன் 4-ல் அமர்ந்து 10-ஆம் இடம் கடகத்தைப் பார்க்கிறார். ஜென்ம ராசியில் உச்சம் பெற்ற சனியும் 10-ஆம் இடத்தைப் பார்க்கிறார். சனி ராஜயோகாதிபதியாவார். பிள்ளைகளைப் பெற்றெடுத்த பெற்றோர், பிள்ளைகளினால் பெருமையும் பேரானந்தமும் அடையலாம். படிப்பு, விளையாட்டு, கலைத்துறை, பேச்சுப்போட்டி, எழுத்துப்போட்டி என்று உங்கள் பிள்ளைகள் சாதனை படைத்து பேரும்புகழும் பரிசும் வாங்குவது உங்களுக்கு பெருமைதானே!

“"தந்தை மகற்காற்றும் உதவி அவையத்து முந்தியிருப்பச் செயல்' என்றும்,  "மகன் தந்தைக்காற்றும் கடன் இவன் தந்தை எந்நோற்றான் கொல் எனும் சொல்' என்றும் தந்தை- தனயன் கடமையை வள்ளுவர் குறிப்பிட்டுள்ளார். அதேபோல "ஈன்றபொழுதிற் பெரிதுவக்கும் தன் மகனைச் சான்றோன் எனக் கேட்ட தாய்' என்றும் சொல்லியிருக்கிறார். 2014-ல் பெற்றவர்களுக்கும் பிள்ளைகளுக்கும் பெருமை சேரும்.

புராணத்தில் தந்தையை மிஞ்சிய புதல்வன்- "கந்தக் கடவுள்!' இதிகாசத்தில் தந்தையைவிடப் புகழ்பெற்றவர்கள் "லவன் குசன்!' சரித்திரத்தில் தந்தை மோதிலால் நேருவைவிட புகழ்பெற்றவர் ஜவஹர்லால்நேரு- அவரைவிட புகழ்பெற்றவர் இந்திரா காந்தி! அந்தமாதிரி உங்களைவிட புகழ்பெறும் பாக்கியம் உங்கள் மக்களுக்கு உண்டு. 5-க்குடைய சனி உச்சம் பெற்று, அவரையும் 5-ஆம் இடத்தையும் 9-ஆம் இடத்தில் உள்ள குரு பார்த்த பெருமை அதுதான்.

ஒருசில பிள்ளைகளினால் பெற்றவர்கள் அடையும் வேதனையும் வடிக்கும் கண்ணீரும் சொல்லிமுடியாது. இப்படிப்பட்ட பிள்ளை இருப்பதை விட இறப்பதே மேல் என்று நினைக்கத் தோன்றும். 5-க்குடையவர் நீசமாகி 5-ல் பாபகிரக சம்பந்தம் இருக்கும் பெற்றோர் ஜாதகம் அப்படித்தான் அமையும். இப்படிச் சொன்னபடி கேட்காத பிள்ளைகள் திருந்துவதற்கு என்ன பரிகாரம் என்றால், 21 ஞாயிற்றுக்கிழமை காலை 6-00 மணி முதல் 7-00 மணிக்குள் சூரிய ஓரையில், நந்தி சந்நிதியில் நெய் விளக்கு ஏற்றி பிரார்த்திக்க வேண்டும்.

இந்த வருடம் குரு, ராகு- கேது, சனி ஆகிய மூன்று கிரகப் பெயர்ச்சிகள் ஏற்படும். ஜூன் மாதம் 13-ஆம் தேதி குருப்பெயர்ச்சியும், ஜூன் மாதம் 21-ல் ராகு- கேது பெயர்ச்சியும் ஏற்படும். ஆனால் சனிப்பெயர்ச்சி டிசம்பர் 16-ல் வருவதால் அதன் பலனை 2015-ல் விரிவாகக் காணலாம்.

13- 6- 2014-ல் மிதுன குரு கடகத்துக்கு மாறுவார். அதாவது துலா ராசிக்கு 9-ல் இருந்து 10-ஆம் இடத்துக்கு மாறுவார். 9-ஆம் இடத்தைவிட 10-ஆம் இடம் சர்வசாதாரண இடம்தான். 10-ஆம் இடத்து குரு பதிமாறச் செய்யும் என்பார்கள். ஆனால் குரு கடகத்தில் உச்சம் பெற்று- துலா ராசிக்கு 2-ஆம் இடத்தையும், 4-ஆம் இடத்தையும், 6-ஆம் இடத்தையும் பார்க்கப் போவதால், பாதிப்புக்கு இடமில்லை. மேலும் 10-ஆம் இடத்துக்கு (கடகத்துக்கு) குரு பாக்கியாதிபதி (9-க்குடையவர்) என்பதால் தொழில் கெடாது. வியாபாரம் விருத்தியடையும். புதிய வேலைவாய்ப்பும் உண்டாகும். 4-ஆம் இடத்தை குரு பார்ப்பதால் தேக ஆரோக்கியமும் சௌக்கியமும் உண்டாகும். சிலருக்கு வாகன பரிவர்த்தனை யோகம் உண்டாகும். சிலருக்கு பூமி, வீடு, வாகன யோகம் அமையும். சிலருக்கு தாய்வழிச் சொத்து கிடைக்கும். சிலருக்கு வேலை பார்க்கும் மனைவி பேரில் கடன் வாங்கி புது வீடு கட்டி கிரகப்பிரவேசம் செய்யும் யோகம் உண்டாகும்.

இன்னும் சிலர் ஒரு வட்டிக்கு வாங்கி இரண்டு வட்டிக்கு தாங்களே கையிலிருந்து கடனை அடைத்து நஷ்டப்பட்டது உண்டு. அப்படிப் பட்டவர்களுக்கு கடகத்தில் உச்சம் பெறும் குருவை ஜென்மத்தில் உச்சம் பெறும் சனி பார்ப்பதால், திடீர் தனப்ராப்தி யோகம் அமையும். பொதுவாக "உச்சனை உச்சன் பார்த்தால் பிச்சை எடுக்கச் செய்யும்' என்பது பழமொழி. ஆனால் சனியோடு ராகு- கேது சம்பந்தம் பெறுவதால் மேற்கண்ட விதிக்கு- விதிவிலக்கு ஆகும். கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் யோகம். ஜூன் 21-ஆம் தேதி ராகு- கேது பெயர்ச்சிக்குப் பிறகும் அந்த யோகம் தொடரும். கேதுவை குரு பார்க்கவும், குருவை ராகு பார்க்கவும் ஒரு அமைப்பு ஏற்படும்.

