அன்புடையீர் நல்வரவு ,

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,
தேவாங்கர்களாகிய நாம் அனைவரும் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்து வந்தாலும் தேவாங்கர் என்னும் உணர்வு நம்மை ஓன்று சேர்க்கிறது. மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்ற வாக்கிற்கு இணங்க காலத்திற்கு ஏற்ப நாம் நமது குல நிகழ்வுகளை தகுந்த தொழில்நுட்பத்தை கொண்டு பதிவு செய்வது அவசியமான ஓன்று.

இந்த புதியபக்கம் நமது தேவாங்க சமூக செய்திகள்,சடங்குகள்,வரலாறு & அண்மை நிகழ்ச்சிகளை அறிந்துகொள்ளவும் தேவைப்படும் போது பார்க்கவும் உருவாக்கப் பட்டுள்ளது.
உறவுகள் தங்கள் பகுதியில் உள்ள கோவில்&குல தெய்வம் கோவில்களில் நடைபெறும் திருவிழா நிகழ்ச்சிகள் மற்றும் படங்களை இடம்பெற செய்யவும்.

தங்கள் கருத்துக்கள் இந்த தளத்தை மேன்படுத்த உதவும் ஆகயால் தயவுசெய்து கருத்திடவும் . ( தமிழில் கருத்திட தமிழ் எழுதியை பயன்படுத்தவும்)

நன்றி.

12/21/13

கன்னி (உத்திரம் 2-ஆம் பாதம் முதல், ஹஸ்தம், சித்திரை 2-ஆம் பாதம் முடிய) பொதுப்பலன்கள்

கன்னி
(உத்திரம் 2-ஆம் பாதம் முதல், ஹஸ்தம், சித்திரை 2-ஆம் பாதம் முடிய)

பொதுப்பலன்கள்
2014-ஆம் ஆண்டு உங்களுடைய ராசியில் பிறக்கிறது. கன்னி லக்னம், மூல நட்சத்திரம், தனுசு ராசியில் ஆங்கில புதுவருடப் பிறப்பு. உங்கள் ராசியில் லக்னமும், 4-ஆவது ராசியில் வருட ராசியும் அமைவதால், இந்த வருடம் உங்களுக்கு பெருமை, புகழ், கௌரவம், கீர்த்தி, அந்தஸ்து எல்லாம் மிகச் சிறப்பாக இருக்கும். கடந்த வருடம் ஏழரைச் சனி காரணமாக உடல் ஆரோக்கியக் குறைவும் வைத்தியச் செலவும், சில பேருக்கு அறுவை சிகிச்சை போன்ற சங்கடங்களும் ஏற்பட்டிருக்கலாம். இந்த வருடத் தொடக்கத்தில் இருந்தே பூரண சுகமும் ஆரோக்கியமும் மனதில் உற்சாகமும் உருவாகும். ஆஸ்பத்திரி சிகிச்சை என்ற நடுக்கம் அறவே தீர்ந்துவிடும்.

4-ஆம் இடம் சுகத்தை மட்டுமல்ல; தாயார், கல்வி, பூமி, வீடு, வாகனம் போன்றவற்றையும் குறிக்கும் இடம். அந்த வீட்டுக்குடைய குரு உங்கள் ராசிக்கும் வருட லக்னத்துக்கும் 10-ல் நின்று 4-ஆம் இடத்தைப் பார்ப்பது சிறப்பு. எனவே கோழிக்கூண்டு மாதிரி குறுகிய வீட்டில் அவதிப்பட்டவர்களுக்கு, இவ்வருடம் கோவில் மாதிரி அற்புத வீடு, பங்களாவே அமையும். சிலர் சொந்த வீடு கட்டி கிரகப்பிரவேசம் செய்யலாம்.

