அன்புடையீர் நல்வரவு ,

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,
தேவாங்கர்களாகிய நாம் அனைவரும் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்து வந்தாலும் தேவாங்கர் என்னும் உணர்வு நம்மை ஓன்று சேர்க்கிறது. மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்ற வாக்கிற்கு இணங்க காலத்திற்கு ஏற்ப நாம் நமது குல நிகழ்வுகளை தகுந்த தொழில்நுட்பத்தை கொண்டு பதிவு செய்வது அவசியமான ஓன்று.

இந்த புதியபக்கம் நமது தேவாங்க சமூக செய்திகள்,சடங்குகள்,வரலாறு & அண்மை நிகழ்ச்சிகளை அறிந்துகொள்ளவும் தேவைப்படும் போது பார்க்கவும் உருவாக்கப் பட்டுள்ளது.
உறவுகள் தங்கள் பகுதியில் உள்ள கோவில்&குல தெய்வம் கோவில்களில் நடைபெறும் திருவிழா நிகழ்ச்சிகள் மற்றும் படங்களை இடம்பெற செய்யவும்.

தங்கள் கருத்துக்கள் இந்த தளத்தை மேன்படுத்த உதவும் ஆகயால் தயவுசெய்து கருத்திடவும் . ( தமிழில் கருத்திட தமிழ் எழுதியை பயன்படுத்தவும்)

நன்றி.

1/5/14

பகுதி ஒன்று : வேள்விமுகம் [ 3 ]

பகுதி ஒன்று : வேள்விமுகம்   [ 3 ]

