அன்புடையீர் நல்வரவு ,

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,
தேவாங்கர்களாகிய நாம் அனைவரும் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்து வந்தாலும் தேவாங்கர் என்னும் உணர்வு நம்மை ஓன்று சேர்க்கிறது. மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்ற வாக்கிற்கு இணங்க காலத்திற்கு ஏற்ப நாம் நமது குல நிகழ்வுகளை தகுந்த தொழில்நுட்பத்தை கொண்டு பதிவு செய்வது அவசியமான ஓன்று.

இந்த புதியபக்கம் நமது தேவாங்க சமூக செய்திகள்,சடங்குகள்,வரலாறு & அண்மை நிகழ்ச்சிகளை அறிந்துகொள்ளவும் தேவைப்படும் போது பார்க்கவும் உருவாக்கப் பட்டுள்ளது.
உறவுகள் தங்கள் பகுதியில் உள்ள கோவில்&குல தெய்வம் கோவில்களில் நடைபெறும் திருவிழா நிகழ்ச்சிகள் மற்றும் படங்களை இடம்பெற செய்யவும்.

தங்கள் கருத்துக்கள் இந்த தளத்தை மேன்படுத்த உதவும் ஆகயால் தயவுசெய்து கருத்திடவும் . ( தமிழில் கருத்திட தமிழ் எழுதியை பயன்படுத்தவும்)

நன்றி.

3/20/14

அருப்புகோட்டை,ஓடை சவுண்டம்மன் அம்மன் திருக்கோவில் பங்குனி பொங்கல் விழா அழைப்பிதழ்


அருப்புகோட்டை சொக்கலிங்கபுரம், ஈசான்யபுரம்   ஓடை சவுண்டம்மன் அம்மன் திருக்கோவில் பங்குனி பொங்கல் விழா அழைப்பிதழ்



நன்றி கல்யாணக்குமார் ,அருப்புகோட்டை

நூல் இரண்டு : கானல்வெள்ளி[ 6 ]

