அன்புடையீர் நல்வரவு ,

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,
தேவாங்கர்களாகிய நாம் அனைவரும் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்து வந்தாலும் தேவாங்கர் என்னும் உணர்வு நம்மை ஓன்று சேர்க்கிறது. மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்ற வாக்கிற்கு இணங்க காலத்திற்கு ஏற்ப நாம் நமது குல நிகழ்வுகளை தகுந்த தொழில்நுட்பத்தை கொண்டு பதிவு செய்வது அவசியமான ஓன்று.

இந்த புதியபக்கம் நமது தேவாங்க சமூக செய்திகள்,சடங்குகள்,வரலாறு & அண்மை நிகழ்ச்சிகளை அறிந்துகொள்ளவும் தேவைப்படும் போது பார்க்கவும் உருவாக்கப் பட்டுள்ளது.
உறவுகள் தங்கள் பகுதியில் உள்ள கோவில்&குல தெய்வம் கோவில்களில் நடைபெறும் திருவிழா நிகழ்ச்சிகள் மற்றும் படங்களை இடம்பெற செய்யவும்.

தங்கள் கருத்துக்கள் இந்த தளத்தை மேன்படுத்த உதவும் ஆகயால் தயவுசெய்து கருத்திடவும் . ( தமிழில் கருத்திட தமிழ் எழுதியை பயன்படுத்தவும்)

நன்றி.

12/19/13

கும்பம் (அவிட்டம் 3-ஆம் பாதம் முதல், சதயம், பூரட்டாதி 3-ஆம் பாதம் முடிய) பொதுப்பலன்கள்

கும்பம்
(அவிட்டம் 3-ஆம் பாதம் முதல், சதயம், பூரட்டாதி 3-ஆம் பாதம் முடிய)

பொதுப்பலன்கள்

2014-ஆம் ஆண்டு மூல நட்சத்திரத்திலும், தனுசு ராசியிலும், கன்னி லக்னத்திலும்  பிறக்கிறது. கும்ப ராசிக்கு 11-ஆவது லாப ராசியாகும்; 8-ஆம் இடமான கன்னி அட்டம லக்னமாகும். 8-ஆவது லக்னத்தில் வருடம் பிறப்பது சோதனையும் வேதனையும் தந்தாலும், ஜெயஸ்தானமாகிய தனுசு ராசியில் பிறப்பதால் சோதனையும் வேதனையும் மாறுமளவு சாதனை படைத்திடலாம்; ஆறுதலைப் பெற்றிடலாம். உதாரணமாகச் சொல்லப் போனால் நீண்டகாலமாக பத்துப்பன்னிரண்டு வருடமாக வாரிசு இல்லாத தம்பதிகளுக்கு, ஆபரேஷன் செய்து ஆண் குழந்தை பிறப்பது மாதிரி! ஒரு பக்கம் அறுவை சிகிச்சை வேதனை- இன்னொரு பக்கம் அழகான ஆண் குழந்தையைப் பெற்றெடுத்த சாதனை! ஆனந்தம்!

தனுசு ராசிநாதன்- வருட ராசிநாதன் குரு வருடத்தொடக்கத்தில் கும்ப ராசிக்கு 5-ல் வக்ரமாக நின்று உங்கள் ராசியைப் பார்க்கிறார். அத்துடன் கும்பத்துக்கு 9-ஆம் இடம் பாக்கிய ஸ்தானம் துலா ராசியை 5-ஆம் பார்வையாகவும், 11-ஆம் இடம் தன் ராசியை 7-ஆம் பார்வையாகவும், உங்கள் ராசி கும்பத்தை 9-ஆம் பார்வையாகவும் பார்க்கிறார். அதுமட்டுமல்லாமல் கும்ப ராசிநாதன் சனி உச்சம்பெற அவரையும் குரு பார்க்கிறார். குரு பார்க்க கோடி நன்மை. அதனால் செல்வாக்கு, புகழ், கீர்த்தி, கௌரவம், அந்தஸ்து,  செயல்பாடு எல்லாம் மேன்மையாகவும் சிறப்பாகவும் இருக்கும்.

