அன்புடையீர் நல்வரவு ,

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,
தேவாங்கர்களாகிய நாம் அனைவரும் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்து வந்தாலும் தேவாங்கர் என்னும் உணர்வு நம்மை ஓன்று சேர்க்கிறது. மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்ற வாக்கிற்கு இணங்க காலத்திற்கு ஏற்ப நாம் நமது குல நிகழ்வுகளை தகுந்த தொழில்நுட்பத்தை கொண்டு பதிவு செய்வது அவசியமான ஓன்று.

இந்த புதியபக்கம் நமது தேவாங்க சமூக செய்திகள்,சடங்குகள்,வரலாறு & அண்மை நிகழ்ச்சிகளை அறிந்துகொள்ளவும் தேவைப்படும் போது பார்க்கவும் உருவாக்கப் பட்டுள்ளது.
உறவுகள் தங்கள் பகுதியில் உள்ள கோவில்&குல தெய்வம் கோவில்களில் நடைபெறும் திருவிழா நிகழ்ச்சிகள் மற்றும் படங்களை இடம்பெற செய்யவும்.

தங்கள் கருத்துக்கள் இந்த தளத்தை மேன்படுத்த உதவும் ஆகயால் தயவுசெய்து கருத்திடவும் . ( தமிழில் கருத்திட தமிழ் எழுதியை பயன்படுத்தவும்)

நன்றி.

12/22/13

மிதுனம் (மிருகசீரிஷம் 3-ஆம் பாதம் முதல், திருவாதிரை, புனர்பூசம் 3-ஆம் பாதம் முடிய) பொதுப்பலன்கள்

மிதுனம்
(மிருகசீரிஷம் 3-ஆம் பாதம் முதல், திருவாதிரை, புனர்பூசம் 3-ஆம் பாதம் முடிய)

பொதுப்பலன்கள்
ஆங்கிலப் புதுவருடம் 2014 கன்னி லக்னம், தனுசு ராசி, மூல நட்சத்திரத்தில் பிறக்கிறது. மிதுன ராசிக்கு 4-ஆவது லக்னம்- 7-ஆவது ராசி- வருட லக்னாதிபதி புதன்- உங்கள் ராசியாதிபதியும் புதன். உங்கள் ராசிக்கு இரண்டும் கேந்திரம்! எனவே இந்த வருடம் உங்களுக்கு இனிய வருடமாகவும் ஏற்றமிகு வருடமாகவும் அமையும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

வருடத் தொடக்கத்தில் மிதுன ராசிநாதன் புதனும், வருட ராசிநாதன் குருவும் பரிவர்த்தனையாக இருப்பதும் தனிச்சிறப்பு. குரு மிதுனத்திலும் புதன் தனுசுவிலும் பரிவர்த்தனை. பொதுவாக ஜனன ஜாதகத்தில் பரிவர்த்தனை கிரகங்கள் இருந்தாலும் அல்லது தர்மகர்மாதிபதி யோகம் இருந்தாலும் அந்த ஜாதகத்தில் எந்த கிரகங்கள் சோதனையைத் தந்தாலும் அவற்றைக் கடந்து சமாளிக்க முடியும். வலுவாக சாதனை புரியலாம். இழந்த பதவி, செல்வங்களை மீண்டும் பெறலாம் என்பது பொது விதி!

2014-ல் மேற்சொன்ன இரண்டு யோகமும் உண்டு. குருவும் சனியும் பரிவர்த்தனை- மிதுன ராசிக்கு 9-க்குடைய சனியை 10-க்குடைய குரு பார்ப்பதால் தர்மகர்மிதிபதி யோகம். எனவே மற்ற ராசிக்காரர்களைவிட மிதுன ராசிக்குக்கும் கன்னி ராசிக்கும் 2014 சூப்பர் வருடமாக அமையும். 