நூல் இரண்டு : கானல்வெள்ளி[ 6 ]
மாலையில் பீஷ்மரை சந்திப்பதா வேண்டாமா என்ற ஐயத்துடன் விதுரன் கருவூலத்தைவிட்டு வெளிவந்து ரதத்தில் ஏறினான். ஆனால் அவனால் அவரைச் சந்திக்காமலிருக்கமுடியாது என அவனே உணர்ந்தான். அது அவனுடைய தன்னறத்தை அவன் கண்டடையும் தருணம். அவன் ஈடுபடும் முதல் அரசியல் மதிவினை. அவனைவிட வல்லமைவாய்ந்த இருவர் அதை ஆடுகிறார்கள். அதில் அவன் ஈடுபடாமலிருக்க முடியாது. அதிலிருந்து தன் சிந்தனையை விலக்கவே அவனால் முடியாது. ஒருவேளை அவன் வாழ்க்கையில் பிறகு உளவேகத்துடன் நினைவுகூரும் நாட்களாக இவை இருக்கலாம்.
பின்மதியத்தில் நகரமெங்கும் மெல்லிய நீராவிபோல ஏதோ நிறைந்து மூச்சுத்திணறச்செய்தது. மதில்சுவர்களில் அமர்ந்திருந்த காகங்கள் தாகத்தால் தவிப்பவை போல செந்நிறமான உள்நாக்குகளைக் காட்டி அலகுதிறந்து பதைக்கும் அடித்தாடையுடன் அமர்ந்திருந்தன. பசுக்களின் கண்களில் நீர்வழிந்த தடங்கள் ஆழமாகப் பதிந்திருந்தன. மொத்த நகரமும் மழைக்காக ஏங்கிக்கொண்டிருந்தது. ஆனால் அக்கணமே மழை பெய்யும் என்பது போன்ற இறுக்கம் ஒவ்வொருநாளும் நீடித்து ஒருசிலதுளிகள் வானிலிருந்து சொட்டுவதில் முடிந்தது.
ரதம்சென்ற வழியெல்லாம் பீஷ்மரிடம் பேசவேண்டிய சொற்களை எண்ணியவாறே விதுரன் சென்றான். காந்தாரத்துக்கு மணம்பேச அவரே செல்லவில்லை என்பது உண்மையானசெய்தி என்பதை அவன் முந்தையநாளே உறுதிப்படுத்தியிருந்தான். அப்படியென்றால் காந்தாரத்துடனான மண உறவு அவருக்கு உடன்பாடானதல்ல என்றுதான் பொருள். அவரது மனநிலையை அவனால் கணிக்கமுடிந்தது. ஆனால் அதை அவர் எப்படி செயலாக ஆக்கப்போகிறார் என்றுதான் புரியவில்லை. அவரை அவன் தெரிந்திருந்தான், அறிந்திருக்கவில்லை. பதினெட்டாண்டுகளாக ஒவ்வொருநாளும் கேட்டறிந்து கொண்டிருந்த மனிதர். ஒரு புராணக் கதைமாந்தர்போல.
பீஷ்மரின் ஆயுதசாலையில் ஹரிசேனன் அவனை வரவேற்றான். “நான் பிதாமகரைப் பார்க்க வந்திருக்கிறேன்” என்றான். ஹரிசேனன் “பொறுங்கள் அமைச்சரே. அமருங்கள்” என்று சொல்லிவிட்டு உள்ளே சென்றான். பீஷ்மரிடம் சொல்லிவிட்டு திரும்பிவந்து அவர் படைக்கலப் பயிற்சியில் இருப்பதாகவும் உபசாலையில் காத்திருக்கும்படி ஆணையிட்டதாகவும் சொன்னான். உள்ளே ஆயுதங்கள் மோதும் உலோகஒலி கேட்டுக்கொண்டிருந்தது.
பீஷ்மரின் உபசாலை மிக எளிமையாக இருந்தது. எந்த நேர்த்தியும் இல்லாத மரப்பொருட்கள். அழகற்ற பணிக்கருவிகள். மூலையில் மடங்கிப்போன வாட்கள். பீஷ்மர் ஒரு துறவியின் வாழ்க்கையைத்தான் வாழ்கிறார் என நினைத்துக்கொண்டான். எந்த மனிதனுக்கும் ஒரு போகம் உண்டு. செல்வத்தில், பெண்ணில், கலையில், அதிகாரத்தில், அகங்காரத்தில். இந்த மனிதரின் போகம் எது? அவையெதிலுமே அவருக்கு ஈடுபாடிருப்பதுபோலத் தெரியவில்லை. அவர் தனிமைசூழ்ந்தவர் என்றார்கள். காட்டில் வேட்டையாடுகையில் மிகவும் மகிழ்வுடன் இருப்பார் என்றார்கள். அப்படியென்றால் அவர் தன்னை தானே அருந்துபவர்.
அந்த எண்ணம் வந்ததும் விதுரன் மலர்ந்தான். ஆம், அதுதான். அதைத்தவிர வேறில்லை. அதுதான் அவரை அலையவைக்கிறது. விதவிதமான வாழ்க்கைகளை வாழச்செய்கிறது. அவருடைய பகற்கனவுகளில் அவர் எண்ணற்ற வாழ்க்கைகளை வாழ்ந்துகொண்டிருக்கிறார். போகியாக, குடிகாரனாக, துறவியாக, வேளிராக, ஆயனாக, வணிகனாக வாழ்கிறார். தன் அகக்கற்பனைகளால் தன்னை முழுமையாக நிறைத்துக்கொள்கிறார். அவர் அஸ்தினபுரியின் பிதாமகர் அல்ல. அது அவரது ஓடுதான். உள்ளே அவர் ஒரு மனிதத் திரள்.
பீஷ்மர் அரசசூழ்ச்சியை அறிந்தவரல்ல என்றுதான் சூதர்கள் சொன்னார்கள். நேரடியான உள்ளம் கொண்டவர் என்றும் முறைமைப் பேச்சுக்களையும் முகத்துதிகளையும் விரும்பாதவர் என்றும் சொன்னார்கள். அவருடன் பேசிய முதல்நாளிலேயே அவருக்கு மனிதர்களைப்பற்றி தெரிந்துகொள்ள புதியதாக ஏதுமில்லை என்று அவன் மதிப்பிட்டிருந்தான். அவரை எளிய காங்கேயன் என்று எண்ணுவது பிழை.
உடம்பில் வியர்வை வழிய சால்வையால் துடைத்தபடி பீஷ்மர் வந்தார். அப்பால் அவரது சீடர்கள் கலையும் பேச்சொலி கேட்டது. விதுரன் அவரை வணங்கி முகமன் சொன்னான் “தங்களை சந்திக்கும் பேறு மீண்டும் எனக்குக் கிடைத்திருக்கிறது.”
பீஷ்மர் பீடத்தில் அமர்ந்தபடி “உன் வருகையை எதிர்நோக்கி இருந்தேன்” என்றார். புன்னகையுடன் “நீ விளையாடும் முதல் அரசியலாடல் இது. உன்னால் எங்கும் அமரமுடியாது. நீ அம்பாலிகையையும் அம்பிகையையும் சந்தித்திருப்பாய். ஆனால் பேரரசியை சந்தித்திருக்கமாட்டாய். ஏனென்றால் இதை நீயே முடிக்க விரும்புகிறாய்.”
விதுரன் புன்னகைத்து “பிதாமகர் இதை ஊகித்தது எனக்கும் வியப்பளிக்கவில்லை” என்றான். “அதை விட நேரடியாக என்னிடம் சொன்னது இன்னும் எதிர்பார்த்ததுதான்.” பீஷ்மர் சிரித்தார். “பிதாமகரே, நான் தங்களிடம் என் தமையனின் தூதனாக வந்திருக்கிறேன். அவர் காந்தார நாட்டு இளவரசியை மணப்பதில் ஈடுபாட்டுடன் இருக்கிறார்” என்றான்.
பீஷ்மர் புன்னகை செய்தார். விதுரன் “தங்களைப்போலவே நானும் நேரடியாகவே பேச விரும்புகிறேன் பிதாமகரே. தாங்கள் காந்தாரநாட்டுக்கு செல்லப்போவதில்லை என்றும் பலபத்ரரை அனுப்பவிருக்கிறீர்கள் என்றும் அவருக்கு செய்தி சென்றிருக்கிறது” என்றான்.
“அதில் மந்தணம் ஏதுமில்லை. பலபத்ரர் நாளைக்காலை காந்தாரநாட்டுக்குச் செல்கிறார்” என்றார் பீஷ்மர். விதுரன் “அது அரசமுறையே” என்றான். “ஆனால் தாங்கள் நேரடியாகச் சென்று காந்தார மன்னரிடம் பேசவில்லை என்றால் தூது பலிக்காது என்பதை அனைவரும் அறிவர்” என்றபின் “பேரரசிக்கு அதை எவரும் சொல்லவேண்டியதே இல்லை” என்றான்.
“அன்னை அதை அறியட்டும் என்றுதான் நான் பலபத்ரரை அனுப்புகிறேன்” என்றார் பீஷ்மர். “இந்த மணம் நிகழ்வதை நான் விரும்பவில்லை.”
“இருநாடுகளுக்குமே நல்லது இந்த மண உறவு” என்று விதுரன் சொன்னான். “தாங்கள் அறிந்திருப்பீர்கள். சென்ற ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக அஸ்தினபுரியின் வரிச்செல்வத்தில் வளர்ச்சி இல்லை. இருபத்தைந்தாண்டுகளாக சீராக வீழ்ச்சி தென்படுகிறது. நாடு ஒரு பொருள்துறை அழிவைநோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது என்றுகூடச் சொல்லலாம்.”
பீஷ்மர் “அதை நான் நேற்று பேரரசி பேசும்போதே உய்த்தறிந்தேன். கங்கைக்கரை நாடுகள் மேல் படைகொண்டுசென்று வெல்ல திட்டமிடுகிறார் அவர். கங்கைக்கரையின் அனைத்துச் சந்தைகளையும் துறைகளையும் கைப்பற்ற நினைக்கிறார்” என்றார். “ஆம், அது ஒன்றே வழி” என்றான் விதுரன்.
பீஷ்மர் “நீயும் உன் அமைச்சர்குழுவும்தான் அவருக்கு இந்த எண்ணத்தை அளித்திருப்பீர்கள் என நான் உணர்ந்தேன். பெண்களின் இயல்பு எதிலும் தன் தனியுணர்ச்சிகளையும் கலந்துகொள்வது… அதையே பேரரசியும் செய்கிறார். இப்படையெடுப்பில் தன் வஞ்சங்களைத் தீர்த்துக்கொள்ளத் திட்டமிடுகிறார்” என்றார். “அதை நான் அனுமதிக்கமுடியாது. பாரதவர்ஷத்தில் போரைக்கொண்டுவர நான் ஒப்புக்கொள்ளமாட்டேன்.”
“பிதாமகரே, நீங்கள் பேரரசியை வெறுமொரு பெண்ணாக நினைக்கிறீர்களா என்ன?” என்றான் விதுரன். பீஷ்மர் “ஒருபோதும் இல்லை. ஆனால் பெண்ணாக நினைக்கிறேன். ஆண்களைவிட இருமடங்கு சிறப்பாக பெண்களால் அதிகாரத்தைக் கையாளமுடியும். மும்மடங்கு கூர்மையாக அரசியல் மதிவினைகளில் ஈடுபட முடியும். நான்குமடங்கு கவனத்துடன் பொருளியலை நடத்தமுடியும்… அதற்கு வாழும் உதாரணம் நம் பேரரசி” என்றார்.
“ஆனால் ஆட்சியாளனுக்கு இவற்றில் எந்தத்திறனும் இல்லாமலிருக்கலாம். ஒன்றுமட்டும் அவசியம் தேவை. அதை பெருந்தன்மை என்று சொல்லலாம். சிறியவற்றுக்கு அப்பால் நின்றுகொண்டிருத்தல். அதேசமயம் சிறியவர்களை பொறுத்தருளவும் சிறியவர்களை விரும்பவும் மனம் கொண்டிருத்தல். வரலாற்றின் மாபெரும் சக்ரவர்த்திகளெல்லாம் அத்தகையவர்களே” என்றார் பீஷ்மர்.
தன் கருத்துக்களாலேயே முன்னெடுக்கப்பட்டு பீஷ்மர் சொன்னார் “பெண்களில் அந்தப் பெருந்தன்மைதான் மிக அரிதாகக் காணப்படுகிறது. அது ஏன் என்று எனக்குப் புரியவில்லை. அவர்களில் உள்ள தாய்மைதான் அதற்குக் காரணம் என்று தோன்றும். கொள்கைகளை விட, கனவுகளைவிட கையில் இருக்கும் குழந்தை என்னும் மெய் பெரிதென்று அவர்கள் நினைக்கிறார்களா? என்னால் புரிந்துகொள்ளமுடியவில்லை…”
அவர் சிலகணங்கள் சாளரம் வழியாக நோக்கியபடி தாடியை நீவினார். “…அதிலும் தன்னை தனிமைப்படுத்தப்பட்டவளாக எண்ணும் பெண் மிக ஆபத்தான ஆட்சியாளர். அவள் எவரையும் நம்புவதில்லை. தன்னையும் தன் குலத்தையும் நிலைநாட்ட அவள் எதையும் செய்வாள்.”
“அன்னையைத் தெளிவாகவே புரிந்துகொண்டிருக்கிறீர்கள் பிதாமகரே” என்றான் விதுரன். “ஆனால் அவரது கனவுகள் அவரையும் அவரது குலத்தையும் நிலைநிறுத்துவதற்கானவை மட்டும் அல்ல. பாரதவர்ஷம் பற்றிய கனவு ஒன்று அவர் நெஞ்சில் உள்ளது.” பீஷ்மர் “ஆம் அதை நான் அறிவேன். அதற்காகவே நான் அவரது கருவியாக இருக்கிறேன். ஆனால் அதன்பொருட்டு இங்கே ஒரு குருதிநதி ஓடுவதற்கு நான் துணைநிற்க முடியாது.”
“தங்கள் எண்ணம் என்ன?” என்று விதுரன் கேட்டான். “பேரரசி என்னிடம் சொல்லிவரக்கூடிய அவரது கனவுக்கு இயைந்த ஒரு மண உறவு. பாரதவர்ஷத்தில் உருவாகிவரும் ஏதேனும் ஒரு புதிய அரசகுலத்தில் பெண்ணெடுப்போம். இன்னும் ஷத்ரியநிலையை அடையாத சூத்திர அரசகுலங்கள் பல உள்ளன. கூர்ஜரம், சூரசேனம், மாத்ரம்… சூத்திர அரசகுலங்கள் எழுந்து வரவேண்டுமென்றுதானே அரசி விரும்புகிறார்கள். ஏன் மகதத்திடமே நாம் மணம்பேசமுடியும். நீ சொன்னாயே மகதம் வல்லமை மிக்க அரசாக வரும் என்று. உன் பேரன்னை மகதத்தை அழிக்க நினைக்கிறார். நான் மகதத்துடன் ஒரு மணவுறவின்வழியாக அவர்களை வெல்ல நினைக்கிறேன்.”
“ஆனால் நம் அரசர் விழியிழந்தவர்” என்றான் விதுரன். பீஷ்மர் “ஷத்ரியத் தகுதி பெறாத அரசர்களுக்கு நம்முடன் ஒரு மணவுறவு என்பது பெரிய வாய்ப்பு. ஆகவே மன்னருக்கு விழியில்லை என்பதை அவர்கள் பெரிதுபடுத்தப்போவதில்லை. உண்மைதான், மகதம் எளிதாக ஒப்புக்கொள்ளாது. ஆனால் நாம் ஏன் முயன்றுபார்க்கக் கூடாது?” என்றார். பீஷ்மர் முடிவெடுத்துவிட்டார் என்பதை விதுரன் புரிந்துகொண்டான். இவரை வெல்லமுடிந்தால் தன் மதிசூழ்கையின் முதல்பெரும் வெற்றியாக அது அமையும் என்று தோன்றியது.
“பிதாமகரே, தங்கள் எண்ணத்தை முழுமையாகவே ஏற்கிறேன். தங்கள் கருணையும் பெருநோக்கும் என்னை மகிழ்விக்கின்றன. ஆனால் சென்ற பதினெட்டாண்டுகளில் இங்கே நிகழ்ந்தவை தங்கள் அறிதலுக்கு வந்திருக்க வாய்ப்பில்லை. ஷத்ரிய அரசுகளுக்கிடையே பூசல் எப்போதும் இருப்பதுதான். அவையெல்லாம் எளிய குலச்சண்டைகள், ஆணவமோதல்கள். அவர்களால் பாரதவர்ஷம் எப்போதும் குருதியில் நனைந்தபடியும் இருக்கிறது. ஆனால் சென்ற பதினைந்தாண்டுகாலத்தில் வங்கம் வழியாக வரும் பெருநாவாய்கள் வழியாக விரிவான வணிகம் உருவாகி வருகிறது. மாமிசத்துக்குப் போரிடும் செந்நாய்க்கூட்டம் போல ஷத்ரியகுலம் அச்செல்வத்துக்காக சண்டையிடுகிறது. சென்ற ஐந்துவருடங்களில் ஷத்ரியர்கள் நடுவே இருபத்தெட்டு போர்க்ள் நடந்திருக்கின்றன. சென்ற மாதம்கூட வங்கத்தின் படகுகளை மகதம் தீவைத்துக் கொளுத்தியிருக்கிறது. மகதம் மீது வங்கமும் கலிங்கமும் இணைந்து போர்தொடுக்கக்கூடுமென பேசிக்கொண்டிருக்கிறார்கள்” விதுரன் சொன்னான்.
“இச்சூழலில் நாம் எந்த நாட்டுடன் மண உறவுகொண்டாலும் அந்தநாட்டின் அனைத்து எதிரிகளையும் நாமும் பெறுவோம். அந்த மணவுறவால் நாம் பெறும் செல்வத்தையும் நட்பையும் விட போரும் பகையும்தான் அதிகம்” என்று விதுரன் தொடர்ந்தான். “அத்துடன் உருவாகிவரும் சூத்திர அரசுகளுடன் நாம் மணவுறவு கொண்டோமென்றால் நாம் இங்கு ஒரு சூத்திரமன்னர்களின் கூட்டை உருவாக்கமுனைகிறோம் என்றே ஷத்ரியர் புரிந்துகொள்வார்கள். நமக்கு எதிராக அவர்கள் ஒருங்கிணைவார்கள். அவர்களின் ஒட்டுமொத்த எதிர்ப்பை வெல்ல நம்மிடம் நிதிவல்லமை இன்றில்லை.”
பீஷ்மர் சொல் என்பதுபோல தாடியை நீவியபடி பார்த்தார். “அத்துடன் நாம் ஏதேனும் வழியில் செல்வத்தைப் பெருக்கியாகவேண்டிய நிலையில் இருக்கிறோம். வேள்நிலங்களையும் ஆய்நிலங்களையும் நாம் இனிமேல் பெருக்க முடியாது. நாம் வணிக எல்லைகளை மட்டுமே பெருக்க முடியும். அதற்கு நம்மிடம் இன்னும் வல்லமை வாய்ந்த நாவாய்கள் தேவை. நம்முடைய படைபலமும் பெருகியாகவேண்டும்.”