இதுவரை குடத்துக்குள் வெளிச்சமாக இருந்த நீங்கள் இனிமேல் குன்றின்மேல் ஏற்றிவைத்த தீபம்போல பிரகாசிக்கப் போகிறீர்கள். உங்களுடைய திறமையும் ஆற்றலும் பெருமையைத் தேடித்தரும். வி.ஐ.பிக்களின் தொடர்பு கிடைக்கும். அரசியல்வாதிகளின் ஆதரவு கிடைக்கும். அதன்மூலமாக உங்கள் தொழில் வளத்தை நிலையானதாக்கிக் கொள்ளலாம். உங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ளலாம். வசதி வாய்ப்புகளைப் பெருக்கிக்கொள்ளலாம்.

5-ஆம் இடத்து குரு ஜூன் மாதம் 6-ஆம் இடத்துக்கு கடகத்துக்கு மாறும்போது சில தடைகளும் எதிர்ப்பு இடையூறுகளும் ஏற்பட்டாலும், அப்போதும் சனி (2014 டிசம்பர் வரை) 9-ல் உச்சம் பெற்று கடக குருவை 10-ஆம் பார்வை பார்க்கக்கூடும். 2, 11-க்குடைய குருவை ராசிநாதன் சனி பார்ப்பதால் தொடர்ந்து செல்வாக்கும் யோகமும் குடிகொண்டிருக்கும். 

வருட லக்னம் 8-ஆம் இடம் என்பது 9-ஆம் இடமான பாக்கிய ஸ்தானத்துக்கு 12-ஆம் இடம் விரயஸ்தானம் என்பதால், சிலர் பிதுரார்ஜித சொத்துகளை- முன்னோர் சொத்துகளை நல்ல விலைக்கு லாபத்துக்கு விற்கும் பாக்கியம் உண்டாகும். கும்ப ராசிநாதன் சனி 12-க்கும் உடையவர்- 11-ஆம் இடத்தைப் பார்ப்பதால் லாப விரயம் ஆகும். அதேபோல நீண்டகாலமாக நடந்துவரும் வில்லங்கம், விவகாரம், வியாஜ்ஜியங்களிலும் உங்களுக்கு வெற்றிவாய்ப்பு உண்டாகும். காணாமல்போன பொருட்களும்- வரவேண்டிய பணமும் இக்காலத்தில் வந்துசேரும். கும்பகோணம் குடவாசல் அருகில் சேங்காலிபுரம் சென்று தத்தாத்ரேயரையும் கார்த்தவீர்யார்ஜுனரையும்   அபிஷேக பூஜை செய்து வழிபட்டால், வரவேண்டிய தொகையும் இழந்த பொருள்களும் மீண்டும் கிடைக்கும். 

குருப்பெயர்ச்சி:  இந்த ஆண்டு ஜூன் மாதம் 13-ஆம் தேதி குருப்பெயர்ச்சி. கும்ப ராசிக்கு 5-ல் மிதுனத்தில் உள்ள குரு 6-ஆம் இடத்துக்கு கடகத்துக்கு மாறுவார். 2, 11-க்குடைய குரு 6-ல் மறைவது, ஒருவகையில் குற்றம்தான் என்றாலும், அவர் உச்சம்பெற்று 2-ஆம் இடத்தையும், 10-ஆம் இடத்தையும் பார்க்கிறார். எனவே தொழில் யோகம் தொடர்ந்து வேலை செய்யும். தன சம்பாத்தியம் நிலையாக நீடிக்கும். 6-ஆம் இடத்து குரு 12-ஆம் இடத்தையும் பார்ப்பதால், சிலருக்கு இடப்பெயர்ச்சியும் குடியிருப்பு மாற்றமும் வெளிநாட்டு வேலைவாய்ப்பும் ஏற்படலாம். தவிர உச்சம்பெற்ற குருவை 9-ல் துலாத்தில் உச்சம்பெற்ற சனி பார்க்கிறார். உச்சனை உச்சன் பார்ப்பது குற்றம் என்றாலும், கும்ப ராசிநாதன் சனி வருட ராசிநாதன் குரு என்பதால் விதிவிலக்கு உண்டு. இதை கௌரவப் பிச்சை என்று எடுத்துக்கொள்ளலாம். அரசு அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் லஞ்சம் வாங்குவதும், ஒரு காரியத்தை முடிக்க பேரம் பேசுவதும், கட்சிக்கு தேர்தல் நிதி வசூலிப்பதும் கௌரவப் பிச்சைதான். ஆகவே குரு மிதுனத்தில் இருந்தாலும் கடகத்தில் இருந்தாலும், பொருளாதாரத்திலும் உங்கள் திட்டங்களிலும் வெற்றியாகவும் லாபமாகவும் இருக்கும் என்பதை மறக்கவேண்டாம்.

