அன்புடையீர் நல்வரவு ,

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,
தேவாங்கர்களாகிய நாம் அனைவரும் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்து வந்தாலும் தேவாங்கர் என்னும் உணர்வு நம்மை ஓன்று சேர்க்கிறது. மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்ற வாக்கிற்கு இணங்க காலத்திற்கு ஏற்ப நாம் நமது குல நிகழ்வுகளை தகுந்த தொழில்நுட்பத்தை கொண்டு பதிவு செய்வது அவசியமான ஓன்று.

இந்த புதியபக்கம் நமது தேவாங்க சமூக செய்திகள்,சடங்குகள்,வரலாறு & அண்மை நிகழ்ச்சிகளை அறிந்துகொள்ளவும் தேவைப்படும் போது பார்க்கவும் உருவாக்கப் பட்டுள்ளது.
உறவுகள் தங்கள் பகுதியில் உள்ள கோவில்&குல தெய்வம் கோவில்களில் நடைபெறும் திருவிழா நிகழ்ச்சிகள் மற்றும் படங்களை இடம்பெற செய்யவும்.

தங்கள் கருத்துக்கள் இந்த தளத்தை மேன்படுத்த உதவும் ஆகயால் தயவுசெய்து கருத்திடவும் . ( தமிழில் கருத்திட தமிழ் எழுதியை பயன்படுத்தவும்)

நன்றி.

2/10/14

பகுதி ஆறு : தீச்சாரல்[ 7 ]

பகுதி ஆறு : தீச்சாரல்[ 7 ]
பிரம்மமுகூர்த்தத்தில் அரண்மனையின் முன்னால் இருந்த காஞ்சனம் முழங்குவது அத்தனை சூதர்குலப் பணியாளர்களும் எழுந்தாகவேண்டுமென்பதற்கான அறிவிப்பு. அதை மூலாதாரத்தின் முதல் விழிப்பு என்றும், பொன்னிறச் சூரியஒளியின் ஒலிவடிவம் என்றும், அஸ்தினபுரியின் அரண்மனையான சந்திரஹாசம் என்ற வண்டின் முரளல்நாதம் என்றும், புலரிதேவிக்கு முன் வைக்கப்பட்ட அஸ்தினபுரம் என்ற மலரின் தேன் என்றும் சூதப்பாடகர்கள் பாடினாலும் அத்தனை சூதர்குலப் பணியாளர்களுக்கும் அது கண்டிப்பான உரிமையாளரின் சாட்டைநுனியின் மெல்லிய தொடுகை மட்டு6ம்தான். விஷப்பாம்பின் தீண்டலுக்கு நிகர் அது. அதை உணர்ந்ததுமே பாய்ந்தெழுவதற்கு அத்தனைபேரும் இளமையிலேயே பயிற்றுவிக்கப்பட்டிருந்தனர்.
சிவை வலப்பக்கமாகத் திரும்பி எழுந்ததுமே நெடுநாள் பழக்கத்தால் தன் கைகளை விரித்துப் பார்த்தாள். கரங்களின் நுனியில் லட்சுமி, கரங்களின் நடுவே சரஸ்வதி,கரமூலையில் கோவிந்தன் என்று அவளுக்கும் சொல்லிக் கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால் முகம் நோக்கி கைவிரித்து ரேகைதேய்ந்த கைவெள்ளையைப் பார்க்கையில் அவளால் அவர்களை பார்க்க முடிந்ததில்லை. சூதர்களின் மூன்று தொழில்களுக்கான தெய்வங்கள் தெரிந்தன. குதிரை வளர்ப்பின் கோவிந்தன். சமையல்பணியின் லட்சுமி. பாணர்களின் சரஸ்வதி. சரஸ்வதியின் அருள் உடையவர்கள் நல்லூழ் கொண்டவர்கள், அவர்களுக்கு பட்டினியும் சுதந்திரமும் அருளப்பட்டிருக்கிறது.
உடைகளை சரிசெய்தபடி எழுந்து இருளிலேயே நடந்துசென்று அரண்மனைபின்பக்கத்தில் உருவாக்கப்பட்டிருந்த தடாகக்கரைக்குச் சென்றாள். அங்கே நீராட்டறையில் குளியலுக்கான மண்காரமும், கற்றாழைமடலும் வெட்டிவேரும் வைக்கப்பட்ட பெட்டிகளுக்கு அருகே சூதர்குலப்பெண்கள் அதற்குள் குழுமத்தொடங்கியிருந்தனர். சிவை அருகே சென்றதும் கிருபை அவளைநோக்கி ஓடிவந்தாள். “நேற்று உன்னை எருமை கூப்பிட்டாள்.” சிவை திகைத்து “எப்போது?” என்றாள். “நான்காம் சாமத்தில்.” சிவை பேசாமல் நின்றாள். “தூங்கிவிட்டாயா?” என்றாள் கிருபை. சிவை தலையசைத்தாள். “நான் உன்னை மூத்த அரசி எதற்கோ அழைத்தார்கள் என்று சொன்னேன், அவள் நம்பவில்லை.” தலைமைச்சேடி மாதங்கியின் நடை எருமைபோல ஒலியெழுப்புவது.
அப்பால் மாதங்கி நிமிர்ந்த தலைமீது சிறிய கலம்போல கட்டப்பட்ட கொண்டையும் மார்பின்மேல் போடப்பட்ட வெள்ளிச்சரிகை சால்வையுமாக வருவதைப்பார்த்ததும் சிவை குனிந்து கற்றாழையை எடுத்துக்கொண்டாள். உலர்த்தப்பட்ட கற்றாழை பாம்புச்சட்டை போலிருந்தது. வெட்டிவேரையும் காரத்துண்டையும் எடுத்துக்கொண்டு கூட்டம் வழியாக இருவரும் மெல்ல வெளியே செல்ல முயன்றபோது மாதங்கி கவனித்துவிட்டாள். “எருமை நம்மைத்தான் பார்க்கிறது” என்று சிவையின் கையைக்கிள்ளியபடி கிசுகிசுத்தாள். மாதங்கி அவர்களைப்பார்த்து கனத்த கையைத்தூக்கி “யாரங்கே, ஏய் உன் பெயரென்ன? சிவைதானே நீ? சுபையின் மகள்?” என்றாள். சிவை தலையை அசைத்தாள். அவள் அரண்மனையில் மாதங்கியின்கீழ் பணியாற்றத்தொடங்கி பன்னிரண்டு ஆண்டுகள் ஆன பிறகும் மாதங்கி இன்னும் அவள் பெயரை தன் மனதில் ஏற்றிக்கொள்ளவில்லை.
