அன்புடையீர் நல்வரவு ,

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,
தேவாங்கர்களாகிய நாம் அனைவரும் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்து வந்தாலும் தேவாங்கர் என்னும் உணர்வு நம்மை ஓன்று சேர்க்கிறது. மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்ற வாக்கிற்கு இணங்க காலத்திற்கு ஏற்ப நாம் நமது குல நிகழ்வுகளை தகுந்த தொழில்நுட்பத்தை கொண்டு பதிவு செய்வது அவசியமான ஓன்று.

இந்த புதியபக்கம் நமது தேவாங்க சமூக செய்திகள்,சடங்குகள்,வரலாறு & அண்மை நிகழ்ச்சிகளை அறிந்துகொள்ளவும் தேவைப்படும் போது பார்க்கவும் உருவாக்கப் பட்டுள்ளது.
உறவுகள் தங்கள் பகுதியில் உள்ள கோவில்&குல தெய்வம் கோவில்களில் நடைபெறும் திருவிழா நிகழ்ச்சிகள் மற்றும் படங்களை இடம்பெற செய்யவும்.

தங்கள் கருத்துக்கள் இந்த தளத்தை மேன்படுத்த உதவும் ஆகயால் தயவுசெய்து கருத்திடவும் . ( தமிழில் கருத்திட தமிழ் எழுதியை பயன்படுத்தவும்)

நன்றி.

12/22/13

மேஷம் (அசுவினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய) பொதுப்பலன்கள்

மேஷம்
(அசுவினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய)

பொதுப்பலன்கள்
ஆங்கிலப் புதுவருடம் 2014 கன்னி லக்னத்திலும் தனுசுராசியிலும் பிறக்கிறது. மேஷ ராசிக்கு 6வது லக்னத்திலும், 9வது ராசியிலும் பிறக்கிறது. மேஷ ராசிநாதன் செவ்வாய் கன்னி லக்னத்தில் நின்று உங்கள் ராசியை 8-ஆம் பார்வை பார்க்கிறார். 9-க்குடைய குரு 9-ஆம் இடத்தைப் பார்ப்பதுடன், 10-க்குடைய சனியையும் பார்க்கிறார். அத்துடன் உச்ச சனியும் 10-க்குடையவர் 9-ஆம் இடத்தைப் பார்க்கிறார். எனவே தர்மகர்மாதிபதி யோகம் உங்களுக்கு அதி அற்புதமாக இருக்கிறது. அதைவிட சிறப்பு 5-க்குடைய சூரியன் 9-ல் நின்று 9-க்குடைய குருவின் பார்வையையும்; ராசிநாதன் செவ்வாயின் பார்வையையும் பெறுகிறார். மேலும் 2014 என்பது 7- கேதுவின் எண். கேதுவும் ஜென்ம ராசியிலேயே இருக்கிறார். 6, 8, 12- ஆம் இடங்கள் சுத்தமாக இருக்கின்றன. 6-ல் செவ்வாய் இருந்தாலும், அவர் ராசிநாதன் என்ற அடிப்படையில் தோஷமில்லை. 6-க்குடைய கெடுபலன் நடக்காது.

இத்தனை சிறப்பம்சங்கள் உங்கள் ராசிக்கு இருப்பதால் இந்த வருடம் உங்களுக்கு எல்லா வகையிலும் சிறப்பான பலன்கள்தான் நடக்கும் என்று ஆணித்தரமாகச் சொல்லலாம். வேலை, உத்தியோகம் இல்லாதோருக்கு படிப்புக்கேற்ற வேலையும், திருப்தியான ஊதியமும் கிடைக்கும். ஏற்கெனவே வேலையில் இருந்தும் நல்ல வருவாய் இல்லாமலும், வேலைப் பளுவுக்கு ஏற்ற சம்பாத்தியம் இல்லாமலும், உண்மையான உழைப்புக்கேற்ற ஊதியமும் பாராட்டும் இல்லாமலும் மனம் நொந்து மகிழ்ச்சியற்று இருப்போருக்கு, இந்தப் புதுவருடத்தில் பதவி உயர்வும் ஊதிய உயர்வும் திருப்தியான இடமாற்றமும் ஏற்படும்.

