அன்புடையீர் நல்வரவு ,

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,
தேவாங்கர்களாகிய நாம் அனைவரும் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்து வந்தாலும் தேவாங்கர் என்னும் உணர்வு நம்மை ஓன்று சேர்க்கிறது. மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்ற வாக்கிற்கு இணங்க காலத்திற்கு ஏற்ப நாம் நமது குல நிகழ்வுகளை தகுந்த தொழில்நுட்பத்தை கொண்டு பதிவு செய்வது அவசியமான ஓன்று.

இந்த புதியபக்கம் நமது தேவாங்க சமூக செய்திகள்,சடங்குகள்,வரலாறு & அண்மை நிகழ்ச்சிகளை அறிந்துகொள்ளவும் தேவைப்படும் போது பார்க்கவும் உருவாக்கப் பட்டுள்ளது.
உறவுகள் தங்கள் பகுதியில் உள்ள கோவில்&குல தெய்வம் கோவில்களில் நடைபெறும் திருவிழா நிகழ்ச்சிகள் மற்றும் படங்களை இடம்பெற செய்யவும்.

தங்கள் கருத்துக்கள் இந்த தளத்தை மேன்படுத்த உதவும் ஆகயால் தயவுசெய்து கருத்திடவும் . ( தமிழில் கருத்திட தமிழ் எழுதியை பயன்படுத்தவும்)

நன்றி.
Showing posts with label ஜெயமோகன் சிறுகதைகள். Show all posts
Showing posts with label ஜெயமோகன் சிறுகதைகள். Show all posts