“வா இங்கே, ஏய் நீயும்தான். உன் பெயரென்ன?” என்றாள் மாதங்கி. கிருபையும் சிவையுடன் அருகே வந்தாள். “நேற்று சிறிய அரசியை மஞ்சத்துக்குக் கொண்டுசென்றவள் யார்?” என்றாள் மாதங்கி. சிவை பணிவுடன் “நான்தான்” என்றாள். மாதங்கி திடீரென்றெழுந்த சினத்துடன் கிருபையின் கன்னத்தில் அறைந்து “அப்படியென்றால் யார் அரசியை வெளியே கூட்டிவருவது? முனிவர் பிரம்மமுகூர்த்தத்தில் எழுவார் என்று தெரியாதா உனக்கு? அரசியை இந்நேரம் கூட்டி வந்திருக்கவேண்டாமா?” என்றாள். கிருபை கன்னத்தைப்பொத்தியபடி சிவையைப்பார்த்தாள். சிவையிடம் “இது உனக்கான அறை… நீ இன்று அரசியின் முகத்தில் விழிக்கப்போகிறாய், அதனால் விடுகிறேன்… கிளம்பு” என்றாள் மாதங்கி.
“நான் இன்னும் குளிக்கவில்லை” என்றாள் சிவை. அதை ஏற்கனவே அறிந்திருந்தும் மாதங்கி மேலும் சினம் கொண்டு “இன்னுமா குளிக்கவில்லை…உன்னை நான் வந்து குளிப்பாட்டிவிடவா? லாயத்தில் குதிரைச்சாணி அள்ளவிடாமல் உனக்கு மூன்றுவேளை அமுதும் வெள்ளி ஆடையும் தந்த என்னை குறை சொல்லவேண்டும்… சண்டிதேவியே, நான் என்ன செய்வேன்? இன்னும் அரைநாழிகையில் நான் பேரரசிக்கு செய்தி சொல்லவேண்டுமே” கையை ஓங்கி அவள் முன்னால் வர சிவை கையால் அதை தடுப்பதுபோல நீட்டியபடி பின்னடைந்தாள். “என்ன செய்வீர்களோ தெரியாது… இன்னும் அரைநாழிகை நேரத்தில் சிறிய அரசியை அறைக்குள் சேர்த்துவிட்டு எனக்கு தகவல் தெரிவித்தாகவேண்டும் நீங்கள்.”
சிவை கிருபையுடன் குளம்நோக்கி ஓடினாள். அங்கே வட்டமான குளத்தின் படிக்கட்டுகளில் எல்லா பருவங்களையும் சேர்ந்த நூற்றுக்கணக்கான சேடிகளும் ஏவல்மகளிரும் நீராடிக்கொண்டிருந்தனர். அவர்கள் மிகத்தாழ்ந்த குரலில் பேசிக்கொண்டிருந்தாலும் அந்த ஒலி திரண்டு இரைச்சலாக முழங்கியது. இருள்நீரின் நுனிவளைவு குளியல்பொருட்களின் வாசனையுடன் பாசிபடிந்த பச்சைப்படிக்கற்களில் அலையடித்து குளம் சப்புகொட்டுவதுபோல ஒலித்தது. சுற்றிலும் எரிந்த பெரிய சுளுந்துகளின் ஒளியில் விதவிதமான பெண்களின் முலைகள் அசைந்தன.
சிவை உடைகளை வேகமாக அவிழ்த்து கரையில் வைத்துவிட்டு ஏழாவது படியிலிருந்து நீருக்குள் பாய்ந்தாள். அதேவேகத்தில் உள்ளே சென்று கொப்பளித்தெழும் நீர்க்குமிழிகள் நடுவே ஆழ்ந்துசென்றாள். பின்னால் குதித்த கிருபை நீருக்குள் சற்று அப்பால் உள்ளே புகுந்தாள். இருவரும் நீருக்குள் சந்தித்துக்கொண்டனர். நீருக்குள்ளேயே சிரித்துக்கொண்டனர்.
கிருபையின் கண்கள் இரு சிறு மீன்கள் போலத்தெரிந்தன. சிவை அவள் உடலைச் சீண்டிவிட்டு விலகி நீந்த கிருபை வளைந்து கால்களை அடித்து கைகளை நீட்டியபடி பிடிக்க வந்தாள். சிவை நீருக்குள்ளேயே நீந்திச்சென்று நீந்தும் பிறரின் கால்களின் நெளிவுகள் வழியாக ஊடுருவி தப்பினாள். ஆனால் கிருபை அவள் காலைப்பிடித்துவிட்டாள். இருவரும் பற்றிக்கொண்டு நீருக்குள் சுற்றியபடி அமிழ்ந்து பின் கால்களை உதைத்து பீரிட்டு மேலே வந்தனர். தலைமயிர் நெற்றியில் ஒட்டி தோளில் வழிந்திருக்க கிருபை வெண்பற்களைக் காட்டிச்சிரித்தாள். இன்னொரு பெண் வந்து நீரில் விழுந்து உள்ளே சென்ற துளிகள் தெறிக்க இருவரும் கூச்சலிட்டு சிரித்தனர்.
ஒரு தடித்த பெண் “என்ன சிரிப்பு?” என்றாள். “சீக்கிரம் கிளம்பிச்செல்லுங்கள்….இல்லாவிட்டால் எருமை இங்கேயும் வரும்.” நீந்தி சற்று விலகியபின் கிருபை “பன்றிக்கு என்னடி எருமையை அச்சம்?” என்றாள். சிவை சிரித்துக்கொண்டு நீரில் மூழ்கி அதை குமிழிகளாக வெளிவிட்டாள். இருவரும் நீர் நடுவே நீந்திச்சென்றனர்.
உள்ளே நீரைக்கொட்டும் யாளிமுகத்தருகே சென்றதும் சிவை “இன்று சிறிய அரசி கருவுறுவாள் என்கிறார்கள்” என்றாள். “இந்த முனிவர்கள் கருவை நுனியில் ஏந்தி அலைகிறார்களா என்ன?” என்றாள் கிருபை. சிரிப்பை அடக்கமுடியாமல் சிவை நீருக்குள் மீண்டும் மூழ்கிவிட்டாள்.
