அன்புடையீர் நல்வரவு ,

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,
தேவாங்கர்களாகிய நாம் அனைவரும் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்து வந்தாலும் தேவாங்கர் என்னும் உணர்வு நம்மை ஓன்று சேர்க்கிறது. மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்ற வாக்கிற்கு இணங்க காலத்திற்கு ஏற்ப நாம் நமது குல நிகழ்வுகளை தகுந்த தொழில்நுட்பத்தை கொண்டு பதிவு செய்வது அவசியமான ஓன்று.

இந்த புதியபக்கம் நமது தேவாங்க சமூக செய்திகள்,சடங்குகள்,வரலாறு & அண்மை நிகழ்ச்சிகளை அறிந்துகொள்ளவும் தேவைப்படும் போது பார்க்கவும் உருவாக்கப் பட்டுள்ளது.
உறவுகள் தங்கள் பகுதியில் உள்ள கோவில்&குல தெய்வம் கோவில்களில் நடைபெறும் திருவிழா நிகழ்ச்சிகள் மற்றும் படங்களை இடம்பெற செய்யவும்.

தங்கள் கருத்துக்கள் இந்த தளத்தை மேன்படுத்த உதவும் ஆகயால் தயவுசெய்து கருத்திடவும் . ( தமிழில் கருத்திட தமிழ் எழுதியை பயன்படுத்தவும்)

நன்றி.

1/21/14

பகுதி நான்கு : அணையாச்சிதை [ 1 ]

