அன்புடையீர் நல்வரவு ,

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,
தேவாங்கர்களாகிய நாம் அனைவரும் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்து வந்தாலும் தேவாங்கர் என்னும் உணர்வு நம்மை ஓன்று சேர்க்கிறது. மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்ற வாக்கிற்கு இணங்க காலத்திற்கு ஏற்ப நாம் நமது குல நிகழ்வுகளை தகுந்த தொழில்நுட்பத்தை கொண்டு பதிவு செய்வது அவசியமான ஓன்று.

இந்த புதியபக்கம் நமது தேவாங்க சமூக செய்திகள்,சடங்குகள்,வரலாறு & அண்மை நிகழ்ச்சிகளை அறிந்துகொள்ளவும் தேவைப்படும் போது பார்க்கவும் உருவாக்கப் பட்டுள்ளது.
உறவுகள் தங்கள் பகுதியில் உள்ள கோவில்&குல தெய்வம் கோவில்களில் நடைபெறும் திருவிழா நிகழ்ச்சிகள் மற்றும் படங்களை இடம்பெற செய்யவும்.

தங்கள் கருத்துக்கள் இந்த தளத்தை மேன்படுத்த உதவும் ஆகயால் தயவுசெய்து கருத்திடவும் . ( தமிழில் கருத்திட தமிழ் எழுதியை பயன்படுத்தவும்)

நன்றி.

12/20/13

துலாம் (சித்திரை 3-ஆம் பாதம் முதல், சுவாதி, விசாகம் 3-ஆம் பாதம் முடிய) பொதுப்பலன்கள்

துலாம்
(சித்திரை 3-ஆம் பாதம் முதல், சுவாதி, விசாகம் 3-ஆம் பாதம் முடிய)

பொதுப்பலன்கள்
2014-ஆம் ஆண்டு துலா ராசிக்கு 3-ஆவது இடம் தனுசு ராசியிலும் 12-ஆவது இடம் கன்னி லக்னத்திலும் பிறக்கிறது. 2014-ஆம் வருட ராசி நாதன் குரு உங்கள் ராசிக்கு 9-ல் நின்று உங்கள் ராசியைப் பார்ப்பதால் செல்வாக்கும் சொல்வாக்கும் குறையாது. திட்டமிட்ட செயல்களைத் திருப்திகரமாக செயல்படுத்தலாம். "எங்கெங்கு காணினும் சக்தியடா' என்று மகாகவி பாரதியார் பாடிய மாதிரி இவ்வருடம் எங்கெங்கும் வெற்றி எதிலும் வெற்றி- தங்கு தடையில்லாமல் தன்னிகரில்லாத வெற்றி என்று வெற்றிகீதம் இசைக்கலாம்.

3-ஆம் இடம் தைரிய ஸ்தானம், சகாய ஸ்தானம், நட்பு ஸ்தானம், சகோதர ஸ்தானம். அப்படிப்பட்ட 3-ஆவது ராசியில் புதுவருடம் பிறப்பதோடு, அந்த ராசிநாதனே (குரு) உங்கள் ஜென்ம ராசியைப் பார்ப்பது விசேஷம்தான். ஆறு மாதம் கழித்து குரு 10-ஆம் இடமான கடகத்துக்கு மாறுவார். மாறினாலும் உச்சபலம் அடைவதால் வருடம் முழுக்கமுழுக்க அந்த யோகமும் வெற்றியும் தொடரும்.

நண்பர்களின் ஆதரவும், உடன்பிறந்தோரின் ஒத்துழைப்பும் உங்களுக்கு மன தைரியத்தையும் துணிவையும் தரும். 9-ஆம் இடம் பூர்வபுண்ணிய ஸ்தானம். பிதுரார்ஜித சொத்துகளைக் குறிக்கும் ஸ்தானம். துலா ராசிக்கு 6-க்குடைய குரு 9-ல் நிற்பதால், பூர்வீக சொத்து பங்குபாகங்களில் சகோதரிகளும் உரிமை கொண்டாடலாம். ஏற்கெனவே அவர்கள் திருமண காலத்திலேயே பொன்னாபரணங்கள், பண்டம் பாத்திரம், சீர்வரிசை என்று சிறப்பாக செய்துவிட்டபடியால், இனி இருக்கும் சொத்துகளில் பெண்பிள்ளைகள் உரிமை கொண்டாட முடியாது. கொண்டாடக்கூடாது என்று நீங்கள் கோரிக்கை வைக்கலாம். இருந்தாலும் அது செயல்படுமா என்பது அன்னையின் விருப்பப்படியே நடக்கலாம்.