21-ஆம் தேதி ராகு- கேது பெயர்ச்சி. துலா ராசிக்கு ஜென்மத்தில் நின்ற ராகு- 12-ஆம் இடத்துக்கு மாறுவார். 7-ஆம் இடத்தில் நின்ற கேது துலா ராசிக்கு 6-ல் மாறுவார். பாபகிரகங்கள் பாப ஸ்தானத்தில் நிற்பது யோக பலனாகும். கடந்த காலத்தில் (ஜென்ம ராகு - சப்தம கேது) கணவன்- மனைவிக்குள் கருத்துவேறுபாடும் சண்டையும் சச்சரவுமாக சஞ்சலப் பட்டவர்கள் உண்டு. அதிலும் வருமானம் உள்ள மனைவி- வருமானம் இல்லாத கணவரை அலட்சியப்படுத்துவதால் கணவருக்கு கௌரவப் பிரச்சினையாகி, அதைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் வெறுத்துப் போயிருப்பார்கள். இந்த ராகு- கேது பெயர்ச்சி அந்த மாதிரி குடும்பத்தில் நல்ல திருப்பத்தை ஏற்படுத்தும். அதாவது கணவருக்கு எப்படியாவது வருமானம் ஏற்பட்டு வைராக்கியமும் தெம்பும் உண்டாகிவிடும். அதனால் மனைவிகளும் கணவனுக்குரிய மரியாதையையும் கொடுத்து விடுவார்கள். "இல்லானை இல்லாளும் வேண்டாள்' என்று சும்மாவா பாடியிருக்கிறார்கள். கைப் பொருள் உள்ளானை எல்லாரும் எதிர்கொண்டு போற்றுவார்கள் அல்லவா!

20-2- 2014 வரை குரு வருடத்தொடக்கத்தில் வக்ரமாக இருப்பார். அடுத்து 2014 கடைசியில் நவம்பர் 27 முதல் குரு வக்ரம் அடைவார். பிப்ரவரி வரை குரு வக்ரமாக இருக்கும் காலம் மிதுனத்தில் இருப்பார். துலா ராசிக்கு 9-ல் வக்ரம் என்பது யோகம். தகப்பனார், பூர்வ புண்ணியம் வலுப்பெறும் காலம். தெய்வானுகூலம் தேடிவரும். குருவருளும் திருவருளும் பெருகும்.

நவம்பரில் குரு வக்ரம் அடையும்பொழுது துலா ராசிக்கு 10-ல் குரு உச்சமாக இருப்பார். அதுவும் நன்மையான காலமே! தொழில் உயர்வு, மேன்மை, பிரகாசம் ஏற்படும். கடகம் சந்திரன் ராசி! சந்திரன் மாநில அரசு கிரகம். சூரியன் மத்திய அரசு கிரகம். எனவே அரசுப்பணியில் இருப்பவர் களுக்கு பதவி உயர்வு, ஊதிய உயர்வு, விரும்பிய இடப்பெயர்ச்சி ஏற்பட இடமுண்டு. தொழில்துறையில் மாற்றம் இல்லாதவர்களுக்கு குடியிருப்பில் மாற்றம் ஏற்படும். அந்த மாற்றம் முன்னேற்றமான மாற்றமாக அமையும்.

2014 ஜூலை முதல் ஒரு மாத காலம் குரு அஸ்தமனமாக இருப்பார்.  குரு வக்ரம் அடையலாம். ஆனால் நீசமாகக்கூடாது. அஸ்தமனம் அடையக்கூடாது. அதனால் எந்த இடத்தில் இருக்கிறாரோ- எந்த இடத்தைப் பார்க்கிறாரோ- அவற்றில் எல்லாம் பிரச்சினைதான்.

அந்த மாதிரி சந்தர்ப்பங்களில் குரு பரிகார பூஜை செய்யவேண்டும். திருவண்ணாமலையிலிருந்து போளூர் போகும் பாதையில் கலசப்பாக்கத்திலிருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் பூண்டி என்னும் ஊர் இருக்கிறது. (மங்களத்தில் இருந்து ஒரு கிலோ மீட்டர்) அங்கு பூண்டிசாமி ஜீவசமாதி சென்று வழிபடவும். நவகிரகங்களின் தோஷங்கள் சித்தர்களின் ஜீவசமாதி சென்றுதான் போக்க வேண்டும்.

சனி வக்ரம்: ஜென்மத்தில் நிற்கும் உச்சனி 2014 மார்ச் 1-ஆம் தேதி முதல் வக்ரம் அடைவார். 28-6-2014 வரை சனி வக்ரம். இக்காலம் ஜென்மச் சனியின் தாக்கம் அதிகமாகவே இருக்கும். ஒரு கிரகம் வக்ரம் அடையும்போது அதன் பலன் உக்ரமாக இருக்கும். வக்ரத்தில் உக்ர பலம், நல்ல இடத்தில் இருந்தால் நல்ல பலன் உக்ரமாகவும் (அதாவது வேகமாகவும்), கெட்ட இடத்தில் இருந்தால் கெட்டபலன் வேகமாகவும் இருக்கும். இங்கு ஏழரைச் சனியில் ஜென்மச்சனி என்பதால், ஜென்மச் சனி சீரழிக்கும் என்பது போன்ற பலன் நடக்கும். ஆனால் பிறக்கும்போது உங்கள் ஜாதகத்தில் சனி வக்ரமாக இருந்தால், கோட்சாரத்தில் சனி வக்ரமடையும் காலம் யோகமான பலனாக இருக்கும். சனிப்ரீதியாக, சங்ககிரி பஸ் ஸ்டாப்பிலிருந்து பழைய இடப்பாடி பாதையில், சிவன் கோவிலில் சனி பகவான் தனிச் சந்நிதியில் தம்பதி சகிதம் காட்சியளிக்கிறார். சென்று வழிபடவும்.

மாதவாரிப் பலன்கள்

ஜனவரி


இந்த மாதம் உங்களுக்கு இனிய மாதமாகத் திகழும். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு ஒருசில எதிர்ப்புகள் ஏற்படலாம். அரசியல் துறையில் இருப்பவர்களுக்கு முடிவெடுக்க முடியாதபடி குழப்பங்கள் ஏற்படலாம். வியாபாரிகள், தொழிலதிபர்களுக்கு முன்னேற்றமும் லாபமும் உண்டாகும்.