1/15/14

பித்தம்

உள்வளவு அங்கணத்திண்ணையில் அமர்ந்து நல்லகுத்தாலிங்கம் பிள்ளை கஞ்சி குடித்துக் கொண்டிருந்தபோது நாகலட்சுமி அவசரமாக வாசலில் இருந்து உள்ளே வந்து ‘ ‘ அந்த அகமுடிவான் வந்திருக்கான். சொல்லியாச்சு, ஒத்த ஒரு காசு அவனுக்குக் குடுக்கப்பிடாது. குடுத்ததே போரும். இனி அவன் காசும் கொண்டு போனான்னு சொன்னா எனக்க சுபாவம் மாறும் பாத்துக்கிடுங்க ‘ ‘ என்றாள்
பயத்தம்பருப்பு சேர்த்து சமைத்து சூடாக நெய்விட்ட சம்பா அரிசிக்கஞ்சி . துணைக்கு தேங்காயெண்ணை விட்டு மயக்கி இளந்தேங்காய் நசுக்கிப்போட்ட சக்கை அவியல். தொட்டுக்கொள்ள மரச்சீனிப்பப்படம், கண்ணிமாங்காய் ஊறுகாய். மனம் கனிந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த நேரம். நல்லகுத்தாலிங்கம் பிள்ளை எரிச்சலுடன் ‘ ‘ நாற முண்ட சோலியப்பாத்துப்போறியா ? ‘ ‘ என்றார்.
‘ ‘நான் சொன்னா சொன்னதுக்க குறவு ‘ ‘என்று அவள் ஆரம்பித்தாள்.
‘ ‘எந்திரிச்சேண்ணா கொடலு வாயில வந்துபோடும் நாயே ‘ ‘ என்றார் அவர்.
கைகழுவி குறுஏப்பத்துடன் வாசலுக்கு நடந்தார். பாலராமபுரம் ஈரிழைத்துவர்த்தால் அக்குள் முதுகு கழுத்து எல்லாம் நன்றாக துடைத்துக் கொண்டார். கார்த்திகை மாதம். ஆனால் முன்னிரவில் புழுக்கம்தான்.
அரங்கில் பண்டாரம் அமர்ந்திருந்தார். பிறையில் எரிந்த புன்னைக்காய் எண்ணை விளக்கின் வெளிச்சத்தில் கரிய பண்டாரத்தின் வெண்ணிற விபூதிப்பட்டைகள்தான் துலக்கமாகத் தெரிந்தன.
‘ ‘முருகா ஞானபண்டிதா! ‘ ‘ என்று கூவியபடி வந்து குளிர்ந்த கல்திண்ணையில் சரிந்தார் பிள்ளை. பண்டாரமும் சிவகுமாரனை எண்ணிக் கூப்பாடு போட்டார்.
பண்டாரம் மாலைநேர ஜெபதபங்களையும் தியானத்தையும் முடித்துவிட்டு வந்திருக்கிறார் என்று தெரிந்தது. உடலில் இருந்து களப குங்கும குந்திரிக்க மணங்களும் பலவித மலர் மணங்களும் கலந்து அடித்தன. சடைமுடிக்கட்டில் அரளிப்பூ செருகப்பட்டிருந்தது. காதில் தெற்றிப்பூக்கள். நல்ல கரிய நெடிய உடல். முற்றிய காய்ச்சில் கிழங்கு போல திரண்ட தசைக்கோளங்கள். பண்டாரத்துக்கு வயது அறுபது என்றால் ஆயுர்வேத வைத்தியன் கூட நம்ப மாட்டான். இப்போதும் தினமும் பனையோலை காக்கோட்டையில் முந்நூறு நடை தண்ணீர் மொண்டு பிள்ளையார்கோயில் நந்தவனத்தை நனைப்பார். இருவேளைதான் சாப்பாடு. வீட்டுக்கு ஒருவர் ஒரு நாளைக்குள்ள அரிசியும் பருப்பும் கொடுத்துவிடுவார்கள். காய்கறிகள் பண்டாரமே நட்டு வளர்த்து வைத்திருந்தார்.
பண்டாரமே பேசட்டும் என்று பிள்ளை காத்திருந்தார். பண்டாரம் அப்படி சுற்றி வளைத்துப் பேசக்கூடியவரல்ல. நேரடியாகப் பேசவும் தயங்குவார். முற்றத்தில் வைக்கோல்குவியலில் இருந்து பனிபட்ட புதுமணம் வந்தது. தொழுவத்து செவலைகளின் மணிகுலுக்கமும் குளம்புமாற்றமும் ஒலித்தன.
பண்டாரம் மெல்ல முடிவுக்கு வந்து அசைந்து அமர்ந்து ‘ ‘ எம்பெருமானே முருகா ‘ ‘ என்று முனகி கைகளை புத்தகம் போல விரித்து படித்து மூடி ‘ ‘ …. ஒரு இருநூறு இருந்தா சோலிய முடிச்சுப்போடலாம்…. ‘ ‘ என்றார் ‘ ‘ இந்த தடவை தப்பாது. முள்ளுமுனை கூட தப்பு நடக்க முடியாது…இதோட சங்கதி திறந்து கிட்டும்.. உறப்பாக்கும் . ‘ ‘ என்றார்.
‘இதைத்தான்வே போன தடவையும் சொன்னீரு…ஆடி முடிஞ்சு இப்ப எத்தனை மாசம் ஆவுது ? ஆவணியும் புரட்டாசியும் தலைதூக்காம கெடந்தீரு…ஐப்பசியில மறுபடியும் தொடங்கியாச்சு… என்கிட்ட இனி எடுக்க பைசா இல்ல…. வேற ஆரயாம் பாரும்வே… ‘
‘ ‘இல்ல… நான் சொல்லுறது என்னாண்ணா…. ‘ ‘
‘ ‘இனிமே நான் இந்த ரெசவாதம் மந்திரம் ஒரு எளவுக்கும் இல்ல. நீரு செம்பை தங்கமாக்குனாலும் செரி தாடகைமலையை வைரக்கலாக்கினாலும் செரி எனக்கு ஒரு புல்லும் இல்ல. போவும்வே ‘ ‘
‘அப்படிச் சொல்லப்பிடாது. இது மந்திரமோ மாயமோ இல்ல. சாஸ்திரமாக்கும். அச்சொட்டான சாஸ்திரம். சாஸ்திரம்னா அதுக்கொரு கணக்கு இருக்கும். கணக்கு தப்பினா விடையும் தப்பும்…. ஆனா கண்டிப்பா செரியான விடை உண்டு. செரியா கணக்கு போட்டோம்னா அது வராம இருக்காது… ‘ ‘
‘இது எத்தனை தடவை ஓய் கணக்கு தப்புதது… ? நீரு இதை தொடங்கி வருசம் இருபதாவுதுல்லா ? உம்ம சென்மம் பாழாப்போச்சுல்லா ? ‘ ‘
‘போனதடவை நான் ரெசாயனம் காய்ச்சின பானையைக் கணக்காக்காம விட்டேன். அது இரும்பு . இரும்புக்கு அதுக்கான ரெச குணம் உண்டு. அது ரெசாயனம் வற்றி வாறப்ப எடைபட்டுப் போட்டுது. அதை நான் ஊகிக்கல்ல. எந்த உலோகமானாலும் அது இந்த ரெசாயனச் சேர்மானத்தில சேந்துகிடும். சேராத ஒரு பாத்திரம் வேணும்…. ‘
‘ ‘ மண்பானை அதுக்க வேகத்துக்கு நிக்காதுண்ணு சொன்னீரு… ‘ ‘
‘ ‘நிக்காது. பீங்கானும் நிக்காது. ஆனா கண்ணாடி நிக்கும்… ‘ பண்டாரம் உற்சாகமாகச் சொன்னார். ‘ ‘ கண்ணாடியை நான் நல்லா நாப்பது பக்கமும் பாத்து படிச்சாச்சு. அது ஒரு ரெசாயனத்திலயும் எடபடாது. அதாக்கும் இந்த வேலைக்குள்ள செரியான பாத்திரம்…. உம்மாணை கந்தவேளாணை இது கடைசீ தடவை. இதில கண்டிப்பா பலிக்கும்… ‘ ‘
பிள்ளை சற்றே சபலப்பட்டார். ஆனால் இருநூறு ரூபாய் பெரிய தொகை. இரு ஜோடி உழவு மாடு வாங்கலாம். ‘ ‘ இல்லவே பண்டாரம். நம்மாலே இனிமே கட்டாது. ஆளைவிடும் ‘ ‘
‘ ‘அப்டிச் சொல்லப்பிடாது. இது கண்டிப்பா பலிக்குத சூத்திரமாக்கும். இந்த தடவை எல்லாம் செரியா அமைஞ்சிருக்கு… ‘
சட்டென்று பிள்ளைக்கு எரிந்து ஏறியது ‘ ஏம்வே…எனக்கு வாயில என்னமோ வருது… வே பண்டாரம் இது நீரு எனக்க கிட்ட இப்டி சொல்ல தொடங்கி வருசம் இருபதாவுது . இதுவரை உம்ம ரெசாயனம் கலக்குததுக்காக நான் சிலவாக்கின ரூபா இருந்தா எட்டுகோட்டை வெதைப்பாடு வாங்கியிருக்கலாம். ஒரு பிரயோசனம் உண்டாவே ? இல்ல கேக்கேன். கிடந்து யோசிச்சா சிலப்போ எனக்கு சிரிப்பாக்கும் வாறது. உமக்கா எனக்கா ஆருக்கு பைத்தியம்ணு தெரியல்ல… ‘
‘ரெண்டாளுக்கும்தான் வட்டு… இதில என்ன சிந்திக்க இருக்கு ? ‘ என்றது உள்ளறை இருட்டு
‘நீ போடி கூதற நாயே ‘ என்றார் பிள்ளை.
பண்டாரம் தலை குனிந்து அமர்ந்திருந்தார்.
‘ ‘நீரு சொன்னப்போ நான் கொஞ்சம் ஆசைப்பட்டது உள்ளதுதான். அது அந்தக்காலம். இப்ப எனக்கு உம்ம ரெசாயனத்தில எள்ளுக்கு இடை கூட நம்பிக்கை இல்ல. போனதடவை உம்ம முகதாட்சணியம் பாத்தாக்கும் நான் ரூபா தந்தது. இதை எங்கியாம் நிப்பாட்டணும். நான் உறச்சாச்சு. இனி இந்த விஷயமா ஒரு நயாபைசா நீர் எனக்க கிட்டே பாக்க வேண்டாம்… ‘ ‘
‘ ‘ முருகனா நினைச்சு கும்பிட்டு கேக்கேன். இது உறப்பான சோதனையாக்கும். எல்லா கணக்கும் இப்ப செரியா வந்தாச்சு. ஒரு குறை இல்ல. இத்தனை நாள் காத்திருந்திட்டு இப்ப நிப்பாட்டினா ….நான் காலுபிடிச்சு கேக்கேன்… ‘ ‘
‘ ‘என்னவே பண்டாரம் காலுபிடிக்கேரு ? ‘ ‘ என்றபடி மாதேவன் பாட்டா படியேறி கல்முற்றத்துக்கு வந்தார். ‘ ‘ ரெசாயனம் காய்ச்ச பணம் கேப்பான்… வேற என்ன ? ‘ ‘
‘ கடசீ சோதனைங்கியாரு… ‘
‘அவன் இருபது வரிசமா கடைசீ சோதனைதான் செய்யுதான்… கர்மபலன் ! வேற என்னத்த சொல்ல…. ‘ ‘ பாட்டா உட்கார்ந்தார். ‘ ‘ உனக்க வீட்டு கல்திண்ணைக்க குளுத்தி வேற எங்கயும் இல்லடே குத்தாலம் . இம்பிடு சுக்குவெந்நீ இருக்காட்டி மருமோளே ? ‘
‘கொண்டாறேன்… ‘ ‘ என்றது இருட்டு.
‘ ‘இது எல்லாம் செரியா அமைஞ்ச சோதனை. நான் ஒண்ணு விடாம பாத்தாச்சு . எல்லாம் செரியா இருக்கு…. என்னை கைவிடப்பிடாது… ‘ என்றார் பண்டாரம் கம்மிய குரலில்.
‘ ‘லே குத்தாலம், இது ஒருமாதிரி பைத்தியமாக்கும் கேட்டுக்கோ. உனக்க கிட்டே நான் இதை அம்பதுதடவை சொல்லியாச்சு. இதுபோல பல கிறுக்கும் மனுஷனுக்கு வரும். பேய் மாதிரி பிடிச்சு ஆட்டிப்போடும். சொத்தும் சுகமும் சுற்றமும் சூழ்ந்ததும் எல்லாம் அந்த ஓட்டத்தில அடிச்சுக்கிட்டுப் போயிரும்… எனக்க நரைச்ச மீசை அனுபவத்திலே நான் இம்மாதிரி எம்பிடு பேரைக் கண்டிருப்பேன்… ‘ ‘ என்றார் பாட்டா
பண்டாரம் மெல்ல ‘ ‘ முருகா! ‘ ‘ என்றார். ‘ ‘ திருமூலரும் போகரும் பொய் சொல்லமாட்டாங்கண்ணு நான் நினைக்குதேன் அய்யா ‘ ‘ என்றார்.
‘ ‘ அவங்க சொன்னதே வேற ‘ ‘ என்று பாட்டா ‘ ‘ சித்தபுருஷங்க மனுஷப்பயகிட்டே பெண்ணாசையையும் மண்ணாசையையும் பொன்னாசையையும் விட்டுடத்தான் சொன்னாங்களே ஒழிய வச்சு கொண்டாடச் சொல்லல்ல. வேய் பண்டாரம், சித்தர்பாட்டுகளிலே எந்த விஷயமாவது நேரடியா சொல்லியிருக்காவே ? எல்லாம் பூடகமா ஒண்ணுக்கு ஒம்பது பொருள் ஒளிச்சுத்தானேவே சொல்லியிருக்கு ? இது மட்டும் எப்டிவே நேரடியா சொல்லியிருப்பாங்க ? ‘ ‘
சைக்கிள் ஒலிகேட்டது. பிள்ளையின் மகன் கோலப்பன் சைக்கிளைத் தூக்கி முற்றத்தில் ஏற்றி உருட்டிவந்து சாய்ப்பில் நிறுத்தி சங்கிலி போட்டு பூட்டினான்.
‘ ‘என்னவே மக்கா சினிமாவா ? ‘ ‘என்றார் பாட்டா
‘ ‘ சினிமாவுக்குப்போனா சந்தோசப்படுவேனே… இவன் அந்த குலமுடிவான் நாயக்கரு கூட்டத்துக்கு ஒப்பம் சேந்துல்லா ஊரூரா அலயுதான்… ஏம்லே பத்தூருக்குப் போயி படியளக்க சாமிய நாறப்பேச்சு பேசியாச்சா ? இனி சோறு எறங்குமா ? ‘ ‘ என்றார் பிள்ளை
கோலப்பன் தந்தையிடம் பேசுவதைத் தவிர்க்க விரும்பினான்
பாட்டா ‘ இல்ல மக்கா, சொல்லுதேண்ணு நினைக்காதே…உனக்க பீ நான் அள்ளியிருக்கேன் பாத்துக்க. சாமி இல்லேண்ணு சொல்லி அலையுதது செரியில்ல கேட்டுக்கோ. ஒண்ணு கெடக்க ஒண்ணு ஆனா ஆருபழி ? நீ ஒத்தைக்கு ஒரு பிள்ள. வேண்டின பூசொத்து இருக்கு… ‘ ‘
‘ ‘ நீரு சும்மா கெடயும் பாட்டா…. நீரெல்லாம் சாமிபூதம்ணு சொல்லியாக்கும்கிந்த மாதிரி ஆளுக கெடந்து சீரழியுதானுக. பாத்தேரா, எப்டி இருக்காண்ணு ? முப்பதுவருஷமா செம்பைத் தங்கமாக்குதாரு…இதையெல்லாம் இப்டியே விட்டுவைச்சா பிறவு எப்டி தமிழ்நாடு உருப்படும்… இவனுகளையெல்லாம் திருத்தணுமானா ஒரு அய்யா போதாது நூறு அய்யா வந்தாகணும்…. ‘ ‘ என்றபடி கோலப்பன் அமர்ந்தான்.
‘ ‘மக்கா கஞ்சி குடிக்கியாலே ? ‘ ‘ என்றது அறை.
‘ ‘நான் சாப்பிட்டாச்சு ‘ ‘
‘எங்கேண்ணு நான் கேக்கல்ல. வல்ல சாம்பான் புலையன் வீட்டிலயும் கேறி இருந்து வெட்டி விழுங்கியிருப்பான்… ‘ ‘ என்றார் பிள்ளை.
‘ ‘சாம்பான் காய்ச்சின சாராயம் குடிக்கலாமில்லா ? ‘ ‘ என்றான் கோலப்பன் முற்றத்து தென்னைமரத்திடம். பிள்ளை உடனே அடங்கி இல்லாமலானார்.
பண்டாரம் ‘ ‘ ரெசவாதத்தை பொன்வித்தைண்ணாக்கும் சித்தர்கள் சொல்லுதது. பொன்னு ஒரு தனி உலோகம் இல்ல. அதில ரெண்டு மூலம் இருக்கு. அக்கினி ஒண்ணு. சந்திரன் இன்னொண்ணு. அக்கினி அம்சமுள்ள வஸ்துக்கள் பலதும் பூமியில் உண்டு. சந்திர அம்சமுள்ள லோகமும் ரெசமும் பலது பூமியிலே உண்டு. செம்பு அக்கினி. பாதரெசம் நிலா. ரெண்டையும் செரியானபடி ஒண்ணாக் கலந்தா தங்கம் உண்டாகும். அதுரெண்டும் நிண்ணு கலக்க மண்ணுவேணும். அது இரும்பு இல்லாட்டி வேற என்னமாம்… ‘ ‘
‘ ‘இப்பம் நீரு சொன்னேரே இது சாஸ்திரத்திலே உள்ளதாக்கும். ஆனா இது ரெசவாதம் இல்ல, மனுஷவாதம். தங்கம்னா என்ன ? யோகத்திலே அமர்ந்த மனசைத்தான் அப்டிச் சொல்லுதாங்க. நீரு கேட்டேருண்ணா இப்பம் நான் ஒரு அம்பது திருமூலர் பாட்டாவது உதாரணமா சொல்லுவேன். வேய் சிவப்பு நெறமுள்ள செம்பு ராஜச கொணம். வெள்ள நிறமுள்ள பாதரெசம் சத்வ கொணம். ரெண்டும் இருக்க எடம் தாற கறுத்த இரும்பும் மண்ணும் தமோ குணம். மூணும் ஒண்ணாச் சேருத ஒத்த மையத்தில செம்பொன்னாட்டு ஆத்மா தொலங்கும். சும்மாவா எம்பெருமானை செம்பொன்மேனியனண்ட்டு சொல்லியிருக்கு ? வேய் சாஸ்திரங்களில சொல்லியிருக்க அம்பிடும் ரெசசவித்தை இல்லவே பிரம்ம வித்தை. நீரு கதையறியாம கெடந்து துள்ளுதீரு பத்து முப்பதுவருஷமா…. ‘
‘ ‘எப்டிவேணுமானாலும் வியாக்கியானம் செய்யலாம். நான் கண்ட சத்தியம் எனக்கு… ‘ ‘என்றார் பண்டாரம் ‘ ‘ எம்பெருமான் குமரன் எனக்கு கனிஞ்சு ஒரு திருட்டாந்தம் காட்டியிருக்காரு… ‘ ‘
