அன்புடையீர் நல்வரவு ,

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,
தேவாங்கர்களாகிய நாம் அனைவரும் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்து வந்தாலும் தேவாங்கர் என்னும் உணர்வு நம்மை ஓன்று சேர்க்கிறது. மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்ற வாக்கிற்கு இணங்க காலத்திற்கு ஏற்ப நாம் நமது குல நிகழ்வுகளை தகுந்த தொழில்நுட்பத்தை கொண்டு பதிவு செய்வது அவசியமான ஓன்று.

இந்த புதியபக்கம் நமது தேவாங்க சமூக செய்திகள்,சடங்குகள்,வரலாறு & அண்மை நிகழ்ச்சிகளை அறிந்துகொள்ளவும் தேவைப்படும் போது பார்க்கவும் உருவாக்கப் பட்டுள்ளது.
உறவுகள் தங்கள் பகுதியில் உள்ள கோவில்&குல தெய்வம் கோவில்களில் நடைபெறும் திருவிழா நிகழ்ச்சிகள் மற்றும் படங்களை இடம்பெற செய்யவும்.

தங்கள் கருத்துக்கள் இந்த தளத்தை மேன்படுத்த உதவும் ஆகயால் தயவுசெய்து கருத்திடவும் . ( தமிழில் கருத்திட தமிழ் எழுதியை பயன்படுத்தவும்)

நன்றி.

4/23/14

பகுதி ஒன்பது : மொழியாச்சொல்[ 1 ]