மல்லாந்து நீந்தியபோது விடிவெள்ளி தெரிந்தது. “அது என்னடி நாகினியின் மாயம்?” என்றாள் கிருபை. “அரசகுலத்தவர் எப்போதும் சோதிடர்களையும் மாயங்களையும் நம்பித்தானே இருக்கிறார்கள்?” என்றாள். சிவை “அவர்களுக்கு எல்லாமே இக்கட்டாகி விடுகிறது. சூதர்களின் கதைகளில் எல்லா அரசர்களும் தவமிருந்துதான் பிள்ளைகளைப் பெறுகிறார்கள். சூதர்களுக்கு கூழாங்கல்லை விட்டெறிந்தாலே குழந்தை பிறந்துவிடுகிறது” என்றாள் கிருபை.
சிவை சிரித்ததும் “சிரிக்காதே, உண்மைதான். சென்ற ஆவணியில் பத்ரைக்கு கர்ப்பம் என்று தெரிந்தது. எருமையும் கழுகும் சேர்ந்து அவளை இட்டுச்சென்று இருட்டறையில் வைத்து ஆடைகளைக் களைந்து சோதனை செய்தார்கள். யார் காரணம் என்று கேட்டபோது யாரோ ஒரு முனிவர் என்று சொன்னாளாம். முனிவர் உன்னை தொட்டாரா என்று எருமை அடிக்கவந்தபோது தொடவில்லை, ஒரு கூழாங்கல்லை விட்டெறிந்தார் என்று ஒரேயடியாகச் சொன்னாளாம்… என்னசெய்யமுடியும்? முனிவரின் குழந்தை இன்னும் ஒருமாதத்தில் பிறக்கும்.”
“பெரியதவசீலனாக இருப்பான் போலிருக்கிறதே” என்றாள் சிவை. “குதிரைகளை பார்த்திருக்கிறாயா? ஒவ்வொருகுதிரையும் ஒரு முனிவர். கண்மூடி தியானம் செய்தால் சவுக்கு வந்து புட்டத்தில் படும்வரை பிரம்மலயம்தான்…” என்ற கிருபை கிசுகிசுப்பாக “லாயம்பக்கமாக சென்றுவிடாதே. உன் மீதும் முனிவர் கூழாங்கல்லை எடுத்து எறிந்துவிடப்போகிறார்” என்றாள்.
சிவை சிரிப்பை அடக்கி “போடி” என்றாள். கிருபை “உண்மை, என்னை எறிந்து பார்த்தார்” என்றாள். “நீ என்ன செய்தாய்?” என்றாள் சிவை. கிருபை சிரித்துக்கொண்டே “நானும் ஒரு கூழாங்கல்லை எடுத்து எறியப்பார்த்தேன்…பயந்து அலறி விலகிவிட்டார்.” சிவை “போடி” என்றாள். “உண்மை…அது சற்று பெரிய கூழாங்கல். இரண்டு கைகளாலும் தூக்கினேன்” கிருபை சொன்னாள். சிவை சிரிப்பை அடக்கமுடியாமல் மீண்டும் மூழ்கிவிட்டாள்.
கரையில் வந்து நின்ற மாதங்கி “அங்கே என்ன செய்கிறீர்கள்? ஏய், சுபையின் மகளே, வெளியே வா…வாடி வெளியே” என்று கூவியபோதுதான் இருவரும் நேரத்தையே உணர்ந்தனர். கரைநோக்கி நீந்தியபோது சிவையின் உடை அவிழ்ந்து கால்களில் சிக்கியது. படியில் ஏறி நீரை உதறியபடி அறைநோக்கிச் சென்றாள். மாதங்கி “என்ன செய்துகொண்டிருந்தாய்? நான் உன்னிடம் என்ன சொன்னேன்?” என்று கையை ஓங்கியபடி வந்தாள்.
கிருபை பின்னாலேயே நின்றுவிட்டாள். மாதங்கி தன் உடையில் செருகியிருந்த சிறிய காட்டுக்கொடியால் சிவையின் இடுப்புக்குக் கீழே நாலைந்து முறை அடித்தாள். அடி சதையில் பட்டதும் சிவை துடித்தபடி “இல்லை…இனிமேல் இல்லை…அய்யோ” என்று ஓசையில்லாமல் கூவித் துடித்து விலகினாள்.
“அடி இல்லாமல் உனக்கெல்லாம் எதுவுமே புரிவதில்லை…பட்டினி போட்டால் எங்காவது மிச்சம் மீதி இருந்தால் எடுத்து தின்றுவிடலாம் என்று நினைப்பு…போ…இன்னும் அரைநாழிகையில் நீ அறையில் இருக்கவேண்டும்” என்றாள் மாதங்கி.
சிவை கிருபை இருவரும் ஈர உடையுடன் ஓடினார்கள். பின்பக்கம் கனமான உடல் கொண்ட முதியவளான சாந்தையை மாதங்கி உரக்கத் திட்ட அவளும் ஓடி வருவது தெரிந்தது. “ஆட்டுக்குட்டிகளை ஏற்றிய ரதம் போல வருகிறாளே…சமநிலை தவறி விழுந்துவிடமாட்டாளா?” என்று கிசுகிசுப்பாகக் கேட்டாள் கிருபை . சிவை கண்ணீருடன் திரும்பிப்பார்த்து சிரிப்பை அடக்கிக் கொண்டாள். “போடி என்னை சிரிக்கவைக்காதே…சிரிப்பைக் கண்டால் எருமை இன்னும் அடிக்கவரும்.”
வேகமாக உடைமாற்றி மஞ்சள் திலகம் அணிந்து தலையில் ஒரு செண்பகமலரையும் சூடிக்கொண்டு சிவை அரண்மனைக்குள் ஓடினாள். பின்னால் ஓடிவந்த கிருபை “அந்தச் சிறுமியை அறைக்குள் கொண்டு விட்டுவிட்டு நேராக சமையல்கூடத்துக்கு வா…உனக்கு நான் அங்கே ஒரு தின்பண்டம் எடுத்துவைத்திருக்கிறேன்” என்று சொல்லிவிட்டு ஓடினாள். நான்குபக்கமும் ஈர உடைகளுடன் சேடிகள் விரைந்துகொண்டிருந்தனர். இரவெல்லாம் காவல்காத்த காவல்பெண்கள் வேல்களைக் கைமாறி விலக புதியவர்கள் வந்து நின்றனர்.