ராசிநாதன் புதனை சனியும் செவ்வாயும் ராகுவும் பார்ப்பதும் சிறப்பு. கடந்த காலத்தில் வேலை- உத்தியோகத்தில், தொழில்துறையில் பல வகையிலும் நஷ்டப்பட்டவர்களுக்கும் கஷ்டப்பட்டவர்களுக்கும் இந்த வருடம் சொந்தத் தொழில் யோகமும், உத்தியோகத்தில் உயர்வும், முன்னேற்றமும் உண்டாகும். திருமணமாகாதவர்களுக்குத் திருமண யோகம், திருமணமானவர்களுக்கு வாரிசு யோகமும் உண்டாகும்.

7-ஆம் இடத்தை சனி, ராகு, செவ்வாய் பார்ப்பது குற்றம்தான் என்றாலும், மிதுன ராசிநாதனும் வருட லக்னாதிபதியுமான புதன் 7-ல் இருப்பதோடு, வருட ராசிநாதன் குரு பார்ப்பதால் தோஷம் நீங்குகிறது. அதேபோல் 5-ஆம் இடத்துக்கும் குருபார்வை இருப்பதோடு 5-க்குடைய சுக்கிரனும் 8-க்குடைய வரும் பரிவர்த்தனை யோகம்! அப்படியே திருமணத் தடையும் தாமதமும் இருந்தால், ஆண்கள் கந்தர்வராஜ ஹோமமும், பெண்கள் பார்வதி சுயம்வரகலா ஹோமமும் செய்து கொள்ளலாம்.

அதேபோல ஜாதகத்தில் புத்திர தோஷம் இருந்தால் வாஞ்சா கல்ப கணபதி ஹோமமும், புத்திர ப்ராப்தி ஹோமமும், சந்தான பரமேசுவர ஹோமமும்,  சந்தான கோபாலகிருஷ்ண ஹோமமும் செய்தால் வாரிசு யோகம் பெறலாம். கம்பத்தில் ஒரு நண்பர் செல்வந்தர். 16 வயதில் ஒரே ஆண் மகன். படிப்பில் மிகத் தெளிவு. திடீரென்று ஒருநாள் டூவீலர் விபத்தில் இறந்துவிட்டான். காரணம் பார்த்தபோது குடும்பத்தில் சமராகு தோஷம். அதன்பிறகு பள்ளத்தூரில் எனது குருநாதரிடம் சூலனிதுர்க்கா ஹோமமும் மேலே சொன்ன மூன்று புத்திர ப்ராப்தி ஹோமமும் செய்யப்பட்டது. அடுத்து (18 வருடங்களுக்குப் பிறகு) இன்னொரு ஆண் குழந்தை பிறந்து, அவன் இப்போது மருத்துவப்படிப்பு படிக்கிறான். அதனால் ஹோமத்திற்கு நல்லபலன் உண்டு என்பது அனுபவரீதியான உண்மை. இதுபற்றி தினசரி ஹோமம் நடக்கும் தன்வந்திரி பீட ஸ்தாபகர் யாகபுருஷர் "முரளிதர ஸ்வாமிகள் "அக்னி ஹோமங்கள் அல்லலைத் தீர்க்குமா' என்னும் தொடரை வாராவாரம் "பாலஜோதிடம்' வார இதழில் எழுதி வருகிறார்.

தொழில் காரகன் சனி- ராகுவோடு சேர்ந்து தொழில் ஸ்தானம் 10-க்கு 8-ல் இருப்பதால், சிலருக்கு தொழில், வேலை சம்பந்தமான பிரச்சினைகளும் சங்கடங்களும் இருக்கலாம். ஆனால் மிதுன குரு சனியையும் ராகுவையும் பார்ப்பதோடு, 2014 ஜூன் மாதம் கடகத்தில் குரு உச்சம் பெற்று தொழில் ஸ்தானம் மீனத்தைப் பார்க்கப்போவதால், தொழில் சம்பந்தப்பட்ட யோகங்கள் தோல்வியில்லாமல் நடக்கும். தொட்டது துலங்கும்!