அவரைக் கூர்ந்து நோக்கியபடி விதுரன் சொன்னான் “அனைத்துக்கும் உரிய தீர்வு காந்தாரத்தின் மணவுறவில் உள்ளது. நம் படைபலமும் நிதிபலமும் பெருகும். கங்கை வணிகத்தை அதைக்கொண்டு விரிவாக்கம் செய்துகொள்ளமுடியும். நமக்கும் காந்தாரத்துக்கும் உறவு உருவானால் நம்மை ஷத்ரியர்கள் அஞ்சுவார்கள். போரைத் தவிர்ப்பதற்கான வழி என்பது அதுவே.” சிறிய இடைவெளி விட்டு விதுரன் “பேரரசி சொல்வதுபோல நாம் படையெடுக்க வேண்டியதில்லை. நம்முடைய படைபலம் உருவாக்கும் அச்சமே போதும். நாம் மகதத்தையும் வங்கத்தையும் பணியச்செய்து நமக்குரிய உடன்படிக்கைகளை உருவாக்கிக் கொள்ளலாம்” என்றான்.
“நீ ஒரு சிறந்த மதியூகி” என்று பீஷ்மர் புன்னகை செய்தார். “நீ என்ன சொன்னாலும் ஏற்கலாகாது என முடிவெடுத்திருந்த என்னையே மறுசிந்தனைக்குக் கொண்டுசென்றுவிட்டாய்!” முன்னால் நகர்ந்து அவன் தோளில் கையை வைத்தார். “ஆனால் நீ சொல்வதை நான் ஏற்கமுடியாது. இரு காரணங்கள். ஒன்று உள்ளூர நீயும் உன்னுடைய பேரரசியைப்போல போருக்கான விழைவுடன் இருக்கிறாய். நீ இன்று படைக்கலங்களை பார்வையிட்டு அனைத்தையும் சித்தமாக்கி வைக்க ஆணையிட்டாய் என்று எனக்குச் செய்தி வந்தது.”
விதுரன் பேச முற்பட பீஷ்மர் கையமர்த்தி தொடர்ந்தார் “வணிகத்தை மேம்படுத்த நான் வேறுவழி வைத்திருக்கிறேன். போரே இல்லாமல் நாம் வளரும் வழி. இந்த கங்கைவழியில்தான் இத்தனை அரசுகள் உருவாகியிருக்கின்றன. காரணம் இந்நிலம் நீர்வளம் மிக்கது. தென்கிழக்கே மகதமும் வங்கமும் தெற்கே கலிங்கமும் நம்மைவிட வலிமைகொண்டு வருவது அதனால்தான். ஆனால் மேற்கே சப்தசிந்துவுக்கு அப்பால் வறண்ட பாலைநிலம். அதேசமயம் கங்கையை விடப்பெரிய சிந்துவின் பெருக்கு இருக்கிறது. அதன் எல்லையில் தேவபாலத் துறைமுகம் இருக்கிறது. அங்கே வங்கத்துக்கும் கலிங்கத்துக்கும் வரும் உலகவணிகர்கள் அனைவரும் வந்து கூடிக்கொண்டிருக்கிறார்கள். அந்த நீர்வழியை நிறைக்கும் அளவுக்கு கூர்ஜரத்திடம் பொருள்வளம் இல்லை.”
VENMURASU_EPI_60
ஓவியம்: ஷண்முகவேல்
[பெரிதுபடுத்த படத்தின்மீது சொடுக்கவும்]
பீஷ்மர் தொடர்ந்தார் “நான் நேரில்சென்று அனைத்தையும் பார்த்துவிட்டு வருகிறேன். நாம் கூர்ஜரத்துடன் ஓர் உடன்படிக்கை செய்துகொள்வோம். நமக்கு வரும் செல்வத்தில் நாலில் ஒருபங்கை கூர்ஜரத்துக்கு நீர்வழிக்கான வரியாகக் கொடுப்போம். நம்முடைய வணிகம் பலமடங்கு பெருகும்… சிந்துவின் கைவழிகள் இங்கிருந்து அருகேதான் என்பது நமக்கிருக்கும் பெரும் வாய்ப்பு. அதை நாம் பயன்படுத்திக்கொள்வோம்.”
விதுரன் பெருமூச்சுவிட்டான். புன்னகையுடன் “இதை உன் தோல்வி என எண்ணாதே இளையவனே, இது ஒரு அரசியல் நிலை. அவ்வளவுதான். நான் உன்னளவுக்கு கூரிய அரசியல் மதியூகிகளை சந்தித்ததில்லை” என்றார் பீஷ்மர்.
விதுரன் “பிதாமகரே, இறுதித் தோல்வி தங்களுக்கே. உங்களால் இறுதிப்பெரும்போரை ஒத்திவைக்கத்தான் முடியும். நிறுத்தமுடியாது. ஒருவேளை சிறிய போர்கள் நிகழ்ந்தால் அந்தப்பெரும்போர் நிகழாமல் போகலாம்” என்றான். அவரது கண்களை நோக்கி விதுரன் சொன்னான் “அஸ்தினபுரி பிறநாடுகளை வென்று பேரரசாக ஆகுமென்றால் அந்தப் பெரும்போர் நிகழாது தடுக்கமுடியும்… அது ஒன்றே நம் முன் இருக்கும் வாய்ப்பு.”
“இளையவனே, நான் முதியவன். எல்லா முதியவர்களும் தங்கள் வாழ்நாள்காலத்தைப் பற்றி மட்டுமே சிந்திப்பார்கள். நான் இறந்தபின் அந்தப் பெரும்போர் நிகழுமென்றால் அது இறையாற்றலின் ஆணை. என் கண்முன் அது நிகழ நான் அனுமதிக்க மாட்டேன். எந்தப் போரையும் நான் ஏற்கமாட்டேன்” என்றார் பீஷ்மர். அவரது கண்கள் அந்தரங்கமான வலி ஒன்றைக் காட்டுவன போலச் சுருங்கின. “போரைத் தவிர்க்க வேண்டுமென்பதற்காகவே நான் ஒவ்வொரு கணமும் வருந்தும் அநீதி ஒன்றைச் செய்தேன்.”
அவர் காசிநாட்டு இளவரசிகளைக் கவர்ந்து வந்ததைப்பற்றிச் சொல்கிறார் என்று விதுரன் புரிந்துகொண்டான். அதற்கு எப்படி எதிர்வினையாற்றுவதென்று அவனுக்குத் தெரியவில்லை. அவன் வணங்கிவிட்டு “நான் கிளம்புகிறேன் பிதாமகரே. தங்கள் சித்தம் மாறாதென அறிவேன். ஆனால் இன்றிரவு என் சொற்களை நீங்கள் இன்னொருமுறை சிந்திக்கவேண்டுமென்று கோருகிறேன்” என்றான்.
கைதூக்கி ஆசியளித்து பீஷ்மர் எழுந்தார். அவன் நடந்தபோது அவனுடைய தோள்களில் கையை வைத்தபடி அவரும் கூடவே வந்தார். எத்தனை உயரமான மனிதர் என்று விதுரன் உள்ளூர வியந்துகொண்டான். அதை அவர் உணர்ந்து புன்னகைசெய்து “என் கங்கர் குலத்தில் அனைவருமே உயரமானவர்கள்தான் இளையவனே” என்றார். “கங்கர்கள் இந்தத் தலைமுறையில் தங்கள் உயரத்தை இழந்துவிட்டார்கள்” என்றான் விதுரன்.
“அது ஏன் என நினைக்கிறாய்?” என்றார் பீஷ்மர். “அவர்கள் முன்பு இமயத்தை அண்ணாந்து நோக்கி வாழ்ந்தனர். இப்போது கீழே உள்ள சந்தைகளை நோக்கி வாழ்கிறார்கள்” என்றான் விதுரன். பீஷ்மர் “ஆம், சரியாகவே சொன்னாய்” என்று சொல்லி சிரித்தார்.
அவர்கள் முன்வாயிலுக்கு வந்தபோது திருதராஷ்டிரனின் ரதம் வந்து நிற்பதையும் அதிலிருந்து விப்ரன் இறங்கி திருதராஷ்டிரனை கைப்பிடித்து வெளியே இறக்குவதையும் கண்டான். உடனே பீஷ்மரை அங்கிருந்து விலக்கிவிட்டு திருதராஷ்டிரனை திருப்பியனுப்ப முயல்வதைப்பற்றிய எண்ணம் வந்ததுமே அது முடியாதது என்பதும் விதுரனுக்குத் தெரிந்தது. சந்திப்பு நிகழும்போது அதை எப்படி வழிநடத்துவது என்று அவன் சிந்தனை சென்றது.
பீஷ்மர் வாயிலருகே சென்று அசையாமல் நின்றார். மென்காற்றில் அவரது தாடியும் குழலும் பறந்துகொண்டிருந்தன. அசையாமல் நிற்கையில்தான் அவரது உடல் முழுமை கொள்கிறது என விதுரன் நினைத்துக்கொண்டான். அசைவில்லாது நிமிர்ந்து நிற்பதற்கென்றே பிரம்மன் படைத்த உடல் அது என்பதுபோல. திருதராஷ்டிரன் இறங்கி இரு கனத்த கைகளையும் ஆட்டிக்கொண்டு, முகவாயை சற்று முன்னால் நீட்டியபடி முன்னால் வந்தான்.
விப்ரன் “பிதாமகர்” என்று மெல்லச் சொன்னான். “எட்டடி அப்பால், படிகளில்.” விதுரன் திருதராஷ்டிரனை நோக்கிச் செல்லவேண்டும் என்று நினைத்தாலும் அவர்கள் சந்திப்பதை இயல்பாக நின்று எதிர்கொள்வதே மேல் என்று அடுத்தகணம் முடிவெடுத்தான். பீஷ்மர் கூர்ந்த பார்வையுடன் ஒரு சொல்கூட பேசாமல் நின்றார்.
திருதராஷ்டிரன் இரு கைகளையும் தன் தலைக்குமேல் தூக்கினான். “பிதாமகரே, ஞானமில்லாத குருடன். ஒன்றுமறியாதவன். நான் செய்த பிழைகள் அனைத்தையும் பொறுத்தருள்க” என்றபடி அப்படியே முன்னால் சரிந்து கையூன்றி விழுந்தான். தன் சிறிய தலையால் தரையை மீண்டும் மீண்டும் முட்டியபடி “ஞானமற்ற குருடன் பிதாமகரே… எளியவன்… எனக்கு அறிவை புகட்டுங்கள். என்னை உங்கள் மாணவனாக ஏற்றுக்கொள்ளுங்கள். உங்கள் பாதங்களே என் தெய்வங்கள்” என்றான்.
பீஷ்மர் தன் கையைத் தூக்கி ஏதோ சொல்லப்போனார். அந்தக் கை நடுங்கவே திரும்ப தொடையுடன் ஒட்டி வைத்துக்கொண்டார். அவரது உதடுகளில் சொற்கள் ததும்புவதை விதுரன் உணர்ந்தான். “எழுந்திரு குழந்தை” என்றபோது அவருடைய தொண்டை அடைத்திருந்தது. “எழுந்திரு” என்று மீண்டும் உரக்கச் சொன்னார். அவரது நெஞ்சு விம்முவதை விதுரன் கண்டான்.
திருதராஷ்டிரன் எழுந்து நெற்றியில் படிந்த மண்ணுடன் கைகூப்பி செங்கனல் துண்டுகள் போன்ற கண்களில் இருந்து நீர் வழிய கைகூப்பி நின்றான். பீஷ்மர் மெதுவாக அவனருகே சென்று அவன் தோளைத் தழுவி தன்னுடன் இறுக்கிக் கொண்டார். “மூடா, எளியவன் என்று என் முன் வந்து எப்படிச் சொல்வாய் நீ?” என்றார். “நீ அஸ்தினபுரியின் பேரரசன். உன் பாதங்களில் பாரதவர்ஷம் வந்து பணியும். என் வில்மேல் ஆணை” என்றார்.
“தங்கள் அருள் மட்டும் எனக்குப்போதும் குருநாதரே. இந்நாள் முழுக்க வேறெதையும் நான் எண்ணவில்லை” என்றான் திருதராஷ்டிரன். “நான் என்றும் உன்னுடன் இருப்பேன். என் வாழ்வின் இறுதிக்கணம் வரை” என்றார் பீஷ்மர். திருதராஷ்டிரன் தலை ஆடிக்கொண்டிருந்தது. அவன் கழுத்தில் தசைகள் இழுபட்டு இழுபட்டு அசைய தாடையை கோணலாக கடித்திருந்தான்.
“என் ஆயுதசாலைக்குள் வா” என்றார் பீஷ்மர். “நானறிந்த அனைத்தையும் நீயும் கற்பாய். பாரதவர்ஷத்தில் எவரும் உன்னெதிரே நின்று கதாயுதமெடுக்கமாட்டார்கள்.” அவனை அழைத்துச்சென்று பீடத்தில் அமர்த்தி அவன் அருகே அவரும் அமர்ந்துகொண்டார். அவனுடைய தோள்களைத் தழுவிய அவரது கைகள் வருடி இறங்கின. “உன்னுடன் மற்போர் புரியும்போது எண்ணிக்கொண்டேன், உன்னை குழந்தையெனத் தூக்கி கையிலிட்டு விளையாடாத குறையெல்லாம் தீர்கிறது என்று… மக்கள் மெய்தீண்டல் பேரின்பம் என்கின்றனர் ரிஷிகள். அதை நேற்று அறிந்தேன்.”
“நானும் நேற்று அதையே உணர்ந்தேன் குருநாதரே… தந்தையின் கையால் தண்டித்து வளர்க்கப்படாதவன் நான். அந்தக்குறை நேற்று தீர்ந்தது என்று. உங்கள் கைகளின் தொடுகையை என் உடல் இன்னும் அப்படியே நினைவுகூர்கிறது.” அவன் முகம் மலர்ந்தது. “கங்கையின் நீர்ப்பாசி வாசனை உங்கள் வியர்வைக்கு இருக்கிறது. சற்றுமுன்னர்தான் ஆயுதப்பயிற்சியை முடித்திருப்பீர்கள் என நினைக்கிறேன்.”
பீஷ்மர் புன்னகையுடன் “வா, இன்றே உன் கல்வியைத் தொடங்குகிறேன்” என்றார். “இன்று ஏழாம் வளர்பிறை. கல்வி தொடங்குவதற்குரிய நாள்.” திருதராஷ்டிரன் கைகளை நீட்டியபடி எழுந்தான். பீஷ்மர் அவன் கையைத் தட்டி “கைகளைக் கீழே போடு. கையை நீட்டி நீ நடந்தால் உன் எதிரி தன்னம்பிக்கையை அடைவான். பிறரைப்போலவே இரு. அதுதான் தொடக்கம்” என்றார். “ஆணை” என்றான் திருதராஷ்டிரன்.
“எழுவதற்கு முன் ஒரு கணத்தில் நீ செல்லவேண்டிய திசை என்ன என்பதை முடிவெடு. அங்கிருந்து வரும் வாசனையையும் ஒலிகளையும் கொண்டு அங்கிருப்பது என்ன என்பதை உன்னால் உணரமுடியும். அனைத்துப் பொருட்களும் காற்றில் இருக்கின்றன என்பதை மறவாதே. ஒன்று காற்று அதைநோக்கிச் செல்கிறது அல்லது அதிலிருந்து வருகிறது. காற்றை உணர்ந்தால் நீ அனைத்துப் பொருட்களையும் உணரமுடியும். கண்ணைவிட விரைவிலேயே நீ உடலால் அனைத்தையும் அறியமுடியும்.”
திருதராஷ்டிரன் எழுந்து நின்று செவிகூர்ந்தான். “தனுர்வேதத்தில் இதை பிரதிருஷ்டி என்கிறார்கள். மெய்யை கண்ணாக்குதல். ஏனென்றால் போரில் வீரனுக்கு கண் உதவாது.” பீஷ்மர் தொடர்ந்தார் “இக்குருகுலத்தின் நியதிகளில் ஒன்று, ஒருமுறைக்குமேல் எதுவுமே சொல்லப்படாது என்பதுதான். அது உனக்கும் விதி. நீ கற்றமுறையில் இங்கே கல்வி இருக்காது. அனைத்தும் செயலாகவே நிகழவேண்டும்.”
“நான் எதையுமே கற்றதில்லை குருநாதரே” என்று திருதராஷ்டிரன் சொன்னான். “ஆசிரியர்கள் கற்றுத்தரும் எதுவும் எனக்குப் புரியவில்லை. நான் கேட்கும் வினாக்களுக்கு அவர்கள் பதில்சொல்வதுமில்லை.” பீஷ்மர் “ஆம், அது அவர்களின் பிழையல்ல. நான் நாளைமுதல் ஒரு முதுசூதரை உன்னிடம் அனுப்புகிறேன். அவர் பெயர் தீர்க்கசியாமர். அவரது ஒவ்வொரு சொல்லும் உனக்குப் புரியும்” என்றார்.
மேலாடையை எடுத்துச் சுழற்றி தன் கண்களைச் சுற்றி கட்டிக்கொண்டார் பீஷ்மர். “உனக்கு நான் கற்பிக்கையில் கண்களில்லாமலேயே கற்பிக்கிறேன். அது நம்மிடையே இன்னும் அணுக்கமான புரிதலை உருவாக்கும்.”
விதுரன் மெல்ல “பிதாமகரே, நான் கிளம்புகிறேன்” என்றான். பீஷ்மர் “அவ்வண்ணம் ஆகுக” என்று சொன்னபின்பு திருதராஷ்டிரனிடம் “மனித உடலின் மிக வலிமையற்ற இடம் எதுவென்றால் உடலின் முழு எடையையும் தாங்கும் கணுக்கால்தான். கவனி” என்றார்.
விதுரன் “பிதாமகரே, பேரரசியை நான் இன்றிரவு சந்திப்பேன். தாங்கள் காந்தாரத்துக்குச் செல்லும் செய்தியை அறிவிக்கிறேன்” என்றான். பீஷ்மர் கவனித்து ஆனால் இயல்பாகச் சொல்வதுபோல “ஆம், அறிவித்துவிடு” என்றார். திருதராஷ்டிரனிடம் “ஆகவே ஒருபோதும் நம் கணுக்கால் எதிரியின் எந்த ஆயுதத்துக்கும் திறந்திருக்கலாகாது” என்றார்.
வெளியே சென்று தன் ரதத்தில் ஏறி மாலை மயங்கிவிட்டிருந்த நகரத்தெரு வழியாகச் செல்லும்போது விதுரன் புன்னகை புரிந்துகொண்டிருந்தான். அந்திபூசைக்காக நகரத்தின் அனைத்து ஆலயங்களிலும் மணிகள் முழங்க நகரமே நகைப்பது போலிருந்தது.