பகுதி ஒன்பது : மொழியாச்சொல்[ 1 ]
மார்த்திகாவதியின் கொம்பொலி முற்றிலும் வேறுபட்டிருந்தது. முதலில் அது ஒரு கனத்த எருதின் குரல் என்றுதான் விதுரன் நினைத்தான். கொம்பு பிற இடங்களைப்போல வெண்கலத்தால் ஆனதாக இல்லாமல் எருதின் கொம்பினால் ஆனதாகவே இருந்தது. கொம்பை ஊதிய சேவகன் மும்முறை தலைவணங்கி தன் மர மேடையிலிருந்து இறங்கியதும் சபையில் அமைதி பரவியது. வெளியே பெய்து கொண்டிருந்த சிறு மழையின் மெல்லிய ஒலி மட்டும் அந்த விரிந்த மண்டபத்தை நிறைத்திருந்தது.
கூரையை தாங்கி நின்ற கனத்த மரங்களாலான தூண்களில் உயரத்தில் கட்டப்பட்டிருந்த பட்டுப் பாவட்டாக்கள் இளங்காற்றில் யானை மத்தகங்கள் போல அசைந்தன. இருபக்கமும் கட்டப்பட்டிருந்த துணிச்சாமரங்கள் யானையின் காதுகளாக வீசின. ஒவ்வொரு தூணுக்குக் கீழேயும் நின்று சாமரங்களை சரடால் இழுத்துக்கொண்டிருந்த சேவகர்கள் யானைகளை கட்டுப்படுத்திய பாகர்கள் போலிருந்தனர். தொடர்ந்து பெய்த மழையினால் மண் குளிர்ந்திருந்ததனால் உள்ளே அந்தச் சிறிய காற்றே கூதல் போல குளிரைப் பரப்பியது.
நீள்வட்ட வடிவில் பீடங்கள் போடப்பட்டிருந்தன. அவற்றில் முதல் எல்லையில் இருந்து தொடர்ச்சியாக யாதவர்கள் அமர்ந்திருந்தனர். தங்கள் குலங்களின் இலச்சினைகள் பொறிக்கப்பட்ட தலைப்பாகைகளுடன் கழுத்தில் கல்மணி ஆரங்கள் அணிந்து தோலாடைகள் மேல் பளபளக்கும் குத்துவாள்களுடன் அமர்ந்திருந்த அவர்கள் மனக்கிளர்ச்சியுற்றவர்களாக அருகே இருந்தவர்களிடம் பேசியபடியும், உடலை அசைத்தபடியும், அவ்வப்போது சிரித்தபடியும் தெரிந்தனர். அவர்களுக்குப்பின்னால் நின்றிருந்த சேவகர்கள் அவ்வப்போது நறுமணப்பாக்கை அளித்தனர்.
யாதவர் வரிசையின் முடிவில் கம்சன் அமர்ந்திருந்தான். அவன் அமர்ந்திருந்த விதத்தை பிற அனைவருமே ஓரக் கண்ணால் பார்த்துக் கொண்டிருந்தனர். இரு தொடைகளையும் நன்றாக விரித்து பீடத்தின் இருபக்கங்களிலும் தன் கனத்த கைகளை ஊன்றி சிவந்த விழிகளால் அவையை பார்த்துக் கொண்டிருந்தான். சதைமடிந்த கழுத்தில் அவன் அணிந்திருந்த மணிமாலைகளும் சரப்பொளி ஆரங்களும் பதக்கமாலைகளும் ஒன்றுடன் ஒன்று கலந்து சதை திரண்ட மார்பை நிறைத்து உருண்ட வயிற்றின் மீது அமர்ந்திருந்தன. சபையை சுற்றிவந்த அவன் விழிகள் மறு எல்லையில் அவனுக்கு நேர் முன்னால் இருந்த சல்லியனைப் பார்த்ததும் விலகிக் கொண்டன. மீண்டும் சபையைச் சுற்றி சல்லியனை வந்தடைந்தன.
ஷத்ரியர்களின் வரிசையின் இறுதி எல்லையில் அமர்ந்திருந்த சல்லியன் கரிய நெடிய உடலும் நீண்ட கரங்களும் கொண்டிருந்தான். ஒரு கையால் தன் கூரிய மீசையை வருடியபடி அவையில் எவரையும் பார்க்காமல் தொலைவில் ஆடிய பட்டுப்பாவட்டாவை நோக்கி பார்வையை நாட்டியிருந்தான். ஆனால் அவனுடைய மொத்த அகப்பார்வையும் கம்சனைத்தான் பார்த்துக்கொண்டிருக்கின்றது என்று விதுரன் உணர்ந்தான்.
சபையில் ஷத்ரியர் வரிசையில் நாலாவதாக பாண்டு அமர்ந்திருந்தான். இரு கைகளையும் மார்புடன் சேர்த்து கட்டியபடி தலைகுனிந்து தனக்குள் ஆழ்ந்தவனாக அவன் தென்பட்டான். அவ்வப்போது வாயை இறுக்கி பெருமூச்சுவிட்டு மெல்ல அசைந்தான். அவையில் இருந்த எவரும் அவனை முன்னர் பார்த்திருக்கவில்லை. அவன் நுழைந்ததும் அவை முழுக்க ஓர் அசைவு பரவிச் சென்றது. அனைவரும் திரும்பி அவனை நோக்கினர். அத்தனை பேரும் அடைந்த வியப்பே ஒரு மெல்லிய ஒலியாக மாறி எழுந்தது. உடனே அவர்கள் இயல்பு நிலை மீண்டு அசைய அவ்வசைவு இன்னொரு அலையாக பரவிச் சென்றது.
பாண்டு விதுரனின் கையைப் பற்றியபடி வெண்பனி போன்ற தலைமுடி காதுகளில் சரிய குனிந்து தரையை நோக்கியபடி நடந்தான். அவ்வறையில் பரவியிருந்த ஒளி அவள் கண்களை மறைத்தது. தரையின் மரப்பலகைகள் எழுந்து தெரிவது போல அவனுக்குத் தோன்றியது. பலமுறை காலை தவறாக எடுத்துவைத்து தடுமாறினான். விதுரன் அவன் தோளைத் தொட்டபடி “இளவரசே, சமநிலம்தான். நிமிர்ந்து செல்லுங்கள். பலபத்ரர் நிற்பதற்கு முன்னாலுள்ள இருக்கையில் அமருங்கள்” என்றான். “பலபத்ரர் எங்கே?” என்றான் பாண்டு. “நான் சொல்கிறேன். நீங்கள் தொடர்ந்து செல்லுங்கள்” என்று விதுரன் மிகமெல்லிய ஒலியில் கூறினான்.
பலபத்ரர் பாண்டுவைக் கண்டதும் சபை நடுவே இறங்கி பதறியபடி மார்புச்சதைகள் குலுங்க ஓடிவந்து அவனை கைப்பிடித்து அழைத்துச்சென்று பீடத்தில் அமரச் செய்தார். விதுரனின் முழுக்குருதியும் முகத்தில் பாய்ந்தேறி காது மடல்களும் இமைகளும் வெம்மை கொண்டன. விதுரனை நேக்கிய பலபத்ரர் அவனுடைய கடும் சினத்தை புரிந்து கொண்டாரென்றாலும் அவர் செய்தது என்ன என்பதை உணரவில்லை. “அமைச்சரே, அரசரின் மருத்துவரை இருக்கைக்குப் பின்னாலேயே நிற்கும்படிச் சொன்னேன்” என்று பதற்றத்துடன் சொன்னார்.
விதுரன் மூச்சை இழுத்து சீராக விட்டு தன்னுடைய சினத்தை ஆற்றிக் கொண்டான். பலபத்ரர் குனிந்து பாண்டுவிடம் “இளவரசே, என்ன தேவை என்றாலும் வலது பக்கம் திரும்பிப் பாருங்கள். அந்தத் தூணருகே நான் நின்றிருப்பேன்” என்றார். பாண்டு நிமிர்ந்து இளநகையுடன் விதுரனைப் பார்த்தான். அவனுடைய இமைகள் கொக்கிறகுகள் போல இருந்தன. கீழே விழிகள் குருதிச் சிவப்புக்குள் இரு சிவந்த பாம்பு முட்டைகள் போல அசைந்தன.
விதுரன் பலபத்ரரிடம் “நான் பார்த்துக் கொள்கிறேன்” என்றான். “இல்லை அமைச்சரே, இளவரசர் நேற்றே உடல்நலமில்லாமல்…” என்று பலபத்ரர் ஆரம்பித்தார். அவரது உடல் பதற்றத்தில் வியர்த்திருந்தது. விதுரன் அவரது பழுத்த முதிய விழிகளையும் வியர்வை பரவிய மோவாயையும் பார்த்தான். தன்னுள் ஊறிய வெறுப்பை பல்லைக் கடித்து அடக்கியபடி “நான் இளவரசரின் அருகிலேயே இருப்பேன் அமைச்சரே. நீங்கள் மண்டபத்தை விட்டு வெளியே செல்லுங்கள்” என்றான்.
பலபத்ரர் பாண்டுவைப் பார்த்துவிட்டு “இளவரசருக்குத் தேவையான தலையணைகளை… ” என்று தொடங்கவும் விதுரன் பட்டைக் கிழிக்கும் குறுவாள் போன்ற குரலில் “கிழட்டு மூடா, இக்கணம் நீ வெளியே செல்லாவிட்டால் நாளை கழுவில் ஏற்றப்படுவாய்” என்றான். பலபத்ரர் அச்சத்தில் உறைந்து திறந்த வாயுடன் அப்படியே நின்றார் “ம்” என்றான் விதுரன். பலபத்ரர் எலிபோல பதறி ஓடி எதிர்வாயில்வழியாக வெளியேறினார்.
விதுரன் “இயல்பாகச் சாய்ந்து கொள்ளுங்கள் இளவரசே… எவர் விழிகளையும் பார்க்க வேண்டாம்” என்றான். பாண்டு “அவர் பீஷ்மரின் தோழர். நீ அவரை அப்படி நடத்தியிருக்கக் கூடாது” என்றான். “சொல்லித் தெரிய வேண்டிய இடத்தில் அமைச்சன் இருக்கலாகாது” என்றான் விதுரன். “விதுரா, அவர்…” என்று பாண்டு சொல்லத் தொடங்க “அது முடிந்துவிட்டது. நான் என் முடிவுகளை விவாதிப்பதில்லை” என்றான் விதுரன்.
“எது வேண்டுமானாலும் செய். நான் சொன்னதை நீ எந்தக் காலத்தில் கேட்டிருக்கிறாய்?” என்றான் பாண்டு. விதுரன் தலைதூக்கி ஷத்ரியர் விழிகளைப் பார்த்தான். எவரும் நேரடியாக விழிதிருப்பி பாண்டுவை பார்க்கவில்லை. ஆனால் அவர்களின் கண்கள் சுழன்று சுழன்று வந்து பாண்டுவையே தொட்டு மீண்டன. கம்சன் ஒரே ஒரு முறை நேருக்கு நேராக பாண்டுவைப் பார்த்தான். இகழ்ச்சியுடன் வாய் சற்றே திறந்திருந்தது. அப்போது குந்திபோஜனின் நிமித்திகன் உள்ளே வர அந்தத் திறந்தவாயுடனேயே பார்வையை அப்பக்கமாக திருப்பிக்கொண்டான். பிறகு அவன் பாண்டுவை பார்க்கவேயில்லை. சல்லியன் பாண்டுவை பார்த்தானா என்பதையே விதுரனால் கவனிக்க முடியவில்லை. ஆனால் பார்க்காமலிருக்க மாட்டான் என்று விதுரன் அறிந்திருந்தான்.
“அவன்தான் சல்லியனா?” என்று பாண்டு கேட்டான். விதுரன் ”ஆம்” என்றான். “அழகன்!” என்றான் பாண்டு. விதுரன் பதில் கூறவில்லை. “அவனுக்குத்தான் குந்தி மாலையிடப் போகிறாள்.” விதுரன் பேசாமல் நின்றான். “அப்படி அவள் நினைத்தால் அதுவே சிறந்த முடிவாக இருக்கும்” என்றான் பாண்டு. அவன் தன்னைச் சீண்டுவதற்காகவே அப்படிச் சொல்கிறான் என்பதை விதுரன் உணர்ந்திருந்தான். அவன் ஒன்றும் சொல்லவில்லை.
VENMURASU_EPi_95_
ஓவியம்: ஷண்முகவேல்
[பெரிதுபடுத்த படத்தின்மீது சொடுக்கவும்]
காலையில் பாண்டுவின் சேவகன் வந்து அவன் படுக்கைவிட்டு எழ மறுப்பதாகச் சொன்னபோது விதுரன் திகைத்து “இன்னுமா எழவில்லை?” என்றான். “அவர் உடல்நிலை நலமாக உள்ளதல்லவா?” சேவகன் “உடலுக்கு ஒன்றுமில்லை” என்றான். விதுரன் பார்த்தான். “அவருக்கு தங்களிடம் ஏதாவது பேசுவதற்கு இருக்கலாம்” என்றான் சேவகன். விதுரன் எழுந்து சால்வையைச் சுற்றியபடி நடந்து பாண்டுவின் படுக்கையறைக்குச் சென்றான்.
மஞ்சத்தில் பாண்டு ஒருக்களித்து சாளரத்தைப் பார்த்தபடி படுத்திருந்தான். சாளரத்தின் திறந்த வாயில் வழியாக அப்பால் நின்றிருந்த சந்தன மரம் காற்றிலாடுவது தெரிந்து கொண்டிருந்தது. விதுரன் உள்ளே வந்ததை அவன் காலடியோசையால் உணர்ந்ததை தோள் குறுகல் காட்டியது. “இளவரசே என்ன இது? தாங்கள் அணியும் ஆடையும் ஏற்க வேண்டுமல்லவா?” என்று இயல்பாகத் தொடங்கினான் விதுரன்.
கலங்கிய விழிகளுடன் திரும்பி “நான் உன்னிடம் நேற்று காலை என்ன சொன்னேன்?” என்று பாண்டு கேட்டான். “நேற்றா? காலையில் உங்களுக்கு உடல்வெப்பம் இருந்தது.” பாண்டு “ஆம் அதை நானும் அறிவேன். ஆனால் என் வெம்மையில் என் அறைக்கு வந்த உன்னிடம் நான் ஏதோ சொன்னேன். அது என்ன?” என்றான். விதுரன் “அதை நான் சரிவர நினைவுகூரவில்லை இளவரசே” என்றான்.
“தம்பி நீ ஒன்றை நினைவுகூரவில்லை என்று சொன்னால் அது நினைவுகூர விரும்பவில்லை என்றே பொருள்படும்” என்றான் பாண்டு. “ஆம். அவ்வாறுதான்” என்று விதுரன் சொன்னான். “நான் சொன்னவை என்ன என்று எனக்குத் தெரியும். சரியான சொற்களில் சொன்னேனா என்றுதான் உன்னிடம் கேட்டுத்தெரிந்து கொள்ள விரும்பினேன்” என்றான் பாண்டு.