குருவம்சத்தின் ஐம்பத்திரண்டாவது தலைமுறையைச்சேர்ந்த ஜனமேஜயன் தன் பதின்மூன்றாவது வயதில் மன்னனானபோது அவன் வெல்வதற்கு நாடுகள் ஏதும் இருக்கவில்லை. அவன் தீர்ப்பதற்குரிய சிக்கல்களேதும் எஞ்சவில்லை. அவன் சித்தமோ எரிதழல் காற்றை உணர்வதுபோல காலத்தை ஒவ்வொரு கணமும் அறிந்துகொண்டிருந்தது. ஆகவே அவன் பகடையாட்டத்தில் ஈடுபாடுகொண்டவனாக ஆனான். ஏணியும் பாம்பும் கொண்ட வரைபடத்தின் கட்டங்களில் மானுடவாழ்க்கையின் அனைத்து விசித்திரங்களும் உறைந்திருப்பதை சிறிது சிறிதாக அவன் காண ஆரம்பித்தான். ஒரு பகடையை புரளவைத்து பன்னிரண்டாகவோ சுழியாகவோ ஆகச்செய்யும் விசையின் மர்மங்களே அவன் சிந்தனையை நிறைத்திருந்தன. இரவில் மென்மையான துவர்ப்பும் கசப்பும் கலந்த இனிய மதுவின் போதையில் தூங்கும்போதுகூட அவன் பகடைகளை மனதுக்குள் உருட்டிக்கொண்டிருந்தான். கனவுக்குள் ஏணிகளில் ஏறி பாம்புகளால் கவ்வப்பட்டு சரிந்து மீண்டுவந்தான்.
ஆட்டத்தின் தருணத்தில் ஒருநாள் சேவகன் வந்து உஜ்ஜாலகத்தில் வசிக்கும் தவமுனிவரான உத்தங்கர் வந்திருப்பதாக சேதி சொன்னபோது அவரை விருந்தினருக்கான ஆசிரமத்தில் தங்கவைத்து வேண்டிய காணிக்கைகளைக் கொடுத்து அனுப்பும்படி திரும்பிப்பாராமலேயே ஆணையிட்டான். சேவகன் சென்ற சற்றுநேரத்தில் மரவுரியணிந்த கரிய உடலும், நீண்ட தாடியும் சடைக்கற்றைமுடிகளுமாக உத்தங்கர் வந்து அவன் முன் நின்றார். உரக்கச்சிரித்தபடி ‘பகடை ஆடுகிறாயா? ஆடு ஆடு….உன் குலத்தை ஒருநாளும் நாகத்தின் நாக்கு விட்டுவிடப்போவதில்லை…உன் தந்தையைக் கடித்த நாகம்தான் அந்த ஆடுகளத்திலும் இருக்கிறது’ என்றார்.
அதிர்ச்சியுடன் எழுந்து “என்ன சொன்னீர்கள்? என் தந்தையை நாகம் கடித்ததா?’ என்றான் ஜனமேஜயன். உத்தங்கர் உரக்கச்சிரித்து ‘நினைத்தேன். ஒவ்வொரு கணமும் நிகழும் விதியின் ஆட்டத்தைப்பற்றிய முழுமையான அறியாமை இல்லையேல் ஒருவன் இந்த போலி ஆடுகளத்தின் முன் குனிந்து அமரமுடியாது’ என்றார். ‘ஆடு ,ஆடு, உன்னைத்தேடி உனக்கான விஷம் வந்துசேரும்’ என்றபின் திரும்பிச்சென்றார். ‘மாமுனிவரே….என்ன சொல்கிறீர்கள்?’ என்றபடி ஜனமேஜயன் அவர் பின்னால் சென்றான். ஆனால் அவர் வேகமாக திரும்பிச்சென்று அரண்மனையைவிட்டு நீங்கிவிட்டார்.
அன்றிரவெல்லாம் தூக்கமின்றி தவித்தபடி அவன் தன் தந்தையைப்பற்றியே எண்ணிக்கொண்டிருந்தான். குளிர்கால இரவொன்றில் படுக்கையில் தூங்கிக்கொண்டிருந்த அவனை குனிந்து நோக்கி கால்களை முத்தமிட்டபின்னர் அன்னையின் குழலை வருடிவிட்டு விடைபெற்றுச்சென்ற பரீட்சித்தின் கண்களில் இருந்த அச்சத்தையும் தவிப்பையும் கண்முன் எழுதி தொங்கவிடப்பட்ட ஓவியத்திரைச்சீலை என அவன் கண்டான். மறுநாள் காலை கருக்கிருட்டில் ரதத்தில் ஏறி, வாசனையாக மட்டுமே புழுதி தெரிந்த தெருக்களின் வழியாகச் சென்று, புறநகர் குறுங்காட்டைத் தாண்டி,உத்தங்கரின் வனக்குடிலை அடைந்தான். இரவெல்லாம் நீண்ட யோகசாதனைக்குப்பின்பு நீராடி சடைமுடியை இளவெயிலில் உலர்த்திக்கொண்டிருந்த அவரது மண்படிந்த மெலிந்த கரிய காலடிகளில் விழுந்து தன் அறியாமையை போக்கும்படி கோரினான். சாலமரம் நிழல்விரித்து நின்ற தடாகத்தின் கரையில் அவனை அமரச்செய்து உத்தங்கர் அந்தக்கதையைச் சொன்னார்.
குருவம்ச மாவீரன் அர்ஜுனனின் மைந்தன் அபிமன்யு தன் பதினாறாவது வயதில் குருஷேத்ரப் போர்க்களத்தில் மடிந்தான். அவன் மனைவி உத்தரைக்கு அப்போது பதினாறு வயது. அரண்மனைக்கு அப்பால் என்ன நடக்கிறதென்பதே அறியாத பேதைப்பெண்ணாக இருந்தாள். ஒவ்வொருநாளும் இறப்புச்செய்திகள் வருவதைக்கொண்டுதான் அவள் குருஷேத்ரப்போரையே அறிந்தாள். அவள் இரவுகள் தோறும் அஞ்சிக்கொண்டிருந்த செய்தி ஒருநாள் வந்தது. அவள் சிலநாட்கள் மட்டுமே அறிந்திருந்த இளம்கணவன், இன்னமும் முழுமையாக அவள் பார்த்திராத முகத்தைக்கொண்ட சிறுவன், மீளமுடியாத படைவளையத்தில் சிக்கி களத்தில் உயிரிழந்தான்
செய்திகேட்டு மயங்கி விழுந்த அவளுடைய நாடியைப்பிடித்து சோதனைசெய்த அரண்மனை மருத்துவச்சிதான் அவள் கருவுற்றிருப்பதைச் சொன்னாள். கண்விழித்தெழுந்து உடன்கட்டை ஏறவிரும்பி கதறிய அவளை மூத்தவர்கள் கட்டுப்படுத்தினர். குருவம்சத்தின் விதை வயிற்றில் வளர்கையில் அவள் சிதையேறுவது நூல்நெறியல்ல என்றனர். விதவைகள் நிறைந்த அந்தப்புரத்தின் குளிர்ந்த அமைதியில் தன்னை பூமியுடன் பிணைக்கும் வயிற்றை தொட்டுத்தொட்டு சபித்தபடி அவள் ஒவ்வொரு நாளாக வாழ்ந்தாள். நாற்பத்தோராம் நாள் அவளை நதிக்கரைக்கு கொண்டுசென்று வண்ண ஆடைகளையும் அணிகளையும் கூந்தலையும் நீக்கி விதவைக்கோலம் கொள்ளச்செய்தனர். அங்கிருந்து மருத்துவச்சிகள் சூழ்ந்த அரண்மனை உள்ளறையின் ஆழத்துக்கு அவள் சென்றாள்.
அதன்பின் அவள் அதுவரையிலான வாழ்க்கையை முற்றிலும் மறக்க முயன்றுகொண்டிருந்தாள். உத்தரநாட்டின் பனிபடிந்த இமயமுகடுகள் வெண்பந்தலாகத் தெரியும் வடதிசையையும், பூவனம் நோக்கி திறக்கும் சாளரங்கள் கொண்ட அரண்மனையில் கழித்த தன் இளமைப்பருவத்தையும், அங்கிருந்து வெம்மை தகிக்கும் சமவெளியையும் அசைவில்லாததுபோலத் தோன்றும் நீலநதிகளையும் கொண்ட இந்த தேசத்துக்கு வந்ததையும், விளையாட்டுத்தோழனாகிய கணவனை அடைந்ததையும் எல்லாம் பிரக்ஞையால் தேய்த்து தேய்த்து அழிக்கப்பார்த்தாள். சிந்தை தீப்பற்றி எரியும்போது அவளுடைய உடல் நடுநடுங்கி கைவிரல்களெல்லாம் முறுக்கிக்கொள்ளும். பற்கள் கிட்டித்து உதடுகள் கடிபடும். அப்போது அவளுடன் உத்தரதேசத்தில் இருந்து வந்த செவிலி அவள் நாசியில் மயக்கத்தூபத்தைக் காட்டி தூங்கவைத்தாள்.
வெளிறி மெலிந்து, கன்னங்கள் வறண்டு, வாய் புண்ணாகி, கண்கள் குழிந்து, புதைகுழியிலிருந்து தோண்டி எடுக்கப்பட்ட சடலம் போலிருந்த உத்தரை ஆறுமாதத்திலேயே குழந்தையைப் பெற்றெடுத்தாள். அக்குழந்தை வெளிவந்த குருதியேகூட செந்நிறமிழந்து மஞ்சளாக இருந்தது என்றனர் மருத்துவச்சிகள். குளிர்ந்த கரங்களுடன் நடுங்கும் உதடுகளன்றி உயிரசைவே இல்லாமல் கிடந்த அவளைப்போலவே குழந்தையும் அசைவில்லாமல் கண்மூடிக் கிடந்தது. மருத்துவச்சி அதை மெல்லத்தூக்கி அது உயிருடனிருக்கிறதா என்று பார்த்தாள். அதன் உடலுக்குள் எங்கோ மெல்லிய இதயத்துடிப்பை உணர்ந்தது உண்மையா தன் கற்பனையா என அவள் ஐயம் கொண்டாள்.