சிவை மணியறை வாசலில் நின்றாள். உள்ளே ஓசைகள் ஏதும் கேட்கவில்லை. காதலர்கள் கண்ணயர்ந்துவிட்டார்களோ என்று எண்ணிக்கொண்டு மெல்ல புன்னகைத்தபின் கதவை மெல்லத்திறந்து உள்ளே பார்த்தாள். மஞ்சத்தில் அம்பாலிகை தூங்கிக்கொண்டிருக்க அறைக்குள் வியாசரைக் காணவில்லை. சிவை அருகே சென்று அம்பாலிகை மீது ஆடையை எடுத்துப்போர்த்திவிட்டு “அரசி…அரசி” என உலுக்கி எழுப்பினாள். அம்பாலிகை கண் திறந்து “எங்கே?” என்றாள். அம்பாலிகை “யார்?” என்றாள். அம்பாலிகை அவளை கூர்ந்து நோக்கி “அரசர்?” என்றாள்.
“தெரியவில்லை அரசி…வாருங்கள், பொழுது விடிந்துவிட்டது” என்று சிவை அவளை மெல்ல தூக்கினாள். உடைகளை அணிந்துகொண்ட அம்பாலிகை “நான் நேற்று மீன்களை நாணலால் அடித்தேன்” என்றாள். சிவை புரியாமல் பார்த்துவிட்டு “ஓ” என்று மட்டும் சொன்னாள். “பொன்னிறமான மீன்கள்…நானும் அரசரும் வெளியே சென்றோம்…அரண்மனை அப்படியே தூங்கிக்கிடந்தது தெரியுமா?”
சிவை அவளை மெல்ல இடைநாழி வழியாக அழைத்துச்சென்றாள். அம்பாலிகை பேசிக்கொண்டே வந்தாள். “பிறைநிலவு. அதனால் அதிக வெளிச்சம் இல்லை. ஆனால் நாம் எதை நினைக்கிறோமோ அது நன்றாகவே தெரியும்…. எவ்வளவு மீன்கள் என்கிறாய்? மீன்களை எண்ணவே முடியாது. எண்ணினால் மீன்கள் எல்லாம் ஒன்றாகச் சேர்ந்து ஒரே மீனாக ஆகிவிடும் என்றார் அரசர்.”
“அரசர் எப்படி இருந்தார் அரசி?” என்றாள் சிவை. “நன்றாக வெளிறி பிறைநிலவு போலிருந்தார்” என்றாள் அம்பாலிகை. “நீரில் தெரியும் நிலவுபோல. தொட்டால் அப்படியே நெளிய ஆரம்பித்துவிடுவார்… கலைந்தே போய்விடுவார் என்று நான் பயந்துகொண்டே இருந்தேன்.” அம்பாலிகை கூந்தலை சுழற்றிக் கட்டி “பாவம், பலமே இல்லை அவருக்கு. ஓடைகளை எல்லாம் நான்தான் தூக்கி கடக்கவைத்தேன்” சிவை மெல்ல “ஏன்?” என்றாள். “அவரது பலமெல்லாம் அக்காவிடம் சென்றுவிட்டதல்லவா? பலமின்மை எனக்குப் போதும் என்று நினைத்தேன்.” சிவை புரியாமல் அவளைப்பார்த்தாள்.
அம்பாலிகையை அறையில் சேர்த்து அவளுக்கான நீராட்டுப்பொருட்களை எடுத்து அறைத்தடாகத்துக்குள் கொண்டு சென்று வைத்தாள். மரத்தாலான கூரைகொண்ட நீள்வட்ட அறைக்குள் நீள்வட்டவடிவமான சிறிய தடாகம். வெளியே நீரோடை வழியாக வந்த நீர் சிலைப்பசுவின் வாய் வழியாக உள்ளே கொட்டிக்கொண்டிருந்தது. அறைக்குச் சென்ற அம்பாலிகை உடனே நீராட்டறைக்கு வந்தாள். ஆழமற்ற தடாகத்தில் ஆடைகளைக் களைந்து இறங்கியபடி “நான் பகல் முழுக்க தூங்குவேன்… என்னை யாரும் எழுப்பக்கூடாது என்று சொல்” என்றாள். நீரில் அவளுடைய சிறிய உடல் பரல்மீன் போல நீந்துவதைக் கண்டாள் சிவை.
அம்பாலிகை “ஏன் சிவை, சூதர்பெண்களுக்கு எப்படி திருமணம் ஆகும்?” என்றாள். சிவை புன்னகை புரிந்து “சூதர்கள் இருவகை தேவி. வெளியே சுதந்திரமாக சுற்றித்திரியும் சூதர்கள் வானகத்துப் பறவைகள் போல. பிடித்தபோது பிடித்தவர்களுடன் இருப்பார்கள். குழந்தைகளுக்கு அன்னை மட்டும்தான் அடையாளம். இன்னொருவகை சூதர்கள் அரண்மனையில் இருப்பவர்கள். எங்களுக்குப் பிடித்தவர்களைப்பற்றி நாங்கள் தலைவிக்குச் சொல்வோம். ஆணும்பெண்ணும் சேர்ந்து பரிசுப்பொருட்களுடன் சென்று அரசகுலத்தவரிடம் அனுமதி கேட்போம். அவர்கள் முன்னிலையில் ஆண் பெண்ணுக்கு கன்யாசுல்கம் கொடுப்பான்.”
“கன்யாசுல்கம் என்றால்?” என்றாள் அம்பாலிகை. “வைசியர்களுக்கும் சூத்திரர்களுக்கும் உரிய வழக்கம் அது. அவை பரிசுப்பொருட்கள்… அவையெல்லாம் பெண்ணின் அன்னைக்குச் சொந்தம். நகைகள் கொடுக்கலாம். நாணயங்கள் கொடுக்கலாம். ஏதுமில்லாவிட்டால் பொன்னிற மலரையாவது கொடுக்கவேண்டும்… கன்யாசுல்கத்தை பெண்ணின் தந்தையும் தாயும் ஏற்றுக்கொண்டால் அடுத்த வளர்பிறை நாளில் ஆணும்பெண்ணும் அருகே இருக்கும் குலமூதாதை ஆலயம் சென்று சேர்ந்து நின்று பொங்கலிட்டு பூசை செய்து பூசகர் தரும் மலர்களை கைமாறிக்கொள்ளவேண்டும். ஆணின் குலத்தை பனையோலைச்சுருளில் எழுதிச் சுருட்டி அதை பெண்ணின் கழுத்தில் அவன் கட்டுவான். பெண்ணின் குலத்தை எழுதிய சுருளை ஆணின் வலதுபுஜத்தில் பெண் கட்டுவாள். ஆண் கட்டுவது மங்கலத்தாலி. பெண்கட்டுவது பிரதிக்ஞைத்தாலி.”