‘ ‘திருட்டாந்ந்தமா ? என்னது ? ‘
‘இது நான் அதிகம்பேருகிட்டே சொன்ன காரியம் இல்ல ‘ ‘ என்றார் பண்டாரம் தயங்கி . ‘ ‘ அப்ப நான் பதினெட்டுவயசு சின்னப்பய. நல்ல வாலிப முறுக்கு. கையிலே காசு ஓட்டம். அதுக்குண்டான எல்லா வெளையாட்டும் உண்டு. நமக்கு ஒரு தொடுப்பு. அவளுக்கு அப்ப நாப்பதுவயசு பக்கத்தில இருக்கும். அவளுக்க செட்டியாரு பரம்பரையா பட்டு ஏவாரம் செய்றவரு. நான் பாக்கிறப்ப வியாபாரம் நொடிச்சு திண்ணையில உக்காந்திட்டாரு. அவ பட்டும் துணியும் வீட்டில வைச்சு விப்பா. நம்ம குட்டி ஒருத்திக்கு துணி எடுக்கப்போயி தொடுப்பு உண்டாகிப்போச்சு. அப்ப செட்டியாரு ராப்பகலா என்னமோ காய்ச்சிட்டு இருப்பாரு. இல்லாட்டி புஸ்தகம் வாசிப்பாரு. ஒரு நாள் என்னது அதூண்ணு கேட்டேன். அப்பதான் இதைப்பத்தி கேள்விப்பட்டது. அவரு ஒரு பண்டாரத்துக்கு கிட்டே ரெசவாத ரகசியம் படிச்சிருக்காரு. சும்மா செய்துபாத்தவரு முழுமூச்சா எறங்கி எல்லாத்தையும் தொலைச்சாரு. ஆனா கண்டுபிடிக்காம விடமாட்டேண்ணு நிண்ணாரு. எனக்கு அவரைக் கண்டா சிரிப்பு . இப்ப நீங்க சிரிக்கிறீங்களே இதுமாதிரி. ‘ ‘
பண்டாரம் தொடர்ந்தார் ‘ ‘ ஒருநாள் அவ ஆளனுப்பினா. செட்டியாரு செத்துப்போயிட்டாரு. ரெசம் காய்ச்சிட்டு இருக்கிறப்ப பாஷாணப்புகை கெளம்பி விஷமேறி செத்தாரு. நாந்தான் முன்ன நிண்ணு எல்லாத்தையும் செய்தேன். செட்டியாரை தூக்கி சிதையிலே வைக்கிறப்ப செட்டிச்சி அவரு வைச்சிருந்த சட்டிபானை புஸ்தகம் எல்லாத்தையும் தூக்கி அதில வைண்ணா. குடும்பத்த பிடிச்ச மூதேவி அதோட ஒழியட்டும்ணா . செரீண்ணு நான்தான் தூக்கிவைச்சேன். மண்சட்டியில நீலமா நவச்சாரம் மாதிரி நாத்தமடிச்சிட்டு என்னமோ ஒட்டியிருந்தது. தீ எரியிறப்ப நீலமா சுவாலை கெளம்பிச்சு. மூணாம் நாள் எலும்பு பொறுக்கிறப்ப நானும் நிண்ணேன். குடிமகன் எலும்பை எடுக்கிறப்ப அந்த சட்டியைப் பாத்தேன். வெடிச்சுக் கிடந்தது. உள்ள மஞ்சளா பளபளண்ணு நல்ல புதுப்பொன்னு… ‘ ‘
‘ ‘ முருகா! ‘ ‘ என்றார் பிள்ளை
‘ ‘எனக்கு சந்தேகம். சட்டியை எடுத்துக் கொண்டுவந்து நல்லா பாத்தேன். நீலப்பூச்சு அப்டியே தங்கமாகியிருக்கு. நல்ல சுத்த தங்கம். ஆசாரியை வரவழைச்சு சோதிச்சுப் பாத்தேன். தங்கமேதான். எனக்கு அப்டியே சுழட்டிக்கிட்டு வருது. செட்டியாருக்க புஸ்தகம் குறிமானம் எல்லாத்தையும் எரிச்சாச்சு. என்ன செய்றது ? விடவும் மனசில்ல. அவளைப்போட்டுக் குடைஞ்சேன். அவரு கடைசியா வாங்கின சாமான்களை விசாரிச்சு வாங்கினேன். அந்த நீலரெசாயனத்துக்க மணம் மட்டும்தான் எனக்கு ஆதாரம். அண்ணைக்கு தொடங்கின ரெசவித்தை. சொத்து போச்சு. பண்டாரமா நாடு சுற்றி பல ஊரும் பல குருவும் கண்டு பல புத்தகம் படிச்சு இண்ணைக்கு இங்க வந்து சேந்ந்திருக்கேன். இப்ப எனக்கு நல்லா தெரியும் நான் ரொம்ப கிட்டக்க வந்தாச்சு. சொல்லப்போனா அந்த ரகசியத்த தொட்டாச்சு. என் அகமனசுக்கு தெரியுது… ஆனா என்னால உங்களை சொல்லி நம்பவைக்க முடியாது. நான் செய்ஞ்சு காட்டுதேன்… ‘ ‘
‘ ‘ நீரு மயித்துவேரு ‘ ‘ என்றான் கோலப்பன் ‘ ‘ வேய் பண்டாரம் , சயன்ஸுண்ணு ஒண்ணு இருக்குவே. கேட்டிருக்கேரா ? தங்கம் ஒரு எலிமென்ட் . செம்பு இன்னொரு எலிமென்ட் . இரும்பு வேற ஒரு எலிமென்ட் . எலிமெண்டுண்ணா என்ன தெரியுமா அடிப்படையில இயற்கையில இருக்க மாறாத பொருள். ஒரு எலிமெண்டை இன்னொண்ணுகூட கலக்கலாம், இன்னொண்ணா மாத்த முடியாது…. ‘ ‘
‘ ‘எல்லா எலிமெண்டும் அணுக்களால ஆனதுதான். அணுன்னா என்ன ? பலவிதமான சூட்சுமமான பொருளுக ஒண்ணாச்சேந்து ஒரு அணு ஆவுது. அதை பார்ட்டிக்கிள்கியாங்க சயன்ஸிலே. செம்புக்கும் தங்கத்துக்கும் பார்ட்டிகிள் எண்ணிக்கையிலதான் வித்தியாசம். அந்த எண்ணிக்கைய மாத்த முடிஞ்சா செம்பை தங்கமாக்கலாம்…. ‘ ‘ பண்டாரம் சொன்னார்
கோலப்பன் உள்ளூர அயர்ந்து விட்டான். அதுவே அவனைச் சீண்டியது . ‘ ‘ எப்டிவே பார்ட்டிக்கிள் எண்ணிக்கையை கூட்டுவேரு ? ஒண்ணொண்ணா உடைச்சு உள்ள போடுவேரா ? ‘ ‘
‘ உடைக்கலாம். பார்ட்டிகிள் எலிமெண்டை விட்டு வெளியே போகும் ,உள்ளேயும் போகும்… அதுக்குத்தான் ரேடியேஷன்னு பேரு. தோரியம் எப்டி தம்பி ரேடியம் ஆகுது ? ரேடியம் எப்பிடி பொலேனியம் ஆகுது ? அதுமாதிரித்தான்…. ‘ ‘ என்றார் பண்டாரம் ‘ ‘ இப்பத்தான் வெள்ளைக்காரன் ரேடியேஷனை கண்டுபிடிச்சிருக்கான். ஆனா நம்ம சித்தர்களுக்கு அதுக்க பிரயோசனம் தெரிஞ்சிருக்கு. சந்திரகாந்தக்கல்லுண்ணு கேட்டிருப்பீக. என்ன அது ? இயற்கையா ரேடியேஷனோட இருக்கிற கல்லுதான் அது. தோரியம் கலந்த கல்லு . இண்ணைக்கு நாம அதில தோரியத்தைப் பிரிச்சு விக்கிறோம். அதை பலவிதமான மருந்துகள் தயாரிக்க சித்தர்கள் பயன்படுத்தியிருக்காங்க. நம்ம ரெசவாத முறையில சக்தியான சந்திரகாந்தக்கல்லும் பாதரசமும் வேணும்னு எல்லா சித்தரும் சொல்லியுருக்காங்க. சந்திரகாந்தக்கல் பாதரசத்தை பாதிச்சு கறுப்பா ஆக்கிடும். அது ரேடியேஷன் வழியா பார்ட்டிக்கிள் எண்ணிக்கை கூடுறதுதான்…. ‘ ‘
‘ ‘அரைகுறை சயன்ஸு பேசுறவங்களுக்கு இருக்கிற தர்க்கம் மத்தவங்ககிட்டே இருக்காது… ‘ ‘ என்றான் கோலப்பன்.
‘ ‘நீரு பண்டரம். உமக்கு என்னத்துக்குவே தங்கமும் பொன்னும் ? ‘ என்றார் பாட்டா
‘ ‘எனக்கு ஒரு துண்டு தங்கம் வேண்டாம். ஆனா இது ஞானம். ஞானம்னா என்ன ? எம்பெருமான் கந்தன்கிட்டே நம்மை கூட்டிட்டுப் போற பாதை. அஞ்ஞானத்தோட கதவைமூடி வைச்சு நம்மை அவன்கிட்டேருந்து மறைச்சுவைச்சிருக்கு பாசம். ஒரு சயன்ஸ்கண்டுபிடிப்பு ஒரு கதவு திறக்கிறதுக்கு சமம். முருகா ஞானபண்டிதா! ‘ ‘ என்றார் பண்டாரம் ‘ ‘ இப்ப தம்பி சொன்னாரே ஒரு பொருளை இன்னொண்ணா மாத்த முடியாதுண்ணு. மாத்த முடியும். இப்ப நான் சொல்லுதேன் எண்ணைக்கானாலும் ஒருநாள் மனுஷன் எல்லா பொருளையும் எல்லாமா மாத்தத்தான் போறான்.அண்ணைக்கு மண்ணையும் கல்லையும் அவன் எரிப்பான் தம்பி. கரும்பாறையை சீனியாக்கித் திம்பான். சயன்ஸ் போற வழி அதாக்கும்… ‘ ‘
பண்டாரம் கைகளைப் பிரித்துப் பார்த்தார் ‘ ‘ பாட்டா நீங்க சொன்னது எனக்குப் புரியாம இல்ல. நான் இதைத் தொடங்கி முப்பது வருஷமாவுது. எவ்வளவு கேட்டிருப்பேன் எவ்வளவு கண்டிருப்பேன். தங்கம்தேடி வாழ்க்கையை அழிச்சுக்கிட்டவங்க தலைமுறைதலைமுறையா கூடிக்கிட்டே இருக்காங்க… ஆயிரம், லெட்சம்… ஆனா ஒருநாளைக்கும் இந்த அலைச்சல் நிக்காது பாத்துக்கிடுங்க…இதைமட்டும் ஏன் சொல்லுறீங்க ? பசியில்லா உடலுக்காக , வானத்திலே பறக்கிறதுக்காக, சாவில்லா வாழ்வுக்காக, மனுஷன் காலம்தோறும் தேடித்தேடி அலைஞ்சிட்டுதானே இருக்கான்… ? அந்த அலைச்சலை அந்தந்தக் காலத்திலே எத்தனை லெச்சம்பேர் கிண்டல் செய்திருப்பாங்க ? எத்தனை குடும்பங்கள் அவனுக கூடச் சேந்து அழிஞ்சிருக்கும் ? இது ஒருமாதிரி தீயாக்கும் தம்பி. இது நம்ம மேல பிடிச்சுக்கிட்டா பின்ன விடாது. எரிஞ்சி எரிஞ்சு நம்மை சாம்பலாக்கிப்போடும்… ஆனா இப்பிடி எரிஞ்சு சாம்பலாகிப்போறதில ஒரு சொகம் இருக்கு. ஜென்ம சாபல்யமே இதிலே இருக்கு தம்பி. இது நான் சொன்னா உங்களுக்கு யாருக்கும் புரியாது…. நீங்க பைசா குடுக்காட்டி நான் பிச்சை எடுப்பேன் திருடுவேன் கொலைசெய்வேன்…. என் உசிரு இருக்க காலம்வரை இந்த சோதனையை விடமாட்டேன்… ‘
‘இது கஞ்சா கேஸு…திருந்தாது ‘ ‘ என்றபடி கோலப்பன் எழுந்து போனான்.
பாட்டா ‘ ‘ குத்தாலம், மாயை மாயைண்ணு சித்தாந்தம் படிக்கோம். ஆனா நாம அதை செரியா புரிஞ்சுகிடுறதில்ல பாத்துக்க. கண்ணுமுன்னால அது இப்டி பூதம் மாதிரி வந்து நிக்கிறப்ப பயமா இருக்குலே… ‘ ‘ என்றார். ‘ ‘ பைசாவை குடுத்துப்போடு .நாளைக்குப்பின்ன வழியேபோற பெண்டுக தாலிய அறுத்தாண்ணா என்ன செய்வே ? …எப்போ நமச்சிவாயா…நடுவு வலிக்கிடே… ‘ ‘
பாட்டா போனபின் பிள்ளை பண்டாரத்துக்கு ரூபாய் கொடுத்தார்.
‘ ‘அம்பிடு கதையும் இதுக்குத்தான். பைசா வாங்காம போகமாட்டானே…காலைச்சுத்தின சனி ‘ ‘ என்றாள் நாகலட்சுமி.
பண்டாரம் ‘ ‘சும்மா சொல்லல்ல…இதுதான் நான் செய்த கடைசீ சோதனை. இதில ஒரு மயிரளவுக்குகூட பழுது இல்லை. இண்ணைக்கு தங்கம் சிரிக்கும்யா …காலைல வந்து பாருங்க… ‘ ‘ என்றார்.
பிள்ளைக்கு திடாரென்று ஒரு ஆழமான பரிதாப உணர்ச்சி ஏற்பட்டது. அவர் ‘ ‘ செரி பாப்பம் ‘ ‘ என்று மட்டும் சொன்னார்.
காலையில் கோயில்வளைவை கூட்டிப்பெருக்கும் சுடலைக்கண் அலறிப்புடைத்து ஓடிவந்து முற்றத்தில் நின்று கூவ பால்கறப்பதை மேற்பார்வையிட்டபடி தொழுவில் நின்ற பிள்ளையும் தூங்கிக் கொண்டிருந்த கோலப்பனும் பதறி வந்தனர். பண்டாரம் இரவில் கோயில் முற்றத்து மாமரத்தில் தூக்குபோட்டுக்கொண்டு இறந்திருந்தார்.
ஆற்றுக்கு அப்பால் கிராமங்களிலிருந்தும் பண்டாரத்தின் சாவைக்கேட்டு ஆட்கள் கூடினார்கள். காவி மேல்துண்டில் சுருக்கிட்டு கழுத்து இறுகி நாக்கு பற்களால் கடிபட கைகள் முழுடிபிடித்து இறுகி நீண்டிருக்க அரைவாசி விழித்த கண்களுடன் பண்டாரம் மண்ணிலிருந்து இரண்டடி உயரத்தில் வலிந்து நெடுகிய கால்கள் காற்றில் ஆடிச்சுழல நின்றிருந்தார். மலஜலம் பிரிந்து துணியை நனைத்திருந்தது. கீழே உதறப்பட்ட செருப்புகள். ஏதோ தவறுசெய்துவிட்டு தலை குனிந்து நிற்பது போலிருந்தது.
பண்டாரம் இரவெல்லாம் காய்ச்சிய ரசாயனக்கலவை அவராலேயே உதைத்து உடைத்துச் சிதறப்பட்டு மணலில் வற்றிக் கிடந்தது. வெற்றிலை எச்சில் போல ஒரு காவி நிறக் குழம்பு. கண்ணாடிக்குடுவைக்குள் அது மஞ்சளாக இருந்தது.
‘ ‘அவன் நேத்து பேசின பேச்சே செரியில்ல கேட்டியா ? ‘ ‘ என்றார்பாட்டா ‘ ‘எனக்கு அப்பமே ஒரு சந்தேகம். ராத்திரி எனக்கு நல்ல உறக்கம் இல்ல. ரெண்டு தடவை எந்திரிச்சுப் பாத்தேன். பண்டாரம் நல்ல உற்சாகமா பாட்டெல்லாம் பாடாட்டு காய்ச்சிட்டிருந்தார். எப்ப இப்ப்பிடிசெஞ்சாரோ… ‘ ‘
‘ ‘செரியா வரல்லைண்ணு தெரிஞ்ச வேகத்தில தூக்குல ஏறிட்டார்… பாவம்தான் ‘ ‘ என்றார் பொன்னம்பலக் குருக்கள்.
‘ ‘அந்த சட்டி பானை எல்லாத்தையும் சிதையில வையுங்கலே… இந்த ஊருக்கு வந்த பீடை இதோட போச்சுண்ணு வைங்க… ‘ ‘
பண்டாரம் எரிவதை கூட்டம் கூட்டமாக நின்று பார்த்தார்கள். பலபடியாக அனுதாபப்பட்டுப் பேசிக்கொண்டார்கள். அவர்களுக்கு உண்மையிலேயே துக்கமா இல்லை அது வெறும் பரபரப்பா என்று கோலப்பனுக்குப் புரியவில்லை. அவர்கள் கிளர்ச்சியடைந்திருந்தார்கள். பெரும்பாலானவர்கள் தங்கள் அனுபவம் அல்லது கேட்ட அனுபவம் என்று பொய்களைச் சொல்லிக் கொண்டிருந்தார்கள். பண்டாரத்தின் மரணம் அவர்களுக்கு ஒருவிதமான நிறைவைத்தான் அளிக்கிறது என்று கோலப்பனுக்குப் பட்டது. அந்தக்கதை அப்படி முடியத்தான் அவர்கள் உள்ளூர விரும்பினார்கள். அவர்கள் அதற்காகக் காத்திருந்திருக்கலாம்.
கசப்புடன் கோலப்பன் திரும்பினான். அவரது மரணத்துக்கு அவனுடைய சொற்களும் ஒருவகையில் காரணம் என்று அவனுக்கு உள்ளூரத் தெரிந்தது. மாமரத்தைப் பெருமூச்சுடன் நோக்கினான். இனி அது பேய்மரமாகி விடும். யார்கண்டது அடியில் பண்டாரம் ஒரு குட்டிச்சாமியாக அமர்ந்து பலிகேட்க ஆரம்பித்தாலும் ஆச்சரியமில்லை.
கோயில் மதிலோரம் பண்டாரத்தின் செருப்புகள் கிடந்தன. தையல்கள் போடப்பட்ட ஆணிகள் அடிக்கப்பட்ட பழைய முரட்டு டயர் செருப்பு. அதில் ஒன்றில் பண்டாரம் காய்ச்சிய அந்த ரசாயனம் முன்பக்கம் பாதிப்பங்கு நனைத்து உலர்ந்து வயலெட் நிறமாகப் படர்ந்திருந்தது. பண்டாரம் அதைக் காலில் மாட்டியபடி குடுவையை உதைத்திருக்கவேண்டும். காலால் அதைப் புரட்டிப்பார்த்தவன் மனம் கணம் நின்று இயங்கியது. அமர்ந்து கையால் சுரண்டி நெருடிப் பார்த்தான். செருப்பில் முன்பக்க ஆணிகளில் ஒன்று மின்னியது. இழுத்து எடுத்தான். தோலுக்குள் இருந்த பகுதி இரும்பாகவும் வெளியே இருந்த தலை பொன்னால் ஆனதாகவும் இருந்தது.
====