குருகுலத்தின் அத்தனை வழித்தோன்றல்களும் குருஷேத்ரக் களத்தில் இறந்தபின் எஞ்சிய ஒரே ஒரு குழந்தை என்பதனால் அதன் வருகையை நாடே எதிர்பார்த்திருந்தது. மாமன்னர் யுதிஷ்டிரர் அஸ்வமேத வேள்வி ஒன்றை தொடங்கவிருந்த நேரம். ஐம்பத்தாறுநாட்டு மன்னர்களும் அரண்மனை வளாகத்தில் வந்து தங்கியிருந்தனர். செய்திகேட்டு யுதிஷ்டிரர் சோர்ந்து முகம்பொத்தி அரியணையில் சரிந்துவிட்டார். அரண்மனையெங்கும் அழுகுரல்கள் ஒலிக்க ஆரம்பித்தன. வீரகுடி வழக்கப்படி குழந்தையை வாளால் போழ்ந்து வடதிசை மயானத்தில் அடக்கம் செய்யவேண்டுமென்று நிமித்திகர் சொன்னார்கள். பட்டத்தரசி திரௌபதி கண்ணீர் மார்பில் சொட்ட ஓடிச்சென்று நதிக்கரை அரண்மனையில் தங்கியிருந்த யாதவமன்னன் கிருஷ்ணனின் முன்னால் நின்றாள். ஞானியான அவனே தன் குலத்தை அழியாமல் காப்பாற்றவேண்டுமெனக் கோரினாள்.
ஈற்றறைக்கு வந்து குழந்தையைக் கண்டதுமே கிருஷ்ணன் புரிந்துகொண்டான். அதன் அன்னையின் துயரமெல்லாம் தேங்கிய சிமிழ் போலிருந்தது குழந்தை. இக்கணமே இதை இதன் அன்னையிடமிருந்து பிரிக்கவேண்டும், ஒரு துளி தாய்ப்பால்கூட இது அருந்தக்கூடாது என கிருஷ்ணன் சொன்னான். யாதவகுலமருத்துவர்கள் பிரம்மாண்டமான கடற்சிப்பி ஒன்றைத் திறந்து அந்த உயிருள்ள மாமிசத்தின் வெம்மைக்குள் குழந்தையை வைத்து மூடி எடுத்துக்கொண்டு துவாரகைக்கு கொண்டுசென்றார்கள். துவாரகையில் மேலும் நான்குமாதம் உயிருள்ள சிப்பிக்குள் இருந்து அது வளர்ந்தது. அக்குழந்தைதான் உன் தந்தை பரீட்சித் என்றார் உத்தங்கர்.
உன் பாட்டி உத்தரை அதன்பின் உயிர்தரிக்கவில்லை. தன் உடல் நீங்கி வெளியே வந்துகிடந்த குழந்தையை உடைந்த கட்டியிலிருந்து வெளிவந்த சீழைப் பார்க்கும் நிம்மதியுடன் பார்த்தபின் கண்களை மூடி மெல்ல விலகிப்படுத்துக்கொண்டாள். தன்னிலை மீளாமலேயே நான்காம் நாள் அவள் இறந்துபோனாள். சிப்பிகளுக்குள் வளர்ந்த சோதனையாலேயே அவனை அனைவரும் பரீட்சித் என்று அழைத்தனர். தாயின் இதயத்துடிப்புகள் கேளாமால், முலைச்சுவை அறியாமல் பரீட்சித் வளர்ந்தான். அவன் அறிந்ததெல்லாம் உப்பு சுவைக்கும் கடல்மணத்தை மட்டும்தான். எஞ்சிய வாழ்நாளெல்லாம் அவன் மண்ணில் கால்நிலைக்காதவனானான்.
மண்ணிலிறங்கியதும் உயிர்வெறியுடன் உண்டும் குடித்தும் பரீட்சித் வளர்ந்தான். நூல்களும் நெறிகளும் வித்தைகளும் கற்றுக்கொடுக்கப்பட்டாலும் அவனுக்கு அவன் குலக்கதைகள் ஏதும் சொல்லப்படவேயில்லை. ஒருமுறைகூட அவன் அஸ்தினபுரிக்கு அனுப்பப்படவுமில்லை. எனவே அஸ்தினபுரியை கண்ணுக்குத்தெரியாத இருள்போல நிறைத்திருந்த மாபெரும் போரின் நினைவுகள் எதையும் அவனறியவில்லை. வேட்டையில் விருப்பம்கொண்டவனாகவும் ,நேற்றும் நாளையும் இல்லாத துடுக்கு கொண்ட இளைஞனாகவும் அவன் வளர்ந்தான். பாட்டிவழி உறவான மாத்ரதேசத்தில் இருந்து மாத்ரிதேவியை மணம்செய்துகொண்டான்.
பரீட்சித்துக்கு பதினெட்டு வயதிருக்கையில் சக்ரவர்த்தி யுதிஷ்டிரர் அவனை இந்திரப்பிரஸ்தத்தின் இளவரசனாக பட்டம்சூட்டி ஆட்சியதிகாரத்தை யுயுத்சுவிடம் கையளித்துவிட்டு தன் சகோதரர்களுடன் மகாபிரஸ்தானம் சென்றார். ஆனால் இருபத்தெட்டு வயதுவரை பரீட்சித் அரசபதவி ஏற்காமல் காட்டில் வேட்டையாடி அலைந்தான். ஜனமேஜயன், சுருதசேனன், உக்ரசேனன், பீமசேனன் என்னும் மைந்தர்கள் பிறந்தபின்னரும் அவன் செங்கோல் ஏந்த சித்தமாகவில்லை.
ஆனால் குருகுலத்து மன்னர்களின் வாழ்க்கை என்பது அவர்களை நிழலெனத்தொடரும் நாகங்களுடன் அவர்கள் ஆடும் ஒரு பகடையாட்டம் மட்டுமே. வேட்டைக்காக காட்டுக்குச்சென்ற பரீட்சித் அங்கே மரத்தடியில் தவம்செய்துகொண்டிருந்த சமீகர் என்ற முனிவரைக் கண்டான். பேசாநெறி கொண்ட அவரிடம் இந்தப்பாதை எங்குசெல்கிறது என்று கேட்டான். அவர் பதில் சொல்லாததைக் கண்டு சினம்கொண்டு சட்டென்று திரும்பி அங்கே புதரில் நெளிந்த பச்சைப்பாம்பொன்றைப் பிடித்து மரத்திலறைந்து கொன்று அவர் கழுத்தில் போட்டுவிட்டு திரும்பிவிட்டான்.
ஜனமேஜயா, அந்தப்பாம்பின் பெயர் ஆனகன் என்றார் உத்தங்கர். மண்ணுலகை நிறைத்திருக்கும் நாகர்களின் உலகைச்சேர்ந்தவன் அவன். குருகுலமன்னர்களை ஒவ்வொருகணமும் நாகங்கள் பின் தொடர்ந்துகொண்டிருந்தன. அன்றைய பணியை ஆனகன் செய்துகொண்டிருந்தான். ஒவ்வொரு கணமும் ஒரு விதியின் தருணத்தை எதிர்நோக்கியிருந்த நாகங்கள் அந்தக்கணத்திலிருந்து இன்னொரு கதையை தொடங்கின. ஏழு நாகங்கள் ஏழு முனிகுமாரர்களாக உருவம் கொண்டு சமீகரின் மகன் கவிஜாதனை தேடிச்சென்றன. வடக்குமலைகளில் குரங்குமனிதர்களின் வழிவந்த குலங்களில் ஒன்றைச்சேர்ந்த பெண்ணுக்கும் சமீகருக்கும் பிறந்தவன் அவன். வனத்தில் கனிகள்தேடச்சென்ற கவிஜாதனை விளையாட அழைத்த நாகங்கள் அவனை எள்ளி நகையாடின. ‘’செத்த பாம்பை அணிந்த உன் தந்தை சிவனுக்கு நிகரானான்’ என்றன.
சினம்கொண்ட கவிஜாதன் பரீட்சித்தைத்தேடி வந்தான். இரவில் தன் அரண்மனை லதாமண்டபத்தில் மதுக்கோப்பையுடன் பரீட்சித் தனித்திருக்கையில் மரங்களின் வழியாக குரங்குபோல ஒருவன் தாவித்தாவி வருவதைக் கண்டு எழுந்து திகைத்து நின்றான். அருகே வந்து இறங்கிய கவிஜாதன் குரங்குமுகத்தில் கடும்சினத்தால் சிரிப்பு போல விரிந்த பற்களைக் காட்டி ‘நான் உன்னால் அவமதிக்கப்பட்ட சமீகரின் மைந்தன். என் பெயர் கவிஜாதன். உன்னிடம் உன் விதியைச் சொல்லிவிட்டுச் செல்வதற்காக வந்தேன்’ என்றான். ‘நீ யாரென்று நீ அறியவில்லை, நீ என்னவாகப்போகிறாய் என்றும் நீ அறியவில்லை. பிறக்கும்போது தன் விதியை எதிர்காலமாகக் கொண்டு பிறப்பவனே மனிதன். நீ இறந்தகாலத்தையே விதியாகக் கொண்டு பிறந்திருக்கும் சபிக்கப்பட்டவன்.’
பிரமித்து நின்ற பரீட்சித்திடம் கவிஜாதன் சொன்னான், ‘உன் குலவரலாறு முழுக்க உன் குருதியில் இருக்கிறது. அவற்றின் மீது ஒரு மெல்லிய பட்டாடையைப்போட்டு மூடிவிட்டுச் சென்றிருக்கிறான் யாதவகிருஷ்ணன். அதை நான் இதோ கிழிக்கப்போகிறேன். நீ குருதிமழையில் பிறந்த எளிய காளான். அதற்குமேல் ஒன்றுமில்லை…என்னுடன் வா. உனக்கு நீ பார்த்தேயாகவேண்டிய காட்சியொன்றைக் காட்டுகிறேன்.’
மொத்த அறிவும் அதை விலக்கியபோதிலும் பரீட்சித்தால் செல்லாமலிருக்க முடியவில்லை. கவிஜாதன் அவனைத் தூக்கி மரக்கிளைகள் வழியாகவே கொண்டு சென்றான். காடுகளின் மீது பரவிய இலைப்பரப்புகளுக்குமேல் நீரில் நீந்துவதுபோலச் சென்றுகொண்டிருந்தான். அது சுக்லபட்ச பதின்மூன்றாவது நாள். வானத்தில் முழுநிலவு நிறைந்திருந்தது. பின்னிரவில் கவிஜாதன் பரீட்சித்தை ஒரு பெரிய வெட்டவெளிக்குக் கொண்டுசென்று இறக்கினான். அது எந்த இடம் என்று பரீட்சித் வினவினான். அஸ்தினபுரியின் ஒவ்வொரு மனமும் அறிந்த இடம், மூன்றுதலைமுறைகளாக எவருமே வந்திராத இடம் என்றான் கவிஜாதன். இங்கே வருவதற்கு மானுடப்பாதைகள் இல்லை, நரிகளின் தடம் மட்டுமே உள்ளது. இந்த மண்ணின் பெயர்தான் குருஷேத்ரம்.

