அன்புடையீர் நல்வரவு ,

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,
தேவாங்கர்களாகிய நாம் அனைவரும் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்து வந்தாலும் தேவாங்கர் என்னும் உணர்வு நம்மை ஓன்று சேர்க்கிறது. மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்ற வாக்கிற்கு இணங்க காலத்திற்கு ஏற்ப நாம் நமது குல நிகழ்வுகளை தகுந்த தொழில்நுட்பத்தை கொண்டு பதிவு செய்வது அவசியமான ஓன்று.

இந்த புதியபக்கம் நமது தேவாங்க சமூக செய்திகள்,சடங்குகள்,வரலாறு & அண்மை நிகழ்ச்சிகளை அறிந்துகொள்ளவும் தேவைப்படும் போது பார்க்கவும் உருவாக்கப் பட்டுள்ளது.
உறவுகள் தங்கள் பகுதியில் உள்ள கோவில்&குல தெய்வம் கோவில்களில் நடைபெறும் திருவிழா நிகழ்ச்சிகள் மற்றும் படங்களை இடம்பெற செய்யவும்.

தங்கள் கருத்துக்கள் இந்த தளத்தை மேன்படுத்த உதவும் ஆகயால் தயவுசெய்து கருத்திடவும் . ( தமிழில் கருத்திட தமிழ் எழுதியை பயன்படுத்தவும்)

நன்றி.

3/27/14

பகுதி மூன்று : புயலின் தொட்டில்[ 7 ]

பகுதி மூன்று : புயலின் தொட்டில்[ 7 ]
மகதமன்னன் விருஹத்ரதன் இளைஞனாக இருந்தபோது இமயத்தின் அடிவாரக் குன்று ஒன்றில் மலையேறும் பயிற்சியில் ஈடுபட்டிருக்கையில் உயர்ந்த பாறை ஒன்றின் இடுக்கில் செம்பருந்தின் கூடு ஒன்றைக் கண்டடைந்தான். அதனுள் இரு சிறகுமுளைக்காத குஞ்சுகள் அன்னை கொண்டுவரும் உணவுக்காக ஏங்கி கூண்டிலிருந்து எம்பி எம்பி மெல்லிய ஒலியெழுப்பிக்கொண்டிருந்தன. கீழே மலைமடம்பு ஒன்றுக்குள் கண்மூடி இளங்காற்றேற்றுப் படுத்திருந்த விருஹத்ரதன் அந்த மெல்லிய ஒலியைக்கேட்டு தன் வழிகாட்டியான வேடனிடம் “அது என்ன ஒலி?” என்று கேட்டான்.
வேடன் செவிகூர்ந்தபின் “அது செம்பருந்துக்குஞ்சுகளின் ஒலி. அவை தாயை எதிர்பார்த்திருக்கின்றன. ஆனால் இயல்பாக அவை ஒலியே எழுப்புவதில்லை. செம்பருந்து சக்ரவர்த்திகளைப்போல அமைதியானது. அந்தத் தாய்ப்பறவை அனேகமாக எங்கோ இறந்திருக்கும். பசியில்தான் இவை ஒலியெழுப்புகின்றன” என்றான். அந்தக்குஞ்சுகளை உடனே பார்க்கவேண்டுமென விருஹத்ரதன் ஆசைகொண்டான். “அரசே, செம்பருந்து எப்போதும் அணுகமுடியாத பாறைநுனியிலேயே கூடுகட்டும். அங்கே செல்வது மனிதனால் முடியாதது” என்று வேடன் சொன்னான்.
முடிவெடுத்தபின் பின்வாங்காதவனாகிய விருஹத்ரதன் வேடனைத் தூண்டி பாறைவிளிம்புக்குச் செல்லவைத்து செம்பருந்தின் கூட்டை கண்டுபிடித்தான். கீழே ஒரு காதம் ஆழத்தில் பச்சைவிரிப்பு போல காடு தெரிய மேகங்கள் உரசியதனால் கருமையில் ஈரம் வழிய நீட்டி நின்றிருந்த பாறை ஒன்றின் விளிம்புத் துருத்தலில் அந்தக்கூடு இருந்தது. “அரசே, அக்குஞ்சுகளுக்கு எதிரிகள் இல்லை. அவற்றின் அன்னை வராததனால் அவை பசித்து இறக்குமே ஒழிய அவற்றை எவ்வுயிரும் தீண்ட முடியாது” என்றான் வேடன்.
விருஹத்ரதன் பட்டுநூல் முறுக்கிச் செய்த கயிற்றை மேலே நின்றிருந்த பாறை நுனியில் கட்டிவிட்டு அதைப்பற்றியபடி அந்த வழுக்கும் ஈரம் வழியாக இறங்கினான். இருமுறை அவன் கால்கள் வழுக்கினாலும் அவன் கீழே விரிந்த பாதாளத்தைப்பார்க்காமல் அந்தக்கூட்டையே நோக்கியபடிச் சென்றதனால் அவனால் அங்கே சென்று சேரமுடிந்தது. அந்தக்கூட்டுக்குள் இருந்த  ஒரு குஞ்சு இறந்திருந்தது. மற்ற இரு குஞ்சுகளும் இறக்கும் நிலையில் இருந்தன.
விருஹத்ரதன் அக்குஞ்சுகளை தன் ஆடையில் கட்டிக்கொண்டு மேலேறினான். அவற்றுக்கு பாறையில் ஒட்டியிருந்த புழுக்களைப் பிடித்து கசக்கி ஊட்டியபோது அவை பசியடங்கி அவன் உடலின் வெம்மைக்குள் ஒண்டிக்கொண்டன. அவன் அக்குஞ்சுகளை தன்னுடன் தன் தலைநகரமான ராஜகிருகத்தின் அரண்மனைக்குக் கொண்டுவந்தான். சுபட்சன், சுகோணன் என்னும் அந்த இரு செம்பருந்துகளும் அரண்மனை மருத்துவர்களாலும் சேவகர்களாலும் பேணப்பட்டு அரசகுமாரர்களைப்போல வளர்ந்தன. அவற்றுக்கு காட்டுக்குள் வேட்டையாடவும், நெடுந்தூரத் தூதுசெல்லவும் அரண்மனையிலும் கோட்டைவளாகத்திலும் பறந்து வேவுபார்க்கவும் பயிற்றுவிக்கப்பட்டது. அவை குதிரையிலும் ரதங்களிலும் அமர்ந்து பயணம்செய்யவும் கற்றிருந்தன.
விருஹத்ரதன் வேட்டைக்குச் செல்லும்போது தோளிலும் முழங்கையிலும் அணிந்த தோலுறைக்கு மேல் அவற்றில் ஒன்று அமர்ந்திருக்கும். இன்னொன்று தளபதி ஒருவனின் தோளில் இருக்கும். காட்டை அடைந்ததும் அவற்றுக்கு மன்னன் ஆணையிடுவான். அவை காட்டுக்குமேல் பறந்து வேவுபார்த்துத் திரும்பி வந்து வேட்டைமிருகங்கள் இருக்குமிடத்தை கூவியறிவிக்கும். அவற்றுக்குக் கீழே மன்னனின் வேட்டைக்குழு குதிரைகளில் பாய்ந்துசென்று வேட்டையாடும். சுபட்சனும் சுகோணனும் போர்களில் மன்னனை பாதுகாத்தன. நெடும்பயணங்களில் அவனை வழிநடத்தின.
இருபறவைகளையும் பாரதவர்ஷத்தின் அனைத்துப் பெருநகரங்களுக்கும் ஒற்றர்கள் வழியாக அனுப்பி அங்கே சென்று மீள்வதற்கான பயிற்சியை மகதத்தின் பறவைநிபுணர்கள் அளித்திருந்தனர். அவற்றின் அலகுகளின் நுனியிலும் காலின் பின்விரலிலும் கூரிய இரும்புமுனைகள் மாட்டப்பட்டிருந்தமையால் வானில் அவற்றைத் தடுக்கும் பறவைகள் எவையும் இருக்கவில்லை. இணையற்ற வல்லமை அளிக்கும் நிமிர்வே பிற பறவைகளை அவற்றை அஞ்சி ஓடச்செய்தது. எப்போதேனும் அறியாது எதிர்க்கவந்த கழுகுகளோ வல்லூறுகளோ அக்கணமே உடல்கிழிபட்டு வானில் சுழன்றிறங்க அவற்றை வானிலேயே சுழன்றுவந்து கால்களால் கவ்விப்பிடித்துக் கொண்டு சென்று மரக்கிளை உச்சியில் அமர்ந்து கிழித்துண்டன சுபட்சனும் சுகோணனும்.
சுகோணனின் முதல் பெரும்பயணம் அஸ்தினபுரியில் இருந்து ராஜகிருகத்துக்கு ஒற்றன் காளன் அனுப்பியசெய்தியுடன் பறந்ததுதான். பன்னிருநாட்களாக அஸ்தினபுரியின் வடபகுதியில் இருந்த புராணகங்கை காட்டில் வேட்டையாடியபின் இரவில் அரண்மனையை ஒட்டிய மரக்கிளையில் சேக்கேறியது சுகோணன். ஒவ்வொருநாளும் அது அங்கிருப்பதை காளன் உறுதிசெய்துகொண்டான். பீஷ்மரும் சத்தியவதியும் உரையாடியதை காளன் கண்டான். மறுநாள் மாலைக்குள் அவ்வுரையாடலின் சாரம் அரண்மனையின் சூதப்பணியாளர்களுக்குள் கிசுகிசுப்பாகப் பரவியது. பீஷ்மர் வியாசரைக்காணச் சென்றிருக்கிறார் என்ற தகவலை அறிந்ததும் காளன் அவர் திரும்பி வருவதை எதிர்பார்த்துக்காத்திருந்தான். பீஷ்மர் வந்ததுமே ரதங்களைப்பூட்ட ஆணையிட்டதும் அவர் சுயம்வரத்துக்காக காசிக்குச் செல்லவிருக்கிறார் என்ற ஒற்றுசெய்தியை அவன் மந்தண எழுத்தில் எழுதிக்கொண்டான்.
மந்தணச்செய்தி எழுதப்பட்ட தோல்சுருள் உடலின் தூவிகளுக்குள் சுற்றிக்கட்டப்பட்டு வழியனுப்பப்பட்ட சுகோணன் நள்ளிரவில் சிறகுவிரித்துக் கிளம்பியது. அதிகாலையில் அது கீழே கங்கையின் படித்துறை ஒன்றில் புதுக்குருதியை அறிந்துகொண்டது. ஏழுமுறை வானில் சிறகுவிரித்து வட்டமிட்டபின் மெல்ல காற்றின் படிக்கட்டுகளில் வழுக்கி இறங்கி அருகே இருந்த பாறை விளிம்பில் அமர்ந்து கவனித்தது. வெண்பசு ஒன்று முக்காலும் உண்ணப்பட்ட நிலையில் படித்துறையில் கிடப்பதைக் கண்டது. பசுவின் தோல்சிதர்களும் தசைத்துணுக்குகளும் அங்கே பரவிக்கிடந்தன. அதன் உண்ணப்படாத தலையின் கொம்புகளும் சரிந்திருக்க வாய் திறந்து மஞ்சள்படிந்த சப்பைப் பற்கள் தெரிந்தன. நீலம்பரவிய நாக்கு ஒருபக்கமாகச் சரிந்து வெளியே கிடந்தது. அதன் கண்கள் விழித்திருந்தாலும் உயிரற்றிருந்தன.
அந்தப்பகுதியைச் சுற்றி பாறை மேலும் மரங்களிலும் முடியற்ற கழுத்துகளை உடலுக்குள் இழுத்துக்கொண்டு பாம்பு போன்ற தலையுடன் கழுகுகள் அமர்ந்திருப்பதையும் புதர்களுக்குள் கழுதைப்புலிகள் பொறுமையில்லாமல் நாக்கை நீட்டியபடி எழுந்தும் அமர்ந்தும் கால்களால் மண்ணைப்பிராண்டியும் காத்திருப்பதையும் கண்டது. அதன்பிறகுதான் பாறைகளுக்கு நடுவே பசுவை நோக்கியபடி செம்பிடரித்தலை காற்றில் பறக்க பெரிய கிழச்சிங்கம் ஒன்று படுத்திருப்பதைக் கண்டது.
சிங்கம் கால்களை நீட்டி அதன்மேல் தலையை வைத்து அடிக்கடி காதுகளை அசைத்து மொய்க்கும் பூச்சிகளை விரட்டியபடி படுத்திருந்தது. மெல்ல அதன் கண்ணிமைகள் கீழிறங்கி தலை படியத்தொடங்குகையில் விழித்துக்கொண்டு மெல்ல உறுமியபடி தலையைக் குடைந்தது. நாக்கால் தன் கால்களையும் பாதங்களையும் நக்கிக்கொண்டது. அப்படியே மல்லாந்து நான்கு கால்களையும் மேலே தூக்கி முதுகை மண்ணில் புரட்டிக்கொண்டது. மீண்டும் எழுந்து முன்னங்கால்களை நீட்டி முதுகை நிலம்நோக்கி வளைத்து நிமிர்ந்தபின் வாயை அகலத்திறந்து கொட்டாவி விட்டது. ஆர்வமில்லாமல் எழுந்து வந்து பசுவைச் சுற்றியபின் ஆங்காங்கே முகர்ந்தும் மெல்லக்கடித்தும் சுவைத்தபின் மீண்டும் சென்று படுத்துக்கொண்டது.