“அதன்பின்புதான் குழந்தை பெற்றுக்கொள்வீர்கள் இல்லையா?” என்றாள் அம்பாலிகை. சிவை புன்னகை செய்தாள். “உனக்கு யாராவது கன்யாசுல்கம் தருவதாகச் சொன்னார்களா?” என்றாள் அம்பாலிகை. “அரசி, நான் இந்த அந்தப்புரத்தைவிட்டு வெளியே செல்வதே இல்லையே? இங்கே எங்கே ஆண்கள்?” என்றாள் சிவை. “அப்படியென்றால் எப்படி உனக்கு மணம் நிகழும்?” சிவை புன்னகை செய்து “விதியிருந்தால் நிகழும் அரசி… நீராடி முடியுங்கள். நீங்கள் உணவருந்திய பின்னர்தான் நான் எருமையிடம் தகவல் சொல்லவேண்டும்.”
“எருமையா? யார்?” என்றாள். சிவை நாக்கை கடித்துக்கொண்டு “மாதங்கி …” என்றாள். அம்பாலிகை உரக்கச்சிரித்துக்கொண்டு எழுந்துவிட்டாள். “நானும் அவளை அப்படித்தான் நினைத்தேன் தெரியுமா? உண்மையிலேயே நானும் நினைத்தேன்…பெரிய கொம்புள்ள எருமை….” நீரை கையால் அள்ளி வீசி “அவளை இதில் இறக்கி குளிப்பாட்டி வைக்கோல் போட்டு கட்டவேண்டும் போலிருக்கிறது…” என்றாள். சிவை “இளவரசி நீங்கள் நீராடி அமுதுண்ட விவரத்தை நான் பேரரசியிடம் தெரிவிக்கவேண்டும்” என்றாள். “நான் இப்போதேகூட தூங்கிவிடுவேன்” என்றாள் அம்பாலிகை.
காலையுணவு உண்ணும்போதே அம்பாலிகை சொக்கி விழுந்தாள். கை உணவிலேயே சோர்ந்து விழ திடுக்கிட்டு எழுந்து சிவையை நோக்கி புன்னகைசெய்துவிட்டு மீண்டும் சாப்பிட்டாள். அவளை மஞ்சம் சேர்த்த பின் சிவை ஓடி சமையலறையில் சேடிகளை அதட்டிக்கொண்டிருந்த மாதங்கி முன் சென்று நின்றாள்.
“எங்கே போயிருந்தாய் மூதேவி?” என்றாள் மாதங்கி. “நான் அரசியை…” மாதங்கி “துயிலறை சேர்ந்துவிட்டார்களா?” என்றாள். “ஆம்” என்றாள் சிவை. மாதங்கி “நான் போய் பேரரசியிடம் சொல்கிறேன்…நீ உடனே சென்று மூத்த அரசி எப்படி இருக்கிறார் என்று பார்!” சிவை மெல்ல “நான் இன்னும் காலையில் சாப்பிடவில்லை” என்றாள். “சொன்னவேலையைச் செய்…எதிர்த்தா பேசுகிறாய்?” என்று கையை ஓங்கியபடி மாதங்கி முன்னகர்ந்தாள். சிவை சுவர் நோக்கிச் சென்று சாய்ந்துகொண்டாள்.
அவள் அந்தப்பக்கமாகச் சென்றதும் சிவை சமையல்கூடத்துக்கு ஓடினாள். மேலே சூரிய ஒளிவருவதற்கான இடைவெளிகள் விடப்பட்ட மிகப்பெரிய கூடத்தில் வரிசையான தூண்களிலெல்லாம் பெரிய செம்புப்பாத்திரங்கள் சாய்த்து நிறுத்தப்பட்டிருந்தன. வாய்திறந்த அரக்கக்குழந்தைகள் போல வட்டவடிவ இருளுடன் அவை நின்றிருக்க நடுவே அங்குமிங்கும் ஓடியபடியும் அமர்ந்தபடியும் வேலைசெய்த சூதப்பெண்களின் பேச்சொலிகள் அவற்றுக்குள் ரீங்காரமிட்டன. அக்கினிமூலையில் ஐம்பதுக்கும் மேற்பட்ட பெரிய அடுப்புகளில் நெருப்பு கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருந்தது. அருகே விறகுவண்டிகள் கொண்டுவந்து கொட்டிய விறகுமலைகள். இடப்பக்கம் காய்கறிகள் நறுக்கும் பெண்கள். வலப்பக்கம் கொதிக்கும் பாத்திரங்களை கயிறுகட்டித் தூக்கி வண்டிகளில் வைத்து கலவறைக்குக் கொண்டுசென்றார்கள். மேலிருந்து வந்த ஒளியில் புகை வெண்ணிற அலைகளாக மேலே சென்றுகொண்டிருந்தது.
கிருபை ஓடிவந்து அவள் கையைப்பிடித்தாள். “வாடி” என்று அழைத்துச்சென்று ஒருபெரிய அண்டாவின் பின்பக்கம் அமரச்செய்தாள். “இங்கே இதுதான் வசதி… வேலை கடுமையாக இருந்தாலும் நான் இங்கேதான் சந்தோஷமாக இருக்கிறேன்… நேற்று முன்தினம் ஒரு அண்டாவுக்குள் படுத்து பகல்முழுக்க தூங்கிவிட்டேன்… யாருக்குமே தெரியாது” என்றாள் கிருபை. “இரு” என்று ஓடிச்சென்று ஒரு பெரிய அப்பத்தை எடுத்துவந்தாள். இது தட்சிணநாட்டிலிருந்து வந்த ஒரு புல்லரிசி. இதை வஜ்ரதான்யம் என்கிறார்கள். தட்சிணத்தில் விளையும் ஒருவகை புல்லில் இருந்து எடுப்பது இது…”
அந்த அப்பம் கனமாக இருந்தது. வெல்லம்போட்டு நெய்விட்டுச் செய்திருந்தமையால் உலர்ந்தாலும் மென்மையாக இருந்தது. சிவை அதில் பாதியைப்பிய்த்து கிருபைக்குக் கொடுத்தாள். “நான் முன்னதாகவே உண்டுவிட்டேன்” என்று சொல்லிக்கொண்டே கிருபை வாங்கி சாப்பிடத் தொடங்கினாள். “சிறிய அரசி எப்படி இருக்கிறாள்?” என்றாள் கிருபை. “மூத்தவள் கருநிலவுடன் புணர்ந்தாளாம். இவள் பிறைநிலவுடன் புணர்ந்திருக்கிறாள்” என்றாள் சிவை. கிருபை சிரித்து “சந்திரவம்சம் பெருகட்டும்” என்றாள். பின்பு “அந்த முனிவர் முழுநிலவை கொண்டுசென்று ஏதாவது குரங்குக்கோ கழுதைக்கோ கொடுத்துவிடப்போகிறார்…ஏற்கனவே ஒருவன் மீனுக்குக் கொடுத்ததன் விளைவை நாம் அனுபவிக்கிறோம்.”