‘சூதரே! மாகதரே! கேளுங்கள், விண்ணக மின்னல் ஒன்று மண்ணில் எரிந்தோடியதை நான் கண்டேன். பாதாளத்தின் நெருப்பாறொன்று பொங்கிப்பெருகிச்செல்வதை நான் கண்டேன். பாய்கலைப்பாவை புறங்காட்டில் நின்றதைக் கண்டவன் நான்! படுகளக்காளி மலைச்சரிவில் எழுந்ததைக் கண்டவன் நான்! எரிகண்ணுடைய திரயம்பிகை, வெண்பல் நகை அணிந்த சாமுண்டி, முழவென ஒலிக்கும் கங்காளி! சண்டி, பிரசண்டி, திரிதண்டி! அண்டங்களை அழிக்கும் அம்பிகை! நான் கண்டேன், ஆம் நான் கண்டேன்’
நூற்றாண்டுகளாக சூதர்கள் அதைப்பாடினர். காலகாலங்களுக்கு அப்பால் என்றோ செம்மண்கலந்த சாணி மெழுகி, சக்கரக்கோலமிட்டு, மேருபீடத்தில் நவகாளியன்னையரை அமைத்து, ஊன்பலிகொடுத்து கொண்டாடும் விழவு ஒன்றில் முள்ளிருக்கையில் அமர்ந்து, முன்னும் பின்னும் ஆடி முழவைமீட்டி, பாடிக்கொண்டிருந்த சூதர்களில் வெறியாட்டெழுந்தது. எழுந்து கைநீட்டி கூந்தல்கற்றைகள் சுழன்று மார்பிலும் தோளிலும் தெறிக்க, விழிவெறிக்க, மதகரியின் முழக்கமென குருதியுண்ட சிம்மம் என வெறிக்குரலெழுப்பி அந்தக்கதையைப் பாடினர்.
‘சைலஜை, பிரம்மை, சந்திரகந்தை, கூஷ்மாண்டை, ஸ்கந்தை, கார்த்யாயினி, காலராத்ரி, சித்திதாத்ரி, மகாகௌரி! ஓருருவம் ஒன்பதாவதைக் கண்டேன்! ஒன்பதும் ஒருத்தியே எனத் தெளிந்தேன்.அம்பாதேவி! அழியாச் சினம் கொண்ட கொற்றவை! காலகாலக்கனல்! அன்னை! அன்னை! அன்னை!’ எனக் கூவி தாண்டவமாடினர். அங்கே அமர்ந்திருந்தவர்கள் கைகூப்பி ‘அவள் வாழ்க! எங்கள் சிரம் மீது அவள் பொற்பாதங்கள் அமர்க!’ என்று கூவினர்.
அரண்மனை கதவைத் திறந்து வெளியே சென்ற அம்பை விரிந்து பறந்த கூந்தலும் கலைந்து சரிந்த ஆடையும் வெறியெழுந்து விரிந்த சிவந்த கண்களும் கொண்டிருந்தாள். குறுவாட்கள் என பத்து கைவிரல்களும் விரிந்திருக்க, சினம்கொண்ட பிடியானை போல மண்ணில் காலதிர நடந்தபோது அரண்மனைச்சேவகர் அஞ்சி சிதறியோடினர். காவல் வீரர்கள் வாட்களையும் வேல்களையும் வீசிவிட்டு மண்ணில் விழுந்து வணங்கினர்.
VENMURASU_ EPI_17
ஓவியம்: ஷண்முகவேல்
[பெரிதுபடுத்த படத்தின்மீது சொடுக்கவும்]
சுழல்காற்றுபோல அவள் நகரத்துத் தெருவில் ஒடியபோது அஞ்சியலறிய குழந்தைகளை அள்ளியணைத்தபடி அன்னையர் இல்லத்து இருளுக்குள் பாய்ந்தோடினர். பசுக்கள் பதறி தொழுவங்களில் சுழன்றன. நாய்கள் பதுங்கி ஊளையிட்டன. நகரமெங்கும் யானைகள் கொந்தளித்தெழுந்து மத்தகங்களால் மரங்களை முட்டி பேரொலி எழுப்பின. கருக்குழந்தைகள் சுருண்டு குமிழியிட்டன. வீடுகளின் கதவுகள் மூடப்பட்டன. தெய்வங்களின் கருவறை தீபங்கள் கருகியணைந்தன.
எரிபோல நிலமுண்டு வான்பொசுக்கி அவள் சென்றவழியில் ஒரு மனிதர்கூட இருக்கவில்லை. நகரை அவள் நீங்கும்தருணம் எதிரே ஓடிவந்த முதியவள் ஒருத்தி முழங்காலுடைபட மண்ணில் விழுந்து இருகைகளையும் நீட்டி “அன்னையே! எங்கள் குலம்மீது உன் சாபம் விழலாகாது தாயே” என்று கூவினாள். “பெற்றபிள்ளைகளுடன் எங்கள் இல்லம் வாழவிடு காளீ.”
அம்பையின் வாயிலிருந்து நூறு சிம்மங்களின் உறுமல் எழுந்தது. முதியவள் அஞ்சி மெய்சிலிர்த்து அப்படியே மண்ணில் சரிந்தாள். அவள் சென்றவழியில் நின்ற அத்தனை மரங்களும் பட்டுக்கருகின. அவளை அப்போது பார்த்தவர்களனைவரும் குருடாயினர். அவள் சென்ற வழியில் பின்னர் மனிதர்கள் காலடிவைக்கவில்லை.
சூதர்கள் பாடினர். அவள் நகரை நீங்கி புறங்காடுவழியாக சென்றாள்.அவளை அன்று கண்ட மிருகங்களும் பறவைகளும்கூட தலைமுறை தலைமுறையாக அவளை நினைத்திருந்தன. அங்குள்ள அத்தனை உயிர்களும் ‘மா!’என்ற ஒலியைமட்டுமே எழுப்பின. பின்னர் கவிஞர் அதை மாத்ருவனம் என்று அழைத்தனர். பெண்குழந்தைகளை அங்கு கொண்டுவந்து அங்கே சுழித்தோடும் பாஹுதா என்னும் செந்நீர் ஆற்றில் மூழ்கச்செய்து முடிகளைந்து முதல்காதணி அணிவிக்கலாயினர். அங்கே அன்னைக்குக் கோயில்கள் இல்லை, அந்த வனமே ஒரு கருவறை என்றனர் நிமித்திகர்.
அம்பை சென்றதை அகக்கண்ணால் கண்டனர் சூதர்கள். காட்டை ஊடுருவி செல்லச்செல்ல முள்ளில் கிழிந்து, கிளைகளில் தொடுத்து அவளுடலில் இருந்து உடைகள் விலகின. பொற்சருமம் எங்கும் முட்கள் கிழித்த குருதிக்கோடுகள் விழுந்தன. அவற்றின் மீது புழுதிப்படலம் படிந்தது. கூந்தலெங்கும் மண்ணும் சருகுகளும் பரவின. இரவும் பகலும் அந்தியும் மாலையும் சென்று மறைய அவள் சென்றுகொண்டிருந்தாள். அவள் உடல்தீண்டிய காட்டு இலைகள் கருகிச்சுருண்டன.
காலைக்குளிர் உறைந்து சொட்டுவதுபோன்ற மலையருவியில் சென்று அவள் நின்றாள். அவளுடல் பட்டதும் அருவியில் நீராவி எழுந்து மேகமாகியது. மலைச்சரிவின் வானம் சுழித்த பொழில்களில் அவளிறங்கினாள். அவை கொதித்துக்குமிழியிட்டன. ஆங்காரம்கொண்டு மலைப்பாறைகளை ஓங்கி அறைந்தாள். அவை உடைந்து சரிந்தன. ஆலமர விழுதுகள் அவளைக்கண்டு அஞ்சி நெளிந்தாடின. மதவேழங்கள் மத்தகம் தாழ்த்தி மண்ணில் கொம்பிறக்கின. ஊன்வாய் சிம்மங்கள் பதுங்கிக் கண்களை மூடிக்கொண்டன.
அவளுடைய உடல்வற்றிச்சிறுத்தது. சருமம் சுருங்கிக் கறுத்தது. பதினெட்டாம் நாள் ஹ்ருஸ்வகிரி என்னும் மலையின் விளிம்பில் ஏறிநின்று ஒரு பிடாரி தொலைதூரத்தில் வசுக்கள் உருவிபோட்ட வைரமோதிரம்போல கிடந்த அஸ்தினபுரியைப்பார்த்தது. அதன் கரிய வாயில் இருந்து காடதிரும் பெருங்குரல் வெளிவந்து மதம்பொழிந்த யானைகளை நடுங்கச்செய்தது.‘சொல்லெனும் தீ!பழியெனும் தீ!ஆலகாலம் அஞ்சும் பெண்ணெனும் பெருந்தீ!’ பாடினர் சூதர்.
அவளைப்பற்றிய கதைகள் ஜனபதங்களெங்கும் பரவின. அவள் வனம்சென்று தவத்தில் ஆழ்ந்திருந்த பரசுராமனின் முன்னால் தன் கையால் ஓங்கியறைந்து எழுப்பி முறையிட்டாள் என்றனர். ‘ஊழியூழியெனப்பிறக்கும் அத்தனைபெண்களும் நின்றெரிந்த அந்த விஷக்கணத்தை வெல்லவேண்டும் நான். என் கையில் பீஷ்மனின் வெங்குருதி வழியவேண்டும். அவன் பிடர்தலை என் காலடியில் விழவேண்டும்’ என்றாள்.
’ஆம், இன்றே, இப்போதே’ என பரசுராமன் மழுவுடன் எழுந்தார். குருஷேத்ரப்போர்க்களத்தில் பீஷ்மரை அவர் எதிர்கொண்டார். மூன்று வாரங்கள் விண்ணிலும் மண்ணிலும் நடந்தபோரில் இருவரும் வெல்லவில்லை. பூமி அதிர்வதைக் கண்ட நாரதர் வந்திறங்கி ‘பரசுராமா, அவன் அன்னை கங்கைக்கு பிரம்மன் அளித்த வரம் உள்ளது. அவனைக்கொல்ல அவனால் மட்டுமே முடியும்’ என்றார். மழுதாழ்த்தி பரசுராமன் திரும்பிச்சென்றார்.
எரியெழுந்த நெஞ்சுடன் அவள் யமுனைக்கரைக்குச் சென்று அதன் நீரடியில் கிடந்து தவம்செய்தாள். ஒற்றைக்கால்விரலில் நின்று உண்ணாமல் உறங்காமல் தவம்செய்தாள். பீஷ்மனைக்கொல்லும் வரம் கேட்டு மும்மூர்த்திகளின் வாசல்களையும் முட்டினாள். அவள் உருகியழியும் கணத்தில் தோன்றிய கங்கை அன்னை ‘பீஷ்மனைக்கொல்ல உன்னால் இயலாது அம்பை. அவன் என் வரத்தால் காக்கப்படுபவன்’ என்றாள்.
‘அவ்வரத்தை வெல்வேன்’ என்று அம்பை தன் நுனிவிரலால் காட்டை எரித்து ஐந்துதிசை நெருப்புக்கு நடுவே நின்று தவம் செய்தாள். அவளைச்சுற்றி கரும்பாறைகள் உருகிவழிந்தன. செந்நெருப்பு நடுவே வெள்ளெலும்புருவாக நின்றாள். அவள் தவம் கண்டு இறங்கிவந்த சிவனிடம் தன் ஆறாநெஞ்சில் ஓங்கி அறைந்து அவள் கேட்டாள். ‘கருப்பை ஈன்று மண்ணுக்கு வரும் ஒவ்வொரு ஆண்மகனும் வணங்கியாகவேண்டிய பெண்மையின் அருங்கணம் ஒன்று உள்ளது. அதை அவமதித்தவனை நான் பலிகொண்டாகவேண்டும். திருமகளின் மணிமுடியை மிதித்தவன் கொற்றவையின் கழல்நெருப்பில் எரிந்தாகவேண்டும். ஆணை! ஆணை!ஆணை!’
‘அவ்வண்ணமே ஆகுக! அது என்றும் வாழ்வின் விதியாகுக!’ என்று சிவன் வரம் கொடுத்தார். ‘உன் கனலை முற்றிலும் பெறுபவன் எவனோ அவனால் பீஷ்மன் கொல்லப்படுவான்’ என்றார்.உச்சிமலை ஏறி பெருஞ்சுடராக எரிந்தெழுந்து அவள் ஆர்ப்பரித்தாள். தொலைதூர நகர்களெங்கும் அந்நெருப்பு தெரிந்தது என்றனர் பெயர்த்தியரை மடியிலிட்டு கதை சொல்லிய மூதன்னையர்.
அவள் நெஞ்சக்கனல் கெடுவதற்காக குளிர்விழியன்னை மீனாட்சியின் கோயில்களில் பெண்கள் நோன்பிருந்தனர். அவள் மூதன்னையர் வந்து அவளை ஏற்றுக்கொள்ளவேண்டுமென்று முக்கண் முதல்வன் ஆலயத்தில் குலமூத்தவர் வழிபாடுகள் செய்தனர் என்றனர் சூதர்.
உடலே சிதையாக ஆன்மா எரிய அம்பை அங்கிருந்த மலைமீதேறிச் சென்றாள். அங்கே சிறுகடம்பவனமொன்றுக்குள் கைவேலுடன் நின்றிருந்த குழந்தைமுருகனின் சிலையைக் கண்டதும் அவள் முகம் கனிந்தது. உடலெங்கும் நாணேறியிருந்த நரம்புகள் அவிழ்ந்தன. முழந்தாளிட்டு அந்த முருகனின் கரியசிலையை மார்போடணைத்துக்கொண்டதும் அவள் முலைகள் கனிந்து ஊறின. அவன் முகத்தை நோக்கியபடி காலமின்றி உடலின்றி மனமின்றி அவள் அமர்ந்திருந்தாள். பின்பு விழித்தெழுந்து அச்சிலையில் எவரோ மலைக்குடிகள் போட்டுச்சென்றிருந்த செங்காந்தள் மாலையொன்றை கையில் எடுத்துக்கொண்டாள்.
மலையிலிறங்கிய காட்டாறு என அவள் சென்றுகொண்டே இருந்தபோது பிறைநிலவுகள் போல வெண் கோரைப்பற்களும் மதமெரிந்த சிறுவிழிகளும் செண்பகமலர்போல சிறிய காதுகளும் கொண்ட பன்றிமுகத்துடன், புல்முளைத்த கரும்பாறைபோன்ற மாபெரும் மேனியுடன் வராஹி தேவி அவள் முன் வந்து நின்றாள். அவர்களின் கண்கள் சந்தித்துக்கொண்டன. வராஹியின் உறுமலுக்கு அம்பை உறுமலால் பதிலளித்தாள். ‘ஆம் ஆம் ஆம்’ என்றது மரங்களிலோடிய காற்று.
மூன்றுமாதம் கழித்து சிம்மப்பிடரியும், பன்றிமுகமும், தீவிழிகளுமாக கையில்குருதிநிறம் கொண்ட காந்தள்மாலையுடன் அவள் கேகயமன்னனின் கோட்டைவாசலில் வந்து நின்றாள். அவளைக்கண்டு அஞ்சிய காவலர்கள் கோட்டைச்சுவரை மூடிக்கொண்டனர். கோட்டையின் கதவின்மேல் ஓங்கியறைந்து அவள் குரலெழுப்பினாள். “என் கண்ணீரைக் காண வாருங்கள் ஷத்ரியர்களே! என் நிறைகாக்க எழுந்துவாருங்கள்!” கரியகைகளைத் தூக்கி விரிசடை சுழலக் கூவினாள் “என்பொருட்டு பீஷ்மனின் மார்பை மிதித்து அவன் சிரத்தைக் கொய்தெடுக்கும் வீரன் உங்களில் எவன்?”
அவள் குரலைக்கேட்ட கேகயன் அரண்மனைக்குள் அஞ்சி ஒடுங்கிக்கொண்டான். படைகள் ஆயுதங்களுடன் தலை கவிழ்ந்து நின்றன. குலமூத்தோர் உள்ளறைகளுக்குள் பெருமூச்சுவிட்டனர். “உங்கள் விளைநிலங்களில் இனி உப்பு பாரிக்கும். உங்கள் களஞ்சியங்களில் ஒட்டடை நிறையும். உங்கள் தொட்டில்களில் காற்று இருந்து ஆடும்…வருக! எழுந்து வருக!” என்று ஓலமிட்டாள்.