சுகோணன் அதைப்பார்த்துக்கொண்டு காத்திருந்தது. சிங்கம் அவ்வுணவை இழக்க விரும்பவில்லை என்பதை அது புரிந்துகொண்டது. ஆனால் அது துயிலாமலிருக்கவும் முடியாது. தொடர்ச்சியாக அது அப்பசுவைத் தின்றுகொண்டிருந்தது என்பது சிங்கத்தின் நடையின் தொய்விலிருந்தே தெரிந்தது. சுகோணன் சிங்கம் மீண்டும் சென்று இன்னொரு இடத்தில் படுத்துக்கொண்டு கால்களை நீட்டுவதையும் மீண்டும் கொட்டாவி விடுவதையும் கண்டது. மெல்ல அதன் தலை தரையில் படிந்து வயிறு சீராக ஏறியிறங்கத் தொடங்குவதைக் கண்டபின் சிறகுகளை விரித்து ஓசையில்லாமல் காற்றில் இழிந்து மண்ணில் இறங்கி நகங்கள் விரிந்த கால்களை மெல்லத்தூக்கி வைத்தும் சிறகை விரித்து எம்பியும் பசுவின் அருகே வந்தது.
சுகோணன் பசுவின் குடலைக்கடித்து இழுத்து வெட்டிக்கொண்டிருந்தபோது கழுதைப்புலிகள் எக்காள ஒலியெழுப்பி குதித்தன. ஒரு கழுகு பெரிய சிறகுகள் படபடக்க அருகே வந்தமர்ந்தது. இன்னொருகழுகு அதனருகே வந்தமர அக்கழுகு சீறி அதை விரட்டியது. அவ்வொலிகேட்டு சிங்கம் விழித்துக்கொண்டு கர்ஜனை செய்தது. அதன் பெரிய வாய்க்குள் குருதிபடிந்த பற்கள் வெளுத்துத் தெரிந்தன. சிங்கம் பிடரியை சிலுப்பிக்கொண்டு எழுந்து பாய்ந்து வருவதற்குள் கழுகுகள் வானில் எம்பிவிட்டன. கழுதைப்புலிகள் புதர்களுக்குள் மறைந்தன.
சுகோணன் பெரிய துண்டாக வெட்டி எடுத்த குடல்ஊனுடன் எழுவதற்குள் சிங்கம் அருகே வந்துவிட்டது. அது கைநீட்டி அறைந்ததை சிறகடித்து விலகித் தவிர்த்த சுகோணனின் வாயிலிருந்து ஊன்துண்டு கீழே விழுந்தது. கடும் சினத்துடன் சிறகடித்தபடி முன்னால் பாய்ந்த சுகோணன் சிங்கத்தின் வலப்பக்கத்து விழியை தன் இரும்புமுனையுள்ள அலகால் கொத்தியது. கண்ணுக்குள் சென்ற அலகை அது இழுத்தெடுத்தபோது தசை அறுபட சிங்கம் வலியுடன் உறுமியபடி காலை ஓங்கி மண்ணில் அறைந்துகொண்டு சுழன்றது. சுகோணன் அந்த ஊன்துண்டைக் கவ்வி எடுத்துக்கொண்டு சிறகடித்து வானிலேறிக்கொண்டது.
சுகோணன் வந்துசேர்ந்த மறுநாள் சுபட்சன் அஸ்தினபுரிக்குச் சென்றது. பீஷ்மர் இரண்டு இளவரசிகளுடன் வந்த செய்தியை மகதத்துக்குக் கொண்டு மீண்டது. அம்பை நகர்நீங்கிய செய்தியை மீண்டும் சுகோணன் கொண்டுசென்றது. அதன்பின் அவை இரண்டும் நூற்றுக்கணக்கான முறை அஸ்தினபுரிக்கும் ராஜகிருகத்துக்கும் பறந்தன. பீஷ்மர் காந்தாரத்துக்குச் செல்லவிருக்கும் செய்தியுடன் சென்ற சுகோணன் ராஜகிருகத்தின் அரண்மனை முகடில் சென்று இறங்கிய அன்றுதான் அங்கே காந்தாரத்தின் அமைச்சரான சுகதர் ராஜகிருகத்தில் இருந்து தூது மறுக்கப்பட்டு மனச்சோர்வுடன் கிளம்பிச்சென்றார்.
VENMURASU_EPI_67
ஓவியம்: ஷண்முகவேல்
[பெரிதுபடுத்த படத்தின்மீது சொடுக்கவும்]
சுகதர் வந்ததும் மீண்டதும் மகத இளவரசனான பிருகத்ரதனுக்குத் தெரியாது. அவன் அப்போது கங்கை வழியாக படகில் வங்கம் சென்று கடலை அடைந்து கடல்வழியாக கலிங்கம் செல்வதற்காக கலம் காத்து இருந்தான். கலிங்கத்தின் பாலூர் துறைமுகத்தில் இருந்து கடல்வழியாக வேசரத்துக்கும் சோழநாட்டுக்கும் சென்று மீளவேண்டுமென அவன் எண்ணியிருந்தான். மகதத்தில் இருந்து அவன் கிளம்பியநாள்முதல் ஒவ்வொரு நதியும் கலங்களும் துறைகளும் பெரிதானபடியே வருவதைத்தான் கண்டான். கங்கையின் நடுவே செல்லும் நூறு பாய்கொண்ட மரக்கலங்கள் அவன் அரண்மனை வளாகத்தைவிடப் பெரிதாக இருந்தன. கங்கையின் இருகரைகளும் முழுமையாகவே மறைய முற்றிலும் நீராலான பரப்பில் அவன் கலம் சென்றுகொண்டிருந்தது.
கங்கை சென்று சேர்ந்த கடல்முனையில் இருந்த தாம்ரலிப்தி துறைமுகம் ராஜகிருகத்தைவிட இருமடங்கு பெரியது. நூறு மரக்கலங்கள் ஒரேசமயம் கரைதொடும்படி அமைக்கப்பட்டிருந்த தாம்ரலிப்தியின் துறைகளில் வயலோரமரத்தை அணுகும் கொக்குக்கூட்டம் போல யவன வேசர பீதர்நாட்டு நாவாய்கள் பாய்மடக்கி அணைந்திருந்தன. துறைமுகத்தருகே பெரிய கடலைநோக்கி சிறிய கடல் வந்து சேர்வதுபோலத் தெரிந்த கங்கைக் கழிமுகத்தில் ஆற்றுக்குள் தடிகளை நாட்டி எழுப்பப்பட்டிருந்த மரக்கட்டடங்களில் ஒன்றில் அவன் வணிகனின் வேடத்தில் தங்கியிருந்தான். அவனுடன் அவனுடைய துணைவனான கஜன் வேலையாள் வேடத்தில் இருந்தான். அவர்கள் வந்த கலம் பொருட்களை இறக்கியபின் பாலூர்துறைக்கான பொருட்களை ஏற்றும்பொருட்டு துறைமுகத்தில் காத்து நின்றிருந்தது.
தாம்ரலிப்திக்கு வந்துசேர்ந்த அன்றே பிருகத்ரதன் அனுப்பிய வெண்புறாவான ஷீரை ராஜகிருகத்தில் இருந்து அவனது பிரியத்துக்குரிய அமைச்சர் பௌரவனின் செய்தியுடன் திரும்பி வந்தது. அதில் சுகதரின் தூது பற்றி சொல்லப்பட்டிருந்ததை வாசித்ததும் பிருகத்ரதன் திகைப்புடன் தன் துணைவனிடம் அந்த ஓலையைக் கொடுத்தான். நான்குநாட்கள் முன்னர் படகில் வரும்போதுதான் அவர்கள் காந்தாரத்தைப்பற்றிப் பேசிக்கொண்டிருந்தனர். கஜன் “இளவரசே, இங்குள்ள எந்த ஷத்ரியகுலத்துடன் நாம் மண உறவுகொண்டாலும் நாம் அஸ்தினபுரியிடமிருந்து காக்கப்படப் போவதில்லை. அதற்கு வல்லமை உடைய ஒரே அரசு காந்தாரம்தான்” என்றான்.
இருபக்கங்களிலும் அலையடித்த நீர்வெளியைப் பார்த்துக்கொண்டு படகின் முனம்பில் நின்றிருந்த பிருகத்ரதன் சொல் என்பதுபோல தலையசைத்தான். “நாம் உண்மையில் ஒரு மிகச்சிறிய அரசு அரசே. கங்கைக்கரை ஷத்ரியர்கள் உலகம் செல்லும் திசையை அறியாமல் வயதுவந்தபின்னும் தொட்டிலில் தூங்கும் குழந்தைகளைப் போலிருக்கிறார்கள். வங்கமும் கலிங்கமும் கடல்வணிகத்தால் செழிக்கின்றன. அவர்களின் கருவூலங்கள் மழைக்கால ஏரிகள் போல வீங்கிக்கொண்டிருக்கின்றன. நாம் வேடர்களிடமும் ஆயர்களிடமும் வரி கொண்டும் படகுகளில் சுங்கக்கொடி கட்டியும் நாணயங்களை எண்ணிக்கொண்டிருக்கிறோம். தங்களை இந்தப்பயணத்துக்கு நான் அழைத்துச்செல்வதே தாங்கள் இன்றைய சூழலை உணரவேண்டுமென்பதற்காகத்தான்” என்றான்.
“அதை இந்த நாவாயைப் பார்த்ததுமே உணர்ந்துகொண்டேன். நம் துறையில் அணையும் நூறு படகுகள் இந்த ஒரு கலத்துக்கு நிகர்” என்றான் பிருகத்ரதன். “ஆம் அரசே, இனி நாவாய்களே மன்னனின் வல்லமையை வகுக்கப்போகின்றன. நதிகளும் வயல்களும் அல்ல, கடலே இனி பொன்விளையும் வெளி” பிருகத்ரதனின் விழிகளை நோக்கி கஜன் சொன்னான். “நமக்குத்தேவை பெருநாவாய்கள். அவற்றை நாமே கட்டவேண்டும், அல்லது விலைகொடுத்துப் பெறவேண்டும். மகதத்திடம் விற்கும்பொருட்கள் குவிந்துள்ளன. நாவாய்களை நாம் அடைந்தால் மிகவிரைவில் நமது கருவூலத்தை நோக்கியும் செல்வத்தின் மடைகள் திறக்கும்.”
“ஆனால் இத்தகைய பெருநாவாய்களை நாம் எப்படி வாங்கமுடியும்?” என்று பிருகத்ரதன் வினவினான். “அதற்கான செல்வத்தை நாம் கண்டடையவேண்டும். அதற்கு நாம் வல்லமை கொள்ளவேண்டும். அத்தகைய வல்லமையை நாம் பெறுவதற்குரிய வழிகள் இரண்டே. ஒன்று நாம் காந்தாரத்துடன் மணஉறவில் இறங்கவேண்டும். காந்தாரம் வடக்கே உத்தரபதத்தை முழுக்க ஆட்சி செய்கிறது. அந்த வணிகப்பாதை பொன்வெள்ளம் பெருகும் ஆறுபோன்றது. காந்தாரத்திடமிருக்கும் செல்வத்தில் ஒருபகுதி போதும் நாம் நூறுநாவாய்களை வாங்கி இந்த கங்கையை நிறைக்க முடியும்.”
திகைத்து நின்றிருந்த பிருகத்ரதனை நோக்கி கஜன் சொன்னான் “காந்தார இளவரசிக்கு அவர்கள் மணமகன் தேடிக்கொண்டிருக்கிறார்கள். வசுமதி என்ற பேருள்ள அவள் அழகி என்றனர் சூதர். நாம் கவனம்கொள்ளவேண்டியவன் அவள் தம்பி சகுனி. மூன்று இளவரசர்கள் இருந்தும் அவனையே சௌபாலன் என்கின்றனர் மக்கள். அவன் இளையவன் ஆதலால் காந்தார முடியுரிமை அற்றவன். ஆனால் மண்ணாளும் கனவுகொண்ட ஷத்ரியன் அவன். புதுநிலங்களை நோக்கி அவன் கனவு விரியும். அவனுடைய கண்கள் கங்கைக்கரைமேல் படிந்துவிட்டன என்கிறார்கள். அவனைவிட சிறந்த அரசத்துணைவன் உங்களுக்கு அமையப்போவதில்லை.”
பிருகத்ரதன் அந்த எண்ணத்தையே நெஞ்சில் மீட்டிக்கொண்டிருந்தான். ஏழ்நிலை மாடங்கள் செறிந்த தாம்ரலிப்தியின் நதிக்கரை அவனைநோக்கி லட்சம் நாவாய்களை உள்ளடக்கிய நாவாய் போல எழுந்து நெருங்கி வரக்கண்டதும் சொல்லிழந்து படகின் கயிற்றைப்பற்றியபடி விழிவிரிந்து நின்றான். தன் நாவாய் அந்தப்பெருந்துறையில் ஒரு வேப்பிலைச்சருகு போல மிதந்து நெருங்கியபோது அவன் சிறுமையுடன் திரும்பி கஜனிடம் “இதென்ன மயன் பணித்த துறைநகரா?” என்றான்.
“அரசே, காந்தார மரச்சிற்பிகளைத்தான் நாம் பாரதவர்ஷம் முழுக்கவே கொண்டுசென்று அரண்மனைகளை கட்டிக்கொண்டிருக்கிறோம்” என்றான் கஜன். பெருமரம் விழுந்து அலையெழுந்த சிறுகுளம்போல அதிர்ந்த மனத்துடன் பிருகத்ரதன் கஜனின் தோளைப்பற்றிக்கொண்டான். “தோழனே, நான் இந்நகரை வெல்ல வேண்டும். இந்நகரம் எனக்கு வேண்டும். இந்நகரின் அத்தனை மாளிகை முகடுகளிலும் மகதத்தின் கொடி பறக்கவேண்டும்” என்றான். “அரசே, அது முடியாதது அல்ல. கலிங்கத்தையே மகதம் வெல்லும் நாள் வரும்” என்றான் கஜன்.