‘‘நாம் அதை பிறகு பேசுவோம். தாங்கள் மணநிகழ்வுக்குக் கிளம்பவேண்டும்” என்றான் விதுரன். “தம்பி இது இரண்டாவது சுயம்வரம்” என்றான் பாண்டு. விதுரன் அவன் சொல்ல வருவது அதுதான் என நன்கறிந்திருந்தபோதிலும் உள்ளம் பதறுவதை உணர்ந்தான். பாண்டு “இதேபோல கங்கையில் படகில் சென்று பிதாமகர் என் அன்னையரை கவர்ந்து வந்தார்” என்றான். “ஆம். அது அனைவரும் அறிந்த கதை” என்று விதுரன் கூறினான். “தம்பி நீ பேரறிஞன். மாபெரும் மதியூகி. உலகில் அனைவரையுமே உன்னால் வெல்ல முடியும். ஆனால் பேரறிஞர்களும் மதியூகிகளும் தோற்கும் ஓர் இடம் உண்டு.”
விதுரன் “நான் விவாதிக்க விரும்பவில்லை. காசி நாட்டு இளவரசியரை பிதாமகர் பீஷ்மர் கவர்ந்து வந்தது சரியானதென்றே நான் இன்றும் நினைக்கிறேன். அது அஸ்தினபுரியை காத்தது. அதற்காக அஸ்தினபுரி மீது அம்பாதேவியின் தீச்சொல் விழுந்தது என்கிறார்கள். ஆனால் அவ்வண்ணம் நோக்கினால் தீச்சொல்விழாத தேசம் என்ற ஒன்று இப்புவியில் இருக்க இயலாது” என்றான்.
கசப்பை உச்சமாக வெளிப்படுத்தும் சிரிப்பு ஒன்றை பாண்டு அடைந்திருந்தான் என்று விதுரன் அறிவான். பாண்டு சிரித்து “நான் ஒரு அரசியல் மதியூகியாக பிறக்காமலிருக்க முற்பிறவியில் தவம் செய்திருக்கிறேன்” என்றான். “இளவரசே, தாங்கள் இந்த சுயம்வரத்தில் கலந்துகொள்வதாக முடிவெடுத்துதான் இத்தனை தொலைவு வந்திருக்கிறோம். அது நம் பிதாமகரின் ஆணை” என்று விதுரன் சொன்னான்.
“பிதாமகர் எடுக்கும் இரண்டாவது பெரும் பிழைமுடிவு இது. அன்று கங்கையை சிறை கொண்டு வந்தார். இப்போது யமுனையை சிறை கொண்டு செல்ல வந்திருக்கிறார்” பாண்டு சொன்னான். “என் தந்தை பிதாமகர் செய்த பிழையின் விஷத்தை அன்று உண்டார். இன்று எனக்காக அதை கிண்ணத்தில் ஊற்றுகிறார்” பல்லைக்கடித்து “உயிருடனும் உணர்வுடனும் சதுரங்கக் காயாக இருக்க இயலாது” என்றான்.
விதுரன் “உங்கள் ஐயங்களுக்கு நான் விளக்கமளிக்க இயலாது இளவரசே… நான் இந்த ஆட்டத்தை ஒருங்கமைக்கவில்லை. இதை பிதாமகர் ஏன் முன்னெடுக்கிறார் என்றும் அறியேன். ஆனால் இது எப்படி முடியும் என்று என்னால் உறுதியாகக் கூறமுடியும்” என்றான். பாண்டு ஏறிட்டுப்பார்த்தான். “இம்முறை பிதாமகரின் கரங்களை படைகள் மீறிச் செல்லவிருக்கின்றன.” பாண்டுவின் பார்வை கூர்மைகொண்டது.
பாண்டுவின் பார்வையை நோக்கியபடி விதுரன் கூறினான் “அஸ்தினபுரிக்கு மருகியாக மகளைத்தர இயலுமா என்று கேட்டு பலபத்ரரின் தூது வந்தபோது குந்திபோஜன் வேறு எந்த முடிவை எடுத்திருக்க இயலும்? பீஷ்மர் காசிநாட்டு இளவரசியை கவர்ந்து சென்ற கதையை பாரதவர்ஷத்தில் அனைவரும் அறிவர். மார்த்திகாவதியின் இளவரசி மாபெரும் மதியூகி என்று புகழ்பெற்றிருக்கிறாள். அவளுக்கும் என்ன நிகழும் என்று தெரியும். ஆகவேதான் இந்த சுயம்வர நாடகத்தை முன்வைத்திருக்கிறார்கள்.”
பாண்டு சில கணங்கள் விதுரனின் விழிகளை நோக்கியபின் “யார் அவன்?” என்றான். “மாத்ர நாட்டு இளவரசர் சல்லியன்” என்றான் விதுரன். பாண்டு புன்னகையுடன் “அவர் வந்திருக்கிறாரா என்ன? அவரைப்பற்றி சேடியர் கூறி கேள்விப்பட்டிருக்கிறேன்” என்றான். விதுரன் “ஆம். அழகர் என்றும் வீரர் என்றும் புகழ் பெற்றிருக்கிறார். அவரை மார்த்திகாவதியின் இளவரசிக்கு முன்னரே தெரியும் என்றும் சொன்னார்கள்” என்றான்.
பாண்டு சிரித்தபடி எழுந்தான். “ஆம் அதுவே இந்த நாடகத்தின் மிகச்சிறந்த முடிவாக இருக்க முடியும். அழகிய மதியூகியான இளவரசி. அழகிய வீரனாகிய இளவரசனுக்கே மனைவியாக வேண்டும். காட்டில் ஒரு மான் தன் இணையைத் தேடிக்கொள்வது போல இயல்பாக அது நிகழவேண்டும.” “ஆம் இளவரசே, இது நம் பிதாமகரின் ஆணை… நாம் அதன் பொருட்டு வந்திருக்கிறோம். இந்த நாடகத்தை நாமும் சிறப்புற ஆடிவிட்டு மீள்வோம்.”
பாண்டு கைகளைத் தூக்கி சோம்பல் முறித்தபடி “பெரிய எடையொன்றை உடலில் இருந்து இறக்கி விட்டது போலிருக்கிறது விதுரா… காலையில் என்னை நான் செயலற்ற பாவையாக, பிறர் விரலசைவுக்கு ஆடும் இழிமகனாக உணர்ந்தேன். இப்போது இந்த விளையாட்டு என் வாழ்வின் சுவைமிக்க நிகழ்வுகளில் ஒன்று என்று தோன்றுகிறது” என்றான். “நான் இன்று ஒரு பார்வையாளன் மட்டுமே, இல்லையா?” உரக்கச்சிரித்து “மஞ்சளரிசியையும் மலரையும் ஓங்கித்தூவ என் கைகளுக்கு விசையிருக்குமென நினைக்கிறேன்.”
அவை காத்திருந்தது. எத்தனை சுயம்வரங்கள். ஒவ்வொரு நிகழ்வுக்குப்பின்னும் பாரதவர்ஷத்தின் அரசியல் விளையாட்டு மாறுபடுகிறது. இவை ஒவ்வொன்றும் சதுரங்கத்தின் ஒரு புதிர்நிலைகள். விதுரன் அப்பால் அமர்ந்திருக்கும் பீஷ்மரை ஒரு கணம் நோக்கி மீண்டான். பாண்டு தலையை மேலே தூக்கினான். விதுரன் குனிந்தான். “இந்த நாடகத்தில் தலைவன் சல்லியன் என்றால் நான் விதூஷகன். என் முன்னால் அமர்ந்திருக்கும் இவன் யார்?” என்றான்.
“இளவரசே இவர் மதுராபுரியின் இளவரசர். பெயர் கம்சன்” என்றான் விதுரன். “இவன் ஐயமே இல்லாதவனாக இருக்கிறானே…” விதுரன் மெல்ல நகைத்து “அவனும் ஐயமேயின்றி அமர்ந்திருக்கும்படி செய்யப்பட்டிருக்கிறான்.” பாண்டு சிரித்தபடி “விதுரா, இந்த அவையில் அத்தனை பேரின் ஐயமும் அப்படி நீக்கப்பட்டிருக்குமா என்ன?” என்றான். விதுரன் புன்னகை செய்தான். அவர்கள் சிரிப்பதை அவையே திரும்பிப் பார்த்தது. பாண்டு உள்ளே நுழைந்தபோது பலபத்ரரின் மூடத்தனத்தால் உருவான ஏளனம் அவர்களின் இயல்பான சிரிப்பால் சற்று விலகிவிட்டிருப்பதை விதுரன் கண்டான்.
மங்கல இசையும் வாழ்த்தொலிகளும் முழங்க முழுதணிக்கோலத்தில் வெண்குடையும் கவரியும் சூடி வந்த குந்திபோஜனும் அரசி தேவவதியும் வணங்கியபடி அவைநுழைந்து சிம்மாசனத்தில் அமர்ந்தனர். குந்திபோஜனின் விழிகள் முதலிலேயே பீஷ்மரை தேடிக் கண்டு கொண்டன. உடனே அவர் உடலில் பணிவைக்காட்டும் ஓர் அசைவு நிகழ்ந்தது. அதைக் கண்டதும் சல்லியன் இயல்பாகத் திரும்பி பீஷ்மரைப் பார்த்தான். உடனே பாண்டுவை நோக்கிய பின் அரைக்கணத்தில் திரும்பிக் கொண்டான்.
குந்திபோஜனின் அரியணைக்குப் பின்னால் வீரன் அவருக்கு வெண்கொற்றக்குடை பிடித்தபடி நின்றான். இருபக்கமும் தாசிகள் கவரி வீசினர். அவருடைய அமைச்சர் ரிஷபர் கையில் செங்கோலை ஏந்தி அவர் முன்வந்து அருகே நின்றார். ஆனால் குந்திபோஜன் தன் உடல்குறுகல் வழியாகவே அவையனைத்தையும் பொருளற்றவையாக ஆக்கிவிட்டிருந்தார். ஆனால் அங்கு அமர்ந்திருந்தவர்களில் சல்லியனைத்தவிர பிறர் அதை உணர்ந்ததாகத் தெரியவில்லை. சல்லியனின் கைகளில் தோளில் தொடைகளில் எங்கும் ஏளனம் வழிந்தது.
விதுரன் திரும்பி பீஷ்மரைப் பார்த்தான். அவர் அப்பால் குலமூதாதையர் அமர்ந்திருந்த வரிசையின் முகப்பில் தன் பீடத்தில் நிமிர்ந்த முதுகுடன் இறுக்கமான கழுத்துடன் அசையாத பார்வையுடன் அமர்ந்திருந்தார். கோயிலில் அமர்ந்திருக்கும் சிலைபோல. விதுரன் அந்தப் புதுச்சூழலில் அவரைப் பார்க்கும் போது அவருடைய அந்த நிமிர்வு மிக வேறுபட்டுத்தெரிவதாக எண்ணிக்கொண்டான். எதிரே பெருகிவரும் நதியொன்றுக்கு நெஞ்சு கொடுத்து நிற்பது போல.
குந்திபோஜனின் அரச நிமித்திகன் மேடை ஏறி தன் கோலைத்தூக்கி அங்கு வந்திருக்கும் அனைவரையும் வரவேற்று சுயம்வர அறிவிப்பை அளித்தான். மங்கல இசையும் வேதியரின் மறைமுழக்கமும் சூழ குந்திபோஜன் எழுந்து சபையை வணங்கியபின் கையில் செங்கோலுடன் சிம்மாசனத்தில் அமர்ந்தார். வெளியே அரசப் பெருமுரசு ஒலித்தது. கம்சன் தன் பெரிய தொடைகளை கைகளால் வருடியபடி பெருமூச்சு விட்டான். அவன் பார்வை சல்லியனைத் தொட்டு மீண்டதும் கை மீசையை நீவி பின்னால் ஒதுக்கியது.
நிமித்திகன் பழைய கொம்புவாத்தியம் போல தடையின்றி ஒலித்த குரலில் அறிவித்தான். “சந்திரக்குலத்தோன்றல் யதுவின் குருதிவழிவந்த யாதவ குலத்து நூற்றெட்டு பெருங்குடிகளில் முதன்மையானதான விருஷ்ணி குலத்தின் தலைவர் சூரசேனரின் புதல்வியும் மார்த்திகாவதியின் தலைவரும் போஜர் குலத்துச் செம்மலுமான குந்திபோஜரின் அறப்புதல்வியுமான குந்திதேவி என்னும் பிருதைதேவியாரின் திருமணத் தன்னேற்பு பெருமங்கலம் இங்கு இந்த அவையில் நிகழவிருக்கிறது. ஆநிரைகளின் முறைமைபோல மூதன்னையை முறைவழியாகக் கொண்டது யாதவப் பெருங்குலம். இங்கே பெண்ணே குருதித் தோன்றல். கருப்பையே குலத்தின் ஊற்று. ஆகவே இளவரசியின் தேர்வும் முடிவும்தான் முடிவானது. அதற்கு அப்பால் மூத்தோர் சொல்லோ தெய்வ ஆணையோகூட செல்ல முடியாதென்றறிக!”
நிமித்திகன் தொடர்ந்தான் “இளவரசி பிருதை அரசுசூழ்தலை முறைப்படி ஏழு நல்லாசிரியர்களிடமிருந்து கற்றுத் தேர்ந்தவர். மார்த்திகாவதியில் தங்கித் தவமியற்றிய முதுபெரும் முனிவர் துர்வாசரின் அணுக்கமாணவியாக அமர்ந்து அறமும் பொருளும் மெய்யறிவும் ஊழ்கமும் கற்றவர். ஐவகைப் படைக்கலங்களையும் இருகைகளாலும் ஆற்றும் வல்லமை கொண்டவர். இந்த மார்த்திகாவதி நகரும் அரசும் இளவரசி குந்திக்கு உரியவை என்றறிக!”
நிமித்திகன் கைதூக்கியதும் சூதர்கள் மங்கலவாத்தியங்களை ஒலித்தனர். நிமித்திகன் உரத்தகுரலில் “மார்த்திகாவதியின் இளவரசி மன்று சூழ்கிறார்” என்று அறிவித்தான். அவையின் சூழ்வட்டத்திலும் வெளியே களமுற்றத்திலும் கூடிநின்ற குடிமக்கள் உரத்த குரலில் வாழ்த்தொலி எழுப்பினர். பெருமுரசும் கொம்பும் சங்கும் சல்லரியும் மணியும் மங்கலச் சிலம்பும் ஒலித்தன. முதலில் நிறைகுடம் ஏந்தி வேதம் பாடி நீர் தெளித்த முதுவைதிகர் எழுவர் வந்தனர். மலரும் தீபமும் மஞ்சளும் பொன்னும் மங்கலப்பட்டும் தானியங்களும் நிறைகுடமும் என்று சப்தமங்கலங்களை ஏந்திய அரண்மனை மகளிர் தொடர்ந்து வந்தனர்.
மங்கல வாத்தியங்களை இசைத்தபடி சூதர்கள் அவர்களுக்குப்பின்னால் வர குந்திதேவி இருபக்கமும் இருசேடியர் அணுக்கத்தாலமும் மங்கத்தாலமும் ஏந்தி வர பின்னால் வந்த சேடி வெண்குடை பிடித்திருக்க கவரி வீசிய சேடியர் மருங்குசூழ உள்ளே வந்தாள்.