மாகதனின் கோட்டைமுன் அவள் சென்று அந்த செங்காந்தள் மாலையை நீட்டியபோது அவன் தொழுத கைகளுடன் வந்து நின்று “இளவரசி, என்னையும் என் மக்களையும் காத்தருளுங்கள். என் சின்னஞ்சிறிய தேசம் பீஷ்மரின் கோபத்தைத் தாங்காது” என்றான். கண்கள் எரிய, பற்கள் தெரிய ஓசையிட்டுச் சிரித்து அவள் திரும்பிச்சென்றாள். சேதிநாட்டு மன்னன் அவள் வருவதைக்கண்டு கோட்டையை அடைக்கச்சொல்லி நகரைவிட்டே சென்றான். அவள் வரும் செய்தி ஷத்ரியர்களின் பிடரியைக் குளிரச்செய்தது. அத்தனை ஷத்ரியர்களின் வாசல்களிலும் அவள் நின்று அறைகூவினாள். ’என் அடிவயிற்று வேகத்துக்கு கதி சொல்லுங்கள். என் கொங்கைநெருப்புக்கு நீதி சொல்லுங்கள்’
உத்தரபாஞ்சாலநாட்டில் சத்ராவதி மாநகரின் புறங்கோட்டை வாசலில் அவள் குரல் எழுந்தபோது அமைச்சரின் ஆணைப்படி கோட்டைவாசல் மூடப்பட்டது. மந்திரசாலையில் தளபதிகளுடனிருந்த பாஞ்சாலமன்னன் சோமகசேனன் சிம்மத்திலேறிய துர்க்கை போல காற்றிலேறிவந்த அவளுடைய இடிக்குரலை கேட்டுக்கொண்டிருந்தான். ஒருகணத்தில் உடைவாளை உருவிக்கொண்டு “இனி பொறுக்கமாட்டேன் அமைச்சரே, இதோ இதற்காக உயிர்துறக்கவே நான் படைக்கப்பட்டிருக்கிறேன்…” என்று எழுந்தான்.
“அரசே, ஐந்து குழந்தைகள் கொண்டவர்களே வீட்டை பூட்டிக்கொண்டிருக்கிறார்கள். ஐந்துலட்சம் குழந்தைகளின் தந்தை நீங்கள்” என்றார் அமைச்சர் பார்கவர். “இப்பழியை பீஷ்மர் ஒருநாளும் பொறுக்கப்போவதில்லை. அஸ்தினபுரமெனும் யானையின் காலடியில் நாம் வெறும் குழிமுயல்கள்.”
“இன்று நின்றுவிட்டால் இனி ஒருநாளும் என் தந்தையை நான் நினைக்கமுடியாது அமைச்சரே” என்றான் சோமகசேனன். “இக்கணத்தில் மடியாமல் எப்படி இறந்தாலும் எனக்கு நரகம்தான்.”
”அரசே, வீரமரணம் ஷத்ரியர்களின் விதி. ஆனால் தேசம் களத்தில் அழிய நெறிநூல்கள் விதிசொல்லவில்லை. என் குலக்கடமை உங்களிடமல்ல, இந்தநாட்டு மக்களிடம்..” என்று பார்கவர் அவன் வழியை மறித்தார். “இதனால் உங்களுக்கு புகழ்வரப்போவதில்லை. தங்கள் குடியையும் குலத்தையும் அழித்தவர் என உங்களை உங்கள் மக்கள் பழிசொல்வார்கள். தலைமுறைகளுக்கு சொல்லிவைப்பார்கள். தனியொரு பழிக்காக தேசம் அழியலாகாது என்பதே அரசநீதி.”
“அமாத்யரே, தர்மம் தவறிய மன்னன் ஆளும் நாடு எப்படி இருக்கும்?” என்றான் பாஞ்சாலன். “அங்கே நடுப்பகலில் நரியோடும். வீட்டுமுற்றத்தில் வெள்ளெருக்கு வளரும். உள்ளறையில் சேடன் குடிபுகுவான் என்று சொல்கின்றன நூல்கள். நான் தர்மம் தவறினால் என் நாடு எப்படி வாழும்? பஞ்சத்திலழிவதைவிட அது நீதிக்காக அழியட்டும்…” என்ற பாஞ்சாலன் வாளை எடுத்துக்கொண்டான்.
”கிளம்புங்கள் வீரர்களே, நான்கு அக்குரோணிகளையும் ஷீரபதம் வழியாக நாளை இரவுக்குள் அஸ்தினபுரத்துக்குக் கொண்டு போவோம்… நம்முடைய படைகளை நான் பீதவனம் வழியாகக் கொண்டுபோகிறேன்… சொன்னதெல்லாம் நினைவிருக்கட்டும்…” என்று ஆணையிட்டபடி கவசங்களணிந்து பாஞ்சாலன் கிளம்பினான். அவனுடைய தளபதிகள் வாளும் கேடயமுமாக எழுந்தனர்.
“அரசே…இந்த மண்ணை அழிக்கவேண்டாம்……மக்களுக்காக நான் உங்கள் காலில் விழுகிறேன்” என்றார் பார்கவர். “தளகர்த்தர்களே, உங்கள் இச்சைப்படி செய்யலாம்…படைகளும் தேவையில்லை. நான் மட்டுமே சென்று களம்படுகிறேன்” என்றான் பாஞ்சாலன்.
“அரசே, எங்கள் குலமூதாதையர் அனைவரும் செருகளத்தில் வீழ்ந்தவர்கள். இங்கே நாங்கள் மடிந்துவிழுந்தால் அவர்கள் ஆனந்தக்கண்ணீர் வடிப்பார்கள். ஆணைக்கேற்ப அரண்மனையில் நாங்கள் இருந்தோமென்றால் ஆயிரம் பிறவிகளில் அக்கடனை தீர்க்கவேண்டியிருக்கும்” என்றனர் அவர்கள்.
நகர்த்தெருவில் மன்னனின் படைகள் இறங்கியதும் மூடிக்கிடந்த கதவுகள் அனைத்தும் ஒரேகணம் வெடித்துத் திறந்தன. பெருங்குரலெழுப்பியபடி மக்கள் ஓடிவந்து திண்ணைகளிலும் பலகணிகளிலும் திரண்டு வாழ்த்தி மலர்தூவினர். ‘எரியட்டும் பாஞ்சாலம்…பத்தினிக்காக எங்கள் தலைமுறைகளும் அழியட்டும்….’ என அவர்கள் முழங்கினர். கண்ணீருடன் வாளைத்தூக்கி ஆட்டியபடி நடந்த பாஞ்சாலன் கோட்டையைத் திறந்து வெளியே வந்தான்.
வெளியே நின்றிருந்த அம்பையின் கோலம் கண்டு அதிர்ந்து சொல்லிழந்து முழந்தாளிட்டுப் பணிந்தது அவன் படை. “அன்னையே இதோ என் உடைவாள்! இதோ என் சிரம்! ஒருபெண்ணின் நிறைகாக்க ஒருதேசமே அழியலாமென்றிருந்தேன். ஓருலகமே அழியலாமென இன்றறிந்தேன். உன் காலில் என் குலமும் குடியும் நாடும் வாரிசுகளும் இதோ அர்ப்பணம்” என்றான்.
சன்னதம் கொண்டு சிதைநெருப்பென நின்றாடிய அம்பை மெல்லத்தணிந்தாள். அவள் இடக்கை மேலே எழுந்து அவனுக்கு ஆசியளித்தது. அந்தச் செங்காந்தள் மாலையை அவன் கோட்டைவாசல் மேல் அணிவித்துவிட்டு அவள் திரும்பி நடந்து காட்டுக்குள் மறைந்தாள்.
அம்பை நகர் நீங்கிய செய்திகேட்டு ஆதுரசாலை விட்டு ஓடிவந்த விசித்திரவீரியன் படைகளுடன் அப்போதே காட்டுக்குள் சென்று அம்பையைத்தேட ஆரம்பித்தான் என்றனர் சூதர். அஸ்தினபுரியின் மூன்று படைப்பிரிவுகள் தளகர்த்தர்கள் உக்ரசேனன்,சத்ருஞ்சயன்,வியாஹ்ரதந்தன் தலைமையில் அவனை தொடர்ந்து சென்றன.தப்தவனத்தையும் தசவனத்தையும் கண்டகவனத்தையும் காலகவனத்தையும் அவர்கள் துழாவினர். நூறுநாட்கள் அவர்கள் மலைச்சரிவுகளிலும் வனச்செறிவுகளிலும் அவளுக்காக குரல்கொடுத்து அலைந்தனர். ’இளவரசி’ என அவர்கள் மலைச்சரிவுதோறும் முழங்கிய குரலை காடு வன்மத்துடன் வாங்கி தன் இருளுக்குள் வைத்துக்கொண்டது.
விசித்திரவீரியனின் உடல் களைத்துத் துவண்டது. அவன் பார்வை மங்கி கைகால்கள் நடுங்கத்தொடங்கின. காட்டுணவை அவன் வயிறு ஏற்கவில்லை. உக்ரசேனன் அவனை வணங்கி “அரசே, நீங்கள் அரண்மனைக்குத் திரும்புங்கள். இளவரசி இல்லாமல் இந்த வனம் விட்டு வரமாட்டேன் என நான் உறுதியளிக்கிறேன்” என்றான். “இது என் குலத்தின் கடன்…இங்கேயே நான் இறந்தால் என் தந்தை என்னை வாழ்த்துவார்” என்றான் விசித்திரவீரியன். என் சடலமும் இங்கே எரியட்டும்.”
நூறு நாட்களுக்குப்பின் மலைப்பாறை ஒன்றின் மீது அவர்கள் ஓய்வெடுக்கையில் குகைச்சிம்மத்தின் பேரொலி ஒன்றைக்கேட்டு அஞ்சி எழுந்து அம்புகளையும் விற்களையும் எடுத்துக்கொண்டார்கள். உக்ரசேனனும் சத்ருஞ்சயனும் வியாஹ்ரதந்தனும் அந்த ஒலிவந்த திசைநோக்கி எச்சரிக்கையுடன் நடக்க பின்னால் விசித்திரவீரியன் பாறைகளில் கால் வழுக்க நடந்தான். மலைமடிப்புகளில் எதிரொலி எழுப்பிய அந்த கர்ஜனையைக் கொண்டு அங்கிருப்பது ஒன்றல்ல நூறு சிம்மங்கள் என்று அவர்கள் எண்ணினர்.
பாறைகளின் நடுவே கவந்தனின் வாய் எனத் திறந்திருந்த இருட்குகை ஒன்றுக்குள் இருந்து அவ்வொலி எழுந்துகொண்டிருந்தது. ஆயுதங்களுடன் உள்ளே முதலில் நுழைந்த உக்ரசேனன் விதிர்த்து பின்னடைந்தான். சத்ருஞ்சயன் பெருங்குரலில் அலறினான். விசித்திரவீரியன் அவர்கள் இடைவெளி வழியாக உள்ளே பார்த்தபோது அங்கே பெரும்பிடாரியொன்று வெறும்கைகளால் சிம்மம் ஒன்றை கிழித்து உண்டுகொண்டிருப்பதைக் கண்டான். அது அம்பை என்றறிந்தான்.
விசித்திரவீரியனுடன் வந்த அனைவரும் எலிக்கூட்டம் போல பதறி ஓடி விலகிய போதும் கூப்பிய கைகளுடன் பதறா உடலுடன் அவன் அங்கேயே நின்றிருந்தான். கையில் ஊனுடன், உதிரம் வழியும் வாயுடன் அம்பை அவனை ஏறிட்டு நோக்கினாள். விசித்திரவீரியன் திடமான காலடிகளுடன் அவளை அணுகி, தன் உடைவாளை உருவி அவள் காலடியில் வைத்து மண்டியிட்டான். “அன்னையே, நான் விசித்திரவீரியன், அஸ்தினபுரியின் இளவரசன். என் குலம்செய்த பெரும்பிழைக்காக என்னை பலிகொள்ளுங்கள். என் நாட்டை பொறுத்தருளுங்கள்” என்று சொல்லி தலைதாழ்த்தினான்.
அவனை விட்டுச்சென்ற படைகள் திரும்பி ஓடிவந்து குகைவாயிலில் திகைத்து நின்றன. பாறை பிளக்கும் ஒலியுடன் உறுமியபடி தேவி எழுந்து நின்றாள். அவள் தெய்வ விழிகள் அவனைப் பார்த்தன. அவளுக்கு அப்பால் மதவிழிகளில் குவிந்த இருள் என நின்ற பெரும்பன்றி உறுமியது. கூப்பிய கரங்களுடன் தன் முன் கண்மூடி குனிந்து அமர்ந்திருந்த விசித்திரவீரியன் தலைமேல் தன் கருகித்தோலுரிந்த காலைத் தூக்கி வைத்தாள். கண்ணீர் வழிய நடுங்கியபடி விசித்திரவீரியன் அமர்ந்திருந்தான். அவனுடைய அலைகடல்மேல் குளிர்நிலவு உதித்தது. பின்னர் அவள் திரும்பி குகையிருளுக்குள் மறைந்தாள்.
அவள் கால்பட்ட இடங்களெல்லாம் கோயில்கள் எழுந்தன. அவள் வந்த கோட்டைவாயில்களில் விழித்த கண்களும் செந்நிற உடலுமாக வராஹிக்குமேல் ஆரோகணித்து காவல்தெய்வமாக அவள் நின்றிருந்தாள். அங்கத்திலும் வங்கத்திலும் கலிங்கத்திலும் வேசரத்திலும் அப்பால் திருவிடத்திலும் அவள் பாதங்களை ஜனபதங்கள் தலையிலணிந்தனர். சக்கரவர்த்திகுமாரிகள் குருதிபலிகொடுத்து அவள்முன் வணங்கி முதல் ஆயுதத்தை கையில் எடுத்தனர். வீரகுடிப்பெண்கள் அவள் பெயர்சொல்லி இடையில் காப்பு அணிந்தனர்.
பிறிதொரு காலத்தில் திருவிடதேசத்தில் நீலமலைச்சரிவில் ஒரு கிராமத்தில், கருக்கிருட்டு செறிந்து சூழ்ந்த அதிகாலைநேரத்தில், மாதிகையன்னையின் ஆலயமுகப்பில் கன்னங்கரிய உடலும் சுரிகுழலும் எரிவிழியும் கொண்ட முதுபாணன் துடிப்பறையை கொட்டி நிறுத்தினான். விழிநீர் வடிய புலிபதுங்கிச்செல்லும் தாளநடையில் பாடினான்.
‘பிறவிப் பெரும்பாதையைப் போன்ற அக்குகைக்குள் தேவி கருவறை புகும் ஆன்மா போல சென்று கொண்டிருந்தாள். அதன் சுவர்கள் உயிருள்ள குடல்கள் போல ஈரமும் வெம்மையுமாக நெளிந்தசைந்தன. அச்சுவர்களில் அவள் வண்ண ஓவியங்களைக் கண்டாள். பாயும் புலிகளும் விரையும் மான்களும் வந்தன. பறவைகளும் மீன்களும் வந்தன. போர்க்கோலம் கொண்ட மன்னர்களும் தீயால் திலகமிட்ட பெண்களும் வந்தனர். யோகத்திலமர்ந்த முனிவர்கள் வந்தனர். மலரிலமர்ந்த தேவர்களும் யாழுடன் கந்தர்வர்களும் வந்தனர். மும்மூர்த்திகளும் வந்தனர். பின்னர் காலதேவியின் சிகைமயிர்கள் என நெளியும் கருநாகங்கள் வந்தன. முடிவில்லாமல் அவை வந்தபடியே இருந்தன’