கஜன் ஷீரை கொண்டு வந்த செய்தியை வாசித்தபின் “இதில் வியப்படைய ஏதுமில்லை அரசே” என்றான். “ஒரு ஷத்ரியமனம் இப்படித்தான் செயல்படும். தங்கள் தந்தை மட்டுமல்ல, ஆரியவர்த்தத்தின் ஷத்ரியர் அனைவருமே இந்த வாய்ப்பை இப்படித்தான் பயன்படுத்திக்கொண்டிருப்பார்கள்.” பிருகத்ரதன் “குதிரைச்சவுக்கை அனுப்பும் எண்ணம் என் தந்தையின் நெஞ்சில் பிறந்தது அல்ல. அது தேவபாலரின் செய்கை” என்றான். “யார் செய்ததாக இருந்தாலும் மிகப்பெரிய தீங்கு நிகழ்ந்துவிட்டது. பாரதவர்ஷத்தின் வரலாற்றிலேயே ஆற்றலும் கனவும் மிக்க அரசகுமரன் ஒருவனை நாம் அவமதித்துவிட்டோம். அவன் அதை அறைகூவலாக மட்டுமே எடுத்துக்கொள்வான்.”
பிருகத்ரதன் “என் தந்தை இதற்குள் இச்செய்தியை சூதர்களைக்கொண்டு அனைத்து ஷத்ரியர்களிடமும் கொண்டு சேர்த்திருப்பார். ஒரு கோட்டையைக் கைப்பற்றிய மகிழ்வுடன் அந்தப்புரத்தில் அமர்ந்து யவனமதுவை அருந்திக்கொண்டிருப்பார். சூதர்கள் சூழ்ந்து அவர் வரலாற்றை உருவாக்கிவிட்டார் என்று பாடுவார்கள்.” கஜன் சிரித்து “என்ன ஐயம்? ஷத்ரியர்கள் அனைவரும் ஒன்றே. சென்ற ஈராயிரமாண்டுகாலமாக அவர்கள் அனைவரும் சேர்ந்து உருவாக்கியது ஷத்ரியர் என்ற சொல்லை மட்டுமே. அவர்கள் ஒவ்வொருவரும் நூறு தலைமுறைகள் வழியாக அடைந்த செல்வமென்பது ஷத்ரியர் என்னும் அடையாளம்தான். அதைத்தான் எண்ணி எண்ணி மகிழ்வார்கள். அதன்பொருட்டே போர்புரிந்து மடிவார்கள்” என்றான்.
பிருகத்ரதன் பெருமூச்சுடன் “இனி ஒன்றும் செய்வதற்கில்லை” என்றான். “இளவரசே, எப்போதும் வழி ஒன்று எஞ்சியிருக்கும்” என்றான் கஜன். “நம்முடைய ஒற்றன் பாகுலன் காந்தார நகரியில் இருக்கிறான். அங்கிருந்து இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை சுகோணன் செய்திகொண்டு வருகிறது. அது தற்போது ராஜகிருகத்தில் உள்ளது. உடனே நாம் ராஜகிருகம் செல்வோம். காந்தாரநாட்டு இளவரசர் சகுனிக்கு தங்கள் அரசமுத்திரையுடன் தனிப்பட்ட செய்தி ஒன்றை அனுப்புவோம். அச்செய்தி சகுனியின் கையில் கிடைக்குமென்றால் நாம் அவரை வென்றெடுக்கமுடியும்.”
“சவுக்கைக் கண்டபின்னரும் நம்மை சகுனி ஏற்பானா?” என்றான் பிருகத்ரதன். கஜன் “சகுனி நெடுநாட்கள் திட்டமிடாமல் நம்மை நோக்கி இந்தத் தூதை அனுப்பியிருக்கமாட்டார். அவர் உங்களையும் மகதத்தையும் நன்கறிந்திருப்பார். உங்கள் தந்தை செய்த  சிறுமையால் அவரது அந்தப் பெரும் திட்டம் சிதறுவதை அவர் விரும்ப மாட்டார். நானறிந்தவரை இங்குள்ள ஷத்ரியர்களைப்போல அரசியலுக்குமேல் அகந்தையை ஏற்றி வைத்திருப்பவரல்ல அவர்” என்றான். “சுகதர் கிளம்பிச்சென்று நான்கு நாட்களாகின்றன. நாம் சென்றுசேர மேலும் எட்டுநாட்களாகும். சுகதர் கொண்டுசெல்லும் சவுக்கைக் கண்டு சகுனி அடுத்தமுடிவுகளை எடுப்பதற்குள் நம் தூது அவர் கையில் கிடைத்தாகவேண்டும்.”
“ஆனால் நாம் இன்னும்கூட நம் அரசரின் ஆணைக்கு கட்டுப்பட்டவர்கள்” என்று பிருகத்ரதன் சொன்னான். “ஆனால் அவரும் நாமும் ஷத்ரியர்களின் முறைமைக்கு அடங்கியவர்கள். நாம் ராஜகிருகத்தில் இருந்து உடனே காந்தாரம் நோக்கிச் செல்வோம். நாம் செல்வதற்குள் அங்கே காந்தாரிக்கு சகுனி ஒரு சுயம்வரம் ஒருங்குசெய்யவேண்டும். நாம் சென்று அந்த சுயம்வரத்தில் பங்கெடுத்து அரசியை மணப்போம். அவளை நாம் மகதத்துக்குக் கூட்டிவருவதை அரசரோ ஷத்ரியகுலமோ தடுக்கமுடியாது.”
கலத்தை அப்படியே விட்டுவிட்டு இன்னொரு சிறியபடகில் கஜனும் பிருகத்ரதனும் கங்கைக்கரை வழியாக ராஜகிருகத்துக்கு வந்தனர். அவர்கள் வந்த அன்றே சுகோணன் சகுனிக்கான செய்தியுடன் வானில் எழுந்தது. சுதுத்ரியின் கரையை பீஷ்மரும் பலபத்ரரும் படகில் கடந்துகொண்டிருந்தபோது சுகோணன் வானில் அவர்களைத் தாண்டிச்சென்றது. சிபிநாட்டுக்குச் சென்றபின் அதன் வேகம் மட்டுப்பட்டது. இரவில் அதனால் பறக்கமுடியாது. பகலில் வேகக்காற்றுகள் இல்லாமலிருக்கையில் மட்டும் அது பறந்தது. எட்டு நாட்களுக்குப்பின் பீஷ்மர் தங்கியிருந்த சோலைக்குமேல் அது இளைப்பாறியது. பின்னர் பீஷ்மர் சென்ற பீதர்களின் வணிகக்குழு அதைத் தாண்டிச்சென்றது.
மேலும் இருபது நாட்களுக்குப்பின் மெலிந்து எடையிழந்த சுகோணன் காந்தாரத்தை அடைந்தது. வானையும் மண்ணையும் இணைத்த அனல்வெளியில் தகிக்கும் சிறகுகளுடன் பறந்த அது கீழே தெரிந்த காலிகவனத்தின் பசுமையைக் கண்டு சிறகு தாழ்த்தி இறங்கியது. வானில் சுழன்றபடி கீழே நோக்கியபோது சோலைநடுவே இருந்த கலங்கிய சிறு ஊற்றைக் கண்டது. அதனருகே அசைந்த எலியொன்றை பாய்ந்து கவ்விக்கொண்டு சிறகடித்து எழுந்து சோலையிலேயே உயரமான ஸாமி மரத்தின் சிறுகிளையில் அமர்ந்து அந்த எலியை உண்டபின் கழுத்தை இறகுக்குள் தாழ்த்திக்கொண்டு இமைகளை மேலேற்றி துயிலத் தொடங்கியது.
துயிலின் நடுவே காற்றுக்கேற்ப இருமுறை மெல்ல அசைந்து சிறகுகளை மீண்டும் அடுக்கி அமர்ந்தபோது கீழே துயின்றுகொண்டிருப்பவனை சுகோணன் நோக்கியது. ஆனால் அவனை அது பொருட்படுத்தவில்லை. அவன் எழுந்த அசைவை கண்ணுக்குள் உணர்ந்து அது விழித்துக்கொண்டு சிறகுகளை நீவிச்சீராக்கியபின் கிளையை உந்தி வானிலெழுந்து வெண்சுடராக நிறைந்திருந்த காற்றில் சுழன்றேறத்தொடங்கியபோதுதான் அதன் விலாவை அம்பு தாக்கியது. அந்த விசையில் காற்றில் தள்ளப்பட்டாலும் சுகோணன் மேலும் சிறகடித்துப் பறக்க முயன்றது. வானில் வீசிய காற்றுடன் அந்தச்சிறகசைவு அதற்கு முற்றிலும் பழக்கமில்லாதபடி முரண்பட பக்கவாட்டில் சரிந்தபடியே சென்றது. அதன் ஒற்றைக்கண்ணுக்கு கீழே வெந்துவிரிந்த பாலைநிற மண்வெளி வேகமாக ஓடிச்சென்றது.
மண்குன்று ஒன்று அதைநோக்கி வந்தது. அதற்கப்பாலிருந்த மென் மணலில் விழுந்த சுகோணன் தன் நகங்கள் பதிய மணலை அள்ளி அள்ளி நடந்து சிறகடித்து மேலும் எழுந்தது. முழுவிசையாலும் சிறகுகளை வீசி காற்றில் எழமுயன்றது. ஒரு சிறகு மட்டுமே முழுமையாக அசைவதை உணர்ந்தாலும் அதன் வேகம் குறையவில்லை. வானில் சிறிது எழுந்தபின் அதன் தலையும் அலகும் முன்னால் சரிந்தன. அலகு புழுதியில் ஆழப்பதிய அது மீண்டும் விழுந்தது. சிலகணங்களுக்குப்பின் சிறகுகள் புழுதியில் அளைய எம்பி எம்பி மேலும் எழுந்து சற்று தள்ளி விழுந்தது. விழுந்து எழுந்து விழுந்தபடியே சென்று பின் கொதித்துக்கொண்டிருந்த மண்ணில் புதைந்து இருமுறை அதிர்ந்தது. அதன் விழிகள் மூடிக்கொண்டன. கடைசியாக ஒளியுடன் விரிந்துகிடந்த மேகமற்ற வானை அது நோக்கியது. அதன் அகத்தில் பச்சைவிரிந்து கிடக்கும் கங்கைக்கரை காடுகள் ஓசையில்லாமல் ஒழுகிச்சென்றன.
மறுநாள் பகல் முழுக்க சுகோணனின் உடல் அந்த பாலையிலேயே கிடந்தது. அதன் மேல் வானத்தில் சுபட்சன் பீஷ்மரின் தூது தோற்றுவிட்ட செய்தியுடன் பறந்து மகதம் நோக்கிச் சென்றது. அன்றிரவு விண்மீன்களின் வெளிச்சம் மட்டும் பரவிய பாலைநிலத்தில் மெல்லிய காற்றால் மண்பரவி மூடப்பட்டிருந்த சுகோணனின் உடலை நாசிகன் என்னும் ஓநாய் கண்டெடுத்தது. ஏழுநாட்களுக்கும் மேலாக உணவில்லாமல் சிதல்களையும் சிறிய வண்டுகளையும் நக்கி உண்டு பாலையில் அலைந்து கொண்டிருந்த நாசிகன் அந்த மாமிசத்தின் வாசனையை தொலைவிலேயே அறிந்துகொண்டது. அதன் தொங்கி ஆடிய நாக்கிலிருந்து எச்சில் வழிந்தது. முன்னங்கால்களால் மண்ணை மிதித்து எம்பி வயிறு ஒட்டியதனால் ஒன்றோடொன்று பின்னிக்கொண்ட பின்னங்கால்களை சேர்த்து தூக்கி வைத்து நாசிகன் ஓடிவந்தது. வரும்போதே உள்ளம்தாளாமல் முனகல் ஒலியை எழுப்பியது.
உணவருகே வந்ததும் நாசிகன் திகைத்து சிலகணங்கள் நின்றது. அதைச்சூழ்ந்திருந்த இரவின் இருளுக்குள் காற்று ஓடும் ஒலி மட்டும் கேட்டுக்கொண்டிருக்க நிலத்தில் மணல்கள் மெல்ல இடம்பெயர்ந்துகொண்டிருந்தன. நாசிகன் மூக்கை நன்றாகத் தாழ்த்தி இரையை கூர்ந்து நோக்கியது. இரை அசையவில்லை என்று உணர்ந்த பின் மெதுவாக அணுகி மூக்கை நீட்டியபடி உறுமியது. முன்னங்கால்களால் மணலை வேகமாக அள்ளி பின்னால் வீசியது. அதன்பின் மெதுவாக உடல்தாழ்த்தி மணலில் வயிற்றைப் படியவைத்து படுத்துக்கொண்டது. உணவை அடைந்த உத்வேகத்தில் அது பசியை முற்றிலும் மறந்துவிட்டிருந்தது.
பின்பு மெதுவாக மேலும் முன்னகர்ந்து சுகோணனின் உடலை அது மூக்கால் தொட்டது. உறுமியபடி வாலைச்சுழற்றி பாய்ந்து கவ்வி எடுத்துக்கொண்டு ஓடி சற்று தள்ளி நின்று திரும்பி நோக்கியபோது மணல்மேட்டின் உச்சியில் ஒருநாயும் இருவேட்டைக்காரர்களும் நிற்பதைக் கண்டது. மேலும் ஓடி ஓர் இடத்தில் இரையை போட்டபின் உறுமியது. நாய் அஞ்சி பின்னடைந்தது. வேட்டைக்காரர்கள் தன்னை தொடரவில்லை என்று உணர்ந்ததும் நாசிகன் அவர்கள் மேல் கண்களை நாட்டியபடி இரையை கீழே போட்டு அதன் இறகுகளைப் பிய்த்து வீசியது. உலர்ந்த மாமிசத்தை நீண்ட கோரைப்பற்களால் கிழித்து உறுமியபடி குதறி உண்ணத்தொடங்கியது.
அப்பால் மணல் மேட்டில் அமர்ந்திருந்த சகுனி ஓநாய் தன் இரையை உண்பதை பார்த்துக்கொண்டிருந்தான். நெடுநாட்கள் பசி இருந்தாலும் அதுகொண்டிருக்கும் எச்சரிக்கையை கவனித்தான். ஒவ்வொரு கவ்வலுக்குப் பின்னரும் அது நான்குபக்கமும் கவனித்தது. அவர்களை நோக்கி மின்னும் கண்களுடன் மெல்ல உறுமியது. உலர்ந்து தோல்போல ஆகிவிட்டிருந்த இறைச்சியை அது கவ்வி கிழித்து மெல்லும் ஒலி கேட்டுக்கொண்டே இருந்தது. அவன் மணலில் அப்படியே அமர்ந்துகொண்டு வில்லை தன் மடியில் வைத்தபடி அதைக் கவனித்தான். சூனிகன் “அது ஒரு செம்பருந்து” என்றான். “வழிதவறி வந்து பாலையில் இறந்திருக்கிறது.”