சம்பளத்துக்கு இருப்போர் சொந்தத் தொழில் தொடங்கலாம். குறைந்த சம்பளத்தில் குமுறுகிறவர்கள் நிறைந்த சம்பளத்தில் வேலை மாறலாம். அல்லது வெளிநாடு போகலாம்; கை நிறைய சம்பாதிக்கலாம். வெளிநாட்டில் சேமித்த பணத்தைக்கொண்டு உள்ளூரில் வீடு, மனை, வாகன யோகங்களை அமைத்துக்கொள்ளலாம். தகப்பனார் காலத்திலிருந்தே சொந்தவீடு என்பது கனவு வீடாக இருந்த நிலைமாறி நனவாகும்; நிஜமாகும். என்.ஆர்.ஐ வகையில் வங்கிக்கடனும் வாங்கி வீட்டைக் கட்டலாம். 

நான் நினைவு தெரிந்த நாள் முதல் சுமார் 100 வீடுகளுக்கு மேல் மாறியவன். பொன்னமராவதி அருகில் பூமிநாத சுவாமி ஆரண வல்லியம்மன் கோவில் சென்று பூஜை செய்த பிறகு சொந்த இடம் வாங்கினேன். வெளிநாட்டில் வேலை செய்த இளையமகன் பேரில் வங்கிக்கடனும் கிடைத்தது. 70 வயதுக்குமேல் சொந்த வீட்டில் அமரும் பாக்கியம் கிடைத்தது. நீங்களும் செவலூர் சென்று பூமிநாதரை வழிபடலாம்.

மிதுன ராசிக்கு 4-ஆவது இடமான கன்னியில் 2014-ஆம் வருடம் பிறப்பதால், ஜாதக அமைப்பு நன்றாக இருந்தால் 2014-ல் உங்களுக்கு சொந்த வீடு, வாகன யோகம் அமைந்துவிடும்.

9-ஆம் இடம் பூர்வ புண்ணியஸ்தானம். அதற்குடைய சனி உச்சம் பெற்று 4-க்குடைய புதனைப் பார்ப்பதால் சிலர் பூர்வீக இடத்தை நல்ல விலைக்கு விற்று புதிய வீடு வாங்கலாம்; அல்லது கட்டலாம். பூமிகாரகன் செவ்வாயும் புதனைப் பார்க்கிறார்.

ஜென்மத்தில் குரு நிற்பதாலும், புதனும் சூரியனும் ஜென்ம ராசியைப் பார்ப்பதாலும் உங்களுடைய செல்வாக்கு மேன்மையடையும்; திறமை, கௌரவம், செயல்பாடு ஆகியவற்றுக்கு முக்கியத்துவமும் மதிப்பும் உண்டாகும். கலைத்துறையிலும், பொதுவாழ்க்கையிலும். ஆன்மிகத்துறை யிலும், அரசியலிலும் ஈடுபட்டுள்ளோருக்கு பாராட்டும் மரியாதையும் பரிசும் கிட்டும். புதன் ஜோதிடகாரகன் என்பதால், ஜோதிட சம்பந்தமான ஆய்வும் மேற்கொள்ளலாம். ஜோதிடராக பரிமளிக்கலாம். வாக்குபலிதத்திற்கு இஷ்ட தெய்வ உபாசனை மேற்கொள்ளலாம்.
அச்சுத் தொழிலுக்கும், மருந்து வகையறாவுக்கும் புதன் அதிபதியாவார். அதனால் பிரிண்டிங், மெடிக்கல் போன்ற துறையிலும், ஏஜென்ஸி கமிஷன் அடிப்படைத் தொழில் துறையிலும் ஈடுபடலாம். அதிர்ஷ்ட வாய்ப்புகள் வாசலைத் தேடிவந்து கதவைத் தட்டும். வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்வது உங்கள் பொறுப்பு!

7-ஆம் இடத்தை சனி, செவ்வாய், ராகு பார்ப்பதால், வாலிப வயதுடைய ஆண்களுக்கும் பெண்களுக்கும் காதல் திருமணம் அல்லது கலப்புத் திருமணம் நடக்க வாய்ப்புண்டு. 7-ஆம் இடத்தை 7-க்குடைய குருவே பார்ப்பதால், அது பெற்றோர் அல்லது பெரியோர் அனுமதியுடன் நடக்கும் எனலாம். ஆரம்பத்தில் சில எதிர்ப்புகளும் குழப்பங்களும் காணப்பட்டாலும் முடிவில் முழு சம்மதத்துடன் நிறைவேறும்.