குரு வக்ரம் : 12-3-2014 வரை மிதுன குரு வக்ரமாக இருப்பார். இக்காலம் உங்கள் கனவுகளும் திட்டங்களும் அற்புதமாக நிறைவேறும். பிள்ளைகளுக்கு  நல்லகாரியம் நடக்கும். திருமணம், புத்திரபாக்கியம், படிப்பு, வேலை சம்பாத்தியம் போன்ற திருப்தியான பலன்களை எதிர்பார்க்கலாம். குடும்பத்தில் விசேஷங்கள் நடக்கும்.

அடுத்து 17-11-2014 முதல் மீண்டும் குரு வக்ரம் அடைவார். அப்போது கடகத்தில்- கும்பத்துக்கு 6-ல் இருப்பார். 6-ஆம் இடம் ரோகம், ருணம், சத்துரு ஸ்தானம் என்பதால், இக்காலம் அவையெல்லாம் அதிகமாகவே காணப்படும். அவசியத்தை முன்னிட்டு அதிகமாகக் கடன் வாங்கலாம். போட்டி, பொறாமைகள் உருவாகலாம். என்றாலும் கும்ப ராசிநாதன் சனி உச்சம் பெற்று குருவைப் பார்ப்பதால், எல்லாவற்றையும் எளிதாகச் சமாளித்து விடலாம். மதுரை திருப்பரங்குன்றத்தில், இஞ்சினியரிங் கல்லூரிச் சாலையில் உள்ள சிவப்பிரகாச சுவாமிகளின் ஜீவசமாதியில், ஒவ்வொரு பூரட்டாதி நட்சத்திரத்தன்றும் அபிஷேக பூஜை நடக்கும். அன்னதானம் நடக்கும். கலந்து கொள்ளலாம்.

குரு அஸ்தமனம்: 6-7-2014 முதல் ஒரு மாதம் குரு அஸ்தமனமாக இருக்கிறார். இக்காலம் குரு கடகத்தில் 6-ல் மறைகிறார். அதனால் 6-ஆம் இடத்துக் கெடுதல்கள் எல்லாம் மறைந்துவிடும். சுருட்டப்பள்ளி தாம்பத்திய தட்சிணாமூர்த்தியை வழிபடலாம். 

ராகு- கேது பெயர்ச்சி: 21-6-2014-ல் ராகு- கேது பெயர்ச்சி! கும்ப ராசிக்கு இதுவரை 9-ல் சனியோடு சேர்ந்திருந்த ராகு 8-ஆம் இடம் கன்னிக்கும், 3-ல் மேஷத்தில் இருந்த கேது இப்போது 2-ம் இடம் மீனத்துக்கும் மாறுவர். ராகு 8-ல் இருப்பது- கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் யோகம் என்ற அடிப்படையில் நல்லது. 2-ல் கேது இருப்பது பொருளாதாரச் சிக்கல், குடும்பத்தில் குழப்பம், வாக்கு நாணயப் பிசகு போன்றவற்றை ஏற்படுத்தும் என்றாலும், குரு வீட்டில் இருக்கும் கேதுவை கடகத்தில் உச்சம் பெற்ற குரு பார்ப்பதால் தோஷம் விலகும். குரு பார்க்க கோடி குற்றம் விலகுமல்லவா!

சனிப்பெயர்ச்சி: 2014- டிசம்பர் 16-ல் சனிப்பெயர்ச்சி. 9-ல் உள்ள சனி 10-ஆம் இடத்துக்கு மாறுவார். தொழில், வாழ்க்கையில் புதுப்பிரச்சினைகளை உருவாக்கும் என்றாலும்- கடக குரு விருச்சிக சனியைப் பார்ப்பதால் தீமை குறையும். விரிவான பலன்களை சனிப்பெயர்ச்சி பலன்களில் பார்ப்போம் அல்லது 2015 ஆண்டுபலன் புத்தகத்தில் பார்க்கலாம். 