அதேபோல சொந்தத் தொழில் துறையில் "நித்திய கண்டம் பூரண ஆயுசு' என்றும், "சாண் ஏற முழம் வழுக்க' என்றும், "வரவு எட்டணா செலவு பத்தாணா' என்றும் இழுத்துப்பறித்து தொழிலை வலுக்கட்டாயமாக ஓட்டியவர்களுக்கு 2014-ல் நல்ல முன்னேற்றமும் திருப்பமும் உண்டாகும். தொழில் உங்களைக் காப்பாற்றவேண்டும் என்பதுதான் முறை! ஆனால் கடந்த காலத்தில் கடன் உடன் வாங்கி, தவணை வாங்கி தொழிலை நீங்கள் காப்பாற்றி வந்தீர்கள். அதாவது வெறுங்கடையாகப் போடாமலும், கதவை அடைக்காமலும், சரக்குளை வாங்கிக்குவித்து கேட்டு வருகிறவர்களுக்கு இல்லை என்று சொல்லாமல் வியாபாரம் செய்தீர்கள். சமயத்தில் லாபம் இல்லாவிட்டாலும் பரவாயில்லை- அசல் தேறினால் போதும் என்றும் சரக்கு விற்றால் போதும் என்றும் நினைத்தீர்கள். அப்படியும் கூட்டம் வரவில்லை. பக்கத்து கடைக்காரர் கூடுதல் விலைக்கு விற்றாலும் அங்கேதான் கூட்டம் கட்டியேறியது. வரும் தை மாதம் முதல் (ஜனவரி 14-ல் இருந்து) பக்கத்துக் கடைக்குப்போன வாடிக்கையாளர்கள் எல்லாம் உங்கள் கடையைத் தேடிவர ஆரம்பித்துவிடுவார்கள். உங்கள் சரக்கு நல்ல சரக்கு- விலையும் குறைவு என்ற உண்மையை உணர்ந்து ஆதரவு தருவார்கள். அதுதான் நேரம் காலம் என்பது! தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது அதுதான்!

இன்னும் சிலர் பழைய தொழிலை அபிவிருத்தி செய்வதோடு, சிலர் புதிய தொழிலையும் தனியாகவோ கூட்டாகவோ ஆரம்பிக்கலாம். உணவு, காப்பி, ஜூஸ் கடை, ஸ்டேஷனரி, நூல், ஜவுளி, இரும்பு யந்திரம், வாகனம், ஜெராக்ஸ், மின்தொடர்பு சாதனம் போன்ற தொழில்கள் எல்லாம் மிகச் சிறப்பாக இருக்கும்! ஜாதகரீதியாக லக்னம் அல்லது ராசியில் ராகு- கேது சம்பந்தம் இருந்தாலும், அல்லது ராகு- கேது தசாபுக்தி நடந்தாலும் "எக்ஸ்போர்ட்ஸ்' தொழிலும் ஆரம்பிக்கலாம்.

7-ல் சனி- ராகு இருப்பது களஸ்திர தோஷம்- மாங்கல்ய தோஷம் என்றாலும், 2014 கிரக சஞ்சாரத்தால் தோஷம் எல்லாம் நீங்கி உடனே திருமணம் கூடிவிடும். அதாவது குரு மிதுனத்தை விட்டு மாறுவதற்குள். (7-க்கு குருபார்வை இருக்கும்போதே) தடைப்பட்ட திருமணம் கூடிவிடும். ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஜாதகரீதியாக தோஷம் இருந்தால் அல்லது 30 வயது தாண்டியும் திருமணம் செட்டாகாமல் இருந்தால், பெண்கள் பார்வதிகலா சுயம்வர ஹோமமும், ஆண்கள் கந்தர்வ ராஜஹோமமும் செய்து கலச அபிஷேகம் செய்துகொள்ளலாம். இதனால் திருமணத் தடை நீங்குவது மட்டுமல்ல; நல்ல மண வாழ்க்கையும் மகிழ்ச்சிகரமான, மனநிறைவான குடும்பமும் அமையும்.

ஏற்கெனவே திருமணமாகிப் பலவருடம் புத்திரபாக்கியம் இல்லாமல் ஏங்கித்தவித்தவர்கள்- புதுவருடத்தில் வாஞ்சாகல்ப கணபதி புத்திர ஹோமமும், சந்தான பரமேசுவர ஹோமமும், சந்தான கோபாலகிருஷ்ண ஹோமமும் செய்து தம்பதிகள் கலச அபிஷேகம் செய்துகொண்டால் உடனே வாரிசு யோகம் அமையும். சேங்காலிபுரம் அல்லது சேந்தமங்கலம் சென்று தத்தாத்ரேயரை வழிபட்டால் ஆண்வாரிசு அமையும். பெண் வாரிசு வேண்டுவோர் திருக்கடையூர் அபிராமியம்மனை வழிபடலாம். 