இந்த வருடம் முக்கியமான இரண்டு கிரகப் பெயர்ச்சிகள் ஏற்படுகின்றன. 13-6-2014-ல் குருப்பெயர்ச்சி. மிதுன ராசியில் இருக்கும் ஜென்ம குரு, 2-ஆம் இடமான கடகத்தில் உச்சம் பெறுவார். 7, 10-க்குடையவர் 2-ல் உச்சம் பெறுவது 100-க்கு 100 யோகமாகும்! கடக குரு 6-ஆம் இடத்தையும், 8-ஆம் இடத்தையும், 10-ஆம் இடத்தையும் பார்க்கப்போகிறார். 10-க்குடையவரே 10-ஆம் இடத்தைப் பார்ப்பது பலம்தான். அதனால் முன்னர் குறிப்பிட்டது போல தொழில் வளம் பெறும்; நலம் பெறும்; பலம் பெறும். கடகம் சந்திரன் ராசி! சந்திரன், சூரியன் ராஜகிரகம். எனவே 10-க்குடையவர் அங்கு இருப்பதால், அரசு வேலை கிடைக்க வாய்ப்புண்டு. அரசு வேலையில் இருப்போருக்கு உயர்வுண்டு; முன்னேற்றமுண்டு, 

21-6-2013-ல் ராகு- கேது பெயர்ச்சி. துலா ராசியில் நிற்கும் ராகு கன்னி ராசிக்கும், மேஷ ராசியிலிருக்கும் கேது மீன ராசிக்கும் மாறுவார்கள் இந்த இரு ராசிகளும் மிதுனத்துக்கு கேந்திர ராசிகளாகும். ராகு 4-ல், கேது 10-ல். எனவே ராகு- கேது பெயர்ச்சிகளும் உங்களுக்கு அற்புதமான பலன்களைத் தரும். தேக ஆரோக்கியம், தாயன்பு, கல்வி உயர்வு, பூமி, வீடு, வாகன சுகம் ஆகிய நன்மைகளையும்; தொழில் முன்னேற்றம், பதவி உயர்வு, முயற்சிகளில் வெற்றி ஆகிய நன்மைகளையும் தரும். 

மாதவாரிப் பலன்கள்


ஜனவரி


இந்த மாதத்தில் ஏற்கெனவே செய்துவரும். தொழிலில் சீரான வளர்ச்சியை சந்திக்கலாம். அரசுவேலை அல்லது தனியார் பணியில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். நிலபுலங்கள் அல்லது குடியிருப்பு மனை சேர்க்கையோ அல்லது அவற்றை ஆதாயமான விலைக்கு விற்று லாபம் பார்ப்பதோ அல்லது சொத்துப் பரிவர்த்தனையோ நடக்கும். சுக்கிரனும் சனியும் அனுகூலமாக உலவுவதால் கணவன்- மனைவி தாம்பத்திய வாழ்க்கையில் சந்தோஷமும் திருப்தியும் உண்டாகும். கலைஞர்கள்- உழைப்பாளிகளுக்கு சிறப்பான மாதம். தெய்வப்பணிகளில் அல்லது பொதுப்பணியில் ஈடுபட்டுள்ளோருக்கும் பாராட்டும் மதிப்பும்  கிடைக்கும். 

பிப்ரவரி


இந்த மாதம் சூரியன், செவ்வாய், ராகு- கேது, சனி ஆகியோரது சஞ்சார பலம் சாதகமாக அமைவதால், தொழில் துறையில் வளர்ச்சி காணலாம். அரசியல்வாதிகளுக்கு மதிப்பு உயரும். குடும்பத்தில் சலசலப்பு குறைந்து கலகலப்பு உண்டாகும். சில காரியங்கள் வழவழா என்று இழுக்கும். சில காரியங்கள் சட்டிசுட்டது கைவிட்டது என்று பட்டென்று முடிந்துவிடும். கொடுக்கல்- வாங்கல், வரவு- செலவு நன்றாக இருந்தாலும்கூட- உங்களிடம் பணம் வாங்கியவர்கள் சொன்னபடி திருப்பித்தரமாட்டார்கள். ஆனால் நீங்கள் கொடுக்க வேண்டியவர்களுக்கு மட்டும் நாணயமாகத் திருப்பிக் கொடுத்துவிடுவீர்கள். 