மாதவாரிப் பலன்கள்

ஜனவரி 


உங்கள் கனவுகளும் திட்டங்கள் படிப்படியாக நாளுக்கு நாள் முன்னேற்றமும் வெற்றியும் அடையும். சிலகாரியங்களில் வேகத்தடை ஏற்பட்டாலும், உங்களுடைய விடாமுயற்சியாலும் வைராக்கியத்தாலும் சாதனை செய்து முடிப்பீர்கள். உடல்நிலையில் சிறுசிறு சுகக்குறைவு காணப்பட்டாலும், உள்ளத்தின் உறுதிப்பாடால் அதை உதறித்தள்ளி வெற்றி எல்லையைத் தொட்டுவிடலாம்.

பிப்ரவரி 


நாளும் கோளும் நல்லோருக்கும் இல்லை; நலிந்தோருக்கும் இல்லை.   நீங்கள் நல்லவர்தான்- வல்லவர்தான் என்றாலும், கால நேரத்தையும் கிரகநிலையும் அனுசரித்துச் செயல்பட்டால் வெற்றி உடனே கிட்டும். காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்ள வேண்டும். போட்டிகள் நிறைந்த உலகத்தில் முட்டிமோதித்தான் முன்னேற வேண்டும்; ஜெயிக்கவேண்டும்.

மார்ச் 


கடந்த 2013- நவம்பர் முதல் வக்ரமாக இருந்த குரு, இம்மாதம் (12-3-2014-ல்) நிவர்த்தி, குரு வக்ரம் உங்களுக்கு பாதிப்பு இல்லையென்றாலும், வக்ர நிவர்த்திக்குப் பிறகு ஏகமனதான வெற்றி- எதிர்ப்பு இல்லாத வெற்றிக்குச் சமமாக ஜெயிக்கலாம். ஆரோக்கியம், பொருளாதாரம், குடும்பச் சூழ்நிலையில் திருப்தியும் மகிழ்ச்சியும் உண்டாகும்.

ஏப்ரல் 


இந்த மாதம் தமிழ்ப்புத்தாண்டு பிறக்கும் மாதம். ஜயவருடம் பிறக்கிறது. ஆங்கில வருடத்தோடு தமிழ்ப்புது வருடமும் உங்களுக்கு அனுகூலமாக அமையும். முயற்சிகளில் முன்னேற்றமும் வெற்றியும் உண்டாகும். திட்டங்கள் கைகூடும். குடும்பத்தில் சுபவிசேஷங்களும் விழாக்களும் இடம்பெறும். உறவினர் வருகையும் விருந்தும் என ஒரே கலகலப்பு தான்.

மே


வெற்றிமேல் வெற்றி உண்டாகும். முக்கியமான வி.ஐ.பி.யின் தொடர்பு நல்லதா கெட்டதா, பயன் உண்டா இல்லையா என்ற குழப்பத்துக்கு இப்போது நல்ல தீர்வு கிடைக்கும். இலவம் பஞ்சு காத்த கிளிக்குச் சமமாக இருந்த நீங்கள் நிச்சயம் "சீச்சீ, இந்தப் பழம் புளிக்கும்' என்ற நரியைப்போல் ஏமாற்றம் அடையமாட்டீர்கள். "ஓடுமீன் ஓட உறுமீன் வருமளவு காத்திருக்குமாம் கொக்கு' போல பயனும் பலனும் அடையலாம்.

ஜூன் 


இந்த மாதம் 13-ஆம் தேதி குருப்பெயர்ச்சி. 6-ல் குரு (கடகத்தில்) உச்சம் பெறுவார். அடுத்து 21-ஆம் தேதி ராகு- கேதுபெயர்ச்சி. ராகு கன்னியிலும் கேது மேஷத்திலும் மாறுவது உங்களது வாழ்க்கையில் அபூர்வமான மாறுதல்களை உருவாக்கும். அதிர்ஷ்டத்தையும் ஏற்படுத்தும்.

ஜூலை 


மாணவர்களின் மேற்படிப்புக்கு நற்பலன் கிடைக்கும். எதிர்பார்த்த சப்ஜெக்ட் கிடைக்கும். கடன் உதவியும் கிடைக்கும். சிலர் பெற்றவர்களைப் பிரிந்து வெளியில் ஹாஸ்டலில் தங்கிப்படிக்கும் வாய்ப்பு உண்டாகும். வெகுசுலபமான முயற்சியில் உங்களுக்கு நன்மைகள் நடக்கும். தனியார் நிறுவனத்திலும் அல்லது அரசுப்பணியில் இருப்போருக்கும் நன்மை உண்டாகும். குரு அஸ்தமனத்துக்கு பரிகார பூஜை செய்துகொள்ளவும். 