3/19/14

அகத்திய மகரிஷி கோத்திரம் லத்திகார் வம்ச தயாதிகளுக்கு பாத்தியப்பட்ட காட்டம்பட்டி ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோவில் , காட்டம்பட்டி

அகத்திய மகரிஷி கோத்திரம் லத்திகார்  வம்ச தயாதிகளுக்கு பாத்தியப்பட்ட   காட்டம்பட்டி ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோவில் , காட்டம்பட்டி 




நன்றி திரு சுரேஷ்குமார்

நூல் இரண்டு : கானல்வெள்ளி[ 5 ]

நூல் இரண்டு : கானல்வெள்ளி[ 5 ]
அரசருக்குரிய தனித்த ஆதுரசாலையில் உடம்பெங்கும் தைலப்பூச்சுடன் திருதராஷ்டிரன் படுத்திருந்தான். விதுரன் உள்ளே வந்து அமைதியாக தலைவணங்கினான். ஒலிகளையும் வாசனையையும் கொண்டே வந்திருப்பவர்களை புரிந்துகொள்ள திருதராஷ்டிரனால் முடியும். மெல்லிய உறுமல் மூலம் விதுரனை அவன் வரவேற்றான்.
“அரசே, தங்கள் உடல்நலம் பற்றி…” என விதுரன் தொடங்கியதும் “நீ எதையும் ஆராயவில்லை. பிதாமகர் என்னைக் கொல்லமாட்டாரென்றும் தீவிரமான அடி எதுவும் எனக்கு விழாது என்றும் உனக்குத்தெரியும்” என்றான் திருதராஷ்டிரன்.
“இல்லை அரசே… நான்” என விதுரன் மீண்டும் தொடங்க திருதராஷ்டிரன் கையைத்தூக்கி “சற்று தாமதமாகுமென்றாலும் என்னாலும் உண்மைகளை உணர்ந்துகொள்ள முடியும் விதுரா. நான் நேற்று என் அன்னை சொன்னபோது நம்பவில்லை. ஆனால் இன்றுபகல் முழுக்க சிந்தனைசெய்தபோது மெதுவாக என் மனம் திறந்தது. சூதனை அழைத்து பீஷ்மபிதாமகரின் பழைய போர்களைப் பற்றிக் கேட்டேன். அவர் பால்ஹிகரிடம் போரிட்டிருக்கிறார். பலாஹாஸ்வரிடம்கூட போரிட்டிருக்கிறார். வலிமை இருந்தாலும் எந்தப் போர்ப்பயிற்சியும் இல்லாத என்னை அவரால் எளிதில் வெல்லமுடியும் என்று உனக்குத் தெரியாமலிருக்காது.”
“ஆம் தெரியும்” என்று விதுரன் சொன்னான். “ஆனால் இந்தப்போரை நான் வேறு ஒரு திட்டத்துடன்தான் அணுகினேன்” என்றான். “அரசே, பீஷ்ம பிதாமகர் சென்ற பதினெட்டு வருடங்களாக இந்நகரில் இல்லை. அவரை இன்றுள்ள தலைமுறையினர் அறிந்திருக்கமாட்டார்கள். அவருக்கு இந்நகர் மீதுள்ள உரிமை என்ன என்று எவருக்கும் தெரியாது. இன்றுகூட அவருக்கென ஒரு கொடி இல்லை. கங்கர்களின் மீன்கொடியே அவருக்கும் இருக்கிறது. அஸ்தினபுரியுடன் அவருக்கு இன்று எந்த உறவும் இல்லை.”
“ஆம்” என்றான் திருதராஷ்டிரன். “அரசே, இன்று உங்களுக்கு முடிசூட்டி ஆதரிக்கவேண்டியவர் அவர். அவர் சொன்னால் இந்நகரம் அதை ஏற்கவேண்டும். இதற்குள் அவர் உங்களைப் போரில் வென்ற கதை அஸ்தினபுரியில் பாடப்பட்டிருக்கும். உங்களைப்போரில் வென்றவர் விவாதசந்திரத்தின் விதிப்படி இந்நகரின் அரசனேயாவார். இம்மணிமுடியை எவருக்கு அளிக்கவும் அவர் உரிமை பெற்றவர்” என்றான் விதுரன். திருதராஷ்டிரன் தலையசைத்தான்.
“அவரோ நாடாளமாட்டேன் என சூளுரைத்தவர். ஆகவே அவர் அளிப்பதே அரசாட்சி. இனி அவரை நாம் நம் பக்கம் இழுத்தாலே போதும். பாண்டுவோ பிறரோ எந்த நெறிநூலையும் இனி உங்களுக்கு எதிராக சுட்டிக்காட்ட முடியாது. பீஷ்மர் உங்களுக்கு அரசை அளிக்கும்போது எதிர்ப்பு தெரிவிக்கும் எவரும் பீஷ்மரிடம் போர் புரிந்தாகவேண்டும். அதுதான் நூல்நெறி” விதுரன் தொடர்ந்தான்.
“ஆனால் அவர் பாண்டுவுக்கு அரசை அளித்தால் நான் என்ன செய்யமுடியும்?” என்று திருதராஷ்டிரன் கேட்டான். விதுரன் “அவர் மூத்தவர் நீங்களிருக்க ஒருபோதும் இளையவருக்கு அரசளிக்கமாட்டார். அவர் இந்நாட்டின் பிதாமகர். அவருக்கு அந்த இடம் அவர் இக்குலநெறிகளை மீறமாட்டார் என்பதனால்தான் அளிக்கப்பட்டிருக்கிறது” என்றான்.
திருதராஷ்டிரன் ஐயத்துடன் தலையை அசைத்து “என்னால் இதையெல்லாம் புரிந்துகொள்ளமுடியவில்லை. இவற்றையெல்லாம் கேட்கையில் என் தலை பாறைபோல கனக்கிறது” என்றான். “நீங்கள் எதைப்பற்றியும் கவலைப்படவேண்டியதில்லை அரசே. நான் உங்களுக்காகப் பேசுகிறேன்” என்றான் விதுரன். “பீஷ்மபிதாமகரின் ஆசியுடன் தாங்கள் அரியணை ஏறவேண்டும். காந்தார இளவரசியையும் அடையவேண்டும். அதற்கு என்ன தேவையோ அதை நான் செய்கிறேன்.”
திருதராஷ்டிரன் தலையை அசைத்தான். “விதுரா உண்மையில் என் நெஞ்சிலிருந்து பிற அனைத்தும் விலகிவிட்டன. பிதாமகர் என்னைத் தூக்கி அறைந்த அதிர்ச்சி மட்டும்தான் என் உடலிலும் நெஞ்சிலும் உள்ளது. அப்படியென்றால் என் உடலின் ஆற்றலுக்கெல்லாம் என்ன பொருள்? எல்லாம் ஒரு தோற்றம்தானா? என்னை நானே ஏமாற்றிக்கொள்கிறேனா? என் உடலில் ஒரு குழந்தை அடித்தாலே உடைந்துவிடும் நரம்புமையங்கள் உள்ளன என்றால் நான் வளர்த்து வைத்துள்ள இந்த மாமிசமெல்லாம் எதற்காக?”
தலையைச் சரித்து ஆட்டிக்கொண்டே பேசிய திருதராஷ்டிரன் திடீரென வெறி எழுந்து பேரொலியுடன் தன் மார்பை அறைந்தான். விதுரன் திடுக்கிட்டு பின்னகர்ந்தான். திருதராஷ்டிரன் தன் கைகளால் தன் மார்பையும் தலையையும் மாறி மாறி அறைந்துகொள்ளத் தொடங்கினான். சிறுவனாக இருந்த காலம் முதலே அது அவன் வழக்கம். தன் உடலை தானே தொட்டுக்கொள்வதும் அறைந்துகொள்வதும். வருடத்தொடங்கினாலும் அறையத்தொடங்கினாலும் அவனே நிறுத்திக்கொண்டால்தான். தன்னத்தானே தொடுவதன் மூலம் தானிருப்பதை அவன் உணர்வதாகத் தோன்றும்.
எத்தனையோமுறை பார்த்திருந்தாலும் அந்தக்காட்சி விதுரனை தொடைநடுங்கச் செய்தது. தன் கரிய பெருங்கைகளால் தன்னையே வெடிப்பொலியுடன் அறைந்து கொண்டிருக்கும் பேருருவத்தைப் பார்த்தபடி அவன் பின்னடைந்து சுவரில் ஒட்டி நின்றான்.
களைப்புடன் திருதராஷ்டிரன் தலையை முன்னால் சரித்து இரு கைகளையும் ஊன்றிக்கொண்டான். அவனிடம் தன்னிரக்கம் ஊறி கணம் கணமாகப் பெருகியது. “நான் சாகவிரும்புகிறேன் விதுரா… நான் இன்றுவரை உயிர்வாழ்ந்தமைக்குக் காரணம் ஒன்றுதான், என் வலிமைமீதான நம்பிக்கை. நான் உண்பதைக் கண்டு அத்தனைபேரும் திகைக்கிறீர்கள் என்று எனக்குத்தெரியும். என் தோள்களையும் கைகளையும் கண்டு என்னருகே வரவே அஞ்சுகிறீர்கள் என்றும் அறிவேன். அந்தத் தன்னுணர்ச்சிதான் நான். இப்பிறவியில் நான் வேறொன்றும் அல்ல. என்னைப்பற்றி நினைக்கும்போதெல்லாம் நான் ஒரு பேராற்றல் என்றுதான் எண்ணிக்கொள்வேன். அந்த ஆற்றல் ஒரு மாயை என்றால் நான் வெறும் மாமிச மலைதானே? உணவை மலமாக ஆக்குவது மட்டும்தானே இந்த உடலின் வேலை? நான் சாகவிரும்புகிறேன்.”
அவனுடைய சதைக்கண்கள் தத்தளித்து உருண்டன. அவற்றிலிருந்து சேற்றுக்குழியில் நீர் ஊறி வடிவதுபோல கண்ணீர் வடிந்தது. “என்னைக் கொன்றுவிடச் சொல்… ஒரு ஏவலனைக்கொண்டு என் கழுத்தை வெட்டச்சொல். நான் வாழவிரும்பவில்லை. புழுவாக நெளிந்துகொண்டு இங்கே இருக்க விரும்பவில்லை. என்னை ஏன் பிதாமகர் கொல்லாமல் விட்டார்? கொன்றிருந்தால் நான் அந்தக் களத்திலேயே இறந்திருப்பேன். என்னுடையவை என நான் கொண்டிருந்த அனைத்து அகங்காரத்தையும் இழந்து இப்படி தூக்கி வீசப்பட்ட அழுகிய பொருள்போல கிடக்கமாட்டேன்… இல்லை கண்ணில்லை என்பதனால் கொல்லவும் தகுதியற்ற இழிபிறவி என என்னை நினைத்தாரா?”
மீண்டும் வெறிகொண்டு தன் இரு கைகளையும் சேர்த்து ஓங்கி அறைந்து கொண்டு பற்களைக் கடித்தான் திருதராஷ்டிரன். யானை தேங்காய் ஓட்டை மெல்வது போன்ற அந்த மெல்லிய ஒலி விதுரனை கூசச்செய்தது. “ஆனால் நான் சாவதற்கு இன்னொரு வழி இருக்கிறது. துவந்தயுத்தமே தேவையில்லை. மீண்டும் பீஷ்மரின் ஆயுதசாலைக்குச் செல்கிறேன். அவரைக் கொல்லமுயல்கிறேன். அவர் என்னைக் கொல்வார். அது அவருக்கும் பாவமல்ல. எனக்கும் எளிய சாவு… விதுரா, நான் விரும்புவது எல்லாம் ஆயுதத்தால் வரும் ஒரு சாவை மட்டும்தான். குருடனாக நோயில் சாகாமல் நான் களத்தில் சாகவேண்டும்…”
“அரசே, இந்தச் சிந்தனைகள் உகந்தவை அல்ல” என்றான் விதுரன். “உகந்ததோ இழிந்ததோ நானறியேன். இச்சிந்தனையைத் தவிர என்னிடம் வேறேதுமில்லை இப்போது. இரவும் பகலும் இதையே கற்பனைசெய்கிறேன். என் வாழ்க்கை இழிந்தது என்றாகிவிட்டது. என் சாவு வீரனுக்குரியதாக இருந்தால் போதும்.” அவன் இரு கைகளையும் விரித்து ‘ஆ’ என அடிபட்ட மிருகம்போல வீரிட்டான்.
அவனுடைய கரிய உடலில் இருந்து புற்றிலிருந்து ராஜநாகங்கள் எழுவதுபோல கைகால்கள் நெளிந்தன. தலையைச் சுழற்றியபடி தசைக்கூட்டங்கள் அதிர அவன் ஓலமிட்டான். விதுரன் திகைப்புடன் பார்த்துநின்றான். பார்வையின்மை மட்டும்தானா அந்த மூர்க்கத்தைக் கிளப்புகிறது? அப்படியென்றால் மனிதனை மனிதக்கட்டுக்குள் வைத்திருப்பவை விழிகள்தானா?
அம்பிகை உள்ளே வந்து “என்ன ஆயிற்று? கூச்சலிடுகிறான் என்று விப்ரன் சொன்னானே” என்றாள். திருதராஷ்டிரன் எதிர்பாராத கடும் சினத்துடன் அவளை நோக்கித் திரும்பி “வெளியே போ பேயே… நீதான் என் வாழ்க்கையை அழித்தாய். உன்னுடைய இருட்டையெல்லாம் என் மேல் ஏற்றிவைத்தாய்” என்று கூச்சலிட்டான். “நான் உன்னுள் தேங்கிய இருட்டு. உன்னுடைய தமோகுணமெல்லாம் என் உடம்பாகியது… உன் ஆசைகளையும் பொறாமைகளையும் காழ்ப்புகளையும் என்மேல் சுமத்திவிட்டாய். போ வெளியே போ! உன் குரல் கேட்டால் உன்னை அப்படியே நெரித்துக்கொன்றுவிடுவேன்.”
அம்பிகை குரோதம் கொண்ட முகத்துடன் முன்னால் வந்தாள். “கொல்… கொல்பார்க்கலாம். உன் கையால் நான் சாவேன் என்றால் அதுதான் என் முக்தி… மூடா, உன் மூர்க்கத்தனத்துக்கு எல்லை வகுக்கத்தான் தெய்வங்கள் உனக்கு கண்ணைக் கொடுக்கவில்லை. நீ என்னை வெறுப்பதைவிட நான் உன்னை வெறுக்கிறேன். கோட்டைக்கோபுரம் போல வளர்ந்தும் கிழவரிடம்போய் அடிவாங்கிக்கொண்டு வந்திருக்கிறாய்… வெட்கமில்லாத பிறவி… மிருகம்” என்றாள்.
வெறியுடன் எழுந்த திருதராஷ்டிரன் தன் இருகைகளையும் படீரென்று அறைந்துகொண்டான். தள்ளாடி முன்னகர்ந்து குறுக்கே வந்த தூணில் முட்டி அதை ஓங்கி அறைந்தான். அது கட்டிடத்துடன் சேர்ந்து அதிர்ந்து சுண்ணம் உதிர்ந்தது. ‘ஆஆஆஆ’ என தாக்கவரும் யானை போல ஓசையிட்டு தலையை ஆட்டினான். விதுரன் நடுநடுங்கி மிகவும் பின்னால் நகர்ந்துவிட்டான். ஆனால் அம்பிகை அசையாமல் அங்கேயே நின்றிருந்தாள். “இதோ இங்கே நிற்கிறேன்… வா! வந்து அறைந்து என்னைக் கொல்… ராட்சதனைப் பெற்ற பாதாளப்பிறவி நான். எனக்குரிய சாவுதான் அது” என்று கழுத்துத் தசைகள் அதிர தலையைச் சற்று முன்னால் நீட்டியபடி சொன்னாள்.