“யார் மீனுக்குக் கொடுத்தது?” என்றாள் சிவை. “சேதிநாட்டு மன்னன் உபரிசிரவசு காட்டுக்கு வேட்டைக்குப்போனபோது மீனுக்குக் கொடுத்த விந்துதான் சத்யவதியாகப் பிறந்ததாம்.” சிவை புன்னகைசெய்து “இது யார் சொல்லும் கதை?” என்றாள். “இது பிராமணர்கள் சொல்வது….மச்சகுலப்பெண்ணிடம் தானம் வாங்கவேண்டும் அல்லவா?” என்றாள் கிருபை. சிவை புன்னகை செய்தாள். “நான் வருகிறேன்…அங்கே எருமை என்னை தேட ஆரம்பித்திருப்பாள்…”
மீண்டும் கூடத்துக்கு வந்தபோது எதிர்பார்த்ததுபோலவே மாதங்கி அவளைத்தான் தேடிக்கொண்டிருந்தாள். “எங்கே சென்றாய் பீடை?” என்று கையை ஓங்கிக்கொண்டுவந்தாள். சிவை “நான் பெரிய அரசியிடம் இருந்தேன்” என்றதும் ஐயத்துடன் பார்த்துவிட்டு “சரி, சென்று முனிவர் அவரது தவச்சாலைக்குச் சென்றுவிட்டாரா என்று பார்” என்றாள். “அவர் அறையில் இல்லை” என்றாள் சிவை. “சொன்னதைச் செய்…வந்துவிட்டார் என்று சொன்னேனே?” என்று அவள் கூவினாள். சிவை ஓடி இடைநாழி வழியாகச் சென்று அறைவாசலில் நின்றாள். பிறகு மெல்ல கதவைத்திறந்து உள்ளே சென்றாள்.
அறைக்குள் பீடத்தில் அமர்ந்து வியாசர் சுவடியை புரட்டிக்கொண்டிருந்தார். சிவை பேசாமல் நின்றாள். முதியவரின் நரைகலந்த தாடி காற்றில் மெல்லப்பறந்தது. சற்று நேரம் கழித்து அவர் தலைதூக்கி அவளைப் பார்த்தார். “என்ன?” என்றார். “தங்களுக்கு அனுஷ்டானங்கள்…” என்றாள் சிவை “அனுஷ்டானமா? எனக்கா?” வியாசர் புன்னகை செய்து “அதெல்லாம் வைதிகரிஷிகளின் வழக்கம். நான் காவியரிஷி. என் அனுஷ்டானம் கவிதை மட்டும்தான்…அது விடிவதற்குள்ளேயே வேண்டுமளவுக்கு ஆகிவிட்டது” என்றார்.
“தங்களுக்கான உணவு…” என்றாள் சிவை. “தேவையில்லை…அதுவும் ஆகிவிட்டது.” வியாசர் தாடியை நீவியபடி மீண்டும் சுவடியைப்பார்த்தார். சிவை குனிந்து நிலத்திலிருந்து ஒரு சுவடியை எடுத்து மேலோட்டமாக வாசித்து “இது அந்தச்சுவடிகளில் இருந்து விழுந்தது” என்றாள். “விழாதே…இது பட்டுநூலில் அல்லவா கட்டப்பட்டுள்ளது?” என்றார் வியாசர். “இது ஸ்வாயம்புவ மனுவின் மைந்தரான பிரியவிரதரின் கதை அல்லவா? புராணசம்ஹிதையில் உள்ள சுவடிதான்” என்றாள்.
வியாசர் அதை வாங்கியபடி அவளை ஏறிட்டுப்பார்த்து “நீ எப்படி புராணசம்ஹிதையை அறிந்தாய்?” என்றார் . சிவை “என் அன்னை பெரிய விதூஷி…” என்றாள். வியாசர் அவளை கூர்ந்து நோக்கி “நீ எந்தக்குலம்? உன் மூதாதையரை நான் அறிவேன் என்று நினைக்கிறேன்” என்றார். “என் தந்தைவழியில் நான் லோமசமுனிவரின் குலத்தைச் சேர்ந்தவள்” என்றாள் சிவை. “என் தாய் லோமஹர்ஷரின் மகள்.”
முகம் மலர்ந்து வியாசர் எழுந்துவிட்டார். “லோமசரை நான் அறிவேன். புராணசம்ஹிதையை நான் அவரிடம் பாடம்கேட்டிருக்கிறேன். அவரது குருமரபினர் சிலர் என்னைத்தேடிவருவதுண்டு….தேவிபுராணசம்ஹிதையை கற்றறிந்த லோமஹர்ஷரையும் நான்குமுறை சந்தித்திருக்கிறேன்” என்றார். சிவை தலைவணங்கினாள். “இந்த காலையில் லோமசரின் குலத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணைப்பார்ப்பது காவியதேவதையையே பார்ப்பதுபோலிருக்கிறது.” அவர் முகம் இருண்டது. மீண்டும் அமர்ந்து “பெண்ணே, என் வாழ்க்கையின் நரகதினங்கள் இவை…என் உடல் நோயுற்று அழுகி இறப்பதை நானே பார்ப்பதுபோன்ற நாட்கள்…” என்றார்.
சிவை ஒன்றும் சொல்லவில்லை. “ஆணிமாண்டவ்ய முனிவரைப்போல நான் என் அன்னையால் கழுவில் ஏற்றப்பட்டிருக்கிறேன். தீச்சொல்லிடவேண்டுமென்றால் நான் என்னைத்தான் இலக்காக்க வேண்டும்.” சிவை வணங்கி “நடக்கும் அனைத்துக்கும் நாமறியாத இலக்குகள் உண்டு என்று தாங்கள் அறியாததா?” என்றாள். வியாசர் புன்னகைத்து “அதை அறியாத எவரும் மண்ணில் இல்லை. ஆனால் தீயன நிகழும்போது அதனால் அகம் எரியாதவர்களும் இல்லை. ஞானம் துயரத்துக்கு மருந்தல்ல என்று அறிந்தவனே கவிஞனாக முடியும்” என்றபின் பெருமூச்சுவிட்டார்.