பிப்ரவரி

குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் ஏற்பாடு ஆகும். அதற்காக சுபக் கடன் வாங்கலாம். தேக சுகமும் ஆரோக்கியமும் சிறப்பாக அமையும். புதிய முயற்சிகள் கைகூடும். சிலருக்கு தொழில் மாற்றம் அல்லது இடமாற்றம் ஏற்படலாம். பொருளாதாரம் சரளமாக காணப்படும்.

மார்ச் 


7-க்குடைய செவ்வாய் வக்ரம். (இரண்டு மாதம்). மனைவி அல்லது மனைவி வர்க்கத்தில் கருத்து வேறுபாடுகளும் தர்க்கங்களும் ஏற்படலாம். இருவரும் ஒரே கருத்தையே வலியுறுத்தினாலும் அதைச் செயல்படுத்தும் வழிமுறைகளில் விட்டுக்கொடுக்கும் மனப்போக்கு இருக்காது. எனவே மனத்தளர்ச்சி அடையாமல் அனுசரித்து நடக்க முயலவேண்டும்.

ஏப்ரல்


இந்த மாதமும் செவ்வாயின் வக்ரகதி தொடரும். கூடப்பிறந்தவர்களுடன் வம்பு, வழக்கு, வாக்குவாதங்கள் ஏற்படலாம். சொத்துப் பிரச்சினை, பங்குபாகப் பிரச்சினை மேலோங்கும். சொந்த பந்தத்தில் சிக்கல் ஏற்படலாம். அதனால் ஆரோக்கியமும் கெடலாம்; நிதானம் அவசியம்.

மே


கடந்த இரண்டு மாதமாக (மார்ச் முதல்- ஜூன்வரை) சனி வக்ரம்.  வக்ரத்தில் உக்ர பலம் என்பதால் கூட்டுத்தொழில் முயற்சிகளில் வெற்றியும் முன்னேற்றமும் உண்டாகும். குலதெய்வமும், அதன் எல்லையும் தெரியாமல் திண்டாடித் திரிந்தவர்களுக்கு குருப்பெயர்ச்சிக்குள் குலதெய்வமும் எல்லையும் தெரியும். பங்காளிகளுடன் போய் பூஜை செய்யலாம்.

ஜூன்


இம்மாதம் 13-ஆம் தேதி குருப்பெயர்ச்சி. 21-ஆம் தேதி ராகு- கேது பெயர்ச்சி. இந்த இரு பெயர்ச்சிகளும் உங்கள் எதிர்காலத்துக்கு நல்ல அஸ்திவாரமாக அமையும். திருமணத்தடை விலகும். புத்திர தோஷமும் அகலும். சுபமங்களச் செலவுகள் உண்டாகும். மகிழ்ச்சியான நிகழ்ச்சிகள் நடக்கும்.

ஜூலை


குரு அஸ்தமனம் அடையும் காலம். 10-ல் உச்சம் பெற்றும் அஸ்தமனம் அடைவதால் தொழில், உத்தியோகத்தில் சலனங்கள் ஏற்பட்டு விலகும். நண்பர்கள் வட்டாரத்திலும் பிரச்சினைகள் வெடிக்கும். பொருளாதாரமே அதற்கு காரணமாக அமையும். எதையும் யோசித்துச் செயல்படுவது நல்லது.

ஆகஸ்டு


வழக்கம்போல் எல்லா காரியங்களும் வழக்கப்படியே நடக்கும். கேடுகெடுதிக்கு இடமில்லை. தவிர்க்கமுடியாத திடீர் பயணத்தால் சிறு நன்மையை அனுபவிக்கலாம். கூட்டுத்தொழில் நடத்துகிறவர்கள் விவகாரம் பிடித்த வில்லங்க பார்ட்னரை விலக்கிவிட்டு மனதுக்குப் பிடித்த புது பார்ட்னரைச் சேர்க்கலாம். தொழில் விருத்தியடையும்.

செப்டம்பர்


உச்ச குருவும் உச்ச சனியும் ஒருவரையொருவர் பார்த்துக்கொள்வது ஒரு வகையில் நல்லதல்ல என்றாலும், ஜாதக தசாபுக்திகள் யோகமாக நடந்தால் எந்தச் சங்கடத்துக்கும் இடமிருக்காது. சிலசமயம் உங்கள் வாழ்க்கைப் பயணம் வேகக்குறைவாக ஓடும் வண்டிபோல நிதானமாக இருந்தாலும் பயணம் தடைப்படாது; சேரவேண்டிய இடத்துக்கு போய்ச் சேரலாம்.

அக்டோபர்


வெளிநாட்டுத் தொடர்புடையவர்களுக்கு ஆதாயம் கிடைக்கும். தனவரவு ஏற்படும். பொருளாதார நிலை திருப்திகரமாக அமையும். குடும்பத்தில் அன்பும் பாசமும் ஒற்றுமையும் உண்டாகும். இரும்பு சம்பந்தப்பட்ட தொழில் லாபகரமாக இருக்கும். உல்லாசப் பயணம் செய்வீர்கள். விமானப்பயணம் உண்டாகும். ஆரோக்கியமும் தெளிவாக விளங்கும்.

நவம்பர்


கோட்சார கிரகங்கள் அனுகூலமாக சஞ்சரிப்பதால் எந்தக் குறையும் இருக்காது; பாதிப்பும் இருக்காது. கௌரவம், புகழ், கீர்த்தி, செல்வாக்கு, ஆற்றல், திறமை, பெருமை எல்லாம் உங்களை வந்தடையும் காலம்! திட்டங்கள் வெற்றியடையும். காரியங்கள் கைகூடும்.

டிசம்பர்


டிசம்பர் கடைசியில் சனிப்பெயர்ச்சி. ஜென்மச் சனி விலகி 2-ஆம் இடம் மாறுவார். கடக குருவின் பார்வையைப் பெறுவார். எனவே ஏழரைச் சனி உங்களுக்கு பொங்கு சனிதானே தவிர மங்கு சனியல்ல! தங்கு தடையில்லாத முன்னேற்றமும் வெற்றியும் உண்டாகும். தெய்வப் பிரார்த்தனைகள் நிறைவேறும்.

சித்திரை நட்சத்திரக்காரர்களுக்கு


2014- ஆம் ஆண்டு மூல நட்சத்திரத்தில் பிறப்பதால், உங்கள் சித்திரை நட்சத்திரம் முதல் வருட நட்சத்திரம். மூலம் 6-ஆவது நட்சத்திரம்- சாதக தாரை! எனவே இந்த வருடம் உங்களுக்கு யோகமாகவும் அதிர்ஷ்டமாகவும் இருக்கும். பெரியோர்களின் ஆசி கிடைக்கும். தேகநலம் தெளிவாக இருக்கும். வீடு, மனை சம்பந்தமான திட்டங்கள் வெற்றியடையும்.