கடந்த காலத்தில் நோயின் பிடியில் சிக்கித் தவித்து ஒவ்வொரு டாக்டராகப் பார்த்தும் முழுமையான குணம் ஏற்படாதவர்களும்; அலோதிபதி, சித்தா, ஆயுர்வேதம், ஹோமியோபதி, யுனானி, அக்குபஞ்சர் (மருந்தில்லா வைத்தியச் சிகிச்சை) என்று மாறி மாறி ட்ரீட்மெண்ட் எடுத்தும் எந்த முன்னேற்றமும் இல்லாமல்- கிரகக் கோளாறா, செய்வினைக் கோளாறா, குடியிருப்பு வாஸ்துகுற்றமா என்று புலம்பிக் குழம்பியவர்களுக்கும் 2014-ல் உடனடி தீர்வும் நல்ல மாறுதலும் உண்டாகும்.

அதேபோல கடந்த காலத்தில் தவிர்க்க முடியாத செலவினங்களினால் வரவுக்கு மீறிய விரயங்களால் வட்டிக்கு வாங்கி கட்டமுடியாமல் கலங்கித் தவிப்பவர்களுக்கும் நல்லவழி பிறக்கும். வருட லக்னம் 6-ஆவது லக்னம். 6-ஆம் இடம் என்பது எதிரி, கடன், வைத்தியச் செலவு ஆகிய பலனைக் குறிக்கும். அங்கு ராசிநாதன் செவ்வாய் இருப்பதாலும் 6-க்குடைய புதன் 5-க்குடைய சூரியன் சாரம் பெற்று சூரியனோடும் சேர்ந்து, குரு- செவ்வாய்- சனி- ராகு இவர்களால் பார்க்கப்பட்டதாலும் எதிரி, கடன், வைத்தியச் செலவு போன்ற 6-ஆம் இடத்துத் தொல்லைகள் எல்லாம் வேரோடு வீழ்ந்துவிடும்!

13-6-2014-ல் குருப்பெயர்ச்சி. மேஷ ராசிக்கு 3-ல் மறைவாக இருந்த குரு 4-ஆம் இடமான கடகத்துக்கு மாறி அங்கு உச்சபலம் பெறுவார். கடக குரு மேஷ ராசிக்கு 8-ஆம் இடம் விருச்சிகத்தையும், 10-ஆம் இடம் மகரத்தையும், 12-ஆம் இடம் மீனத்தையும் பார்க்கப் போகிறார். அதனால் தொழில் விருத்திக்காகவும், குடும்பத்தில் நல்ல காரியங்களுக்காகவும், சுபச் செலவுகளும் பணப்பற்றாக்குறையை சமாளிக்க கடன்படும் சூழ்நிலையும் ஏற்படும். கடன் வாங்குவது என்பது ஒரு கௌரவப் பிரச்சினைதானே. அதுதான் 8-ஆம் இடத்துப் பலன்! எனக்குத் தெரிந்த கௌரவமான குடும்பத்தைச் சேர்ந்த  ஒருவர் ஒரு அவசரத் தேவைக்காக 20 பவுன் நகையை அடகுவைத்து கடன் வாங்கித் தருமாறு ஒரு நண்பரிடம் சொன்னார். தான் போனால் வெளியில் தெரிந்துவிடும் என்று ஒரு தயக்கம். அந்த நண்பரோ அடகு வைக்கும்போது தனது தேவைக்கும் சேர்த்து அதிகமாக பத்தாயிரம் ரூபாய்க்கு கடன் வாங்கி எடுத்துக்கொண்டார். இரண்டு மாதத்தில் அடகு நகையைத் திருப்ப நகைக்கு சொந்தக்காரர் பணம் கொடுத்தபோதுதான் உண்மை தெரிந்தது. என்ன செய்வது? அவர் வாங்கிய கடனுக்கும் சேர்த்து இவரே கொடுத்தார். இதுவும் 8-ஆம் இடத்துப் பலன்தான்!