ஆகஸ்டு 


உங்கள் மனதில் ஏதோ ஒரு நெருடல்- வெளியில் சொல்லமுடியாத வேதனை அல்லது காரணம் புரியாத கவலை ஏற்படலாம். பாதிப்பு ஏதும் வராது என்றாலும், "ஏன் டல்லாக இருக்கிறீர்கள்?' என்று மற்றவர்கள் உங்களைக் கேட்கக் கூடும். "அடுத்தது காட்டும் பளிங்குபோல நெஞ்சம் கடுத்தது காட்டும் முகம்' என்று வள்ளுவர் சொன்னதுபோல, உங்கள் முகமே காட்டிக் கொடுத்துவிடுகிறதே. சுக்கிரனையும் குருவையும் வழிபட்டு, சிரித்தமுகமாகத் திகழ முயற்சி செய்யுங்கள்.

செப்டம்பர் 


உடல்நிலையில் சிறிது பாதிப்பு ஏற்பட்டாலும் சிறு வைத்தியத்தால் குணமாகிவிடும். நோயில்லை; கவலையே காரணம்! கவலையைத் தூக்கி எறியுங்கள். தியானம், யோகாவில் மனதைத் திருப்புங்கள். "உன்னால்முடியும் தம்பி' என்ற மாதிரி உங்களால் எல்லாம் முடியும். துணிவே துணை! தன்னம்பிக்கையே தைரியம்!

அக்டோபர்


பண்டிகை நெருங்க நெருங்க பணத்தட்டுப்பாட்டை நினைத்து பதற்றம் அதிகமாகும். "மரம் வைத்தவன் தண்ணீர் ஊற்றுவான்' என்பதை மறந்து விட்டீர்களா? உங்களுக்கும் மேலே இறைவன் ஒருவன் இருக்கிறானே. எல்லாருக்கும் படியளக்கும் ஈசன் உங்களை மட்டும் கைவிட்டு விடுவானா? பரமன் கருணாமூர்த்தியாயிற்றே! நன்றி மறக்கும் மனிதர்களை நம்புவதை விட எதையும் எதிர்பார்க்காத இறைவனை நம்புங்கள். நம்பினோர்  கைவிடப்படார்.

நவம்பர் 


இந்தமாதம் சிலகாரியங்களை கடின முயற்சிக்குப் பிறகே நிறைவேற்ற வேண்டும். சில காரியங்களை எளிய முயற்சியால் நிறைவேற்றி விடலாம். எப்படியோ காரியம் நிறைவேறும். படுத்துக்கொண்டு போர்த்தினால் என்ன? போர்த்திக்கொண்டு படுத்தால் என்ன? படுத்தவுடன் தூக்கம் வந்தால் சரிதான். 

டிசம்பர்


டிசம்பர் 16-ல் சனிப்பெயர்ச்சி. 9-ஆம் இடத்து சனி 10-ல் மாறி கடக குருவின் பார்வையைப் பெறுவார். டிசம்பர் 1-ஆம் தேதி கடக குரு சிம்மத்துக்கு அதிகாரமாக மாறி, 24-ஆம் தேதி மீண்டும் கடகத்துக்கு வக்ரம்  திரும்புவார். சிம்மத்துக்கு மாறினாலும் கடகத்தின் பலன்தான் நடக்கும். எனவே உங்களுக்கு எல்லாமே இனிய பலனாகவே நடக்கும்; பயமில்லை.

அவிட்ட நட்சத்திரக்காரர்களுக்கு


அவிட்ட நட்சத்திரத்திலிருந்து வருடம் பிறக்கும் மூல நட்சத்திரம் 6-ஆவது தாரை- சாதக தாரை. அனுகூலமாகவே இருக்கும். பொங்கும் சுபயோகங்களைப் பொலிவுடன் தரும். ஆனந்தமும் உற்சாகமும் நிலவும். செயற்கரிய செயல்களைச் செய்துமுடிக்கலாம். 

பரிகாரம்: சென்னை, திருவான்மியூரில் இருக்கும் பாம்பன் சுவாமிகளின் ஜீவசமாதி சென்று வழிபடலாம். ஒரு சமயம் வண்டிச்சக்கரம் ஏறி சுவாமிகளின் கால் எலும்புகள் நொறுங்கிவிட்டன. சண்முக கவசமும், குமாரஸ்தவமும் பாடி முருகன் திருவருளால் பூரண குணமானார். சஷ்டி திதியில் அவிட்ட நட்சத்திரத்தில் பரிபூரணம் அடைந்தார்.