4/22/14

பகுதி எட்டு : பால்வழி[ 5 ]

பகுதி எட்டு : பால்வழி[ 5 ]
மாளிகையை அடைந்து, நீராடி உடைமாற்றி வந்து முகமண்டபத்தில் விதுரன் அமர்ந்ததும், காத்திருந்த ஒற்றர்கள் அவனுக்கு செய்திகளைச் சொல்லத் தொடங்கினர். யாதவ குலத்தைச் சேர்ந்த பதினெட்டு குடித்தலைவர்கள் சுயம்வரத்துக்கு வந்திருப்பதாகவும் ஷத்ரியர்கள் எட்டுபேர் வந்திருப்பதாகவும் ஒற்றன் மித்ரன் சொன்னான். ஷத்ரியர்களில் மாத்ர நாட்டின் இளவரசன் சல்லியன் மாத்திரமே முக்கியமானவன் என்றபோது அவன் கண்களின் வளைக்குள் அசையும் எலியின் அசைவுபோல ஒன்று நிகழந்ததை விதுரன் கண்டான். “உம்” என்றான். “சல்லியரை மார்த்திகாவதியின் இளவரசி முன்னரே அறிவாள் என்கிறார்கள்” என்றான் மித்ரன்.
அச்செய்தியைத்தான் எதிர்பார்த்திருந்தேனா என்று அதைக்கேட்டு அதிர்ந்த அவனிடம் அவனே கேட்டுக்கொண்டான். அந்த அகநகர்வை கண்கள் வெளிக்காட்டாமல் “அச்செய்தியை யார் சொல்கிறார்கள்?” என்றான் விதுரன். “அது முழுக்க முழுக்க மாத்ர நாட்டிலிருந்து பரவும் செய்தி” என்று மித்ரன் சொன்னான். “அவர்களுடன் வந்த வீரர்கள் சொல்கிறார்கள். உண்மையில் சல்லியர் வந்ததும் மார்த்திகாவதியே குழப்பமடைந்துவிட்டது. அவரை அவர்கள் எண்ணியிருக்கவில்லை. அவர் ஏன் வந்திருக்கிறார் என்றுகூட ரிஷபர் கேட்டிருக்கிறார்…”
“உம்” என்றான் விதுரன். “மார்த்திகாவதியின் மக்களைப்பொறுத்தவரை சல்லியரைத்தவிர இன்னொருவரை குந்திதேவி ஏற்கவே மாட்டாள் என நினைக்கிறார்கள். மாத்ரநாட்டுடன் மணவுறவு உறுதியாகிவிட்டதென்றே பேசிக்கொண்டிருக்கிறார்கள். சல்லியரைப் பார்க்க அவரது அரண்மனைக்கு முன் மார்த்திகாவதியின் மக்கள் கூடி நிற்கிறார்கள். அவரது வில்திறனையும் அழகையும் ஆண்மையையும் புகழ்ந்து பாடும் சூதர்கள் முன் பெருங்கூட்டம் கூடுகிறது. அத்துடன்…” விதுரன் சொல் என ஏறிட்டுநோக்கியதும் “நம் இளவரசர் வருவார் என எவரும் எதிர்பார்த்திருக்கவில்லை. அஸ்தினபுரியில் இருந்து உண்மையில்…”
விதுரன் விழி தூக்கியதும் ஒற்றன் மித்ரன் தலைவணங்கி பின்னகர்ந்தான். அவனை சிறுதலையசைப்பால் அனுப்பிவிட்டு விதுரன் கைகளால் பீடத்தின் விளிம்பில் தாளம் போட்டபடி அமர்ந்திருந்தான். அடுத்த ஒற்றன் சம்பிரதீபன் வந்து வணங்கியதைக் கண்டு ஏறிட்டுப் பார்த்தான். மதுராபுரியில் இருந்து வந்த சம்பிரதீபன் “மதுராபுரி இளவரசர் கம்சர் இன்று மதியம் வருவார் என்று எதிர்பார்க்கிறார்கள்” என்றான்.
விதுரன் அவன் மேலே சொல்லட்டும் என்று அவனைப்பாராமல் காத்திருந்தான். “மதுராபுரியின் இளவரசர் குந்திதேவியை மணக்கவேண்டும் என இங்குள்ள மூத்த யாதவர்கள் விரும்புகிறார்கள். யாதவகுலம் ஒருங்கிணைய அதுவே வழி என எண்ணுகிறார்கள். கம்சருக்கு மார்த்திகாவதியிலிருந்து தூது சென்றிருப்பதாக அரண்மனையில் ஒரு செய்தி உலவுகிறது.”
விதுரன் “யாருடைய தூது?” என்றான். “மார்த்திகாவதியின் இளவரசியின் தூது என்று கூறுகிறார்கள்” என்றான் சம்பிரதீபன். “அப்படியா?” என கேட்ட கணமே தன்னை அறியாமல் விதுரன் புன்னகை செய்துவிட்டான். “ஆம் அமைச்சரே. மார்த்திகாவதியில் இருந்து இளவரசி பிருதையின் அந்தரங்கத் தோழியே மதுராபுரிக்குத் தூதுசென்று கம்சரிடம் பேசியதாகவும் அதனாலேயே அவர் விலைமதிப்புள்ள மணிகளும் மங்கலப்பொருட்களுமாக கிளம்பி வருவதாகவும் சொல்கிறார்கள். உண்மையில் மணம்கொள்ளல் முன்னரே முடிந்துவிட்டதென்றும், இது ஒரு பாவனையே என்றும்கூட யாதவர் பேசிக்கொள்கிறார்கள்.”
“அவர்களுக்கு சல்லியர் வந்திருப்பது தெரியாதா என்ன?” என்றான் விதுரன். “சல்லியர் வந்தது நேற்றுமாலை. இன்றுகாலை நாம் வந்திருக்கிறோம். நாமனைவரையும் ஏற்புகொள்ளச் செய்வதற்காகவே மணநிகழவை தன்னேற்பு முறையாக அமைக்க குந்திபோஜர் முடிவுசெய்திருக்கிறார் என்கிறார்கள்.” சம்பிரதீபன் தணிந்த குரலில் “நம் இளவரசர் நோயுற்றவர் என அனைவரும் அறிவர். வேடிக்கையாகத்தான் அனைவரும் நம்மைப்பற்றிப் பேசிக்கொள்கிறார்கள்” என்றான்.
விதுரன் தலையசைத்ததும் அவன் வணங்கி விலகினான். உளவுச்செய்திகளை விதுரன் எப்போதும் தன் உய்த்துணர்தல்கள் சரியா என ஒப்புநோக்கவே கேட்பது வழக்கம். ஒவ்வொரு உளவுச்செய்திக்குப்பின்னரும் அவன் நிறைவுகொள்வதுண்டு. ஆகவேதான் ஒற்றர்கூற்றுகளை எப்போதும் ஆர்வத்துடன் கேட்கமுன்வருவான். ஆனால் முதல்முறையாக அவை சோர்வை அளித்தன. அவன் எண்ணியவற்றையே அவை சொன்னதனால்தான் அந்தச் சோர்வு வருகிறது என்பதையும் அவன் கவனித்தான்.
இளமழை மீண்டும் தொடங்கியது. வாசல் வழியாக வீசிய சாரல் சிறிய மரவுரிச் சதுரம் போல மண்டபத்தில் கல்தரையில் ஈரத்தைப்படியச் செய்தது. இலைகளில் மழை பெய்யும் ஒலிக்குப்பிறகு கூரை விளிம்புகளிலிருந்து நீர் சொட்டும் ஒலி தொடங்கியது. அதுவரை மூடிய வானம் அறைக்குள் பரவவிட்டிருந்த இருளை மழைநீரின் பளிங்குப் பிரதிபலிப்பு சற்றே அகற்றியது போலத் தோன்றியது.
விதுரன் எழுந்து சென்று முற்றத்தில் நின்ற அலங்காரப் பல்லக்கையும் தேர்களையும் பார்த்துக் கொண்டு நின்றான். அவற்றின் கூரை வளைவுகளில் நீர்த் துளிகள் எண்ணெய் கொதிப்பது போல தெறித்துக் கொண்டிருந்தன. மேலும் வீச்சுடன் பெய்யப்போவது போல வீசிய குளிர்காற்றில் மழை அப்படியே எழுந்து பேருருவத் திரைச்சீலை போல நெளிந்தாடி பின்னர் வடக்குநோக்கி பறந்து விலகிச் சென்றது.
ஈரமான வானில் காகங்கள் கரைந்தபடி சிறகடித்து எழுந்து சுற்றிவந்தன. நீர்த்துளிகள் தொடர்ச்சியான மெல்லிய தாளத்துடன் சொட்டிக்கொண்டே இருந்தன. அவற்றைப் பார்த்து நின்றிருந்தபோது விதுரன், ரிஷபரின் பார்வையை நினைவுகூர்ந்தான். மார்த்திகாவதியின் அரசனுக்கும் இளவரசிக்கும் அஸ்தினபுரியின் மண உறவு ஒப்புதல்தான் என்று ரிஷபர் வந்து சொன்ன தூதின் பொருள் என்ன? அகத்துள் நிலைகொண்டிருந்த அதை தீண்டத்தயங்கித்தான் தன் எண்ணங்கள் சுற்றிவந்துகொண்டிருந்தன என்று உணர்ந்தான். அதைத் தொட்டதும் அதிர்ந்து அவை விலகிச் சிறகடித்துக்கலைந்தன.
“தேவாம்சம் தோன்றுகிறது இந்தக் குறிமுகத்தில்” என்று பிருதையின் பிறவிக்குறிப்பை கண்ணெதிரே நோக்கி வாசித்த நிமித்திகர் சொன்னதை விதுரன் நினைவுகூர்ந்தான். மீண்டும் அதைநோக்கியபின் “ராசிகள் பொய்ப்பதில்லை. இவள் தேவமாதாக்களில் ஒருத்தி” என்றார். பீஷ்மர் இருகைகளையும் மடியில் ஊன்றி தன் முகத்தை அதில் வைத்துக்கொண்டார். அவரது உடற்குறிப்பை உணர்ந்து அதை மட்டும் மேலே விவரிக்கும்படி சொன்னான்.
கங்கைக்கரை அரசகுலங்களைச் சேர்ந்த நூற்றிப்பதினாறு இளவரசியரின் பிறவிக்குறிப்புகள் ஓலைச்சுருள்களாக நிமித்திகர் முன் கிடந்தன. அவர் தலையசைத்ததும் அவரது மாணவன் அவற்றை அள்ளி சீராக அடுக்கி சந்தனப்பேழையில் வைத்தான். அவர் உதடுகளை இறுக்கியபடி அந்த ஓலையை கூர்ந்து வாசித்தார். ஓலைகளை அடுக்கியபின் சந்தனப்பேழையை பலபத்ரர் வாங்கிக்கொண்டார். நிமித்திகர் அருகே நின்றிருந்த முதுசூதரை நோக்கி “சூதரே பன்னிரண்டில் ஆறு வருகிறது” என்றார். “கார்த்திகேயன் அல்லவா?’”என்றார் அவர்.
“நூற்றெட்டில் ஏழு?” என்றார் நிமித்திகர். முதுசூதர் கைவிரல்களை எண்ணிவிட்டு “ஸித்தி” என்றார். நிமித்திகர் முகம் மலர்ந்து “ஆம், அவள்தான்” என்றார். சூதர் தன் உலோக தாளவாத்தியத்தை கையில் எடுத்து உதடுகளை நாவால் ஈரமாக்கிக்கொண்டார். “பாடுக!” என்று பீஷ்மர் கையசைத்தார். சூதர் மெல்லிய குரலில் சுருதியை மீட்டிப்பற்றியபின் பாடத்தொடங்கினார்.
‘சான்றோர்களே கேளுங்கள்! மலையிலிருந்து வெண்மேகமும் நீரோடைகளும் கற்பாறைகளும் எரிமலைக்குழம்பும் பிறக்கின்றன. அழிவற்றவரான காசியப பிரஜாபதியின் கனிவும் கடுமையும் முனிவும் சோர்வும் கொண்ட கணங்கள் எழுந்து மைந்தர்களாயின. அவர் உளம் கடுத்த கணத்தில் உருவான வஜ்ராங்கன் என்னும் மைந்தன் இறுகிய உடலும் அதனுள் இறுகியமனமும் கொண்டவனாக இருந்தான். தன் அகமும்புறமும் இறுகியிருப்பதைக் கண்டு அவன் வெட்கினான். தன்னை நெகிழ்த்து நீராக்கி மேகமாக்கி வானாக விரிய அவன் விழைந்தான்.
பிரம்மனை எண்ணி தவம்செய்ய முற்பட்ட வஜ்ராங்கன் வராங்கி என்னும் பெண்ணை மணந்தான். கடம்பவனத்துக்குள் ஒரு மரத்தடியில் அமர்ந்த அவன் தன் முன் சிற்றகல் ஒன்றை ஏற்றி வைத்தான். அச்சுடரை அணையாமல் பார்த்துக்கொள்ளும்படி வராங்கியிடம் சொல்லிவிட்டு ஊழ்கத்திலாழ்ந்தான். முதலில் கண்ணிலும் பின் கண்ணகத்திலும் அதன்பின் அகத்திலும் அதன்பின் அகத்தகத்திலும் அச்சுடரை நிறுத்தி தன்னை விலக்கி தானதுவாக ஆனான். அவன் அகம் தழலென நெகிழ்ந்து நெகிழ்ந்து சென்றது.
தவம் முதிர்ந்தபோது அந்த அகல்சுடர் மேலும் ஒளிகொண்டது. அந்த வெண்ணொளி வளர்ந்து ஒரு வானளாவிய மரமாக ஆனது. அந்தமரத்தின் கிளைகளில் தழலிலைகள் துளிர்த்தன. தழல்மலர்கள் இதழிட்டன. அச்சுடரின் ஒளியில் பிரம்மன் தோன்றும் கணம் மென்மழை ஒன்று பெய்து சுடர் அணைந்தது. சினந்து கண்விழித்த வஜ்ராங்கன் வராங்கியைத் தேடினான். அவள் ஒரு மரத்தடியில் நின்று கண்ணீர்விடுவதைக் கண்டான்.
“என் விழிநீரே அச்சுடரை அணைத்தது” என்றாள் வராங்கி. வஜ்ராங்கன் தவம் செய்துகொண்டிருந்தபோது இந்திரன் வந்து அவள் கற்பை கவர்ந்ததைப்பற்றிச் சொன்னாள். யானையாக வந்து அவளை அச்சுறுத்தினான். பாம்பாக வந்து அவளைத் தீண்டினான். அவள் மயங்கியபோது மன்மதனாக வந்து அவளைப் புணர்ந்தான். “உங்கள் தவம் பொய்க்க என் நிறையை அவன் வென்றான்” என்றாள் வராங்கி.
கடும்சினம்கொண்ட வஜ்ராங்கன் தன் முன் ஒரு கற்பாறையை நட்டு அதை தன் கண்ணிலும் கண்ணுள்ளிலும் உள்ளிலும் உள்ளுள்ளும் நிறைத்து மீண்டும் தவத்திலாழ்ந்தான். அவன் அகம் இறுகி இறுகி எடைமுதிர்ந்தபோது அந்தப்பாறை ஒரு கரிய வைரமாகியது. அதன் ஆடிப்பரப்பில் பிரம்மன் தோன்றினான். “என் தவத்தை அவமதித்த தேவர்களைக் கருவறுக்கும் மைந்தன் ஒருவன் எனக்குத்தேவை” என்றான் வஜ்ராங்கன். “என் தவத்தின் மேல் ஆணை. இதை தேவபிதாவான நீங்களும் கேட்டாகவேண்டும்” என்றான். சான்றோரே தவத்தின் விளைவுக்கு தெய்வங்கள் அடிமை. தன் மைந்தரை அழிக்கும் வரத்தை அளித்து பிரம்மன் கண்ணீருடன் மீண்டான்.
வராங்கி வயிறுகனத்து ஈன்றமகவின் உடல் நூறுகோடி யுகங்கள் விண்நெருப்பில் வெந்து திசையாமைகளின் எடையில் அழுந்தி உருவான கரியவைரத்தால் ஆனதாக இருந்தது. அவன் கற்பாறைகளை தன் கைகளால் சந்தனக்குழம்பென அள்ளி எடுக்கக்கூடியவனாக இருந்தான். ஆயிரம் மடங்கு எடையுடன் அவன் விண்வெளியில் சுழன்று ஒரு வான்மீனானான். ஆகவே அவன் தாரகாசுரன் என்று அழைக்கப்பட்டான்.
தாரகன் ஐந்துநெருப்புகளை வளர்த்து அதன்நடுவே நின்று பிரம்மனை நோக்கி தவம்செய்தான். பாறைகள் உருகியோடும் வெம்மை அவனை அழிக்கவில்லை. வெம்மை அவன் அகத்தை மேலும் மேலும் இறுக்கியது. அவ்வெம்மையின் உச்சத்தில் பிரம்மன் தோன்றினான். “இறப்பின்மை வேண்டும் எனக்கு” என்றான் தாரகன். “அவ்விதியை அளிக்க மும்மூர்த்திகளுக்கும் உரிமை இல்லை” என்றான் பிரம்மன். “அப்படியென்றால் என் இறப்பு ஏழுவயதான குழந்தையின் கையால் மட்டுமே நிகழவேண்டும்” என்றான் தாரகன். அவ்வரமளித்து பிரம்மன் புன்னகையுடன் சென்றான்.
சாகாவரம் பெற்றவன் என்று எண்ணிய தாரகன் மண்ணை அடக்கினான். பின் ஏழு விண்ணகங்களையும் வென்றான். தேவர்களை தன் ஏவலராக்கினான். இந்திரனை தன் தேர்க்காலில் கட்டி இழுத்து கொண்டுசென்று தன் மாளிகைப்பந்தல்காலில் கட்டிப்போட்டான். பிழையுணர்ந்து கண்ணீர் விட்ட தேவர்கள்  தாரகனை வெல்லும் வழி தேடினர். முக்கண் முதல்வனே காக்கமுடியுமென்று தெளிந்தனர்.
அவர்களின் கண்ணீரைக் கண்டு முக்கண்ணன் கனிந்தான். அவனுடைய படைப்புசக்தி கங்கையில் ஓர் வெண்ணிற ஒளியாக விழுந்தது. கங்கை அதை சரவணப்பொய்கையில் ஒரு தாமரை மலரில் அழகிய சிறு மகவாக பிறப்பித்தது. சரவணப்பொய்கையில் நீராடவந்த கார்த்திகைப்பெண்கள் அறுவர் அக்குழந்தையைக் கண்டனர். அறுவரும் அதற்கு அன்னையராக விரும்பி அதை ஆறுதிசையிலிருந்தும் அள்ளத்துணிந்தனர். அவர்களின் அன்பைக்கண்டு அக்குழந்தை ஆறுமுகம் கொண்டு புன்னகைசெய்தது. ஆறுமுகனாகிய கார்த்திகேயனை வணங்குக! அவன் கருணையால் வாழ்கின்றன மண்ணும் விண்ணும்.
ஏழு பெருங்கடல்களின் நீரால் திருமுழுக்காட்டி ஏழுவயதான குமரனை தேவர்களுக்கு சேனாபதியாக அமர்த்தினர் முதல்மூவரும். கண்டாகர்ணன், லோகிதாக்‌ஷன், நந்திஷேணன், குமுதமாலி என்னும் நான்கு படைத்துணைவர்களைத் தன் மைந்தனுக்களித்தார் முக்கண்ணன். பிரம்மன் ஸ்தாணு என்னும் படைச்சேவகனை அளித்தார். விஷ்ணு ஸம்க்ரமன், விக்ரமன், பராக்ரமன் என்னும் மூன்று கொடித்துணைவர்களை அளித்தார். வல்லமை வாய்ந்த விண்ணக நாகங்கள் ஜயன், பராஜயன் என்னும் இரு தேர்த்துணைவர்களை அளித்தன.
ஊழித்தீயின் வெம்மை எரியும் வைரமேனி கொண்ட தாரகனை வெல்ல தேவர்களால் இயலாது, அன்னையரின் படையாலேயே இயலுமென்றனர் விண்ணோர்குலத்து நிமித்திகர்கள். ஏழுவயதான கந்தன் சென்று தன் மெல்லிய விரல்களால் தொட்டதும் மண்ணிலுள்ள புனிதநீர்க்குளங்களெல்லாம் கனிந்து அன்னையராக மாறி எழுந்தன. சோமதீர்த்தம் வசுதாமை என்னும் அன்னையாகியது. பிரபாச தீர்த்தம் நந்தினி என்னும் தாயாகியது. இந்திர தீர்த்தம் விசோகையையும் உதபான தீர்த்தம் கனஸ்வானையையும் அளித்தன.