21-6-2013-ல் ராகு- கேது பெயர்ச்சி! இதுவரை ஜென்மத்தில் நின்ற கேது 12-ஆம் இடம் மீனத்துக்கும், 7-ல் நின்ற ராகு 6-ஆம் இடம் கன்னிக்கும் மாறுவார்கள். ராகு- கேது பெயர்ச்சி மேஷ ராசிக்கு அற்புதமான- யோகமான பெயர்ச்சி. 6-ம் 12-ம் பாப ஸ்தானங்கள். அங்கு நிற்கும் பாப கிரகங்கள் மேற்படி பாப பலனை அழித்துவிடும். அதாவது வீண்விரயம், அவப்பெயர், நஷ்டம் இவற்றை இல்லாமல் செய்துவிடும். அதேபோல ராகுவும் எதிரி, கடன், வைத்தியச் செலவு, போட்டி, பொறாமைகளையும் இல்லாமல் அழித்துவிடும். அதாவது மைனஸ் ல மைனஸ் = பிளஸ் என்ற கணக்குத்தான். எனவே, குருப்பெயர்ச்சியும் ராகு- கேது பெயர்ச்சியும் மேஷ ராசிக்கு மிகமிக யோகமான பெயர்ச்சியாகும்!

16-12-2014-ல்தான் சனிப்பெயர்ச்சி. மேஷ ராசிக்கு 8-ல் சனி வருவதால் அட்டமச் சனி ஆரம்பம். ஆரம்பத்தில் சனி விசாகம் 4-ல் இருப்பார். விசாகம் குரு நட்சத்திரம். குரு 9-க்குடையவர்; சனி 10-க்குடையவர். மேலும் கடகத்தில் உச்சம் பெறும் குரு- விருச்சிகத்திலுள்ள அட்டமச் சனியைப் பார்க்கப் போவதால் தர்மகர்மாதிபதி யோகம் ஆகும். ஆகவே அட்டமச் சனியைப் பற்றி மேஷ ராசிக்காரர்கள் அதிகம் கவலைப்பட வேண்டாம்; அலட்டிக் கொள்ள வேண்டாம்; கற்பனை பயம் அடையவேண்டாம். அதைப்பற்றி 2015- ஆண்டு பலனில் அல்லது சனிப்பெயர்ச்சி பலனில் விரிவாகக் காண்போம். 

மாதவாரிப் பலன்கள்


ஜனவரி


தொழில் முன்னேற்றம், புது முயற்சிகளில் வெற்றி, கௌரவம், மதிப்பு, மரியாதை இவற்றில் குறைவில்லை. தொடர்ந்து கடன், வட்டிச் செலவு வைத்தியச் செலவு இருக்கத்தான் செய்யும். இருந்தாலும் பொருளாதாரம் தடையில்லாமல் சரளமாகப் புரளும் என்பதால், எல்லாப் பிரச்சினைகளையும் எளிதாகச் சமாளித்துவிடலாம். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தன்வந்தரி மந்திர ஜெபம் செய்யவும்.

பிப்ரவரி


சூரியன் மாத முற்பகுதியில் பத்திலும், பிறகு பதினொன்றிலும் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் மங்கள சுப காரியங்கள் நிறைவேறும். சிலருக்கு வாகன யோகமும் வாகன மாற்றமும் உண்டாகும். மனைவி வழி அல்லது சகோதர வழி உறவினர்களால் சகாயமும் ஆதரவும் உண்டாகும். தேக ஆரோக்கியத்தில் தெளிவும் முன்னேற்றமும் எதிர்பார்க்கலாம். கட்டட வேலை செய்கிறவர்களுக்கு புதிய ஒப்பந்தங்களும் அல்லது வெளிநாட்டு வாய்ப்புகளும் ஏற்படும். சிலருக்கு குடியிருப்பு மாறும் அமைப்பும் உண்டாகும். எதிர்காலத்தைப் பற்றிய தன்னம்பிக்கையும் தைரியமும் உருவாகும். பொருளாதார வளர்ச்சிக்கு சொர்ண ஆகர்ஷண பைரவ மந்திர ஜெபம் செய்யவும். 