நிலவின் ஒளியில் கண்ணுக்கு எட்டிய தொலைவுவரை விரிந்திருந்த செம்மண் பொட்டலில் சிறிய கோபுரங்கள் போல சிதல்புற்றுகளும் ஆங்காங்கே ஒரு சிலமுள்மரங்களும் நின்றன. பித்தெழுந்த கனவில் நிற்பவன் போல பரீட்சித் அந்த மண்ணில் நின்றான். அக்கணமே அவன் அனைத்தையும் தனக்குள் கண்டுவிட்டான். நிலையழிந்தவனாக அந்த மண்ணில் ஓடி ஓடிச் சுழன்றுவந்தான். ஒரு புற்றை அவன் உடைத்தபோது உள்ளே ஓர் யானையின் எலும்புக்கூடு அதன் மத்தகத்தைப் பிளந்த வேலுடன் இருக்கக் கண்டான். பின்பு வெறிகிளம்பி ஒவ்வொரு புற்றாக உடைத்து உடைத்து திறந்தான். ஒவ்வொன்றுக்குள்ளும் வெள்ளெலும்புக் குவியல்களைக் கண்டான். ஒரு தருணத்தில் திகைத்து நின்று பின்பு தளர்ந்து விழுந்தபோது அந்த மண் ஒரு குடல்போல செரித்துக்கொண்டிருப்பதன் ஒலியைக் கேட்டான்.
அங்கே ஆடும் நிழல்களை கவனிக்கும்படி கவிஜாதன் சொன்னான். ஒளியைக் கண்ட கண்களை நிழலைக்காணும்படி பழக்கியபோது பரீட்சித் நாகங்களைக் கண்டான். இருண்ட மெல்லிய நிழலாட்டங்களாக நாகங்கள் அங்கே நிறைந்திருந்தன. கண் தெளியும்தோறும் நாகங்கள் பெருகிக்கொண்டே சென்று ஒரு கட்டத்தில் கருநாகங்களாலான மாபெரும் வலையொன்றைக் காணமுடிந்தது. நெளிந்துகொண்டிருந்த அந்தவலையில் அந்த படுகளம் சிக்கி அசைந்துகொண்டிருப்பதாகத் தோன்றியது. அச்சத்துடன் அவன் கவிஜாதனை நெருங்கி அவன் கரங்களை பற்றிக்கொண்டான். ‘நான் காட்டவிரும்பியது இதைத்தான் மன்னனே. நீ நாகங்களின் விளையாட்டுப்பாவை அன்றி வேறல்ல….அதோ சுடர்விடும் அந்த இரு செவ்விழிகளும் நாகங்களின் அரசனான தட்சகனுடையவை. இன்றில் இருந்து ஏழாம் நாள், மார்கழி மாதம் சப்தரிஷி விண்மீன்கள் ஏழும் ஒரே ராசியில் வந்து சேரும்போது நீ அவன் விஷக்கடியை ஏற்று உயிர்விடுவாய்’ என்றான் கவிஜாதன்.
காலையில் பரீட்சித்தை தேடிவந்த சேவகர்கள் அவனைக்காணாமல் திகைத்தனர். நந்தவனத்தின் வாயில்களேதும் திறக்கப்பட்டிருக்கவுமில்லை. அமைச்சர்களும் பிறரும் சேர்ந்து தேடியபோது லதாமண்டபத்திலிருந்த புதர் ஒன்றுக்குள் உடல் நடுங்கி ஒடுங்கியிருந்த மன்னனை கண்டுபிடித்தனர். காலடியோசை கேட்டதும் அவன் அதிர்ந்தான். தொடுகையில் அவன் உடல் துள்ளித்துள்ளி விழுந்தது. கண்கள் கலங்கி கலங்கி வழிய பார்வை நிலையற்று அலைபாய்ந்தது. அவனால் ஒரு சொல்லும் பேசமுடியவில்லை. அவனை அள்ளிக் கொண்டுசென்று படுக்கவைத்தனர். வேகம் மிகுந்த மதுவும் சித்தத்தை அமைதிசெய்யும் மருந்துகளும் கொடுத்து மெல்லமெல்ல அவனை மீட்டு எடுத்தனர்.
பரீட்சித் அன்றே ரதமேறி கிளம்பிச்சென்று தன் குலகுருவான வைசம்பாயன மகரிஷியைக் கண்டு என்னசெய்வதென்று கேட்டான். ‘ நாகங்கள் காமம் அகங்காரம் என்னும் ஆதிஇச்சைகளின் பருவடிவங்கள். ஆதி இச்சைகளை வென்றவனை நாகங்கள் அண்டமுடியாது’ என்று நெறிநூல்களை ஆராய்ந்து வைசம்பாயனர் பதிலுரைத்தார். அத்தனை இச்சைகளையும் அணைத்து விட்டு தனக்குள் தானே நிறைந்து தனித்திருந்தால் நாகங்கள் தீண்டவே முடியாதென்று வழிசொன்னார். ‘ஆனால் அது மனிதர்களுக்கு எளியதல்ல. ஐந்தும் அடக்கி அகத்தையும் வென்ற முனிவர்களே தோற்றுவிடுவார்கள்’
’எனக்கு வேறு வழியில்லை குருநாதரே’ என்றான் பரீட்சித். தன் அவைச்சிற்பிகளை அழைத்து அன்று மாலைக்குள் ஒரு தவச்சாலையை அமைத்தான். அஸ்தினபுரிக்கு கிழக்கே இருந்த ஏரிக்குள் எட்டு தூண்களின்மீது அந்தச் சாலை அமைந்தது. அரச உடைகளைக் களைந்து, துறவுக்குரிய மரவுரி அணிந்து, தன் நாட்டை அமைச்சர்களிடம் ஒப்படைத்துவிட்டு, தன் உடைமைகளனைத்தையும் அறிஞர்களுக்கும் எளியவர்களுக்கும் கொடையளித்துவிட்டு பரீட்சித் அதற்குள் தஞ்சம்புகுந்தான். அறவோர் வகுத்த கடும் நோன்புகள் வழியாக தன் காமத்தையும் அகங்காரத்தையும் முழுமையாகவே தன்னிலிருந்து இறக்கிவைத்தான். அச்சத்தால் நடுங்கும் உடலுடன் தன் நிழலை தானே பார்த்துக்கொண்டு அந்தச் சாலைக்குள் அவன் தனித்திருந்தான்.