மார்ச்


இந்த மாதம் சனி வக்ரம் அடைவார். நான்கு மாதங்கள் வக்ரத்திலேயே இருப்பார். (ஜூன் முடிய). செவ்வாயும் கன்னியில் வக்ரம் அடைவார். பொதுவாக அஸ்தமனத்தைவிட வக்ரம் நற்பலன் தரும் என்றாலும், ஜாதக தசாபுக்திகளை அனுசரித்தே நற்பலனோ துர்ப்பலனோ நடக்கும். 5-ல் சனி, ராகு; 4-ல் செவ்வாய். எனவே பிள்ளைகள் வகையில் சிலர் தொல்லைகள் அனுபவிக்கலாம். சிலருக்கு சுகக்கேடு அல்லது தாயார் வரவு வகையில் சலனம் ஏற்படலாம். சிலருக்கு இடப்பெயர்ச்சி, குடியிருப்பு மாற்றம் அல்லது ஊர் மாற்றம் ஏற்படலாம். சொந்தத் தொழில் அல்லது தரகுத் தொழில் செய்கிறவர்களுக்கு சில காரியங்கள் முடிவுக்கு வருவதுபோல் தெரியும். கடைசி நேரத்தில் கைநழுவிப்போய்விடும். நடப்பது நன்மைக்கே என்று சாந்தியடையலாம்.

ஏப்ரல்


இந்த மாதம் 14-ல் தமிழ்ப் புதுவருடம் பிறக்கிறது. அஸ்த நட்சத்திரம், கன்னி ராசி, மேஷ லக்னம். உங்கள் ராசிக்கு 4-ஆவது ராசி, 11-ஆவது லக்னம். தமிழ்ப் புத்தாண்டு மிகமிக அற்புதமாகவும் லாபகரமாகவும் அமையும். கடந்த காலத்தில் அனுபவித்த சங்கடங்களும், சஞ்சலங்களும் புதுவருடத்தில் அடியோடு மாறிவிடும். ஆனந்தமும் திருப்தியும் உண்டாகும். பக்தி மார்க்கத்திலும் ஞானமார்க்கத்திலும் ஈடுபாடு உண்டாகும். அதனால் மனதில் நிறைவும் மகிழ்ச்சியும் மலரும். தொழில் வளர்ச்சியடையும். வேலையில் நிலவிய கிளர்ச்சி மறையும். பொருளாதார நெருக்கடி நிலைமாறி, சரளமான பணப்புழக்கமும் தாராளமான வரவு- செலவும் உண்டாகும். 

மே


இந்த மாதம் பெரிய மாறுதல்கள் ஏதுமில்லாத அளவில் எல்லாம் வழக்கம்போல செயல்படும். குடும்பத்தில் விருந்தினர் வருகையும் உபசார செலவும் ஒரு பக்கம் கலகலப்பும் களிப்பும் ஏற்படுத்தினாலும், இன்னொரு பக்கம் தவிர்க்க முடியாத செலவுகளையும் அதிகரிக்கும். சிலருக்கு கேளிக்கை  விருந்துகளில்- விழாக்களில் பங்கெடுத்து செலவு செய்யும் அமைப்பும்; சிலருக்கு இன்பச் சுற்றுலா போகும் அமைப்பும் ஏற்படலாம். ஜாதக தசாபுக்தி பாதகமாக இருந்தால் பயணத்தாலும், பழக்கவழக்கத்தாலும், உணவுக் கட்டுப்பாடு இல்லாத காரணத்தாலும் ஆரோக்கியம் பாதிக்கப்படும். சுக ஸ்தானத்தில் செவ்வாய் இருப்பதால் அறுவை சிகிச்சை செய்யவேண்டிய ஆலோசனையும் சிலருக்கு உண்டாகலாம். சிங்கம்புணரி சித்தர் முத்து வடுக நாதர் வாத்தியார் கோவில் சென்று வழிபட்டால் ஆபரேசனை தவிர்க்கலாம். 

