அன்புடையீர் நல்வரவு ,

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,
தேவாங்கர்களாகிய நாம் அனைவரும் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்து வந்தாலும் தேவாங்கர் என்னும் உணர்வு நம்மை ஓன்று சேர்க்கிறது. மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்ற வாக்கிற்கு இணங்க காலத்திற்கு ஏற்ப நாம் நமது குல நிகழ்வுகளை தகுந்த தொழில்நுட்பத்தை கொண்டு பதிவு செய்வது அவசியமான ஓன்று.

இந்த புதியபக்கம் நமது தேவாங்க சமூக செய்திகள்,சடங்குகள்,வரலாறு & அண்மை நிகழ்ச்சிகளை அறிந்துகொள்ளவும் தேவைப்படும் போது பார்க்கவும் உருவாக்கப் பட்டுள்ளது.
உறவுகள் தங்கள் பகுதியில் உள்ள கோவில்&குல தெய்வம் கோவில்களில் நடைபெறும் திருவிழா நிகழ்ச்சிகள் மற்றும் படங்களை இடம்பெற செய்யவும்.

தங்கள் கருத்துக்கள் இந்த தளத்தை மேன்படுத்த உதவும் ஆகயால் தயவுசெய்து கருத்திடவும் . ( தமிழில் கருத்திட தமிழ் எழுதியை பயன்படுத்தவும்)

நன்றி.

6/22/13

ஜலகண்டாபுரம் ஸ்ரீ சாம்பலிங்க மூர்த்தி சுவாமிகள் வரலாறு

இவர் கோவை மாவட்டம் கொள்ளே காலம் மனு மகரிஷி கோத்திரத்தில் நஞ்சைய என்பவருக்கும் மகாதேவி அம்மைக்கும் (செப்டம்பர் 1823) சுபானு ஆண்டு புரட்டாசித் திங்கள் வளர்பிறை அவிட்ட நட்சத்திரத்தில் தேவாங்க குலம் ஒங்க அவதாரம் செய்தார். சிறுவயதிலேயே வேதசாத்திரங்களைக் கற்றுணர்ந்தார். பதினெட்டாவது வயதில் வீட்டை விட்டு ஹம்பி ஏம கூட மடத்தை அடைந்தார். அங்கிருந்த குரு இராமலிங்கய்யா என்னும் குரு இவருடைய கல்வி அறிவு ஒழுக்கங்களைக் கண்டு இவருக்குக் குரு தீட்சை அளித்துக் குருவாக நியமித்தார். குருவின் ஆணைப்படி தேவாங்க மக்களின் குல ஆசாரங்களை நிலைநாட்டுங் கருத்தால் தேசசஞ்சாரம் புறப்பட்டார்.

முதலில் காசிக்குப் போய் ஸ்ரீவிசுவேஸ்வரரை வழிபட்டுக்கொண்டு ஸ்ரீசைலம் வந்தார்.பின் தென்னாடு முழுவதையும் பார்த்துக்கொண்டு இராமேஸ்வரம்போய் ஸ்ரீஇராமநாதரை வழிபட்டார். அங்கிருந்து மதுரை பழனி தாராபுரம் வழியாகப் பல்லடம் கணக்கர்பாளையம் அடைந்தார். அவர் குதிரை மீது சஞ்சாரம் செய்வது வழக்கம். கணக்கர்பாளையம் வந்தவர் அங்கிருந்த விநாயகர் கோயிலின் அரசமரத்தடியில் குதிரைமீது இருந்தபடி அவ்வழியில் போவோர் வருவோரிடம் தேவாங்க குரு வந்திரிக்கிறார் என்று அவ்வூர் செட்டிமைக்காரரிடம் சொல்லுமாறு பணித்தார். சுவாமிகளின் வரவை அறிந்தும் தேவாங்க மக்கள் மூன்று நாட்களாகியும் சுவாமிகளை வரவேற்க வரவில்லை. குருநாதரும் குதிரை மீது இருந்து இறங்காமல் அப்படியே அமர்ந்திருந்தார்.