விதியின் தூதனாக வந்த தட்சன் அந்த நீரரணுக்கு வெளியே ஆறுநாட்கள் பரீட்சித்தின் நோன்பின் ஒவ்வொரு கணத்தையும் கவனித்தபடி இமையா விழிகளுடன் காத்திருந்தான். விதியின் திட்டத்தை பரீட்சித் தன் நெறியால் வென்றுவிட்டானென்று அவன்கூட நினைத்தான். ஏழாம்நாள் இரவில் நடுச்சாமம் முடிவதற்கு ஒருநாழிகைக்கு முன்னால் தன்னைக் காணவந்த வைதிகன் ஒருவனிடம் பரீட்சித் ‘எனக்கு இனி சோதனைகளேதுமில்லை. நான் காமத்தையும் அகங்காரத்தையும் முற்றிலும் வென்றுவிட்டேன்’ என்று சொன்னபோது அந்த அகங்காரத்தையே காரணமாகக் கொண்டு தட்சன் ஒரு சிறுபுழுவின் வடிவில் பரீட்சித்தின் தவச்சாலைக்குள் நுழைந்தான். அன்றிரவு பரீட்சித் தன் நோன்புணவுக்காக மாதுளம்பழமொன்றை எடுத்தபோது தட்சன் அதற்குள்ளிருந்து சிறிய சிவந்த புழுவாகக் கிளம்பி பரீட்சித்தின் உதடுகளில் விஷமுத்தமிட்டான். குருவம்சத்தின் ஐம்பத்தோராவது மன்னனும் நாகங்களின் விளையாடலுக்கு இரையானான்.
உத்தங்கரின் கதையைக்கேட்டு ஜனமேஜயன் கண்ணீர் வடித்தான். திரும்பி வந்தவன் சூதர்கள் அனைவரையும் வரவழைத்து தன் குலக்கதைகள் அனைத்தையும் ஒன்றுகூட மிச்சமில்லாமல் பாடக்கேட்டான். நாகங்களின் வலையில் சிக்கிய சிறு பூச்சிகளே தானும் தன்குலத்து மூதாதையரனைவரும் என உணர்ந்தபின்பு தன் குலகுருவான வைசம்பாயனரை அழைத்து ஆலோசனை கேட்டான். ’சர்ப்பசாந்தி வேள்விகள் வழியாக நாகங்களை நிறைவுசெய்யலாம். அது ஒன்றே வழி’ என்றார் வைசம்பாயனர். ‘அந்த வேள்விகளால் நாகங்களை முழுமையாகவே தடுத்துவிடமுடியுமா?’ என்று கேட்டான் ஜனமேஜயன். ’ஒருபோதும் முடியாது. நாகங்கள் தங்கள் நிழல்களில் இருந்தே மீண்டும் முளைத்தெழக்கூடியவை. ஒவ்வொரு உடலிலும் நாகங்கள் உள்ளன. மிருகங்களில் வாலாகவும் நாவாகவும் இருப்பவை நாகங்களே. மனிதர்களின் கைநகங்களெல்லாம் நாகத்தின் பற்களே’ என்றார் வைசம்பாயனர்.
‘குருநாதரே, இனி இந்த மண்ணில் குருஷேத்ரங்கள் நிகழக்கூடாது. இனிமேல் மானுடக்குருதி மண்ணில் விழக்கூடாது. அதற்கான வழி உண்டா? அதை மட்டும் சொல்லுங்கள்’ என்றான் ஜனமேஜயன். நூல்களை ஆராய்ந்து வைசம்பாயனர் ‘ஆம் உண்டு’ என்று சொன்னார். ‘அது தேவர்களும் அசுரர்களும்கூட நினைக்கமுடியாத வழி. காமமும் அகங்காரமுமாக ஈரேழு உலகையும் நிறைத்திருக்கும் நாகர்களை இந்த மண்ணிலிருந்தும் விண்ணிலிருந்தும் பாதாளத்திலிருந்தும் முழுமையாகவே அழிக்கவேண்டும். அதற்குரிய பூதயாகம் ஒன்றை அதர்வவேதம் சொல்கிறது. அதன் பெயர் சர்ப்பசத்ர வேள்வி. அந்தவேள்வியை முழுமையாக நாம் நடத்திமுடித்தால் மனிதகுலத்தின் உள்ளங்களுக்குள் உறைந்து கிடக்கும் மொத்த இருட்டையும் அந்த வேள்வித்தீயில் எரித்து அழிக்கமுடியும். கடைசி பாம்பும் எரிந்து அழியும்போது மனிதகுலத்தின் உள்ளங்கள் முழுக்க தூய வெளிச்சம் மட்டும்தான் மிச்சமிருக்கும். அங்கே போட்டியும் பொறாமையும் இருக்காது .காமமும் வெறுப்பும் இருக்காது… அதற்குப்பின் உலகத்தில் தீமையே இருக்காது… மனிதகுலத்தில் போரே நடக்காது…’
‘அதைசெய்கிறேன் குருநாதரே’ என ஜனமேஜயன் தன் ஆசிரியரின் கால்களை பற்றிக்கொண்டான். ‘என் அரசு செல்வம் அனைத்தையும் அதன்பொருட்டு செலவிடுகிறேன். அதற்காகவே வாழ்கிறேன்….அதற்காக எதற்கும் சித்தமாக இருக்கிறேன்’ கண்ணீருடன் அவன் சொன்னான் “குருஷேத்ர மண்ணில் செத்து விழுந்த ஐந்துலட்சம் மனிதர்களிடம் நான் சொல்லவிரும்புகிறேன் குருநாதரே, எங்கள் மூதாதையர்களே நீங்கள் நிம்மதியாக உறங்குங்கள். இனிமேல் நாங்கள் போர் செய்ய மாட்டோம். இனிமேல் நாங்கள் சகமனிதனை வெறுக்க மாட்டோம். நீங்கள் உங்கள் உயிரைக்கொடுத்து கற்றுத்தந்த பாடத்தை நாங்கள் கற்றுக்கொண்டோம்… அப்படியொரு சொல்லை என்னால் சொல்லமுடிந்தால் நான் குருகுலத்தின் வாழ்க்கையை நிறைவுசெய்தவன் ஆவேன். களத்தில்பட்ட அத்தனை குருவம்சத்தினருக்கும் என் கடனைச் செய்தவனாவேன்”
ஜனமேஜயனின் ஆணைப்படி இருபதாண்டுகாலம் முயன்று வைசம்பாயனர் சர்ப்பசத்ர வேள்வியை ஒருங்கிணைத்தார். நான்குமாதங்கள் எட்டுத்திசைகளிலும் நடந்த உபவேள்விகள் வழியாக சமித்துகளை சேர்த்தார்.அதற்காக பாரதவர்ஷமெங்கணும் இருந்து முனிவர்களையும் வைதிகர்களையும் பண்டிதர்களையும் வரவழைத்தார். பாரதவர்ஷத்தின் ஐம்பத்தாறு தேசங்களிலிருந்தும் வேள்விநெருப்புக்குரிய ஆயிரத்தி எட்டு அவிப்பொருட்களை சேர்த்தார். பங்குனி மாதம் கிருஷ்ணபக்‌ஷம் முதல்நாளில் அரண்மனை அருகே எழுப்பப்பட்ட வேள்விக்கூடத்தில் மகாசர்ப்பசத்ர வேள்வி தொடங்கியது. முப்பத்துமுக்கோடி வானவரும், மும்மூர்த்திகளும், மூதாதையரும் அவியளித்து நிறைவுசெய்யப்பட்டனர். திசைத்தேவர்களும் விண்ணகமுனிவர்களும் வேதமூர்த்திகளும் மகிழ்விக்கப்பட்டனர். காவல்பூதங்களும் கானகதேவதைகளும் கனியச்செய்யப்பட்டனர். வேள்விமங்கலம் நிறைவடைந்தபின் நாற்பதுநாட்களுக்குப்பின்பு பூர்ணாகுதி நிகழவேண்டிய இறுதி நாள் அன்று.