ஜூன்


இந்த மாதம் குருப்பெயர்ச்சியும் ராகு- கேது பெயர்ச்சியும் ஏற்படுகிறது! குரு மிதுன ராசியிலிருந்து 2-ஆம் இடம் கடகத்துக்கு மாறுவார். அங்கு உச்ச பலம் அடைவார். அதனால் பொருளாதாரத்தில் நிறைவு ஏற்படும். வாக்கு நாணயம் காப்பாற்றப்படும். வரவேண்டிய பணம் வசூலாகும். அரசு வழக்குகள் சாதகமாகும். தொழில் சிக்கல் தீரும். துலா ராகு- கன்னி ராசிக்கும், மேஷ கேது- மீன ராசிக்கும் மாறுவார்கள். இருவரும் பாபகிரகங்கள் கேந்திரத்தில் மாறுவதால் உங்களுக்கு நற்பலன்கள்தான். குருப்பெயர்ச்சிக்கு விரும்பிய குரு ஸ்தலம் போகலாம். ராகு- கேது பெயர்ச்சிக்கு உத்தமபாளையம், திருநாகேஸ்வரம், காளஹஸ்தி, சீர்காழி, கீழ்ப்பெரும்பள்ளம் போன்ற தலங்களுக்குப் போகலாம். 

ஜூலை


ராகு- கேது பெயர்ச்சியும் குருப்பெயர்ச்சியும் உங்களுக்கு அனுகூலமான பலன் தருவதோடு, இந்த மாதம் செவ்வாயும் துலா ராசிக்கு மாறுவார். சனியும் வக்ரநிவர்த்தியடைந்து அற்புதப்பலன்களைத் தருவார். உங்களுடைய செல்வாக்கு சீர் பெறும். தொழில் வளம் பெறும். தேக சுகம் நலம் சீர் பெறும். தனம், வருமானம் பெருகும். "ஆகும் காலம் மெய்வருந்த வேண்டாம்; போகும் காலம் கதவை அடைக்கவேண்டாம்' என்பார்கள். இப்போது எல்லாமே ஆகும் காலம். எனவே அதிகமாக உடலை வருத்தி கஷ்டப்படவேண்டாம். கடின முயற்சியும் செய்யவேண்டாம். எல்லாம் எளிதாக ஈடேறும். 

ஆகஸ்டு


போனமாதம் போலவே இந்த மாதமும் தொடர்ந்து நல்லதாகவே நடக்கும். நல்லநேரம் இருந்தால் கும்பிடப்போன தெய்வம் எதிரில் வரும் என்பார்கள். கெட்ட நேரம் இருந்தால் பரபரப்பாக விழுந்தடித்து கோவிலுக்குப் போனாலும் நடை சாத்தி கதவு மூடிவிடும். 10 மணி இண்டர்வியூக்கு 8 மணிக்கே புறப்பட்டாலும் போக்குவரத்து ஸ்தம்பித்து ரூட்மாறி போய் சேர 12 மணி ஆகிவிடும். ஜூலை 15-ல் துலாத்துக்கு மாறிய செவ்வாய்- அங்கிருக்கும் சனியோடும் சேர்ந்து மாதம் முழுவதும் தங்குவதால், ஒருசிலருக்கு மனதை பாதிக்கும் நிகழ்ச்சிகள் நடக்கும். சிலர் காதல் விவகாரத்தில் மாட்டிக்கொண்டு வாட்டம் அடைவார்கள். எச்சரிக்கை தேவை.