அப்படியே பஞ்சாயத்து செய்து ஏதோ பேருக்கு ஒரு குறிப்பிட்ட தொகையைக் கொடுத்து சமாதானப்படுத்தலாம். ராஜபாளையம்- தென்காசிப் பாதையில், வாசுதேவநல்லூரிலிருந்து ஐந்து கிலோமீட்டரில் தாருகாபுரம் உள்ளது. பஞ்சபூதத் தலங்களில் அது நீர் (அப்பு) ஸ்தலம். சுவாமி மத்தியஸ்தநாதர். அம்பாள் அகிலாண்டேஸ்வரி. ஒரு காலத்தில் பாண்டிய மன்னனுக்கும் சேர மன்னனுக்கும் ஏற்பட்ட விவகாரத்தில் சுவாமியே மத்தியஸ்தம் பண்ணி சமரசப்படுத்தியதாக வரலாறு! இந்தக் கோவிலில் இன்னொரு சிறப்பு- தட்சிணாமூர்த்தி சிலையில் சனகாதி முனிவர்கள் நான்கு பேரோடு நவகிரகங்களும் பீடத்தைச் சுற்றி காட்சியளிக்கிறார்கள். இவரை வழிபடுவதால் நவகிரகங்களும் அனுக்கிரகங்களாக ஆசீர்வதிப்பார்கள் என்பது ஐதீகம். அத்துடன் பஞ்சாயத்து விவகாரத்திலும் உங்களுக்கு சாதகமான தீர்ப்பு உண்டாகும்.

12-ஆவது விரய ஸ்தானத்தில் ஆங்கிலப் புத்தாண்டு பிறப்பதால், இந்த வருடம் தவிர்க்க முடியாத செலவுகளும் ஏற்படும் என்றாலும் அவை சுபமங்களச் செலவுகளாகவே அமையும். ராசியில் யோகாதிபதியான சனி உச்சம் பெறுவதாலும், 2, 7-க்குடைய செவ்வாய் கன்னியா லக்னத்தில் இருப்பதாலும் குடும்பத்தில் சுபச் செலவுகள் உண்டாகும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணயோகமும், வாரிசு வேண்டுவோருக்கு வாரிசு யோகமும் உண்டாகும். 9-க்குடைய புதனும் 3-க்குடைய புதனும் பரிவர்த்தனையாக இருப்பதும் ஒரு காரணம்.

துலா ராசிநாதன் சுக்கிரன் 4-ல் அமர்ந்து 10-ஆம் இடம் கடகத்தைப் பார்க்கிறார். ஜென்ம ராசியில் உச்சம் பெற்ற சனியும் 10-ஆம் இடத்தைப் பார்க்கிறார். சனி ராஜயோகாதிபதியாவார். பிள்ளைகளைப் பெற்றெடுத்த பெற்றோர், பிள்ளைகளினால் பெருமையும் பேரானந்தமும் அடையலாம். படிப்பு, விளையாட்டு, கலைத்துறை, பேச்சுப்போட்டி, எழுத்துப்போட்டி என்று உங்கள் பிள்ளைகள் சாதனை படைத்து பேரும்புகழும் பரிசும் வாங்குவது உங்களுக்கு பெருமைதானே!