1/14/14

பூர்ணம்

மெளனச்சாமியார் மடத்தின் ஓய்வறையில்தான் டாக்டர் வினோத் பட்டாச்சாரியாவை சந்தித்தேன்.அவர் என் நேர் எதிர் அறை. கதவைத் திறந்தால் அவரது கதவு . ஒருமுறை திறந்தபோது இருவரும் முகத்தோடுமுகம் சந்தித்து திகைத்து நின்றோம். ‘ஹாய் ‘ என்றார். அது உயர்குடிகள் ‘யாரடா நீ புழுவே ? ‘ என்று கேட்கும் முறை என நான் அறிவேன். நான் தொழில்முறைப் பத்திரிகையாளன்.
‘என் பெயர் கணேஷ் குமார். பத்திரிகையாளன். ‘ என்றேன்.
‘நான் பத்திரிகைகளை வெறுக்கிறேன் ‘ என்று கதவை மூடப்போனார்.
‘இங்கே பாருங்கள், புரஃபசர்… ‘என்று நான் தொடங்கினேன்.
‘நான் புரஃபசர் இல்லை ‘ என்று சாத்திவிட்டார்.
பேராசிரியர்கள், அறிவியலாளர்கள் தங்களை தேவர்குலமாக எண்ணிக் கொண்டிருப்பதை நான் பலமுறைக் கண்டதுண்டு. சிவனாகவும் விஷ்ணுவாகவும் தங்களை எண்ணிக்கொண்டிருக்கும் சினிமாக்காரர்களை கண்ட எனக்கு அது பெரிதாகப்படவில்லை.
ஆனால் அவரே இரவு என் கதவைத் தட்டினார் ‘ ஹாய் ‘என்றார் . இம்முறை பதற்றமாக.
‘ஹலோ ‘
‘உள்ளே வரலாமா ? ‘
‘கண்டிப்பாக. வாருங்கள்.. ‘
வந்ததும் சோபாவில் அமர்ந்து முகத்தை வழித்துவிட்டுக் கொண்டார். தலைமயிரை நீவினார்.
‘நீங்கள் புரஃபசர்…. ? ‘ என்றேன்
‘நான் புரஃபசர் இல்லை. என் பெயர் டாக்டர் வினோத் பட்டாச்சாரியா… ‘
‘ஆமாம். உங்கள் பேட்டியை ஹிந்துவில் படித்திருக்கிறேன்…. பொறியியலில்… ‘
‘ஹிந்து என்னைப்பற்றி ஏதும் வெளியிட்டதில்லை ‘ என்றார் அவர் ‘ மேலும் என் துறை நரம்பியல். ‘
‘மன்னிக்கவும். எனக்கு கொஞ்சம் ஞாபகமறதி… ‘
‘பரவாயில்லை. உன்னிடம் மது ஏதாவது இருக்குமா ? ‘
‘ஆசிரம வளாகத்தில் அனுமதி இல்லை. நான் ரகசியமாக ஒரு புட்டி ரம் வைத்திருக்கிறேன். உங்களுக்கு ரம் பிடிக்குமா ? ‘
‘பிடிக்காது. ஆனால் இப்போது எனக்கு ஏதாவது மது வேண்டும்…கொண்டா ‘
‘நானே ஒரு துணைக்காக காத்துக் கொண்டிருந்தேன். கதவை சாத்தலாமல்லவா ? நல்லவேளை உங்கள் அறை நேர் எதிரே இருக்கிறது. தள்ளாடி எங்காவது விழாமல் நேராக போய் படுத்துவிடலாம் ‘ நான் புட்டியை எடுத்து வைத்தேன். புட்டி இப்போது மிக ஆபத்தான பொருள். பிரதமர் ராம்சிங் அறிவியல் சாதங்களின் உதவியுடன் அவசரநிலை பிறப்பித்து ஆட்சி செய்யும் நாட்டில் சுவர்களுக்குக் கூட வேவு பார்க்கும் கண்கள் முளைத்துவிட்டன என்ற வழக்கமான பாட்டு எங்கும் ஒலித்தது. முதலில் சிலநாள் எல்லாம் சரியாகத்தான் இருந்தது . ரயில்கள் சரியான நேரத்துக்கு ஓடின. வேலைநிஉத்தங்கள் மறியல்கள் கூக்குரல்கள் ஏதுமில்லை. பத்திரிக்கைகள் முழுக்க வளர்ச்சித்திட்டங்கள். நாடு நாலுகால்பாய்ச்சலில் எதிர்காலம் நோக்கி செல்வதாகச் சொல்லப்பட்டதை பெரும்பாலானவர்கள் நம்பினர். ஆனால் மெல்ல மெல்ல ஒரு அமைதியின்மை தட்டுபட ஆரம்பித்தது. தலைவர்கள் கைதுசெய்யப்பட்டு காணாமலானார்கள். பத்திரிகைகள் அரசாங்கத் துண்டுபிரசுரங்கள் போல ஆயின. எங்கள் பத்திரிகையே அரசியலையும் சினிமாவையும் துறந்து ஆன்மீகத்தை நோக்கித் திரும்பியது. மெளனச்சாமியாரை நான் பேட்டி எடுக்க முனைந்ததே இதன் மூலம்தான்.
நான் குளிர்சாதனப்பெட்டியை திறந்து தண்ணீரை எடுப்பதற்குள் டாக்டர் புட்டியைத் திறந்து அண்ணாந்து வாயில் கொட்டிக் கொண்டார்.
‘அய்யோ! ‘ என்று பதறினேன்.
டாக்டர் ஆவிமிகுந்த ஏப்பம் விட்டு உடலை ஈரநாய் போல உலுக்கிக் கொண்டார்.
‘இருங்கள் இருங்கள், ஊறுகாய் தருகிறேன்… ‘ என்று எடுத்து வைத்தேன்.
நக்கியபடி முகம் சுளித்து ‘காரம் ‘ என்றார்.
‘என்ன டாக்டர் இது ? இதெல்லாம் கொஞ்சம் அதிகம். ரம் அப்படியே சாராயம் .. ‘
டாக்டர் என்னை பொருட்படுத்தாமல் சோபாவில் மல்லாந்து படுத்தார். மெல்ல உடல் வேர்த்து, தளர்ந்து ,படிந்தார்.
‘ ‘ராம்சிங் பாராளுமன்ற பெரும்பான்மையை பெற்றமுறை சரியாந்துதான் என்று நினைக்கிறீர்களா ? ‘ ‘ என்றேன்
‘ ‘எனக்கு அரசியல் ஆர்வமில்லை ‘ ‘ என்றார் சாக்டர்
‘ ‘ஆமாமாம்.ஆர்வமில்லாமிலிருப்பது பாதுகாப்பும் கூட ‘ ‘என்றேன். ‘டாக்டர் நீங்கள் மனநோய் ஆய்வுதானே செய்கிறீர்கள் ? ‘
‘மனநோயாளிகளையெல்லாம் மடையன்கள்தான் ஆய்வுசெய்வார்கள் ‘என்றார் டாக்டர் . ‘நான் மூளை ஆராய்ச்சியாளன் ‘
‘நான் அறிந்ததெல்லாம் பொரித்த ஆட்டுமூளை ‘
சிரிக்காமல் ஏப்பம் விட்டார். இன்னொரு ஏப்பம் சோடாவாயு மாதிரி குபுக்கென வந்தது. அவர் குதிரை மீது ஆரோகணித்துவிட்டது தெரிந்தது.
இது என்னவகையான குடிமுறை என எனக்குப் புரியவில்லை. சியர்ஸ் இல்லை , பேச்சு இல்லை. குறைந்தபட்சம் நாலுவாய் உளறல்கூட இல்லை.
‘நான் உடனே சாமியாரைச் சந்திக்கவேண்டும்… ‘ என்றார் வாயில் வழிந்த நீரை துடைத்தபடி.
‘அது எளிய விஷயமல்ல. ஒரு நாளைக்கு முந்நூறு பேர்தான் அனுமதிக்கப்படுகிறார்கள். ‘
‘எனக்கு அதைப்பற்றி தெரியாது . எத்தனை மடையர்கள் வேண்டுமானாலும் அவரை சந்திக்கட்டும். நாளை நான் சந்திக்கவேண்டும் …. ‘
மனிதர்கள் என்ற சொல்லைத்தான் மடையர்கள் என்று அவர் குறிப்பிடுகிறார் என அப்போதுதான் புரிந்தது . ‘ ‘ இங்கே என் நண்பருக்கு தெரிந்த சாமியார் ஒருவர் இருக்கிறார். அவர் வழியாக முயற்சி செய்யலாம் என்று நினைத்திருக்கிறேன்… ‘என்றேன். ‘எங்கள் ஞாயிறுமலரில் இந்த மெளனச்சாமியாரைப்பற்றி ஒரு கட்டுரை எழுதப்போகிறோம்… ‘
‘இவரை நான் சந்திக்கவேண்டும். மிக மிக முக்கியமான பிரச்சினை ‘ டாக்டர் சட்டென்று அதிக உயிர் பெற்றார். ‘அவசரம். மிக மிக அவசரம்! ‘
‘ஏன் ? ‘
‘நான் மிகப்பெரிய ஒரு சிக்கலில் இருக்கிறேன் ‘
‘என்ன சிக்கல் ? ‘
டாக்டர் எழுந்து அமர்ந்து ‘அறிவுத்திறன் என்றால் என்ன ? ‘ என்றார்.
‘இதென்ன கேள்வி ? ‘ என்றேன். உண்மையில் அந்தரங்கமாக நான் பத்திரிகையாளர்களுக்குமட்டுமே உள்ள ஒரு குணாதிசயம் அது என்று எண்ணிவந்தேன்.
‘சொல்லு. அப்போதுதான் நான் விளக்க முடியும்.. ‘
‘தகவல்களை நினைவில் அடுக்கும் திறன், அவற்றை தொகுத்தும் பகுத்தும் அறியும் திறன், முடிவுகளை உருவாக்கும் திறன், அந்த தளத்திலிருந்து மேலும் முன்னகரும் கற்பனைத்திறன் ஆகியவற்றின் ஒட்டுமொத்தம் ‘ என்றேன்
டாக்டர் பிரமித்துவிட்டார் . ‘பத்திரிகையாளர்கள் புத்தகமெல்லாம் படிப்பார்கள் என்று நான் எண்ணியதே இல்லை ‘ என்றார்.
‘நாங்கள் செய்திக் காகிதத்தைத்தானே தினமும் சாப்பிடுகிறோம் ‘ என்றேன்
டாக்டர் கவனமில்லாமல் ‘நல்ல விஷயம் ‘ என்றார். ‘அறிவுத்திறன் என்பது மூளையின் இயக்கத்திறன்தான். நீ சொன்ன நான்கும்தான் மூளையின் வேலைகளில் முக்கியமானவை . மூளை என்பது ஒரு நரம்பு முடிச்சு. நரம்புகள் மூலம் அங்கே தகவல்கள் சென்று சேர்கின்றன. அவை அங்கே உடல்மின்சாரத்தாலும் ரசாயனமாற்றமாகவும் பதிவு செய்யப்படுகின்றன. நியூரான்கள் என்பவை மூளையின் அடிப்படை தகவல்பதிவு அலகுகள். உடல்மின்சாரம் அத்தகவல்களை ஒன்றோடொன்று தொடர்புபடுத்தி சிந்தனையை நிகழ்த்துகிறது.உண்மையில் நம் மூளையின் மிகச்சிறியபகுதியைக்கூட நாம் பயன்படுத்தவில்லை என்பது உனக்குத்தெரியுமா ? ‘
‘ஆம். ரிச்சர்ட் ரீஸ்டாக் என்பவரின் நூலில் படித்தேன். ‘மூளைக்கு தனிமனம் உண்டு ‘ என்ற நூல். மாமேதைகூட மூளையின் சாத்தியங்களில் கால்பகுதியைத்தான் பயன்படுத்துகிறார் என்று… ‘
‘அவர் வெகுஜன எழுத்தாளர்… ‘
நான் சீண்டப்பட்டேன் . ‘ ஆலிவர் சாக்ஸ் புத்தகம் ஒன்றையும் படித்திருக்கிரேன். நான்கு நரம்பு நோயாளிகளின் பிரச்சினைஅறிக்கைகள்.. ‘
‘அவர் ஆராய்ச்சியாளர்தான். ..நீ பெயர்களை அடுக்கவேண்டாம். ‘என்றார் டாக்டர் ஏப்பமாக ‘ மூளை ஓர் அபாரமான இயந்திரம். முதனிலை கணிப்பொறிகள்கூட அதன் முன் தூசு. ஒரு முகத்தை நீ அடையாளம் காணும்போது உன்மூளையின் எத்தனை லட்சம் பதிவுகள் ஒரு கணத்தில் பரிசீலிக்கப்படுகின்றன என்று தெரியுமா ?நம் மூளை ராஷ்ட்ரபதி பவன் மாதிரி. நாம் அதன் வராந்தாக்களில் வாழ்கிறோம். சிலர் மட்டும் ஒரு அறையை கூடுதலாக பயன்படுத்திக் கொள்கிறார்கள். ‘
‘ஐன்ஸ்டான்கூடவா ? ‘
‘அவர் பிரபஞ்சவியல் மேதை. ஆனால் உயிரியல் அறியாதவர். அவரால் தஸ்தயேவ்ஸ்கி போல ஒரு நாவலை எழுதிவிடமுடியாது ‘
‘ஆம். அது மனித சாத்தியமே இல்லை ‘ என்றேன்
‘சாத்தியம்தான் ‘ என்றார் டாக்டர் ‘முப்பது வருடங்களாக நான் மூளையின் திறனை அதிகரிக்கும் மருந்துக்கள் பற்றி ஆராய்ச்சி செய்துவருகிறேன் ‘
‘அப்படி அதிகரிக்க முடியுமா என்ன ? ‘
‘கண்டிப்பாக. இப்போதே பல்வேறு மூளைத்தூண்டிகள் [ Cognitive Enhancers ]கிடைக்கின்றன. ஹைடர்ஜைன், பிராஸ்டைம், அனிராசெட்டேம், மினாப்ரிய்ன்*1 எல்லாம் அதிக நினைவாற்றலுக்காகவும் அதிக நேரம் கவனம் நிற்பதற்காகவும் பரவலாக பயன்படுத்தப்படுகின்றன. இவை எப்படி இயங்குகின்றன ? உடலோ மூளையோ அபாயகட்டங்களில் திடாரென அதிக உக்கிரத்துடன் செயல்பட்டாகவேண்டிய தேவை உள்ளது . அப்போது அத்திறனை உருவாக்கும் உயிர் ரசாயனங்கள் நம் உடலில் ஊறுகின்றன. அப்போது தேவையான பகுதிகள் அல்லாமல் பிற பகுதிகளின் இயக்கம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகிறது. சம்பந்தப்பட்ட பகுதிகளுக்கு அதிகரத்தமும் மின்னூட்டமும் செலுத்தப்படுகிறது…. ‘
‘ஆம் ‘