சிவை அவர் என்ன சொல்லவிருக்கிறார் என்று புரியாமல் பார்த்துக்கொண்டு நின்றாள். “இதுவரை ஞானயோகம். இனி வேதங்களைத் தீண்டும் தகுதி எனக்கில்லை. என் ஞானத்தில் விஷ அம்பு ஊடுருவிவிட்டது” என்றார். சிவை “துளைவிழுந்த மூங்கில்தான் பாடும் என்பார்கள் சூதர்கள்” என்றாள். வியாசர் திடுக்கிட்டதுபோல திரும்பிப்பார்த்தார். “ஆம் பெண்ணே, இந்நாட்களில் என் ஆன்மாவில் துளை விழுந்துவிட்டது. இந்த பூமியின் அத்தனை காற்றையும் இசையாக்கினாலும் அந்தத் துளை மூடப்போவதில்லை” என்று தலையை அசைத்துக்கொண்டார்.
பின்பு தனக்குள் என “மூன்று தளங்கள் கொண்டது காவியம் என்பார்கள் ரிஷிகள். வம்சகதை, விவேகம், கண்ணீர். கண்ணீரை இப்போதுதான் அடைகிறேன். இது எனக்குள் சிந்தாமல் தேங்கிக்கிடக்கும்…என் பிரக்ஞை உள்ளவரை” என்றார்.
“காமகுரோதமோகங்களை அறிந்தவனே கவிஞன் என்பார்கள்” என்று சிவை சொன்னாள். “உண்மை… நான் அனைத்தையும் இந்த மூன்றுநாட்களில் கற்றுக்கொள்வேன் என்று நினைக்கிறேன்…” எழுந்து சாளரம் வழியாக வெளியே நோக்கி “காவியம் மூன்று பக்கங்களைக் கொண்டது என்று நினைக்கிறேன். கிருஷ்ணபக்ஷம் சுக்லபக்ஷம் பூர்ணிமை. இருள்நிலவுப்பகுதியும் ஒளிர்நிலவுப்பகுதியும் நீண்டவை. முழுநிலவோ ஒரே ஒரு நாளுக்குமட்டும்தான்…அதை அதிகம்பேர் பார்ப்பதே இல்லை.”
VENMURASU_EPI_33 _
ஓவியம்: ஷண்முகவேல்
[பெரிதுபடுத்த படத்தின்மீது சொடுக்கவும்]
மீண்டும் தன்னுணர்வு கொண்டு “நான் இதை ஏன் உன்னிடம் சொல்கிறேன் என்று வியப்படையாதே. நான் சொல்லிக்கொள்வது எனக்குள்தான்…நீ போகலாம்” என்றார் வியாசர். சிவை தலைவணங்கி வெளியேறினாள். மாதங்கியின் கண்ணில் படாமல் மீண்டும் சமையலறைக்கே சென்றாலென்ன என்று அவள் பதுங்கி நடந்தபோது பின்பக்கம் குரல் வெடித்தெழுவதுபோல ஒலித்தது “அங்கே என்ன செய்கிறாய் இருட்டுப்பிறவியே?…உன்னை என் அறைக்கு வரச்சொன்னேனே!”
சிவை மெல்ல “இல்லை” என்றாள். “என்னடி இல்லை? நான் பொய்சொல்கிறேன் என்கிறாயா?” சிவை பேசாமல் நின்றாள். “சென்று பேரரசியின் ஆடைகளைக் கொண்டு வா….சலவைக்காரிகள் வந்துவிட்டார்கள்.” சிவை தப்பித்த உணர்வுடன் இடைநாழியில் ஓடினாள். பேரரசியின் அறைவாசலில் சிலகணங்கள் நின்றபின் கதவைத்திறந்து உள்ளே சென்று வணங்கினாள்.
அறைக்குள் பழைய ஆடைகள் போடும் மூங்கில்கூடை ஏதும் இல்லை. கேட்பதா வேண்டாமா என்று சிவை தயங்கினாள். உள்ளே சியாமையும் பேரரசியும் பேசிக்கொண்டிருந்தனர். சீர்மொழியில் பேசிக்கொண்ட அவர்கள் அவளிருப்பதை கவனிக்கவில்லை. அவளுக்கு சீர்மொழி தெரியும் என்பதை அவள் எவரிடமும் காட்டிக்கொண்டதில்லை.
சத்யவதி உரக்க “என்ன செய்யமுடியும் நான்? என்னால் முடிந்ததை செய்துவிட்டேன். இரண்டு கருவுமே குறையுடையவை என்றால் அது சந்திரகுலத்தின் விதி… வேறென்ன செய்ய? என்னால் இனிமேல் இதை தாளமுடியாது” என்றாள்.
“நிமித்திகர் பெரும்பாலும் ஊகங்களையே சொல்கிறார்கள் பேரரசி” என்றாள் சியாமை. “இரண்டு அரசிகளுமே நல்ல இளமையுடன் உடல்நலத்துடன் இருக்கிறார்கள். முனிவரோ பெரும்தவசீலர்…”
சத்யவதி “உனக்கே தெரியும் சியாமை, பசப்பாதே. நிமித்திகர்கள் சொல்வது உண்மை… சந்திரகுலத்தின் குழந்தைகள் நற்புதல்வர்களாக வரப்போவதில்லை. ஒருத்தி கண்ணை மூடிவிட்டாள். இன்னொருத்தி அஞ்சி வெளுத்துவிட்டாள் என்கிறார்கள்… அவன் தோற்றம் அப்படித்தான் இருக்கிறது. அப்படித்தான் குழந்தைகள் பிறக்கும். நிமித்திகர் பொய்சொல்வதில்லை. நான் கருவுற்றிருக்கையிலும் இதைத்தான் நிமித்திகர் சொன்னார்கள். அதுவேதான் மீண்டும் நிகழபோகிறது.”
சியாமை “பேரரசி, நிமித்திகர் குழந்தைகள் பிறக்காதென்று சொல்லவில்லை. குழந்தைகள் இறக்குமென்றும் சொல்லவில்லை. குழந்தைகள் நாடாள வாய்ப்பில்லை என்றும் சொல்லவில்லை. வளர்பிறை இருளும் தேய்பிறைநோயும் அவற்றுக்கு இருக்கும் என்று மட்டும்தான் சொன்னார்கள்…”
சத்யவதி “ஆம், அதற்கு என்ன பொருள்? ஒருவன் அறியாமை கொண்டவன் இன்னொருவன் நோயாளி. அதுதானே? அவர்களா சந்திரவம்சத்தை காக்கப்போகிறார்கள்?”