மார்ச்


மாத முற்பகுதிவரை சூரியன் கும்பத்தில் நின்று குருவின் பார்வையைப் பெறுகிறார். திரிகோணாதிபதிகள் இருவரும் திரிகோணமாக இருப்பதால் குருவருளும் திருவருளும் ஒருசேர, உங்களுக்கு நற்பலன்கள் உண்டாகும். மனதில் வகுத்த திட்டங்கள் எல்லாம் மனம்போல நிறைவேறும். சுக்கிரனும் கும்பத்தில் இருப்பதால், குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் ஆனந்தமும் உருவாகும். பிள்ளைகள் வகையில் நல்லவை நடக்கும். திருமணத்தடை விலகும். வாரிசு  யோகம் அமையும். சம்பாத்திய யோகமும் சேமிப்பு யோகமும் பெருகும். மாதப் பிற்பகுதியில் சூரியனும், மாதக் கடைசியில் புதனும் மீனத்துக்கு மாறுவதால் காரியத்தடை அல்லது காலதாமதம் ஏற்படாலாம்; கவனம்.

ஏப்ரல்


சூரியனும் புதனும் மீனத்தில் (12-ல்) மறைகிறார்கள். பிள்ளைகள் வகையில் சில தொல்லைகள் ஏற்படலாம். அல்லது கவலை உண்டாகலாம். புதன் நீசம் என்பதால் சத்ருஜெயம், கடன் நிவர்த்தி, நோய், வைத்தியச் செலவு நிவர்த்தி, புதிய வேலை வாய்ப்பு அல்லது தொழில் அபிவிருத்தி முயற்சி, மணமாகாத கன்னிப்பெண்களுக்கு கல்யாண யோகம் உண்டாகும். குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் உண்டாகும். உறவினர்களின் வருகையால் கலகலப்பு ஏற்படும். செவ்வாயும் சனியும் வக்ரம் என்பதால் காரணமில்லலாத விரக்தியும் அல்லது செய்முயற்சிகளில் குறுக்கீடுகளும் தடைகளும் காணப்படும். சனிக்கிழமை காலபைரவருக்கு மிளகு தீபம் ஏற்றவும். செவ்வாய்க்கிழமை முருகனுக்கு செவ்வரளி மாலை சாற்றவும். 

மே


செவ்வாயும் சனியும் தொடர்ந்து வக்ரம் என்றாலும், 11-ஆம் தேதி செவ்வாய் வக்ரநிவர்த்தி அடைவதால் 6-ஆம் இடத்து கெடுதல்கள் குறையும். அதாவது கடன், வட்டி குறையும். வைத்தியச் செலவும் விலகும். நோய் குணமாகும். சத்ரு தொல்லைகளும் விட்டுவிலகிவிடும். 10-க்குடைய சனி தொடர்ந்து வக்ரமாக இருந்தாலும், குருவின் சாரம் பெறுவதால் தொழில் மேன்மையும் வளர்ச்சியும் உண்டாகும். லாபஸ்தானத்தை குரு பார்ப்பதால் லாபமும் சேமிப்பும் எதிர்பார்க்கலாம். 4-ஆம் இடத்துக்கு உச்ச சனி பார்வை கிடைப்பதால், காலி மனை வாங்கிப் போடலாம். ரியல் எஸ்ட்டேட்   தொழிலில் இறங்கலாம். செவலூர் பூமிநாத சுவாமியை வழிபடலாம்.

ஜூன்


இம்மாதம் குரு பெயர்ச்சியும் ராகு- கேது பெயர்ச்சியும் ஏற்படுகிறது!இம்மாதம் 21-ஆம் தேதி (ஆனி-7) ராகு- கேது பெயர்ச்சி ஆகிறது. மீனத்துக்கு கேதுவும் கன்னிக்கு ராகுவும் மாறுவார்கள். ஜூன் 13-ல் குருப்பெயர்ச்சி!

தாய்வழி உறவினர்களால் சிலருக்கு அன்புத் தொல்லைகளும் தவிர்க்க முடியாத சுப விரயச் செலவுகளும் ஏற்படலாம். அல்லது அவர்களுக்காக நீங்கள் பொறுப்பேற்று வாங்கிக் கொடுத்த கடன் பாக்கியை நீங்களே கட்டுகிற சூழ்நிலை ஏற்படலாம். கும்பகோணம்- குடவாசல் அருகில் சேங்காலிபுரம் சென்று தத்தாத்ரேயரையும் கார்த்தவீர்யார்ஜுன யந்திரத்தையும் பூஜித்தால் வரவேண்டிய பணம் வசூலாகும். 