சப்தசாரஸ்வதம் கீதப்பிரியை, மாதவி, தீர்த்தநேமி, ஸ்மிதானனை என்னும் மாதாக்களாகியது. நாததீர்த்தம் ஏகசூடையையும், திரிவிஷ்டபம் பத்ரகாளியையும், த்விருபாவனம் மகிமோபலியையும், மானசதீர்த்தம் சாலிகையையும் பிறப்பித்தன. பதரிதீர்த்தம் சதகண்டையையும், சதானந்தையையும், பத்மாவதியையும், மாதவியையும் பிறப்பித்தது. மண்ணிலுள்ள அனைத்து குளிர்நிலைகளும் அன்னையராகி எழ அவர்களின் தண்மொழிகளாலும் மழைவிழிகளாலும் விண்ணகமே குளிர்ந்து மெய்சிலிர்த்தது. அவர்களின் படை விண்ணில் ஒரு நீலப்பேராறாகப் பாய்ந்தது.
சான்றோரே, அன்று மண்ணில் குளிர்ந்த விழியென கருணைகொண்டு விண்ணைநோக்கியிருந்த ஸித்ததீர்த்தம் என்னும் நீலக்குளம் ஸித்தி என்னும் அன்னையாகி தன் நீலக்குளிரலைகளை ஆடையாக்கி தன்னுள் விழுந்த மின்னலை புன்னகையாக்கி அலைநாதத்தை நூபுரத்தொனியாக்கி கார்த்திகேயனை அடைந்தாள். அவன் பின்னால் அணிவகுத்த அன்னையரின் பெரும்படையில் தானும் இணைந்துகொண்டாள்.
கருடன் தன் மைந்தனான மயிலை சுப்ரமணியனுக்கு அளித்தான். அருணன் தன் மகவாகிய பொற்சேவலை அளித்தான். அக்னி ஒளிவிடும் வடிவேலை அளித்தான். அத்ரி சிறுமைந்தனுக்கு செம்பட்டாடை அளித்தார். பிரகஸ்பதி யோகதண்டமும் கமண்டலமும் அளித்தார். விஷ்ணுவின் மணிமாலையும் சிவனின் பதக்கமும் இந்திரனின் முத்தாரமும் அவனை அணிசெய்தன.
தாரகாசுரன் தன் படைத்துணைவனான மகிஷனுடன் போருக்கெழுந்தான். மாபலி பெற்ற மைந்தனான பாணாசுரன் அவனுக்கு ரதமோட்டினான். தாரகாசுரனின் மைந்தர்களான தாரகாக்‌ஷன், கமலாக்‌ஷன், வித்யுமாலி ஆகியோரும் பெருவலிகொண்டவர்களான அண்டகாசுரன் ஹ்ருதோதரன் திரிபாதன் ஆகியோரும் அவனுக்காக படைநடத்தினர். ஏழு மன்வந்தரங்கள் அகாலப்பெருவெளியில் நடந்தது அந்தப்பெரும்போர்.
தாரகனின் எல்லையற்ற பெருவெம்மையை அன்னையரின் குளிர் அணைத்தது. அவனுடைய வைரநெஞ்சம் அவர்களின் கருணைகண்டு இளகியது. வல்லமை இழந்து அடர்களத்தில் நின்ற அவனை பன்னிருகைகளிலும் படைக்கலம் கொண்டு வந்த பேரழகுக்குழந்தை எதிர்கொண்டது. அதன் அழகில் மயங்கி மெய்மறந்த விழிகளுடன் நின்ற அவனை அக்குழந்தை வென்றது. தன் காலடியில் ஒரு கருநாகமாக என்றுமிருக்க அருள்செய்தது. தேவசேனாதிபதியின் ஒளிர்கழல்களை நெஞ்சிலணிக! அவன் பெயரை நாவிலணிக! அவன் அழியாப்பெருங்கருணையை சிந்தையில் அணிக!
போர் முடிந்ததும் ஒவ்வொரு அன்னையையும் பேரெழில்குமரன் கட்டித்தழுவி முத்தமிட்டனுப்பினான். ஸித்தி அவனுடைய ஆறு செங்கனிவாய் முத்தங்களைப் பெற்று மண்ணுக்கு மீண்டாள். பிற அன்னையரைப்போல அவள் அகம் அடங்கவில்லை. மீண்டும் அந்த முத்தங்களைப்பெற அவள் விழைந்தாள். அவள் திரும்பிப்பார்த்தபோது அறுமுகத்து அண்ணலிருந்த இடத்தில் இருப்பும் இன்மையும் அற்ற பெரும்பாழே திகழக்கண்டாள்.
அவளுடைய விருப்பு அவளை மீண்டும் பிறக்கச்செய்தது. ஏழு பிறவிகளில் ஆறு மைந்தர்களுடன் அவள் மண்ணில் பிறந்துகொண்டே இருக்கிறாள். ஆறுமுகம் கொண்ட மைந்தர்களால் அணிசெய்யப்பட்டவள் ஸித்தி. ஆறுமுறை விண்ணால் அருள்புரியப்படுபவள். ஆறுமுறை மண்ணால் வாழ்த்தப்படுபவள். அவள் வாழ்க!’
பீஷ்மர் முதிய சூதரை சிலகணங்கள் அசையா விழிகளுடன் பார்த்துக்கொண்டிருந்தபின்பு திரும்பி விதுரனிடம் “ஆம், அவள்தான்” என்றார். விதுரன் பலபத்ரரை நோக்க அவர் தலையை அசைத்தார். நிமித்திகர் “ஆறு பெருவீரர்களும் மண்ணை நோக்கி எழுந்துவிட்டனர் அரசே” என்று சொல்லி தலைவணங்கினார்.
தன் அறையின் மஞ்சத்தில் வந்து படுத்துக்கொண்டு மரப்பலகைகளால் போடப்பட்ட கூரையைப் பார்த்துக் கொண்டிருந்தான் விதுரன். சுயம்வரத்தில் சூதர்களுக்கு இடமில்லை. ஷத்ரியர்கள் வந்திருக்கும் ஒரு சுயம்வரத்தில் சூதர்கள் எழக்கூட அனுமதியில்லை. ஆனால் யாதவ இளைஞர்கள் வந்திருக்கிறார்கள். அவர்கள் சூத்திரர்கள். மார்த்திகாவதியின் அரசுகூட சூத்திர அரசுதான். சூதர்கள் சூத்திரர்களை மணம்கொள்வது அனுமதிக்கப்பட்டிருக்கிறது. ஆனால்…
அறுந்து அறுந்து ஓடும் எண்ணங்களின் ஒழுங்கின்மையை தாளமுடியாதவனாக விதுரன் எழுந்து அமர்ந்தான். அமர்ந்தபோதும் அகவினா அறுபடாமையால் எழுந்து அறைக்குள் நடந்தான். அந்த அரண்மனையின் வெவ்வேறு அறைகள் வழியாக தலைகுனிந்தபடி நடந்தான். சாளரங்கள் வழியாக பிசிறுத்தூறல் பரவியிருந்த வெளிக்காற்றை பொருளற்றுப் பார்த்து பின் ஏதோ எண்ணம் சிந்தனையில் தடுக்க விழித்தெழுந்தான். தன் சால்வையை எடுத்துப் போட்டுக்கொண்டு வெளியே வந்தான்.
VENMURASU_EPi_94
ஓவியம்: ஷண்முகவேல்
[பெரிதுபடுத்த படத்தின்மீது சொடுக்கவும்]
வாசலில் நின்றிருந்த காவலனிடம் “நான் நதிக்கரை ஆலயங்களை பார்த்து வரலாமென்று எண்ணுகிறேன். பிதாமகர் என்னைத் தேடினாரென்றால் நானிருக்குமிடத்தைச் சொல்” என்றபின் இறங்கி நடந்தான். மழையின் நீர் முழுக்க மண்ணில் ஒரு சொட்டு எஞ்சாமல் வழிந்தோடியிருக்க, மென்மணல் கதுப்புகள் விரிந்தும் ஒடுங்கியும் முறுகியும் பரவியிருந்தன. புல்நுனிகளில் எஞ்சிய நீர்மணிகள் இளங்காற்றில் அதிர்ந்து உதிர்ந்தன. நீர்மணிகள் ஒளிவிட ஒரு சிலந்திவலை காற்றில் விம்மியதிர்ந்து கொண்டிருந்தது.
யமுனையின் அந்தப்பகுதிக் கரையில் அரசமாளிகைகள் இருந்தமையால் மக்கள் நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்டிருந்தது. அவ்வப்போது கடந்து சென்ற ஏவலர்கள் அவனுக்கு தலைவணங்கினர். மாளிகை முகப்புகளை காவல் காத்த வீரர்கள் வேல் தாழ்த்தினர். யமுனையின் மீது மழையீரம் பளபளக்கும் கரிய கூரை வளைவுகளுடன் வெண்ணிறப்பாய்களில் ஒளி நிறைந்திருக்க படகுகள் நகர்ந்து சென்றன. ஈரத்தை உதறிய கொடிகள் படபடக்கத் தொடங்கியிருந்தன.
விதுரன் கரையோரமாகவே சென்ற சிறிய வண்டிப்பாதை வழியாகச் சென்றான். மழை நீரோடைகள் யமுனையை நோக்கி இறங்கிச் சென்ற இடங்களில் மரத்தாலான சிறிய பாலங்கள் இருந்தன. குறுங்காடுகளில் மழைக்கு ஒண்டியிருந்த பறவைகள் இலைத்தழைப்புகளுக்குள் இருந்து எழுந்து கூச்சலிட்டுப் பறந்தன. அவற்றின் ஓசையால், இலைகளின் கோடிச்சிறகடிப்பால் குறுங்காடு விண்ணில் எழும் துடிப்பை வெளிப்படுத்திக்கொண்டிருந்தது. மார்த்திகாவதியின் கோட்டையின் தென்பகுதி சிறுவாயிலில் பத்து காவலர்கள் நின்றிருந்தனர். அவன் வெளியேறியபோது தலைவணங்கினர்.
யானையை ஏற்றி மெல்ல நகரும் சிறுபடகுபோல விதுரன் தன்னை அறிந்தான். நெஞ்சின் சுமை. எண்ணங்களின் சுமை. எண்ணங்களா? என்ன எண்ணங்கள்? வெறும் சொற்கள். கண்ணில் படும் ஒவ்வொன்றையும் உடனடியாக சொல்லாக மாற்றிக் கொள்கிறது அகம். அந்தச் சொற்கள் ஒன்றுடன் ஒன்று ஒட்டிக் கொள்கின்றன. திரண்டு எடையாக மாறுகின்றன. அவ்வளவுதான். அந்த மனச்சுமையை அவன் முன்பு ஒருபோதும் அறிந்ததில்லை. அதை அவன் உண்மையில் விரும்புகிறானோ என்று ஐயப்பட்டான். உயரமான உப்பரிகையிலிருந்து கால் நழுவி விழப்போகும் கணம் அப்படியே நீண்டு நாழிகைகளாக விரிவது போல.
மார்த்திகாவதியின் ஒலிகள் விலகி நெடுந்தொலைவுக்குச் செல்வது வரை விதுரன் நடந்து கொண்டிருந்தான். மேகங்கள் வானில் விரிசல் விட்டன. கோட்டை வாயில் திறப்பது போல அகன்று உள்ளிருந்து ஒளி பெய்து யமுனை பளபளக்கத் தொடங்கியது. அலையின் வளைவுகளில் சருமத்தின் மெருகு. வெண்பறவைகளில் காலையொளி பட்ட மந்தார மலர்களின் மிளிர்வு. கண்படலம் கிழிபட்டு விலகியது போல ஒவ்வொன்றும் துலங்கி மிக அருகே என தெரிந்தன. வெண் சிறகுகளின் ஒவ்வொரு இறகையும் பார்க்க முடிந்தது. ஒவ்வொரு அலையின் உள்ளலையையும் விழிதொட முடிந்தது.
யமுனையைப் பார்த்தபடி, சால்வை மென்சிறகாக பறக்க, குழல்கள் எழுந்தலைய விதுரன் அங்கேயே நின்றிருந்தான். காற்று வீசியபோது அவன் மீது கிளை விரித்து நின்றிருந்த சாலமரம் மழைத்துளிகளை உதிர்த்தது. கலைந்த சிறு பழங்கள் போல அவனைச் சுற்றி சேற்றுப் பரப்பில் அவை விழுந்து ஒலித்தன. ஒருகணம் அவனுக்கு யமுனையில் குதித்து மூழ்கி மறையவேண்டுமென்ற எண்ணம் வந்தது. அவனை அழுத்தியிருந்த எடை அனைத்தும் அப்போது விலகிச்செல்லும். ஆம், அவன் யமுனையைப் பார்க்கவந்ததே அதற்காகத்தான். அதற்காக அல்ல, அந்த எண்ணத்தை கொஞ்சிக்கொள்ள.
யமுனைக்குள் தொலைவில் மங்கல இசை கேட்டது. அவன் கூர்ந்து நோக்கியபோது செம்மஞ்சள் நிறமான பாய்களை விரித்தபடி ஒரு அரசபடகு வருவதைக் கண்டான். அதைச் சூழந்து ஏழு படகுகள் வந்தன. அவற்றில் மதுராபுரியின் கருடக்கொடி பறப்பதைக் கண்டான். ஒலி வலுத்து படகுகள் அண்மையில் வந்தபோது அரசபடகின் முகப்பில் அணிகளும் பட்டும் ஒளிவிட ஒரு பொன்வண்டுபோல அமர்ந்திருப்பவனை காணமுடிந்தது. கம்சனைப் பற்றி அவன் அறிந்திருந்தான். அத்தனை தொலைவிலேயே அவன் கொழுத்த உயரமான மனிதன் என்பது தெரிந்தது. எண்ணைக்கலம் கொண்டுசெல்லும் படகிலிருந்து சிதறி நீரில் ஏழ்வண்ணம் கொண்டு பரவும் துளிகள் போல அப்படகிலிருந்து இசை எழுந்து காற்றில் பரவியது.
செந்நிறமும் பொன்னிறமும் சுடரும் மீன்கூட்டம் போல மதுராபுரியின் படகுகள் கடந்து சென்றன. அவை சென்ற தடம் யமுனை நீரில் அலைகளாக எஞ்சி பின் அழிந்தது. அதைக்கண்டு நின்று பின்பு தன்னுணர்வு கொண்டபோது தன் அகத்தின் எடை முற்றிலுமாக அகன்றிருப்பதை விதுரன் உணர்ந்தான். அந்த விந்தையை தன் வினாக்களால் சற்று தூரம் துரத்தியபின்னர் சலித்து திரும்பிக் கொண்டான்.
யமுனையின் கரை வழியாகத் திரும்பும்போது தன் நடையில் ஒரு விரைவு கலந்திருப்பதை அவனே உணர்ந்து புன்னகையுடன் நின்று பின்பு காலெடுத்து வைத்தான். யமுனையின் நீர்ப்பரப்பில் வெயில் அணைந்தபடியே வந்தது. மறுகரையின் காடுகள் நிறமிழந்து கருமை பூண்டன. நீரின் நீலத்தை கருமையாக்கிக்கொண்டே இருந்தது வானம். அவனைச் சூழ்ந்திருந்த குறுங்காட்டின் இலைகளின் மீது பல்லாயிரம் பறவைகளின் ஒலிகள் சேர்ந்து ஒலித்தன.
அவன் மீண்டும் மார்த்திகாவதியின் எல்லைக்குள் நுழைந்தபோது பாதையின் வெண்தடம் மட்டும் தெரியும்படியாக இருட்டிவிட்டிருந்தது. கண்களை இடுக்கி பார்வைகூர்ந்து நடக்க வேண்டியிருந்தது. இருபக்கமும் புல்நுனிகளில் இருந்து மின்மினிகள் சுடர்த்துளிகளாக எழுந்து சுழன்றன. தவளைகளின் கூட்டமான பேரொலி எழுந்தது. தவளைகள் அனைத்தும் யமுனையை நோக்கி அமர்ந்து தங்கள் வேதபாடல்களை இசைப்பதாக அவன் நினைத்துக்கொண்டான்.
மார்த்திகாவதியின் கோட்டை வாயிலை அடைந்தபோது உள்ளே எங்கோ மணியோசைகள் கேட்டன. வாயிற்காவலர் வேல் தாழ்த்தி அவனை உள்ளே விட்டனர். நுழைந்ததும் இருள் பரவிய சோலைக்கு அப்பால் மரங்களை நிழல்நாகங்களாக நெளியவைத்தபடி செவ்விளக்கொளிகள் தெரிவதைக் கண்டான். அங்குதான் ஏதோ சிற்றாலயத்தில் பூசனை நடந்து கொண்டிருந்தது. நீரோடை ஒன்றின்மேல் வளைந்துநின்ற மரப்பாலத்தின் மீது சென்ற சிறிய பாதையில் ஏறி சோலைக்குள் நுழைந்தான்.
சோலை நடுவே ஒரு சிறிய ஆலயம் தீபங்களால் அலங்கரிக்கப்பட்டு தெரிந்தது. சுடரொளியில் பட்டு ஆடைகளின் அசைவைக் கண்டான். அவன் நடை வேகமிழந்தது. அங்கே நின்ற பெரிய மரத்தின் அடியில் நின்று கொண்டான். மரத்தாலான கூரை கொண்ட கருவறை மட்டுமேயான சிறிய கொற்றவையின் ஆலயம் அது என்று தெரிந்தது. அதன் கருவறையில் இருபக்கமும் நடப்பபட்ட நெய்ப்பந்தங்களின் செந்தழல்கள் கருங்கூந்தல் சுழற்றி நடனமிட்டன. கருவறைக்குள் நெய்விளக்குகளின் ஒளியில் கொற்றவை செம்பட்டாடையின் அலைகள் சூழ ஒளிரும் வேலின் பரப்பில் தழல்களின் பிம்பங்கள் நெளிந்தாட மின்னும் வெள்ளி விழிகளுடன் நின்றிருந்தாள்.
ஆலயத்தின் சிறுமுற்றத்தில் மூன்று சேடியர் கைகளில் கூடைகளுடன் நின்றிருந்தனர். தரையில் பூசனைக்காக கொண்டுவரப்பட்ட நீர்க்குடங்களும் மலர்க்குடலைகளும் இருந்தன. நான்கு காவல் வீரர்கள் பந்த ஒளி மின்னிய வேல்களுடன் சற்று விலகி நின்றிருந்தனர். அப்பால் ஒரு பந்தம் எரிந்த ஒளிப்பரப்புக்குள் இறக்கிவைக்கப்பட்ட பல்லக்கு செம்பட்டுத்திரைகள் தழலாக ஆட நின்றிருந்தது.
அங்கே வந்திருப்பது யார் என்று கோட்டை வாயிலில் முதல் மணியோசை கேட்டபோதே தன் அகம் உணர்ந்துவிட்டதை அப்போது விதுரன் அறிந்தான். எந்த வினாவுக்குள்ளும் அடங்காத அந்த விந்தையை பிறிதொருவர் கூறியிருந்தால் மடமை என்று அவன் நகைத்திருப்பான். ஆனால் அங்கே அப்போது ஐம்புலன்களையும் பொருளற்றதாக ஆக்கும் பெரும்புலன் ஒன்றாக அவன் அகமும் ஆகமும் ஆகியிருந்தன.
மெல்லிய காலடிகள் மலர் பதிந்து மலர் பதிந்து மீள்கின்றன. செம்பட்டு ஆடையின் பொன்னூல் மலரிதழ்கள் அலைவிரிந்து அலைவிரிந்து ஒயில்கின்றன. மேகலை மணிகள் குலுங்கிக் குலுங்கி ஒலிக்கின்றன. செம்மணி வளையல்கள் எழுந்து இணைந்து எழுந்து இணைந்து இமிழ்கின்றன. தாமரையிதழென அடுக்கப்பட்ட சரப்பொளி மாலை உலைந்து உலைந்து ஒளிர்கிறது. நாகமணிக்கண்கள் எனக் கோர்த்த முத்துக்களின் ஆரம் துவண்டு துவண்டு அசைகிறது. கன்னம் தொட்டுக் கன்னம் தொட்டு முத்தமிடுகிறது அணிக்குழை. இந்த முகம், இந்த விழிகள், இவ்விதழ், இந்நாசி, இந்நறுநுதல், இங்கே நான் என இவையன்றி ஏதுமில்லா பேருலகம். தன்னைத்தான் நோக்கி வியந்து நிற்கும் பெருங்கணமென காலம்.
அவள் வந்து வலப்பக்கத்து நெய்ப்பந்தத்தின் அருகே அதன் செந்நிற ஒளியில் தானுமொரு செந்தழல் போல நின்றாள். அப்பால் இருளில் நின்ற அவன் விழிகளுக்காகவே அப்போது படைக்கப்பட்டிருந்தாள்.