பரிகாரம்: அருப்புக்கோட்டை அருகில் திருச்சுளி சென்று திருமேனிநாதர் (பூமிநாதசுவாமி) துணைமாலையம்மையை வழிபடவும். ரமண மகரிஷி பிறந்த ஊர். சதானந்த முனிவர் வழிபட்ட தலம். பார்வதிதேவியார் தன்னை சிவபெருமான் மணம்புரிய வேண்டி வழிபட்ட தலம்.

சுவாதி நட்சத்திரக்காரர்களுக்கு


சுவாதி நட்சத்திரத்தில் இருந்து மூல நட்சத்திரம் (2014-ஆம் வருடம் பிறக்கும் நட்சத்திரம்) 5-ஆவது நட்சத்திரம். பகை நட்சத்திரம் என்றாலும், சுவாதி  ராகு சாரம்; மூலம் கேது சாரம் என்பதாலும் ராகு- கேது ஒரே கிரகம் என்பதாலும் விதிவிலக்கு உண்டு. மேலும் ராகு துலா ராசியிலும், கேது மேஷ ராசியிலும் சமசப்தமாக இருந்து பார்த்துக்கொள்வதாலும், குரு பார்வை ராகுவுக்குக் கிடைப்பதாலும் 2014-ல் உங்களுக்கு தேக ஆரோக்கியம், ஆயுள் விருத்தி, கல்வி யோகம், ஞானம், இனிய வாழ்வு ஆகிய எல்லா நன்மைகளையும் தருவது உறுதி.

பரிகாரம்: திருவையாறு- ஏனாகுறிச்சி வழி காமராசவல்லி சென்று கார்கோடக ஈஸ்வரரை வழிபடவும். பரீட்சித்து மகாராஜா, சர்ப்பம் தீண்டி சாகக்கடவது என்று முனிவரின் சாபத்திற்கு ஆளாகி அதேபோல இறந்தான். அதனால் அவன் மகன் சர்ப்ப யாகம் நடத்தி உலகத்தில் உள்ள எல்லா பாம்புகளையும் அக்னிக்கு இரையாக்கினான். சர்ப்பங்களின் தலைவன் கார்க்கோடகன் மட்டும் இவ்வூர் சிவபெருமானைச் சரணடைந்து உயிர் பிச்சை வேண்ட, சுவாமியும் அவனைத் தன் கழுத்தில் சூட்டிக்கொள்ள, உயிர் தப்பினான். பழுதடைந்திருந்த இந்தக் கோவிலை, இரண்டு வருடங்களுக்கு முன் புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்த சங்கல்பம் செய்து, 100 சிவாச்சாரியார்களைக் கொண்டு ஸ்ரீருத்ர ஜெப பாராயணம் செய்து ஹோமம் நடத்தினார். இப்போதும் அங்கு மூல ஸ்தானத்துக்கு நாகராஜா வந்து போவதாகவும் பார்த்ததாகவும் அர்ச்சகர் கூறுகிறார். தஞ்சாவூர்- திருவையாறு- திருமானூர்- ஏனாகுறிச்சி  வழி காமரசவல்லியை அடையலாம். கும்பகோணத்திலிருந்து திருவையாறு போகலாம்.

விசாக நட்சத்திரக்காரர்களுக்கு:


2014-ஆம் ஆண்டு மூல நட்சத்திரத்தில் உதயமாகிறது. உங்கள் நட்சத்திரம் விசாகத்தில் இருந்து மூல நட்சத்திரம் 4-ஆவது நட்சத்திரம் ஹேம தாரை. எனவே இந்த வருடம் உங்களுக்கு மிகமிக இனிய வருடமாக அமையும். விசாகம் குரு நட்சத்திரம். குருவின் தனுசு ராசியில்தான் ஆங்கில புதுவருடம் உதயமாகிறது. குருவும் 9-ல் நின்று உங்கள் ராசியைப் பார்க்கிறார். எனவே 2014-ல் உங்களுடைய நீண்டகாலத் திட்டங்கள் நிறைவேறும். தேக ஆரோக்கியம் சிறப்பாக விளங்கும். உடலை வருத்திய எல்லா நோய்களும் விலகிப்போகும். அது கேன்சர் ஆனாலும் சரி; கிட்னி பிராப்ளமாக இருந்தாலும் சரி; ஹார்ட் அட்டாக்காக இருந்தாலும் சரி... பயப்படத் தேவையில்லை. டாக்டர்கள் பயமுறுத்தும் எல்லா நோய்களும் பக்தி வழிபாட்டால் நீங்கிவிடும்.

பரிகாரம்: காரைக்குடியில் நடராஜா தியேட்டர் கீழ்புறம் நாகநாத சுவாமி கோவில்- கிருஷ்ணமூர்த்தி பெருமாள் கோவில் அடுத்தடுத்து உள்ளன. அதன் எதிரில் தெப்பக்குளம். கரையில் அட்டமாசித்தி தட்சிணாமூர்த்தி சந்நிதி இருக்கிறது. வியாழக்கிழமை சென்று வழிபடவும். சோமு குருக்கள் செல்: 99438 19133-ல் தொடர்பு கொள்ளலாம்.

விருச்சிகம் (விசாகம் 4-ஆம் பாதம் முதல், அனுஷம், கேட்டை முடிய) பொதுப்பலன்கள்

விருச்சிகம்
(விசாகம் 4-ஆம் பாதம் முதல், அனுஷம், கேட்டை முடிய)


பொதுப்பலன்கள்
2014 -ஆம் ஆண்டு உங்களுடைய விருச்சிக ராசிக்கு 2-ஆவது ராசியான தனுசு ராசியிலும், 11-ஆவது இடமான கன்னியா லக்னத்திலும் உதயமாகிறது. ஆங்கிலப் புதுவருடம் மூல நட்சத்திரத்தில் பிறக்கிறது. எனவே இந்தப் புதுவருடம் உங்களுக்கு எல்லா வகையிலும் ஏற்றமும் பெருமையும் உடைய வருடமாக இருக்கும் என்பதில் எந்த வகையிலும் சந்தேகமே இல்லை.