139 .பெளலஸ்ய மகரிஷி கோத்ரம்

மகரிஷி வரலாறு புலப்படவில்லை.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

ஸ்ரீகாரம்தவரு :- ஸ்ரீ காரம் என்னும் சக்தியின் பீஜ மந்திர ஜெபம் செய்பவர்கள். 
யாக்ஞவல்கியதவரு :- யாக்ஞவல்கிய சூத்திரத்தை அனுஷ்டானம் செய்பவர்கள். 

தேவாங்க CHAT

வணக்கம் நண்பர்களே ,
நாம் ஒன்றாக இணைந்து பல்வேறு தகவல்களை பகிர்ந்துகொள்ளவும்,கருத்துக்களை கூரவும்,இந்த பகுதி இணைக்கப்பட்டுள்ளது .
இதன் மூலம் நம் சமூகம் சார்ந்த சந்தேகங்களை விவாதித்து தெளிவுபெரலாம்.


1/4/14

மகாபாரதம் படிப்பது எப்படி திரு . எஸ். ராமகிருஷ்ணன்

மகாபாரதம்  முழுமையாகப் படிக்க வேண்டும் என்று விரும்புகிறேன், அதை எப்படித் துவங்குவது, என்ன புத்தகத்தை நீங்கள் சிபாரிசு செய்வீர்கள் என்று ஒரு நண்பர் கேட்டார்,
இதே கேள்விகளை பல நேரங்களில் பலரும் என்னிடம் கேட்டிருக்கிறார்கள், ஒவ்வொரு முறை பதில் சொல்லும் போது இதைப்பற்றி விரிவாக எழுத வேண்டும் என்று நினைத்துக் கொள்வேன், இன்றைக்கு நண்பர் கேட்டதும் நான் பயின்ற வழிமுறைகளைத் தெரிவித்தேன்
மகாபாரதம் படிக்க ஆரம்பிக்கும் போது முதலில் எதற்காகப் படிக்க ஆரம்பிக்கிறீர்கள் என்பது முக்கியமானது, காரணம் அதைப்பொறுத்து தான் எவ்வளவு காலம் தேவைப்படும் என்பது முடிவு செய்யப்படும்
வெறும்கதையை மட்டும் வாசிப்பது என்றால் ஆறுமாத காலத்திற்குள் உங்களால் மகாபாரதத்தை வாசித்துவிட முடியும், ஆனால் மகாபாரதம் என்பது மாபெரும் இதிகாசம், அதன் நுண்மையான அம்சங்கள், கவித்துவ அழகு, அறச்சிந்தனைகள், ஊடாடும் பண்பாட்டு சிந்தனைகளை ஆழ்ந்து கற்க விரும்பினால் குறைந்த பட்சம் ஐந்து ஆண்டுகாலம் தேவைப்படும்,
காரணம் ஒவ்வொரு பருவத்தையும் புரிந்து கொள்ள மேலும் அதிகமாக வாசிக்க வேண்டியது வரும்,
என் வரையில் மகாபாரதம் என்பது வாழ்நாள் முழுவதும் வாசித்துக் கொண்டேயிருக்க வேண்டிய புத்தகம், அதை ஒரு போதும் வாசித்து முடிக்க இயலாது, ஒரு சிகரத்தைப் போல அதை ஏறுவதற்கு கொஞ்சம் கொஞ்சமாக நாம் முயற்சிக்க வேண்டும், அது தரும் வாசிப்பு அனுபவம் அலாதியான ஒன்று,
மகாபாரதம் பதினெட்டு பருவங்களைக் கொண்டது,மொத்தமாக பதிமூன்று ஆயிரத்தில் இருந்து பதினைந்தாயிரம் பக்கம் வரக்கூடியது, இதற்கு காரணம் சில பதிப்புகளில் கிளைகதைகள் துண்டிக்கபட்டிருக்கின்றன,  கிரேக்க காப்பியங்களை விட பத்து மடங்கு பெரியது மகாபாரதம்,  மகாபாரத கதாபாத்திரங்களை அறிந்து கொள்வதற்காக  பாரதிய வித்யா பவன் வெளியிட்டுள்ள who is who in the Mahabharata-  subash Mazumdar என்ற சிறிய நூலை வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும்
ஆரம்பநிலையில் மகாபாரதம் படிக்க விரும்புகின்ற பலரும் ராஜாஜியின் வியாசர் விருந்தினைத் தேடி வாசிக்கிறார்கள், இது மிகவும் சுருக்கப்பட்ட மகாபாரதம், பிளாஸ்டிக்கில் செய்த தாஜ்மகால் பொம்மை போன்றது, ஒரிஜினல் மகாபாரதம் முழுமையாகத் தமிழில் வெளியாகி உள்ளது, அதைக் கும்பகோணம் பதிப்பு என்பார்கள், இந்தப் பதிப்பு வாசிக்க சற்றே சிரமம் தரக்கூடியது, காரணம் அதன் மணிப்பிரவாள நடை,
இதை வாசிப்பதற்கு முன்னதாக மகாபாரதம் வாசிப்பதற்கென சில எளிய வழிகளை உருவாக்கிக் கொள்ள வேண்டும்
மகாபாரத மூலப்பிரதியை வாசிப்பதற்கு அடிப்படையாக நான்கு முக்கிய வழிகளை கைக்கொள்ள வேண்டும்,
ஒன்று மகாபாரதம் சார்ந்த எளிய கதைசுருக்கங்களை, நாட்டார்கதைகளை வாசித்துவிடுவது,
இரண்டாவது மகாபாரதம் பற்றிய புனைகதைகள், நாவல்கள், மறுஉருவாக்கங்கள், நாடகங்களை வாசிப்பது,
மூன்றாவது மகாபாரதம் குறித்த ஆய்வுகள், விமர்சனக் கட்டுரைகள், தத்துவ உரைகள் போன்றவற்றை வாசிப்பது,
நான்காவது நிகழ்த்துகலைகளான நாடகம், கூத்து, சினிமா போன்றவற்றிலும், சடங்குகளிலும், ஒவியம் சிற்பம்  போன்ற நுண்கலைகளிலும் மகாபாரதம் எப்படி இடம் பெற்றுள்ளது என்பதை அறிந்து கொள்வது, இந்த நான்கு வழிகளில் ஊடாடித் தான் மூலநூலை வாசிக்க முடியும்
ஒருவேளை நீங்கள் நேரடியாக மூலநூலை வாசிக்க ஆரம்பித்தால் கூட மேற்சொன்ன வழிகள் உங்களுக்குப் பின்னால் தேவைப்படக்கூடும்
மகாபாரதம் படிப்பதற்கு முன்பு சில அடிப்படை எண்ணங்களை நாம் உருவாக்கி கொள்ள வேண்டும்
1)       ஒரே மூச்சில் மகாபாரதம் படித்து முடித்துவிட வேண்டும் என்ற எண்ணத்தைக் கைவிட வேண்டும்,
2)       மகாபாரதம் கதைக்குள் கதை, முன்பின் நகரும் கதை, ஒரே கதையின் மாறுபட்ட கதைகள் , சுழல்கதை என்று பல்வேறு சொல்முறைகளை கொண்டது, ஆகவே நிதானமாக, கவனமாக வாசிக்க வேண்டும், முடிந்தால் குறிப்புகளை உருவாக்கி வைத்துக் கொள்ள வேண்டும்
3)       மகாபாரதம் வாசிக்கையில் அது என்றோ நடந்த உண்மையா, அல்லது கற்பனையா என்ற கேள்வி தொடர்ந்து எழுந்து கொண்டேயிருக்கும், அந்தக் கேள்விக்கான விடையைச் சற்று தூர வைத்துவிட்டு புத்தகத்தை படித்துக் கொண்டு செல்ல வேண்டும்
4)       மகாபாரதம் பண்டைய இந்தியாவில் நடைபெறும் கதை, ஆகவே அன்றுள்ள நிலவெளி, அதன் ஆறுகள், மலைகள், இனக்குழுக்களின் வரலாறு ஆகியவற்றின் எளிய அறிமுகம் அவசியம் தேவை