சகுனியின் மனம் நிறைவுடன் இருந்தது. பீஷ்மர் அஸ்தினபுரிக்குக் கிளம்பிச்சென்றதும் அவனும் கிளம்பி அந்த ஓநாயைத்தேடி வந்திருந்தான். சூனிகன் அவனை எதிர்கொண்டு ஓநாய் இரையைக் கண்டுபிடித்த இடத்துக்கு அழைத்துவந்திருதான். “எப்போதாவதுதான் செம்பருந்துகள் வழிதவறுகின்றன” என்றான் சூனிகன். சிரித்தபடி சகுனி “பாலை வானம் நோக்கித் திறந்திருக்கும் ஒரு வஞ்சக்குழி…யானைகள்கூட அதில் விழுந்துவிடும்” என்றான்.
ஓநாய் இரையைக் கவ்வி இன்னும் சற்று தள்ளி கொண்டுசென்று போட்டு உண்ணத் தொடங்கியது. அதன் வால் மண்ணில் கீரிப்பிள்ளைபோல புரண்டு விளையாடியது. காதுகள் சிறு நாகபடங்கள் போலத் திரும்பிக்கொண்டே இருந்தன. “அந்தப்பறவையை ஓர் அம்பு வீழ்த்தியிருக்கிறது” என்றான் சூனிகன். “அவ்விறகுகளுக்குள் அம்பு ஒன்று தொங்குகிறது. ஆம் அது அம்புதான், கால் அல்ல.”
சகுனி வியப்புடன் எழுந்துவிட்டான். அதைக்கண்டு ஓநாயும் எழுந்தது. அவன் அமர்ந்ததும் அது எஞ்சிய உடலைத் தின்னத்தொடங்கியது. அவன் அது உண்பதையே பார்த்துக்கொண்டிருந்தான். நெருப்பு எரிவதைப் பார்ப்பதுபோலிருந்தது. பசிக்கு நிகராக பிரம்மத்தைக் காட்டும் வல்லமை இப்பூமியில் வேறேது என எண்ணிக்கொண்டான். பாலைநிலத்தில் வாழாதவர் எப்படி பசியை அறிந்திருக்கமுடியும்? பாலைநிலம் பருவடிவம் கொண்ட பசி. அதில் வாழ்பவர்கள் பசியாலானவர்கள். பசியே கண்கள். பசியே வாயும் நாசியும். பசியே கைகால்கள். பசியே உடல்.
நான் ஒரு பெரும்பசி என சகுனி நினைத்துக்கொண்டான். பசிவெறியுடன் உண்ட உணவுகளெல்லாம் நினைவுக்கு வந்தன. அவ்வெண்ணமே கடும்பசியை எழுப்பியது. எழுந்துசென்று அந்த ஓநாயுடன் சேர்ந்து சீறிச்சண்டையிட்டு அதன் உணவை பிடுங்கிப் பங்கிட்டு உண்ணவேண்டுமென்று தோன்றியது.
கிழக்குவானில் ஒளிபரவியபோது ஓநாய் சுகோணனின் கால்களையும் நன்றாக மென்று தின்றுவிட்டிருந்தது. கூரிய நகங்களுடன் அதன் இருகால்களை மட்டும் அது நறுக்கி மண்ணில் துப்பியது. அப்பகுதியை நன்றாக முகர்ந்து எஞ்சிய துணுக்குகள் ஏதுமில்லையே என்று பார்த்தது. காற்றால் அள்ளப்பட்டு மணலில் பரவிக்கிடந்த இறகுகள் கூழாங்கற்களில் சிக்கி தூவிகுலைந்து அதிர்ந்தன. நீரோட்டத்தில் சென்று படிந்தவைபோல ஒரு பள்ளத்தில் குவிந்துகிடந்தன. ஓநாய் இறகுகளில் இருந்து எதையோ எடுத்துப் பார்ப்பதை சகுனி கண்டான்.
ஒருகணத்தில் தன் வில்லை எடுத்து சரமேற்றி எய்தான். அம்பு சென்று ஓநாயின் அருகே விழுந்தது. வாயில் அந்த தோல்சுருளைக் கவ்விய ஓநாய் அதை விரைந்து மென்று விழுங்கியது. அவன் அருகே வருவதற்குள் அதை உண்டு முடித்து நாவைச்சுழற்றி நக்கியபடி பின்கால்களில் அமர்ந்து வெண்பற்கள் தெரிய தீ எரியும் ஒலியில் சீறியது. சகுனி கையில் வில்லும் அம்புமாக அதை நோக்கிச் சென்றான். அது பின்னகர்ந்தபின் திரும்பி வாலைச்சுழற்றியபடி ஓடி மேடேறி அவனைப் பார்த்தது. அவன் ஓடிவிலகும் ஓநாயை நோக்கியபடி நின்றபோது ஆழ்கிணற்றுநீர் காற்றில் அசைவதுபோல தன் அகத்தில் ஒரு சஞ்சலத்தை அறிந்தான்.

3/26/14

பகுதி மூன்று : புயலின் தொட்டில்[ 6 ]

பகுதி மூன்று : புயலின் தொட்டில்[ 6 ]
சேவகன் தலைவணங்கி கதவைத்திறந்ததும் அரண்மனை மந்திரசாலைக்குள் சகுனி நுழைந்தபோது சுபலர் பீடத்தில் நன்றாகச் சாய்ந்து அமர்ந்திருப்பதையும் எதிரே அசலன் மோவாயை கையில் தாங்கி அமர்ந்திருப்பதையும் கண்டான். சுகதர் நின்றபடி சுவடிகளை வாசித்துக்காட்டிக்கொண்டிருந்தார். சுபலர் அலையும் விழிகளுடன் கால்களை மாற்றி மாற்றி அமைப்பதைக் கண்டதுமே அவர் எதிலும் கருத்தூன்றாமல் இருக்கிறார் என்பதை சகுனி புரிந்துகொண்டான். அவன் உள்ளே நுழைந்ததும் சுகதர் தலைவணங்கினார். அசலன் “நீ இன்று வேட்டைக்குச் சென்றிருக்கக்கூடாது” என்று கடுமையாகத் தொடங்கினான்.
சகுனி ஒன்றும் சொல்லாமல் பீடத்தில் அமர்ந்தான். “என்ன இருந்தாலும் அவர் அஸ்தினபுரியின் பிதாமகர். நினைத்திருந்தால் இந்த பாரதவர்ஷத்தையே வெற்றிகொள்ளக்கூடிய மாவீரர். அவரை உதாசீனம் செய்து நீ சென்றாய். நல்லவேளையாக சுஜலனால் உன்னை கண்டுபிடிக்கமுடிந்தது.” சகுனி அதைக் கேட்டதாகவே காட்டவில்லை. “அவரது தூது மறுக்கப்பட்டதை அவரிடம் நேரடியாக நீ சொல்லியிருக்கக் கூடாது என்று சுகதர் சொல்கிறார். அரசமுறைப்படி நாம் அமைச்சர் வழியாக அவரது அமைச்சரிடம் அதைத் தெரிவித்திருக்கவேண்டும்” என்று அசலன் மீண்டும் சொன்னான்.
சுகதர் அவர் உள்ளே நுழையவேண்டிய தருணம் அது என்று புரிந்துகொண்டார். “இளவரசே, தூது மறுக்கப்படுதல் என்பது சற்று சங்கடமான நிலை. அதை நேரடியாக உருவாக்கினால் அத்தருணத்தில் சொல்லப்படும் சிலசொற்கள் உடனடியாக எதிர்வினைகளைக் கொண்டுவரலாம். உணர்ச்சிமிக்க சொற்பரிமாற்றம் நிகழலாம்” என்றார். “பொதுவாக சொற்கள் உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதில்லை. அவைதான் உணர்ச்சிகளையே உருவாக்குகின்றன. நாம் ஒன்றைச் சொன்ன பின்னரே அவற்றை உணரத்தொடங்குகிறோம். அதைச் சொல்லிவிட்டதனாலேயே அதை நம்பவும் அதில் நீடிக்கவும் தொடங்குகிறோம். பெரும்பாலான பகைமைகளும் சினங்களும் சொல்லிவிட்ட சொல்லைத் தொடர்ந்து செல்லும் உள்ளங்களால் உருவாக்கப்படுபவை.”
“ஆம்” என்றார் சுபலர். “என் ஆசிரியர் என்னிடம் சொன்ன முதல்சொல்லே அதுதான். நாக்கை அடக்காத அரசன் நாடாளமாட்டான் என்றார் அவர்” என்றார். சுகதர் “ஆன்மா குடியிருக்கும் வீட்டின் திண்ணையில் விடப்பட்ட கைக்குழந்தை என்று நாக்கை சுக்ர ஸ்மிருதி வகுக்கிறது. நாக்கு நம் நலன்களைப் பேணத்தெரியாத பேதை.” சுபலர் ஏப்பம் விட்டபடி “உண்மை” என்றார். சுகதர் “ஆகவேதான் எந்தவிதமான மறுப்பையும் மறுதலிப்பையும் உணர்ச்சிகரமாக அதில் ஈடுபடாத ஒருவர் வழியாக மட்டுமே தெரிவிக்கவேண்டும் என்று நூல்கள் வகுக்கின்றன.”
“ஏன் ஓலைகள் வழியாக தெரிவிக்கக்கூடாதா?” என்றான் அசலன். “இல்லை இளவரசே, ஓலை எத்தனை மிதமாக எழுதப்பட்டிருந்தாலும் அது மாறாதது என்பதனாலேயே ஓர் உறுதியைக் கொண்டிருக்கிறது. அதை வாசிப்பவர் தன் கற்பனையை அதில் ஏற்றிக்கொள்ள இடமிருக்கிறது. வாசிப்பவரின் மனமே அந்தச் சொற்களுக்கு பொருள் அளிக்கிறது, எழுதுபவரின் மனம் அல்ல. மிகமென்மையான ஒரு சொற்றொடரை ஒருவர் வன்குரலில் வாசித்துக்காட்டி அறைகூவலாக ஒலிக்கச்செய்ய முடியும்” சுகதர் சொன்னார். “ஆகவே அமைச்சுமுறை அறிந்த அமைச்சனோ தூதனோ செல்வதே முறை. கேட்பவரின் முகத்தையும் சூழ்நிலையையும் கணித்து அவன் செய்தியைச் சொல்லவேண்டும். கேட்பவர் உருவாக்கும் எதிர்வினைகளுக்கேற்ப தணிந்தும் நயந்தும் தேவையென்றால் மிஞ்சியும் தன் செய்தியை விரிவாக்கம் செய்யவேண்டும். அதன்பின்னர் அச்செய்தியை உறுதிப்படுத்துவதற்காக அவர் அரச ஓலையை அளிக்கலாம்.”
சகுனி அசைந்து அமர்ந்து சால்வையை எடுத்து மடிமீது போட்டுக்கொண்டான். பின்பு “பீஷ்மர் எதையும் நேரடியாகச் சொல்வதை விரும்புபவர் என்று தோன்றியதே” என்றான். “ஆம், அதை நான் முதல்நாளிலேயே கணித்தேன் இளவரசே. அவருக்கு சொல்தெரிதலே தேவையில்லை. அனைத்துச் சொற்களும் அவருடைய நெஞ்சிலிருந்து நேரடியாகவே வருகின்றன. ஆனால் அதற்குக் காரணம் அவர் உள்ளும் புறமும் ஒன்றேயானவர் என்பதுதான். நாம் அப்படி அல்ல” என்றார் சுகதர். “நாம் நம் அச்சங்களையும் ஐயங்களையும் மறைத்துக்கொண்டுதான் பேசுகிறோம். நாம் சொல்எண்ணாமல் பேசுவது பிழை.”
சுபலர் உரக்கச் சிரித்து “அப்படியா சொல்கிறீர் அமைச்சரே? இவன் தன்னுள்ளே கொண்டிருந்த அச்சமும் ஐயமும் என்ன, சொல்லுங்கள்” என்றார். சுகதர் “இளவரசே, தாங்கள் பீஷ்மரை அஞ்சுகிறீர்கள்” என்றார். “அதுதான் முதன்மையான காரணம்.” அசலன் “ஆகா” என்றபடி தொடையைத் தட்டினான். சகுனி “சொல்லும்” என்றான். “தாங்கள் தங்களுக்கு நிகரான அரசியல்சூழ்ச்சியாளரை இதுவரை கண்டடையாதவர். அந்த தன்னம்பிக்கை கொண்டவர். தங்கள் ஆயுதங்கள் அனைத்தையும் பொருள் இல்லாமலாக்கும் ஒருவரைக் கண்டதும் நிலைகுலைந்துவிட்டீர்கள். அவரது சொல்லில் இருந்து விழியிழந்த அரசன், முதியதளபதி என்னும் இரு சொல்லாட்சிகளை தொட்டு எடுத்தீர்கள். உடனே அவர் சொல்லாத ஒன்றையும் தொட்டீர்கள். உங்களைவெல்லும் அரசியல்சூழ்ச்சியாளர் அவர். ஆகவேதான் பின்னடைந்தீர்கள்.”