4/21/14

பகுதி எட்டு : பால்வழி[ 4 ]

பகுதி எட்டு : பால்வழி[ 4 ]
அதிகாலையில் மார்த்திகாவதியை நெருங்கும்போதுதான் விதுரன் கண்விழித்தான். எங்கிருக்கிறோம் என்னும் எண்ணம் வந்த கணமே பாண்டுவின் நினைப்பும் வந்தது. மஞ்சத்தில் இருந்து எழுந்து அறைக்குள் சுழன்று கொண்டிருந்த குளிர்காற்றை உணர்ந்தான். அப்பால் பீஷ்ம பிதாமகர் படுத்திருந்த புலித்தோல் மஞ்சம் அங்கே ஒரு மனிதர் படுத்திருந்த சுவடே இல்லாமல் தென்பட்டது. பீஷ்மர் இரவில் மல்லாந்து கற்சிலைபோல அசைவில்லாது துயில்பவர் என்பதை விதுரன் அறிந்திருந்தான். ஆயினும் அவனுக்கு அந்த மஞ்சம் வியப்பை அளித்தது
விதுரன் எழுந்து வெளியே பார்த்தான். வெளியே படகின் அமரமுனை அருகே யமுனையை நோக்கியபடி வெண்ணிழல் போல பீஷ்மர் நின்றிருந்தார். விதுரன் வெளிவந்ததும் அவனுக்காகவே காத்து நிற்பதுபோல நின்றிருந்த ருத்ரனை அறைவாயிலில் கண்டான். ருத்ரன் தணிந்த குரலில் “இளவரசருக்கு உடல்நிலை குன்றியுள்ளது” என்றான். விதுரன் அசையாத இமைகளுடன் பார்த்தான். “உடல்வெம்மை ஏறியிருக்கிறது. தசைகளின் அதிர்வும் கூடியிருக்கிறாது” என்றான் ருத்ரன்.
விதுரன் “சுயநினைவு உள்ளதா?” என்றான். “இல்லை” என்றான் ருத்ரன். “என்ன நடந்தது?” என்று விதுரன் கேட்டான். “நேற்றிரவு குளிர்காற்றில் கங்கையைப் பார்த்தபடி நெடுநேரம் நின்றிருக்கிறார். இரவில் அவர் உடல் நடுங்கிக் கொண்டே இருந்திருக்கிறது. பின்னர் மயங்கி விழுந்திருக்கிறார். பாடிக்கொண்டிருந்த சூதர்கள் அவரை தூக்கியபோது அவரே எழுந்து உள்ளே வந்து படுத்திருக்கிறார்.”
விதுரன் “நீ அப்போது என்ன செய்து கொண்டிருந்தாய்?” என்றான். ருத்ரன் பேசாமல் நின்றான். “துயில்வதல்ல உன் பணி” என்றபின் விதுரன் திரும்பி நடந்தான். படகின் இரண்டாவது அறையின் வாயில் சற்று மூடியிருந்தது. உள்ளே சாளரங்கள் அனைத்தும் மூடப்பட்டு இருள் நிறைந்திருக்க வெளியே படகின் கூடத்தில் எரிந்த நெய்விளக்கின் ஒளிக்கீற்று கதவின் இடைவெளி வழியாக உள்ளே விழுந்திருந்தது. மஞ்சத்தில் பாண்டு மரவுரிப் போர்வையால் உடலை மூடிப் படுத்திருப்பதைக் கண்டு விதுரன் கதவை நன்றாகத் திறந்து உள்ளே ஒளி பரவச் செய்தபின் படுக்கையை நெருங்கினான்.
பாண்டுவின் உடலின் வெம்மை ஆடைகளிலும் படிந்திருந்தது. காற்றில் அதிரும் பாய்கயிறு போல அவன் முழங்கைகள் விதிர்த்துக் கொண்டிருந்தன. விதுரன் அவன் கைகளைப் பற்றி தன் கைக்குள் வைத்து அழுத்திக்கொண்டான். அவன் கைக்குள் பாண்டுவின் குளிர்ந்த மெல்லிய கரங்கள் துடித்தன. சில கணங்களில் பாண்டுவின் இதயத்தை தன் கைகளில் உணர முடியும் என்று விதுரனுக்குத் தோன்றியது.
விதுரன் எழப்போகும்போது பாண்டு மெல்லிய குரலில் “தம்பி” என்றான். விதுரன் “சொல்லுங்கள் அண்ணா” என்றான். “நான் நேற்று என் அன்னையை பார்த்தேன்” என்றான் பாண்டு. விதுரன் அவன் சொல்வதை புரிந்து கொள்ளாதவனாக மிகப் பொதுவான ஓர் ஒலியை பதிலுக்கு அளித்தான். “என் அன்னையை” என்றான் பாண்டு. “காசி நாட்டு இளவரசி அம்பாலிகை…. அஸ்தினபுரத்தின் அரசி…”
அவன் திணறும் ஒலி கேட்டு விதுரன் அவன் கைகளை மீண்டும் தன் கைகளுக்குள் எடுத்துக் கொண்டான். கைகள் அடிபட்டுத் துடிக்கும் நாகம்போல அதிர்ந்தன. “வேண்டாம் அண்ணா. நீங்கள் துயிலுங்கள்” என்றான் விதுரன். “நில்… போகாதே” என்று பாண்டு அவனை பற்றிக்கொண்டான். “என்ன வியப்பு! இல்லை எவ்வளவு மூடத்தனம்!. அவள் என் அருகிலேயே இதுவரை இருந்திருக்கிறாள்… நான் அவள் உள்ளும் புறமும் நன்கறிந்திருக்கிறேன் என்று எண்ணிக் கொண்டிருக்கிறேன். எவ்வளவு மடமை!”
விதுரன் “ஆம்” என்றான். “நாம் பெண்களைப் பார்ப்பதேயில்லை தம்பி. அவர்களை அவர்களின் அழகால் மூடி வைத்திருக்கிறோம். அவர்களின் அழகைப்பற்றிய காவியங்களால் மூடி வைத்திருக்கின்றோம்.” பாண்டுவின் குரலும் அக்குரலைச் சுமந்து வந்த மூச்சும் அதிர்ந்தன.
விதுரன் பாண்டுவின் உணர்ச்சிகளைப் புரிந்து கொள்ள முயன்றான். அன்னையிடமிருந்து பிரிந்து அவ்வளவு தொலைவுக்கு பாண்டு பயணம் செய்ததே இல்லை. அதுதான் அந்த அகக்கொந்தளிப்பிற்கான காரணம் என்று அவனுக்குத் தோன்றியது. “நாம் இங்கே இரண்டு நாட்கள் மட்டும்தான் தங்கவிருக்கிறோம் அண்ணா… உடனே அஸ்தினபுரத்திற்குத் திரும்பவிருக்கிறோம்” என்றான்.
பாண்டு அச்சொற்களைப் புரிந்து கொள்ளாமல் “சீதையை ஆதிகவி ராமாயணத்தால் மூடி வைத்துவிட்டார். பட்டாலும் நகையாலும் மூடிவைப்பது போல” என்றான். “ஆம்” என்றான் விதுரன். மெல்ல பாண்டுவின் கைகளை படுக்கையில் வைத்தபடி “நீங்கள் இன்னும் சற்று நேரம் துயிலலாம். அடுத்த படகில் உங்கள் வைத்தியர் இருக்கிறார். அவரிடம் நஸ்யம் வாங்கித் தருகிறேன்…” என்றான்.
“எனக்கு ஒன்றுமில்லை… இரு” என்று பாண்டு மீண்டும் அவன் கையைப் பிடித்துக் கொண்டான். ‘ஆனாலும் பெண்கள் ஏன் நகைகளையும் காவியங்களையும் விரும்புகிறார்கள்? அவர்களும் இந்தத் திரைகளையும் மறைகளையும் விரும்புகிறார்களா என்ன? பாவம். மண்ணுள்ளிப் பாம்புகள் போல மறைவிடத்திலிருந்து மறைவிடம் நோக்கி ஓடுகிறார்கள். அவர்களை நாம் பார்ப்பது அப்படி ஓடி ஒளியும் பதற்றங்களின் வழியாகத்தான். நான் நேற்று எதைப் பார்த்தேன் தெரியுமா?”
பாண்டு கண்களைத் திறந்து மூச்சிரைக்க விதுரனைப் பார்த்தான். “பாதாள கங்கையை! மாபெரும் பளிங்குவெளி போல அது ஓடியது…. பாதாள கங்கையை ஆண்கள் பார்க்கக்கூடாது தம்பி. அது ஆண்மகனை கோழையாக்கிவிடும். மொத்த ஆண்குலத்துக்காகவும் அவன் வெட்கிச் சுருங்கி விடுவான். அவன் பேடியாகிவிடுவான். அவனுடைய லிங்கம் சுருங்கி உள்ளே சென்றுவிடும். அவனுக்கு முலை முளைக்கும். அவன் தனக்காகவும் தன் மூதாதையருக்காகவும் வெட்குவான். தன் நகரத்துக்காகவும் அதன் கோட்டைகளுக்காகவும் அதன் அரண்மனைகளுக்காகவும் கூசுவான். தன் அறநூல்களையும் தன் தெய்வங்களையும் அருவருப்பான்.”
பாண்டுவின் உடல் அதிர்ந்து எழுந்தது. ஹக் ஹக் ஹக் என்ற ஒலி அவன் தொண்டையிலிருந்து வந்தது. குடத்தில் நீர் நிறைவதுபோல ஒலித்து பிறகு துளையிலிருந்து காற்றுக்குமிழிகள் வெடிப்பது போல மாறியது. விதுரன் எழுந்து வெளியே வந்து பார்த்தான். ருத்ரன் மருத்துவர் கூர்மருடன் நின்று கொண்டிருந்தான். “துயில வைத்துவிடுங்கள்” என்று விதுரன் மெல்லச் சொன்னான். “அவர் உள்ளம் கொந்தளித்திருக்கிறது.”
கூர்மர் உள்ளே செல்ல ருத்ரன் விளக்கை எடுத்துக்கொண்டு பின்னால் சென்றான். வெளியே நின்றபடி விளக்கொளியில் பாண்டுவின் உடலைப் பார்த்த விதுரன் சற்று பின்னடைந்தான். பசும் நரம்புகளால் வரிந்து கட்டப்பட்ட வெண் தசைகளால் ஆன சிறிய உடல் வளைந்து முறுகி நின்றிருக்க கைகால்கள் நான்கு பக்கமும் கோணலாகி விரிந்து இழுத்து இழுத்து அசைந்து கொண்டிருந்தன. சிவந்த உதடுகளைக் கடித்த மஞ்சள் நிறமான பற்கள் தெரிந்தன. வாயின் இருபக்கமும் எச்சில் நுரைத்து வழிந்தது.
கூர்மர் தன் பெட்டியை தரையில் வைத்து விரைந்து திறந்து அதிலிருந்து கடற்பஞ்சை எடுத்தார். அதில் சிறிய வெண்கலப்புட்டியில் இருந்து எடுத்த வெண்ணிற மாவுப் பொடியைப் பரப்பி கசக்கி பாண்டுவின் நாசியில் வைத்தார். அவன் மூச்சை ஓங்கி ஓங்கி இழுத்துக் கொண்டிருந்தான். குரல்வளை புடைத்த கழுத்தில் வடங்கள் போல நரம்புகள் பிணைந்து அசைந்தன. செருகியிருந்த விழிகள் அதிர்ந்து அதிர்ந்து மெதுவாக அசைவிழந்தன. இருபக்கமும் இறுக்கமாக விரிந்திருந்த கைகளின் விரல்கள் ஒவ்வொன்றாக விடுபட்டன.
அவன் இடக்கையை எடுத்து நாடி பார்த்த கூர்மர் “அகக்கொந்தளிப்புதான். நரம்புகளில் கரும்புரவிகளின் குளம்படிச்சத்தம்” என்றார். “வெப்பு இருக்கிறதல்லவா?” “ஆம்.. ஆனால் அதனால் மூச்சிலும் இதயத்திலும் எந்த பாதிப்பும் இல்லை” என்றார் கூர்மர். “துயில் அவரை அமைதிப்படுத்தும் என்று நினைக்கிறேன்.” விதுரன் ஒன்றும் கூறாமல் பாண்டுவையே பார்த்துக் கொண்டிருந்தான். மூச்சு சீரடைந்திருந்தது. இறுகி நின்ற நீல நரம்புகள் ஒவ்வொன்றாக கட்டுவிட்டு நெகிழத் தொடங்கியிருந்தன.
வெளியே வரும்போது அவன் பாண்டு சொன்ன சொற்களைப் பற்றியே எண்ணிக் கொண்டிருந்தான். அந்த உதிரிவரிகளை இணைக்கும் அனுபவம் எதுவாக இருக்க முடியும் என்று எண்ணிக் கொண்டான். ஒரே நீரில் வாழும் மீன்களைப் போல அனைத்து மானுடரும் ஒரே பொருள்வெளியில் வாழ்கிறார்கள். ஆகவேதான் ஒருவர் சொல்வது இன்னொருவருக்குப் புரிகிறது. எவரோ சிலர் நீர் வெளி விட்டு துள்ளி காற்றில் எம்பிவிடுகிறார்கள். மூச்சு கிடைக்காமல் தத்தளிக்கிறார்கள். ஆனாலும் அவர்கள்தான் எதையாவது புதியதாக பார்க்க முடிகிறது. அவர்களில் ஆயிரம் பல்லாயிரம் பேரில் ஒருவரே அவற்றை திரும்பி பிறர் மொழியில் கூற முடிகிறது.