VENMURASU_EPI_59__
ஒவியம்: ஷண்முகவேல்
[பெரிதுபடுத்த படத்தின்மீது சொடுக்கவும்]
மேலும் இரண்டு காலடி எடுத்துவைத்தபின் திருதராஷ்டிரன் நின்று தன் தலையை இருகைகளாலும் ஓங்கி அறைந்தான். திரும்பி கீழே கிடந்த மரத்தாலான கனத்த பீடத்தைத் தூக்கி தன்னை அறைந்துகொள்ளப்போனான். விதுரன் அலறினான். அம்பிகை விதுரனை திகைக்கவைத்த அஞ்சாமையுடன் முன்னால் சென்று திருதராஷ்டிரன் கைகளைப் பற்றிக்கொண்டாள். “தார்த்தா, வேண்டாம். வேண்டாம் மகனே” என்றாள். “வேண்டாம் நில்” என்றாள்.
திருதராஷ்டிரன் கனத்த பீடத்தை தரை உடையும்படி வீசிவிட்டு பின்னால் நகர்ந்து அப்படியே தரையில் அமர்ந்துகொண்டான். அவள் அவனருகே விழுந்து அவன் முழங்கால்களைப் பற்றிக்கொண்டு “வேண்டாம் மகனே. எல்லாம் நான் செய்த பிழை. எனக்குள் என்ன இருக்கிறதென்று எனக்கே தெரியவில்லை. நான் தேடுவதென்ன, எது கிடைத்தால் என் அகம் நிறையும், எதுவுமே தெரியவில்லை. இருபதாண்டுகாலமாக உள்ளூர எரிந்துகொண்டிருக்கிறேன். அந்தத் தீதான் உன் கண்களைக் கருக்கிவிட்டது” என்று அழுதாள்.
அவன் தலையை கைகளால் அணைத்து அவன் தோள்களில் முகம் சாய்த்து அவள் அழுதாள். “உன்னை அரசனாக்க வேண்டுமென்று நான் விரும்புவது அதற்காகத்தான். உன்னை அனாதையாக இன்னொருவர் தயவுக்கு விட்டுவிட்டு நான் இறந்தேன் என்றால் சொர்க்கத்திலும் எனக்கு அமைதி இருக்காது. உன்னை இந்நாட்டுக்கு அரசனாக ஆக்குவதுதான் நான் உனக்குச் செய்யும் பிழையீடு.”
திருதராஷ்டிரனின் கனத்த கரம் மலைப்பாம்பு போல நீண்டு வந்து அவள் தலையை வளைத்தது. அவள் கன்னங்களையும் தோள்களையும் கழுத்தையும் கைகளையும் அவன் கைகள் மெதுவாக வருடின. குயவனின் கைகள் களிமண்ணை அறிவதுபோல அவளை அறிந்தான். அவனுடைய வருடல்களை இருபதாண்டுகளாக நன்கறிந்திருந்த அவள் தன் உடலை அவனுக்கு ஒப்புக்கொடுத்தாள். அவன் கைகள் அவளை பதற்றத்துடன் தீராத தவிப்புடன் தடவிச்சென்றன. அவள் அவன் தோளில் முகம் வைத்து கண்களை மூடிக்கொண்டாள். கண்ணுடன் அவன் உலகுக்குள் புகமுடியாதென்பதுபோல. அவர்கள் விதுரன் இருப்பதை முழுமையாகவே மறந்துவிட்டிருந்தனர்.
விதுரன் அந்தக்காட்சியை மெய்மறந்து பார்த்துக்கொண்டிருந்தான். தன் அன்னையை அதைப்போல தான் தொட்டு எவ்வளவு நாளாகிறது என்று எண்ணிக்கொண்டான். அம்பிகை அடையும் இந்தப்பேரின்பத்தை முலையூட்டும் நாட்களில் மட்டுமே பிற அன்னையர் அறிந்திருப்பார்கள். தீராத கைக்குழந்தையாக அவனை மடியிலிட்டு வளர்க்க அவளுடைய அகம் ஏங்கியிருக்கும். அந்த ஏக்கமே அவனை விழியிழந்தவனாக ஆக்கி அவளுக்குப் பரிசளித்திருக்கும். உறவுகளை உருவாக்கித்தந்து மனிதர்களுடன் விளையாடும் பிரஜாபதி யார்?
அம்பிகை கண்விழித்து விதுரன் நிற்பதைப்பார்த்து வெட்கி புன்னகை செய்தாள். எழுந்துகொண்டு திருதராஷ்டிரனிடம் “எழுந்திரு… அரசர்கள் தரையில் அமரக்கூடாது” என்றாள். திருதராஷ்டிரன் ஒரு கையை தரையில் ஊன்றி எழுந்தான். அம்பிகை விதுரனிடம் “இவன் புஜங்களைப்பிடிக்கையில் எனக்கு அச்சமாக இருக்கிறது. என் இரு கைகளைக் கொண்டும்கூட பிடிக்க முடியவில்லை” என்றாள். அவள் பேச்சு வழியாக சற்று முன் சென்ற உன்னதத்தை தனக்குள் மறைத்துக்கொள்ள விழைகிறாள் என்று விதுரன் நினைத்துக்கொண்டான்.
“நான் உங்கள்மேல் சினம்கொண்டிருக்கக் கூடாது அன்னையே” என்றான் திருதராஷ்டிரன். “ஆனால் நான் எவரிடம் சினம் கொள்வதென்றும் தெரியவில்லை… என் உடலும் நீங்களும் மட்டுமே இருக்கிறீர்கள் எனக்கு” என்றான். தலையை ஆட்டியபடி “என் உடல் கோட்டை போலிருக்கிறது. இதற்குள் நான் சிறையுண்டிருக்கிறேன்… நினைவறிந்த நாள்முதல் இதன் மூடிய சுவர்களை அறைந்துகொண்டிருக்கிறேன்…”
“ஹஸ்தி ஆண்ட இந்நகரம் இருக்கிறது உனக்கு… நீ அதன் மன்னன்” என்றாள் அம்பிகை. “ஆம், அன்னையே. எனக்காக அல்ல. உங்களுக்காக. உங்களை பேரரசி ஆக்குவதற்காக நான் இந்நகரை கைப்பற்றுவேன். அதற்காக பிதாமகனையோ மூதன்னையையோ எவரைக்கொல்லவும் அஞ்சமாட்டேன்” என்றான் திருதராஷ்டிரன். அவள் கைகளைப்பிடித்து ஆட்டியபடி “உங்களுக்காக இந்த உலகை அழிப்பேன்… உலகையே அழிப்பேன்” என்றான்.
விதுரன் “அரசி, நான் செல்லவேண்டிய நேரம் வந்துவிட்டது. பீஷ்ம பிதாமகரை காணவேண்டும். தங்கள் விருப்பத்தையும் நோக்கத்தையும் தெரிவிக்கிறேன்” என்றான். அம்பிகை திருதராஷ்டிரனிடம் “ஓய்வெடு தார்த்தா. உன் உடல் களைத்திருக்கிறது” என்று சொல்லி அவனை மஞ்சம் நோக்கி இட்டுச்சென்றாள். அவள் விடை தராததனால் விதுரன் வெளியே சென்று காத்திருந்தான். சற்று நேரத்தில் அவள் வெளியே வந்தாள். விப்ரன் யாழேந்திய இரு சூதர்களுடன் உள்ளே சென்றான்.
“துயில்கிறான்” என்று அம்பிகை சொன்னாள். “நான் மிகவும் அஞ்சிவிட்டேன்” என்றான் விதுரன். “நீயும் அவனும் பதினெட்டு வருடங்களாக சேர்ந்திருக்கிறீர்கள். அவன் இதுவரை ஒருமுறையேனும் உன்மீது சினம் கொண்டிருக்கிறானா?” என்றாள் அம்பிகை. விதுரன் சிந்தித்ததுமே வியந்து “இல்லை அரசி” என்றான்.
“எனக்கு நிகராக உன்மீதும் அவன் பேரன்பு கொண்டிருக்கிறான். நான் நேற்று உன்னைப்பற்றி சினத்துடன் பேசியபோது தரையை ஓங்கி அறைந்தான். பேசாதே, என் தம்பி நான் சாகவேண்டுமென விரும்பினால் நான் சாவையே தேர்ந்தெடுப்பேன் என்று கூவினான்” என்றாள் அம்பிகை.
விதுரன் வேறு திசையை நோக்கி பார்வையை திருப்பிக்கொண்டான். “என் மைந்தனின் மனம் கடல்போன்றது. அவனிடம் சிறுமை வாழாது. அதை நான் நன்றாக அறிவேன்” என்றாள் அம்பிகை. அவள் குரல் சற்று இறங்கியது. “என்னுடைய தீயூழ் அவனுக்கு அன்னையானேன். என்னுடைய அனைத்து சிறுமைகளையும் பதினெட்டாண்டுகளாக அவன் தாங்கி வருகிறான்.” அவளால் பேசமுடியவில்லை.
விதுரன் “சற்றுமுன் நீங்களிருவரும் இருந்த நிலையைக் கண்டேன் அன்னையே. கன்றை நக்கும் பசுபோல அரசர் உங்களை அறிந்துகொண்டிருந்தார். நீங்கள் ஏழுபிறவியின் நல்லூழை அடைந்தவர் என்று அப்போது நினைத்துக்கொண்டேன். அன்னையே நீங்கள் இழந்தவை அனைத்தும் அவர் வடிவில் வரவில்லையா? பத்து ஆண்மகன்களின் ஆற்றல். நூறு ஆண்மகன்களின் அன்பு… விழியிழந்தவரின் கைகளில் எழும் அன்பை பிறர் தரமுடியுமா என்ன?” என்றான்.
அம்பிகை உதடுகளை கடித்துக்கொண்டு சிலகணங்கள் நின்றாள். பின்பு “நீ பீஷ்மரிடம் சென்று என்ன சொல்லப்போகிறாய்?” என்றாள். விதுரன் பேசாமல் நின்றான். “அவரிடம் பேசிப்பார். அவர் ஒப்புக்கொண்டாரென்றால் அனைவருக்கும் நல்லது. இல்லையேல் நான் என் வழியில் செல்வேன்” என்றாள். ஆசியளித்துவிட்டு அம்பிகை திரும்பி நடக்க விதுரன் அவளை சற்றுநேரம் நோக்கி நின்றிருந்தான்.
விதுரன் வெளியே வந்து தன் ரதத்தில் ஏறிக்கொண்டான். களஞ்சியத்தில் பணிகள் மிகுந்திருப்பதை எண்ணிக்கொண்டான். அத்தனை பணிகள் இல்லாமல் அவனால் நிறைவாக இருக்க முடிவதில்லை. ஆனால் பணிகளை அவன் விரும்பவுமில்லை. ஊற்றில் தேங்கும் நீரை அள்ளி இறைப்பதுபோலத்தான். பணிகள் வழியாக எஞ்சிய ஆற்றலை இறைத்து முடிக்கவில்லை என்றால் மறுநாள் காலை உடலும் உள்ளமும் சுமையாகிவிடுகின்றன. குதிரைகள் அதற்காகத்தான் ஓடுகின்றன. பீஷ்மர் அதற்காகத்தான் ஆயுதங்களைப் பயில்கிறார்.
அரண்மனைக்கோட்டை முகப்பை அடைந்தபோதுதான் விதுரன் எங்கும் ஒரு பரபரப்பை உணர்ந்தான். உற்சாகமான குரல்களுடன் வீரர்கள் அங்குமிங்கும் ஓடிக்கொண்டிருந்தனர். வண்டிகளில் விதவிதமான ஆயுதங்களும் பொருட்களும் முன்னும்பின்னும் சென்றன. எதிர்ப்பட்ட அனைத்து வீரர்களின் முகங்களிலும் மகிழ்ச்சியும் வேகமும் தெரிந்தன. ரதத்தை மெல்ல ஓட்டச்சொல்லிவிட்டு பார்த்தபடியே சென்றான். உருக்கி ஊற்றப்பட்ட உலோகம்போல வெயில் பொழிந்து கொண்டிருந்தது. அதில் நிழல்கள் துரத்திவர மக்கள் விரைந்துகொண்டிருந்தனர்.
நாற்சந்தியில் சூதப்பாடகன் பாடிக்கொண்டிருந்தான் “வருகிறது பெரும்போர்! பாரதத்தை வெல்ல அஸ்தினபுரி என்னும் புலி குகைவிட்டெழுகிறது. வில்நாண்கள் இறுகட்டும். இறுகட்டும் உள்ளங்கள். அம்புநுனிகள் மின்னட்டும். மின்னட்டும் விழிமுனைகள்!” சிலகணங்கள் திகைத்தபின் விதுரன் அனைத்தையும் புரிந்துகொண்டான். அங்கே சூதனைச் சூழ்ந்திருந்த குடிமக்களின் பற்களும் கண்களும் ஒளியுடன் தெரிந்தன.
“இது கோடை. எரிகிறது நிலம். பதறிப்பதுங்குகின்றன பறவைகள். அனல் பொழிந்து திசைகளை மூடுகிறது. ஆனால் தெற்குவானில் மின்னல்கள் எழுகின்றன. துயிலெழப்போகும் சிம்மம் போல வானம் மெல்ல முழங்குகிறது” சூதன் குரல் எழுந்தது. “வரப்போகிறது மழை! விண்ணின் கங்கைகள் மண்ணிறங்கப் போகின்றன. பெருவெள்ளம் கோடிசர்ப்பங்களாக படமெடுத்து தெருக்களை நிறைக்கும். கோட்டைக்கதவுகளை உடைக்கும். அரண்மனை முகடுகளை மூழ்கடிக்கும். அரியணைகளைத் தூக்கி வீசும்!”
“மாகதன் அஞ்சி வாயிலை மூடுகின்றான். பாஞ்சாலன் அறைக்குள் பதுங்கிக்கொண்டான். மாளவன் கப்பத்தை இப்போதே எடுத்துவைத்துவிட்டான். அங்கன் தன் மகளை அலங்கரிக்கிறான். வங்கன் பயந்து ஓடிவிட்டான்.” கூச்சல்கள், சிரிப்புகள். நாணயங்களை அள்ளி சூதனின் பெட்டியில் போட்டு குதூகலித்தனர். “பார்தவர்ஷம் அஞ்சிய குழந்தை அன்னையை காத்திருப்பது போல அமர்ந்திருக்கிறது இதோ!”
விதுரன் ரதத்தை ஓட்டினான். புழுதி பறந்த தெருக்களில் வெயில்காய்ந்த சுவர்ப்பரப்புகளிலிருந்து அனல் வந்து நிறைந்திருந்தது. குதிரைகளில் வந்த நான்கு படைவீரர்கள் சந்தையை ஒட்டி நின்றுகொண்டிருந்த குடிகாரர்களிடம் “கிளம்புங்கள்… நாற்சந்திகளில் கூடி நிற்பவர்கள் தண்டிக்கப்படுவார்கள்… ரதங்களுக்கு வழிவிடுங்கள்” என்று கூவினார்கள். எவரையும் தீண்டாமல் சாட்டையைச் சுழற்றியபடி குதூகலித்துச் சிரித்தபடி குளம்படிகள் ஒலிக்க கடந்துசென்றனர்.
மனித ஆயுதங்கள். அவற்றுக்குப் பொருள்வருவதே போரில் மட்டும்தான். போரில் இறப்பதே அவற்றுக்கான முழுமை. விதுரன் சிரித்தபடியே நகரினூடாக கருவூலம் நோக்கிச் சென்றான்.