4-க்குடையவர் 10-ல் நிற்பதால் ரியல் எஸ்டேட் தொழில் செய்கிறவர்களுக்கு இந்த ஆண்டு முதல் தொழில்விருத்தியும் முன்னேற்றமும் எதிர்பார்க்கலாம். அரசாங்க சட்ட திட்டத்தாலும், பத்திரப்பதிவு கட்டண உயர்வாலும் ரியல் எஸ்டேட் தொழில் கடந்த இரண்டு ஆண்டு காலமாக சரியில்லை. ஒருசிலர் நகைகளை அடகு வைத்து அல்லது வெளியில் கடன் வாங்கி ஒருசில இடங்களை கிரயம் முடித்து ப்ளாட் போட்டிருக்கலாம். அது வேகமாக விற்பனையாகாமல் முடங்கிக் கிடப்பதால் வட்டி நட்டம், கையிருப்பு நட்டம் என்று பாதிக்கப்பட்டிருக்கலாம். அந்த கஷ்டம் எல்லாம் இந்த ஆண்டுமுதல் தீர்வுக்கு வந்துவிடும். வீடு, மனை புரோக்கர்களுக்கும் தொழில் யோகம், தனயோகம் உண்டாகும்.

படிக்கும் மாணவர்களுக்கு கடந்த காலம் ஏழரைச் சனியின் பிடியால் மறதி, மந்தப்போக்கு, பாடப்பகுதியில் அரியர்ஸ் என்று தேக்கத்தைச் சந்தித்து ஊக்கத்தை இழந்தவர்களுக்கும் 2014 மாறுதலையும் ஆறுதலையும் தேறுதலையும் தரும். படிப்பை பூர்த்தி செய்வதோடு மேற்படிப்பையும் தொடரலாம்.

படித்துப் பட்டம் பெற்றும் அடுத்து நல்ல வேலை, நல்ல சம்பளம் இல்லாமல் மனஉளைச்சலில் தினமும் கலங்கியவர்களுக்கும் 2014-ல் நல்ல வேலை, நல்ல சம்பளம் அமையும். ஒருசிலர் வெளிநாட்டு வேலைக்கும் போய் சம்பாதிக்கலாம். பெற்றவர்கள் பட்ட கடனையும் அடைத்து உதவலாம்.

கடந்த வருடம் கரண்டு கட், நல்ல பணியாள் இல்லாத சூழ்நிலை, பணப்பற்றாக்குறை போன்ற காரணங்களினால் தொழில்துறையில் ஏமாற்றம், இழப்பு, கை நஷ்டம் என்று கலங்கியவர்களுக்கும் 2014 கைகொடுத்து தூக்கிவிடும். கவலையையும் கண்ணீரையும் துடைக்கும். சிலர் அரசு உதவியோடும் தனியார் நிதியுதவியோடும் புதிய தொழில் ஆரம்பித்து திருப்தியாகச் செயல்படலாம்.

7-க்குடையவர் 10-ல் இருப்பதால் வேலை தேடி முயற்சிக்கும் மனைவிகளுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். அல்லது மனைவி பெயரில் தொழில் செய்யலாம். பெண்கள் ஜாதகமாக இருந்தால், 7- கணவர் ஸ்தானம் என்பதால் கணவருக்குப் பதவி உயர்வு யோகம் அமையும். அல்லது அடிமை வேலையை உதறித் தள்ளிவிட்டு சொந்தத் தொழில் ஆரம்பிக்கலாம். முதலீடு பற்றாக்குறையைச் சமாளிக்க கூட்டுச்சேரலாம். ஏற்கெனவே பணியில் இருக்கும் மனைவிக்கு பதவி உயர்வு அல்லது ஊதிய உயர்வு கிடைக்கும். விரும்பிய இடப்பெயர்ச்சியும் ஏற்படும்.

2-ஆம் இடத்தில் சனியும் ராகுவும் சேர்க்கை என்பதோடு சனியும் சுக்கிரனும் பரிவர்த்தனையாக இருப்பதால், அவ்வப்போது குடும்பத்தில் சலசலப்புகளும் ஈகோ உணர்வால் வறட்டு கௌரவப் பிரச்சினைகளும் உண்டாகலாம். சிலசமயம் கலகலப்புகள் மறைந்து கவலைகள் நிலவும். அம்மாதிரி சந்தர்ப்பங்களில் குடும்பத்தில் உள்ளவர்களின் கருத்துகள் மாறுபட்ட மனோநிலையில் இருக்கும் சமயம், நீங்கள் மௌனத்தை கடைப்பிடித்தால் "மௌனம் கலக நாஸ்தி' என்று தீர்வாகிவிடும். குரு பார்வை இருப்பதால் ஓரளவு பிரச்சினைகள் கடுமையாக இருக்காது.