அவ்வூரில் சைவசீலத்தோடு வாழ்ந்த கிச்சடி பெத்த என்பவருக்கு இரண்டு ஆண்மக்கள் இருந்தனர். புனிதமான அச்சைவக் குடும்பத்தின் மக்கள் இருவரில் இளையவனான மல்லிகார்ச்சன மூர்த்தியைத் தனக்கு வாரிசாகப் பெற்றுக்கொண்டார். அந்தப் பிள்ளைக்கு உபநயனம் செய்து தீட்சை அளித்துக் காயத்ரி மந்திரோபதேசம் செய்துத் தனது சீடனாக ஏற்றுக்கொண்டார். மீண்டும் தேசசஞ்சாரம் செய்த வண்ணம் சேலம் வந்து சேர்ந்தார். செவ்வாய்ப்பேட்டையில் தேவாங்ககுல மக்கள் வசிக்கும் பகுதியிலுள்ள வேதாந்தம் வீரம்மாள் என்பவரின் மடத்தில் தங்கினார். இப்பகுதி தேவாங்க மக்கள் தமது குருநாதரைத் தக்கவாறு வரவேற்று உபசரித்தனர். சுவாமிகளின் நாட்பூஜையை நாள்தோறும் தமது இல்லங்களில் வைத்து நடத்திச் சுவாமிகளைப் பெருமைப் படுத்தினார்கள்.

ஒருநாள் திருநாளை ஒட்டிக், குருமூர்த்திகள் பல்லக்கில் ஊர்வலம் வந்தார். ஊர்வலம் பத்மசாலியர் தெருவழி வந்தது. அப்போது அச்சமூக மக்கள் பலர் ஒன்று கூடிக் குருசுவாமிகள் தங்கள் வீதிவழி பல்லக்கில் போகக்கூடாது என்றும் நடந்து போகலாம் என்றும் ஊர்வலத்தை தடுத்த அம்மக்கள் மீது சேலம் சப்கோர்ட்டில் வழக்குத் தொடுத்தார். வழக்கு 1852 ம் ஆண்டிலிருந்து 1863 வரை பன்னிரண்டு ஆண்டுகள் தொடர்ந்து நடந்தது. சென்னை நீதிபதிகனம் ஹார்மன் ஸ்காட்லண்ட் நைட் துரை அவர்கள் தேவாங்க சமூகத்தின் ஜகத்குரு பீடாதிபதி ஓம் ஸ்ரீ சாம்பலிங்க மூர்த்தி சுவாமிகள் பல்லக்கில் எங்கும் போகலாம் என்றும் ஊர்வலத்தைத் தடைசெய்தவர்களுக்கு அபராதம் விதித்து மானநஷ்டத் தொகையுடன் செலவுத் தொகையும், கோர்ட் செலவும் கொடுக்க வேண்டுமென்றும் தீர்ப்பு வழங்கினார். அதிலிருந்து சுவாமிகளின் புகழ் நாடெங்கும் பரவியது.

சுவாமிகள் கொதிக்கும் வெந்நீரில் குளிக்கும் தவ வல்லமை உடையவர்கள். கொதிநீர்ப் பாத்திரத்தைக் கையால் தொடமுடியாது. அப்பாத்திரத்துக்கு கிட்டிக் கட்டித்தான் எடுத்து சுவாமிகள் மீது நீரை ஊற்றுவார்கள். வெந்நீர் ஏற்ற உடம்பு ஊறுபடாது தளதளவென ஒளிவிட்டுப் பிரகாசிக்கும். இதுவும் சுவாமிகளின் புகழை மேலும் ஓங்கச் செய்தது.

குருநாதரின் புகழைக் கேள்வியுற்ற சுவாமிகளின் சிறியதாயார் மகன் மாதவய்யசுவாமிகள் சேலம் வந்து அண்னாருடன் சேர்ந்து கொண்டார்.