3/18/14

நூல் இரண்டு : கானல்வெள்ளி [ 4 ]

விதுரன் காலை வழிபாடுகள் பூசைகள் என எதையுமே செய்வதில்லை. அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு வந்து விளக்கை ஏற்றி வைத்து வாசிப்பதுதான் அவனுடைய வழக்கம். காலையில் ஒருபோதும் அவன் நெறிநூல்களையோ பொருள்நூல்களையோ வாசிப்பதில்லை. தத்துவங்கள்கூட அந்நேரத்தில் அற்பமானவையாகத் தோன்றும். காவியங்கள் மட்டும்தான் அப்போது அகத்தை நிறைக்கும்.
பரத்வாஜரின் உத்தரகாவியமும் பராசரரின் புராணசம்ஹிதையும் ஸ்வேதகேதுவின் கதாமாலிகையும் அவனுக்குப் பிடித்தமானவை. ஆனால் மனம்கவர்ந்த நூல் என்றால் கிருஷ்ண துவைபாயன வியாசரின் சுகவிலாசம்தான். அவன் ஒருபோதும் கண்டிராத தந்தையின் மனம் அதிலிருந்தது. அதன் ஒவ்வொரு சொல்லும் கனிந்த முத்தங்களாக இருந்தன. மெல்லிய குழவியின் உடலைத் தீண்டும் கைகளின் குழைவுடன் மொழியை ஆண்டிருந்தார் வியாசர். அந்நூலைத் தொடும் கணமே அவன் சுகமுனிவனாக ஆகமுடிந்தது.
அன்றைய வாசிப்பில் எஞ்சும் ஒரு கவிச்சொல்லுடன் காலைச்சூரியனின் பொன்னொளியைப் பார்ப்பதே வாழ்க்கையின் பேரின்பம் என்று விதுரன் உணர்வான். அது அன்றைய தியானமந்திரம். அன்று அவனை வழிகாட்டிச்செல்லும் புள். அன்றைய குரு. அன்று காலை எந்தச்சொல் உள்ளே சென்று அங்கிருந்த பொன்வலையில் சிக்கி தானும் பொன்னாகியதென்று சூரியனைப் பார்க்கும்போதுதான் அவனால் சொல்லமுடியும். இளவெயில் எழுந்ததும் அவன் மஞ்சத்தறையில் இருந்து உப்பரிகைக்குச் சென்றபோது ‘ரதிவிஹாரி’ என்ற சொல்லைக் கண்டான். புவியிலுள்ள அனைத்தையும் பிரதிபலித்துவிடக்கூடியதுபோன்ற துல்லியத்துடன் அதை அறிந்தான்.
காமத்தில் விளையாடுபவன். ஆம், காமத்தை ஆடுபவன் அல்ல. காமத்தில் மூழ்கியவன் அல்ல. காமத்தின் அடிமையும் அல்ல. காமத்துடன் விளையாடுபவன். தீயுடன் விளையாடும் ரசவாதிபோல. சர்ப்பத்துடன் விளையாடும் விடகாரி போல. யானையுடன் விளையாடும் மாதங்கிகன் போல. ரஸவிஹாரி. மோஹவிஹாரி. மிருத்யுவிஹாரி…
காமத்துடன் விளையாட எவருக்கேனும் முடியுமா என்ன? அது நோயுடன் விளையாடுவது போன்றது. அவ்விளையாட்டில் நோய் மட்டுமே வெல்லமுடியும். ஆனால் எப்போதேனும் எவரேனும் காமத்தை உள்ளும் புறமும் அறியமுடிந்தால் அவன் விளையாடமுடியும்.
இனியதொரு பரவசத்தில் விதுரன் நடுங்கினான். அப்படி ஒருவனால் காமத்தில் விளையாடித் திளைக்கமுடிந்தால் அவனறியும் காமம் எத்தனை மகத்தானதாக இருக்கும்? அது எல்லையற்ற மதுரக்கடல். முடிவற்ற எழில்வெளி. அது பிரம்மமேதான். அறுசுவையில் ஐந்தையும் களைந்து இனிமை மட்டுமாகத் தோற்றமளிக்கும் பிரம்மம். பிரம்மத்தை நோக்கி ஆன்மா செல்லும் நிலை அல்ல, பிரம்மம் ஆன்மாவில் வந்து நிறையும் நிலை.
அதை அறியும் மனிதப்பிறப்பு ஒன்று மண்ணில் நிகழமுடியுமா என்ன? வியாசரால் முடியவில்லை. கால்நகம் முதல் தலைமுடிநுனி வரை கவிதையால் நிறைந்தவராக இருந்தாலும் அவரால் அதைத்தாளமுடியவில்லை. சூரியனை நோக்கிச்சென்று சிறகு பொசுங்கிய பறவை அவர். அவரால் அடையமுடிந்தது அந்தச்சொல்லை மட்டும்தான். ரதிவிஹாரி. ஆம், அப்படி ஒருவன் மண்ணில் நிகழவேமுடியாது. முடிந்தால் அவன் மனிதனாக இருக்கவும் முடியாது. ஆனால் அவனை ஒரு கனவாக சொல்லில் தேக்கி வைத்துக்கொள்ளலாம். கல்லில் தேக்கிவைக்கப்பட்ட கடவுள்களைப்போல.
சூரியனின் பொன்னொளி மாய்ந்ததும் விதுரன் உடைகளை மாற்றிக்கொண்டு வெளியே சென்றான். காரியசாலைக்கா ஆதுரசாலைக்கா என்று ஒரு கணம் சிந்தித்தபின்பு கோட்டைக்குச் செல்லும்படி ஆணையிட்டான். ரதம் நகரத்தெருக்களில் ஓடத்தொடங்கியதும் வழக்கம்போல அவன் சொற்கள் மறைந்து கண்கள் மட்டுமாக ஆனான். காலையிலேயே நகர்மீது வெயில் தழலற்ற நெருப்பு போல எழுந்து நின்றிருந்தது. மேகமே இல்லாத வானில் பறவைகளும் கண்ணுக்குப் படவில்லை.
முதல் ஆயுதகோபுரத்தைக் கண்டதும்தான் முந்தையநாள் லிகிதரும் சோமரும் சொன்ன வரிகள் நினைவில் எழுந்தன. ஆயுதகோபுரத்துக்குக் கீழே காவல் வீரர்கள் ஒரு ஆய்ச்சியை நிறுத்தி அவள் கொண்டுவந்த தயிரை பேரம்பேசி வாங்கிக்கொண்டிருந்தனர். அது சொற்களாலான ஒரு காமவிளையாட்டு என்றும் தோன்றியது. அவள் அவர்கள் யோசித்து யோசித்துச் சொல்லும் ஒவ்வொரு வார்த்தைக்கும் கணீரென்று பதில் சொன்னாள். கண்களை வெட்டினாள். கழுத்தை நொடித்தாள். உறவுசொல்லி அழைத்து கேலி பேசினாள். ஆனால் கூடவே தயிரை விற்பதிலும் குறியாக இருந்தாள்.
ரதத்தை நிறுத்திவிட்டு இறங்கியதும் வீரர்கள் அவளைச் செல்லும்படி கண்களைக் காட்டினர். அவள் விதுரனைக்கண்டும் எந்தக் கூச்சமும் இல்லாமல் நீளவிழியின் நுனியால் நோக்கியபடி சுமையைத் தூக்கி தலையில் வைத்துக்கொண்டு நடந்தாள்.
காவலர்களின் பதற்றம் மிக்க வணக்கங்களை ஏற்றுக்கொண்டு விதுரன் உள்ளே சென்று காவல்கோபுரத்தில் ஏறினான். கோபுரக்காவல்தலைவன் ருத்ரன் விதுரன் பின்னால் வந்தான். தலையில் சுமையை சமன்செய்தபடி பணம்பெற்றுக்கொண்டிருந்த ஆய்ச்சி அவன் யார் என புருவம் தூக்கி வினவுவதையும் உதட்டைச்சுழித்து பழிப்புக்காட்டுவதையும் எதிரே இருந்த கேடயத்தின் பிரதிபலிப்பில் விதுரன் பார்த்தான்.
பகடைக்களத்தின் அமைப்புள்ள அஸ்தினபுரியின் சாலைமுனைகளில் இருபத்துநான்கு காவல்கோபுரங்கள் இருந்தன. கல்லால் ஆன அடித்தளம் மீது சுதையாலான கட்டடம் அமைக்கப்பட்டு அதன்மேல் பன்னிரு அடுக்குகள் கொண்ட கோபுரம் எழுப்பப்பட்டிருந்தது. கோபுரத்தின் மீது ஏறிச்செல்ல குறுகலான படிகள் சென்று சேர்ந்த கடைசித்தட்டில் எட்டுபேர் நிற்பதற்கான இடமும் பெருமுரசும் இருந்தன. அங்கிருந்த வீரர்கள் விதுரனை வணங்கினர்.
அந்தக்காவல்கோபுரத்தின் மீதிருந்து அதைச்சுற்றி இருந்த நான்கு காவல்கோபுரங்களைப் பார்க்கமுடிந்தது. தொலைவில் கரியதிரைபோல விரிந்த கோட்டை மீதிருந்த ஒரு காவல்கோபுரம் தெரிந்தது. அனைத்துக் காவல்கோபுரங்களிலும் வெண்ணிறமான கொடிகள் பறந்துகொண்டிருந்தன. எச்சரிக்கைக் கொடிகள், அறிவிப்புமுரசுகள், கொம்புகள், இரவில் எரியம்புகளை எய்யும் இரண்டாளுயரமான இரும்புவிற்கள்…. ஒலிக்காக காதுகளை விடைத்துக்கொண்டு துயிலும் ஓநாய் போலிருந்தது அஸ்தினபுரி என விதுரன் நினைத்துக்கொண்டான்.
காவலர்களிடம் தலையசைத்துவிட்டு விதுரன் இறங்கி சாலை வழியாக கோட்டையை நோக்கிச் சென்றான். கோட்டையின் கிழக்கிலிருந்த முகவாயில்தான் நகரிலேயே உயரமான இடம். கோட்டைக்குமேல் இருபத்துநான்கு அடுக்குகளாக எழுந்த மாபெரும் மரக்கோபுரத்தின் உச்சியில் அஸ்தினபுரியின் அமுதகலசக் கொடி பறந்தது. அதன் உச்சி அடுக்கில் இருந்த எச்சரிக்கை பெருமுரசு அது நிறுவப்பட்டபின் ஒலித்ததேயில்லை என்று சூதர்கள் பாடுவதுண்டு.
VENMURASU_EPI_58 _
ஓவியம்: ஷண்முகவேல்
[பெரிதுபடுத்த படத்தின்மீது சொடுக்கவும்]
கோட்டைக்குமேல் படிகளில் ஏறிச்சென்றான் விதுரன். ஒவ்வொரு அடுக்கிலும் வீரர்கள் பகடையாடியபடியும் அமர்ந்தும் படுத்தும் பேசிக்கொண்டும் இருந்தனர். அவன் வருகையை அவர்கள் எதிர்பார்க்கவில்லை. கீழிருந்து எழுந்த எச்சரிக்கைக் குரல்களை பொருட்படுத்துமளவுக்கு அவர்கள் கவனத்துடனும் இருக்கவில்லை. பெரும்பாலான வீரர்கள் தாடிநரைத்தவர்கள் என்பதை விதுரன் அப்போதுதான் கவனித்தான். சோமரின் சொற்கள் நினைவில் எழுந்தன.
அவனுடன் வந்த கோட்டைத் தலைவனான வஜ்ரபாகுவிடம் “ஏன் அனைத்து வீரர்களும் மூத்தவர்களாக இருக்கிறார்கள்?” என்றான். வஜ்ரபாகு பணிவுடன் “அவர்கள் நெடுநாட்களாக இங்கிருக்கிறார்கள் அமைச்சரே. அவர்களுக்கு இந்தப்பணி மிக நன்றாகத் தெரியும். ஆகவே எந்த இடுக்கண்களும் இல்லாமல் பணி சீராக நிகழ்கிறது” என்றான். விதுரன் தலையை அசைத்துக்கொண்டான். சிலர் அப்போதே மது அருந்தியிருப்பதாக அவனுக்குப் பட்டது. ஆனால் அதை அவனே நேரடியாக கவனிக்கக் கூடாதென நினைத்துக்கொண்டான்.
கோட்டை உச்சியில் படையறிவிப்புமுரசும் நெருப்பறிவிப்புக்கான தட்டுமணியும் தூசடைந்திருந்தன. ஒருமூலையில் வாட்களும் அம்புகளும் விற்களும் துருவேறிக் குவிந்துகிடந்தன. அப்போதுதான் காவல்மாடங்களிலும் கோட்டையின் உள்ளறைகளிலும் எங்கும் கண்படுமிடமெல்லாம் குவிந்திருக்கும் துருவேறிய படைக்கலன்களை விதுரன் நினைவுகூர்ந்தான். இதுநாள்வரை இதெல்லாம் கருத்துக்கு வந்ததேயில்லை.