“"தந்தை மகற்காற்றும் உதவி அவையத்து முந்தியிருப்பச் செயல்' என்றும்,  "மகன் தந்தைக்காற்றும் கடன் இவன் தந்தை எந்நோற்றான் கொல் எனும் சொல்' என்றும் தந்தை- தனயன் கடமையை வள்ளுவர் குறிப்பிட்டுள்ளார். அதேபோல "ஈன்றபொழுதிற் பெரிதுவக்கும் தன் மகனைச் சான்றோன் எனக் கேட்ட தாய்' என்றும் சொல்லியிருக்கிறார். 2014-ல் பெற்றவர்களுக்கும் பிள்ளைகளுக்கும் பெருமை சேரும்.

புராணத்தில் தந்தையை மிஞ்சிய புதல்வன்- "கந்தக் கடவுள்!' இதிகாசத்தில் தந்தையைவிடப் புகழ்பெற்றவர்கள் "லவன் குசன்!' சரித்திரத்தில் தந்தை மோதிலால் நேருவைவிட புகழ்பெற்றவர் ஜவஹர்லால்நேரு- அவரைவிட புகழ்பெற்றவர் இந்திரா காந்தி! அந்தமாதிரி உங்களைவிட புகழ்பெறும் பாக்கியம் உங்கள் மக்களுக்கு உண்டு. 5-க்குடைய சனி உச்சம் பெற்று, அவரையும் 5-ஆம் இடத்தையும் 9-ஆம் இடத்தில் உள்ள குரு பார்த்த பெருமை அதுதான்.

ஒருசில பிள்ளைகளினால் பெற்றவர்கள் அடையும் வேதனையும் வடிக்கும் கண்ணீரும் சொல்லிமுடியாது. இப்படிப்பட்ட பிள்ளை இருப்பதை விட இறப்பதே மேல் என்று நினைக்கத் தோன்றும். 5-க்குடையவர் நீசமாகி 5-ல் பாபகிரக சம்பந்தம் இருக்கும் பெற்றோர் ஜாதகம் அப்படித்தான் அமையும். இப்படிச் சொன்னபடி கேட்காத பிள்ளைகள் திருந்துவதற்கு என்ன பரிகாரம் என்றால், 21 ஞாயிற்றுக்கிழமை காலை 6-00 மணி முதல் 7-00 மணிக்குள் சூரிய ஓரையில், நந்தி சந்நிதியில் நெய் விளக்கு ஏற்றி பிரார்த்திக்க வேண்டும்.

இந்த வருடம் குரு, ராகு- கேது, சனி ஆகிய மூன்று கிரகப் பெயர்ச்சிகள் ஏற்படும். ஜூன் மாதம் 13-ஆம் தேதி குருப்பெயர்ச்சியும், ஜூன் மாதம் 21-ல் ராகு- கேது பெயர்ச்சியும் ஏற்படும். ஆனால் சனிப்பெயர்ச்சி டிசம்பர் 16-ல் வருவதால் அதன் பலனை 2015-ல் விரிவாகக் காணலாம்.

13- 6- 2014-ல் மிதுன குரு கடகத்துக்கு மாறுவார். அதாவது துலா ராசிக்கு 9-ல் இருந்து 10-ஆம் இடத்துக்கு மாறுவார். 9-ஆம் இடத்தைவிட 10-ஆம் இடம் சர்வசாதாரண இடம்தான். 10-ஆம் இடத்து குரு பதிமாறச் செய்யும் என்பார்கள். ஆனால் குரு கடகத்தில் உச்சம் பெற்று- துலா ராசிக்கு 2-ஆம் இடத்தையும், 4-ஆம் இடத்தையும், 6-ஆம் இடத்தையும் பார்க்கப் போவதால், பாதிப்புக்கு இடமில்லை. மேலும் 10-ஆம் இடத்துக்கு (கடகத்துக்கு) குரு பாக்கியாதிபதி (9-க்குடையவர்) என்பதால் தொழில் கெடாது. வியாபாரம் விருத்தியடையும். புதிய வேலைவாய்ப்பும் உண்டாகும். 4-ஆம் இடத்தை குரு பார்ப்பதால் தேக ஆரோக்கியமும் சௌக்கியமும் உண்டாகும். சிலருக்கு வாகன பரிவர்த்தனை யோகம் உண்டாகும். சிலருக்கு பூமி, வீடு, வாகன யோகம் அமையும். சிலருக்கு தாய்வழிச் சொத்து கிடைக்கும். சிலருக்கு வேலை பார்க்கும் மனைவி பேரில் கடன் வாங்கி புது வீடு கட்டி கிரகப்பிரவேசம் செய்யும் யோகம் உண்டாகும்.