92
ஓவியம்: ஷண்முகவேல்
[பெரிதுபடுத்த படத்தின்மீது சொடுக்கவும்]
பீஷ்மர் நின்றிருப்பதை விதுரன் பின்னாலிருந்து பார்த்தான். அசையாமல் நிற்பதைத்தான் அவர் தன்னுடைய கங்கர் குல மூதாதையரிடமிருந்து அஸ்தினபுரிக்குக் கொண்டு வந்திருப்பார் என்று நினைத்துக் கொண்டான். அதன்வழியாக அவர் தொன்மையான மரங்களை நினைவில் எழுப்புகிறார். அவரை அனைவருமே பிதாமகர் என்பது அதனால்தான். அவரிடம் சென்று பாண்டுவின் உடல்நிலை பற்றிச் சொல்ல வேண்டும் என்று எண்ணிக் கொண்டான். உடனே அவருக்கு அது தெரியும் என்று உணர்ந்தான். அவரது அசைவின்மையே அதனால்தான்.
விதுரன் உள்ளிருந்து வெளியே வந்த வைத்தியர் கூர்மரிடம், “நீங்கள் இளவரசரின் அருகிலிருந்து விலக வேண்டாம் கூர்மரே… இளவரசர் இன்று மாலை எப்படியாவது எழுந்தமர வேண்டும். அவர் அவைக்கு வரும்போது தானாகவே நடந்து வர வேண்டும். அதை நீங்கள் பொறுப்பேற்றுச் செய்யுங்கள்” என்றான். “அவரால் வரமுடியும். அவர் உள்ளம் அதற்கு ஒப்பினால் போதும்” என்றார் கூர்மர். “அவர் விழிக்கட்டும் நான் வந்து அவரிடம் பேசுகிறேன்” என்று விதுரன் சொன்னான்.
மார்த்திகாவதி தொலைவில் தெரியத் தொடங்கியது. யமுனையின் கருநீல நீரலைக்கு அப்பால் கரையோரமாக கால்களை ஊன்றி நீர் அருந்தும் கரியநிறமான மிருகம் போல அது தோன்றியது. அதன் கால்கள் நீருக்குள் இறங்கி நின்றிருந்தன. அருகே இருந்த காவல் கோபுரத்தில் மார்த்திகாவதியின் சிம்மக்கொடி பறந்தது. சுங்கமாளிகை முன்பு நின்றிருந்த ரதங்களில் கொடிகள் யமுனையிலிருந்து ஏறிச்சென்ற காற்றில் துடித்துக்கொண்டிருந்தன. ஒரு தேரின் பித்தளைக்கூரை வளைவு ஒளியில் பொன்னிற மின்னலாக ஒளிவிட்டு அணைந்தது.
வானம் அதன் உள்வெளிச்சத்தாலேயே நன்றாகத் துலங்கியது. கருமேகங்கள் தென்திசையை மூடியிருந்த போதிலும் வடகிழக்கு வெளுத்துத் திறந்து மென்ஒளியைப் பொழிந்தது. படகு நகரை நெருங்க நெருங்க வானும் நதிநீரும் வெளுத்தபடியே வந்தன. நீர்ப்பரப்பு முழுக்க வெண்பறவைகள் தங்கள் பிம்பங்களுடன் சேர்ந்து சிறகடித்துச் சுழன்றன. கரையில் தெரிந்த மரக்கூட்டங்களில் இலைத்தழைப்புகள் காற்றில் எழுந்தாடுவதும் பறவைகள் சிறகடித்தெழுந்து சுற்றிப் பறந்து அமைவதும் வண்ணமும் வடிவமும் கொண்டு வந்தன.
மார்த்திகாவதியின் படித்துறையில் ஐம்பது பெரிய அரசபடகுகள் நின்றிருந்தன. அவற்றில் பெரியது ஏர் முத்திரை கொண்ட கொடி பறந்த மாத்ரபுரியின் படகு என்பதை விதுரன் கவனித்தான். பலபத்ரர் வந்து அவனருகே நின்றார். விதுரன் திரும்பி அவரைப் பார்த்ததும் அவன் எண்ணங்களை அறிந்தவர்போல “மாத்ர நாட்டில் இருந்து சல்லியர் வந்திருக்கிறார்…” என்றார். “ஆம்” என்றான் விதுரன்.
“அவர் வருவார் என்று நான் நினைக்கவில்லை. ஆனால் வந்தது வியப்புறச் செய்யவும் இல்லை” என்று பலபத்ரர் சொன்னார். “ஷத்ரியர்களுக்கு யாதவர்களை அரசர்களாக ஏற்றுக் கொள்ள தயக்கம் இருக்கிறது. ஆனால் யாதவர்களின் படைபலமும் பொருள்பலமும் அனைவருக்கும் தேவையாகவும் உள்ளது” என்றார். விதுரன் “அஸ்தினபுரியின் இளவரசர் சுயம்வரத்துக்கு வந்ததைப்பற்றி பிறரும் இதையே சொல்வார்கள் பலபத்ரரே” என்றான். “ஆம். அதுவும் உண்மையல்லவா?” என்றார் பலபத்ரர். “நாம் இங்கே மணம் கொள்ள வந்ததே இவர்களின் குலங்கள் நமக்குத் தேவை என்பதற்காகத்தானே?”
விதுரன் “பிதாமகர் செய்வதெல்லாமே ஒருபெரும் போருக்கான அணிதிரட்டல். ஆனால் போரைத் தவிர்ப்பது பற்றித்தான் பேசிக்கொண்டிருக்கிறார்” என்றான். “அமைச்சரே, போரைத் தவிர்க்கும் வழி என்பது வலிமையுடன் இருப்பதே என்று அரசுநூல்கள் வகுக்கின்றன.” என்றார் பலபத்ரர். விதுரன் சிரித்தபடி “ஆம். ஆனால் இன்றுவரை ஒருங்கிணைக்கப்பட்ட படை வல்லமை போருக்கு வழிவகுக்காமல் இருந்ததே இல்லை. படைக்கலம் என்று ஒன்று உலையில் வார்க்கப்பட்டால் அது என்றோ எவரையோ கொன்றே தீரும்” என்றான். பலபத்ரர் அதற்கு ஒன்றும் சொல்லவில்லை. அவர் பீஷ்மருக்கு அப்பால் சிந்திக்கமுடியாதவர் என விதுரன் எண்ணிக்கொண்டான்.
மார்த்திகாவதியின் காவல்மாடத்தில் பெருமுரசம் முழங்கியது. கொம்பொலிகள் சேர்ந்து பிளிறின. படித்துறையெங்கும் அமர்ந்திருந்த வெண்புறாக்களும் நீர் நாரைகளும் காகங்களும் அவ்வொலியில் எழுந்து காற்றில் சிறகடித்தன. படித்துறையில் நின்ற இருபடகுகளுக்கு நடுவே அஸ்தினபுரியின் படகு நிற்பதற்காக இடத்தைக் காட்டியபடி மார்த்திகாவதியின் வீரர்கள் கொடிகளை ஆட்டினர். அஸ்தினபுரியின் படகை எதிர்கொள்ள துறைக்காவலனே துறைமுனைக்கு வந்து ஆணைகளைக் கூவினான்.
அஸ்தினபுரியின் முதல் படகு சென்று நின்றதும் மார்த்திகாவதியின் காவல் மாடம் மீது அஸ்தினபுரியின் அமுதகலசக் கொடி ஏறியது. அரசபடகு கரையடைந்ததும் அருகிலிருந்த சுங்கமாளிகையின் முற்றத்தில் நின்றிருந்த மார்த்திகாவதியின் அமைச்சர் ரிஷபரும் சிற்றமைச்சர்களும் மார்த்திகாவதியின் சிம்மக்கொடியுடன் அவர்களை நோக்கி வந்தனர். அவர்களுடன் மங்கலத்தாலங்கள் ஏந்திய தாசிகளும் மங்கல இசையை எழுப்பியபடி வந்தனர்.
பீஷ்மர் முதலில் இறங்கியதும் ரிஷபர் “மார்த்திகாவதி பீஷ்ம பிதாமகரின் வருகையால் புனிதமடைந்தது” என்று வாழ்த்து கூறி தலைவணங்கினார். அவரது இருபக்கமும் நின்ற சிற்றமைச்சர்களும் தளகர்த்தர்களும் வணங்கினர். தாசிகள் மங்கலத்தாலங்களை பீஷ்மர்முன் நீட்ட அவர் அவற்றைத் தொட்டு அவ்வரவேற்பை ஏற்றபிறகு, “சுயம்வரத்துக்கு வந்திருக்கும் அஸ்தினபுரியின் இளவரசர் சற்று ஓய்வெடுக்கிறார். அவர் இளைப்பாற மாளிகை ஒருக்கமாக உள்ளதல்லவா?” என்றார்.
ரிஷபரின் கண்கள் தன்னை வந்து தொட்டு திகைத்து மீள்வதைக் கண்டதுமே விதுரன் அனைத்தையும் புரிந்து கொண்டான். அவன் நெஞ்சு படபடத்தது. அதை வெல்ல தலையை நிமிர்த்தி ரிஷபரின் விழிகளை நேருக்குநேர் சந்தித்து “அஸ்தினபுரியின் இரண்டாவது இளவரசர் பாண்டு இந்தச் சுயம்வரத்தில் கலந்து கொள்ள வருகையளித்துள்ளார். பயணத்தில் சற்று களைத்திருக்கிறார்” என்றான்.
ரிஷபரின் கண்களில் மீண்டும் ஒரு திகைப்பு வந்து சென்றது. உடனே அவர் தன்னை மீட்டுக்கொண்டு “அஸ்தினபுரியின் இளவரசரின் வருகையால் மார்த்திகாவதி பெருமையடைகிறது” என்றார். அச்சொற்களுக்கு அடியில் அவரது எண்ணங்கள் விரைந்தோடி அனைத்தையும் புரிந்துகொண்டன என்பது அவர் முகம் மலர்வதிலிருந்து தெரிந்தது. “அஸ்தினபுரியின் அமைச்சரை மார்த்திகாவதி வரவேற்கிறது” என்று அவர் தலைவணங்கினார். ஒருகணம் உலைவாய் போல தன்மேல் வெம்மை ஒன்று வீசி மறைவதை விதுரன் உணர்ந்தான். ஆனால் அவன் முகமும் விழிகளும் மலர்ந்திருந்தன.
படகில் இருந்து பொருட்கள் ஒவ்வொன்றாக இறக்கப்படுவதை கண்காணித்துக் கொண்டிருந்த பலபத்ரரிடம் விதுரன் “பலபத்ரரே, இளவரசர் மாளிகைக்கு ஒரு மூடிய பல்லக்கிலேயே செல்லட்டும். இங்குள்ள ஏவலர், காவலர் எவரும் அவரைப் பார்க்கலாகாது” என்றான். பலபத்ரர் “ஆம்” என்றார். “பல்லக்கை படகினுள் கொண்டு செல்லச் சொல்கிறேன்” என்று சொல்லி “இன்னும் அவர் நலம்பெறவில்லை…” என்றார். அப்போது மிகமுக்கியமான ஒன்றை விதுரனிடம் விவாதிக்கும் பாவனை அவரில் கூடியது. விதுரன் அதைக்கண்டு எரிச்சலுடன் திரும்பிக்கொண்டான்.
திரையிடப்பட்ட பல்லக்கு ஒன்று படகுக்குச் சென்றது. அதை பலபத்ரர் பலத்த கையசைவுகளுடனும் உரத்த குரலுடனும் வழிநடத்தி படகுக்குள் ஏற்றினார். மொத்த படித்துறையும் அதைக்கண்டு வியந்து விழிகளனைத்தும் அத்திசைநோக்கித் திரும்புவதை விதுரன் கவனித்தான். பிழை செய்துவிட்டேன் என்று ஒருகணம் எண்ணியதுமே அதை எப்படி கையாள்வது என்ற எண்ணமும் அவனுள் வந்தது. பலபத்ரர் வெளியே ஓடிவந்து ஒரு வீரனை அதட்டினார். திரும்ப உள்ளே ஓடிச்சென்றார். மீண்டும் வெளியே வந்தார்.
விதுரன் தனக்காகக் காத்திருந்த ரதத்தை நோக்கிச் சென்றான். பீஷ்மர் அங்கே அவனுக்காகக் காத்திருந்தார். அவரது விழிகளைக் கண்டதுமே அவன் அவர் கேட்கவிருப்பதை உய்த்துணர்ந்து “மாத்ரநாட்டு இளவரசர் சல்லியர் வந்திருக்கிறார்” என்றான். பீஷ்மர் சிலகணங்கள் அவன் கண்களைப்பார்த்தபின் “ம்” என்றார். “செய்திகளை நான் மாலைக்குள் வந்து அறிவிக்கிறேன்” என்றான் விதுரன். பீஷ்மர் தன் ரதத்தில் ஏறிக்கொண்டார். அவர் அதுவரை இருந்த மனநிலையில் இல்லை என விதுரன் உணர்ந்தான். அவரது அகச்சமன் குலைந்துவிட்டிருந்தது.
விதுரன் ரதத்தில் ஏறிக்கொண்டான். அக்கணம் வரை அவனுள் இருந்து அவனை இயக்கிய ஒரு தேவன் விலகிச்செல்வதுபோல உணர்ந்தான். கைகால்கள் எடையேறியபடியே வந்தன. உடலை இரும்புக்கவசம் போல அறிந்தான். அத்தனை பெரிய ஏக்கத்தை ஏன் தன் அகம் அறிகிறதென அவனுக்குப்புரியவில்லை. ஆனால் அது பெருகிக்கொண்டே சென்றது.