“எந்த அரசும் நல்லரசர்களால் மட்டும் ஆளப்படுவதில்லை பேரரசி… நல்ல அமைச்சர்கள் இருந்தால் எவரும் நாடாளமுடியும். நிமித்திகர் சொற்களின்படி அதற்கடுத்த தலைமுறையில்தான் குருவம்சத்தின் மாவீரர்களும் சக்ரவர்த்திகளும் பிறந்துவரப்போகிறார்கள். அதுவரை நாம் காத்திருப்போம்” என்றாள் சியாமை.
“என்ன சொல்கிறாய்?” என்றாள் சத்யவதி. “இன்னொரு குழந்தை பிறக்கட்டும். வியாசரின் ஞானம் அனைத்தையும் கொண்ட குழந்தை. அவரது கருவை விரும்பிப் பெற்றுக்கொள்ள விழையும் ஒரு சூதப்பெண் அவனை கருவுறட்டும். அந்தக் குழந்தை அமைச்சராக உடனிருந்தால் நாம் ஆட்சியைப்பற்றி கவலைகொள்ளவேண்டியதில்லை.”
சத்யவதி அப்போதுதான் சிவையைப் பார்த்தாள். “நீ சென்று மாதங்கியை வரச்சொல்” என்றாள். சிவை “ஆணை பேரரசி” என்றபின், வெளியே செல்ல முயன்ற கணத்தில் சத்யவதி கடும் சினத்துடன் எழுந்துவிட்டாள். “நில்… நான் சொன்னது உனக்கு எப்படி புரிந்தது? உனக்கு சீர்மொழி தெரியுமா? உண்மையைச் சொல்!” சிவை நடுங்கி கைகளைக் கூப்பியபடி “தெரியும் தேவி…” என்றாள். அவள் கண்ணிலிருந்து கண்ணீர் சொட்டியது.
“அப்படியென்றால் ஏன் நீ இதுவரை அதைச் சொல்லவில்லை? நீ எந்த நாட்டு உளவுப்பெண்? யாரங்கே …ஏய் யாரங்கே?” அந்த உரத்த குரல்கேட்டு கதவைத்திறந்து மாதங்கி ஓடிவந்து நின்றாள். சத்யவதி “இவளை வதைக்கூடத்துக்குக் கொண்டுசெல்…இவளுக்கு எப்படி சீர்மொழி தெரியும் என்று கேள். இவள் எந்த நாட்டுக்காரி, இவள் குலம் எங்கிருந்து வந்தது, இவளைச் சந்திப்பவர்கள் யார் யார் ? அனைத்தும் எனக்குத்தெரிந்தாகவேண்டும்” என்றாள்.
மாதங்கி சிவையின் கைகளைப் பிடித்தாள். சிவை அப்படியே முழந்தாளிட்டு மண்ணில் விழுந்து இருகைகளையும் தலைமேல் கூப்பி “பேரரசி நான் இங்கேயே பிறந்து வளர்ந்தவள். தஙகள் அடிமை… ஒருகணம்கூட தங்களுக்கு வஞ்சம் எண்ணாதவள்….லோமஹர்ஷன் வழிவந்த சுபைக்கும் லோமசர் வழிவந்த பீதருக்கும் பிறந்தவள் நான்…” என்று கூவினாள்.
மாதங்கி இன்னொரு கையால் சிவையின் கூந்தலைப்பற்றி தரையில் இழுத்துச் சென்றாள். அச்சத்தால் உடல் நடுங்கி உதற கைகளால் மஞ்சத்தின் கால்களைப் பற்றிக்கொண்டு “பேரரசி, கருணை காட்டுங்கள். நான் எந்தப்பிழையும் செய்யவில்லை. நான் இந்த அரண்மனைக்கு அப்பால் ஏதும் அறியாதவள்” என்றாள். “என் குலமும் வரிசையும் இங்குள்ள எல்லா நிமித்திகர்களுக்கும் தெரியும் தே.”
மாதங்கியிடம் கைகாட்டி “நில்” என்றாள் சியாமை. “பேரரசி, நான் சொன்னதுபோல முனிவரின் கருவைத்தாங்கி நமக்கு ஒரு ஞானியான அமைச்சரை அளிப்பதற்கு லோமசரின் வழிவந்த சூதப்பெண்ணைவிட தகுதியானவள் யார்?”
சத்யவதி கண்கள் சுருங்க சிவையைப் பார்த்தாள். சியாமை “ஆம் பேரரசி, இவள் சீர்மொழி அறிந்தவள். அவரிடம் காவியத்தை பகிர்ந்துகொள்ள இவளால் முடியும். கன்னி, அழகி. இவளிடம் சொல்வோம், ஞானியான புதல்வன் வேண்டும் என்று அவரிடம் அருட்கொடை கோரும்படி” என்றாள்.
சிலகணங்கள் சிந்தித்தபின் மாதங்கியிடம் “அவளை விடு” என்றாள் சத்யவதி. “எழுந்து நில்” என்று சொன்னதும் சிவை எழுந்து உடையை அள்ளி மார்பின் மேல் போட்டுக்கொண்டு கண்னீருடன் கைகூப்பினாள். சத்யவதி அவள் அருகே வந்து அவள் தலையில் கையை வைத்தாள். கை இறங்கி அவள் கன்னத்தைத் தொட்டது. மென்மையான வெம்மையான சிறிய கை. சிவை உடல் சிலிர்த்து விம்மினாள்.
சத்யவதி திரும்பி மாதங்கியிடம் “மாதங்கி, இனி இவள் இந்த அந்தப்புரத்தின் மூன்றாவது அரசி… இவளுக்கு பிற இரு அரசியர் அன்றி அனைவரும் சேவை செய்தாக வேண்டும். இது என் ஆணை!” என்றாள்.
சொற்களை உள்ளே வாங்காமல் சிவை மாதங்கியையும் சத்யவதியையும் பார்த்தாள். உடல்நடுங்க மாதங்கி கைகூப்பி நிற்பதையும் அவள் கண்களில் இருந்து கண்ணீர் திரண்டு சொட்டுவதையும் கண்டபின் சியாமையைப் பார்த்தாள். சியாமை “சூதர்களின் அரசி, உங்கள் சேவைக்கு நானும் சித்தமாயிருக்கிறேன்” என்றாள்.

No comments:

Post a Comment