இன்னும் சிலர் ஒரு வட்டிக்கு வாங்கி இரண்டு வட்டிக்கு தாங்களே கையிலிருந்து கடனை அடைத்து நஷ்டப்பட்டது உண்டு. அப்படிப் பட்டவர்களுக்கு கடகத்தில் உச்சம் பெறும் குருவை ஜென்மத்தில் உச்சம் பெறும் சனி பார்ப்பதால், திடீர் தனப்ராப்தி யோகம் அமையும். பொதுவாக "உச்சனை உச்சன் பார்த்தால் பிச்சை எடுக்கச் செய்யும்' என்பது பழமொழி. ஆனால் சனியோடு ராகு- கேது சம்பந்தம் பெறுவதால் மேற்கண்ட விதிக்கு- விதிவிலக்கு ஆகும். கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் யோகம். ஜூன் 21-ஆம் தேதி ராகு- கேது பெயர்ச்சிக்குப் பிறகும் அந்த யோகம் தொடரும். கேதுவை குரு பார்க்கவும், குருவை ராகு பார்க்கவும் ஒரு அமைப்பு ஏற்படும்.

21-ஆம் தேதி ராகு- கேது பெயர்ச்சி. துலா ராசிக்கு ஜென்மத்தில் நின்ற ராகு- 12-ஆம் இடத்துக்கு மாறுவார். 7-ஆம் இடத்தில் நின்ற கேது துலா ராசிக்கு 6-ல் மாறுவார். பாபகிரகங்கள் பாப ஸ்தானத்தில் நிற்பது யோக பலனாகும். கடந்த காலத்தில் (ஜென்ம ராகு - சப்தம கேது) கணவன்- மனைவிக்குள் கருத்துவேறுபாடும் சண்டையும் சச்சரவுமாக சஞ்சலப் பட்டவர்கள் உண்டு. அதிலும் வருமானம் உள்ள மனைவி- வருமானம் இல்லாத கணவரை அலட்சியப்படுத்துவதால் கணவருக்கு கௌரவப் பிரச்சினையாகி, அதைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் வெறுத்துப் போயிருப்பார்கள். இந்த ராகு- கேது பெயர்ச்சி அந்த மாதிரி குடும்பத்தில் நல்ல திருப்பத்தை ஏற்படுத்தும். அதாவது கணவருக்கு எப்படியாவது வருமானம் ஏற்பட்டு வைராக்கியமும் தெம்பும் உண்டாகிவிடும். அதனால் மனைவிகளும் கணவனுக்குரிய மரியாதையையும் கொடுத்து விடுவார்கள். "இல்லானை இல்லாளும் வேண்டாள்' என்று சும்மாவா பாடியிருக்கிறார்கள். கைப் பொருள் உள்ளானை எல்லாரும் எதிர்கொண்டு போற்றுவார்கள் அல்லவா!

20-2- 2014 வரை குரு வருடத்தொடக்கத்தில் வக்ரமாக இருப்பார். அடுத்து 2014 கடைசியில் நவம்பர் 27 முதல் குரு வக்ரம் அடைவார். பிப்ரவரி வரை குரு வக்ரமாக இருக்கும் காலம் மிதுனத்தில் இருப்பார். துலா ராசிக்கு 9-ல் வக்ரம் என்பது யோகம். தகப்பனார், பூர்வ புண்ணியம் வலுப்பெறும் காலம். தெய்வானுகூலம் தேடிவரும். குருவருளும் திருவருளும் பெருகும்.