5)       மகாபாரதம் ஒரு புனித நூல் என்ற எண்ணத்துடன் படிக்க அணுக வேண்டாம், அது ஒரு மாபெரும் காப்பியம், இந்தியாவின் மாபெரும் நினைவுத்திரட்டு, ஒரு சமூகம் தனது நினைவுகளை கதைவடிவமாக மாற்றி வைத்திருக்கிறது, ஆகவே நாம் பல்வேறு நினைவுகளின் ஊடே சஞ்சாரம் செய்கிறோம் என்பதே வாசிப்பதற்கான தூண்டுதல்.  பகவத்கீதையை எப்போதுமே தனியாக வாசிப்பதே சிறந்த ஒன்று
6)       மகாபாரதம் படிப்பதை விடவும் வாசித்துக் கேட்பது முக்கியமானது, அதற்கு ஒரு ஆசான் தேவை, நான் அறிந்தவரை  வில்லிபுத்தூரார் பாரதத்தை கரைத்துக்குடித்தவர் பேராசிரியர் ஞானசம்பந்தம், அவரை நாம் நகைச்சுவை பேச்சாளர் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம், அவர் சிறந்ததொரு மகாபாரத வல்லுனர், அவரைப் போல தேர்ந்த ஆசான் ஒருவர் வாசிப்பிற்கு துணை செய்ய அவசியம், அல்லது சமஸ்கிருதம் அறிந்த ஒரு அறிஞரின் துணை அவசியமானது
7)       மகாபாரதம் படிப்பதற்கு பெரும் தடையாக இருப்பது நாம் முன்பு கேட்டு அறிந்துள்ள அறைகுறையான மகாபாரதக் கதைகள் மற்றும் சம்பவங்கள், அந்தக் கதை இல்லையே, இந்தக் கதாபாத்திரம் அப்படி நடந்து கொள்ளவில்லையே என்ற கேள்வி சதா மனதிற்குள் கேட்டுக் கொண்டேயிருக்கும், அதையும் ஒரங்கட்டிச் செல்லுங்கள்
8)       மகாபாரதத்தை கொஞ்சம் கொஞ்சமாக படித்துக் கொண்டே போவது தான் சிறந்த வழி, அதற்கு முதலில் எளிமையாக ஒருமுறை அதன் கதையை வாசித்துவிடுங்கள், இது போன்ற எளிய அறிமுகத்திற்கு தேவதூத் பட்நாயக் எழுதிய ஜெயம் / விகடன் பிரசுர வெளியீடு, அமர் சித்ரா கதா காமிக்ஸ், மற்றும் பெரிய எழுத்து மகாபாரதக் கதை உதவக்கூடும்,
9)       அதன்பிறகு கே எம் முன்ஷி எழுதிய கிருஷ்ணா அவதார தொகுதிகள்
வாசிக்கலாம், இது எட்டு தொகுதிகள், பாரதிய வித்யாபவன் வெளியிட்டுள்ளது
Dr. K.M. Munshi – Krishnavatara I: The Magic FluteKrishnavatara II: The Wrath of an Emperor Krishnavatara III: The Five Brothers,Krishnavatara IV: The Book of BhimaKrishnavatara V: The Book of Satyabhama‘, Krishnavatara VI: The Book of Vedavyaasa The MasterKrishnavatara VII: The Book of YudhishthiraKrishnavatara VIII: The Book of Kurukshetra (incomplete) இந்த தொகுதிகள் தமிழில் வெளியாகி உள்ளன
10)   அதன் பிறகு உரையுடன் கூடிய வில்லிபுத்தூரார் பாரதம், மற்றும் நல்லாம்பிள்ளை பாரதம் இரண்டினையும் வாசிக்க வேண்டும், நல்லாப்பிள்ளை பாரதம் கி.பி. 1888இல் வெளியானது, , 2007ல் புதிய மறுபதிப்பு வந்துள்ளது,  அரவான் களப்பலி வியாச பாரதத்தில் கிடையாது, ஆனால் நல்லாம்பிள்ளை மற்றும் வில்லிபாரத கதைகளில் உள்ளது, ஆகவே இது போன்ற தமிழகம் சார்ந்த கிளைக்கதைகளுக்காக இவை அவசியம் வாசிக்கப்பட வேண்டும், கூடுதலாக விருப்பமுள்ளவர்கள் பெரிய எழுத்து பவளக்கொடி, அல்லிஅரசாணி மாலை போன்ற நூல்களை வாசிக்கலாம்
11)   மகாபாரதத்தை ஆங்கிலத்தில் வாசிக்க விரும்புகின்றவர்கள் Kisari Mohan Ganguli, பதிப்பை வாசிக்கலாம், இது பழமையான ஆஙகில மொழியாக்கம், ஆனால் மூலத்தோடு நெருக்கமாக உள்ளது, இந்த பதிப்பு முழுமையாக இணையத்தில் வாசிக்க கிடைக்கிறது, Mahabharata with commentary of Nilakantha -Gopal Narayan and Co., Bombay என இன்னொரு பதிப்பும் ஆங்கிலத்தில் உள்ளது , எளிமையான வாசிப்பிற்கு R. K. Narayan சுருக்கமாக வெளியிட்டுள்ள The Mahabharata வாசிக்கலாம். Dr. P. Lal  கவிதை நடையில் ஒரு மொழியாக்கம் செய்திருக்கிறார்.
12)   எம்.வி. வெங்கட்ராமின் “நித்யகன்னி, எஸ் எல் பைரப்பா எழுதிய கன்னட நாவலான பர்வா, காண்டேகரின் யயாதி, எம்.டி.வாசுதேவன் நாயரின் இரண்டாம் இடம், பிகே பாலகிருஷ்ணனின் இனி நான் உறங்கட்டும், பிரதிபா ரேயின் யக்ஞசேனி, வங்காள நாவலான சாம்பன், இந்திரா பார்த்தசாரதியின் கிருஷ்ணா, கிருஷ்ணா, சோ வின் மகாபாரதம்,  நா, பார்த்தசாரதியின் அறத்தின் குரல், சிவாஜி சாவந்தின் மிருத்யுஞ்சய் என்ற கர்ணன் நாவல். ஜெயமோகன் எழுதிய, பத்மவியூகம், வடக்கு முகம், பதுமை, சஷி தரூர் எழுதிய, Great Indian Novel,  பாலகுமாரன் எழுதிய பீஷ்மர், சித்ரா பானர்ஜி திவாகருனியின் The Palace Of Illusions, மற்றும்  பாஷனின் உறுபங்கம், தாகூரின் சித்ராங்கதா, பாரதி எழுதிய பாஞ்சாலி சபதம், பி எஸ் ராமையாவின் தேரோட்டி மகன், எம் வி வெங்கட்ராமின் மகாபாரத பெண்கள், இத்துடன் எனது நாவல் உப பாண்டவம் போன்றவற்றைப்  படிக்கலாம்
13)   கட்டுரைகளில் ஐராவதி கார்வே எழுதிய யுகாந்தா, குருசரண் தாஸ் எழுதிய The Difficulty of Being GoodGender and Narrative in the Mahabharata,Brodbeck & B. Black (ed.): Routledge. Reflections and Variations on the Mahabharata, -T.R.S.Sharma, Sahitya Akademi. Great Golden Sacrifice of The Mahabharata- Maggi Lidchi Grassi . Rethinking the Mahabharata: A Reader’s Guide to the Education of the Dharma King by Alf Hiltebeitel.  The Questionable Historicity of the Mahabharata,  by SSN Murthy.  யட்சப் பிரசனம், விதுரநீதி, போன்றவற்றை படிக்கலாம்
14)   இதுபோலவே பீட்டர் புரூக்கின் மகாபாரதம் நான்குமணி நேரம் ஒடக்கூடிய திரைப்படம், இதற்குத் திரைக்கதை எழுதியவர் ஜீன் கிளாடே கேரியர், இது மகாபாரதம் பற்றிய நமது மரபான எண்ணங்களை மாற்றி அமைக்க கூடியது