சதய நட்சத்திரக்காரர்களுக்கு


உங்கள் நட்சத்திரத்திலிருந்து வருடம் பிறக்கும் மூல நட்சத்திரம் (சதயம் முதல் மூலம்) 5-ஆவது, தாரை- பகை தாரை. எனவே ஒதுங்கி ஒதுங்கிப்போனாலும் வம்பு வழக்கும் விவகாரமும் உங்களை விரட்டி விரட்டி துரத்தும். ஜெனன ஜாதகத்தில் ராகு நல்ல இடத்தில் இருந்தால் உங்களுக்கு எந்த பாதிப்பும் வராது. பங்கமும் ஏற்படாது. வாலியின் பலம்போல- எதிரியின் பலத்தில் பாதி பலம் வாலியை வந்தடைவதுபோல- எதிரியையும் பகையையும் வென்று வாகை சூடலாம்.

பரிகாரம்: தேவகோட்டை அவுட்டரில் பட்டுக்குருக்கள் நகரில் பிரத்தியங்கராதேவி கோவில் இருக்கிறது. மானாமதுரையிலிருந்து ஐந்து கிலோமீட்டர் தூரத்தில் பஞ்சமுகப் பிரத்தியங்கராதேவி கோவில் இருக்கிறது. சேலம் சங்கர் நகரிலும், ஸ்ரீவித்யாஸ்ரமத்திலும் பல்லடம் வெங்கட்டா நகரிலும் கோவில் இருக்கிறது. ஒவ்வொரு அமாவாசையன்றும் பிரத்தியங்கராதேவிக்கு மிளகாய் வற்றல் ஹோமம் (நிகும்பலா ஹோமம்) நடக்கிறது. அதில் கலந்துகொள்ளலாம். கும்பகோணம் அருகில் திருப்புவனத்தில் சிவன்கோவிலில் சரபேஸ்வரருக்கு தனிச் சந்நிதி உண்டு. அங்கும் தரிசனம் செய்யலாம். பொன்னமராவதி அருகில் பனையப்பட்டியில் சாது புல்லான் சுவாமி ஜீவசமாதியை வழிபடவும். 

பூரட்டாதி நட்சத்திரக்காரர்களுக்கு 


பூரட்டாதியில் இருந்து வருடப்பிறப்பு நட்சத்திரம் மூலம்- 4-ஆவது க்ஷேமதாரை. 2014- ஆம் வருடம் உங்களுக்கு, தேக சௌக்கியமும் நோய் நிவர்த்தியும் மனதில் உற்சாகமும் ஆர்வமும் உருவாகும். கணவன்- மனைவிக்குள் அன்யோன்ய உறவும், அன்பும் பாசமும் பொழியும். சிலருக்கு ஊர்மாற்றம், சிலருக்கு குடியிருப்பு மாற்றம், சிலருக்கு உத்தியோக மாற்றம், சிலருக்கு புதிய வேலைவாய்ப்பு யோகம் உண்டாகும்.

பரிகாரம்: ஆடுதுறைக்கு வடக்கே 2 கிலோமீட்டர் தொலைவில் கஞ்சனூரில் மேற்கு எல்லையில் உள்ள மணியாக்குளத்தின் வடமேற்குப் பாகத்தில் ஹரதத்தர் அதிஷ்டானக் கோவில் உள்ளது. சிவலிங்கப் பிரதிஷ்டை. அய்யங்கார் சமூகத்தில் பிறந்த இவருக்கு இளமையில் சிவபெருமான் காட்சி கொடுத்து உபதேசம் செய்து, ஸ்படிகலிங்கமும் தந்தருளினார். தமது சமூகத்தார் எதிர்ப்பு தெரிவித்தபோது, பழுக்கக் காய்ச்சிய இரும்பு பீடத்தின்மேல் அமர்ந்து "சிவனேபரம்' என்று நிரூபித்தவர். கஞ்சனூர் கோவிலில் கல் நந்தியிடம் அருகம்புல்லைக் கொடுக்க, அது தன் தலையை திருப்பி நாக்கை நீட்டி புல்லை வாங்கித் தின்றது. அங்குசென்று வழிபடவும். 

No comments:

Post a Comment