‘அதைத்தான் என்மருந்து முழுமையாக செய்கிறது. அந்த ரசாயநங்களை செயற்கையாக செலுத்துகிறேன். 1980ல் ரிச்சர்ட் வுர்ட்மான்*2 என்பவர் டைரோசினை[tyrosine ] ஏதாவது தூண்டியுடன் சேர்த்து மூளைக்கு செலுத்தினால் மூளையில் மின்னூட்டத்தை நிகழ்த்தும் டோபாமின், நோர்பைன்ப்ரைன், எபின்ப்ரைன்*3 போன்ற பொருள்கள் அதிக அளவில் உருவாகின்றன என்று கண்டுபிடித்தார். என் ஆய்வு பலமடங்கு செறிவுபடுத்தபட்ட டைரோசினும் ஒரு சீன மூலிகையும் சேர்ந்தது… மன்னித்துக்கொள் . இதைவிட நான் உனக்கு விளக்க முடியாது… ‘
‘ மா ஹ்வாங்*4 தானே அந்த மூலிகை ? ‘
‘நீ அபாயகரமான பத்திரிகையாளன். ஆனால் மூளைக்குள் ஓர் ஐஸோடோப்பும் வைக்கவேண்டும். உபரி மின்சாரத்துக்காக ‘
‘பரவாயில்லை, உங்கள் மருந்தை பரிசோதனை செய்தீர்களா ? ‘
‘என் மருந்து மூளையின் மின்னூட்டத்தை பல மடங்கு தீவிரப்படுத்துகிறது. புலன்களின் பதிவுகள் இருபது மடங்கு அதிகரிக்கும். பதிவுகளுக்கு இடையேயான தொடர்புகள் இருபதின் மடங்குகளில் அதிகரித்தபடி செல்லும். மூளையின் எல்லா சாத்தியங்களும் பயன்படுத்தப்படும். அந்தமூளை தூங்கவேண்டியதில்லை. அதற்கு மறதியும் இருக்காது ‘
‘அதற்கு ஆழ்மனம், நனவிலி [ unconscious] உண்டா ? ‘
‘மறதி இல்லையேல் எப்படி நனவிலி உருவாகும் ? மறந்த விஷயங்களின் பெருந்தொகுப்புதானே அது ? ‘ டாக்டர் தன் சுருதிக்கு வந்துவிட்டிருந்தார். ‘இதோபார் . நீ பஸ்ஸில் எண்பது கிலோமீட்டர் வேகத்தில் போகிறாய். சாலையோரம் ஒரு பிணம் கிடப்பதை ஒரு கணம் மட்டும் பார்க்கிறாய் .முப்பது வருடம் கழிந்து ஒரு கனவில் அக்காட்சி வருகிறது. அந்தபிணத்தின் ஒவ்வொரு தகவலும் , அதனருகே கிடந்த ரூபாய் நோட்டில் இருந்த படம் கூட, தெரிகிறது . எப்படி ? மூளையில அவை உள்ளன. அவற்றையெல்லாம் வைத்துக்கொண்டு உன் அன்றாட வாழ்க்கையை நீ நடத்தமுடியாது .ஆகவே உன் மனம் அவற்றை அடியில் தள்ளுகிறது. ஆழ்மனம் உருவாகிறது. ஆனால் என் மருந்து மூளையின் சிந்தனைத்திறனை இருபதின் மடங்குகளில் பல்லாயிரம் தடவை அதிகரிப்பதனால் மேல்மனமே நனவிலி போல உக்கிரமான விரிவுடன் இருக்கும். அதாவ்து அந்தமனிதன் எப்போதுமே நனவிலிமனம் கொண்டிருப்பான்.உக்கிரமான கனவிலோ உச்சகட்ட தியான நிலையிலோ இருப்பதைப்போல! ‘
எனக்கு பீதி ஏற்பட்டது. ‘டாக்டர் நீங்கள் இந்தமருந்தை இன்னும் யாரிடமும் சோதனை செய்து பார்க்கவில்லை அல்லவா ? ‘
‘செய்தேனே ‘ என்று என்னை அதிரவைத்தார்.
‘யாருக்கு ? ‘ எனக்கு குடல் குலுங்கியது ‘உங்களுக்கேயா ? ‘
‘எனக்குச் செய்தால் அதன் விளைவுகளை நான் எப்படி பரிசோதிப்பது ? என் கூர்க்கா ஜங்பகதூருக்கு ‘
‘டாக்டர் இது ஐசக் அசிமோவின் ‘ஃப்ளவர்ஸ் ஃபார் அல்ஜீர்னான் ‘ கதை போல இருக்கிறது ‘
‘யார் அந்த முட்டாள் ? ‘
‘ஒன்றுமில்லை. ஜங் பகதூர் என்ன ஆனார் ? கல்கத்தா நூலகத்தை முழுக்க விழுங்கிவிட்டாரா ? ‘
‘இல்லை.அவனை நான் ஒரு காட்டுக்குள் கொண்டு போய் தங்கவைத்தேன். இயற்கையின் நடுவே. எல்லா அறிவையும் அவனே நேரடியாக அறியமுடியும்.. ‘ என்றார் டாக்டர் ‘அவன் அறிவுத்திறனை என்னால் ஒரு கட்டத்துக்குமேல் சோதனைசெய்யவே முடியவில்லை. மொழித்திறன் உச்சத்துக்கு போனபோது அவனால் பறவைகளுடன் பேசமுடிந்தது. ஆயிரம் பூச்சிகளின் சேர்ந்த ஒலியை பிரித்துக்கேட்டு தனித்தனியாக புரிந்துகொள்ள முடிந்தது… ‘ டாக்டர். ‘ விஸ்கி மீதி இருக்கிறதா ‘ என்றார்
‘விஸ்கி இல்லை . நீங்கள் சாப்பிட்டது ரம். ஆனால் அது மிச்சம் இல்லை ‘என்றேன்
‘அவன் காட்டின் பல்லாயிரம்கோடி தகவல்களை ஒரே சமயம் உள்வாங்கி காட்டின் அளவுக்கே முழுமையுடன் அவற்றை தன்னுள் நிரப்புவதைக் கண்டேன்.நான் கேட்ட கேள்விகளுக்கான அவனது பதில்களில் இன்னும் ஆயிரம் வருடம் நம் அறிவுத்துறைகள் யோசிக்கவேண்டிய விஷயங்கள் இருந்தன ‘
விபரீதம் நோக்கி கதை போவதை உள்ளுணர்வு சொன்னது . இன்னொரு பிராங்கன்ஸ்டான். அறிவியல் திறந்துவிட்ட புதுப் பூதம்.
‘அவனை ஒரு முழு மனிதனாக ஆக்க நான் முயன்றேன்.அவனது மூளையின் எல்லா பகுதிகளும் முழுமையாக செயல்படச் செய்தேன். உனக்குத்தெரியும் இது ஒரு மாபெரும் மானுடக்கனவு. மனிதனுக்கு இயற்கை போட்ட எல்லா எல்லைகளையும் தாண்டும் ஒரு அதிமானுடனுக்காக எப்போதுமே மானுட இனம் கனவு கண்டு வருகிறது. மனிதனின் பரிணாம வளர்ச்சி அந்த திசை நோக்கி அவனை இட்டுச்செல்கிறது என்று சொல்கிறார்கள். சாக்ரட்டாஸ் முதல் நீட்சே வரை , வியாசன் முதல் அரவிந்தர் வரை அதைப்பற்றிப் பேசியிருக்கிறார்கள்… ‘
‘டாக்டர் இயற்கைக்கு இப்படி சவால்விடலாமா ? ‘
‘மனிதனின் பரிணாமமே இயற்கைக்கு விடப்பட்ட நிரந்தரச் சவால்தானே ? ‘ என்றார் டாக்டர் ‘ ஆதிமனிதன் எப்போது முதுகை நிமிர்த்தி எழுந்து நின்றானோ அப்போதே இயற்கையை எதிர்த்து போராட ஆரம்பித்துவிடான். மனிதக் கலாச்சாரம் என்பதே இயற்கையை எதிர்ப்பதுதான். அதிமனிதன் இயற்கையை முழுமையாக வென்றவன் . ‘
‘ஜங் பகதூர் இப்போது எங்கே ? ‘
டாக்டர் வெகுநேரம் பேசாமலிருந்தார். பிறகு ‘அவன் தப்பித்துப்போய்விட்டான் ‘ என்றார்.
‘பிராங்கன்ஸ்டான் ! ‘என்றேன்
‘அவன்தான் இந்த மெளனச்சாமியார் ‘ என்றார் டாக்டர்.
நான் பல கணங்கள் மனமில்லாமல் அமர்ந்திருந்தேன்
‘நேற்றுத்தான் இவரைப்பற்றிய ஒருகட்டுரையைப் படித்தேன். படத்தையும் பார்த்தேன் ‘ என்றார் டாக்டர்
‘இவரது மூளை இயங்குவதாகவே தெரியவில்லையே. இவர் ஒரு மந்தபுத்தி ஆசாமி என்கிறார்கள். சிலர் இவரை அவதாரபுருஷர் என்று சொல்லி பணம் பண்ணுகிறார்கள். எங்கள் இதழின் கட்டுரையே இந்தக் கோணத்தில்தான் ‘
‘மூளை தன் இயக்கத்தை நிறுத்திக் கொண்டிருக்கலாம். மூளையின் ஏதாவது ஒரு பகுதி முழுமையடையாமல் இருக்கும்வரைத்தானே அது செயல்படவேண்டும் ? சிந்தனை என்பதே அலைகள்தானே ? முழுக்க நிரம்பிய பாத்திரத்துக்குள் ஏது அலைகள் ? ‘
‘முழுமனிதன்! ‘ என்றேன் . ‘அதாவது அவனுக்கு மனித இயல்பே இல்லை ‘
‘ஆம் ‘ என்றார் டாக்டர்.
அதிமனிதன் அதிகாரமே உருவானவன் என்றார் நீட்சே, ஞானமே உருவானவன் என்றார் அரவிந்தர். இதோ அவன் வெண்டைக்காய் போல இருக்கிறான். எனக்கு ஒன்றுமே புரியவில்லை.
மறுநாள் அனுமதி கிடைத்துவிட்டது. தெரிந்த ஆள் உதவினார். பெரிய கூடத்தில் காத்திருந்தவர்களை இருபதிருபது பேராக உள்ளே அனுப்பினார்கள். உள்ளே என்பது உண்மையில் வெளியே. அங்கே ஒரு பெரிய தோட்டம். அல்லது குட்டிக் காடு . பாறைமீது ஒரு மனிதர் கோவணம் மட்டும் அணிந்து பேசாமல் அமர்ந்திருந்தார். முகத்தில் புன்னகைக்கான சதையமைப்பு இல்லை.ஆனால் புன்னகைப்பதுபோலிருந்தது.பக்கத்தில் சில மயில்கள் மேய்ந்தன.
அவர் அருகே போனதுமே என் சந்தேகங்கள் இல்லாமலாயின. நான் ஒன்றுமே யோசிக்கவில்லை என்பதை மறுவாசல் வழியாக வெளிவந்ததும் அறிந்தேன். மிக நெகிழ்ந்திருந்தேன். கண்ணீர் வருமளவுக்கு. என்ன நடந்தது ?
ரமண மகரிஷியை சந்தித்தது பற்றி பால் பிரண்டன் எழுதியது நினைவுக்கு வந்தது. ஒரு மனிதன் சும்மா உடகார்ந்திருக்கிறான். அவனை பார்த்தவர்கள் பரவசம் அடைகிறார்கள், கண்ணீர் விடுகிறார்கள், ஆழமான மனநகர்வு கொள்கிறார்கள். ஏன் என அவர்களுக்கு தெரிவதுமில்லை.
‘நீங்கள் என்ன நினைத்தீர்கள் ?என்றேன் டாக்டரிடம்
‘ஓம்! அது பூரணம். இதுவும் பூரணம் . பூரணத்திலுருந்து பூரணம் பிறக்கிறது. பூரணத்திலிருந்து பூரணம் பிறந்த பின்பும் பூரணமே எஞ்சி நிற்கிறது!- என்ற ரிக்வேத வரி ‘ என்றார் டாக்டர் ‘நீ ? ‘
‘ஒருமெல்லிய அதிர்ச்சி. பிறகு ஒரு பரவசம் ‘
‘ஏன் தெரியுமா ? ‘
‘ஏன் ? ‘
‘அவர்மீது அணில்கள் ஏறிச்சென்றன , அதனால்தான் ‘
‘ஆம்! ‘ என்றேன் வியப்புடன்.
‘அவர் அங்கே இருப்பதை எந்தப் பறவையும் பொருட்படுத்தவில்லை. ஒரு மனிதர் மரம்போல, பாறைபோல, அந்த சூழலின் ஒரு பகுதியாக இருந்தார் . மனம் என்ற அலை இல்லாத மனிதன். உன்னை பரவசப்படுத்தியது அதுதான். இயற்கைக்காட்சி ஒன்றைக் கண்டு நீ அடையும் பரவசம் போன்றதே அதுவும்.இயற்கையைப் பார்க்கும்போது அதை நீ பிரித்தறியவில்லைதான். ஆனால் ஓயாத அலைகளினாலான உன் மனம் அதை அறிந்துவிட்டது. கடல் தன் கரையை கண்டுகொள்வதுபோல ‘ டாக்டர் சொன்னார் ‘ உனக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். நான் வருகிறேன் ‘
‘ஏதோ பிரச்சினை என்றீர்கள் ? ‘ என்றுகேட்டேன்.
‘ஆமாம் .அதன் விடைகிடைத்து விட்டது ‘
‘என்ன விடை ? ‘
‘இயற்கை ஒரு மாபெரும் சமன்பாடு. எல்லா முரண்பாடுகளையும் எல்லா மீறல்களையும் அது இடைவிடாது சமன் செய்தபடியே இருக்கிறது. அதைமீறி எந்த சக்தியும் இருக்க முடியாது. இயற்கை அதை அழித்துவிடும். இந்த மனிதரின் முன் என் மனம் பணிந்தது. இவர் ஓர் விதிவிலக்குத்தான். ஆனால் நாம் அனைவருக்குள்ளும் நம்மை இந்த நிலை நோக்கி இழுக்கும் சக்தியாக இயற்கை இருக்கிறது .இவர்முன் நிற்கும்போது அதை நான் அடையாளம் கண்டேன். ஆம், இயற்கை அவனை ஒரு போதும் விடாது ‘
‘யாரை ? ‘
‘ராம் சிங்கை. அவர் இவரது தம்பி. இவருக்குப் பிறகு அவனை பரிசோதனைக்கு ஆளாக்கினேன். இவரைப்போலன்றி அவனில் ஒரு மையத்தை மட்டும் உக்கிரப்படுத்தினேன் ‘
‘டாக்டர்! ‘என்றேன் ‘ எந்த மையம் ? ‘ ‘
‘மூளையின் முகப்பு. தொகுத்துக் கொள்ளும் பகுதி , அதாவது அதிகாரம். தன் முனைப்பு. அதன் விளைவான குரூரம்… ‘ என்றார் டாக்டர்.
****