அங்கிருந்து பெரிய வரைபடமென அஸ்தினபுரியை முழுமையாகவே நோக்கமுடிந்தது. காலைவெயில் ஏறத்தொடங்கியிருந்த அவ்வேளையில் நகரின் அனைத்துத் தெருக்களிலும் மக்கள் ஒழுகிக்கொண்டிருந்தனர். அவர்களின் தலைப்பாகைகள் அவர்களை சிறிய பலவண்ணப் பூச்சிகளின் கூட்டமாகக் காட்டின. நடுவே வண்டுகள் போல கன்னங்கரிய யானைகள். கொடிகள் பறக்கும் தேர்கள் அவற்றின் நிழல்தேர் உடன்வர கூட்டத்தை ஒதுக்கிக்கொண்டு சென்றன.
சதுரவடிவில் அமைந்த நகரத்தில் இருந்து நான்கு பக்கமும் கிளைகள் நீண்டு பகடைச்சதுரங்கக் களத்தின் வடிவத்தை அடைந்திருந்தது நகரம். மையச்சதுரத்தில் அரசவீதிகளும் வைதிகர்களின் வீதிகளும் பெருவணிகர்வீதிகளும் இருந்தன. அதைச்சுற்றி மண்ணாலான உள்கோட்டை நான்கு காவல் முகடுகளுடன் நின்றது. மாமன்னர் ஹஸ்தி கட்டிய கோட்டை அது. அவ்வீதிகளின் நடுவில் இருந்த அரண்மனையைச் சுற்றி மரத்தாலான கோட்டை இருந்தது. எப்போதுமே மூடப்படாத வாயிலும் அதன் உச்சியில் காஞ்சனம் என்னும் கண்டாமணியுமாக அது காவல்கொண்டிருந்தது.
வடக்காக நீண்டுசென்ற கிளைமுழுக்க படைவீரர்களின் இல்லங்கள். அந்த ரதசாலை யானைக்கொட்டடியை அடைந்து அதன் வழியாக வடக்குக் கோட்டைவாசலை அடைந்தது. அங்கே அடர்ந்த காடு மண்டிய புராணகங்கை என்னும் பெரும் பள்ளம். வடக்கே நகர்மூலையில் இருந்த காடு யானைகளுக்கும் குதிரைகளுக்கும் மேய்ச்சலுக்குரியது. அவை நீர் அருந்துவதற்கான மூன்று குளங்கள் அங்கிருந்தன. அங்கிருந்து யானைகளின் பிளிறல் ஒலிகள் அடிக்கடி கேட்டுக்கொண்டிருந்தன.
தெற்கே விஸ்வகர்ம குலத்தவரின் இல்லங்கள் செறிந்த மகாரதச் சாலை சென்று தெற்குக்கோட்டையின் பெருவாயிலை அடைந்தது. அவர்களின் இல்லங்களே பணிச்சாலைகளாகவும் இருந்தன. பொன், வெண்கலம், மரம், இரும்பு, சுதை என்னும் ஐவகைப்பொருட்களில் கலைவடிக்கும் ஐந்து விஸ்வகர்மக் குலங்களுக்கும் தனித்தனியாக தெருக்கள் இருந்தன. நடுவே மகாசிற்பியான விஸ்வகரின் உயரமான மாளிகை வெண்ணிறமான குவைமாடத்துடன் தெரிந்தது. ஒவ்வொரு விஸ்வகர்மக் குருகுலமும் தனக்குரிய கொடிகளை இல்லங்களுக்குமேல் பறக்கவிட்டிருந்தன. பலநூறு உலோகங்கள் ஒன்றாக ஒலிக்கும் இரைச்சல் அங்கிருந்து எழுந்தது.
தெற்குக் கோட்டையை ஒட்டி இருபக்கமும் பிரிந்த நிலத்தில் ரதங்களைப் பூட்டி ஓட்டிப்பார்க்கும் பெருமுற்றங்களும் குதிரைகளைப் பழக்கும் உபமுற்றங்களும் இருந்தன. ரதங்கள் ஓடும் ஒலியும் புழுதியும் அங்கிருந்து எழுந்தன. காலையிலேயே ரதங்களைப் பார்க்கச்சென்றிருந்த வீரர்களும் பெருங்குடிகளும் அதனுடன் இணைந்து ஆர்ப்பரித்துக்கொண்டிருந்தனர். கொற்றவையின் ஆலயம் அம்முற்றங்களுக்கு அப்பால் கோட்டையின் அருகே இருந்தது.
மேற்குக்கிளை முழுக்க வேளாண்குடிகளும் ஆயர்குடிகளும் குழுமிய இல்லங்கள். மேற்குக்கோட்டை வாயிலுக்கு அடியில் இருந்த கல்லால் ஆன திறப்பு வழியாக நீர் சுழிக்கும் வாய்க்கால் ஒன்று உள்ளே வந்து வரிசையாக இருபக்கமும் கிடந்த பெரிய குளங்களை நிறைத்தது. அந்தக்குளங்களின் கரைகளில் அமைந்த தெருக்களில் வரிசையாக அமைந்த வேளாண்மக்களின் புல்வேய்ந்த பெரிய வீடுகளும் தொழுவங்களும் நீரில் பிரதிபலித்து நெளிந்தன. கோடையின் உச்சத்தில் குளங்கள் பாதிக்குமேல் வற்றி சுற்றிலும் செந்நிறச் சேற்றுப்படலம் வெடித்துப்பரவி தெரிந்தன.
கிழக்கே செல்லும் சாலை முழுக்கவே வணிகர்களிடமிருந்தது. இருபக்கமும் விரிந்து சென்ற அனைத்துத் தெருக்களும் கடைவீதிகள். அந்நேரத்தில் காலையில் விற்கப்படும் பொருட்களுக்கான நெரிசல் அங்கிருந்தது. பொதிகளை ஏற்றிய மாட்டுவண்டிகளும் அத்திரிகளும் மக்களை முட்டி வழி பிளந்து சென்றன. வணிகர்கள் தங்கள் பொருட்களுக்காகக் கட்டியிருந்த பலவண்ணக் கொடிகளால் அனைத்துத் தெருக்களும் கொன்றையும் அரளியும் செண்பகமும் வேங்கையும் பூத்து அடர்ந்த காடுபோலத் தோற்றமளித்தன. தேனீக்கூடு போல அப்பகுதி இரைச்சலிட்டுக்கொண்டிருந்தது.
கிழக்குக் கோட்டையின் வலப்பக்கம் அரண்மனைக்குரிய நந்தவனம் பெரிய மதில்களால் சூழப்பட்டிருந்தது. உள்ளே பூமரங்களும் கனிமரங்களும் செறிந்த பசுமை நுரையெழுந்த கோப்பை போல நிறைந்து வழிந்தது. மறுபக்கம் முக்கண்ணன் ஆலயமும் விண்ணளந்தோன் ஆலயமும் அன்னபூரணியின் ஆலயமும் நிரையாக அமைந்திருந்தன. கவிழ்ந்த தாமரைமுகடுகள் கொண்ட மரக்கட்டடங்கள் அவை. சிவனுக்கு செந்நிறமும் விஷ்ணுவுக்கு பொன்னிறமும் அன்னைக்கு பச்சைநிறமும் கொண்ட முகடுகள். இரண்டாம் கால பூசனைக்காக மணியோசை எழுந்துகொண்டிருந்தது அங்கே.
விதுரன் கோட்டைமீதிருந்த பாதை வழியாகச் சென்றான். கோட்டைமேல் நூற்றுக்கணக்கான கைவிடுபடைகள் நிரைவகுத்து நின்றன. அவனைப்போல இரண்டு ஆள் நீளமும் இடுப்பளவுக்கு பருமனுமுள்ள விற்களில் யானைத்தோல்பட்டைகளால் ஆன நாணில் நூற்றுக்கணக்கான அம்புகள் யானைகளால் முறுக்கப்படும் சகடை வடங்களைக்கொண்டு ஏற்றி இறுக்கி வைக்கப்பட்டிருந்தன. அவற்றை ஒரேசமயம் தொடுக்கும் விசையில் பிணைக்கப்பட்ட கயிற்றின் மேல் புறாக்கள் அமர்ந்து கிணைத்தோலில் வருடும் ஒலியை எழுப்பின.
“கோட்டைக்குமேல் இப்போது எத்தனை பொறிவிற்கள் உள்ளன?” என்றான் விதுரன். வஜ்ரபாகு “கிழக்குக் கோட்டையில் மட்டும் நாநூறு பொறிவிற்கள்… மேற்கிலும் தெற்கிலும் நூறு. வடக்கே பத்து” என்றான். “ஒரு வில்லில் எத்தனை அம்புகள்?” வஜ்ரபாகு “முந்நூறு” என்றான். “பன்னிரண்டாயிரம் அம்புகளை நாம் ஒரு நொடியில் எறியமுடியும் அல்லவா?” வஜ்ரபாகு “ஆம் அமைச்சரே. அடுத்த அரைநாழிகையில் அடுத்த பன்னிரண்டாயிரம் அம்புகளை ஏற்றவும் முடியும்” என்றான். “கையால் எய்யப்படும் அம்புகளை விட மும்மடங்கு தொலைவுக்குச் செல்லக்கூடியவை இவை…இருமடங்கு நீளமும் கொண்டவை. யானைமத்தகங்களையே இவை துளைக்கும்.”
கோட்டைக்குக் கீழே மரத்தாலான மேடைகளில் மேலும் இருமடங்கு பெரிய இயந்திரவிற்கள் இருந்தன. அவற்றை வளைப்பதற்கான வடங்கள் செக்குபோன்ற சகடைகளில் சுற்றப்பட்டு நின்றன. ஒவ்வொரு சகடைக்கு அருகிலும் ஒரு யானை நின்றது. “அவை எரியம்புகளுக்கானவை” என்றான் வஜ்ரபாகு. “அந்தக் கற்தொட்டிகள் எரிநெய் நிறைப்பதற்கானவை.” “எரிநெய் நம்மிடம் எவ்வளவு இருக்கிறது?”
“போர்க்களஞ்சியத்தில் ஐந்தாயிரம் தொட்டிகள் எரிநெய் எப்போதுமிருக்கவேண்டுமென்பது விதி” என்றான் வஜ்ரபாகு. “மீன்நெய்யா அவை?” என்று விதுரன் கேட்டான். “மீன்நெய்யும் ஊன்நெய்யும் சரிவரக் கலந்தவை. எரியத்தொடங்கினால் எவ்வளவு விரைவாக வானில் சென்றாலும் அணைவதில்லை” வஜ்ரபாகு சொன்னான். “நெய்ச்சட்டிகளை நேரடியாகவே ஏவும் முக்தயந்திரங்கள் நூறு இங்கே உள்ளன. மரத்தாலான சட்டிகளில் எரிநெய் நிறைத்து அவற்றை வானில் எறிந்து மறுபக்கமிருக்கும் குறுங்காட்டில் பரப்புவோம். எரியம்புகளும் சென்று விழும்போது காடே பற்றிக்கொள்ளும்.”
மறுபக்க வாயில் வழியாக விதுரன் கீழே இறங்கினான். கைவிடுபடைகள் முழுக்க புறாக்களின் எச்சம் பரவியிருந்தது. “இவற்றை தூய்மை செய்வதில்லையா?” என்றான். “தூய்மைசெய்வது சற்று கடினமான பணி அமைச்சரே. கைத்தவறுதலாக அம்புகள் எய்யப்பட்டால் உயிர்ப்பலி நிகழும். மறுபக்கம் கிழக்கு ரதசாலை. அங்கே எந்நேரமும் சாரிசாரியாக மக்கள் வந்துகொண்டிருக்கிறார்கள்” என்றான் வஜ்ரபாகு. “இரவில் செய்யலாமே” என்று விதுரன் கேட்டான். வஜ்ரபாகு ஒன்றும் சொல்லவில்லை.
மூன்று ஆள் உயரமான கனத்த மூங்கிலால் ஆன விற்கள் குவிக்கப்பட்டிருந்தன. “இவற்றை யார் எய்வது?” என்று விதுரன் கேட்டான். “இவை சங்கதனுக்கள். இருவர் பிடித்துக்கொள்ள மூவர் நாணேற்ற ஒருவர் அம்பைச்செலுத்துவார்…” விதுரன் “நம்மிடம் விஷ அம்புகள் உண்டா?” என்றான். “மூவகை விஷங்கள் உள்ளன. ஜீவம் அஜீவம் ரசாயனம் என அவை சொல்லப்படுகின்றன. ஜீவம் நாகரசத்தில் இருந்தும் தேள்விஷத்தில் இருந்தும் சிலவகை மீன்களில் இருந்தும் எடுக்கப்படுகிறது. அவை பெரிய குடுவைகளில் மூடப்பட்டு தெற்குத்திசை குளத்தின் நீராழத்தில் போடப்பட்டுள்ளன. அவற்றை எப்போதும் குளிராக வைத்திருக்கவேண்டும்” என்றான் வஜ்ரபாகு.
‘அஜீவ விஷங்கள் எண்வகைத் தாவரங்களில் இருந்து எடுக்கப்பட்டவை. அவை இங்கேயே ரசநிலையங்களில் புதைக்கப்பட்டுள்ளன. ரசாயனங்கள் பன்னிருவகை. அவை களஞ்சியத்தில் உள்ளன. அவற்றைக் கையாளும் நூறு விடகாரிகளின் குடும்பங்கள் இங்கே உள்ளன. நாகரசம் எடுப்பதற்காக அவர்கள் ஆயிரக்கணக்கான நாகங்களை வளர்க்கிறார்கள்.”