2-ஆம் இடத்துக்கு குரு பார்வை இருப்பதால் பொருளாதாரத்தில் சரளமான பணப்புழக்கமும், வாக்கு நாணயம் காப்பாற்றப்படுதலும், சொல்லுவதைச் செய்வதும் செய்வதைச் சொல்லுவதுமான பலன்களும் நடக்கும். குடும்பச் சூழ்நிலையிலும் சிலசமயம் பனிப்போர் நடந்தாலும் உடனே அது சமரசமாகி விடும்.

குரு வக்ரம்: 24-10-2013 முதல் 20-02-2014 வரை குரு வக்ரம். வக்ரத்தில் உக்ரபலன் என்ற விதிப்படி தொழில், வாழ்க்கை, குடும்பத்தில் முக்கியமான திருப்பங்களைச் சந்திக்கலாம். ஜாதக தசாபுக்திகள் சாதகமாக இருந்தால் இக்காலம் நற்காலம், பொற்காலம். இல்லாவிட்டால் கற்காலம். திருப்பத்தூர் அருகில் பட்டமங்கலத்தில் அட்டமாசித்தி தட்சிணாமூர்த்தி கோவில் இருக்கிறது. பொதுவாக எல்லா இடங்களிலும் தட்சிணாமூர்த்தி தென்திசை நோக்கித்தான் இருப்பார். இங்கு மட்டும் கிழக்குநோக்கி இருக்கிறார். அமாவாசையன்று பக்தர்கள் ஆணும் பெண்ணும் 108 சுற்று சுற்றி வழிபடுவார்கள். அங்குசென்று வழிபடலாம்.

(27-11-2014 முதல் 26-03-2015 வரையும் குரு வக்ரம் அடைவார். மேலே சொன்ன பரிகாரம் போதும்).

குரு அஸ்தமனம்: 06-07-2014 முதல் 05-08-2014 வரை குரு அஸ்தமனம். இக்காலம் நல்லதும் கெட்டதும் கலந்து நடக்கும்.

சனி வக்ரம்: 01-03-2014 முதல் 28-06-2014 வரை சனி வக்ரமாக இருப்பார். உச்ச சனி வக்ரப்படுவது உங்களுக்கு யோகம்தான். பிறக்கும்போது ஜாதகத்தில் வக்ரம் அடையும் கிரகங்கள் கோட்சாரத்தில் வக்ரப்பட்டால் அதிக நன்மைகள் உண்டாகும் என்பது அனுபவரீதியான உண்மையாகும்.

குருப்பெயர்ச்சி: இந்த வருடம் 13-06-2014-ல் குருப்பெயர்ச்சி. மிதுன ராசியிலிருக்கும் குரு கடகத்தில் உச்சமாவார். கன்னி ராசிக்கு 10-ல் இருந்து 11-ஆம் இடத்துக்கு மாறுவது மிகமிக லாபம். யோகம். வெற்றி! அதிலும் 11-ல் உச்சம் பெறும் குரு 7-க்குடையவர். 7-ஆம் இடத்தையே பார்ப்பதால் திருமணத் தடை விலகும். ஆண்களுக்கும் பெண்களுக்கும் திருமணம் கூடும். அதேபோல கன்னிக்கு 5-ஆம் இடம் புத்திர ஸ்தானத்தைப் பார்க்கப்போவதால் புத்திரதோஷம் விலகி வாரிசு யோகம் உண்டாகும். பெண் குழந்தை பெற்றவர்களுக்கு ஆண் குழந்தைகளும் ஆண் குழந்தை பெற்றவர்களுக்கு ஆசைக்கு ஒரு பெண் குழந்தையும் உண்டாகும்.