1/13/14

விசும்பு

எனக்கு இரண்டு எஜமானர்கள். ஏசு சொன்னார், ஒருவன் இரு எஜமானர்களிடம் பணிபுரியமுடியாதென்று. அதே ஏசுதான் சீசருக்கு உரியது சீசருக்கு, தெய்வத்துக்குரியது தெய்வத்துக்கு என்றும் சொன்னார். நான் இரண்டாம் கொள்கையைப் பின்பற்றினேன். ஆட்டிப்படைத்த சீசரின் பெயர் டாக்டர் நஞ்சுண்ட ராவ். மெளனமாக உயிரை வாங்கிய தெய்வம் அவர் அப்பா டாக்டர் கருணாகர ராவ்.
என் மூக்கு இன்றுகடைந்த மோரையும் நேற்று கடைந்த மோரையும் அடையாளம் காணும். முளைக்கீரைக் கூட்டையும் அரைக்கீரைக் கூட்டையும் பிரித்தறியும். ஆனால் பறவை எச்சம் என் மூக்குக்கு எட்டாது. சுசீந்திரம் வலது மண்டபத்தில் டன் கணக்கான வவ்வால் எச்சம் மத்தியில் நின்று என் மாமா மூக்கைப்பொத்திய போது ‘ நாத்தமா ?அனுமாருக்கு சாத்தற வெண்ணை மக்கிப்போச்சு போல ‘ என்று சொல்லி பித்துக்குளிப் பட்டம் வாங்கியவன். நான் வேலைபார்க்கும் இடம் அப்படி . வந்தவை, செல்பவை, வாழ்பவை என எப்படியும் ஒரு ஐம்பதாயிரம் பறவைகள் உள்ள இடம் அது.
கருணாகர ராவ் தொழில்முறை டாக்டர். பாதியில் விட்டுவிட்டு பறவை ஆய்வாளரானார். அவரது அப்பா திருவிதாங்கூர் திவானாக இருந்தபோது ஏலமலைப் பகுதியில் கடலோரமாகக் கிடைத்த அறுநூறு ஏக்கர் நிலத்தை அப்படியே பறவை ஆய்வகமாக மாற்றிவிட்டார். எங்கள் ஆய்வகத்துக்குள் மொத்தம் மூன்று பெரிய குளங்கள் இருந்தன. அடர்ந்த காடும் புதர்க்காடுகளும் இருந்தன. காடு சரிந்திறங்கி சேறும் புற்கள் மண்டிய கடற்கரைக்கு சென்று நாற்றமாக நாறிக் கடலலைகளில் இணையும். இம்மாதிரி நிலப்பகுதிதான் பறவை வாழ்விடத்துக்கு மிகமிகச் சிறந்த இடம் . இதை எஸ்டுவரி [estuary] என்பார்கள். .பறவை வளர்ப்புக் கூண்டுகள் ஏழாயிரம். வலைபோட்ட குளங்கள் ஐந்து .முப்பது வேலையாட்கள் . நான் மானேஜர். ஆனால் கருணாகர ராவ் அவருக்குக் காலையில் எனிமாகூட நான் தான் கொடுக்கவேண்டும் என்று சொல்வார்.
நஞ்சுண்ட ராவ் பிறந்ததே அவர் அம்மா [மறைந்த] பார்வதிபாய் பறவைகளைப் பார்க்கக் காத்திருந்தபோது மரத்தின் மீதிருந்த மாடத்தில் காக்காக்கள் மத்தியில்தான் என்பார்கள். அவருக்கு வேறு உலகமே இல்லை. எல்லாப் பறவையிலாளர்களையும் கவர்ந்த, கிராக்குகளை மேலும் கிராக்குகள் ஆக்கிய , விஷயம்தான் நஞ்சுண்ட ராவையும் கவர்ந்து இழுத்து, இருபது வருடங்களாக உள்ளே வைத்திருந்தது. பறவைகள் வலசை போகும் ரகசியம். எங்கள் கேரளநிலப்பகுதிக்கு வலசை வரும் நீண்டதூரப்பறவைகள் மொத்தம் 44. பல பெயர்கள் எனக்கு சினிமாநடிகர்களை விடப் பழக்கம், மாஸ்க்ட் பூபி என்றால் ஏதோ வில்லன் என்று எண்ண வேண்டாம் . இது இலேசான பசும்வெண்மை நிறம்கொண்ட, வாத்து போல உடல்கொண்ட, வலசைப் பறவை. சிறகின் பின்பக்கம் கரிய தீட்டல். கடலில் வாழும். எச்சமிடவும் கிராகிரா என்று சத்தம் போடவும் மட்டும் கரைக்கு வரும் என்று நினைக்கிறேன். வெள்ளை கறுப்பு ஸ்டார்க்குகள், நீலவால்டால்கள் , மங்கோலிய சேண்ட் ப்ளோவர்கள் , கரியவால் காட்விட்டுகள், டெரக்குகள் என்று பல வகை வலசைப் பறவைகள் .
அப்பாராவுக்குப் பறவைகள் வழிபடு தெய்வங்கள் மட்டுமே. சேவை செய்வதோடு சரி. ஆய்வு போன்ற உபத்திரவங்கள் இல்லை. முப்பது வருடம் முன்பு அவர் , முக்கியமானதென அவர் இப்போதும் நம்பும் , ஓர் ஆய்வை செய்து அது பொருட்படுத்தப்படாத துக்கத்தில் இருந்தார். ஒருவாரத்துக்குள் பிராயமுள்ள கோழிக்குஞ்சுகள் மணிநேரத்தில் சராசரியாக எத்தனை முறை கியா கியா சொல்கின்றன என்ற அவரது ஆய்வு [3859 தடவை] நூலாக அவராலேயே பிரசுரிக்கப்பட்டு, கொல்லையில் கட்டுக் கட்டாக உள்ளது.
நஞ்சுண்டராவின் மனைவி ஆணாபெண்ணா என நான் இன்னும் தீர்மானிக்கவில்லை. மீசை உண்டு. சோடாபுட்டிக் கண்ணாடி. நாகரத்னம் என்ற பேர், கட்டைக்குரல், ஜீன்ஸ்-ஷர்ட் உடை என்று எல்லாம் சேர்ந்து என்னைக் குழப்பி அவளை நான் அடிக்கடி சார் என்று கூப்பிட்டு பிரச்சினைக்குள்ளாவேன். அவள் ஏதோ மீன் சம்பந்தமான ஆராய்ச்சியாளர். விழிஞ்ஞம், தூத்துக்குடி இன்னபிற பகுதிகளிலிருந்து அடிக்கடி ஃபோன் செய்வாள். மாதமிருமுறை வந்து அவள் ஒருமூலையில் மீன்களைப்பற்றிய தலையணைகளையும் இவர் ஒரு பக்கம் பறவைகளைப்பற்றியும் படித்துக் கொண்டிருப்பார்கள், .இக்காரணத்தால்தான் என நினைக்கிறேன் , அவர்களுக்குக் குழந்தைகள் இல்லை.
எனக்கும் பறவையியலுக்கும் சம்பந்தமில்லை. நான் படித்தது தமிழ் எம் ஏ. இந்த அத்துவானக் காட்டில் வேறு வேலைகிடைக்கவில்லை. ‘ உள்ளான், காடை என்பதெல்லாம் அதனதன் எச்சத்தால் காணப்படும் ‘ என்று புது சூத்திரங்கள் வகுத்துக் கொண்டு சாத்தியமான வரை மகிழ்ச்சியாக இருக்கிறேன்.
இந்தசூழலில்தான் நஞ்சுண்ட ராவ் ஒரு சித்திரை பத்தாம் நாள் தன் மகத்தான கண்டுபிடிப்பு முடிவுக்கு வந்துவிட்டிருப்பைதை என்னிடம் சொன்னார். அதற்குமுன் உலக அளவில் ஏறத்தாழ எல்லாப் பறவையியலாளர்களுக்கும் சொல்லியிருந்தார்.
கிழ ராவ் அந்த ஆய்வை ஆரம்பத்திலேயே பொருட்படுத்தவில்லை . ‘பறவைகள் வலசை போவதை மனிதன் அறிந்துகொள்ள முடியுமா ? புராதன காலம் முதல் மனிதன் அதைப்பற்றிக் கனவுகள் கண்டிருக்கிறான். கவிதைகள் பாடியிருக்கிறான். பறவைகள் எப்படி சரியான திசை கண்டுபிடிக்கின்றன ? அதற்கு மொத்தவானத்தையே நீ அறிய வேண்டும். வானம் என்றால் விசும்பு. மேலே விரிந்து கிடக்கும் வெளி. அங்கே உலவும் காற்றுக்கள், ஒளி, எல்லாம். உன்னால் முடியுமா ? நம்மாழ்வார் ‘பொன்னுலகாளீரோ புவனமுழுதாளீரோ நன்னயப் புள்ளினங்காள்! ‘ என்று வியந்தார். ‘புவனங்களையெல்லாம் ஆள்வது பறவை. விசும்பின் துளி அது ‘ என்றார்.
‘இது அறிவியல். உங்கள் பக்திக் காளைச்சாணம் அல்ல ‘என்றார் மகன்.
என் சிற்றறிவுக்குப் பறவைகள் வலசைபோகும் ரகசியத்தை பொதுமொழியில் நஞ்சுண்ட ராவ் சொன்னார். பறவைகள் வலசை போகும்போது எப்படி சரியாகத் திசையறிகின்றன ? சைபீரியாவிலிருந்து சைபீரியநாரை நேராக வந்து எங்கள் குளத்தில் இறங்கிவிடுகிறது. பூமிக்குமேலே மிக உயரத்தில் அவை பறக்கின்றன. இரவிலும், திசையடையாளங்கள் இல்லாத கடல்வெளிமேலும் பறக்கின்றன. எப்படிஎன்பது இன்றைய அறிவியலின் பெரிய புதிர்களுள் ஒன்று. நட்சத்திரங்களை வைத்து அடையாளம் காண்கின்றன என்றும் , காற்றுவீசும் திசைகளின் அடிப்படையில் வந்து விடுகின்றன என்றும்,பூமியின் காந்தப்புலத்தை ஏதோ ஒரு புலனால் தொட்டறிவதன் மூலம் திசையறிகின்றன என்றும் பல கொள்கைகள் உண்டு. பறவைகளுக்கு நுண்கதிர்களுக்கும் உள்ள தொடர்பு குறித்து நிறைய ஆராய்ச்சிகள் வந்துவிட்டன. வலசைக்கு ஆர்ட்டிக் டென் போன்ற சில பறவைகள் புற ஊதாக் கதிர்களை பயன்படுத்துவதும் ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து டாக்டர் நஞ்சுண்டராவுக்கும் ஆரம்பம் முதலே சில ஊகங்கள் இருந்தன.
‘சிட்டுக்குருவிகள் செல்ஃபோனின் நுண்ணலைகளால் பாதிக்கப்படுவதைப்பற்றி இப்போது நிறையக் கட்டுரைகள் வருகின்றன… ‘என்றேன்.
‘ஆம் ,பரவாயில்லை நீ கூடப் படிக்கிறாய் ‘ என்றார் டாக்டர் நஞ்சுண்டராவ்
வலசைப் பறவைகளின் காதுக்குப்பின்னால் மூளையின் ஒரு அபூர்வ அமைப்பு உள்ளது என்றார் நஞ்சுண்ட ராவ் . அது என்ன என்று நரம்பியல் நிபுணர்கள்தான் சொல்லவேண்டும். அதன் மூலம் அவை குற்றலை புற ஊதாக் கதிர்களை வாங்கும் சக்தி கொண்டிருகின்றன. பூமியைப் பலவிதமான புற ஊதா ,புறச்சிவப்பு கதிர்கள் சூழ்ந்திருக்கின்றன. பூமியின் ஒவ்வொரு இடத்துக்கும் அவற்றின் அதிர்வுகள் மாறுபடுகின்றன. அவ்வதிர்வுகள் மூலம் இப்பறவைகள் பூமியைப்பற்றி ஒரு மனவரைபடத்தையே உருவாக்கிக் கொண்டுள்ளன. அதாவது வெளவால்கள் கேளாஒலியலைகள்மூலம் பார்ப்பது போல அவை பூமியைப்பற்றி வேறு ஒரு பார்வையையும் அடைகின்றன. பூமியைச் சுற்றியுள்ள புறஊதா நெடுஞ்சாலைகளில்தான் அவை பறக்கின்றன. தூரத்தால் , தூசிப்புகை மற்றும் மேகங்களால் தடுக்கப்படாத ஒரு பாதை வரைபடம் அது .
டாக்டர் நஞ்சுண்டராவ் அதைத் தன் சோதனைச்சாலையில் பலவிதமான கதிர்களைக் கொண்டு இருபதுவருடங்களாக ஆய்வு செய்தார். பறவைகள் அறியும் அதே அலைவரிசையை அவர் வரையறை செய்து விட்டார். அதே அலைவரிசையை அனுப்பி ஓர் கறுப்புவால் காட்விட்டை சென்னைக்குப் போகச்செய்தார். ஒரு டன்லின் பறவையை ராஜஸ்தானிலிருந்து வரவழைத்தார். இனி அதை உலகளாவிய முறையில் நிரூபிக்க வேண்டும். அதற்கான மாபெரும் செயல்திட்டமொன்றை டாக்டர் நஞ்சுண்டராவ் வகுத்து விட்டிருந்தார் . அதன்படி சீனாவுக்கு மேற்கே மங்கோலியாவிலிருந்து இங்கே அக்டோபர் இறுதியில் கிளம்பி நவம்பர் முதல்வாரத்துக்குள் வலசை வரும் மங்கோலிய சேண்ட் ப்ளோவர் [Mongolian Sand Plover ] பறவை தேர்வு செய்யப்பட்டது . பறவையியல் பெயர் Charadrius mongolus.