“அப்படியென்றால் நான் என் தமக்கையைப்பற்றிச் சொன்னது பொய் என்கிறீரா?” என்றான் சகுனி. “இல்லை இளவரசே. ஒரு சொல்லுக்கும் செயலுக்கும் ஒரேயொரு காரணம்தான் இருந்தாகவேண்டுமென்பதுண்டா என்ன? இளவரசி காந்தாரிக்கு இம்மணத்தில் உவப்பில்லை என நீங்கள் உணர்ந்தீர்கள். உங்களால் அதை அனுமதிக்கவும் முடியாது. ஆனால் அதற்கு முன்னரே உங்கள் அகம் நிலையழிந்து ஆயிரம் விரல்களால் தேடத்தொடங்கியிருந்தது. அப்படி ஒரு தேடல் இருந்தமையால்தான் காந்தாரிக்கு மணத்தில் உவப்பில்லை என்பதை உடனே நுண்ணிதாக உணர்ந்துகொண்டீர்கள். மணமறுப்பையும் அறிவித்தீர்கள்.”
சுபலர் உரக்கச்சிரித்து “ஆகா…” என்றபின் சுவரோரமாக நின்ற சேவகனைநோக்கி கைகாட்டினார். சேவகன் அசையவும் சகுனி தேவையில்லை என்று அவனுக்கு சைகை காட்டிவிட்டு “சுகதரே, நீங்கள் சொல்வதை நான் ஏற்கிறேன்” என்றான். “நான் நேற்றுமுதல் நிலைகொள்ளாமல் இருந்துகொண்டிருக்கிறேன். அதற்குக் காரணம் இதுவே. என் முடிவு உறுதியானது. ஆனால் அது சரியானது என்று முழுமையாகத் தோன்றவுமில்லை” என்றான்.
“தாங்கள் அப்படி நேரடியாக பீஷ்மரிடம் சொன்னபோது அவர் சொல்மீறுவார், அவரது அகம் நிலையழியும் என அகத்தே எதிர்பார்த்தீர்கள். அது நிகழவில்லை. பீஷ்மரின் முகத்தில் எந்த உணர்ச்சிமாறுபாட்டையும் தாங்கள் காணவில்லை. ஆகவேதான் உடனடியாக தலைவணங்கி அங்கிருந்து விலகிச்சென்றீர்கள். அதை எண்ணியே இரவெல்லாம் துயிலற்றிருந்தீர்கள். வேட்டைக்குச் சென்றதும் அதனாலேயே, பீஷ்மரைத் தவிர்ப்பதற்காக அல்ல” என்றார் சுகதர். “தாங்கள் சுஜலனிடம் என்ன வினவினீர்கள் என்று கேட்டறிந்தேன். பீஷ்மர் எந்த மனவேறுபாடுமின்றி அரசுக்கு படைசூழ்தலில் ஆலோசனை வழங்கினார் என்றும் இளையவரை மாணவராக ஏற்று மந்திரச்சரங்கள் சிலவற்றை சொல்லிக்கொடுத்தார் என்றும் கேள்விப்பட்டதும் திரும்பிவிட்டீர்கள்.”
“சுகதரே நீங்கள் சொல்வது பெரும்பாலும் சரியானதே” என்றான் சகுனி. “ஆனால் நான் உய்த்தறிந்த ஒன்றை நீங்கள் தொடவில்லை. பீஷ்மர் அரசியல்சூழ்மதியாளர் அல்ல. அவரை அனுப்பிய மாபெரும் அரசியல்சூழ்மதி ஒன்று அஸ்தினபுரியில் இருக்கிறது. பீஷ்மர் இங்கே சொன்னவை அவர் உள்ளத்தில் இருந்து எழுந்த சொற்கள்தான். ஆனால் இந்தச் சூழ்மதியை அவருள் விதைத்தவர்கள் அங்கே இருக்கிறார்கள்.”
அசலன் “நீ அவர்களை அஞ்சுகிறாயா?” என்றான். “அஞ்சவில்லை. ஆழம்தெரியவில்லையே என எண்ணினேன்” என்றான் சகுனி. சுகதர் “ஆம், சத்யவதியைப்பற்றி நான் அறிந்திருக்கிறேன்” என்றார்.
மந்தணஅவைச் சேவகன் வந்து வணங்கி விருஷகன் வந்திருப்பதைச் சொன்னான். சுகதர் “இளவரசர் பீஷ்மரின் மாணவராகவே ஆகிவிட்டார். பாரதவர்ஷம் முழுக்க அத்தனை நாடுகளிலும் பீஷ்மருக்கு உளம்சேர் மைந்தர்கள் உள்ளனர் என்று சூதர்கள் சொல்வார்கள். இங்கும் ஒருவர் அமைந்துவிட்டார்” என்றார். விருஷகன் உள்ளே வந்து தலைவணங்கிவிட்டு பீடத்தில் அமர்ந்துகொண்டான். சுபலர் “பீஷ்மர் எப்போது கிளம்புகிறார்?” என்றார். “இன்னும் இருநாழிகையில். தாங்களும் தமையனாரும் அரசகோலத்தில் கோட்டைவரை வந்து வழியனுப்பவேண்டும். பட்டத்துயானையும் அரசபரியும் அமைச்சும் அங்கே செல்லவேண்டுமென அமைத்திருக்கிறேன். வைதிகரும், சூதரும் வருவார்கள்.”
“இன்றுவரை நாம் எவருக்கும் இத்தகைய வழியனுப்புதலை அளித்ததில்லை” என்றான் அசலன். “இதற்குமுன் நம் அரசுக்கு சக்ரவர்த்திகள் வந்ததுமில்லை” என்று விருஷகன் உரத்த குரலில் பதில் சொன்னான். சகுனி “பிதாமகர் உன்னிடம் என்ன சொன்னார்?” என்றான். “எதைப்பற்றி?” சகுனி மிகக் கவனமாக “காந்தாரத்தின் வரவேற்புபற்றி?” என்றான். விருஷகன் “மூத்தவரே நீங்கள் உங்கள் செய்கைகளால் அவர் வருந்துகிறாரா என்று கேட்கிறீர்கள் அல்லவா?” என்று நேரடியாகக் கேட்டான். சகுனி புன்னகைசெய்து “நீயும் உன் குருநாதரின் பேச்சுமுறைகளைக் கற்றுக்கொள்கிறாயா?” என்றான்.
“மூத்தவரே, பிதாமகர் தூது நிறைவேறாமை குறித்து மனம் வருந்துவதாகச் சொன்னார். உண்மையில் அவர் வருந்துவதை நானும் உணர்ந்தேன். அவர் வருந்துவது அரசுக்காக அல்ல, தன் மைந்தன் திருதராஷ்டிரனுக்காக என்று அறிந்தபோது விழியிழந்த அந்த இளவரசன்மேல் எனக்குள் பொறாமையே எழுந்தது” என்றான் விருஷகன்.
“சற்றுமுன் காந்தாரியைக் கண்டு ஆசியளித்துவிட்டு அவர் ரதமேறியபோது நானும் சென்றேன். என்னிடம் இளவரசி பேரழகி என்றார். அவளுடைய நீலக்கண்களும் தூயவெண்ணிறமும் பாரதவர்ஷத்தின் தெற்கிலும் கிழக்கிலும் அரியவை என்றார். அப்படிப்பட்ட அழகியை விழியிழந்தவனுக்கு மணம்செய்து வைப்பது பிழையென உணர்வதாக அவர் சொல்லப்போகிறார் என நான் நினைத்தேன். ஆனால் அவர் நெடுமூச்சு விட்டு, அவளை என் குலம் இழப்பதை எண்ணும்போது துயரமே எழுகிறது என்றார்” விருஷகன் சொன்னான்.
VENMURASU_EPI_66
ஓவியம்: ஷண்முகவேல்
[பெரிதுபடுத்த படத்தின்மீது சொடுக்கவும்]
“என் மைந்தன் கையிலிருந்து விலையில்லா மணி ஒன்று தவறிச்செல்கிறது என்று அவர் சொன்னபோது என் மனம் மலர்ந்தது. ஆம், மூத்தவரே அவருள் இருந்து ஓர் அரசியலறிஞனோ விவேகியோ ஞானியோ வெளிப்படுவதைவிட கனிந்த முதுதந்தை ஒருவர் வெளிப்படும் தருணங்களையே நான் விரும்புகிறேன்” விருஷகனின் மலர்வை சுபலர் புன்னகையுடன் கவனித்து சுகதரை நோக்கி விழியசைத்தார்.
சகுனி பேச்சை மாற்ற விரும்பினான். “சுகதரே வேறு என்னென்ன ஓலைகள் வந்துள்ளன?” என்றான். சுகதர் பேசுவதற்குள் “நாம் சற்று மதுவருந்தி உணவுண்டபின் ஓலைகளை கேட்கலாமென நினைக்கிறேன்… பூசனையில் அவ்வளவுநேரம் நின்றது களைப்பை அளிக்கிறது” என்றார் சுபலர். சகுனி “முதன்மையான ஓலைகளை முடித்துவிடுவோம்” என்றதும் சுபலர் “ஆம் அதைத்தான் நானும் சொல்லவந்தேன்” என்றார். அசலன் தந்தையை நோக்கி புன்னகை புரிந்தான்.
“இளவரசே, நம்முடன் மணஉறவை விழையும் எட்டு மன்னர்களின் ஓலைகள் வந்துள்ளன” என்று சுகதர் ஓலைகளை எடுத்தார். விருஷகன் “மகதன் மணம் மறுத்த செய்தியை அதற்குள் ஒற்றர்கள் வழி அறிந்துவிட்டார்கள்” என்றான். “அது இயல்புதானே?” என்றான் அசலன். “லோமசன், கேகயன், சகலன் மூவரும்தான் சற்றேனும் மரபுள்ள மன்னர்கள். பிறர் சென்ற நூறாண்டுகளில் உருவாகிவந்த சிறு மன்னர் குலங்கள்” என்றார் சுகதர்.
சுபலர் “லோமசனுக்கும் கேகயனுக்கும் வயதாகிவிட்டதே…” என்றார். “லோமசனுடன் நானே இணைந்து சுயம்வரமொன்றுக்குச் சென்றிருக்கிறேன்.” அசலன் “ஆம், ஆனால் இளவரசர்களாக இருப்பவர்கள் வெறும் வேடர்களும் படகோட்டிகளும். ஆயிரம் படைவீரர்களைத் திரட்டிக்கொண்டு ஒரு கோட்டையையும் கட்டிக்கொண்டால் தங்களை அரசர்களாக எண்ணிக்கொள்கிறார்கள்…” என்றான். “ரோருகனையும் பாடலனையும் அரசர்களாக எப்படி எண்ணமுடியும்? நம் மூதாதை காலத்தில் அவர்கள் நம்மிடம் படகோட்டிகளாக இருந்தார்கள்.”
சுகதர் “அரசே, நம் முன் உள்ளவை இரண்டு வழிகள். நம்மிடம் உறவை நாடும் ஏதேனும் ஒரு சிறிய ஷத்ரிய அரசுக்கு மகற்கொடை நிகழ்த்துதல். அந்நாடு இங்கே சிந்துவின் கரையில் இருக்குமென்றால் நம்மை ஆதரிக்கும் ஒரு ஷத்ரியகுலத்தின் பின்புலம் நமக்குக் கிடைக்கிறது. ஆனால் அவ்வுறவில் எப்போதும் ஒரு சிறு முரண்பாடு இருந்துகொண்டிருக்கும். அவர்கள் நம்முடைய செல்வத்தைக் கண்டு நம்மை நாடிவருகிறார்கள். சொல்லப்போனால் தங்கள் குலத்தைப்பற்றிய பெருமிதத்தை நமக்கு விலைக்கு விற்கிறார்கள் அவர்கள். அந்த இழிவுணர்ச்சி அவர்களை எப்போதும் அமைதியிழக்கச் செய்யும். ஆகவே நம்மை சிறுமைப்படுத்த முயல்வார்கள்.”
சுகதர் தொடர்ந்து சொன்னார் “அவர்களுக்குள் நம் நாட்டை வென்று உத்தரபதம் மீதான ஆதிக்கத்தை அடையவேண்டுமென்ற நோக்கம் இருக்குமென்றால் அது பெரிய மோதலாக மாறவும்கூடும்… பொதுவாக ஷத்ரியர்கள் ஆதிக்க எண்ணம் கொண்டவர்கள். தங்களைவிடக் குறைந்தவர்களுடன் அவர்கள் மண உறவுகொள்வதே ஆதிக்கத்துக்காகத்தான். உத்தரபதம் என்னும் பொன்மழைமேகம் பாரதவர்ஷத்தின் அனைத்து ஷத்ரியர்களையும் கவர்கிறது.”
விருஷகன் “ஆனால் அவர்களில் எவரும் இங்கே ஆட்சிசெய்ய முடியாது. இந்தப் பாலைநிலம் நம்மால் மட்டுமே ஆளப்படக்கூடியது” என்றான். “ஆம், ஆனால் நம் அரசையே அவர்கள் கைப்பற்றிக்கொண்டால்? இளவரசியின் மைந்தனை இங்கே அரசனாக ஆக்கமுடிந்தால்?” என்றார் சுகதர். “ஷத்ரியர் அதையே திட்டமிடுவார்கள்.” சுபலர் “ஆம், நானும் அவர்களில் பலருடன் மது அருந்தியிருக்கிறேன். எப்போதும் அதிகாரம் பற்றியே பேச்சு. வேட்டைக்குச் செல்லும்போதுகூட ஒருவரை இன்னொருவர் வெல்வதையே பேசிக்கொண்டிருப்பார்கள்” என்றார்.
“நம் இரண்டாவது வாய்ப்பு சிறிய அரசர்கள். அவர்களிடம் குலம் இல்லை. ஆனால் அவர்களை குடித்தலைவர்கள் என்னும் நிலையில் இருந்து தனி அரசர்களாக ஆக்கிய அந்தக் காரணம் அவர்களுடன் இருக்கிறது. நதிப்பாதையோ மலைக்கணவாயோ சந்தைகளோ விளைநிலங்களோ ஏதோ ஒன்று. அது நம் கட்டுப்பாட்டுக்கு வரும். நாம் அளிக்கும் மகற்கொடையால் மகிழ்ந்து நம்மிடம் பணிந்து நன்றியுடன் இருப்பார்கள். இளவரசி விரும்பும் இளையவனை நாம் தெரிவு செய்யவும் முடியும்.”