சிலநாட்கள் கழித்துச் சுவாமிகள் மாதவையசுவாமிகள், வேதாந்தம் வீரம்மாள், சீடர் மல்லிகார்ச்சுனர் முதலியோருடன் தேச சஞ்சாரம் மேற்கொண்டார். பழனிக்கு அடுத்துள்ள ஆயகுடி என்னும் ஊரை அடைந்தார். அங்கிருந்தபோது தேவாங்க மரபினுக்குரிய காயத்ரி பீடத்து காயத்ரி அம்மன் திருவுருவத்தை அமைக்க விரும்பினார். வேலப்ப ஆசாரி என்னும் ஸ்தபதியைக் கொண்டு திருவுரு அமைக்கும் வேலையைத் துவக்கினார். கருவுற்ற மூன்றாண்டுகள் ஆயின. முதலில் ஊற்றிய கருவின் படிவம் சரியாக அமையவில்லை. அதனால் அதை உடைத்து மீண்டும் கரு அமைத்தார்கள். இச்சமயம் மாதவய்ய சுவாமிகளுக்கும் ஸ்ரீ சாம்பலிங்கமூர்த்திக்கும் மனத்தாங்கல் உண்டாயிற்று. மாதவய்யா கொள்ளேகாலம்போய்விட்டார். இரண்டாம் முறை ஊற்றியபடிவமும் சரியாக அமையவில்லை. மீண்டும் படிவம் அமைக்கும் வேலை தொடர்ந்தது.

இதுசமயம் வேதாந்தம் வீரம்மாளுக்கும் மல்லிகார்ச்சுன மூர்த்திக்கும் வாதுநேர்ந்து ஒருவருக்கொருவர் சாபம் இட்டுக் கொண்டனர். அம்மையார் மல்லிகார்ச்சுனரை நோக்கி ' நீ பதினைந்து நாட்களில் மரணமடைவாய்' எனச் சொல்ல, பதிலுக்கு மல்லிகார்ச்சுனர் 'நீங்கள் ஒருவாரத்தில் உலகை நீத்துப் போவீர்கள்' என்று கூறினார். இதைக்கேட்டஅம்மையார் சினங்கொண்டு அவ்விடத்தை விட்டு நீங்கி பழனி அடிவாரத்திலுள்ள ஒரு இடத்துக்குப்போய் அங்கு தங்கினார். இதை அறிந்த ஸ்ரீ சாம்பலிங்க மூர்த்தி சுவாமிகள் வீரம்மாளுக்குப் பாலும் பழமும் ஆள் மூலம் அனுப்பி வந்தார். இவ்வாறு ஏழு நாட்கள் கடந்தன. வீரம்மாளின் சினம் தணிந்தது. மீண்டும் சுவாமிகள் தங்கியிருக்கும் இடத்துக்குத் திரும்பினார். மறுநாட்காலையில் வீரம்மாள் வீட்டின் புழக்கடையிலுள்ள கிணற்றுக்குப் போய்குளித்துவிட்டுத் தியானம் முதலியன முடித்துக்கொண்டு வீட்டுக்குள் நுழைந்தார். அப்போது அம்மையாரின் தலை வாயிற்கதவில் பலமாக இடித்துக்கொண்டது. தலையில் பெருங்காயம் உண்டாயிற்று. இதை அறிநது குருநாதர் காயத்துக்கு மருந்து வைத்துக் கட்டி ஆறுதல் கூறினார்.

அப்போது வீரம்மாள் மல்லிகார்ச்சுன மூர்த்தியை அருகழைத்து, ' அப்பனே ! காயத்ரி அம்மையின் திருவுருவம் நன்கு உருப்பெற்றுவிட்டது. அக்காரணத்தால் காயத்ரி மந்திர வன்மை பெற்ற உன் சொல் பலித்துவிட்டது. நான் சொல்வதைக் கருத்தில் வைத்துக்கொள். மூன்றாவது கரு உடைத்ததும் வேலப்ப ஆசாரி காலமாய் விடுவார். பின் சில நாட்களில் குருநாதரும் உடல் நீப்பார். அதன்பின் நீ தான் குருபீடாதிபதி. காயத்ரி அம்மையைப் பூசிக்கும் பேறு உன்னைச் சேரும். நீ இக்குருபீடத்தின் தலைமையை ஏற்று சிறப்பாக நடத்தி வருக" என்று சொல்லி அவரிடம் தீர்த்தம் பெற்றுப் பருகினார். அதேசமயம் அம்மையின் ஆன்மாவும் பிரிந்தது. ஸ்ரீ குருசுவாமிகள் அம்மைக்குச் செய்ய வேண்டிய ஈமச்சடங்குகளைச் சிறப்பாகச் செய்துமுடித்து ஆயகுடியிலேயே அவருக்குச் சமாதியையும் கட்டிவைத்தார்.