கடந்த வருடத்தில் அனுபவித்த விரயம், ஏமாற்றம், இழப்பு, நஷ்டம் எல்லாம் இந்த வருடத்தில் நிவர்த்தியாகிவிடும். வட்டியும் முதலுமாக சம்பாதித்து, சேமித்து பொருளாதாரப் பற்றாக்குறையை- நெருக்கடியைச் சரிக்கட்டிவிடலாம். தனகாரகனும் தனாதிபதியுமான குரு 8-ல் மறைந்தாலும், தனது ஸ்தானத்தை (2-ஆம் இடத்தையே) பார்ப்பதால் எதிர்பாராத தனப்ராப்திக்கும் இடமுண்டு. உங்களுக்கு வரவேண்டிய அல்லது உங்களுக்குச் சேரவேண்டிய பணத்தொகையை இந்த வருட ஆரம்பத்திலேயே அடைந்துவிடலாம்.

மேலும் குடும்பத்தில் திருமணம், புத்திரபாக்கியம் போன்ற யோகங்களையும் இந்த ஆண்டு அடையலாம். கல்வி பயிலும் மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வமும் முன்னேற்றமும் உண்டாகும். மேற்படிப்பு யோகமும் ஏற்படும். 8-ஆம் இடத்து குரு விருச்சிக ராசிக்கு 4-ஆம் இடத்தைப் பார்ப்பதால், தேகநலமும் ஆரோக்கியமும் சுகமும் உண்டாகும். தாயன்பும் பாராட்டும் ஏற்படும். வீடு, மனை பாக்கியமும் எதிர்பார்க்கலாம். வாடகை வீட்டில் குடியிருப்போர் போக்கியத்துக்கு (ஒத்திக்குப்) போகலாம். போக்கியத்தில் இருப்போர் சொந்த வீட்டைக் கிரயம் முடித்துப்போகலாம். அல்லது சொந்த வீடுகட்டி கிரகப்பிரவேசம் செய்யலாம்.

8-ஆம் இடம் என்பது 9-ஆம் இடமான பூர்வ புண்ணியஸ்தானத்துக்கு விரயஸ்தானம் 12-ஆம் இடமாகும். என்பதால், பிதுரார்ஜித சொத்துகளை சிலர் விக்கிரயம் செய்யலாம் அல்லது பரிவர்த்தனை செய்யலாம். ஒன்றைக் கொடுத்து இன்னொன்றை வாங்குவது பரிவர்த்தனை எனப்படும். அத்துடன் குடும்பத்தில் நேர்ந்துகொண்ட தெய்வப் பிரார்த்தனைகளை இப்போது நிறைவேற்றிவிடலாம்.

விருச்சிக ராசிக்கு 11-ஆவது லாபஸ்தானத்தில் கன்னியில் புதுவருட லக்னம்  அமைவதால் லாபம், வெற்றி, அனுகூலம் உண்டாகும். வழக்கு வியாஜ்ஜியங்களிலும்  விவகாரங்களிலும் சாதகமான பலனும் வெற்றியும் ஏற்படும். 12-ஆம் இடத்தில் சனியும் ராகுவும் நின்று 2-ஆம் இடத்தைப் பார்ப்பதோடு, 2-க்குடைய குருவின் பார்வையைப் பெறுவதால் தன சம்பாத்தியத்துக்காக சிலர் வெளிநாட்டு வேலைக்குப் போகலாம். அல்லது வெளிமாநிலம் போகலாம். சில குறுக்கீடுகளும் தடைகளும் ஏற்பட்டாலும், அவற்றைக் கடந்து செயல்படலாம். அரபு நாடுகளுக்கு அல்லது மேற்கத்திய நாடுகளுக்குப் போகலாம். வெளிநாட்டில் செட்டில் ஆனவர்கள் இந்த ஆண்டு பல வருடங்களுக்குப் பிறகு தாய்நாடு திரும்பிவந்து தாயாதி, பங்காளி, உறவினர்களோடு உறவாடி உவகையடையலாம்.  

10-ஆம் இடம் தொழில் ஸ்தானம். அதற்கு திரிகோண ராசியில் புதுவருடம் பிறப்பதால், தொழில் விருத்தியும் தன விருத்தியும் முன்னேற்றமும் எதிர்பார்க்கலாம். அது சூரியனின் ராசி (சிம்மம்) என்பதால், அரசு வேலை வாய்ப்பும், அரசு வேலையிலிருப்போருக்கு அனுகூலமான பலனும் உண்டாகும். அரசியலில் ஈடுபாடு உடையவர்களுக்கு பதவி உயர்வு, தேர்தலில் ஜெயம், முக்கியமான கட்சிப் பொறுப்பு போன்ற பலன்களும் உண்டாகும். சமூகத்தில் நல்ல அந்தஸ்தும் மதிப்பும் மரியாதையும் ஏற்படும். 10-ஆம் இடத்துக்கு தனஸ்தானம் 2-ஆம் இடத்தில் ஆங்கிலப் புத்தாண்டு பிறப்பதால், தொழில், சம்பாத்தியம் சிறப்பாக இருப்பதோடு சேமிப்பும் உண்டாகும். நீண்டகால சேமிப்புத் திட்டத்தில் (வைப்புநிதி) முதலீடு செய்யலாம். வாழ்க்கையில் அன்பும் ஆதரவும் பெருகும். குடும்ப ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிறைவும் ஏற்படும்.

உங்களுக்கோ அல்லது பிள்ளைகளுக்கோ கடந்த ஆண்டு உத்தியோகத்தில் ஏற்பட்ட கரும்புள்ளி- சஸ்பெண்டு போன்ற வருத்தங்கள் இந்த ஆண்டு நீங்கி, மீண்டும் வேலை வாய்ப்பும் கடமையைச் செய்யும் வாய்ப்பும் உண்டாகும். இதுவரை அதற்காக நீங்கள் செய்துகொண்ட பிரார்த்தனைகளுக்கும், கோவில் பூஜைகளுக்கும் இந்த ஆண்டு பலன் கிடைக்கும். சிலர் வழக்குப் போட்டு காத்திருந்தாலும் நல்ல தீர்ப்பும் கிடைக்கும். முழுச்சம்பளத்தொகையும் கைக்குக் கிடைக்கும்.

குருப்பெயர்ச்சி: இந்த ஆண்டு 13-6-2014-ல் குருப்பெயர்ச்சி. 8-ல் மறைவாக இருந்த குரு 9-ல் கடகத்தில் உச்சம் பெற்று உங்கள் ராசியைப் பார்க்கப் போகிறார். 3-ஆம் இடம், 5-ஆம் இடங்களையும் பார்க்கக்கூடும்.