நவம்பரில் குரு வக்ரம் அடையும்பொழுது துலா ராசிக்கு 10-ல் குரு உச்சமாக இருப்பார். அதுவும் நன்மையான காலமே! தொழில் உயர்வு, மேன்மை, பிரகாசம் ஏற்படும். கடகம் சந்திரன் ராசி! சந்திரன் மாநில அரசு கிரகம். சூரியன் மத்திய அரசு கிரகம். எனவே அரசுப்பணியில் இருப்பவர் களுக்கு பதவி உயர்வு, ஊதிய உயர்வு, விரும்பிய இடப்பெயர்ச்சி ஏற்பட இடமுண்டு. தொழில்துறையில் மாற்றம் இல்லாதவர்களுக்கு குடியிருப்பில் மாற்றம் ஏற்படும். அந்த மாற்றம் முன்னேற்றமான மாற்றமாக அமையும்.

2014 ஜூலை முதல் ஒரு மாத காலம் குரு அஸ்தமனமாக இருப்பார்.  குரு வக்ரம் அடையலாம். ஆனால் நீசமாகக்கூடாது. அஸ்தமனம் அடையக்கூடாது. அதனால் எந்த இடத்தில் இருக்கிறாரோ- எந்த இடத்தைப் பார்க்கிறாரோ- அவற்றில் எல்லாம் பிரச்சினைதான்.

அந்த மாதிரி சந்தர்ப்பங்களில் குரு பரிகார பூஜை செய்யவேண்டும். திருவண்ணாமலையிலிருந்து போளூர் போகும் பாதையில் கலசப்பாக்கத்திலிருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் பூண்டி என்னும் ஊர் இருக்கிறது. (மங்களத்தில் இருந்து ஒரு கிலோ மீட்டர்) அங்கு பூண்டிசாமி ஜீவசமாதி சென்று வழிபடவும். நவகிரகங்களின் தோஷங்கள் சித்தர்களின் ஜீவசமாதி சென்றுதான் போக்க வேண்டும்.

சனி வக்ரம்: ஜென்மத்தில் நிற்கும் உச்சனி 2014 மார்ச் 1-ஆம் தேதி முதல் வக்ரம் அடைவார். 28-6-2014 வரை சனி வக்ரம். இக்காலம் ஜென்மச் சனியின் தாக்கம் அதிகமாகவே இருக்கும். ஒரு கிரகம் வக்ரம் அடையும்போது அதன் பலன் உக்ரமாக இருக்கும். வக்ரத்தில் உக்ர பலம், நல்ல இடத்தில் இருந்தால் நல்ல பலன் உக்ரமாகவும் (அதாவது வேகமாகவும்), கெட்ட இடத்தில் இருந்தால் கெட்டபலன் வேகமாகவும் இருக்கும். இங்கு ஏழரைச் சனியில் ஜென்மச்சனி என்பதால், ஜென்மச் சனி சீரழிக்கும் என்பது போன்ற பலன் நடக்கும். ஆனால் பிறக்கும்போது உங்கள் ஜாதகத்தில் சனி வக்ரமாக இருந்தால், கோட்சாரத்தில் சனி வக்ரமடையும் காலம் யோகமான பலனாக இருக்கும். சனிப்ரீதியாக, சங்ககிரி பஸ் ஸ்டாப்பிலிருந்து பழைய இடப்பாடி பாதையில், சிவன் கோவிலில் சனி பகவான் தனிச் சந்நிதியில் தம்பதி சகிதம் காட்சியளிக்கிறார். சென்று வழிபடவும்.

மாதவாரிப் பலன்கள்

ஜனவரி


இந்த மாதம் உங்களுக்கு இனிய மாதமாகத் திகழும். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு ஒருசில எதிர்ப்புகள் ஏற்படலாம். அரசியல் துறையில் இருப்பவர்களுக்கு முடிவெடுக்க முடியாதபடி குழப்பங்கள் ஏற்படலாம். வியாபாரிகள், தொழிலதிபர்களுக்கு முன்னேற்றமும் லாபமும் உண்டாகும்.