“நாம் இதை ஏன் உடனே விவாதிக்கவேண்டும்? ஓலைகளைத் தொகுத்து ஒட்டுமொத்தமாகச் சிந்தித்து முடிவெடுப்போமே” என்றார் சுபலர். “இன்னும் ஒருநாழிகையில் பீஷ்மர் கிளம்புகிறார்.” அசலன் “ஆம், இது உடனடியாக முடிவுசெய்யப்படவேண்டியதல்ல” என்றான். சுகதர் “அரசே, இதை உடனே முடிவுசெய்ய வலுவான காரணம் ஒன்றுள்ளது. ஆகவேதான் ஓலைகளை உடனே கொண்டுவந்தேன்” என்றார். “இன்று மாலை உஷ்ணபதத்தில் இருந்து என் ஒற்றன் ஒரு செய்தியைக் கொண்டுவந்தான். மகதத்தில் இருந்து தூதர்கள் இருவர் நம் நாட்டுக்குள் நுழைந்திருக்கிறார்கள். அவர்கள் நாளை இங்கு வந்து சேரக்கூடும்.”
சகுனி “என்ன செய்தி?” என்றான். சுகதர் “மகத மன்னன் விருஹத்ரதர் தன் இளவரசர் பிருகத்ரதனுக்கு காசிமன்னர் பீமதேவர் வங்க மன்னன் மகளை மணந்து பெற்ற இரு மகள்களை மணம்புரிந்து வைக்க முடிவெடுத்திருக்கிறார். அணிகை, அன்னதை என்னும் அவ்விரு இளவரசிகளும் இரட்டையர். அஸ்தினபுரிக்கு பீஷ்மபிதாமகர் தூக்கி வந்த அவர்களின் தமக்கையரைவிட அழகில் சிறந்தவர்கள். காசிமன்னன் மணக்கொடைக்கு ஒப்புதல் அளித்திருக்கிறான். மகதமும் காசியும் வரும் ஆவணிமாதத்தில் மணமங்கலத்தை நிகழ்த்தவிருக்கின்றன” என்றார்.
“நம்மை அழைக்கிறானா?” என்றார் சுபலர். “அரசே, மணக்கொடை நிகழ்வதற்கு மூன்றுமாதம் முன்னரே மன்னர்களுக்கு அழைப்பனுப்புவது முறை. அதன்படி நமக்கும் தூதர்கள் அனுப்பப்பட்டிருக்கிறார்கள்” என்றார் சுகதர். சுபலர் சினத்தால் உரத்த குரலில் “நம்மை அவமதித்தபின்பு இப்படி ஓர் அழைப்பை அனுப்புவான் என எண்ணவே இல்லை” என்றார்.
அசலன் “காசியை ஏன் மகதன் தேர்ந்தெடுத்தான் அமைச்சரே?” என்றான். “கங்கைக்கரையின் முழுமையான ஆதிக்கத்தை மகதம் விரும்புகிறது. கங்கைக்கரைத் துறைகளைக் கொண்டிருக்கும் நகரத்தையே அவர்கள் விழைவார்கள்” என்று சுகதர் சொன்னார். “அத்துடன் அவர்கள் அஸ்தினபுரியை அஞ்சுவதும் தெரிகிறது. அஸ்தினபுரிமீது தீராப்பகை கொண்டுள்ள காசிநாட்டை மண உறவுக்குத் தெரிவுசெய்தது அதற்காகவே” என்றான் விருஷகன்.
சகுனி மெல்லிய குரலில் “நமக்குத் தூதாக வருபவர் யார்?” என்றான். சுகதர் “அதைத்தான் நான் சொல்லவந்தேன் அரசே. நம்மிடம் அனுப்பப்பட்டிருப்பவர் உக்ரர் என்னும் சூதர்” என்றார்.
மந்தணஅவை அமைதியாகியது. சுகதர் சகுனியைப் பார்த்தபடி பேசாமல் நின்றார். சிலகணங்களுக்குப்பின் சுபலர் தன் கனத்த உடலுடன் அசைந்தபோது பீடம் முனகியது. “சூதரா?” என்றார். அசலனை ஒருமுறை நோக்கிவிட்டு “அவர் ஒருவேளை அமைச்சராக இருக்கலாமோ?” என்றார். “இல்லை, அவர் ஒரு பாடகர் மட்டுமே” என்றார் சுகதர்.
அசலன் “ஷத்ரியர்களோ பிராமணர்களோதானே அனுப்பப்படவேண்டும்?” என்றான். விருஷகன் கடும் சினத்துடன் “தந்தையே இன்னுமா உங்களுக்குப் புரியவில்லை? அந்தச் சவுக்கை அனுப்பியதற்கு நிகர்தான் இது. தேரோட்டும் சூதனை அனுப்பி நம்மை இழிவுபடுத்தியிருக்கிறான் மகதன். பந்தல் அமைக்கும் சிற்பியையும் சமையல் செய்யும் சூதனையும் அழைப்பதற்குத்தான் சூதர்கள் செல்வார்கள்.”
சகுனி “குடித்தலைவர்களை அழைக்கவும் சூதர்கள்தான் செல்வார்கள்” என்றான். அவன் எந்த உணர்ச்சியுடன் சொல்கிறான் என்று அவர்களுக்குப் புரியவில்லை. விருஷகன் “இதையும் நாம் விட்டுவிட்டால் இங்கே நாம் அரசுடன் இருப்பதற்கே பொருள் இல்லை” என்றான். “நாம் என்ன செய்யமுடியும் இளவரசே?” என்றார் சுகதர். “படைகொண்டுசெல்வோம்…” சுகதர் “அவ்வளவுதொலைவுக்கு நம்முடைய படைகள் செல்லமுடியாது. அந்த எல்லைவரை நமக்கு படைத்துணை அளிக்கும் நாடே இல்லை. பன்னிரண்டு நாடுகளை கடந்து நாம் செல்லவேண்டும்…” என்றார்.
“அப்படியென்றால் நாம் என்னதான் செய்வது? இந்த அவமதிப்பைப் பொறுத்துக்கொண்டு வாளாவிருந்தால் அச்செய்தியை அவன் எப்படியேனும் அந்த மணநிகழ்வில் அனைத்து ஷத்ரியர்களும் அறியும்படி செய்வான். சொல்லப்போனால் அனைவரும் இப்போது நம்முடைய எதிர்வினை என்ன என்று அறியவே காத்திருக்கிறார்கள்” என்றான் விருஷகன்.
“நாம் நம் வருத்தத்தையும் கண்டனத்தையும் தெரிவித்து ஓர் ஓலை அனுப்பினால் என்ன?” என்றான் அசலன். சுபலர் “ஆம், அதைச்செய்யலாம்” என்றபின் சகுனியைப் பார்த்தார். சகுனி பேசாமல் சரிந்த கண்களுடன் அமர்ந்திருப்பதைக் கண்டு “அந்தக் கடிதத்தை நாம் ஒரு சூதரிடம் வேண்டுமென்றால் கொடுத்தனுப்பலாம்” என்றார். சகுனி அதற்கும் பேசாமலிருந்ததைக் கண்டு அவர் பிறரைப்பார்த்தார். பின்பு தன் கைகளை மார்பின் மேல் கட்டிக்கொண்டு பெருமூச்சுவிட்டார்.
சகுனி சற்றுநேரம் தன்னுள் ஆழ்ந்து இருந்தான். அங்கிருக்கும் அனைவரும் தன்னை கவனிப்பதை அவன் அறியவில்லை போலிருந்தது. பின்பு நிமிர்ந்து “சுகதரே நாம் பால்குடித்து விலகிய ஒரு குதிரைக்குட்டியை அனுப்புகிறோம்” என்றான். சுகதர் சிலகணங்கள் திகைத்தபின் முகம் மலர்ந்து “ஆம், அதுவே சிறந்த பதில்… மிகச்சிறந்த பதில்” என்றார். விருஷகன் “அதற்கு என்ன பொருள் அமைச்சரே?” என்றான்.
“இளவரசே, அவர்கள் நமக்கனுப்பிய குதிரைச்சவுக்கு இங்கே உள்ளது. நாம் குதிரைக்குட்டியை அனுப்பினால் அதன்பொருள் ஒன்றே. அக்குதிரை வளர்ந்து சேணம் மாட்டப்படுவதற்குள் நாம் அங்கே படையுடன் வருவோம் என்கிறோம். தைரியமிருந்தால் அக்குதிரைக்குட்டியை கொல்லாமல் கொட்டடியில் வைத்து வளர்த்துக்கொண்டு காத்திரு என்று அறைகூவுகிறோம். மணநிகழ்வில் வந்துசேரும் அக்குதிரைக்குட்டியை மகதன் மறைக்கமுடியாது. அறைகூவலை ஏற்றேயாகவேண்டும். அறைகூவல் அத்தனை வெளிப்படையாக இருக்கையில் மகதத்தின் எதிரிகள் பலர் நம்முடன் சேர வழியிருக்கிறது.”
“ஆனால் உடனடியாக ஒருபோர் தவிர்க்கப்படுகிறது” என்றார் சுபலர். “அது நல்லதுதான்….நாம் நம்மை மேலும் வலிமைப்படுத்திக்கொள்வோம்.” சுகதர் “நாம் நம் நிதிவல்லமையால் இங்கேயே பெரும்படையைத் திரட்டமுடியும். சோனகர்களின் படைகளைக்கூட திரட்டிக்கொள்ளமுடியும். அடுத்த நான்காண்டுகளுக்குள் நாம் சென்று அந்தக்குதிரையைப் பிடித்துக்கொண்டு வரவேண்டும். அதை இங்கே கொண்டுவந்து ஒரு அஸ்வவேள்வியைச் செய்தோமென்றால் நம் குலத்தைப்பற்றி மகதன் எழுப்பிய வினாவுக்கும் பதில் அமைந்துவிடும்.”
“அந்தப் புரவியின் சேணத்தில் மகதனைக் கட்டி இழுத்துவருவோம்” என்றான் சகுனி. அப்போது மந்திரசாலையில் இருந்து அரண்மனைக்குள் செல்லும் அறையின் கதவு மெல்ல அசைந்தது. சகுனி “உள்ளே வருக இளவரசி” என்றான். சுகதர் “தாங்கள் அங்கே கேட்டுக்கொண்டிருப்பதை முன்னரே அறிவோம் இளவரசி. தங்கள் சொல் இங்கே வரவேற்கப்படுகிறது” என்றார். “நான் மந்திரசாலையில் வந்து பேச விழையவில்லை அமைச்சரே. அது அரசுரையாக ஆகிவிடும். நான் இங்கிருந்தே சொல்கிறேன்” என்று காந்தாரி மெல்லிய குரலில் சொன்னாள். சகுனி “அவ்வண்ணமே” என்றான்.
“தம்பி, நம்மை பாரதவர்ஷமே பார்த்துக்கொண்டிருக்கிறது என்று சொன்னாய். அந்த மேடையில் நாம் முன்வைக்கவேண்டியது நம்முடைய சினத்தைத்தானா?” என்றாள் காந்தாரி. “நம்மை பிறர் சினம் கொள்ளச்செய்யமுடியுமென்பதே ஓர் இழிவல்லவா?”
சகுனி திகைத்தவன் போல உடலை முன்னகர்த்தி “ஆம் அக்கா. ஆனால்…” என்றான். “தம்பி, அந்த மேடையில் நம்முடைய நிமிர்வும் கனிவும் நட்பும் முன்வைக்கப்படட்டும். நம் அரண்மனையின் மிகச்சிறந்த சூதர்குழுவும் தாசியர்குழுவும் அவர்களுக்கு மணப்பரிசிலாக அனுப்பப்படட்டும். அவர்கள் ஒருபோதும் கண்டிராத காப்பிரிநாட்டு நவமணிகளும் யவனப்பொன்னும் பீதர்களின் பட்டும் அளிக்கப்படட்டும். பாரதவர்ஷமே அவற்றைக் கண்டு வியக்கவேண்டும்.”
“ஆணை” என்றான் சகுனி. “தம்பி, அங்கிருக்கும் ஷத்ரியர் நாம் நட்பையே நாடுபவர்கள் என்று உணரட்டும். நாளை நாம் பாரதவர்ஷத்தை வெல்ல படைகொண்டுசென்றால் நம்முடன் வந்து சேர ஷத்ரியர்கள் அங்கே இருக்கவேண்டும். அவர்களில் எவர் நம்முடன் இணைவார்கள் என இன்று சொல்லமுடியாது.” காந்தாரி மெல்லிய திடமான குரலில் “ஒருவேளை நாளை நாம் அஸ்தினபுரியிடமே போர்புரிய நேரிடலாம். அப்போது மகதம் நம்முடன் சேரவும்கூடும்” என்றாள்.
“ஆம். உண்மை இளவரசி. இதைவிடச்சிறந்த அரசுரை இங்கே நிகழப்போவதில்லை” என்றார் சுகதர். “அமைச்சரே, அத்துடன் என்னை மணம்புரிய மறுத்தார் என்பதற்காக ஒருவர் மேல் நான் பகை கொள்வது என் பெண்மையை சிறுமைசெய்கிறது. அவர் நலம்பெற்று நன்மக்களுடன் நீடூழி வாழவேண்டுமென்று வாழ்த்தவே என் மனம் எழுகிறது” என்று காந்தாரி சொன்னாள். “அவ்வண்ணமே செய்வோம்” என்றார் சுபலர்.
சகுனி எழுந்து கதவை நோக்கி ஓரடி எடுத்து வைத்து “அக்கா, தங்களை நான் நினைவறிந்த நாள் முதலே அறிவேன். ஆனால் என் அன்பு தங்களை தமக்கையாக மட்டுமே காட்டிவிட்டது. நீங்கள் சக்கரவர்த்தினி. மாமன்னர்களின் மணிமுடிகள் வந்து வணங்கவேண்டிய பாதங்கள் கொண்டவர். பாரதவர்ஷத்தின் அனைத்து மக்களுக்கும் அமுதூட்டும் பாற்கடலை நெஞ்சிலேந்தியவர்… அப்பதவியைத் தவிர ஏதும் உங்களுக்கு இழிவே” என்றான்.