1/20/14

154 .மாண்டவ்ய மகரிஷி கோத்ரம்

சாளுவ மன்னன் பொக்கிஷத்தைக் கள்வர் சிலர் கொள்ளையிட்டனர். கொள்ளையரைத் துரத்திக்கொண்டு காவலர் சென்றனர். காவர்க்கு அஞ்சி ஓடிய கள்வர்கள் மாண்டவ்ய மகரிஷியின் ஆசிரமத்துனுள் நுழைந்தனர். காவலர் ஆசிரமத்தினுள் வந்து கள்வரைப் பிடித்தனர். களவு போன பொருட்களைக் கள்வர் ஆசிரமத்தினுள் போட்டு வைத்திருந்தனர். கள்வர்களும், களவு போன பொருள்களும் ஆசிரமத்துள் இருந்தமையால், யோகத்தில் ஆழ்ந்திருந்த முனிவரையும் கள்வன் எனக் காவலர் எண்ணி யோகநிலையிலிருந்த அவரையும், கள்வர்களையும் மன்னன்முன் கொண்டு சென்றனர் காவலர். விசாரணையில் முனிவர் வாய் பேசாது இருந்தார். கள்வர்களும்; பொருள்களும் ஆசிரமத்தினுள் இருந்ததைக் காவலர் மன்னனுக்கு அறிவித்தனர். அனைவரயும் கழுவில் ஏற்றுமாறு மன்னன் ஆணையிட்டான். 

அனைவரும் கழுவில் ஏற்றப்பட்டனர். யோகம் கலைந்து முனிவர் நினைவிற்கு வந்தபோது தாம் கழுவில் ஏற்றப்பட்டு இருப்பதை உணர்ந்தார். மீண்டும் யோகத்தினால் தம் உடம்பினைக் காற்றைப் போல் லேசானதாக மாற்றிக் கொண்டு முனிவர் கழுவில் இருந்தார். 

இந்நிலையில் தன் கணவர் மௌத்கல்யரைக் கூடையில் ஏந்திக்கொண்டு வந்தாள் நளாயினி. கூடை மாண்டவ்யரின் காலில் பட்டது. கழுவில் அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருந்த முனிவருக்கு இதனால் வருத்தம் ஏற்பட்டது. 

" இந்த இரவு விடிந்தவுடன் உன் மாங்கல்யம் அறக்கடவது " என முனிவர் சாபம் இட்டார். " விடிந்தால் தானே மாங்கல்யம் அறும்; விடியாமல் இருக்கக் கடவது, " என நளாயினி மரு சாபம் இட்டாள். 

இதனால் எந்தக் காரியங்களும் நிகழவில்லை. தேவ காரியங்கள் தடைபட்டன. திரிமூர்த்திகளும் இந்திராதி தேவர்களும் வந்து இருவரையும் சமாதானப் படுத்தி இருவருக்கும் நன்மை ஏற்படும் வண்ணம் ஓர் ஏற்பாட்டினைச் செய்தனர். பொழுது விடிந்தது மௌத்கல்யர் இறந்து பின் பிழைத்தார். 

இதனைச் சாளுவ மன்னன் உணர்ந்து வருந்தினான். முனிவருக்கு இழைத்த பிழைக்கு வருந்தி அவரைக் கழுவிலிருந்து இறக்கினான். கழுமுனை அவர் பிடரி வழியே பொத்துக்கொண்டு வெளியில் நீட்டிக் கொண்டிருந்தது. அதனை எடுக்க வழியில்லாது அப்படியே விட்டனர். 

முனிவர் அவ்வாணியில் பூக்கடலையைத் தொங்க விட்டுக் கொண்டார். இதனால் அவருக்கு ஆணிமாண்டவ்யர் என்ற பெயர் உண்டாயிற்று. 