டாக்டர் கருணாகர ராவின் கணக்குப்படி ப்ளோவர் இனத்தில் மட்டும் 67 வகைகள்.[ புத்தகங்களில் இருப்பதைவிட ஆறு வகைகள் கூட என்கிறார்] ‘ஏறத்தாழ முந்நூறு வகை பறவைகள் பூமியின் வடபகுதியில்ருந்து தெற்குநோக்கி பூமத்தியரேகை நாடுகளுக்கு வருகின்றன. நீண்டகாலமாக இந்த வலசைப் போக்கு நிகழ்வதனால் அவற்றுக்கும் காற்றின் திசைமாற்றங்களுக்கும் இடையே ஓர் ஒத்திசைவு ஏற்பட்டுள்ளது. அந்தத் தகவல்கள் அவற்றின் உள்ளுணர்வாக மாறி மூளையிலும் மரபணுக்களிலும் பதிந்தும் விட்டன. இவை அவற்றின் உயிர்வாழ்க்கைக்கு அவசியமான விஷயங்கள், அவ்வளவுதான் ‘ என்றார் டாக்டர் நஞ்சுண்டராவ்
திட்டப்படி டாக்டர் நஞ்சுண்டராவ் குழுவினர் மங்கோலியாவுக்கு நேராகச் சென்று நூற்றுக்கணக்கான சேண்ட் ப்ளோவர் பறவைகளைப்பிடித்து அவற்றுக்கு ஓரு மின்னணுத் தொப்பி அணிவிக்கிறார்கள் . அது பறவைகள் அறியும் புற ஊதா கதிர்களை முற்றாகத் தடுத்துவிடும் . இவர்கள் அனுப்பும் வேறு கதிர்களைப் புற ஊதா குற்றலைகளாக மாற்றி அவற்றுக்கு அளிக்கும். அதன் வழியாகப் பறவைகளுக்கு இவர்கள் விரும்பும் தகவல்களை அளிப்பார்கள் . ‘ ஒரு சேண்ட் ப்ளோவர் பறவைக்கூட்டத்தை திசைமாற்றி அப்படியே எகிப்துக்குக் கொண்டுபோவதுதான் திட்டம் ‘ என்றார் டாக்டர் நஞ்சுண்டராவ்.
‘போடா டேய் ‘என்றார் டாக்டர் கருணாகர ராவ். அவரது தலை தனியாக ஆடியது. ‘பறவை என்ன விமானம் போல எந்திரமா ?அது பெருவெளியின் ஒரு துளி . நீ இப்போது கண்டுபிடித்திருப்பது பறவைகளின் ஓர் இயல்பை மட்டும்தான் . இது சம்பந்தமான மற்ற விஷயங்களைக் காண மறுத்ததால்தான் அது உன் கண்ணுக்குப் பட்டது. பறவைகள் வலசை போவதே இதனால்தான் என்று நீ இன்று சொல்வாய் .நீ விட்டுவிட்ட விஷயங்களைக் கண்டுபிடித்து உனக்குப் பிறகு வருபவர்கள் உன்னை மறுப்பார்கள். அப்படியே அது போனபடியே இருக்கும். உங்களால் ஒரு பூச்சியைக்கூட முழுக்க அறிந்துவிட முடியாது. அறிவியல் என்றால் வானத்தை முழம்போடும் கலை. நீ கண்டுபிடித்த விஷயத்தினால் ஏதாவது நடைமுறைப் பயன் இருந்தால் அதைச்சொல். அதைவிட்டுவிட்டுப் பறவையின் ரகசியத்தைக் கண்டுபிடித்துவிட்டதாய் புலம்பாதே ‘
‘ஏன் பயன் இல்லை ? இனிமேல் பறவைகளை நாம் நம் விருப்பபடி கட்டுப்படுத்தலாம். விரும்பும் இடத்துக்கு அனுப்பலாம். அதன் பயன்கள் ஏராளம் … ‘
‘டேய் பறவை என்பது வானம் .அது பூமிக்கு ஒருநாளும் கட்டுப்பட்டதல்ல ‘
‘நீங்கள் உங்கள் காளைச்சாணத்தை உங்களுடனே வைத்துக் கொள்ளுங்கள் ‘ என்றார் டாக்டர் நஞ்சுண்டராவ்
‘ உன் அறிதல்முறை பதினெட்டாம் நூற்றாண்டில் ஃப்ரான்ஸிஸ் பேக்கன் உருவாக்கியது.அது எதையும் உடைத்து, பிரித்து ஆராய்வது. அதைத்தான் நீ அறிவியல் என்கிறாய். அதை வைத்து இந்தப் பிரபஞ்சத்தின் துளிகளையே அறிய முடியும். முழுமையை நிராகரித்தால் தான் துளிகள் நம் கண்ணிலேயே படும். பிரபஞ்சம் என்பது ஓரு முழுமை .அதை முழுமையுடன் அறிய முயற்சி செய் ‘ என்றார் கருணாகர ராவ் ‘ யோசித்துப் பார்டா முட்டாள். விண்ணில் கோடிக்கணக்கில் பறவைகள். ஒருபறவைக்கும் மற்ற பறவைகளுக்கும் இடையேயான உறவு என்ன ? விசும்பின் மற்ற பறவைகளுக்கும் அப்பறவைக் கூட்டத்துக்குமான உறவென்ன? பூமியில்உள்ள மற்றஉயிரினங்களுக்கும் பறவைகளுக்குமான உறவென்ன?உன்னால் அந்த பிரம்மாண்டமான ரகசியத்தை எப்படிப் புரிந்துகொள்ள முடியும் ? அங்கே சைபீரியப்பறவைகள் கிளம்பும்போது இங்கே அவற்றுக்கு உணவாகும் பூச்சிகளும் மீன்களும் முட்டைபோட ஆரம்பித்துவிடுகின்றன…. புழுக்கள் பல்கிப்பெருகுகின்றன. பிரபஞ்சம் ஒரு முழுமை. பூமி அதன் துளியான ஒரு முழுமை. இதை மறக்காதே… ‘
‘ஓம் , ஈசோ வாஸ்யம் இதம் சர்வம் .நமோ நமஹ! போதுமா ? ஆளைவிடுங்கள் ‘என்று டாக்டர் நஞ்சுண்டராவ் கிளம்பிவிட்டர்.
மஞ்சூரியாவிலிருந்து டாக்டரின் ஃபோன் வந்தது. பறவைகளுக்குக் குல்லா போடும்வேலை மும்முரமாக நடக்கிறது என்றார். ஆயிரக்கணக்கான பறவைகளைப் பிடித்துக் குல்லாப் போட்டுவிட்டதாக அவர் உற்சாகமாகச் சொன்னபோது எனக்கு ஏனோ சற்று வயிற்றைக் கலக்கியது. டாக்டரின் தொடர்பு வலையைச்சேர்ந்த சீனப் பறவையியலாளர்கள் அதில் உற்சாகமாக ஈடுபட்டார்கள். அது பறவையியலில் ஒரு பெரிய புரட்சியை உண்டு பண்ணப்போகிறது என்றார் டாக்டர்.
டாக்டர் நஞ்சுண்டராவின் மனைவிக்குத் தகவலே சொல்லவில்லை போலிருக்கிறது. அந்த அம்மாள் மூன்றாம் நாள் என்னைக் கூப்பிட்டு டாக்டர் இருக்கிறாரா என்றுகேட்டாள். இல்லை என்றேன். காரணம் சொன்னபோது அவளும் ‘காளைச்சாணம் ‘ என்றுதான் சொன்னாள். பறவை எச்சக்குவியலில் வாழ்பவனுக்கு காளைச்சாணம் என்பது தூய நறுமணப்பொருள்தான் என்று எண்ணிக் கொண்டேன். அதிலும் வலசைப்பருவத்தில் நான் மிதித்து நடப்பது சைபீரிய ,மங்கோலிய எச்சம்.
பறவைகள் கிளம்பிவிட்ட செய்தியை டாக்டர் என் தொலைபேசியில் வெடித்து சொன்னார். சீனப் பறவையியலாளர் ஏதோ ஒரு ஹோ தலைமையில் ஒரு குழு ரேடியோ அலைகள் மூலம் அதன் புற ஊதா கதிர் செய்தித் தொடர்பை வழி நடத்தியது .மறுநாள் டாக்டர் நஞ்சுண்டராவ் என் தொலைபேசியில் பயங்கரமாக ஆர்ப்பரித்தார். தகவல்கள் சொல்லித் தன் தந்தையை பாதிப்படைய செய்வதுதான் அவரது நோக்கம் என்று எனக்குப் புரியாமலில்லை. பறவைகள் திசை மாறிவிட்டன என்றார் டாக்டர் நஞ்சுண்டராவ். டாக்டர் கருணாகர ராவ் அதில் அதிக ஆர்வம் காட்டாதது போல முகத்தை வைத்துக் கொண்டாலும் எல்லாச் செய்திகளையும் கேட்டறிந்தார் .
பறவைகள் சீனாவிட்டு திசைமாறி ஆஃப்கன் எல்லைக்குள் சென்றன. எனக்கு பயமாக இருந்தது. இந்தப் பறவைகளை எனக்கு தெரியும். சிறிய அழகான குருவிபோன்ற பறவைகள். கரிய கூரிய அலகு, மணிக்கண்கள் , சிலவற்றுக்கு நல்ல செங்காவி நிற முதுகு. சிலவற்றுக்கு இளஞ்சிவப்பு. அடிவயிறு வெள்ளை .எகிப்தில் போய் இறங்கி அது என்ன செய்யப்போகிறது ? நைல்நதிக்கரையில் எங்கள் குளத்தைத் தேடி முழிக்கப்போகிறது .
டாக்டர் கருணாகர ராவ் என்ன சொன்னார் என்று டாக்டர் நஞ்சுண்டராவ் கேட்டார். அவர் தகவல்களை வெறுமே கேட்டுக் கொண்டார் என்றேன். கூண்டில் வாழ்ந்த ஒரு தீக்கோழிக்கு மலச்சிக்கல். அதில் அவர் முழுமையாக ஈடுபட்டதனால் அவருக்கே கடும் மலச்சிக்கல் என்ற உண்மையை சொல்லவில்லை.
பத்தாம் நாள் பறவைகள் கடும்வெயிலில் தளராமல் அரேபியப் பாலைவனத்தைத் தாண்டிச்சென்றன. இருபதுநாட்கள் அவை பறந்தன. கெய்ரோவில் இறங்கிய அவை அங்கே ஒரு வயலில் கீக் கீக் என்று தடுமாறி சுற்றிவந்தபோது டாக்டர் நஞ்சுண்டராவ் என்னைக் கூப்பிட்டார் ‘ ‘டேய் அந்தக் கிழத்தை கெட்டியாக பிடித்துக்கொள். அதன் வாயைத்திற. அரைக்கிலோ சீனியை அதற்குள் கொட்டு. பிறகு சொல்லு, இன்று மானுட அறிவியலில் ஒரு திருப்புமுனை நாள் என்று ‘ என்றார் .
மறுநாள் மீண்டும் ஃபோன் . ‘கிழம் என்ன சொல்கிறது ? இது உலக சாதனை என்று அவரிடம் சொல். .உலகசாதனை! ‘ என்று வீரிட்டார்.
நான் சொல்ல ஒரு தகவல் வைத்திருந்தேன் ‘ டாக்டர் இங்கே ஒரு புதிய பறவை வந்து இறங்கியிருக்கிறது. ‘
‘புதிய பறவையா ? ‘
‘ஆமாம். இதுவரை வராத பறவை. வெளிநாட்டுப்பறவை ‘
‘எப்படி இருக்கிறது ? ‘
‘ சின்னப் பறவை. அகலமான அலகு. கொண்டை இருக்கிறது. வாலும் நீளம். பறந்து பூச்சிகளைப்பிடித்து சாப்பிடுகிறது. ‘
‘கால் எப்படி ? ‘
‘பலவீனமான, சின்ன கால்… ‘
‘ஏதோ ஃப்ளைகேச்சர். மின்னஞ்சலில் படம் அனுப்பு ‘
நான் அப்போதே புகைப்படம் எடுத்து அனுப்பினேன் .
உடனே டாக்டர் நஞ்சுண்ட ராவ் போனில் கூவினார் ‘அது ஸ்வானிசன் ஃப்ளைகேச்சர் . ‘ டாக்டர் அதன் பறவையியல்பேரை கெட்டவார்த்தையை சொல்வது போலச் சொன்னார். [Swainson 's Flycatcher /Myiarchus s. swainsoni]
‘அது எங்கே அங்கே வந்தது ? அது தென்னமெரிக்கப் பறவை . தெற்கு தென்னமெரிக்காவிலிருந்து வடக்கு தென்னமெரிக்கா போக வேண்டியது… ‘
‘தெரியவில்லையே டாக்டர் . ஆனால் அது மாலத்தீவுக்கும் கேரளாவுக்கும் வேடந்தாங்கலுக்குமெல்லாம் நிறைய வந்திருக்கிறது. இதைப்பற்றி உங்களுக்கு மொத்தம் எண்பது மின்னஞ்சல் வந்திருக்கிறது… ‘
‘முட்டாள் ‘என்றபடி டாக்டர் நஞ்சுண்டராவ் ஃபோனை வைத்தார். யாரைச்சொன்னார் என்று புரியவில்லை.
மறுநாள் டாக்டர் நஞ்சுண்டராவ் ஃபோன் செய்வதாகச் சொன்னார், செய்யவில்லை. அவர் மனைவியின் மின்னஞ்சல் வந்தது. அதை அவருக்கு அனுப்பி வைத்தேன். அவளுக்கும் ஏதோ பிரச்சினை. மலேசியக் கடற்கரையில் ஒரு புதுவகை மீன் குஞ்சுபொரிக்கக் கூட்டம் கூட்டமாக வந்திருக்கிறதாம். இது ஓர் அபூர்வ சம்பவமாம். உலக மீன் ஆய்வாளர்கள் அத்தனை பேரும் அங்கே கூடியிருக்கிறார்கள், இந்தம்மாவும் போயாக வேண்டும். வர நாளாகுமாம்.
எனக்கு ஏனோ ஒரு மனநிறைவு ஏற்பட்டது ‘ என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய் ‘ என்று பாடியபடி தீவனத்தை அள்ளினேன்
தீக்கோழிக்கு மலச்சிக்கல் சரியாகிவிட்டது என்று டாக்டர் கருணாகர ராவ் வாசனையுடன் வந்து சொன்னார்.