சகுனியின் குரலில் அந்த உணர்ச்சியை ஒருபோதும் அவர்கள் எவரும் கண்டிருக்கவில்லை. “சிறுமன்னன் ஒருவனுக்கு துணைவியாகி நீங்கள் செல்வதை எண்ணிப்பார்க்கவே முடியவில்லை அக்கா. நீங்கள் அஸ்தினபுரியை ஆளவேண்டும். நான் வாளுடன் உங்கள் அருகே நிற்கிறேன். பாரதவர்ஷத்தை வென்று உங்கள் பாதங்களில் போடுகிறேன். அருள்புரியவேண்டும்” என்றான்.
“நான் உன் கனவுகளை எப்போதும் பகிர்ந்துவந்திருக்கிறேன் தம்பி” என்றாள் காந்தாரி. சகுனி கைகூப்பினான். விருஷகன் பரபரப்புடன் “அப்படியென்றால் நாம் பீஷ்மரிடம் தெரிவித்துவிடலாமல்லவா? அஸ்தினபுரியுடன் நாம் மண உறவு கொள்கிறோம் என்று அரசமுறையாக அறிவிக்கவேண்டுமல்லவா?” என்றான். “உன் விருப்பம் நிறைவேறுக தம்பி” என்றாள் காந்தாரி.
சுபலர் “மகளே, அஸ்தினபுரியின் இளவரசன் விழியிழந்தவன் என்பது…” என்று தொடங்கவும் காந்தாரி இடைமறித்து “அனைத்து ஷத்ரியர்களும் விழியற்றவர்கள்தான் தந்தையே” என்றாள். அசலன் “தம்பி, அறிவிப்பை வெளியிடலாமா? விருஷகனே நேரில் சென்று பீஷ்மரிடம் சொல்லட்டும். அறிவிப்புடன் சத்யவிரதரை தொடர்ந்து அனுப்புவோம்” என்றார். “ஆம்… அதுவே முறை” என்றான் சகுனி.

3/25/14

பகுதி மூன்று : புயலின் தொட்டில்[ 5 ]

பகுதி மூன்று : புயலின் தொட்டில்[ 5 ]
பீஷ்மரை சந்தித்து இரவில் திரும்பியபின் சகுனி துயிலவில்லை. தன் அரண்மனை உப்பரிகையில் நின்றபடி இரவையே நோக்கிக்கொண்டிருந்தான். விண்மீன்கள் செறிந்த பாலைவன வானம் கருங்கல்லால் ஆனதுபோலத் தெரிந்தது. வடக்கே நெடுந்தொலைவில் தனித்த ஓநாய் ஒன்று அடிவயிற்றை எக்கி எழுப்பிய ஊளை மெலிதாகக் கேட்டு மறைந்தது. அந்த ஓநாயை மிக அருகே, கண்ணுக்குக் கண் நெருங்கி, பார்ப்பதுபோல சகுனி உணர்ந்தான். அது தன்னையும் அறிந்துகொள்ளும் என்று தோன்றியது.
அதற்கு பலநாட்களாக பசி இருக்கிறது என்று அந்த ஊளையிலிருந்தே அறிந்துகொண்டான். சிறிய பூச்சிகளையும் முள்ளிலைகளின் பனித்துளிகளையும் நக்கி உண்டு அது வீண்நிலம் முழுக்க அலைந்து திரிகிறது. ஒருமுறை வயிறு நிறையும் ஓர் உணவு அதை மேலும் ஒருமாதம் வாழச்செய்யும். ஒவ்வொரு பொருக்கிலும் பிளவிலுமாக கால்வைத்து செங்குத்தான மலைப்பாறையும் ஏறும் பஷுத்துரனைப்போன்ற அது ஒவ்வொரு உணவாக தன் வாழ்க்கையின் நிறைவுநோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது.
மகதத்தின் ஓநாய் இந்நேரம் என்ன செய்துகொண்டிருக்கும் என அவன் நினைத்துக்கொண்டான். அதன் கண்முன் பசுமைததும்பும் புதர்வெளிக்குள் முயல்களும் எலிகளும் புதர்பறவைகளும் வாழ்கின்றன. மான்களும் பன்றிகளும் குட்டிகளை போட்டுக்கொண்டே இருக்கின்றன. அதன் வாழ்க்கையின் அறைகூவல் உணவு அல்ல. இன்னொரு ஓநாய்தான். தன் எல்லைகளை பாதுகாத்துக்கொள்வதற்கே அதன் கூர்நாசியும் விரிசெவிகளும் ஒளிர்விழிகளும் எந்நேரமும் கருத்துகொண்டிருக்கின்றன. உணவின் பச்சை ஊன்குருதியை சுவைத்து காந்தாரத்து ஓநாய் அடையும் உவகையை அது அடையவேண்டுமென்றால் இன்னொரு ஓநாயை கடித்துக்கிழித்தாகவேண்டும்.
பாலைநிலத்தில் அப்போது காற்றே அடிக்கவில்லை. அரண்மனைச்சாளரத்தின் திரைகளும் நெய்ச்சுடர்களும் வெளியே மரங்களின் இலைகளும் அசைவிழந்து நின்றிருந்தன. ஆகவே மிகத்தொலைவில் அந்த ஓநாயின் ஊளை மீண்டும் துல்லியமாகக் கேட்டது. இருளில் மெல்லிய செந்தீற்றலாக கிழிபட்டு மறையும் விண்மீன்கோடு போல. மீண்டும் அந்த ஒலி. இம்முறை அது கேட்டதா, செவிமயக்கா என்றே ஐயமாக இருந்தது.
அவனுக்கு அந்த ஓநாயைப்பார்க்கவேண்டுமென்ற எண்ணம் எழுந்தது. அது எதையோ சொல்லவிருப்பதாக, மிகநெருக்கமாக தன் வாழ்க்கையுடன் அதற்கு தொடர்பிருப்பதாகத் தோன்றியது. அது ஒரு பாவனையே என அவன் அறிந்திருந்தாலும் அத்தகைய பாவனைகள் வழியாக வெளிப்படும் ஆன்மாவின் உட்குறிப்புகள் முக்கியமானவை என்று அறிந்திருந்தான். சால்வையை எடுத்து தோளிலிட்டபடி வெளியேவந்து அரண்மனை முகப்பில் நின்றதும் சேவகன் ஓடிவந்து வணங்கினான். குதிரை என அவன் ஒற்றைச்சொல்லில் ஆணையிட்டான்.
குதிரையுடன் அவனுடைய வேட்டைத்துணைவன் சூனிகனும் வந்து நின்றான். அவனுடன் வேட்டைநாயான ஜரதன் வந்து நின்று சகுனியை நோக்கி வாலாட்டியது. சகுனி குதிரைமேல் ஏறிக்கொண்டதும் சூனிகனும் குதிரையில் ஏறிக்கொள்ள இருவரும் ஊன்நெய்யிட்ட வழிவிளக்குகளின் செவ்வொளி சிந்திக்கிடந்த சாலைகள் வழியாக இருண்டுகிடந்த மாளிகைச்சுவர்களில் குளம்படிகள் எதிரொலிக்க நகரைக் கடந்துசென்றனர். வடக்குவாயில் வழியாக வெளியே சென்று விண்மீனொளியில் துலங்கிவந்த வெறும்நிலத்தைப் பார்த்து சிலகணங்கள் நின்றபின் சகுனி குதிரையைத் தூண்டி முன்னால் பாய்ந்தோடினான். சூனிகனும் பின்னால் சென்றான். ஜரதன் வாலைச்சுழற்றியபடி ஆர்வத்துடன் தாவித்தாவி கூடவே ஓடியது.
நிழல்குவைகளாக புதர்கள் பரவிக்கிடக்க பாழ்நிலத்தின் எல்லையில் தொடுவானம் கவிந்திருந்தது. கண் எட்டும் தொலைவுக்கு அப்பாலிருந்து சாம்பல்நிறமான தரைக்கம்பளம் போல அதை அவர்களுக்கு முன்னால் வடதிசை விரித்துக்கொண்டே சென்றது. ஓநாயின் குரல்கேட்டதாக தான் கணித்த இடத்தை அடைந்ததும் சகுனி சுற்றிலும் பார்த்தான். அருகே இருந்த மண்மேட்டைக் கண்டு அதன்மேல் குதிரையில் ஏறிச்சென்றான். அங்கே இறங்கி குனிந்து மண்ணைப்பார்த்தபோது ஓநாயின் சிறுநீர்த்தடத்தையும் காலடிச்சுவடுகளையும் கண்டான். ஜரதன் வந்து அருகே நின்றது. சகுனி சுட்டிக்காட்டியதும் அது மோப்பம்பிடித்து மெல்லக்குரைத்து தான் அறிந்துவிட்டதைச் சொன்னது.
சூனிகன் மெல்லிய உதட்டொலி எழுப்பியதும் ஜரதன் மோப்பம்பிடித்தபடி முன்னேறிச்சென்றது. அதன்பின்னே குதிரைகள் பெருநடையில் சென்றன. இருளுக்குள் சென்ற பாம்பொன்றைக் கண்டு ஜரதன் நின்று செவியை பின்னுக்குத்தள்ளி குரைத்தது. சூனிகன் அதனிடம் முன்னால்செல்ல ஆணையிட்டபோது மேலும் முன்னால் ஓடியது. இரவெல்லாம் அவர்கள் சென்றுகொண்டே இருந்தனர்.
கீழ்வானில் விடிவெள்ளி தெரியத்தொடங்கியபோது நெடுந்தூரத்தில் ஓநாய் சென்றுகொண்டிருப்பதை ஜரதன் கண்டுகொண்டது. திரும்பி வாலை ஆட்டியபடி சகுனியைப்பார்த்துக் குரைத்தது. சகுனி நிற்கும்படி ஆணையிட்டான். அப்பால் அந்த ஓநாய் நின்று அவர்களைப் பார்த்தது. வானின் வெளிறிய ஒளியின் பின்னணியில் அதன் புல்தோகைபோன்ற வாலையும் மயிர்சிலிர்த்த கழுத்தையும் மெல்லிய கால்களையும் கூம்பிய முகத்தையும் நிழலுருவாகக் காணமுடிந்தது.
அவர்களை சிலகணங்கள் நோக்கியபின் ஓநாய் உறுமிய ஒலியை ஜரதன் மட்டுமே கேட்டது. அது உறுமியபடியே பின்னடைந்து குதிரைகளுக்குப்பின்னால் சென்று நின்று தலையைத் தாழ்த்தி கால்கள் வழியாக கூர்ந்து நோக்கியது. அதன் வால் கால்கள் நடுவே படிந்து ஆடியது. ஓநாய் மீண்டும் ஓடத் தொடங்கியதும் சகுனி அதைத் தொடர்ந்துசென்றால்போதும், துரத்தவேண்டாம் என ஆணையிட்டான். ஓநாய் மேடேறி மறைந்தது. ஜரதனின் மோப்பத்தை மட்டுமே அடையாளமாகக் கொண்டு அவர்கள் துரத்திச் சென்றனர்.
கிழக்கே வானம் விளிம்பு திறந்து செவ்வொளியை நிலம் மீது பரவவிட்டபோது அவர்கள் ஒரு மேட்டின் மேல் நின்றிருந்தனர். காலையொளியில் பாலைமண் மிகமென்மையான பொன்னிறப்பட்டுபோல அலைபடிந்து விரிந்திருந்தது. மிகத்தொலைவில் செந்நிற மண்ணில் ஒரு செந்நிறப் பூச்சி செல்வதுபோல ஓநாய் சென்றுகொண்டிருந்தது. சகுனி திரும்பி சூனிகனைப்பார்த்தான். சூனிகன் “இன்னும் ஒருநாழிகையில் வெயில் வந்துவிடும். அது வெயிலில் செல்லாது. அங்கே ஏதேனும் புதரைக் கண்டிருக்கும்” என்றான்.
அவர்கள் புழுதியாகக் குவிந்துக்கிடந்த மண்சரிவில் குதிரையில் இறங்கி அந்தக் கால்தடத்தைத் தொடர்ந்து சென்றனர். காற்றே இல்லாத மண்பரப்பில் ஒரு ஊசித்தையல் கோடுபோல அந்தக் கால்தடம் சென்றது. வெயில் ஏறத்தொடங்கியதும் சகுனி ஒரு பாலைப்பொழிலைக் கண்டான். சூனிகன் அது ஜலவனம் என்ற சோலை என்றான். முற்றிலும் சரளமரங்கள் மட்டும் செறிந்த சோலைக்குள் அவர்கள் நுழைந்தனர். சூனிகன் “இந்தச்சோலைக்குள் எங்கோ அது இருக்கும். இதற்கு அப்பால் அது செல்ல வாய்ப்பில்லை” என்றான்.
ஆயிரக்கணக்கான சிறிய பசுங்கோபுரங்கள் போல அடர்திருந்த சரளமரங்களுக்கு நடுவே அவற்றின் மட்கியசருகுகளின் மெத்தை மேல் குதிரைகள் மெல்ல நடந்தன. ஜரதன் முன்னால்சென்று நின்று காதுகளை மடித்து முனகியபடி மெல்ல பின்னகர்ந்தது. சூனிகன் கையைக் காட்டியபின் குதிரையிலிருந்து இறங்கி ஓசையில்லாமல் நடந்து முன்னால் சென்று எட்டிப்பார்த்தான். சரிந்திறங்கிய செம்மண்குழியின் அடியில் தேங்கியிருந்த கலங்கிய சிறிதளவு நீரை ஓநாய் குடித்துக்கொண்டிருந்தது.
சகுனி குதிரையிலிருந்து இறங்கி அதைப்பார்த்தபோது தாடை மயிரில் சொட்டிய நீருடன் அது நிமிர்ந்து அவனைப்பார்த்தது. அதன் பெரிய காதுகள் முடியுடன் முன்னால் குவிந்தன. அது முனகியதும் ஜரதன் வாலைத்தாழ்த்தியபடி குதிரைகளுக்குப் பின்னால் சென்றது. அங்கே நின்றபடி முனகி அழுதது.