ஆணிமாண்டவ்யர் யமனை அழைத்தார். எந்தத் தவரும் இழைக்காத எனக்குக் கழுவில் தொங்கும் தண்டனையை ஏன் விதித்தாய் எனக் கேட்டார். சிறுவயதில் தும்பிகளையும், வண்ணத்துப் பூச்சிகளையும் அவற்றின் பின்புறத்தில் முள்ளால் குத்தி விளையாடியதை நினைவுறுத்தி அதனாலேயே இத்தண்டனை என்றான் எமன். 

" யமனே! அறியாப் பருவத்தில் செய்த தவ்ற்றினுக்குக் கடுந்தண்டனை விதித்தாய்; எனவே நீயும் மனிதனாய்ப் பிறப்பாய் " என்று சபித்து, இனி பாலகர் செய்யும் தவறுகளை பாவமாகக் கருத் வேண்டாம் என ஆணையிட்டார். 

மாண்டவ்யரின் சாபத்தினை ஏற்ற யமன் விதுரனாகப் பிறந்தான் என்பது பாரதத்தினுள் காணப்படும் வரலாறு.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

பக்திமால்யதவரு - பஹூத்மல்லனாரு :- பக்தியையே மாலையாக அணிந்தவர். பக்திமால்யதவரு என்ற பெயர்தான் பஹூத்மல்லனாரு என்று அழைக்கப்படுகின்றது. 

கட்டியதவரு :- ஸ்ரீ சௌடேஸ்வரி அம்மன் திருவிழாவில் அம்மனுடைய திருக்குணங்களையும் வீரதீர பராக்கிராமங்களையும் கட்டியமாக கூறுபவர். 

குச்சுதவரு :- மலர்க் குச்சுகட்டி வாழ்ந்தவர். 

குஜ்ஜலதவரு :- கர்நாடகாவில் உள்ள குஜ்ஜலம் என்னும் ஊர்க்காரர். 

சரிகெதவரு :- சரியை, கிரியை, யோகம், ஞானம் என்னும் நால்வகைச் சாதனகங்களுள் சரியைச் சாதனத்தில் வல்லவர். 

சீதளாதவரு :- பதினாறு வகைச் சக்திகளுள் ஒரு சக்தியான சீதளாதேவியை வழிபடுபவர். 

ஸ்தம்பிதவரு :- சுவாசத்தைத் தம்பிக்கச் செய்பவர். இது யோக முறைகளுள் ஒன்று. 

தர்க்கதவரு :- தர்க்க சாஸ்திரத்தில் வல்லவர். 

துளசதவரு :- துளசிச்செடி அடியில் வழிபாடு நிகழ்த்துபவர். 

நிதானதவரு :- அமைதியானவர். 

பஞ்சரதவரு :- கிளியை வளர்ப்பவர். 

பண்ணசரதவரு :- சிவத்த உடல் கொண்டவர். 

பிரசங்கதவரு :- பிரசங்கம் செய்பவர். 

மன்னாதவரு :- மண்ணேதவரு என்று வழங்கப்படுகின்றது. தவறுகளை மன்னிக்கும் இயல்புடையவர். 

மிஞ்சுதவரு :- கால் விரலில் மிஞ்சு அணிபவர். 

மீமாம்சதவரு :- மீமாம்ச சாஸ்திரங்களில் வல்லவர். 

மெட்லதவரு :- கால் விரலில் மிஞ்சு அணிபவர். 

மேடம்தவரு :- மேடை அமைத்துக் கம்பளி விரித்து அமர வேண்டிய செட்டிகாரர். 

யெல்லஇண்டிதவரு :- எல்லை வீட்டுக்காரர். 

மேதனம்தவரு :- மேதாவி, மேதை. 

வெகுளிதவரு :- வெள்ளை உள்ளம் கொண்டவர். 

வியாபமானிதவரு :- வேப்பமரத்துக்காரர். 

கஞ்சியதவரு :- காஞ்சிபுரத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர். 

பெள்ளியதவரு :- வெள்ளை உள்ளம் கொண்டவர். 

ஸ்ரீ தாளதவரு :- பனையில் ஆண்பனை, பெண்பனை என இருவகை உண்டு. இவர்கள் பெண்பனை மரத்தடியில் வீட்டுத் தெய்வ வணக்கம் செய்பவர். 

பர்ணதவரு :- பர்ணக சாலை கட்டி தவவாழ்க்கை வாழ்ந்தவர். இவர்கள் இன்று ஆந்திராவில் அதிகமாக வசிக்கின்றனர். 

கிட்டிதவரு, கிட்டதவரு, கிட்டெம்தவரு, கிண்டானதவரு, கிண்டிதவரு, சீதாதவரு, துனியாதவரு, தொலதவரு, மிண்டுலதவரு, வெஜூலதவரு, ஜூஜஜூதவரு, எஞ்ஜலதவரு, தொகலதவரு, ஜூஜிலதவரு.

பகுதி மூன்று : எரியிதழ் [ 7 ]