ராகு- கேது பெயர்ச்சி: 21-06-2014-ல் ராகு- கேது பெயர்ச்சி. துலா ராசியிலிருக்கும் ராகு கன்னி ராசிக்கு ஜென்ம ராகுவாக மாறுவார். மேஷ ராசியிலிருக்கும் கேது மீன ராசிக்கு மாறுவார். 8-ல் இருக்கும் கேது 7-ல் மாறுவது நல்லதுதான் என்றாலும், ஜென்ம ராகு சப்தம கேது- குடும்பத்தில் பிரச்சினைகளை உருவாக்கும். கணவன்- மனைவிக்குள் வாக்குவாதம், தர்க்கங்களை உருவாக்கும். அப்படியில்லாமல் அன்யோன்யம், பாசம், பற்று, நேசமாக இருந்தால் ஆரோக்கியக் குறைவு, சரீர வருத்தம், மனவருத்தம் ஆகிய பலனைச் செய்யும். அந்த மாதிரி கெடுபலன்கள் நடந்தால் ராகு- கேது பரிகாரமாக திருநெல்வேலி- வள்ளியூர் வழி- விஜயாபதி சென்று வழிபடலாம். விஸ்வாமித்திரர் தவமிருந்த இடம். அருகில் தில்லைக்காளி கோவில் உண்டு. ராதாபுரம் முதல் விஜயாபதி வரை செம்மண் தரை- பாம்புப் புள்ளிகளாக இருக்கும்.

மாதவாரிப் பலன்கள்

ஜனவரி


இந்த மாதம் சிறப்பாக நற்பலன்கள் நடக்கும். குடும்பத்தில் சுபமங்கள காரியம் செயல்படும். அரசு வேலையில் இருப்பவர்களுக்கு செல்வாக்கு ஓங்கும். கடுமையாக உழைப்பீர்கள். உழைப்புக்கு சலிக்க மாட்டீர்கள். "கண் துஞ்சார்- பசியறியார் -கருமமே கண்ணாயினார்' என்ற சொல்லுக்கு நீங்களே உதாரண புருஷராக விளங்குவீர்கள்.

பிப்ரவரி


கணவன்- மனைவிக்குள் தாம்பத்திய ஒற்றுமையும், அனுசரிப்புத் தன்மையும் உண்டாகும். சொந்தத் தொழில் செய்வோருக்கு லாபம் அதிகம் கிடைக்கும். சம்பளத்துக்கு வேலை பார்ப்பவர்களுக்கு மேலிடத்தாரின் பாராட்டும் சலுகையும் கிடைக்கும். நோய் நிவர்த்தி, கடன் நிவர்த்தி, வைத்தியச் செலவு நிவர்த்தி ஆகிய நற்பலன் உண்டாகும். சிலருக்கு முக்கியமான பயணத்தால் லாபம் உண்டாகும்.

மார்ச்


உங்கள் வாழ்க்கையில் முக்கியமான திருப்பம் ஏற்படும். அது உங்களுடைய எதிர்கால இனிய வாழ்க்கைக்கு அஸ்திவாரமாக அமையும். பெருகிவரும் தொழிலிலும் குடும்ப வாழ்க்கையிலும் மனநிறைவும் திருப்தியும் ஏற்படுவது மாதிரி நல்ல சம்பவங்கள் உண்டாகும். நீண்ட காலமாக வராமலிருந்த பெருந்தொகை வந்துசேரும்.

ஏப்ரல்


பாதச்சனி கடந்த மாதத்திலிருந்து வக்ரம் அடைவது ஒருவகையில் நல்லது. இன்னொரு வகையில் கெடுதல். சில காரியங்களை ஆரம்பிக்கும் முன்பே சந்தேகமும் சஞ்சலமும் அடைவீர்கள். சில காரியங்களில் ஆரம்பித்த பிறகு முடிக்க முடியாமல் தடுமாறித் தவிப்பீர்கள். எதிலும் பட்டும் படாமலும் ஒட்டியும் ஒட்டாமலும் இருப்பது நல்லது.