15)   பதினெட்டு நாள் தெருக்கூத்தினை முழுமையாகப் பார்க்க முடிந்தால் மக்கள் மனதில் மகாபாரதம் எப்படி உள்ளது என்பதை நன்றாக அறிந்து கொள்ள முடியும், நான் தெருக்கூத்து குழுவோடு ஒன்றரை மாதம் உடன் தங்கி அலைந்திருக்கிறேன்,
16)   இது போலவே தொலைக்காட்சித் தொடராக வெளிவந்த பிஆர் சோப்ராவின் மகாபாரதம் வெங்கட் மொழியாக்கத்தில் தமிழில் வெளியாகி உள்ளது, இது வாசிக்க சுவாரஸ்யமான புத்தகம், தொலைக்காட்சி தொடருக்கு திரைக்கதை வசனம் எழுதியவர் Rahi Masoom Reza என்ற இஸ்லாமிய அறிஞர், கவித்துவமான உரையாடல்களை எழுதியிருக்கிறார்
17)   இதன் பிறகு மகாபாரத மூலநூலை வாசிக்க முயல வேண்டும், அதற்கு சிறந்த புத்தகம் கும்பகோணம்  ம.வீ.இராமானுஜாசாரியார் பதிப்பு, இது நேரடியாக சமஸ்கிருத மொழியில் இருந்து தமிழுக்கு மொழியாக்கம் செய்யப்பட்டது,  இதை கும்பகோணம் சிவராமகிருஷ்ண ஐயர் மறு பதிப்புரிமை பெற்று  வெளியிட்டார். இந்த மொழி பெயர்ப்பு பதினெட்டு பாகங்களாக, பதினெட்டு நூல்களாக வெளியிடப்பட்டுள்ளன; 1. ஆதி பர்வம் 2. ஸபா பர்வம் 3. வன பருவம் 4.விராட பருவம் 5. உத்யோக பருவம் 6.பீஷ்ம பர்வம் 7.துரோண பருவம் 8. கர்ண பர்வம் 9. சல்ய பருவம் 10. சாந்தி பருவம் 11. அனுசாஸன பர்வம் 12. ஸ்த்ரீ பர்வம் 13.ஆச்வதிக பர்வம் 14 மௌஸலை பர்வம் 15 சௌப்திக பர்வம் 16. மஹாப்ரஸ்தானிக பர்வம் 17.ஆச்ரமவாஸிக பர்வம் 18. ஸ்வர்க்கா ரோஹண பர்வம்.
பெரும்பான்மையான மகாபாரத பர்வங்களைத் தமிழில் மொழி பெயர்த்தவர் கும்பகோணம் ஸ்ரீநிவாஸாசாரியார் உத்யோக பர்வம் கருங்குளம் கிருஷ்ணசாஸ்திரிகளாலும் விராடபருவம் கும்பகோணம் அ.வேங்கடசாசாரியாராலும். சாந்தி பர்வம் பைங்காநாடு கணபதி சாஸ்திரிகளாலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
மகாபாரதம் வெளியிடுவதில் இராமானுஜாசாரியார் மிகுந்த சிரமம் அடைந்திருக்கிறார், 1930களில் மகாபாரதம் வெளியிடுவதற்கு பதினைந்து ஆயிரம் பணத்தை இழந்திருக்கிறார், அன்று ஒருவரின் மாத சம்பளம் 60 ரூபாய், மகாபாரதத்திற்காகவே வாழ்ந்த மகத்தான மனிதர் இராமானுஜாசாரியார்
அன்று  மகாபாரதப் பதிப்புகள் முன்வெளியீட்டு திட்டத்தில் விற்கபட்டிருக்கின்றன, ஆகவே இன்றும் தஞ்சை, திருச்சி, கும்பகோணம் பகுதி பழைய புத்தக கடைகளில் மகாபாரத பதிப்புகள் பழைய புத்தகமாக கிடைக்கின்றன, நானும் கோணங்கியும் அப்படி தேடித்தேடி முழுமையான மகாபாரதத் தொகுதிகளை சேகரித்து வைத்திருக்கிறோம்
கும்பகோணம் மகாபாரதப் பதிப்பு இன்று  விற்பனைக்கு கிடைக்கின்றது
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி
S.Venkataramanan
Sri Chakra Publications.
9/135 Nammalwar street, East tambaram, Chennai.
Ph: +91 9894661259
மொத்த விலை ரூ4500,
**
மனிதர்கள் தனக்கு உரிமையானதை விட்டுக் கொடுத்தால் என்ன நடக்கும் என்பதை பல்வேறு நிலைகளில் விளக்குவதே ராமாயணம், விட்டுக் கொடுக்காவிட்டால் என்ன நடக்கும் என்பதை விளக்குவதே மகாபாரதம், இரண்டும் மனிதர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதையே கவனப்படுத்துகின்றன
••
இதிகாசங்கள் பெருங்கடலைப் போன்றவை, அதன் வெளித்தோற்றம் ஒரு விதமாகவும் உள்கட்டுமானம் விரிந்து கொண்டே போவதாகவும் இருக்கும், இதிகாசங்களை புரிந்து கொள்ள கற்பனை மிக அவசியமானது,
••
ஒரு கதாபாத்திரம் கூட தேவையின்றி இடம் பெற்றிருக்காது, ஆகவே இதில் இடம் பெற்றுள்ள சிறுகதாபாத்திரங்கள் கூட தனித்து ஒளிரக்கூடியவர்களே
••
மகாபாரதம் எனும் கதைக்கு முதுகெலும்பாக இருப்பவர் பீஷ்மர், அவர் தான் கதையின் மையவிசை, அவர் ஒருவருக்குத் தான் சமமான எதிர்கதாபாத்திரம் கிடையாது,
••
நிறைய இடைச்செருகல்கள் கொண்டது மகாபாரதம் என்பதால் ஒவ்வொரு மாநிலத்திலும் அதில் புதிது புதிதாக கிளைக்கதைகள் சேர்ந்து கொண்டேயிருக்கின்றன,
•••
மகாபாரதம்  வாசிக்க விரும்புகிறவர் ஒருமுறை கங்கையை முழுமையாக பார்த்து கடந்து வர வேண்டும், அப்போது தான் மகாபாரத நிலவியலை உள்வாங்கிக் கொள்ள முடியும்
••
திரைக்கதை ஆசிரியர்கள் தங்கள் கையிலே வைத்திருக்க வேண்டிய புத்தகம் மகாபாரதம் என்கிறார் எம்.டி.வாசுதேவன் நாயர், காரணம் அத்தனை திரைக்கதை உத்திகள், முடிச்சுகள் உள்ளன, எம்டி வாசுதேவன் நாயர் வைஷாலி என மகாபாரத கிளைக்கதை ஒன்றினைத் திரைக்கதையாக எழுதியிருக்கிறார், சிறந்த படமது, கர்ணன், மாயாபஜார், வீர அபிமன்யூ, ஆகிய மூன்றும் மகாபாரதம் தொடர்புடைய தமிழ் படங்கள், மூன்றிலும் மிகை அதிகம்
••
ஷேக்ஸ்பியருக்கு புதிய பதிப்புகள் வருவது போல யாராவது முழுமையான ம்காபாரதத்தை புதிய மொழியில் அழகிய பதிப்பாக கொண்டுவந்தால் நிச்சயம் அது பெரிய வரவேற்பைப் பெறும்,  என் விருப்பம் இந்தப் பணியை எழுத்தாளர் பிரபஞ்சன் மேற்கொள்ள வேண்டும் என்பது. அதற்கு யாராவது முழுமையாக நிதிஉதவி செய்ய வேண்டியது மிகவும் அவசியம்.


 நன்றி
திரு . எஸ். ராமகிருஷ்ணன்
http://www.sramakrishnan.com
••

138 .போக மகரிஷி கோத்ரம்

மகரிஷி வரலாறு புலப்படவில்லை.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

தந்தம்செட்டிதவரு ;- இவ்வம்சத்தில் தந்த ஸ்ரேஷ்டி என்பவர் புகழ் பெற்றவர். அவர் வம்சா வழியினர்.