வீரம்மாள் வாக்குப்படி மூன்றாம் கருவை உடைத்துப் பார்க்கு முன்பே வேலப்ப ஆசாரி சிவபதம் அடைந்தார். மூன்றாம் கருவில் படிவம் நன்கு அமைந்திருந்தது. காயத்ரி அம்மனுக்குச் சிறப்பாக கும்பாபிஷேகம் நடத்தினர்.

அம்மனோடு குருநாதர் சீடருடன் ஆயகுடியை விட்டுத் தேசசஞ்சாரம் புறப்பட்டு பவானி வந்து சிலநாட்கள் தங்கினார். பின் நெரிஞ்சிப்பேட்டை வழியாக அம்மாப்பேட்டைக்கு வந்தார். அங்கு அம்மனுக்குச் சிறப்பாக அபிஷேக ஆராதனைகள் நடந்தன.

அப்போது கொள்ளே காலத்திலிருந்து தேவாங்கம் பிரபுசாமி என்பவர் வந்து இவர்களுடன் சேர்ந்து கொண்டார். பின் அம்மாபேட்டையை விட்டுச் சேலம் ஜில்லா ஜலகண்டாபுரம் வந்து சேர்ந்தார். இங்கும் அம்மனுக்குப் பூஜைகள் நடந்தன. திடீரென்று ஸ்ரீ சாம்பலிங்க மூர்த்தி சுவாமிகளின் உடல் நலம் குன்றியது. வீரம்மாளின் வாக்கை நினைவு கூர்ந்தார். அப்பகுதியிலுள்ள செட்டிமை பெரியதனம் தேவாங்க மக்கள் யாவரையும் பவ ஆண்டு தைத்திங்கள் புனர்பூச நட்சத்திரத்தில் கூட்டித் தமது சீடர் மல்லிகார்சுன மூர்த்திக்கு முறைப்படி தீட்சையளித்து ஆசார்ய அம்மனையும் ஒப்படைத்து ஆசி கூறினார். பவ ஆண்டு மாசித் திங்கள் புனர்பூச நட்சத்திரத்தில் பூதவுடல் நீத்து ஸ்ரீ சௌடேஸ்வரியம்மனின் திருவடி நிழலை அடைந்தார். சுவாமிகளின் பூதவுடலை ஸ்ரீ சௌடேஸ்வரியம்மன் திருக்கோயிலின் இடப்பக்கத்திருந்த காலி இடத்தில் சமாதி செய்தனர்.

சுவாமிகள் சமாதி அடைந்த செய்தியை அறிந்து மாதவைய சுவாமிகள் கொள்ளே காலத்திலிருந்து ஜலகண்டபுரம் வந்து சேர்ந்தார். அவருக்கு மல்லிகார்ச்சுன சுவாமிகள் ஆறுதல் சொல்லி அவரை சேலத்திலுள்ள வீரம்மாள் மடத்துக்கு அனுப்பிவைத்தார். அவரும் தமது பெற்றோர், மனைவியுடன் சேலம் வந்து வீரம்மாள் மடத்தில் தங்கி வாழ்ந்து வந்தார். மாதவய்யாவின் ஒரே மகன் பின் சந்ததியின்றி மறைந்தான்.

மல்லிகார்ச்சுன சுவாமிகள் பாலக்காடு பாலைமாநகர் சென்று இருமணம் புரிந்து இருமக்களைப்பெற்று மறைந்தார். 17-3-1929 ல் ஆசார்ய அபிஷேகம் பெற்ற மூத்த மகன் பாலக்காட்டை விட்டு ஜலகண்டாபுரம் வந்து தங்கினார். அங்கிருந்தபடியே கர்நாடகம், மராட்டா, குஜராத், ஆமதாபாத் முதலிய நாடுகளுக்கு சஞ்சாரம் போய் திரும்பிவந்து அங்குள்ள மடத்தில் தங்கியுள்ளார்.