பிப்ரவரி

குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் ஏற்பாடு ஆகும். அதற்காக சுபக் கடன் வாங்கலாம். தேக சுகமும் ஆரோக்கியமும் சிறப்பாக அமையும். புதிய முயற்சிகள் கைகூடும். சிலருக்கு தொழில் மாற்றம் அல்லது இடமாற்றம் ஏற்படலாம். பொருளாதாரம் சரளமாக காணப்படும்.

மார்ச் 


7-க்குடைய செவ்வாய் வக்ரம். (இரண்டு மாதம்). மனைவி அல்லது மனைவி வர்க்கத்தில் கருத்து வேறுபாடுகளும் தர்க்கங்களும் ஏற்படலாம். இருவரும் ஒரே கருத்தையே வலியுறுத்தினாலும் அதைச் செயல்படுத்தும் வழிமுறைகளில் விட்டுக்கொடுக்கும் மனப்போக்கு இருக்காது. எனவே மனத்தளர்ச்சி அடையாமல் அனுசரித்து நடக்க முயலவேண்டும்.

ஏப்ரல்


இந்த மாதமும் செவ்வாயின் வக்ரகதி தொடரும். கூடப்பிறந்தவர்களுடன் வம்பு, வழக்கு, வாக்குவாதங்கள் ஏற்படலாம். சொத்துப் பிரச்சினை, பங்குபாகப் பிரச்சினை மேலோங்கும். சொந்த பந்தத்தில் சிக்கல் ஏற்படலாம். அதனால் ஆரோக்கியமும் கெடலாம்; நிதானம் அவசியம்.

மே


கடந்த இரண்டு மாதமாக (மார்ச் முதல்- ஜூன்வரை) சனி வக்ரம்.  வக்ரத்தில் உக்ர பலம் என்பதால் கூட்டுத்தொழில் முயற்சிகளில் வெற்றியும் முன்னேற்றமும் உண்டாகும். குலதெய்வமும், அதன் எல்லையும் தெரியாமல் திண்டாடித் திரிந்தவர்களுக்கு குருப்பெயர்ச்சிக்குள் குலதெய்வமும் எல்லையும் தெரியும். பங்காளிகளுடன் போய் பூஜை செய்யலாம்.

ஜூன்


இம்மாதம் 13-ஆம் தேதி குருப்பெயர்ச்சி. 21-ஆம் தேதி ராகு- கேது பெயர்ச்சி. இந்த இரு பெயர்ச்சிகளும் உங்கள் எதிர்காலத்துக்கு நல்ல அஸ்திவாரமாக அமையும். திருமணத்தடை விலகும். புத்திர தோஷமும் அகலும். சுபமங்களச் செலவுகள் உண்டாகும். மகிழ்ச்சியான நிகழ்ச்சிகள் நடக்கும்.

ஜூலை


குரு அஸ்தமனம் அடையும் காலம். 10-ல் உச்சம் பெற்றும் அஸ்தமனம் அடைவதால் தொழில், உத்தியோகத்தில் சலனங்கள் ஏற்பட்டு விலகும். நண்பர்கள் வட்டாரத்திலும் பிரச்சினைகள் வெடிக்கும். பொருளாதாரமே அதற்கு காரணமாக அமையும். எதையும் யோசித்துச் செயல்படுவது நல்லது.

ஆகஸ்டு


வழக்கம்போல் எல்லா காரியங்களும் வழக்கப்படியே நடக்கும். கேடுகெடுதிக்கு இடமில்லை. தவிர்க்கமுடியாத திடீர் பயணத்தால் சிறு நன்மையை அனுபவிக்கலாம். கூட்டுத்தொழில் நடத்துகிறவர்கள் விவகாரம் பிடித்த வில்லங்க பார்ட்னரை விலக்கிவிட்டு மனதுக்குப் பிடித்த புது பார்ட்னரைச் சேர்க்கலாம். தொழில் விருத்தியடையும்.