செப்டம்பர்


செவ்வாய், சனி சேர்க்கை விலகிவிடுகிறது. அஸ்தமன புதனும் உதயம் ஆகிறார். குருவின் அஸ்தமனமும் நீங்கிவிட்டது. எனவே ஈடுபடும் காரியங்களிலும் செயல்களிலும் உங்கள் திறமை வெளிப்படும். சாதனைகள் புரியலாம். சங்கடங்களும் சஞ்சலங்களும் பிரச்சினைகளும் குறையும். சிலருக்கு தாய்- தந்தையரால் நன்மை ஏற்படும். சிலருக்கு பிள்ளைகளினால் ஆதரவும் உதவியும் கிடைக்கும். சிலருக்கு திருமண வாழ்வில் நிலவிய வருத்தங்கள் நீங்கும். பிரிந்திருந்த தம்பதிகள் இணைந்திட வழிபிறக்கும். பொருளாதாரம்- பண வரவு- செலவு, கொடுக்கல்- வாங்கல் எல்லாம் திருப்திகரமாக இருக்கும்.

அக்டோபர்


கோட்சார கிரகங்கள் சாதகமாகவே இருப்பதால் குறித்தபடி எல்லாம் நடக்கும். நண்பர்கள், உற்றார்- உறவினர்கள் வகையிலும் குடும்பத்திலும் மகிழ்ச்சிகரமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஆடை, பொன் ஆபரணங்கள் சேரும். வீட்டுக்குத் தேவையான கட்டில், பர்னிச்சர், கிரைண்டர், ஃபிரிட்ஜ் போன்ற பொருள்களை வாங்கலாம். சிலர் வீட்டுக்கு ஏஸி வசதியும், யு.பி.எஸ் வசதியும் செய்யலாம். செலவோடு செலவாக இவற்றைச் செய்வதற்கு குடும்பத்தில் எதிர்ப்புத் தெரிவித்தாலும், உங்கள் திட்டம்போல எல்லாவற்றையும்  செயல்படுத்தலாம். புதுமணத் தம்பதிகளுக்கு தலைத் தீபாவளி கொண்டாட்டம்! 

நவம்பர்


கடந்த மாதம் பண்டிகைச் செலவுகளால் வரவுக்கு மீறிய செலவுகளும்,  எதைச்செய்வது எதைவிடுவது என்று புரியாமலே எல்லாவற்றையும் ஒரே நேரத்தில் செய்துமுடித்ததால் பொருளாதாரம் பாதித்திருக்கலாம். அதைச் சரிக்கட்ட இந்த மாதம் கடன் கொடுப்பவர்களைத் தேடி அலைவீர்கள். கடனும் கிடைக்கும். அதேசமயம் கடன் கேட்பதிலும் வாங்குவதிலும் ஒரு கட்டுப்பாடும் இலட்சியமும் வேண்டும். தகுதியானவர்களிடம்தான் கடன் வாங்கவேண்டும். தகுதியற்றவர்களிடம் கடன் வாங்கினால் கடைசியில் மரியாதை கெட்டு போராட்டத்தைச் சந்திக்க நேரிடும். கடன் பிரச்சினை விஸ்வரூபம் எடுக்காமல் இருக்க கும்பகோணம் அருகில் திருச்சேறை சென்று கடன் நிவர்த்தீஸ்வரரை வழிபடவும். கோவில் தொடர்புக்கு: சுந்தரமூர்த்தி  குருக்கள், செல்: 94437 37759.

டிசம்பர்


இந்த மாதக் கடைசியில் சனிப்பெயர்ச்சி. டிசம்பர் 16-ல் துலா ராசியில் இருக்கும் சனி விருச்சிக ராசிக்கு மாறுவார். நடுவில் சிம்மத்தில் வக்ரமடையும் குருவும் டிசம்பரில் கடகத்துக்கு மாறுவார். விருச்சிக சனியை கடக குரு பார்க்கக்கூடும். மிதுன ராசிக்கு 9-க்குடைய சனிக்கு 10-க்குடைய குரு பார்வை என்பதால் தர்மகர்மாதிபதி யோகம் ஆகும். 2015- ஜூலை வரை கடகத்தில் குரு உச்சம்! எனவே புதிய ஆடை, அணிமணிகள், ஆடம்பரப் பொருள்கள் சேர்க்கை உண்டாகும். சிலர் மலிவுவிலைப் பொருட்கள் வாங்கலாம். சிலர் புதிய வாகனம்- டூவீலர் அல்லது கார் வாங்கலாம். சிலர் நிலத்தில் முதலீடு செய்யலாம். சுப முதலீடுதான். 