ஒரு தெய்வம் இறங்கிச்சென்று பிறிதொரு தெய்வம் வந்து படகிலேறியதுபோல நிருதன் உணர்ந்தான். திரும்பிவந்த அம்பை மெல்லிய நடையும், உடல்பூத்த சலனங்களும், செவ்வாழைமெருகும் கொண்டவளாக இருந்தாள். படகிலேறி அமர்ந்து இசைகலந்த குரலில் ‘அஸ்தினபுரிக்குச் செல்’ என்று அவள் சொன்னபோது துடுப்பை விட்டுவிட்டு கைகூப்பியபின் படகை எடுத்தான். அலைகளில் ஏறியும் படகு ஆடவில்லை, காற்று ஊசலாடியும் பாய்மரம் திரும்பவில்லை. வடதிசையிலிருந்து வானில் பறந்துசெல்லும் வெண்நாரை பொன்னிற அலகால் இழுபட்டுச்செல்வதுபோல அவள் சென்றுகொண்டிருந்தாளென நினைத்தான். அவளருகே ஒரு வீணையை வைத்தால் அது இசைக்குமென்றும் அவள் விரல்பட்டால் கங்கைநீர் அதிரும் என்றும் எண்ணிக்கொண்டான்.
நெய்விழும் தீ போல அவ்வப்போது சிவந்தும், மெல்ல தணிந்தாடியும், சுவாலையென எழுந்தும் படகுமூலையில் அவள் அமர்ந்திருக்கையில் படகு ஒரு நீளமான அகல்விளக்காக ஆகிவிட்டது என்று நிருதன் எண்ணிக்கொண்டான். இரவு அணைந்தபோது வானில் எழுந்த பலகோடி விண்மீன்களுடன் அவள் விழியொளியும் கலந்திருந்தது. இரவெல்லாம் அவளுடைய கைவளை குலுங்கும் ஒலியும் மூச்செழுந்தடங்கும் ஒலியும் கேட்டுக்கொண்டிருந்தன.பகலொளி விரிந்தபோது சூரியனுடன் சேர்ந்து படகின் கிழக்குமுனையில் உதித்தெழுந்தாள்.
அஸ்தினபுரியை நோக்கிச்செல்லும் பாதை தொடங்குமிடத்தில் இருந்த அமுதகலசம் கொண்ட தூண்முகப்பைக் கண்டதும் அன்னையைக் கண்ட குழந்தைபோல எழுந்து நின்றுவிட்டாள். படகு நிற்பதற்குள்ளேயே பாய்ந்து கரையிறங்கி ஓடி, அங்கே நின்ற அஸ்தினபுரியின் ஸ்தானிகரிடம் இலச்சினை மோதிரத்தைக் காட்டி அவரது ரதத்தில் ஏறிக்கொண்டு கடிவாளத்தைச் சுண்டி குதிரைகளை உயிர்பெறச்செய்து, வில்லை உதறிய அம்புபோல நதியை விட்டு விலகி விரைந்து சென்றாள். செம்மண்பாதையின் புழுதி எழுந்து அவளை மறைத்தபோது அஸ்தமனம் ஆனதுபோல நிருதனின் உலகம் அணைந்து இருண்டது.
அம்பை அரசபாதையில் அஸ்தினபுரியை அடைந்தாள். கோட்டைவாசலிலேயே பீஷ்மரைப்பற்றி விசாரித்தறிந்து, வலதுபக்கம் திரும்பி உபவனத்துக்குள் இருந்த பீஷ்மரின் ஆயுதசாலையை அடைந்து, ரதத்தை நிறுத்தி கடிவாளத்தை உதறிவிட்டு பாய்ந்திறங்கி, ஆயுதசாலையின் முகப்பை அடைந்தாள். அதுவரை கொண்டுவந்து சேர்த்த அத்தனை வேகமும் பின்னகர, கால்கள் தளர்ந்து படிகளின் கீழே நின்றிருந்தாள். அவளுக்குப் பின்னால் குதிரையில் விரைந்துவந்த காவலன் இறங்கி உள்ளே ஓடிச்சென்று சொன்னதும் பீஷ்மரின் முதல்மாணவனாகிய ஹரிசேனன் வெளியே ஓடிவந்து “காசிநாட்டு இளவரசியை வணங்குகிறேன்” என்றான்.
அச்சொல் தன் மேல் வந்து விழுந்தது போல அம்பை திடுக்கிட்டு “அஸ்தினபுரிக்கு அதிபரான பீஷ்மரை பார்க்கவந்தேன்….” என்றாள். “பிதாமகர் உள்ளே ஆயுதப்பயிற்சி எடுக்கிறார். வாருங்கள்” என்றான் ஹரிசேனன். அவள் அவனைத்தாண்டி மரப்பலகைத் தரையில் பாதங்கள் ஒலிக்க உள்ளே சென்றாள். அவன் பெருமூச்சுடன் நின்று கதவை மெல்ல மூடினான். முன்னதாக காசிநாட்டிலிருந்து ஒற்றன் செய்தி அனுப்பியிருந்தான்.
பீஷ்மர் முன்பு சென்றபோது அம்பை தன் உடலையே தாளாதவள் போல இடைதுவண்டு அங்கிருந்த ஆயுதபீடத்தைப் பற்றியபடி நின்றாள். தன் உடலில் இருந்து சிலம்பின் ஒலி நின்றபின்னும் கேட்டுக்கொண்டிருப்பதுபோல உணர்ந்தாள்.
அவள் வருவதை முன்னரே உணர்ந்திருந்த பீஷ்மர் தன் கையில் ஒரு குறுவாளை எடுத்து அதன் ஒளிரும் கருக்கை கைகளால் வருடியபடி தலைகுனிந்து அமர்ந்திருந்தார்.
அம்பை பேசுவதற்கான மூச்சு எஞ்சியிராதவளாக, உடலெங்கும் சொற்கள் விம்மி நிறைந்தவளாக நின்றாள். உள்ளெழுந்த எண்ணங்களின் விசையால் அவள் உடல் காற்றிலாடும் கொடிபோல ஆடியபோது நகைகள் ஓசையிட்டன. அமர்ந்திருக்கும்போதும் அவளுடைய உயரமிருந்த அம்மனிதனை முதல்முறையாக பார்ப்பவள் போல இருகண்களையும் விரித்து, மனதை விரித்து, தாகத்தை விரித்து பார்த்துக்கொண்டிருந்தாள்.
பீஷ்மர் சிலகணங்களுக்குப்பின் தலைதூக்கி அவளைப்பார்த்தார். அப்பார்வை பட்டதுமே அவளுடலில் பரவிய மெல்லிய அசைவை, அவளில் இருந்து எழுந்த நுண்ணிய வாசனையை அவர் உணர்ந்ததும் அவரது உள்ளுக்குள் இருந்த ஆமை கால்களையும் தலையையும் இழுத்துக்கொண்டு கல்லாகியது.மரியாதைமுகமாக எழுவது போன்று எழுந்து, பார்வையை விலக்கி “காசிநாட்டு இளவரசியாருக்கு வணக்கம்….நான் தங்களுக்கு என்ன சேவையை செய்யமுடியுமென்று சொல்லலாம்” என்று தணிந்த குரலில் சொன்னார்.
அவரது குரலின் கார்வை அவளை மேலும் நெகிழச்செய்தது. வெண்ணையாலான சிற்பம் என தான் உருகி வழிந்துகொண்டிருப்பதாக நினைத்தாள். என் சொற்கள் எங்கே, என் எண்ணங்கள் எங்கே, நான் எங்கே என நின்று தவித்தாள். இங்கிருப்பவள் எவள் என திகைத்தாள். இதுவல்லவா நான், இது மட்டுமல்லவா நான் என கண்டடைந்தாள். பீஷ்மர் அவளை நோக்கி “காசியிலிருந்து தாங்கள் கிளம்பி வரும் தகவலை ஒற்றர்கள் சொன்னார்கள்” என்றார்.
“நான் உங்களைத்தேடி வந்தேன்” என்றாள் அம்பை. அந்த எளிய சொற்களிலேயே அனைத்தையும் சொல்லிவிட்டவள்போல உணர்ந்தாள். “நான் என்ன செய்யமுடியும் தேவி? தாங்கள் சால்வனை வரித்துக்கொண்டவர்” என்றார் பீஷ்மர். அம்பை தன்மேல் அருவருப்பான ஏதோ வீசப்பட்டதுபோல கூசி “அவனை நான் அறியேன்” என்றாள். “அவன் அஞ்சியிருப்பான்….அவனிடம் நான் பேசுகிறேன்…” என்றார் பீஷ்மர். “அவனை நான் அறிந்திருக்கவுமில்லை” என்றாள் அம்பை. அக்கணம் அவர்கள் கண்கள் சந்தித்துக்கொண்டன. அவரிடம் தான் எதுவும் சொல்லவேண்டியதில்லை என்று அவளறிந்தாள்.
பீஷ்மர் “இளவரசி, நான் தங்களை முறைப்படி சால்வனிடம் அனுப்பியது இந்த நாட்டுக்கே தெரியும்…. அம்பிகையை பட்டத்தரசியாக்கும் காப்பு நேற்று கட்டப்பட்டுவிட்டது…இனி இங்கே ஏதும் செய்வதற்கில்லை” என்றார். அம்பை சீறியெழும் நாகம்போல தலைதூக்கி “நான் அஸ்தினபுரிக்கு அரசியாக இங்கே வரவில்லை. நான் வந்தது உங்களைத்தேடி” என்றாள்.
வேட்டைநாய் முன் சிக்கிக்கொண்ட முயல்போல பீஷ்மர் அச்சத்தில் சிலிர்த்து அசைவிழந்து நின்றார். பின்பு கைகளைத் தூக்கி ஏதோ சொல்லமுனைந்தார். “இது தங்கள் ஆன்மாவும் என் ஆன்மாவும் அறிந்ததுதான்…” என்றாள் அம்பை. பீஷ்மர் கால்கள் தளர்ந்து தன் இருக்கையில் அமர்ந்துகொண்டார். “நான் இருக்கவேண்டிய இடம் இது என்று சால்வனைக் கண்டபின்புதான் அறிந்தேன்…ஆகவே இங்கே வந்தேன்” என்று அம்பை சொல்லி மெல்ல முன்னகர்ந்தாள்.
அவளை அஞ்சியவர் போல கால்களைப் பின்னால் இழுத்துக்கொண்ட பீஷ்மர் “இளவரசி, நான் காமத்தை ஒறுக்கும் நோன்பு கொண்டவன். என் தந்தைக்குக் கொடுத்த வாக்கு அது. அதை நான் மீறமுடியாது” என்றார். கூரிய விழிகளால் பார்த்தபடி “இல்லை, அதை நீங்கள் உங்களை நோக்கி சொல்லிக்கொள்ளமுடியாது” என்றபடி அம்பை மேலும் அருகே வந்தாள். “நான் உங்களை ஏன் ஏற்றுக்கொண்டேன் என்று சற்றுமுன்னர்தான் எனக்குப்புரிந்தது, நம் கண்கள் சந்தித்தபோது…நீங்கள் முன்பு என்னைப்பார்த்த முதல்பார்வையே பெண்ணைப்பார்க்கும் ஆணின் பார்வைதான்.”