1/12/14

இங்கே, இங்கேயே…

இப்போது இது ஒரு பொதுமனப்பான்மை ‘ என்றார் டாக்டர் பத்மநாபன் ஆங்கிலத்தில் , அவருக்குத் தமிழே வாயில் வரவில்லை. ‘எல்லாருக்குமே விண்வெளிமனிதர்கள் பற்றி ஏதாவது சொல்ல இருக்கிறது. பறக்கும் தட்டுகள், தலையில் ஆண்டன்னா கொண்ட தவளைக்கண் மனிதர்கள். விசித்திரமான வெளிச்சங்கள். ஐம்பது வருடம் முன்பு ஹாலிவுட் படங்கள் உருவாக்கிய அத்துமீறிய கற்பனைகளைப் படிப்படியாக செய்தித்தாள்கள் உண்மையாக முன்வைத்து விட்டன. மக்களில் பாதிப்பேர் இப்போது இக்கதைகளை உண்மைச் செய்திகள் என்று நம்புகிறார்கள். அறிவியல் உண்மைகளை மக்களிடம் கொண்டு செல்லும் வேலைக்குப் பதில் இம்மாதிரி அறிவியல் மூடநம்பிக்கைகளைக் களைவதே இன்று விஞ்ஞானிகளுக்குப் பெரிய வேலையாகி விட்டிருக்கிறது… நான் சோர்ந்துவிட்டேன்… ‘
‘இது அப்படியல்ல. நீங்கள் கண்ணால் பார்த்தால் நம்புவீர்கள்…. ‘ என்றார் நாராயணன்.
பத்மநாபன் சிறிய மனிதர். சாக்பீஸ் போல வெள்ளையான உடல், அதி வெண்மையான தலைமயிர். மீசையும் புருவமும் கூட வெண்ணிறம்தான். விண்வெளி ஆய்வில் அவருக்கு நாற்பது வருட அனுபவம் , உலகப்புகழ் , ‘கிட்டத்தட்ட ‘ நோபல் பரிசு ஆகியவை இருந்தன.
‘நான் ஆராய்ச்சிக்காக வரவில்லை. நீ என் பழைய நண்பன். எனக்கு ஏதாவது மலைப்பிரதேசத்தில் நாலைந்துநாள் ஓய்வெடுக்கவேண்டுமென்று பட்டது. அப்போதுதான் உன் கடிதம்… ‘
‘நீங்கள் அதைப் பார்க்கலாம். மலைஉச்சி வரை ஏறுவதை ஒரு பயிற்சியாகவும் கொள்ளலாமே. ‘
‘பார்ப்பதில் ஒன்றுமில்லை. ஆனால் ஒரு தோட்டவிவசாயி என்ற நிலையில் நீ இம்மாதிரி அபத்தமான விஷயங்களில் ஈடுபடாமல் உருப்படியாக பூச்சிகளைப்பற்றியோ, புதிய விவசாய முறைகளைப்பற்றியோ ஏதாவது ஆராய்ச்சி செய்திருந்தால் எவ்வளவோ நல்லதாக இருந்திருக்கும் . ஆனால் உனக்குப் பொழுதுபோனால் சரி. இந்த ஆளில்லா மலைப்பகுதியில் இம்மாதிரி சிறு பரபரப்புகள் இல்லாமல் வாழ்வதும் கடினம்தான்… ‘
‘நாளைக் காலையில் நாம் மலை ஏறுகிறோம். தொரப்பனை வரச்சொல்லியிருக்கிறேன்.. ‘
‘தொரப்பனா ? ‘
‘இந்த மலையில் உள்ள இடும்பர் என்ற பழங்குடி இனத்தைச் சேர்ந்தவன்.அவர்களில் ஒருவனின் துணை இல்லாமல் மலையில் வழிகண்டுபிடித்துப் போவது கஷ்டம். ‘
‘ உன் பங்களா அழகானது . நீ ஒரு குட்டி மலைஅதிபன் மாதிரி இருக்கிறாய். ‘
‘நன்றி ‘ என்றார் நாராயணன் ‘ தேயிலை விலை விழுந்த பிறகு நான் நாடிழந்த மன்னனாக ஆகிக் கொண்டிருக்கிறேன். ‘
‘இந்தப் பறக்கும் தட்டுக்கதையை பிரபலப்படுத்தி மலையுச்சியை ஒரு சுற்றுலாத் தலமாக செய்துவிடு. பணம் கொட்டும். பலர் இப்போது அதைத்தானே செய்கிறார்கள்… ‘
டாக்டர் பத்மநாபன் இரவெல்லாம் விண்வெளி விந்தைகளின் பேரால் நடக்கும் மோசடிகளைப்பற்றி சொல்லிக் கொண்டிருந்தார் . ‘மக்களுக்கு பூமி மீது நம்பிக்கை போய்விட்டது. இங்கேயே நம் வாழ்க்கைச்சிக்கல்களுக்கு ஒரு தீர்வு கிடைக்குமென அவர்கள் நம்பவில்லை. வானத்திலிருந்து யாரோ வரவேண்டியிருக்கிறது . கடவுளை விஞ்ஞானிகள் ஒழித்துக் கட்டிவிட்டார்கள் . சென்ற நூற்றாண்டு விஷயங்களான சோதிடம் ஆருடம் எல்லாமே காலியாகிவிட்டன. ஆகவே விஞ்ஞானிகளை வைத்தே புது மூடநம்பிக்கைகளைக் கட்டிக் கொள்கிறார்கள்…தலைக்குமேல் ஒரு காலியிடம் இருப்பதாக நம்ப யாருமே தயராக இல்லை.ஆகவே புதிய தேவதைகள், புதிய சாத்தான்கள்.. ‘
‘அப்படியானால் விண்வெளியில் நம்மைத்தவிர வேறு யாருமே இருக்க நியாயமில்லை என்கிறீர்களா ? ‘
‘தர்க்கபூர்வமாக யோசித்தால், இருக்கலாம். ஆனால் இன்றுவரை ஒரு ஆதாரம் கூட கிடைக்கவில்லை. ஒரே ஒரு சிறு ஆதாரம் கூட . அதி நுட்பத் தொலைநோக்கிகள் ஐம்பது வருடங்களாக வானை அணு அணுவாக கவனிக்கின்றன. பிரபஞ்சத்தின் எல்லா மூலைக்கும் இடைவிடாது ரேடியோ செய்திகள் அனுப்பபடுகின்றன. விண் ஊர்திகள் நமது சூரியமண்டலத்தையும் பால்வழியையும் பல லட்சம் புகைப்படங்களை எடுத்து அனுப்பி விட்டன. செவ்வாயின் துணைக்கோள்களில் ஆளில்லா ஊர்திகள் இறங்கி விட்டன. இதுவரை கவனத்தைக் கவரும்படியான ஒரு சிறு தடையம்கூடக் கிடைக்கவில்லை . கிடைக்காதவரை இல்லை என்று கொள்வதே அறிவியலின் நியதி . ஆகவே பிரபஞ்சத்தில் நம்மைத்தவிர யாருமில்லை.. ‘
‘அப்படி உறுதியாக சொல்ல முடியாது. நீங்கள் இதைப்பார்த்தால்…. ‘
‘நான் நிறையப் பார்த்தாகிவிட்டது… ‘ என்றார் டாக்டர் பொறுமை இழந்து. ‘ நீ சொல்லவரும் கதை என்ன ? ஏதோ விண்ணுலக ஊர்தி இங்கே இறங்கியது . அதன் சக்கரங்களின் தடம் மலை உச்சியில் இருக்கிறது இல்லையா ? ‘
‘ஆம்.அதாவது… ‘
‘நீ எரிக் வான் டனிகென் எழுதிய ‘கடவுள்களின் ரதம் ‘ கதையைப் பலமுறை படித்திருப்பாய் என்று நினைகிறேன். விண்வெளி மனிதர்கள் ஏன் இங்கே வரவேண்டும் ? வந்தபிறகு எதையாவது விட்டுச்சென்றார்களா ? எடுத்துச்சென்றார்களா ? அதை யாராவது பார்த்தார்களா ? எல்லாம் பிரமை. அறிவியல் அறிவியல்தான்.அதைக் கதைகளுடன் கலக்கக் கூடாது ‘
மறுநாள் தொரப்பன் வந்துசேர்ந்தான். வாய்நிறைய வெற்றிலைச்சாறு வழியும் குள்ளமான கரிய மனிதன். உறுதியான தசைகள் . தலைமயிரைப் பின்னால் நீட்டி வளர்த்து நீவி பின்னிழுத்துக் குடுமியாக முடிந்திருந்தான். மூக்கில் இரும்பு வளையம் .
‘ஏம்பா அதிகாலையிலே வார நேரமா இது ? ‘
‘சாமி காட்ல பனி ராஸ்தி சாமி ‘
‘நல்லவர்கள்தான். ஆனால் எந்த ஒழுங்குக்கும் கட்டுப்பட மாட்டார்கள் ‘என்றார் நாராயணன். ‘ காடு சுற்றும் வேலைதவிர ஒன்றுக்குமே உதவமாட்டார்கள்… ‘
‘அதற்குக் காரணம் அவர்களுடைய உதவாத கற்பனைகள்தான். தெய்வங்களும் பேய்களுமாக. யதார்த்த உணர்வு ஆதிவாசிகளிடையே மிக மிகக் குறைவு .போகலாமா ? ‘ ‘
‘நான் தயார் . டேய் அய்யாவோட பையை எடுத்துக்க . ‘ நாராயணன் சொன்னார் . ‘நல்ல செங்குத்தான மலை. மேலே போக சிறிய வழி மட்டும்தான் உண்டு. அது இவர்களுக்கு மட்டும்தான் தெரியும்… ‘
பையுடன் தொரப்பன் முன்னே சென்றான். அவர்கள் பின்தொடர்ந்தார்கள். அடர்வற்ற காட்டுக்கு அப்பால் மலை தெரிந்தபோது டாக்டர் சற்று பிரமித்தார் . அதைப்போன்ற ஒரு செங்குத்தான மலையை அவர் கண்டதேயில்லை.
‘இதன் பேர் என்ன ? ‘
‘வெள்ளைக்காரன் போட்ட பேர் டெவில்ஸ் டோம் . இவர்கள் மொழியில் கல்லன்மலை . ‘
‘கல்லன்மலை என்றால் என்ன பொருள் ? ‘
‘இவர்கள் சாமி ஒன்று மலைமேல் இருக்கிறது . கல்லன்சாமி . ‘
‘நீங்க அடிக்கடி போறதுண்டா ? ‘ என்றார் டாக்டர் தொரப்பனிடம்
‘சாமி ? ‘
‘எப்பல்லாம் கல்லன் சாமிய கும்பிடுவீங்க ? ‘
‘சாமி அது சித்திரை ஆறாம் தேதியல்லோ. அன்னு மாட்டும்தானே ஆணாப்பிறந்தவங்க மலையேறி சாமி கும்பிட்டு பலி போடுயது சாமி ‘
‘பெண்ணாப் பிறந்தவங்க ? ‘
‘வரக்கூடாதல்லோ சாமி .கல்லன்சாமி வந்து பிடிச்சு மானத்திலே ஏற்றிக் கொண்டு போகுமல்லோ ‘
‘இதில் எப்படி ஏறுவது ? ‘
‘மரம் இருக்கு சாமி ‘ என்றான் தொரப்பன்.
மலை உண்மையில் ஓரு பெரும்பாறை. அதன் விரிசல்களில் முளைத்த மரங்களின் வேர்களை மிதித்து தொற்றி ஏறவேண்டியிருந்தது. டாக்டர் சற்று சிரமப்பட்டார்.
‘இது ஓர் எரிமலைக்குழம்புப் பாறையாக இருக்கலாம் ‘என்றார் டாக்டர் ‘நல்ல கரும்பாறை. தென்தமிழ்நாட்டில் பல மலைகளில் இம்மாதிரி உறுதியான பாறைகள்தான் இருக்கின்றன ‘
‘மேலே உச்சி வரை இதே கன்னங்கரிய பாறைதான். யானைச்சருமம் மாதிரி ‘
மேலே ஏறிச்சென்றபோது வெயில் நன்றாக விரிந்து விட்டிருந்தது . நான்குபக்கமும் வானம் கவிழ்த்த கிண்ணம் போல இறங்க ஒளி கண்ணைக் கூசியது. ஆனால் உடலை தழுவிய குளிர்ந்த காற்று இதமாக இருந்தது.
‘இங்கே நின்றால் நூறுகிலோமீட்டர் தூரம்வரை பார்க்க முடியும். உண்மையில் மேற்கு மலைத்தொடர்களில் இதுதான் உயரமான சிகரம். கடல்மட்டக் கணக்குப்படித்தான் வேறு மலைகளைச் சொல்கிறார்கள் ‘ என்றார் நாராயணன் ‘உச்சிக்குப் போகலாமே ‘
‘கண்டிப்பாக ‘ என்றார் டாக்டர்.
‘சாமி, நம்ம கல்லன்சாமி … ‘ என்று தொரப்பன் சுட்டிக் காட்டினான். மலைச்சரிவில் ஒரு மரத்தடியில் கரியகல் ஒன்று இன்னொரு சப்பைக் கருங்கல்மீது வைக்கப்பட்டிருந்தது .
‘சரி, நீ போய்க் கும்பிட்டுட்டு வா ‘ என்றார் நாராயணன் ‘வாருங்கள் டாக்டர் ‘
மலைநுனியில் கிட்டத்தட்ட நான்கு ஏக்கர் பரப்புதான் இருந்தது. ‘இதோ .. இதுதான் நான் சொன்னது ‘என்றார் நாராயணன்.
சீராக வெட்டப்பட்ட ஓர் ஓடை. எட்டடி அகலம் .மூன்றடி ஆழம்.
‘ஓடை ‘
‘இல்லை. அதோ பாருங்கள்… ‘
இருபதடி தள்ளி அதேபோன்ற இன்னொரு ஓடை இணையாக இருந்தது.
‘ இதைத்தான் ஒரு விண்வெளி ஊர்தியின் சக்கரங்கள் பதிந்த தடம் என்கிறீர்களா ? ‘ என்றார் டாக்டர்.
அந்தத் தடம் நீண்டு சென்று, செங்குத்தாக வெட்டி இறங்கிய மலைச்சரிவில் பாய்ந்து ,வானை முட்டியது
‘முதன்முதலாக இதை பூச்சிமருந்து தெளிக்கும் ஹெலிகாப்டரிலிருந்து பார்த்தபோது அசந்து போய்விட்டேன் . ஒரு டயர்த் தடம்போலவே…. ‘
‘பிரமைதான் ‘
‘ஏன் அப்படி இருக்கக் கூடாது ? எப்படி இங்கே, இந்த உச்சியில் , இப்படி ஒரு தடம் வரமுடியும் ? சாத்தியமேயில்லை ‘
‘பல வாய்ப்புகள். ஒன்று இந்த பழங்குடிகள் செதுக்கியிருக்கலாம். ‘
‘இவர்களிடம் அப்படி ஒரு கதையே இல்லை . இவர்கள் எங்குமே அப்படி ஒரு சடங்கைச் செய்வதுமில்லை ‘
‘இயற்கையாகக் கூட வந்திருக்கலாம். பாறை பலவிதமான கனிமங்களின் கலவை .ஏதோ ஒரு கனிமம் காலப்போக்கில் மழையிலோ வெயிலிலோ கரைந்திருக்கலாம் ‘
‘இத்தனை கச்சிதமாகவா ? ‘
‘இதைவிட கச்சிதமான வடிவங்களெல்லாம் இயற்கையில் கண்டடையப்பட்டுள்ளன. பலகோடி பாறைத் தடங்கள் உள்ளன. ஒன்றிரண்டு இப்படியும் இருக்கலாம். ஆனால் அதைவிட ஏதோ புராதன மனித இனம் ஏதோ ஒரு தேவைக்காக செதுக்கிய ஒன்று என்றுதான் எடுத்துக் கொள்ளவேண்டும். அதுதான் சிறந்த ஊகம் ‘
‘டாக்டர் இது ஒரு விண்ணூர்தியின் சக்கரத்தடம் என்ற ஊகத்தை நீங்கள் ஏன் பிடிவாதமாக மறுக்கவேண்டும் ? ‘
‘ஏனென்றால் அதில் இருப்பது நம் விருப்பம் அல்லது கற்பனை மட்டுமே. இதுவரை ஒரு தடையம்கூட கிடைக்காத நிலையில் அப்படி ஒரு முடிவுக்கு நாம் எளிதில் வந்துவிடக்கூடாது.மேலும் முக்கியமான ஒரு சிக்கல் இருக்கிறது … ‘
‘என்ன ? ‘
‘இந்தத் தடம் மூன்றடி ஆழம் இருக்கிறது. இது சிறு உரசல் தடமோ கீறலோ அல்ல. இப்படி பாறையில் ஆழப்பதியவேண்டுமென்றால் அந்த ஊர்தி மிகமிக எடை கொண்ட ஒன்று . அப்படிப்பட்ட கனமான ஊர்தி விண்வெளி வேகத்தில் பறக்கவேண்டுமென்றால் அது எந்தவகை உலோகத்தால் ஆனதாக இருக்கவேண்டும் ? அவ்வுலோகத்தின் அடர்த்தி நாம் அறிந்த எந்த உலோகத்தைவிடவும் பலமடங்கு அதிகமாகஇருக்கும் இல்லையா ? அப்படிப்பட்ட அடர்த்தியான தனிமம்தான் பாறையில் இப்படி அழுத்தமாகப் பதியும். சேற்றில் இரும்பு பதிவதுபோல… ‘
‘ஆம் ‘
‘அப்படிப்பட்ட எந்தத் தனிமமும் இன்றுவரை விண்வெளியிலிருந்து கண்டெடுக்கப்பட்டது இல்லை. பல்லாயிரம் விண்கற்களை சோதித்துவிட்டோம். கோள்களில் இருந்தும் துணைக்கோள்களிலிருந்தும் மாதிரித்தனிமங்கள் சேகரித்திருக்கிறோம். வால்நட்சத்திரங்களில் இருந்துகூட தனிமங்களை சேகரித்து ஆராய்ந்திருக்கிறோம். அப்படி ஒரு அதீத அடர்த்தி கொண்ட தனிமம் இருக்கக் கூடும் என்பதற்கான வாய்ப்பே தென்படவில்லை… ‘
‘எங்காவது இருக்கலாமே… விண்வெளியில் எங்காவது…. ‘
‘இல்லை. மூலக்கூறுகளின் கட்டுமானம் குறித்து இதுவரை நாம் அறிந்த எல்லா அறிவுமே அப்படி ஒரு தனிமம் இருப்பதற்கான வாய்ப்பை நிராகரிக்கின்றன. ஒரு குறிப்பிட்ட காலஇடப் பரிமாணத்தில் மூலக்கூறுகள் செறிவுகொள்வதற்கு ஓர்உச்ச எல்லை கண்டிப்பாக இருக்கிறது. அது முடிவிலியாக இருக்க முடியாது , ஏனெனில் அது பொருண்மை. ஆகவே செறிவுக்கு ஓர் உச்ச எண் இருக்கவேண்டும். இன்று நம்மால் ஓரளவு வகுத்துக் கொள்ளக் கூடியதுதான் அது. ஒருவேளை அது பிரபஞ்சத்தின் ஆதார விதிகளில் ஒன்றாக இருக்கலாம் ….ஆகவே இது சாத்தியமே இல்லை. வேண்டுமானால் நீ இதைவைத்து ஓர் அறிவியல்புனைகதை எழுதிப்பார்க்கலாம் . அதற்குமேல் இதற்கு மதிப்பில்லை. மன்னித்துக்கொள்… ‘
நாராயணன் ‘பரவாயில்லை. எனக்கு ஒரு சந்தேகம் இருந்தது. அதைத் தீர்த்துக்கொண்டதும் நல்லதுதான். ‘என்றார்.
‘தண்ணீர் எங்கே ? ‘
ஓய்வெடுத்த பிறகு இருவரும் கிளம்பினார்கள் ‘டேய் தொரப்பா ‘
‘சாமி! ‘
‘என்னடா பண்ணினாய் இவ்வளவுநேரம் ? ‘
‘சாமி கும்பிட்டேன் சாமி ‘
‘வா,போலாம் ‘
‘போலாம்சாமி . ‘ தொரப்பன் தயங்கினான் ‘சாமி , கல்லன்சாமியைக் கும்பிட்டுட்டுப் போங்க சாமீ ‘
‘நேரமாச்சுடா. இப்ப வெயில் உச்சிக்கு வந்துடும். ‘ என்றார் நாராயணன்
‘என்ன சொல்கிறான் ? ‘
‘கல்லன் சாமியைக் கும்பிட அழைக்கிறான். இவர்களுக்குக் காடெல்லாம் சாமிதான். கல் மண் மரம் எல்லாமே சாமி… ‘
அவர்கள் தொரப்பனை அழைத்துகொண்டு இறங்கிச் சென்றார்கள். வெயில் உச்சியை நோக்கி செல்கையில் கதிர் பட்டபோது கல்லன்சாமியாக நிறுத்தப்பட்டிருந்த கரிய கல் மெல்லிய உள்ளொளி கொள்ள ஆரம்பித்தது. மரகதப்பச்சையும் நீலமும் கலந்த ஆழம் சுடர்கொள்ள அதன் விளிம்புகள் மிகமிகக்கூர்மையாக மின்னின.
***