மிருகசீரிட நட்சத்திரக்காரர்களுக்கு:


2014-மூல நட்சத்திரத்தில் பிறக்கிறது. அது மிருகசீரிடத்துக்கு 15-ஆவது நட்சத்திரம்- 6-ஆவது ஸாதக தாரை, சுபதாரை. எனவே இந்த வருடம் உங்களுக்கு எல்லாம் சாதகமாகவும் அனுகூலமாகவும் இருக்கும். மிருகசீரிடம் முன்னிரண்டு  பாதம் (1, 2) ரிஷப ராசியிலும், பின்னிரண்டு பாதம் (3, 4) மிதுன ராசியிலும் அடங்கும். ரிஷப ராசியைவிட மிதுன ராசிக்காரர்களுக்கு இக்காலம் இனிமையான- யோகமான காலமாக அமையும். மிதுன குரு கடகத்தில் உச்சமானாலும் அந்த யோகம் தொடரும். வைத்தீஸ்வரன் கோவில் சென்று முத்துக்குமார சுவாமியையும், தன்வந்திரி பகவனையும் வழிபடலாம்.

திருவாதிரை நட்சத்திரக்காரர்களுக்கு:


திருவாதிரை- ராகுசாரம். 2014 பிறப்பது மூல நட்சத்திரத்தில். இது கேது சாரம். ராகுவும் கேதுவும் ஒரே கிரகம்- தலையும் வாலும். திருவாதிரைக்கு மூலம் 14-ஆவது நட்சத்திரம். (5-ஆவது தாரை). அது பகை தாரை. எனவே தேவையற்ற கவலைகளும் கற்பனைகளும் பயமும் ஏற்படலாம். குடும்பத்தில்  குழப்பம், வாக்குவாதங்கள், சர்ச்சை, சஞ்சலம் போன்றவை உண்டானாலும், குரு மிதுன ராசியிலும் மூலம் தனுசு ராசியிலும் இருக்க, குருபார்வை தனுசு ராசிக்குக் கிடைப்பதால் கெடுதல் விலக இடமுண்டு. திண்டுக்கல் மலைக்கு மேற்குப்புறம் (பின்புறம்) ஓத சுவாமிகள் ஜீவசமாதி உள்ளது. புரட்டாசி திருவாதிரை குரு பூஜை. அங்குசென்று வழிபடவும்.

புனர்பூச நட்சத்திரக்காரர்களுக்கு:


புனர்பூசம் குரு நட்சத்திரம். அதற்கு இந்த வருடம் பிறக்கும் மூல நட்சத்திரம் 13-ஆவது நட்சத்திரம். (4-ஆவது க்ஷேம தாரை). ஆகவே 2014-ல் உங்களுக்கு எல்லா வகையிலும் யோகமாகவும் க்ஷேமமாகவும் அமையும். பூமி, வீடு, வாகனயோகம் போன்ற நன்மைகள் நடக்கும். மாணவர்களுக்கு கல்வி மேன்மை ஏற்படும். எல்லாருக்கும் தேக சுகமும் ஆரோக்கியமும் திருப்திகரமாக இருக்கும். பொருளாதாரத்திலும் போதிய நிறைவும் திருப்தியும் எதிர்பார்க்கலாம். திருமணமாகாதவர்களுக்குத் திருமண யோகம் உண்டாகும். குருப்பெயர்ச்சிக்குப் பிறகும் அந்த யோகம் தொடரும். நாமக்கல் அருகில் சேந்தமங்கலம் சென்று தத்தாத்ரேயரை வழிபடவும்.  பாலசுப்பிரமணியம் அர்ச்சகர், செல்: 93454 38950.

No comments:

Post a Comment