பீஷ்மர் கடும் சினத்துடன், “என்ன சொல்கிறாய்? யாரிடம் பேசுகிறாய் என்று சிந்தித்துதான் பேசுகிறாயா?” என்றார். அந்த சினம் அவரது முதல் கோட்டை என அறிந்திராதவளாக அதை பட்டுத்திரைபோல விலக்கி முன்னால் வந்தாள். “ஆம், உங்களிடம்தான். இன்று இவ்வுலகத்திலேயே நான் நன்றாக அறிந்தவர் நீங்கள்தான். சுயம்வரப்பந்தலில் முதன்முதலில் என்னைப்பார்த்ததும் நீங்கள் அடைந்த சலனத்தை நானும் கவனித்திருக்கிறேன் என்று இப்போதுதான் நானே அறிந்தேன். நாண் விம்மி ஒலிக்கும் வில்லை ஏந்தியபடி என்னைத் தூக்குவதற்காக உங்களை அறியாமலே என்னை நோக்கி நான்கு எட்டு எடுத்து வைத்தீர்கள். அதுதான் உங்கள் அகம். உடனே திரும்பி சீடர்களை அழைத்தீர்களே அது உங்கள் புறம்…இங்கே நீங்கள் சொல்லும் அத்தனை காரணங்களும் உங்கள் புறம் மட்டுமே. நான் உங்கள் அகத்துக்குரியவள்…உங்கள் அகத்துடன் உரையாடிய முதல் பெண் நான்…”
“இளவரசி, என்னை அவமதிக்காதீர்கள். நான் நடுவயது தாண்டியவன்….ஒருகணக்கில் முதியவன். இத்தனைநாள் நான் காப்பாற்றி வந்த நெறிகளை எள்ளி நகையாடுகிறீர்கள்…எவ்வகையிலும் இது நியாயமல்ல…” என்று இடறிய குரலில் சொன்னார் பீஷ்மர். அம்பையின் முகம் கனிந்தது. பிழைசெய்துவிட்டு பிடிபட்ட குழந்தையிடம் அன்னை போல “காங்கேயரே, நான் மிக இளையவள். ஆனால் காதலில் மனம்கனிந்த பெண். உண்மையில் அன்னையும்கூட. உங்கள் தனிமையை நான் அறியமாட்டேன் என நினைக்கிறீர்களா? உங்கள் உள்ளுக்குள் நீங்கள் ஏங்குவதென்ன என்று நான் அறிவேன்….நீங்கள் விரும்புவது ஓர் அன்னையின் அணைப்பை மட்டும்தான்.”
VENMURASU_EPI_16
ஓவியம்: ஷண்முகவேல்
[பெரிதுபடுத்த படத்தின்மீது சொடுக்கவும்]
“உளறல்” என்று பற்களைக் கடித்த பீஷ்மரிடம் “கட்டுண்டவேழம் போன்றவர் நீங்கள். மலைகளைக் கடக்கும் கால்களும் மரங்களை வேருடன் சாய்க்கும் துதிக்கையும் கொண்டிருந்தாலும் மூங்கில் இலைகளைத் தின்று கல்மண்டப நிழலில் வாழ விதிக்கப்பட்டிருக்கிறீர்கள்…அந்த சுயவெறுப்பிலிருந்து வந்தது உங்கள் தனிமை…அதை நான் மட்டுமே போக்க முடியும்” என்றாள் அம்பை.
பீஷ்மர் கைகள் நடுங்க அவளை வணங்கி “இங்கிருந்து சென்றுவிடுங்கள் இளவரசி…அந்த அருளை மட்டும் எனக்களியுங்கள்” என்றார். “காங்கேயரே, அரியணையில் அமர்ந்து பாரதவர்ஷத்தை முழுக்கவென்று காலடியிலிட்டு, அத்தனை போகங்களையும் அறிந்து மூத்தபின் பெற்றமக்களிடம் நாட்டை அளித்துவிட்டு காடுபுகுந்தாலன்றி உங்கள் அகம் அடங்காது…. அது ஷத்ரியனின் உயிராற்றல். இன்று உங்களிடமிருப்பது அடங்கிய அமைதி அல்ல, அடக்கப்பட்ட இறுக்கம்…” என்ற அம்பை கனிந்து மென்மையான குரலில் சொன்னாள் “எதற்காக இந்த பாவனைகள்? ஏன் இப்படி உங்களை வதைத்துக்கொள்கிறீர்கள்? சுயதர்மத்தைச் செய்யாமல் முக்தியில்லை என நீங்கள் கற்றதில்லையா என்ன?”
“இளவரசி, நான் என் தந்தைக்குக் கொடுத்த ஆணை…” என்று பீஷ்மர் தொடங்கியதும் கோபமாக அம்பை உட்புகுந்தாள். “அதைப்பற்றி என்னிடம் சொல்லவேண்டாம்…அது உங்கள் தந்தை சந்தனு செய்த ஒரு அரசியல் உத்தி. தொலைதூரத்து காங்கேயர் குலம் இந்த மண்ணை ஆள்வதை இங்குள்ள மக்கள் விரும்பமாட்டார்கள் என அவர் அறிந்திருந்தார்…”.என்றாள்.
பீஷ்மர் உரத்த சிரிப்புடன் “இந்த மண்ணை எடுத்துக்கொள்ள என்னால் முடியாதென நினைக்கிறீர்களா?” என்றார். “எனது இந்த ஒரு வில் போதும் பாரதவர்ஷத்தை நான் ஷத்ரிய முறைப்படி வென்றெடுக்க” என்றார்.
அம்பை “பார்த்தீர்களா, நான் உங்கள் வீரத்தை குறைத்து எண்ணிவிடக்கூடாதென நினைக்கிறீர்கள். நான் சொல்வதற்கெல்லாம் இதுவே ஆதாரம். எந்த ஆணும் காதலியிடம் பேசும் பேச்சுதான் இது” என்றாள். சிரித்தபடி “மதவேழத்தின் அத்தனை வலிமையையும் மெல்லிய சேறு கட்டிவிடும். ஆனால் தன் வலிமையை நம்பி வேழம் அதுவே சென்று சேற்றில் இறங்கும்…நீங்கள் உங்கள் தன்முனைப்பால் இதில் இறங்கிவிட்டீர்கள். சூதர்களின் புராணமாக ஆவதற்காக உங்களை பலிகொடுக்கிறீர்கள்” என்றாள்.
“போதும் விளையாட்டு” என பீஷ்மர் சீறினார். தன் வாசலற்ற கருங்கல் கோட்டைகள் அனைத்தும் புகையாலானவை எனக் கண்டார். அவரது சிந்தனைகளை காதில் கேட்டவள் போல “அரசே, அன்புகொண்டவர்கள் வரமுடியாத ஆழம் என ஏதும் எவரிடமும் இருப்பதில்லை” என்றாள் அம்பை.
“என்னை சோதிக்காதீர்கள் இளவரசி…என் உணர்வுகளைச் சீண்டி விளையாடாதீர்கள். தயவுசெய்து…” என உடைந்த குரலில் சொன்ன பீஷ்மரிடம் “அரசே, விளையாடுவது நீங்கள். குழந்தை நெருப்புடன் விளையாடுவதுபோல நாற்பதாண்டுகளாக காமத்துடன் விளையாடிக் கொண்டிருக்கிறீர்கள்… நெருப்பு விளையாட்டுகளை அனுமதிப்பதே இல்லை அரசே. என்னை ஏற்றுக்கொள்ளுங்கள். நான் உங்கள் ஆன்மாவின் தோழி…”அம்பையின் குரல் நெகிழ்ந்திருந்தது.
கண்களை விலக்கியபடி “என் நெறிகளை நான் விடவே முடியாது” என்றார் பீஷ்மர். “ஏன்? அரசே, உங்கள் தந்தை தனயன் என்னும் பாசத்தால் உங்களைப் பிணைத்தார். இந்த மக்கள் தேவவிரதன் என்ற பெயரைக் கொண்டு உங்களை சிறையிட்டிருக்கிறார்கள். இந்த நாட்டின் நலனை இரவும் பகலும் நீங்கள் என்ணுகிறீர்கள். உங்கள் நலனை எண்ணுவதற்கு எவரும் இல்லை இங்கே. நீங்கள் அதை அறிவீர்கள். இவர்களா உங்கள் சுற்றம்? இவர்களா உங்கள் கேளிர்? ஆணுக்கு பெண் மட்டுமே துணை….அது பிரம்மன் வகுத்த விதி.”
முற்றிலும் திறந்தவராக அவள் முன் நின்ற பீஷ்மரின் பழகிய அகந்தை சுண்டப்பட்டு கீழே விழும் நாணயம் இறுதிக்கணத்தில் திரும்புவதுபோல நிலைமாறியது. அதை தன் தோல்வி என்றே எடுத்துக்கொண்டார். தன்னை தோல்வியுறச்செய்து மேலே எழுந்து நிற்கும் பெண்ணை திடமாக ஊன்றி நோக்கி அவளை எது வீழ்த்தும் என சிந்தனை செய்தார். குழந்தையின் உள்ளும் புறமும் அறிந்த அன்னையாக அவள் நின்றுகொண்டிருந்தாள். அந்நிலையை எதிர்கொள்ள அவர் தன்னை ராஜதந்திரியாக ஆக்கிக்கொண்டார். “இளவரசி, இப்போது நீங்கள் செய்வதென்ன தெரியுமா? அன்புக்காக வாதிடுகிறீர்கள். அபத்தத்தின் உச்சமென்றால் இதுதான்” என்றார்.
அம்பை, பெண் ஒருபோதும் அறிந்திராத அந்த இரும்புச்சுவரை உணர்ந்ததுமே சோர்ந்து, “நான் வாதிடவில்லை….நான் உங்களை விடுவிக்க முயல்கிறேன். பாவனைகள் மூலம் வாழமுடியாது என்று உங்கள் அகங்காரத்திடம் சொல்ல விரும்புகிறேன்” என கவசங்களில்லாமல் வந்து நின்றாள். அதைக்கேட்டு மேலும் நுணுக்கமாக தன் ராஜதந்திர தர்க்கத்தை நீட்டித்தார் பீஷ்மர். “இளவரசி, விவாதிக்கும்தோறும் என்னிடமிருந்து இன்னமும் விலகிச்செல்கிறீர்கள்…”
ஆனால் அக்கணமே அம்பை அனைத்தையும் விட்டு வெறும் பெண்ணாக மாறினாள். தழுதழுத்த குரலில், “நான் விவாதிக்க வரவில்லை அரசே…என்னுடைய நெஞ்சத்தையும் ஆன்மாவையும் உங்கள் பாதங்களில் படைக்க வந்திருக்கிறேன். இக்கணம் நீங்களல்லாமல் எதுவும் எனக்கு முக்கியமல்ல. விண்ணும் மண்ணும் மூன்று அறங்களும் மும்மூர்த்திகளும் எனக்கு அற்பமானவை…என்னை துறக்காதீர்கள்” என்றாள்.