சகோதர சகாயம், நண்பர்கள் ஆதரவு, குடும்ப உறவினர்களின் ஒத்துழைப்பு, புதியவர்களின் உதவி, எதிர்காலம் இனிமையாகவும் வளமையாகவும் இருக்கும் என்ற நம்பிக்கை, தைரியம், தெம்பு ஆகிய பலன்களை குரு தருவார். 5-ஆம் இடம் புத்திரஸ்தானம், அதற்குடைய குரு 9-ல் உச்சம் பெற்று 5-ஆம் இடத்தைப் பார்ப்பதோடு, ஜென்ம ராசி விருச்சிக ராசியையும் பார்க்கப்போகிறார். பிள்ளைகளுக்கும் பெற்றவர்களுக்கும் நல்லுறவும் நட்பும் தொடரும். பிள்ளைகளின் வளச்சியால் பெற்றோர் பெருமை அடையலாம். பெற்றோர் ஆதரவால் பிள்ளைகள் நிம்மதி அடையலாம். திருமணப் பருவத்தில் உள்ள பெண்களுக்கும் ஆண்களுக்கும் திருமணம் கூடும். திருமணமான பிள்ளைகள் வகையில் தொல்லைகளும் பிரச்சினைகளும் விலகி நல்லவை நடக்கும். அதாவது சம்பந்திகள் பொருத்தம் சந்தோஷமாகும்.

12-3-2014 வரை குரு வக்ரமாக இருப்பார். போனவருடம் 2013 மார்ச் முதல் குரு வக்ரம். 2014 பிறக்கும்போதே குரு வக்ரம்தான். அடுத்து இரண்டாவது கட்டமாக 27-11-2014 முதல் மீண்டும் குரு வக்ரம் அடைவார். 2015 மார்ச் வரை குரு வக்ரகதி. இந்த வக்ரகதியும் உங்கள் ராசிக்கு 100-க்கு 100 நன்மையும் யோகமும் உடையதாக இருக்கும். நல்ல இடத்தில் இருக்கும் கிரகம் வக்ரம் அடையும்போது நல்ல பலன்களை ஆணித்தரமாகச் செய்யும்; கெட்ட இடத்தில் வக்ரமாகும் கிரகம் கெட்ட பலனையும் கட்டாயம் வலுவாகச் செய்யும்.

குரு அஸ்தமனம்: 6-7-2014 முதல் ஒரு மாதம் குரு அஸ்தமனமாக இருப்பார். இக்காலம் குரு எந்த இடத்தில் இருக்கிறாரோ- எந்தெந்த இடங்களைப் பார்க்கிறாரோ அந்த இடங்களில் எல்லாம் பிரச்சினைகளை உருவாக்கி மகிழ்ச்சியைக் கெடுக்கும். சகோதர ஸ்தானம்- புத்திரஸ்தானம் ஆகியவற்றில் சஞ்சலம், கவலை, வருத்தம் ஏற்படலாம். விலகிவிலகிப் போனாலும் வம்புதும்பு, வழக்கு, வில்லங்கம் விரட்டிவந்து துரத்தும்.

கும்பகோணம் அருகில் தேவூர் என்னும் தலம் உள்ளது. குபேரன் வழிபட்ட ஸ்தலம். குருவுக்கு பதவி கிட்டிய ஸ்தலம். அங்குசென்று வழிபட்டால் குருவின் அஸ்தமன தோஷம் விலகும்.

ராகு- கேது பெயர்ச்சி: 21-6-2014-ல் ராகு- கேது பெயர்ச்சி. இதுவரை உங்கள் ராசிக்கு 12-ல் இருந்த ராகு 11-ஆம் இடம் கன்னி ராசிக்கும், 6-ல் இருந்த கேது 5-ஆம்  இடம் மீன ராசிக்கும் மாறுவார்கள். ஏற்கெனவே இருந்த இடம் பரவாயில்லை. இனி மாறப்போகும் இடமும் பாதகமில்லை. 3, 6, 11 ராகு- கேது யோகம் செய்யும் இடங்கள். 5-ல் கேது- சிலருக்கு புத்திர தோஷத்தை அல்லது புத்திர சோகத்தைக் கொடுத்தாலும் கடகத்தில் உச்சம் பெறும் குரு கேதுவைப் பார்ப்பதாலும் கேது குரு வீட்டில் இருப்பதாலும் தோஷம் நிவர்த்தியாகும்.

மன்னார்குடி அருகில் பாமினியில் பழமையான சிவன் கோவில் உண்டு. ஆதிசேஷன் வழிபட்ட ஸ்தலம். அங்கு சென்று வழிபட்டால் ராகு- கேது பெயர்ச்சி அனுகூலமாக அமையும்.

சனிப்பெயர்ச்சி: 16-12-2014-ல் சனிப்பெயர்ச்சி துலா ராசியிலிருந்து உங்கள் ராசிக்கு ஜென்மச் சனியாக  மாறுவார். இதன் சாதகபாதக பலனை 2015-ல் காணலாம்.

1-3-2014 முதல் 28-6-2014 முடிய சனியின் வக்ரம் 12-ல் இருந்து நடத்துவதால், தவிர்க்க முடியாத செலவுகளும் விரயங்களும் சொத்து பரிவர்த்தனைக்கும் இடமுண்டு. அதை சுபவிரயமாகவும் அல்லது சேமிப்பு முதலீடாகவும் மாற்றிக்கொள்வது உங்கள் புத்திசாலித்தனமாகும்.

சனியின் அஸ்தமன தோஷ நிவர்த்திக்கு நாமக்கல் ஆஞ்சனேயரையும்,  அருகில் (12 கிலோமீட்டர்) சேந்தமங்கலம் சனீஸ்வரரையும் வழிபடலாம்.

மாதவாரிப் பலன்கள்

ஜனவரி 


இந்த மாதம் கொடுக்கல்- வாங்கல், வரவு- செலவு சற்று தாமதமாக நடந்தாலும் தேவைகள் நிறைவேறும். பெற்றவர்கள் அல்லது பங்காளிகள் வகையில் ஏற்பட்ட செலவுகள் குறையும். இதுவரை இழுபறியாக இருந்த திருமணம் அல்லது இடம், வீடு போன்ற சுபகாரிய திட்டம் விரைவில் நடந்தேறும். பணியாளர்களுக்குப் புதிய வேலைவாய்ப்புத் திட்டம் கைகூடும். வியாபாரிகளும் புதியதொழில் ஆரம்பம் செய்து லாபம் பார்க்கலாம்.