ஜூலை


இந்த மாதம் 14-ஆம் தேதி செவ்வாய் கன்னியிலிருந்து துலா ராசிக்கு மாறுவார். செவ்வாய், சனி சேர்க்கை. இது நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு. குரு 4-ல் உச்சம். பிரார்த்தனை பலத்தால் குடும்பத்தில் ஏற்படும் குழப்பங்களை தவிர்க்கலாம். உடன்பிறந்தோர் வகையில் சிலருக்கு பிரச்சினைகளும் கவலைகளும் ஏற்பட்டு விலகிவிடும். பொருளாதாரத்தில் பிரச்சினை இல்லை. தேவைக்கேற்ற வரவும் வரவுக்கேற்ற செலவும் இருக்கும். விரயஸ்தானத்தில் (12-ல்) கேதுவும் சத்ருஸ்தானத்தில் (6-ல்) ராகுவும் மாறியிருக்கிறார்கள். எனவே பூமி, வீடு சம்பந்தமான சுபமுதலீடு செய்யலாம். அதற்காக கடன் வாங்கலாம். அது சுபக்கடன். உங்கள் கனவுத் திட்டங்கள் நிறைவேற திருவாலி லட்சுமிநரசிம்மரை வழிபடவேண்டும். சீர்காழியில் இருந்து திருநாங்கூர் 9 கிலோமீட்டர். அங்கிருந்து கீழச்சாலை வழியே திருவாலியை அடையலாம். 

ஆகஸ்டு


மேஷ ராசிக்கு 7-ல் செவ்வாயும் சனியும் சேர்க்கை. குரு கடகத்தில் உச்சம். அவரை உச்ச சனி பார்க்கிறார். அதாவது உச்சனை உச்சன் பார்ப்பது நல்லதல்ல. என்றாலும் ராசிநாதனோடு சேர்ந்த சனி- தர்மகர்மாதிபதி பார்வை என்பதால்- விசேஷ நன்மைகளும் பலன்களும் நடக்கும். சிலருக்கு விபரீத ராஜயோக பலன்கள் உண்டாகும். உடல் ஆரோக்கியம், தேக சுகம், தொழில் மேன்மை, பொருளாதார உயர்வு, தேவைகளின் பூர்த்தி, செல்வச் சிறப்பு எல்லாம் உண்டாகும். அதேசமயம் திருமண வயதில் உள்ளவர்களுக்கு காதல் திருமணம், கலப்புத் திருமணம் நடக்கலாம். 

செப்டம்பர்


இம்மாதம் ராசிநாதன் செவ்வாய் 8-ல் விருச்சிக ராசிக்கு மாறினாலும் அது ஆட்சிவீடு என்பதால் மறைவு தோஷம் இல்லை. உங்கள் பெருமை, திறமை எல்லாம் சிறப்பாக இயங்கும். அதேசமயம் எந்த காரியத்தைத் தொட்டாலும் எடுத்தோம் முடித்தோம் என்பதில்லாமல் கடின முயற்சியோடும், கடுமையாகப் பாடுபட்டும்தான் நிறைவேற்ற வேண்டும். அதில் ஒரு திருப்தி என்னவென்றால் முடிவில் நினைத்ததுக்குமேல் ஒருபடி அதிகமாகவே நிறைவேற்றி விடலாம். அதாவது 100-க்கு 110 சதவிகிதம் என்ற கணக்கில் சாதிக்கலாம். மேஷ ராசிக்கு 9-க்குடைய குரு 4-ல் உச்சம் பெற்று 10-ஆம் இடத்தைப் பார்ப்பதும், 10-க்குடைய சனி 9-க்குடைய குருவைப் பார்ப்பதும் தர்மகர்மாதிபதி யோகம் என்பதே காரணம்.

அக்டோபர்


இம்மாதம் கிரகநிலைகள் அனுகூலமாக இருப்பதால் உங்கள் விருப்பம்போல் எல்லாம் நடக்கும். 4-ஆம் இடத்து உச்ச குருவை தனுசு செவ்வாயும் உச்ச சனியும் பார்ப்பது யோகம். ஏற்கெனவே குறிப்பிட்டது போல ராசிநாதன் சம்பந்தத்தால் உச்சனை உச்சன் பார்த்த தோஷம் நீங்கும். தொடுக்கும் காரியங்கள் யாவும் தோல்வியின்றி தொய்வின்றி வெற்றிபெறும். கொடுக்கல்- வாங்கல் சரளமாக இருக்கும். வாக்கு நாணயம் காப்பாற்றப்படும். குடும்பத்துக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்கள் வாங்கலாம். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியான நிகழ்ச்சிகள் இடம்பெறும். 