4/20/14

பகுதி எட்டு : பால்வழி[ 3 ]

பகுதி எட்டு : பால்வழி[ 3 ]
படகுகள் ஒருங்கிவிட்டன என்று தலைமைக்குகன் வந்து பணிந்து சொன்னான். பீஷ்மர் அந்தப் படித்துறையில் இறங்கியது முதல் கற்சிலை போலவே இருந்தார். குகன் சொன்னதைக்கேட்டு அவரில் உயிர் தன் இருப்பை உணர்ந்தது. மெல்லிய தலையசைவுடன் எழுந்து தலையை மிகக்குனித்து நிலைக்கதவைக் கடந்து முற்றத்தில் இறங்கி நடந்து சென்றார்.
அவர் அம்பையின் ஆலயத்தை அரைக்கணமேனும் பார்க்கிறாரா என்று பாண்டு கவனித்தான். அவரது உடலில் எந்த அசைவும் தெரியவில்லை. அவ்வெண்ணத்தை உணர்ந்தவன் போல விதுரன் “அந்த அளவுக்கு கட்டுப்படுத்திக் கொள்கிறாரென்றால் அவரது அகத்தின் புண் எத்தனை ஆழமானதாக இருக்கவேண்டும்” என்றான். பாண்டு “ஆம்” என்றான். “யானைகளின் ரணங்களைப் பார்த்திருக்கிறீர்களா? வைத்தியர்கள் சிறு கோடரியால் வெட்டி முழங்கை வரை உள்ளே விட்டு மருந்திடுவார்கள். தசையாலான சிறு குகைகள் போலிருக்கும் அவை” என்றான் விதுரன். பாண்டு பல்லைக்கடித்துக்கொண்டான்.
மழை நின்று இலைத்துளிகள் காற்று வீசும்போது உரத்து மீண்டும் சீர்கொண்டன. தவளைகளின் ஓலம் மீண்டும் எழுந்து அப்பகுதியைச் சூழ்ந்திருந்தது. கங்கையின் அந்தச் சதுப்புக் கரையில் கோடிக்கணக்கான தவளைகள் இருக்கக்கூடும் என்று பாண்டு நினைத்தான். அவை ஒரு பேரரசாக இருக்கலாம். பிறபகுதிகளின் தவளைகளால் அஞ்சப்படும் அரசு. அவர்களின் சூதர்களால் பாடப்படும் வல்லமை. ஏன் பாடவேண்டும்? அவையே பாடிக்கொள்கின்றனவே என்று நினைத்ததும் அவன் புன்னகை புரிந்தான்.
விதுரன் திரும்பிப்பார்த்தான். “எத்தனை சூதர்கள்!” என்றான் பாண்டு. விதுரன் புன்னகை புரிந்து “அவை வேதம் பாடுகின்றன என்று மூதாதை ரிஷிகள் சொல்லிவிட்டனர். அவை பாடுவது மழைப்பாடலை” என்றான். “ரிஷி மைத்ராவருணி வசிட்டன் வேதங்களில் தவளைகளை மண்ணின் முதல் வைதிகர்கள் என்று சொல்கிறார்.” பாண்டு “ஆம், மழையைப்பற்றி அவை பாடாமல் வேறு எவர் பாடமுடியும்? வருணனையும் இந்திரனையும் அன்னைநதிகளையும் அவை அறியாமல் வேறு எவர் அறியமுடியும்?” என்றான். “இப்போது நான் விரும்புவதென்ன தெரியுமா? ஒரு தவளையின் கண்ணைப் பார்ப்பதைத்தான்.”
“தவளையின் கண்கள் இரவில் மனிதர்களுடன் உரையாடக்கூடியவை” என்று விதுரன் சொன்னான். அவர்கள் முற்றத்தில் இறங்கி நடந்தபோது மெல்லிய பளபளப்புடன் ஒரு சர்ப்பம் குறுக்காகக் கடந்து சென்றது. பந்த ஒளி தேங்கிக் கிடந்த சேற்று நீரை மெல்லத் தொட்டு அலையெழுப்பியபின் அது ஒதுங்கி வளைந்து சென்றது. “ஒரே சொல்” என்று பாண்டு சொன்னான். “மழைமழைமழை” விதுரன் புன்னகைசெய்து “வேதம் என்பது ஒரு சொல் முளைத்த வனம் என்பார்கள்” என்றான்.
அவர்கள் படகுத்துறையை அடைந்தனர். படித்துறையை ஒட்டி நின்ற பெரும்படகின் விலா அசைவதை படகுத்துறையின் மரச்சட்டத்தின் நிலையுடன் ஒப்பிட்டால்மட்டுமே விழிகள் அறிந்தன. பொறுமையிழந்த புரவி போல கால்மாற்றிக்கொண்டு அவை நிற்கின்றன என பாண்டு நினைத்துக்கொண்டான். சாய்க்கப்பட்ட பலகை வழியாக இரு வீரர்களால் பற்றப்பட்டு பாண்டு படகில் ஏறிக்கொண்டான்.
படகு அலைகளில் ஊசலாடுவதை அதன் பரப்பில் நின்றபின் தலையால் தெளிவாக உணரமுடிந்தது. அதன் பாய்களின் கயிறுகளை இழுத்து கொடிமரத்தில் ஏற்றிக்கொண்டிருந்தனர். பாய்க்கயிறுகள் பாண்டுவின் கையளவே பெரிதாக கற்பாறையின் சொரசொரப்புடன் இருந்தன. உள்ளறைக்குள் நெய் விளக்குகள் எரிய சிவந்த ஒளியில் புலித்தோல் இருக்கைகள் கனல் போலத் தெரிந்தன.
“காற்றே இல்லை” என்றான் பாண்டு. “மழை நின்றிருக்கிறது அல்லவா? மீண்டும் மழையுடன் காற்றும் வரும்” என்றான் விதுரன். “தாங்கள் உள்ளே இளைப்பாறலாமே!” பாண்டு “இல்லை, நான் இங்கேயே நின்று கொள்கிறேன்” என்றான். “நாளை மார்த்திகாவதியில் தங்களுக்கு அலுவல்கள் உள்ளன” என்று விதுரன் சொன்னான். “நான் கங்கையை பார்க்க விரும்புகிறேன்” விதுரனின் வெண்விழிகளைப் பார்த்து பாண்டு சொன்னான். “இது என் அன்னையின் அகம்.”
விதுரன் சில கணங்கள் கழித்து “ஆம்” என்றான். “விதுரா, ஒருமுறையாவது என் அன்னையர் இந்த நதிக்கரைக்கு வந்திருக்கிறார்களா?” என்றான். “இல்லை. நான் அதைப்பற்றி கேட்டிருக்கிறேன். அவர்கள் கங்கைக்கரைக்கு வந்ததேயில்லை. கங்கை என்னும் சொல்லைச் சொன்னதுமில்லை” விதுரன் புன்னகையுடன் “அம்பை என்ற சொல்லையும்தான்” என்றான்.
“ஆண்களால் அத்தனை முழுமையாக ஒரு சொல்லை விழுங்கிவிடமுடியுமா என்ன?” என்றான் பாண்டு. விதுரன் சிரித்து “ஆண்களுக்கு அத்தனை பெரிய அடிகள் கிடைப்பதில்லையோ என்னவோ” என்றபின் “தங்கள் அன்னை எனக்கு ஆயிரம் ஆணைகள் அளித்து அனுப்பியிருக்கிறார்கள் அரசே” என்றான். பாண்டு “அனைத்தையும் என்னிடம் சொல்லிக்கொண்டே இரு. நான் என் அன்னையின் இருப்பை உணர்ந்துகொண்டே இருப்பேன்” என்றான். “ஆனால் இன்று கங்கையை நான் காண்பேன்… எவர் சொன்னாலும் சரி.”
“ஒன்றுமே தெரியாது. இன்று கருநிலவு பத்தாம் நாள். வானம் மேகங்களால் மூடப்பட்டிருக்கிறது. பாண்டு “நான் பார்க்க முடியும் என்று நினைக்கிறேன்” என்றான். “மழை பெய்யாமலிருக்கட்டும்” என்றபின் விதுரன் அறைக்குள் நுழைந்தான். அவனால் அனைத்து நுண்ணிய உணர்வுகளையும் உடனே வந்து தொட்டுவிடமுடிகிறது. ஆனால் மிக எளிதாக ஓர் அறையை மூடி இன்னொன்றைத் திறப்பவன் போல எளிய அலுவல்களுக்குள்ளும் புகுந்துகொள்கிறான். பிறர் கேட்க இளவரசே என்கிறான். தனியாக அண்ணா என்கிறான். அதற்கேற்ப அவன் தன்னை முற்றாக பகுத்துக்கொள்கிறான். பகுபடாத ஒரு அகம் அவனுக்குள் இருக்கும். எங்கோ. அதை உணரமுடியுமா?
குகர்கள் ஒரே சமயம் ஐம்பது கழிகளால் படித்துறையின் மரச்சட்ட விளிம்பை உந்தித் தள்ளினார்கள். ‘அன்னை கங்கையே! விண்ணின் கங்கையே! அன்னை கங்கையே! பெருகு கங்கையே! அன்னை கங்கையே! அலைக்கும் கங்கையே அன்னை கங்கையே! வாழ்க கங்கையே! அவர்கள் கூச்சலால் இழுக்கப்பட்டது போல படகு மிக மெதுவாக அசைந்து அலைகளில் ஏறி அமர்ந்து மீண்டும் ஏறியமர்ந்து விலகிச் சென்றது. படித்துறை அசைந்தாடி விலக படகின்மீது பாய்மர உச்சியில் அமர்ந்திருந்த ஏதோ பறவை திடுக்கிட்டு எழுந்து கூவியபடி சிறகடித்து கரை நோக்கிச் சென்றது.
குகர்கள் ஒவ்வொரு பாய்க்கயிறாக அவிழ்க்கத் தொடங்கினர் காற்று வீசாததனால் அவிழ்க்கப்பட்ட பாய்கள் கொடிமரத்தைப் பற்றிக்கொண்டு உயிரற்று தொங்கின. அவர்கள் மாறிமாறி கங்கா கங்கா என்று செவியதிர கூவியபடி கயிற்றை இழுத்து பாய்களை விரித்துக் கட்டினர். ஏழு பாய்கள் விலக்கப்பட்டும் கூட கங்கையின் இயல்பான ஒழுக்கிலேயே படகு அசைந்து சென்று கொண்டிருந்தது. அதன் விலாவில் அலைகளின் ஒலி குதிரை நீரருந்துவதுபோலக் கேட்டது.
படகின் அமரத்தில் இருந்த காமதேனுவின் சிலையருகே நின்றவன் சுக்கானைப் பிடித்து திருப்ப துடுப்பு போடுபவர்கள் ‘அன்னை கங்கை!. அலைகள் கங்கை!’ என்று மாறி மாறிக் கூவியபடி துடுப்புகளை உந்தினர். படகு ஒரு குறிப்பிட்ட கோணத்தில் திரும்பியபோது ஏழு பாய்களும் உயிர் கொண்டன. காற்று வீசுவதை உணர முடியவில்லை ஆனால் பாய்களில் காற்று புகுந்து அவை புடைப்பு கொண்டன. படகு புத்தூக்கம் பெற்று எழுந்து கரும்பாறைகளில் இளம்புரவி என நீரலைகளில் தாவி ஏறியது.
பாண்டு கயிற்றைப் பற்றிக்கொண்டு கங்கையை நோக்கியபடி நின்றான். வானத்தின் மேற்கு மூலையில் மேகக் குவியலுக்குள் மெல்லிய ஒளிக்கசிவு தெரிந்தது. பிறைநிலவு இலைகளுக்குள் வெண்பழம் போல உள்ளே இருந்தது. அதை நோக்கி மிதக்கும் மலைபோல ஒரு கருமேகம் சென்று கொண்டிருந்தது. கங்கைக்கரை மரக்கூட்டங்கள் யானைக் கூட்டங்கள் போலத் தெரிந்தன. குங்குமத் தீற்றல்கள் போலத் தெரிந்த விளக்கொளிகள் விலகி விலகிச் செல்ல நீரலைகளின் ஒலி மட்டும் அவனைச் சூழ்ந்தது.
பாண்டு படகின் விலாவருகே மூங்கிலைப்பற்றியபடி நின்றுகொண்டான். நடக்கும் யானையின் கால்கள் உரசிக்கொள்வது போல மிகமெல்லிய நீரொலி ஒன்று படகின் விலாவுக்கு அப்பால் கேட்டுக்கொண்டிருந்தது. படகுடன் கங்கை மிகத்தனியாக ஏதோ சொல்வதுபோல. படகுக்குப்பின்னால் பிளவுண்டு விலகிய நீர் பளபளத்து விரிந்து இரு பெரிய அலைகளாகி பின்னால் வந்த படகுகளைத் தாக்கி பின் அமிழ்த்தி கடந்து சென்றது.
VENMURASU_EPI_92
ஓவியம்: ஷண்முகவேல்
[பெரிதுபடுத்த படத்தின்மீது சொடுக்கவும்]
கங்கையை அப்போது அவன் மட்டுமே பார்த்துக்கொண்டிருந்தான் என பாண்டு நினைத்தான். வேறெவரும் அப்போது அதைப்பார்க்கவில்லை. அவர்களின் பல்லாயிரம் கண்கள் கண்ட கங்கையை அவன் கண்டதேயில்லை. இந்த கங்கை அவனுக்காக மட்டும் பகீரதன் சொல்லுக்கிணங்கி விண்ணிலிருந்து இறங்கி செஞ்சடையன் அனல்கடந்து ஒழுகி இதுவரை வந்திருக்கிறாள். ஆம், இது கங்கை. பல்லாயிரம் நாவாய்களை பாவைகளாக்கி விளையாடிக்கொண்டிருப்பவள். பல்லாயிரம்கோடி வயதானபின்னரும் விளையாட்டு விலகாதவள். பேதை கன்னி அன்னை மூதன்னை.
குகர்கள் தங்கள் துடுப்புகளுடன் பீடங்களில் அமர்ந்து கொண்டனர். “அரசே தாங்கள் துயிலவில்லையா?” என்று மூத்த குகன் கேட்டான். “இல்லை” என்று பாண்டு பதில் சொன்னான். “விடியும்வரை படகு இப்படியேதான் செல்லும் இருளில் ஒன்றும் தெரியாது” என்றான் அவன். பாண்டு அதற்கு பதில் கூறவில்லை. அவன் தயங்கி “நாங்கள் பாடிக்கொண்டே ஓட்டுவோம்” என்றான். பாடும்படி பாண்டு கையை அசைத்தான்.
மூத்த குகன் கைகளைத்தட்டி தாளத்தை தொடங்கி வைத்தான். மற்ற குகர்கள் தொடைகளிலும் மரப்பலகைகளிலும் தாளமிட்டனர். தாளம் மட்டும் தொடர்ந்து ஒலித்தது. அந்தத் தாளமும் துடுப்புகளின் அசைவும் சரியாக இணையும் வரை அவர்கள் தாளமிட்டனர். தாளம் வழியாக தங்கள் தனிச்சிந்தைகளை தனியிருப்புகளை தனியுடல்களை இழந்து அவர்கள் ஒன்றாவது தெரிந்தது. தாளம் இருண்ட சுழியாக ஆகி சுழன்று சுழன்று ஒரு ஆழ்ந்த புள்ளியாக அதனுள்ளிருந்து ஒரு குகனின் கனத்த குரல் எழுந்தது.
‘அன்னையே என்ன நினைக்கிறாய்? எதற்காக நீ மெல்லச் சிரித்தாய்? ஜனகன் மகளே, பூமியின் வடிவே, பொன்றாபெரும்பொறையே என்ன நினைத்தாய்? எதற்காக நீ மெல்லச் சிரித்தாய்?’
தந்தைசொல் காக்க அரசுதுறந்து தவக்கோலம் பூண்டு கங்கைக் கரையில் வந்து நின்றான் ரகுகுல ராமன். அவன் தோளில் வில் நாகபடம் என எழுந்து நின்றது. இடப்பக்கம் மரவுரியாடை புனைந்து நிலவு போல குளிரொளி படர்ந்த கண்களுடன் ஜானகி நின்றிருந்தாள். வலப்பக்கம் வில்லேந்திய வலக்கையும் அம்பு ஏந்திய இடக்கையுமாக அனலென எரியும் விழிகளுடன் நின்றிருந்தான் இளையோன். வெய்யோன் ஒளி அவன் மேனியின் விரிசோதியில் மறைந்தது. கங்கையோ என கருநிறத்தண்ணலின் குளிர்மெய் கண்டு திகைத்தன நீர்ப்பறவைகள்.
‘அன்னையே சொல் எதற்காக நீ புன்னகை செய்தாய்? உன் செவ்வடி மலர்களை என் குளிர்ந்த மெல்விரல்கள் தொடும் போது எதற்காக நீ புன்னகை செய்தாய்?’
கங்கைக்கரையில் ஆயிரம் நாவாய்களின் தலைவனாகிய பெருவேடன் குகன் கார்குலாம் நிறத்தானின் கால்தொட்டுச்செல்லும் கங்கையின் கைவிரல்களைக் கண்டான். முளைவிட்டெழும் பனைபோல இருகைகளை தலைமேல் கூப்பி கண்களில் இன்பநீர் வார அவனருகே சென்று வணங்கினான். ‘எந்தையர் செய்தவத்தாலும் என்னூழ் கனிந்ததாலும் இந்நிலம் ஏகினாய் அண்ணலே… இங்கு என் படகுகளாகி நிற்கும் ஆயிரம் மரங்களில் அமுதக்கனி விளைந்த அந்த மரம் ஏதென்று உரைப்பாய்’ என்றான்.
விண்புனல் பொழி விழியன் தண்ணொளி நகைசெய்து ‘ஊழ்வினையால் இங்கெய்தினோம் துணைவனே. எவ்வூழும் நல்லூழே என உன்னைக் கண்டதும் அறிந்தேன். உன் மரங்களில் எது எளியதோ அதை எனக்கென ஒருக்குக’ என்றான். பாலுடை மொழியாளும் பகலவன் அனையானும் நின்ற இடம் நோக்கி தன் கைதொட்ட முதல் படகை இழுத்துவந்து நிறுத்தினான். ‘அறத்தின் மூர்த்தியே என் படகில் உன் சேவடி தீண்டுவதாக. என் குலமெல்லாம் உன் ஆசியே பொலிவதாக என்றான்.
‘சொல் அன்னையே நீ சிரித்தது எதற்காக? உன் செவ்வண்ணச் சிற்றடி எழுந்து படகில் ஊன்றியபோது மெல்ல பறந்த கருங்குழல் சுரிகளை கையால் ஒதுக்கி நீ கண்மலர்ந்தது எதற்காக?’
கல்தொடுத்தன்ன போலும் கழலினான் காடாளும் குகன் தன் பெரிய துடுப்பை எய்து படகை நீரில் இறக்கினான். அன்னையே என்று என்னையழைத்து உந்தி முன்னகர்த்தினான். படகுக்கு மேல் எழுந்தது பாய்ச்சிறகு ‘என்றுமழியா இவ்வொழுக்கு போல காலகாலங்கள் கடந்தோடட்டும் ஐயனே உன் புகழ்’ என்றான். எறிதிரை இதழ் விரித்து மலரென ஒளிவிட்ட நதிமீது தும்பியென பறந்து மொய்த்துச்சென்றது படகு.
‘அன்னையே சொல்லமாட்டாயா? உன் துயர்முறுவல் எதற்காக? உன் தோள்களில் என் சிற்றலை முத்துக்களை சிதறியாடுகின்றேன். உடல் சிலிர்த்து உன் தலைவனருகே நகர்கிறாய். சொல், உன் துயரமுறுவல் எதற்காக?’
நீரலைகளில் எழுந்தமர்ந்தது படகு. மழையெழும் மாமலையென கரிய குகனின் உடலில் வியர்வை வழிந்தது. ‘உன் பெயர் சொல்லி வியர்வை சிந்தினேன்… உன் பெயர் சொல்லி விழிநீர் சிந்துவேன். என் ஐயனே உன் பெயர் சொல்லி செந்நீரும் நான் சிந்த வேண்டும்’ என்றான் பிச்சராம் அன்ன பேச்சினான்.
‘சொல்லுக தாயே, இந்த மென்னகை எதற்காக? எழுந்த பல்லாயிரம் மீன் விழிகளால் சூழ்ந்து உன்னைப் பார்த்து பிரமிக்கின்றேன். உன் மென்னகை எதற்காக?’
மறுகரை சேர்ந்த படகு விரைவழிந்து பாய் மடித்து விலா காட்டியது. கரை தொட்ட அம்பியின் கயிறை இழுத்து சேற்று விளிம்பில் ஏற்றி நிறுத்தினான் ஏவலன். இராமனின் கால் சேற்றில் படாமலிருக்க கரையோரத்து மரமொன்றை இழுத்துப் போட்டான் குகன். வில்லை தோளிலிட்டு தம்பிக்கு வழிகாட்டி சீதைக்கு கரம்காட்டி ராமன் மறுகரை சென்றான. குகனை அருகணைத்து முன்பு உளெம் ஒரு நால்வேம், இனி நாம் ஐவர்கள் உளரானோம் என நெஞ்சுறத் தழுவிச்சொல்லி நெடுமரம் நிறைகானுள் நுழைந்தான் அறமென மண்நிகழ்ந்தான்.
‘உலகீன்றவளே ஏன் நகைத்தாய்? பெண்ணுடலை கணவனும் நானும் மட்டுமே காண்கிறோம். பெண் உள்ளத்தை காண்பவளோ நான் மட்டுமே. சொல்லுக தேவி நீ நகைத்தது எதற்காக?’
உன் பாதங்கள் தொட்டுச் செல்லும் பூமி அதையறியும். உன் மேனி வருடிச் செல்லும் காற்றும் அதையறியும். அன்னையே உன்மேல் ஒளி பொழிந்து விரியும் வானும் அதையறியும்.
நானுமறிவேன் பொற்பரசியே, நீ அனல் கொண்ட சொல்லெறிந்து நிலம் பிளந்து மறைகிற் எரிவாயின் தழல் தணிக்க போதாது விண்பிளந்து நான் மண்நிறைக்கும் நீரெல்லாம். அலையடித்து அலையடித்து தவிப்பதன்றி நான் என் செய்வேன் தாயே?
நடுங்கும் குரலில் குகன் பாடியதும் அனைவரும் கைகளைத் தட்டியபடி ஒத்த குரலில் சேர்ந்து பாடினர். ‘அன்னையின் அலையெல்லாம் ஆதியன்னை கதையல்லவா? அன்னையவள் ஒளியெல்லலாம் சீதையின் துயரல்லவா?’
பாண்டு தன் உடல அதிர்வதையும் பற்கள் கிட்டித்துக் கொள்வதையும் அறிந்தான். கைகளை பாய்க்கயிற்றில் கோர்த்துக் கொண்டான். விழுந்துவிடக்கூடாது என்று தன் உடலுக்கு தன் முழுத் தன்னுணர்வாலும் ஆணையிட்டான. காலே, கையே, இடையே, நெஞ்சே, என்னோடு நில்லுங்கள். என்னை விட்டுவிடாதீர்கள். என்னை உதறிவிடாதீர்கள் என் எண்ணங்களே. என்னை வீசி விடாதீர்கள் என் ஆழங்களே…
‘கங்கை, கங்கா கங்கா! கங்கையின் பெயரே சீதா சீதா சீதா !
சீதா சீதா சீதா! அன்னை சீதையின் பெயரே கங்கா கங்கா கங்கா!
பெண்ணறிந்தவை எல்லாம் தானறிந்தவளே கங்கா! மண்ணறிந்தவை எல்லாம் தானறிந்தவளே கங்கா! ஆம் கங்கா கங்கா கங்கா!
வேகமான கைத்தட்டல்களுடன் அவர்கள் பாடிக் கொண்டிருந்தனர் அமர்ந்து கொண்டே மிக விரைவான நடனத்தை ஆடிச் சுழன்றனர். காற்றில் உலைந்தாடும் நாணல்கள் போல. ஒற்றைக்குரலாக. அக்குரல் அவர்களுடையதல்ல. மிகமிகத் தொன்மையானது. ஆம், தவளைக்குரல். ஏன் அதை வேதமென்றான் மைத்ராவருணி வசிட்டன் என்று அப்போது புரிந்தது. அவை கோடிமனங்களின் ஒற்றைக்குரல். அவையே வேதமாக முடியும். தனித்தொலிப்பது ஒருபோதும் விண்ணகப்பேராற்றல்களைச் சென்றடைவதில்லை.
கண்ணீரின் ஒளியே கங்கா கங்கா கங்கா! ஆம் கங்கா கங்கா கங்கா! துயரத்தின் குளிரே கங்கா கங்கா கங்கா! ஆம் கங்கா கங்கா கங்கா!. தனிமையின் விரிவே கங்கா கங்கா கங்கா! ஆம், கங்கா கங்கா கங்கா கங்கா! சொல்லாத மொழியே கங்கா கங்கா கங்கா! ஆம், கங்கா கங்கா கங்கா!
குகர்களின் உடல்நிரை இருண்டு வருவதை பாண்டு முதலில் உணர்ந்தான். அவர்களுக்குப் பின்னால் கங்கை மேலும் மேலும் ஒளி கொண்டது. நதியின் ஆழத்திலிருந்து அந்த ஒளி பரவி வந்து அலைகளில் ததும்பியது. அலைகள் ஆழத்தை மறைக்கவில்லை. மென் காற்றால் சிலிர்க்கும் செம்பட்டுபோல. பீலித்தொடுகையிலேயே அதிரும் சருமபரப்புபோல கங்கையின் அடித்தட்டு தெரிந்தது.