பிப்ரவரி


இந்த மாதமும் தொடர்ந்து நல்லது நடக்கும். வெற்றியில் ஆனந்தமும், தோல்வியில் மனச்சோர்வும் அடையும் குணத்தை மாற்றிக்கொண்டால் துக்கமில்லை. வேகமும் சோகமும் கலந்த மனப்பாங்கினால் மகிழ்ச்சியும் வருத்தமும் ஏற்படலாம். மனைவி அல்லது குடும்பத்தாருக்காக உங்கள் சொந்த விருப்புவெறுப்புகளை விட்டுக்கொடுத்துப் போவீர்கள். 

மார்ச்


ராசிநாதன் செவ்வாய் இந்த மாதம் முதல் இரண்டு மாத காலம் வக்ரமாக இருப்பார். ஜெனன ஜாதகத்தில் செவ்வாயின் நிலையைப்பொறுத்து செவ்வாயின் வக்ரம் உங்களுக்கு நல்லதையோ கெட்டதையோ செய்யலாம். புதுக்கோட்டை அருகில் குமரமலை சென்று பால தண்டாயுதபாணியை வழிபட்டால் நல்லதே நடக்கும். தொடர்புக்கு: ராமு குருக்கள் அலைபேசி:  98424 83217. சனிவக்ரம் சாதகமாக அமையும்.

ஏப்ரல்


ராசிநாதன் செவ்வாய் தொடர்ந்து வக்ரமாக இருக்கிறார். கன்னியிலும் இருக்கிறார். புதன் மேஷத்தில் பரிவர்த்தனை அடைவதாலும், உச்ச சூரியனுடன் சம்பந்தம் என்பதாலும் எதிலும் தனித்துவமான சிந்தனையும் செயலும் உண்டாகும். பொருளாதாரத்தில் நிறைவும் தாராளமான பணப்புழக்கமும் காணப்படும். வராதிருந்த பணம் வசூலாகும். எழுத்தாளர்கள், கட்டிட காண்ட்ராக்ட்காரர்களுக்கு இது யோகமான காலம்.

மே


எந்த ஒரு சூழ்நிலையிலும் பதட்டப்படாமல் நிதானமாக சிந்தித்துச் செயல்படுவதால் வெற்றி உங்களுக்கே! பதறாத காரியம் சிதறாது என்பது பழமொழி. கடந்த காலங்களில் சந்தித்த சிறுசிறு நஷ்டங்களையும் தோல்வி களையும் இந்த மாதம் சரிப்படுத்தி ஆதாயமும் அனுகூலமும் அடையலாம். கடன்கள் கட்டுக்கடங்கி இருந்தாலும் தவிர்க்கமுடியாத செலவுகள் அதிகமா கவே இருக்கும்.

ஜூன்


13-6-2014-ல் குருப்பெயர்ச்சி. 21-6-2014-ல் ராகு- கேது பெயர்ச்சி. குரு உங்களுக்கு 9-ல் வருவதும் உச்சம் பெறுவதும் மாபெரும் யோகம். ராகு 11-ல் கேது 5-ல் வருவதும் குருபார்வை பெறுவதும் நன்மை. மாணவர்களின் மேற்படிப்புத் திட்டம் வெற்றியடையும். விரும்பியபடி சீட்டும் கிடைக்கும். பண உதவியும் அமையும். எந்தப் பிரச்சினையானாலும் நீங்கள் நேரடியாக கவனம் செலுத்தி செயல்பட்டால் 100-க்கு 100 வெற்றி. தான் போகவேண்டிய காரியத்துக்கு தம்பியை அனுப்பினால் ஆகுமா? உடையவர் இல்லாவிட்டால் ஒரு முழம் கட்டை போன்ற பழமொழிக் கவனத்தில் கொள்ளவும். கும்பகோணம் அருகில் அழகன்புத்தூர்கோவிலில் சங்கு சக்கரத்துடன் முருகன் அருள்பாலிக்கிறார். சென்று வழிபடவும்.

ஜூலை


குரு அஸ்தமனமாகிறார். (ஒரு மாதம், 5-8-2014 வரை). சிலசில காரியங்களில் தேக்கமும் தடை, தாமதமும் ஏற்படலாம். குடும்பத்தில் எதிர்மறையான வாக்குவாதங்கள் ஏற்படலாம். பொருளாதாரத்திலும் பற்றாக்குறை காணலாம். ராஜபாளையம் தென்காசிப் பாதையில் வாசுதேவ நல்லூரில் அர்த்தநாரீஸ்வரரை வழிபடவும். தொடர்புக்கு: மகேஷ் பட்டர், அலைபேசி: 94892 36186.

ஆகஸ்டு 


இந்த மாதம் உடல் சீராக இருக்கும். உள்ளம் மகிழ்ச்சியால் நிரம்பும். பொருளாதாரம் போதுமானதாக அமையும். இல்லத்தரசி உள்ளம் குடிகொண்ட மகாலட்சுமி. அவரை அனுசரித்தும் அவர் ஆலோசனையைக் கேட்டும் நடந்தால், வாழ்க்கையின் உயரே  உச்சியில் பறக்கலாம். அக்கறை கொண்ட மக்களும் ஆதரவாக இருப்பார்கள். நல்ல குடும்பம் பல்கலைக்கழகம்.

செப்டம்பர்


கோட்சார கிரக நிலைகள் மிகவும் சாதகமாக இருப்பதால் உங்கள் கோரிக்கைகள் நிறைவேறும். எண்ணங்கள் ஈடேறும். விரும்பியதும் வேண்டியதும் தேடிவரும். உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் என்பதுபோல, எதிலும் பெருந்தன்மையாகவும் அரியதாகவும் எண்ணுங்கள். மனம்போல் வாழ்வு. குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா!

அக்டோபர்


பண்டிகைச் செலவு பட்ஜெட் அதிகம். பற்றாக்குறையும் அதிகம். என்றாலும் உங்கள் முயற்சி வீண்போகாது. தாராளமான பண வரவும் வசதியும் கிடைக்கும். அதனால் கடமைகளை நிறைவேற்றலாம். தேவைகளைப் பூர்த்தி செய்யலாம். திரு வெள்ளறை புண்டரீகாட்ச பெருமாளை சேவிக்கவும். உத்தராயன வாசல் தட்சிணாயன வாசல் என்று இரண்டு வாசல்கள் வழி தரிசனம். மெயின் ரோட்டில், சிவப்பிரகாச சுவாமிகள் சித்தர் பீடமும் உண்டு. அதையும் தரிசிக்கவும். அருகில் வடஜம்புநாதர் குகைக்கோவில் உண்டு.