நவம்பர்


மாத முற்பகுதி வரை சூரியனும் சனியும் 7-ல் இருப்பது குற்றமானாலும், கடகத்தில் வக்ர குரு உச்சம் பெற்று கேந்திரம் பெறுவதால் தோஷம் நிவர்த்தி. குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகளும், கணவன்- மனைவிக்குள் சிறுசிறு கருத்துவேறுபாடுகளும் உருவானாலும், அவை பாதிக்காது. அது ஊடல்தான்; வாடல் இல்லை. நீரடித்து நீர் விலகாது. வள்ளுவர் சொன்னதுபோல "ஊடுதல் காமத்துக்கு இன்பம்.' மனைவியின் பேரில் சிலர் அசையாச் சொத்துகள் வாங்கலாம் அல்லது பொன், பொருள் சேர்க்கை ஏற்படலாம். 

டிசம்பர்


கார்த்திகை 15-ல் (டிசம்பர் 1-ல்) குருப்பெயர்ச்சி. மார்கழி 1-ல் (டிசம்பர் 16-ல்) சனிப்பெயர்ச்சி. 4-ல் உள்ள குரு 5-ஆம் இடத்துக்கு மாறி மேஷ ராசியை பார்க்கிறார். துலாச் சனி மேஷ ராசிக்கு 8-ல் சனி அட்டமச் சனியாக மாறுவார். அரசு வேலையில் இருப்போருக்கு தேவையற்ற இடப்பெயர்ச்சியும் பிரச்சினைகளும் ஏற்படலாம். பொருளாதாரத்தில் அல்லது சொந்தத் தொழில் துறையில் சங்கடங்களும் சஞ்சலங்களும் தோன்றி மறையும். மதுரை அருகில் மாணிக்கவாசகர் பிறந்த ஊரான திருவாதவூர் சிவன் கோவிலில் கால பைரவரும் சனீஸ்வரரும் அருகருகே இருக்கிறார்கள். சனிபகவானின் குருநாதர் பைரவர். இங்குசென்று வழிபடவும். 

அஸ்வினி நட்சத்திரக்காரர்களுக்கு:


2014-ஆம் வருடம் திரிஜென்ம நட்சத்திரத்தில் (மூலம்) பிறப்பதால், செல்வாக்கும் சீரும் சிறப்பும் உண்டாகும். தேக சுகமும் சௌக்கியமும் உண்டாகும். பூர்வ புண்ணிய பாக்கியம் பெருகும். கும்பகோணத்துக்கு முன்னால், சுவாமிமலை போகும் பாதையில் திருவலஞ்சுழி என்னும் தலம் உள்ளது. அங்குள்ள சுவேத விநாயகரை வழிபட, காரியத்தடை விலகி வெற்றியாக கை கூடும்.

பரணி நட்சத்திரக்காரர்களுக்கு:


2014-ஆம் வருடம் 9-ஆவது பரம மைத்ர (அதிநட்பு) தாரையில் உதயமாவதால் பொருளாதார மேம்பாடும், வாழ்க்கையில் பிடிப்பும், ஆர்வமும் அக்கறையும் பொறுப்பும் உடையதாக இருக்கும். மகிழ்ச்சியும் திருப்தியும் உண்டாகும். இந்த ஆண்டில் எதிர்கால இனிய வாழ்க்கைக்கு நல்ல அஸ்திவாரம் அமையும். கும்பகோணம்- சூரியனார் கோவில் அருகில் சுக்கிரன் தலம் கஞ்சனூர் உள்ளது. அங்கு வெள்ளிக்கிழமை சென்று வழிபடவும்.

கார்த்திகை நட்சத்திரக்காரர்களுக்கு:


2014-ஆம் வருடம் மைத்ர (நட்பு) தாரையில் (8-ஆவது) பிறப்பதால், பொதுவாக 2014-ல் உங்களுக்கு தைரியமும் நண்பர்களின் உதவியும் சகோதர ஒற்றுமையும் மனைவி, மக்கள், குடும்பச் சூழ்நிலையில் மனநிறைவும் மகிழ்ச்சியும் உண்டாகும். கும்பகோணம் ஆடுதுறை அருகில் சூரியனார் கோவில் சென்று ஞாயிறன்று வழிபடவும். 

No comments:

Post a Comment