மே


சனியின் வக்ரம் அடுத்த மாதம் வரை தொடர்கிறது. அதனால் பொருளாதாரத்திலும் முயற்சிகளிலும் தடை, தாமதம், தோல்விகளை சந்திக்கும் நிலை. நெருங்கிப் பழகியவர்களிடம் காரண காரியம் இல்லாமல் கருத்துமுறிவும் பிரிவும் ஏற்படும். அடுத்தவர்களிடம் எதிர்பார்த்தவை ஏமாற்றம் அடைவதாலும், அதை மனம் தாங்கிக் கொள்ளாது.

ஜூன்


இந்த மாதம் 13-ஆம் தேதி குருப்பெயர்ச்சி. 21-ஆம் தேதி ராகு- கேது பெயர்ச்சி. இரு பெயர்ச்சிகளும் உங்களுக்கு அனுகூலமாக அமையும். ஜென்ம ராசிக்கு ராகுவும், 7-ல் கேதுவும் மாறுவார்கள். குரு 11-ல் உச்சம் பெறுவார். திருமணத் தடை விலகும். புத்திர தோஷமும் விலகும். புதிய வருமானத் திட்டங்களும் நிறைவேறும்.

ஜூலை


ராகு- கேது, குருப்பெயர்ச்சிகளைத் தொடர்ந்து உங்களுக்கு யோக பலனையே தரும். சிலர் வேலை விஷயமாக வெளிநாடு போகலாம். சிலர் உல்லாசப் பயணமாக கடல் தாண்டிப் போய்வரலாம். நண்பர்களின் உதவியும் ஒத்தாசையும் நற்பலனாக அமையும்.

ஆகஸ்ட்


குரு அஸ்தமன நிவர்த்தியால் முயற்சிகளில் முன்னேற்றம், வழக்குகளில் வெற்றி, தொழில், லாபம், நண்பர்கள் ஆதரவு, புதிய தொழில்முயற்சிகளில் அனுகூலம் எதிர்பார்க்கலாம். சிலர் வாகனப் பரிவர்த்தனை செய்யலாம்.

செப்டம்பர்


இந்த மாதம் அனாவசியமான ஆடம்பரச் செலவுகளை சந்திக்கும் காலம். சிறிது அலைச்சல் ஏற்படும். பயணங்களினால் பலன் இருக்காது. உங்களால் முன்னேறிய ஒருவர் உங்களுக்கு உதவிபுரிய தேடி வருவார். அவருடன் கூட்டுச் சேர்ந்து வெளிநாட்டு வர்த்தகத் தொடர்பு வைத்துக் கொள்ளலாம்.

அக்டோபர்


பெரியவர்களைச் சந்தித்து வாழ்த்துப் பெறும் காலம். இரும்பு அல்லது அக்னி சம்பந்தப்பட்ட தொழில் தொடங்கலாம். அதற்கான நிதியுதவியும் கிடைக்கும். மேற்கு- வடக்கு திக்கிலிருந்து நல்ல தகவல்கள் வரும். பொருளாதாரத்தில் வளர்ச்சி இருக்கும்.

நவம்பர்


எடுத்த காரியங்களை தொடுத்துமுடிக்க நல்ல சந்தர்ப்பம் அமையும். சிலருக்கு புதிய தொழில் திட்டங்கள் ஏற்பட்டு தீவிர முயற்சி செய்யலாம். சில சமயம் செலவுகள் அதிகமானாலும் கவலைப்பட மாட்டீர்கள். வெற்றியடைய வேண்டும் என்ற இலட்சிய வெறியோடு செயல்படுவீர்கள்.

டிசம்பர்


இந்த மாதக் கடைசியில் சனிப்பெயர்ச்சி. இத்துடன் ஏழரைச் சனி முழுமையாக விலகிவிடும். குடும்பத்தில் அமைதியும் ஆனந்தமும் உண்டாகும். பொருளாதாரத்தில் சரளமான நிலை ஏற்படும். பழைய கடன்கள் எல்லாம் அடைபடும். நல்ல காரியத்துக்காக புதிய கடன்களும் வாங்கலாம். விட்டுப்போன சொந்தம் மீண்டும் வந்து ஒட்டி உறவாடும். பிரிந்த தம்பதியர் சேர்ந்திடுவார்கள்.