செப்டம்பர்


உச்ச குருவும் உச்ச சனியும் ஒருவரையொருவர் பார்த்துக்கொள்வது ஒரு வகையில் நல்லதல்ல என்றாலும், ஜாதக தசாபுக்திகள் யோகமாக நடந்தால் எந்தச் சங்கடத்துக்கும் இடமிருக்காது. சிலசமயம் உங்கள் வாழ்க்கைப் பயணம் வேகக்குறைவாக ஓடும் வண்டிபோல நிதானமாக இருந்தாலும் பயணம் தடைப்படாது; சேரவேண்டிய இடத்துக்கு போய்ச் சேரலாம்.

அக்டோபர்


வெளிநாட்டுத் தொடர்புடையவர்களுக்கு ஆதாயம் கிடைக்கும். தனவரவு ஏற்படும். பொருளாதார நிலை திருப்திகரமாக அமையும். குடும்பத்தில் அன்பும் பாசமும் ஒற்றுமையும் உண்டாகும். இரும்பு சம்பந்தப்பட்ட தொழில் லாபகரமாக இருக்கும். உல்லாசப் பயணம் செய்வீர்கள். விமானப்பயணம் உண்டாகும். ஆரோக்கியமும் தெளிவாக விளங்கும்.

நவம்பர்


கோட்சார கிரகங்கள் அனுகூலமாக சஞ்சரிப்பதால் எந்தக் குறையும் இருக்காது; பாதிப்பும் இருக்காது. கௌரவம், புகழ், கீர்த்தி, செல்வாக்கு, ஆற்றல், திறமை, பெருமை எல்லாம் உங்களை வந்தடையும் காலம்! திட்டங்கள் வெற்றியடையும். காரியங்கள் கைகூடும்.

டிசம்பர்


டிசம்பர் கடைசியில் சனிப்பெயர்ச்சி. ஜென்மச் சனி விலகி 2-ஆம் இடம் மாறுவார். கடக குருவின் பார்வையைப் பெறுவார். எனவே ஏழரைச் சனி உங்களுக்கு பொங்கு சனிதானே தவிர மங்கு சனியல்ல! தங்கு தடையில்லாத முன்னேற்றமும் வெற்றியும் உண்டாகும். தெய்வப் பிரார்த்தனைகள் நிறைவேறும்.

சித்திரை நட்சத்திரக்காரர்களுக்கு


2014- ஆம் ஆண்டு மூல நட்சத்திரத்தில் பிறப்பதால், உங்கள் சித்திரை நட்சத்திரம் முதல் வருட நட்சத்திரம். மூலம் 6-ஆவது நட்சத்திரம்- சாதக தாரை! எனவே இந்த வருடம் உங்களுக்கு யோகமாகவும் அதிர்ஷ்டமாகவும் இருக்கும். பெரியோர்களின் ஆசி கிடைக்கும். தேகநலம் தெளிவாக இருக்கும். வீடு, மனை சம்பந்தமான திட்டங்கள் வெற்றியடையும்.

பரிகாரம்: அருப்புக்கோட்டை அருகில் திருச்சுளி சென்று திருமேனிநாதர் (பூமிநாதசுவாமி) துணைமாலையம்மையை வழிபடவும். ரமண மகரிஷி பிறந்த ஊர். சதானந்த முனிவர் வழிபட்ட தலம். பார்வதிதேவியார் தன்னை சிவபெருமான் மணம்புரிய வேண்டி வழிபட்ட தலம்.

சுவாதி நட்சத்திரக்காரர்களுக்கு


சுவாதி நட்சத்திரத்தில் இருந்து மூல நட்சத்திரம் (2014-ஆம் வருடம் பிறக்கும் நட்சத்திரம்) 5-ஆவது நட்சத்திரம். பகை நட்சத்திரம் என்றாலும், சுவாதி  ராகு சாரம்; மூலம் கேது சாரம் என்பதாலும் ராகு- கேது ஒரே கிரகம் என்பதாலும் விதிவிலக்கு உண்டு. மேலும் ராகு துலா ராசியிலும், கேது மேஷ ராசியிலும் சமசப்தமாக இருந்து பார்த்துக்கொள்வதாலும், குரு பார்வை ராகுவுக்குக் கிடைப்பதாலும் 2014-ல் உங்களுக்கு தேக ஆரோக்கியம், ஆயுள் விருத்தி, கல்வி யோகம், ஞானம், இனிய வாழ்வு ஆகிய எல்லா நன்மைகளையும் தருவது உறுதி.