ஒரு கணம் தோற்றுவிட்டதாக நினைத்து தளர்ந்த பீஷ்மர் உடனே அதற்கு எதிரான ஆயுதத்தை கண்டுகொண்டார். வெறும் ஆணாக, தோளாக, மார்பாக, கரங்களாக தருக்கி நிமிர்ந்து “நீங்கள் எத்தனை சொன்னாலும் என் உறுதியை நான் விடமுடியாது இளவரசி” என்றார்.
அம்பை அம்புபட்ட கிருஷ்ணமிருகம் போன்ற கண்களால் அவரை நோக்கி “நான் உங்களிடம் கெஞ்சவேண்டுமென எதிர்பார்க்கிறீர்களா?” என்றாள். பீஷ்மரின் அகத்துள் மெல்லிய ரகசிய ஊற்றாக உவகை எழுந்தது. என் வாழ்நாளில் நான் சந்திக்கக் கூடுவதிலேயே பெரிய எதிரி இதோ என் முன் தோற்று நிற்கிறாள். புன்னகையை உதட்டுக்கு முன்னரே அணைகட்டி “இளவரசி, உங்களால் அது முடியாதென எனக்கும் தெரியும்” என்றார்.
“ஏன்?” என்று கண்களை சுருக்கியபடி அம்பை கேட்டாள். “ஏனென்றால் நீங்கள் ஒரு பெண்ணல்ல. இப்படி காதலுக்காக வந்து கேட்டு நிற்பதே பெண்ணின் இயல்பல்ல. பெண்ணுக்குரிய எக்குணமும் உங்களிடமில்லை” என்றார் பீஷ்மர். அம்பை உதடுகளை இறுக்கியபடி “என்னை அவமதிக்க நினைக்கிறீர்களா?” என்றாள்.
“இல்லை, நான் சொல்லவருகிறேன்…” பீஷ்மர் தன் சமநிலையை தானே வியந்தார். அம்பையின் முகத்தில் நீலநரம்புகள் புடைக்கத் தொடங்கியதைக் கண்டதும் அவர் உள்ளம் துள்ள ஆரம்பித்தது. இதோ இதோ இன்னும் ஓரடி. இன்னும் ஒரு விசை. இன்னுமொரு மூச்சு. இந்தக்கோபுரம் இக்கணமே சரியும். சதுரங்கத்தில் நான் வெல்லும் மிகப்பெரிய குதிரை. “…இளவரசி நீங்கள் கேட்டகேள்விக்கு இந்த பதிலே போதுமென நினைக்கிறேன். ஆணை வெற்றிகொள்பவள் பெண், பெண்மை மட்டுமே கொண்ட பெண்.”
அவர் நினைத்த இடத்தில் அம்பு சென்று தைத்தபோதிலும் அம்பை “நீங்கள் இச்சொற்களை உங்கள் வன்மத்திலிருந்து உருவாக்கிக் கொண்டீர்கள் என எனக்குத்தெரியும்….உலகம் மீது வன்மம் கொண்டவர்கள் அவர்களுக்கு நெருக்கமானவர்களையே வதைப்பார்கள்” என்றாள். தன் கடைசி ஆயுதத்தையும் அவள் விலக்கி விட்டதை உணர்ந்தவர் போல பீஷ்மர் சினம் கொண்டார். நீர் விழுந்த கொதிநெய் என அவரது அகம் பொங்கியபோது அவர் சொல்லவேண்டிய கடைசி வாக்கியம் நாக்கில் வந்து நின்றது. அழுக்கு மீது குடியேறும் மூதேவி என.
“…ஆம், நான் உங்களுக்கான அன்பை உள்ளுக்குள் வைத்திருந்தேன். இப்போது அதை வீசிவிட்டேன். என்னை கிழித்துப்பார்க்கும் ஒரு பெண்ணருகே என்னால் வாழமுடியாது. எனக்குத் தேவையானவள் ஒரு பேதை. நான் என் கண்ணயர விழைவது ஒரு பஞ்சுமெத்தையில், கூரிய அம்புகளின் நுனியில் அல்ல” சொல்லிமுடித்ததும் அவரது உடல் நடுங்கத் தொடங்கியது. எய்யப்பட்ட அம்புக்குப்பின் அதிரும் நாண் போல.
அவரே எதிர்பாராதபடி அம்பை கைகூப்பி கால் மடங்கி முழங்காலிட்டு கண்ணீர் நனைந்த குரலில் சொன்னாள் “காங்கேயரே, நான் உங்கள் அடைக்கலம். என்னை துறக்காதீர்கள். நீங்களில்லாமல் என்னால் உயிர்வாழமுடியாது” தொழுத கையை விரித்து முகம் பொத்தி “நான் சொன்ன அத்தனை சொற்களையும் மறந்து விடுங்கள். என் தாபத்தால் உளறி விட்டேன் …நான் உங்கள் தாசி. உங்கள் அடிமை” என்றாள்.
குனிந்து அந்த நடுவகிடிட்ட தலையை, காதோர மயிர்ச்சுருள்களை, கன்னக்கதுப்பை, கைமீறி வழியும் கண்ணீரை, மார்பில் சொட்டிய துளிகளைக் கண்டபோது அப்படியே விழுந்து அவளை அணைத்து தன் உடலுக்குள் செலுத்திவிடவேண்டுமென்ற வேகம் அவருள் எழுந்தது. ஆனால் பீஷ்மர் ஆயிரம் மத்தகங்களால் அந்த உடையும் மதகை அழுந்தப்பற்றிக்கொண்டார். மேலும் மேலும் வேழப்படைகளால் முட்டி முட்டி அதை நிறுத்தியபடி “இனி நாம் பேசவேண்டியதில்லை இளவரசி” என்றார்.
இரு கைகளையும் வேண்டுதல்போல விரித்து அம்பை அவரை அண்ணாந்து பார்த்தாள். புரியாதவள் போல, திகைத்தவள் போல. பின்பு மெல்ல எழுந்து நின்றாள். அவளுடைய கழுத்தில் நீலநரம்பு புடைத்து அசைந்தது. வலிப்பு நோயாளியைப்போல அவள் கைகள் முறுக்கிக்கொள்ள, உதடுகளை வெண்பற்கள் கடித்து இறுக்கி குருதி கசிய, கன்னம் வெட்டுண்ட தசைபோல துடிதுடித்தது. அதைக்கண்ட பீஷ்மர் அவருள் எக்களிப்பை உணர்ந்தார். இதோ நான் என் தாயை அவியாக்குகிறேன். அக்கினியே சுவாகா. இதோ நான் என் தந்தையை அவியாக்குகிறேன். அக்னியே சுவாகா. இதோ நான் என் குலத்தை, என் மூதாதையரை அவியாக்குகிறேன். சுவாகா சுவாகா! இதோ என் நெறிநூல்களை, என் ஞானத்தை, என் முக்தியை அவியாக்குகிறேன். சுவாகா சுவாகா சுவாகா! நின்றெரிக! எரிந்தழிக! தன்னையே உண்டழிக! “உங்களுக்கு மங்கலங்கள் நிறையட்டும் இளவரசி!” என நிதானமான குரலில் சொன்னார் பீஷ்மர்.
கழுத்து வெட்டுண்ட சடலம்போல துடித்துச் சுருண்டவளாக அம்பை சிலகணங்கள் நின்றபின் மெல்ல திரும்பினாள். அங்கேயே விழுந்து இறந்துவிடுபவள் போல மெல்ல திரும்பி நடந்தாள். அவளுக்குப்பின்னால் சிதையில் இதயம் வேகும்போது எழுந்தமரும் பிணம்போல பீஷ்மர் மெல்ல அசைந்தார். அதன் ஒலியிலேயே அனைத்தையும் உணர்ந்தவளாக அம்பை திரும்பினாள். காதல் பெண்ணில் உருவாக்கும் அனைத்து அணிகளையும் அணிந்தவளாக, அவளுடைய கன்னியழகின் உச்சகணத்தில் அங்கே நின்றாள். கைகள் நெற்றிக்குழலை நீவ, கழுத்து ஒசிந்தசைய, இடை நெகிழ, மார்பகங்கள் விம்ம, இதோ நான் என.
ஆணெனும் சிறுமையை பிரம்மனே அறிந்த கணம்போல அவர் உதடுகளில் ஒரு மெல்லிய ஏளனச்சுழிப்பு வெளிப்பட்டது. அதைக்கண்ட அக்கணத்தில் வெண்பனி நெருப்பானதுபோல, திருமகள் கொற்றவையானதுபோல அவள் உருமாறினாள்.
“சீ, நீயும் ஒரு மனிதனா?” என்று தழலெரியும் தாழ்ந்த ஒலியில் அம்பை சொன்னாள். “இம்மண்ணிலுள்ள மானிடர்களிலேயே கீழ்மையானவன் நீ. உன் முன் இரந்து நின்றதனால் இதுவரை பிறந்தவர்களிலேயே கீழ்மகள் நான். ஆயிரம் கோடி முறை ஊழித்தீ எரிந்தாலும் இக்கணம் இனி மறையாது.” இடிபட்டெரியும் பசுமரம்போல சுருங்கி நெரிந்து துடித்த அவளுடலில் இருந்து சன்னதம் கொண்டெழும் மயான சாமுண்டியின் பேரோலம் கிளம்பியது. ரத்தமும் நிணமும் சிதற எலும்பை உடைத்து இதயத்தைப் பிழிந்து வீசுபவள் போல மார்பை ஓங்கியறைந்து சினம் கொண்ட சிம்மக்கூட்டம்போல குரலெழுப்பியபடி அவள் வெளியே பாய்ந்தாள். பீஷ்மர் தன் உடலெங்கும் மயிர்க்கால்கள் சிலிர்த்திருப்பதை, கால்கள் துடிதுடித்துக்கொண்டிருப்பதை உணர்ந்தார்.

1/19/14

153 .மனோரம மகரிஷி கோத்ரம்

மகரிஷி வரலாறு புலப்படவில்லை.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

கல்மிதவரு :-

1/18/14

152 .மல்லா தேவ மகரிஷி கோத்ரம்

மகரிஷி வரலாறு புலப்படவில்லை.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

ஹொன்னதவரு :- தங்க நிறம் கொண்டவர். தங்க வணிகம் செய்தவர். தங்க நகை அணிபவர். தங்கம் போன்ற குணம் உடையவர். 
ஹொன்னங்கதவரு :- தங்க நிறமான அங்கங்களை உடையவர். 
பசசூரதவரு :-