பெரிய மரமேடைகளில் தவம்செய்யும் அரக்கர்களைப்போல அமர்ந்திருந்த கைவிடுபடைகள் வழியாக விதுரன் நடந்தான். ‘கொலை கொலை கொலை’ என அவை தங்களுக்குள் சொல்லிக்கொண்டிருப்பதாகத் தோன்றியது. கோட்டைக்கு முன்னாலிருந்த முற்றத்துக்கு அப்பால் இரண்டடுக்கு மாளிகையாக ஆயுதசாலை இருந்தது. அதைத் திறக்கச்சொல்லி உள்ளே சென்றான்.
புழுதிபடிந்த பெருங்கூடம் நிறைய வாள்களும் வேல்களும் அடுக்கப்பட்டிருந்தன. துருப்பிடிக்காமலிருக்கும்பொருட்டு அவற்றின்மேல் பூசப்பட்டிருந்த ஊன்நெய் உறைந்து அழுகி சடலங்கள் அழுகிக்கொண்டிருப்பது போன்ற தீயநாற்றத்தை எழுப்பியது. “இவற்றை சாணைதீட்டவே ஒரு மாதத்துக்கும் மேலாக ஆகிவிடும் போலிருக்கிறதே” என்றான் விதுரன். “இல்லை அமைச்சரே, ஆயுதங்களை சாணைதீட்டுவதைப்போல வீரர்களை உவகைகொள்ளச் செய்யும் பிறிதொன்றில்லை. ஒரேநாளில் அவர்கள் இவையனைத்தையும் கூராக்கிவிடுவார்கள்.”
விதுரன் கோட்டை வாயிலை நோக்கி நின்ற காவல்கோபுரத்தில் ஏறி அதன் விளிம்பில் நின்று அந்த கொலைக்கருவிகளை நோக்கினான். பல்லாயிரம்பேரைக் கொல்லும் வல்லமை கொண்டவை. பல்லாயிரம் நிகழாக்கொலைகள் தங்கள் கணம் காத்துக் கனிந்திருக்கின்றன. வெயிலில் அவற்றின் கூர்நுனிகள் நீர்த்துளிகள் போல மின்னிக்கொண்டிருந்தன. சில கணங்களில் அந்த ஒளியைத்தவிர அங்கே எதுவுமில்லை என்று தோன்றியது.
மீண்டும் தன் ரதத்தில் விதுரன் ஏறிக்கொண்டபோது வஜ்ரபாகு “அமைச்சரே, நான் வினவுவது பிழை எனில் பொறுத்தருளவேண்டும்” என்றான். “போர் வருகிறதென நான் நம்பலாமா?”
விதுரன் “போர் வந்துதானே ஆகவேண்டும்? இத்தனை ஆயுதங்களுக்கும் உரிய தேவதைகள் வானிலிருந்து வேண்டிக்கொள்வது அதைத்தானே?” என்றான். “ஆம், உண்மை” என்றான் வஜ்ரபாகு. “அத்துடன் இத்தனை ஆயுதங்கள்மேலும் படிந்திருக்கும் தூசியையும் களிம்பையும் நாம் நீக்கவேண்டுமல்லவா?” என்று சிரித்தபின் விதுரன் ரதம் நகர கைகாட்டினான்.
விதுரன் புஷ்பகோஷ்டத்துக்குச் சென்றபோது அங்கே வாசலிலேயே அம்பிகையின் ஏவலன் விப்ரன் நின்றிருந்தான். அவனை நோக்கி ஓடிவந்து, “அரசி பத்துமுறைக்கும் மேல் தங்களை அழைத்துவரச்சொன்னார்… நான் தங்களைத் தேடினேன். தங்களைத் தேடுவது பேரரசிக்குத் தெரியக்கூடாதென்பதனால் நான் வெளியே எவரிடமும் சொல்லவும் முடியவில்லை” என்றான். “ஏன்?” என்று விதுரன் கேட்டான். விப்ரன் “சினம்தான்…காரணத்தை நான் அறியேன்” என்றான்.
விதுரன் அரண்மனை முகமண்டபத்துக்குள் சென்றதும் அவன் வருகையை உப்பரிகையிலிருந்து பார்த்துவிட்டிருந்த அம்பிகை மூச்சிரைக்க இறங்கி வந்தாள். “நீ எங்கே சென்றாய்? அம்பாலிகையைப் பார்க்கத்தானே?” என்றாள். விதுரன் “இல்லை அரசி…. நான் கோட்டைக்காவலைப் பார்க்கச்சென்றிருந்தேன்” என்றான். “இல்லை. நீ பொய் சொல்கிறாய்…நீ அம்பாலிகையைப் பார்த்தாய்.” விதுரன் “நான் பார்த்தது உண்மை, அது நேற்றுமாலை” என்றான்.
அம்பிகை சினத்துடன் “அவளை நீ ஏன் பார்க்கவேண்டும்? அப்படியென்றால் நீ அவளுக்கா உதவிசெய்கிறாய்?” என்றாள். “அரசி, நான் பேரரசியிடம் பணியாற்றுகிறேன். நான் எவருக்கும் ஆதரவானவனோ எதிரானவனோ அல்ல” என்றான் விதுரன்.
“இந்தப் பொய்ப்பேச்செல்லாம் என்னிடம் தேவையில்லை. நீ ஆதரிப்பது அவள் மைந்தனையா என் மைந்தனையா? யாரை அரசனாக எண்ணுகிறாய்?” என்று அம்பிகை உரக்கக் கேட்டாள். விதுரன் திடமாக “அரசி, இப்போது அஸ்தினபுரி பேரரசி சத்யவதியால் ஆளப்படுகிறது. முடிவெடுக்க வேண்டியவர் அவர். நான் அதற்கு முற்றிலும் கட்டுப்பட்டவன்” என்றான்.
அவன் உறுதி அவளைத் தணியச்செய்தது. “உனக்கு செய்தி தெரியுமா? காந்தார நாட்டுக்கு பீஷ்மர் செல்லப்போவதில்லையாம். பலபத்ரரைத்தான் அனுப்புகிறாராம். அதாவது காந்தாரத்து இளவரசியை என் மைந்தனுக்கு மணமுடிப்பதில் அவருக்கு உடன்பாடில்லை. பேரரசி சொன்னதனால் செய்கிறார்” என்றாள். “இந்த நாட்டின் எதிர்காலம் காந்தாரத்துடன் உள்ள மண உறவில் உள்ளது. அதற்காக பீஷ்மர் செல்லாவிட்டால் என்ன பொருள் அதற்கு?”
“அச்செய்தியை நான் இப்போதுதான் அறிகிறேன் அரசி… நான் அதைப்பற்றி அவரிடம் பேசுகிறேன்” என்றான் விதுரன். “அரசர் ஆதுரசாலை விட்டு வந்துவிட்டாரா?” அம்பிகை “வந்துவிட்டான். இசைச்சாலையில் இருக்கிறான்” என்றாள். விதுரன் நடந்தபோது பின்னால் வந்தபடி “பீஷ்மர் செல்லவில்லை என்றால் நானே செல்வேன். சௌபாலனான சகுனியிடம் நானே பேசுவேன்… இல்லை நானே ஓலைகொடுத்தனுப்புவேன்” என்றாள்.
“அந்தப்புரச்சேடிகள் சொல்லும் ஆலோசனைகளின்படி நாடாளமுடியாது அரசி” என்றான் விதுரன். “சகுனியும் அதை அறிந்திருப்பார். தாங்கள் இன்று இவ்வரசின் எந்தப் பொறுப்பிலும் இல்லை. தங்கள் சொல்லுக்கு அரசுமதிப்பு என ஏதுமில்லை.”
அம்பிகை அவன் தோளைப்பிடித்து நிறுத்தி “என் எல்லை என்ன என்று எனக்குத்தெரியும். என் வல்லமை என்ன என்றும் தெரியும்… என் வலிமையென்ன என்றால் இந்நாட்டின் மூத்த இளவரசரின் அன்னை என்பதுதான். நான் சொன்னால் அவன் கேட்பான் என்பது அனைவருக்கும் தெரியும். சகுனியிடம் நான் என் தூதனை அனுப்புகிறேன். அவனிடம் நான் ஓர் உடன்படிக்கை செய்கிறேன். அஸ்தினபுரியின் அரசை என் மகன் முழுமையாகக் கைப்பற்ற சகுனி தன் படைகளை அளிப்பானென்றால் அவன் தமக்கையை மணம்கொண்டு அவன்நாட்டின் சமந்தநாடாக அஸ்தினபுரியை அறிவித்து திருதராஷ்டிரன் ஆட்சி செய்வான்.”
விதுரன் திகைத்து நின்றுவிட்டான். “அரசி, இது அநீதி. அஸ்தினபுரி ஒருபோதும் கப்பம் கட்டியதில்லை. புரூரவஸின் காலம் முதல் இது பிறரை ஆளும் நகராகவே இருந்திருக்கிறது” என்றான். “அதைப்பற்றி நான் கவலைகொள்ளவில்லை. இந்நாடு என் மைந்தனுக்குரியது. அதை எக்காரணம்கொண்டும் நான் இழக்கப்போவதில்லை. சமந்தநாடாக கப்பம் கட்டினால் என்ன? அவன் மணக்கும் அரசியின் தம்பிக்குத்தானே அந்தக் கப்பம் செல்கிறது? அஸ்தினபுரியை காப்பதற்கான ஊதியம் அது என்று கொண்டால்போதும்.”
அவளுடைய முகத்தைப்பார்த்தபோது விதுரனுக்கு அச்சமாக இருந்தது. இவர்களுக்கெல்லாம் என்ன ஆகிறது என்று எண்ணிக்கொண்டான். அதை அறிந்தவள்போல அம்பிகை “என் வாழ்க்கையில் நான் அடைந்த ஒரே நலம் என் மைந்தன் மட்டுமே. அவன் அரியணை ஏறினானென்றால் என் வாழ்க்கைக்கு ஏதேனும் பொருள் உண்டு என்று கொள்வேன். இல்லையேல் நான் பாலையில் வழிதவறி உலர்ந்த ஒரு ஆறுதான்… அவனுக்கு விழியில்லை. அவனால் பிறர் உதவியின்றி ஆளமுடியாது. ஆனால் காந்தார இளவரசியின் வயிற்றில் ஒருகுழந்தை பிறந்து அவன் மாவீரனாக வந்தால் அவன் அஸ்தினபுரியை மீண்டும் பேரரசாக ஆக்கமுடியும்…”
“அனைத்தையும் சிந்தித்துவிட்டீர்கள் அரசி. ஆனால் ஒன்றை விட்டுவிட்டீர்கள். பீஷ்மரின் இச்சைப்படி அன்றி இங்கு ஏதும் நிகழாது” என்றான் விதுரன். “அதையும் சிந்தித்துவிட்டேன். காந்தாரம் படைகொண்டுவரட்டும். என் மைந்தனின் ஆதரவுப்படைகளும் இணைந்துகொள்ளும். பீஷ்மரையும் சத்யவதியையும் சிறையில் தள்ளிவிட்டு என் மகன் அரசேற்கட்டும்.”
விதுரன் புன்னகை செய்துவிட்டான். அம்பிகை “உன் புன்னகைக்கு என்னபொருள் என்று எனக்குத்தெரிகிறது. அரசை இழந்துவிட்டு அரண்மனையில் வாழ்வதைவிட என் மைந்தன் போரில் இறப்பதையே நான் விரும்புவேன்” என்றாள்.
“இறப்பைப்பற்றிப் பேசுமளவுக்கு இங்கே என்ன நிகழ்ந்துவிட்டது? பீஷ்மபிதாமகரிடம் நான் தங்கள் விருப்பைத் தெரிவிக்கிறேன். நானறிந்தவரை அவர் உங்கள் மைந்தர் காந்தார இளவரசியை வென்று அரசாள்வதையே இன்றுவரை விரும்புகிறார்” என்றான் விதுரன்.
“அப்படியென்றால அதை அவரே செய்யும்படி நீயே சென்று சொல்” என்றாள் அம்பிகை. “நான் நேற்றே காந்தார இளவரசியைப்பற்றி விசாரித்தேன். அனைத்துத் தகுதிகளும் கொண்டவள். வாளும் வேலும் யானையும் குதிரையும் கற்றவள். என்னைப்போல அந்தப்புரப்பெண் அல்ல. நாடாளும் கலையறிந்தவள். அவள் வந்தபின் சத்யவதி இன்றுபோல ஆதிக்கம் செலுத்த முடியாது. என் மைந்தனுக்கு அவளும் இவ்வரியணையும் வேண்டும்…”
“நான் அரசரிடம் சில சொற்கள் பேசலாமென்று வந்தேன்” விதுரன் சொன்னான். “ஆதுரசாலைக்கு கூட்டிச்செல்லச் சொல்கிறேன். அவனிடம் என் திட்டங்களைச் சொல்லிவிட்டேன்” என்றாள் அம்பிகை.