பரிகாரம்: திருவையாறு- ஏனாகுறிச்சி வழி காமராசவல்லி சென்று கார்கோடக ஈஸ்வரரை வழிபடவும். பரீட்சித்து மகாராஜா, சர்ப்பம் தீண்டி சாகக்கடவது என்று முனிவரின் சாபத்திற்கு ஆளாகி அதேபோல இறந்தான். அதனால் அவன் மகன் சர்ப்ப யாகம் நடத்தி உலகத்தில் உள்ள எல்லா பாம்புகளையும் அக்னிக்கு இரையாக்கினான். சர்ப்பங்களின் தலைவன் கார்க்கோடகன் மட்டும் இவ்வூர் சிவபெருமானைச் சரணடைந்து உயிர் பிச்சை வேண்ட, சுவாமியும் அவனைத் தன் கழுத்தில் சூட்டிக்கொள்ள, உயிர் தப்பினான். பழுதடைந்திருந்த இந்தக் கோவிலை, இரண்டு வருடங்களுக்கு முன் புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்த சங்கல்பம் செய்து, 100 சிவாச்சாரியார்களைக் கொண்டு ஸ்ரீருத்ர ஜெப பாராயணம் செய்து ஹோமம் நடத்தினார். இப்போதும் அங்கு மூல ஸ்தானத்துக்கு நாகராஜா வந்து போவதாகவும் பார்த்ததாகவும் அர்ச்சகர் கூறுகிறார். தஞ்சாவூர்- திருவையாறு- திருமானூர்- ஏனாகுறிச்சி  வழி காமரசவல்லியை அடையலாம். கும்பகோணத்திலிருந்து திருவையாறு போகலாம்.

விசாக நட்சத்திரக்காரர்களுக்கு:


2014-ஆம் ஆண்டு மூல நட்சத்திரத்தில் உதயமாகிறது. உங்கள் நட்சத்திரம் விசாகத்தில் இருந்து மூல நட்சத்திரம் 4-ஆவது நட்சத்திரம் ஹேம தாரை. எனவே இந்த வருடம் உங்களுக்கு மிகமிக இனிய வருடமாக அமையும். விசாகம் குரு நட்சத்திரம். குருவின் தனுசு ராசியில்தான் ஆங்கில புதுவருடம் உதயமாகிறது. குருவும் 9-ல் நின்று உங்கள் ராசியைப் பார்க்கிறார். எனவே 2014-ல் உங்களுடைய நீண்டகாலத் திட்டங்கள் நிறைவேறும். தேக ஆரோக்கியம் சிறப்பாக விளங்கும். உடலை வருத்திய எல்லா நோய்களும் விலகிப்போகும். அது கேன்சர் ஆனாலும் சரி; கிட்னி பிராப்ளமாக இருந்தாலும் சரி; ஹார்ட் அட்டாக்காக இருந்தாலும் சரி... பயப்படத் தேவையில்லை. டாக்டர்கள் பயமுறுத்தும் எல்லா நோய்களும் பக்தி வழிபாட்டால் நீங்கிவிடும்.

பரிகாரம்: காரைக்குடியில் நடராஜா தியேட்டர் கீழ்புறம் நாகநாத சுவாமி கோவில்- கிருஷ்ணமூர்த்தி பெருமாள் கோவில் அடுத்தடுத்து உள்ளன. அதன் எதிரில் தெப்பக்குளம். கரையில் அட்டமாசித்தி தட்சிணாமூர்த்தி சந்நிதி இருக்கிறது. வியாழக்கிழமை சென்று வழிபடவும். சோமு குருக்கள் செல்: 99438 19133-ல் தொடர்பு கொள்ளலாம்.

No comments:

Post a Comment