உத்திர நட்சத்திரக்காரர்களுக்கு


2014-ஆம் ஆண்டு மூல நட்சத்திரத்தில் பிறக்கிறது. உங்கள் நட்சத்திரம் முதல் மூலம் 8-ஆவது நட்சத்திரம், மைத்ர தாரை, நட்பு நட்சத்திரம். எனவே இந்த வருடம் நன்மையும் மேன்மையும் தரும் வருடமாக அமையும். கடந்த வருடத்தில் அனுபவித்த கவலைகளும் துன்பங்களும் தூர விலகிப் போகும். உத்திரம் விரயாதிபதியான சூரியன் நட்சத்திரம். சுபமங்களச் செலவுகள் உண்டாகும்.

பரிகாரம்: சென்னை செங்குன்றம் அருகில் ஞாயிறு கோவில் சென்று புஷ்ப ரதேஸ்வரரை வழிபடவும். கருப்பு உளுந்தில் வடைமாலை தயார்செய்து அணிவித்து பூஜை செய்தால் ராகு- கேது தோஷம் நிவர்த்தியாகும்.

அஸ்த நட்சத்திரக்காரர்களுக்கு


2014-ஆம் ஆண்டு மூல நட்சத்திரத்தில் பிறக்கிறது. அஸ்த நட்சத்திரம் முதல் மூலம் 7-ஆவது நட்சத்திரம்- வதை தாரை. எனவே இந்த வருடம் ஜாதக தசாபுக்திகள் யோகமாக இருந்தால் தப்பிக்கலாம். இல்லாவிட்டால் விவகாரம், வில்லங்கம், வேதனை, உடல்நலக்குறைவு, மனநலக்குறைவு, குடும்பத்தில் குழப்பம் போன்ற பல சங்கடங்களைச் சந்திக்கும் நிலை ஏற்படலாம். திங்கள்கிழமை தோறும் சிவலிங்கத்துக்குப் பாலாபிஷேகம் செய்து வழிபடவேண்டும். ஒருமுறை ருத்ரஜப பாராயணம் செய்து, ருத்ர ஹோமம் வளர்த்து சுவாமி (சிவன்), அம்பாளுக்கு ருத்ராபிஷேகம் செய்து வழிபட்டால் சஞ்சலங்கள் விலகி சந்தோஷம் உண்டாகும்.

பரிகாரம்: திரு அவனிவநல்லூர் சென்று சாட்சிநாதர் திருக்கோவிலில் வழிபடவும். கருவறையின் பின்புறம் ரிஷபாரூடர் காட்சி காணத்தக்கது. திருமால், முருகன், சூரியன், அகத்தியர், காசிபமுனிவர், கன்வ மகரிஷி வழிபட்ட தலம். கும்பகோணத்திலிருந்தும் தஞ்சாவூரில் இருந்தும் பேருந்துகள் உள்ளன. காலை சக்தி வழிபாடு சிறப்பு.

சித்திரை நட்சத்திரக்காரர்களுக்கு:


சித்திரை நட்சத்திரத்திலிருந்து 2014 பிறக்கும் மூல நட்சத்திரம் 6-ஆவது நட்சத்திரம்- சாதக தாரை. எனவே இந்த வருடம் உங்களுக்கு யோகமாகவும் அதிர்ஷ்டமாகவும் இருக்கும். பெரியோர்களின் ஆசி கிடைக்கும். தேகநலம் தெளிவாக இருக்கும். பூமி, வீடு, மனை சம்பந்தமான திட்டங்கள் வெற்றியடையும்.

பரிகாரம்: அருப்புக்கோட்டை அருகில் திருச்சுளி சென்று திருமேனிநாதர் (பூமிநாதசுவாமி), துணை மாலையம்மையை வழிபடவும். ரமண மகரிஷி பிறந்த ஊர். சதானந்த முனிவர் வழிபட்ட தலம்- பார்வதி தேவியார் தன்னை சிவபெருமான் மணம்புரிய வேண்டி வழிபட்ட தலம்.

No comments:

Post a Comment