நவம்பர்


வெளிவட்டாரத்தில் மதிப்பும் மரியாதையும் கூடும். செல்வாக்கும் சொல்வாக்கும் உண்டாகும். பழைய பாக்கிகள் வந்துசேரும். குடும்பத்தில் சுபமங்கள பேச்சுவார்த்தைகள் எழும். பொருளாதாரப் பிரச்சினை இல்லாமல் இருக்கும். அரசியல்வாதிகள் அல்லது அரசு உத்தியோகஸ்தர்களுக்கு இம்மாதம் எச்சரிக்கையாக இருக்கவேண்டிய மாதம்.

டிசம்பர்


மாதக் கடைசியில் சனிப்பெயர்ச்சி! விரயச் சனி ஜென்மச் சனியாக மாறினாலும், கடக குரு உச்சம்பெற்று பார்க்கப் போவதால் உங்களுக்கு கேடு கெடுதிக்கு இடமில்லை. சாதகமான பலன்களே நடக்கும். சிலருக்கு இடப்பெயர்ச்சி ஏற்படலாம். புதிய முயற்சிகள் கைகூடும். அலைச்சல், எதிர்பாராத பயணம் ஏற்படலாம். கலைஞர்கள், எழுத்தாளர்களுக்கு பாராட்டும் கௌரவமும் உண்டாகும்.

விசாக நட்சத்திரக்காரர்களுக்கு:


2014-ஆம் ஆண்டு மூல நட்சத்திரத்தில் உதயமாகிறது! உங்கள் நட்சத்திரம் விசாகத்திலிருந்து மூல நட்சத்திரம் 4-ஆவது க்ஷேமதாரை. எனவே இந்த வருடம் உங்களுக்கு மிகமிக இனிய வருடமாக அமையும். விசாகம் குருவின் நட்சத்திரம். குருவின் ராசியான தனுசு ராசியில்தான் ஆங்கிலப் புதுவருடம் உதயமாகிறது. குருவும் ஜூன் மாதம் 9-ல் கடகத்தில் உச்சமடைவார். உங்கள் ராசியைப் பார்க்கப்போகிறார். எனவே வருட முற்பகுதியைவிட பிற்பகுதி ராஜயோகமாகவும் மிகமிக மேன்மையாகவும் விளங்கும். உங்களுடைய நீண்டகால திட்டங்கள் நிறைவேறும். பிள்ளைகள் வகையில் நல்லவை நடக்கும். 

பரிகாரம்: காரைக்குடி நடராஜா தியேட்டர் அருகில் நாகநாதசுவாமி கோவிலும், கிருஷ்ணமூர்த்திப் பெருமாள் கோவிலும் அடுத்தடுத்து உள்ளன. அதன் எதிரில் தெப்பக்குளக்கரையில் அட்டமாசித்தி தட்சிணாமூர்த்தி சந்நிதி இருக்கிறது. வியாழக்கிழமை சென்று வழிபடவும். தொடர்புக்கு: சோமு குருக்கள், செல்: 99438 19133.

அனுஷ நட்சத்திரக்காரர்களுக்கு:


அனுஷ நட்சத்திரம் சனியின் நட்சத்திரம். அதிலிருந்து 2014-ஆம் ஆண்டு பிறக்கும் மூல நட்சத்திரம் 3-ஆவது நட்சத்திரம்- விபத் தாரை. எனவே இந்த வருடத்தில் எதிர்பாராத விபத்து, பிணி, வைத்தியச் செலவுகள் ஏற்படலாம். ஜாதகரீதியாக பாதகமான தசாபுக்தி நடந்தால் பாதிப்பு கடுமையாகவே இருக்கும். சாதகமாக இருந்தால் கெடுபலன்களின் கடுமை குறையும். நட்சத்திரநாதன் சனி உச்சம் பெற்று குருபார்வையைப் பெறுவதால் பயப்படத் தேவையில்லை.

பரிகாரம்: மதுரை அருகில் மாணிக்கவாசகர் பிறந்த ஊர் திருவாதவூர். அங்குள்ள பழம்பெரும் சிவன்கோவிலில் சனீஸ்வரருக்கும், அவரது குருநாதர் காலபைரவருக்கும் தனித்தனி சந்நிதிகள் பக்கத்தில் உள்ளன. அபிஷேகம் செய்து வழிபட்டால் சனியால் வரும் துன்பங்கள் யாவும் கனிவாகிவிடும்.

கேட்டை நட்சத்திரக்காரர்களுக்கு:


கேட்டை புதன் நட்சத்திரம். 2014 பிறக்கும் மூல நட்சத்திரம் கேட்டைக்கு 2-ஆவது நட்சத்திரம்- சம்பத் தாரை. எனவே இந்த வருடம் கொடுக்கல்- வாங்கல், வரவு- செலவு எல்லாம் மிக திருப்தியாகவும், வாக்கு நாணயம் தவறாமலும் நடக்கும். வாக்கு வன்மை, எழுத்தாற்றல் பிரகாசிக்கும். பாராட்டும் பரிசுகளும் சாதனையாளர் விருதுகளும் கிடைக்கும். அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்றவர்களுக்கு செலவு கூடுகிறது- வரவு குறைகிறது என்ற கவலையும் ஆதங்கமும் உண்டாகலாம். இந்த ஆண்டு முதல் "பென்ஷன்' பணத்தோடு வேறு உபதொழில் வருமானமும், ரியல் எஸ்ட்டேட் அல்லது கமிஷன் அடிப்படையில் ஆதாயமும் கிடைப்பதால் மகிழ்ச்சியும் மனநிறைவும் உண்டாகும். தேக ஆரோக்கியத்தில் தெளிவான சூழ்நிலை ஏற்படும். வைத்தியச் செலவை விரட்டியடித்து விடலாம். குரு உச்சமாகி 5-ஆம் இடத்தைப் பார்க்கும் காலம், பிள்ளைகளின் வருமானம் உங்களுக்குக் கைகொடுக்கும். பிள்ளைகளுக்கு சுபமங்கள திட்டமும் உருவாகும்.

பரிகாரம்: கும்பகோணத்திலிருந்து சுவாமிமலை வழியாக (திருவைகாவூர் வழி) திருவிஜயமங்கை சென்று, சுவாமி விஜயநாதரை வழிபடவும். இப்பொழுது இது விசங்கி என்று அழைக்கப்படுகிறது. அர்ச்சுனன் வழிபட்டு பாசுபதராஸ்திரம் பெற்ற தலம். சம்பந்தரும், அப்பரும் பாடிய பாடல் பெற்ற தலம். கேட்டது கிடைக்கும்.