சற்றுநேரம் அவர்கள் ஓநாயைப் பார்த்தபடி நின்றனர். அது தன் பழுத்த கண்களால் அவர்களைப் பார்த்தது. பின்பு கழுத்தில் அமர்ந்த ஏதோ பூச்சியை உதறும்பொருட்டு ஒருமுறை தலையைத் திருப்பிக்கொண்டது. நீர்த்துளிகள் அதன் விலாமயிரில் சொட்டி துளித்து நின்றன. குனிந்து நீரை மீண்டும் குடிக்கத்தொடங்கியது. நீரில் கூழாங்கற்கள் விழுவது போல அது ஒலித்தது. அருந்தியதும் ஓநாய் குழியைச்சூழ்ந்திருந்த மெல்லிய சேற்றில் பாதங்கள் பதிய, குலைவாலைத் தாழ்த்தியபடி மேலேறி அப்பால் மறைந்தது.
VENMURASU_EPI_65_
ஓவியம்: ஷண்முகவேல்
[பெரிதுபடுத்த படத்தின்மீது சொடுக்கவும்]
“அது இரவுவரை இங்கிருந்து செல்லாது” என்று சூனிகன் சொன்னான். “இரவில் இங்கே நீர் அருந்தவரும் உயிர்களை அது பிடிக்கமுடியாதா?” என்றான் சகுனி. “நீர் அருந்தும் மிருகங்கள் அனைத்துமே பெரியவை. அவற்றை தனித்த ஓநாய் நெருங்கமுடியாது. அது எலிகளையும் உடும்புகளையும்தான் பிடிக்கமுடியும்.” சகுனி சிலகணங்கள் சிந்தித்துவிட்டு “நாம் இங்கே ஓய்வெடுப்போம். இன்றிரவு அது என்ன செய்யப்போகிறதென்று பார்ப்போம்” என்றான்.
“இன்னும் ஓரிரவுக்குள் அதற்கு உணவு கிடைக்கவில்லை என்றால் அதனால் ஓடமுடியாது” என்றான் சூனிகன். “அதன் பின்னங்கால்கள் ஒன்றோடொன்று பின்னுகின்றன. வயிறு நன்றாகவே மேலேறி ஒட்டிவிட்டது. இப்போதே அதனால் ஓடமுடியவில்லை.” சகுனி உதடுகளை இறுக்கியபடி “பார்ப்போம்” என்றான். குதிரைகளைக் கீழிறக்கி நீர் அருந்தவைத்துவிட்டு அவர்கள் சரளமரங்களின் அடியில் தோல்விரித்து படுத்துக்கொண்டனர்.
சகுனி சிறிதுநேரம் துயின்றிருப்பான். பாலையில் குதிரையில் சுஜலன் வரும் ஒலிகேட்டு விழித்துக்கொண்டான். பாலையொளி நீர்த்திரைபோல அலையடிக்க அதில் ஓவியமாக எழுதப்பட்டதுபோல சுஜலனின் குதிரையின் அசைவு தெரிந்தது. வானிலிருந்து ஒரு பெரிய நீர்த்துளி துளித்து திரண்டு சொட்டுவது போல குதிரை அணுகியது. சகுனி எழுந்து அமர்ந்து தன் எரியும் விழிகளை மூடித்திறந்தான். தோல்பையில் இருந்து குடிநீரை எடுத்து வாயை நனைத்து விழுங்கியபின்பு இருதுளிகளை கண்கள் மீதும் விட்டுக்கொண்டான்.
சுஜலன் இறங்கி வணங்கி நின்றான். என்ன என்பதுபோல சகுனி பார்த்தான். “பீஷ்மரும் பலபத்ரரும் இன்று மாலை கிளம்பிச் செல்கிறார்கள்” என்றான் சுஜலன். சகுனி “இன்றா?” என்றான். “ஆம், தூது முடிந்துவிட்டது என்று பீஷ்மபிதாமகர் சொன்னார்.” சில கணங்கள் சிந்தித்தபின் “அவர் சினத்துடன் இருந்தாரா?” என்றான் சகுனி. “அவர் வழக்கம்போலத்தான் இருந்தார்” என்றான் சுஜலன்.
சகுனி அவனைக்கூர்ந்து நோக்கி “இன்றுகாலை அவர் என்ன செய்தார்?” என்றான். “வழக்கம்போல ஆயுதப்பயிற்சி எடுத்துக்கொண்டார்” என்றான் சுஜலன். “எங்கே?” என்று சகுனி கேட்டான். “நம்முடைய ஆயுதசாலையில். நம் இளவரசர் விருஷகருக்கும் மற்ற தளபதிகளுக்கும் பயிற்சியளித்தார். இளவரசர் கோரியதற்கேற்ப அபூர்வமான ஆறு அம்புகளை அவருக்கு தனியாக கற்றுக்கொடுத்தார்.”
சகுனி சுஜலனையே நோக்கிக்கொண்டிருந்தான். அவன் யார், என்ன சொல்கிறான் என்று புரியாது பார்ப்பதுபோல. பின்பு தன் குதிரையை நோக்கிச் சென்றபடி “அவர் செல்வதற்குள் நான் அங்கே இருக்கவேண்டும். அவரை நான் வணங்கி விடைகொடுக்கவேண்டும்” என்றான். சுஜலன் “ஆம், அதுவே முறை. விருஷகர் என்னிடம் அதை தங்களிடம் சொல்லி தங்களை அழைத்துவரும்படி சொல்லித்தான் அனுப்பினார். அவர் அஸ்தினபுரிக்கு மட்டும் பிதாமகரல்ல. நம் வீரர்கள் அனைவருமே அவரை தந்தையாகவே எண்ணுகிறார்கள்.”
சகுனி குதிரையில் ஏறியபின் திரும்பி சூனிகனிடம் “நீ இங்கேயே இரு. அந்த ஓநாயை பின்தொடர்ந்து செல். அது வாழ்கிறதா என நான் அறியவேண்டும்” என்றான். சூனிகன் “ஆணை” என்றதும் குதிரைகள் பாலையின் மேல் வெண்ணிற நெருப்பாக நின்றுகொண்டிருந்த வெயிலுக்குள் பாய்ந்துசென்றன. செல்லும் வழியெங்கும் சகுனி ஒரு சொல்கூட பேசாமல் அமர்ந்திருந்தான்.
அரண்மனை முகப்பில் அவனைக்காத்து விருஷகன் நின்றிருந்தான். சகுனி இறங்கியதும் அருகே வந்து “காலைப்பயிற்சி முடிந்ததுமே பிதாமகர் கிளம்புவதாகச் சொன்னார். நான் உடனே தங்களுக்குச் செய்தியனுப்பினேன். தாங்கள் வேட்டைக்குச் சென்றிருப்பதை அறிந்தேன். ஆகவேதான் சுஜலனையே அனுப்பினேன்” என்றான். சகுனி பேசாமல் உள்ளே சென்றான். விருஷகன் பின்னால் வந்தபடி “பிதாமகரைத் தவிர்ப்பதற்காகவே நீங்கள் வேட்டைக்குச் சென்றீர்கள் என்று எனக்குத்தெரியும். ஆகவே அனேகமாக திரும்பவரமாட்டீர்கள் என்று என்ணினேன்” என்றான்.
“ஏன் நான் அவரைத் தவிர்க்கவேண்டும்?” என்று சகுனி கேட்டான். “ஏன் நீங்கள் நேற்றிரவு உங்கள் முடிவை சொன்னதுமே கிளம்பிவிட்டீர்கள்? அதனால்தான்” என்றான் விருஷகன். சகுனி கண்களைச் சுருக்கி நோக்கி “ஏன்?” என்றான். விருஷகன் “உங்கள் எண்ணத்தை அவர் மாற்றிவிடுவாரென அஞ்சினீர்கள்” என்றான். சகுனி கண்களை திருப்பிக்கொண்டான். “ஆனால் நீங்கள் எழுந்து சென்றபின் பிதாமகர் ஒருசொல் கூட அதைப்பற்றிப் பேசவில்லை. காந்தாரத்தின் கோட்டைக்கு ஆன செலவுகளைப்பற்றித்தான் பேசிக்கொண்டிருந்தார். சில ஆலோசனைகளைச் சொன்னார்.”
“என்ன ஆலோசனை?” என்று அக்கறையில்லாமல் கேட்பதுபோல பாவனைசெய்தபடி சகுனி தன் மேலாடையைக் கழற்றி ஏவலனிடம் கொடுத்தான். “புருஷபுரியில் இருந்து காந்தாரநகரி வரை ஓர் இரவு பயணம்செய்யும் தொலைவுக்கு ஒரு சிறுகோட்டை வீதம் கட்டி அவற்றில் ஒவ்வொன்றிலும் சிறிய நிலைப்படை ஒன்றை நிறுத்திவைக்கலாம் என்றார். புருஷபுரத்தில் இருந்தோ காந்தாரத்தில் இருந்தோ ஒரு படை கிளம்பினால் அது முதல்கோட்டையை அடைந்ததும் அங்கே ஓய்வெடுக்க அங்குள்ள படை அடுத்த இலக்குக்குச் செல்லலாம். அப்படி செல்லமுடிந்தால் நாட்டின் எப்பகுதிக்கும் தேவையானபோது பயணக்களைப்பு அடையாத ஒரு படை சென்றுசேரமுடியும். வணிகர்களுக்கும் பெரும் பாதுகாப்பு என்றார்.”
அதை அப்படியே விட்டுவிடுபவன்போல சகுனி “நீயே பிதாமகர் என்று சொல்ல ஆரம்பித்துவிட்டாய்” என்றான். “அவர் என் ஆசிரியர். ஆனால் பிதாமகர் என்று சொல்லும்போதுதான் நான் நிறைவடைகிறேன்” என்றான் விருஷகன். சகுனி புன்னகையுடன் திரும்பி “நான் அவரை கொன்றுவரச்சொன்னால் என்ன செய்வாய்?” என்றான். “அவருக்கு எதிராக என் ஆயுதம் எழாது. அது என் கழுத்துக்கே செல்லும்” என்றான் விருஷகன். அவன் கண்கள் அச்சமில்லாமல் சகுனியை நோக்கின. சகுனி புன்னகையுடன் திரும்பிக்கொண்டான்.
காந்தார அரசகுலத்தின் குலதெய்வக் கோயிலில் பீஷ்மருக்காக ஒரு சிறப்புவழிபாடு மன்னர் சுபலரால் ஒருக்கப்பட்டிருந்தது. அது விருஷகனின் எண்ணம் என அதைக்கேட்டதுமே சகுனி புரிந்துகொண்டான். குளித்து அரச ஆடையணிந்து அவன் ஆலயவளாகத்துக்கு வந்தான். கற்களால் ஆன மூன்று சிறிய கோயில்கள் உயரமற்ற மதில்வளைவால் சூழப்பட்டு சாலமரங்களால் ஆன சிறிய காட்டுக்குள் இருந்தன. சகுனி செல்லும்போது அங்கே விருஷகன் இருந்தான். வந்து வணங்கி “அரசரும் மூத்தவரும் வந்துகொண்டிருக்கிறார்கள் அண்ணா” என்றான்.
நிமித்திகன் அறிவித்ததும் அசலன் வெண்புரவியில் வந்து இறங்கினான். தொடர்ந்து வெண்குடைத் தேரில் சுபலர் வந்தார். மங்கலவாத்தியங்களை முழக்கியபடி சூதர்கள் சென்று அரசனை வரவேற்று உள்ளே அழைத்துவந்தனர். காந்தாரத்தின் குலதெய்வக்கோயில்களில் மட்டும் வைதிகர் பூசனைகள் செய்வதில்லை. லாஷ்கரகுலத்து முதுபூசகர்கள் எழுவர் ஓநாய்த்தோலாடை அணிந்து தலையில் செம்பருந்தின் இறகுகளால் ஆன முடியணிந்து நின்றிருந்தனர். ஏழு லாஷ்கர பாடகர்கள் கையில் கழுதைத்தோலில் செய்யப்பட்ட பறைகளுடன் அமர்ந்திருந்தனர். அரசர் உள்ளே நுழைந்ததும் பறைகள் முழங்கின. பூசகர்கள் சென்று வாழ்த்தொலி செய்து நீர் தெளித்து வரவேற்று உள்ளே போடப்பட்டிருந்த கல்லாலான ஆசனங்களில் அமரச்செய்தனர்.
லாஷ்கரர்களின் வழக்கப்படி பலிகொடுக்கப்படுவதற்காக கொண்டுவரப்பட்டிருந்த காட்டுஆடுகள் தறிகளில் கட்டப்பட்டிருந்தன. ஒரு ஆடு கயிற்றை இழுத்து நான்குகால்களையும் விசையுடன் உந்தி நின்றிருந்தது. அப்படியே சுழன்று மறுபக்கச் சுவரில் முட்டி அது திரும்பி வந்தது. மாலையின் சாயும் ஒளி வேகமாக மங்கிக்கொண்டிருக்க வானில் எஞ்சியிருந்த உதிரிமேகப்பிசிறுகள் சிவந்துகொண்டிருந்தன. ஒரு லாஷ்கரப்பூசகர் மூன்றுகோயில்களிலும் சுளுந்துகளை ஏற்றி வைத்தார். காற்றில் அனைத்துத் தழல்களும் வடக்கு நோக்கி வீசின.
தூதன் வந்து பீஷ்மர் வந்துகொண்டிருப்பதை அறிவித்தான். சற்றுநேரத்தில் பீஷ்மரும் பலபத்ரரும் ரதத்தில் வந்திறங்கினர். பீஷ்மர் குளித்த ஈரம் சொட்டும் தாடியும் குழலுமாக நனைந்த சுண்ணக்கல்பாறை போன்ற உடலுடன் இருந்தார். விருஷகன் அவர் அருகே சென்று அவர் பாதங்களை வணங்கி “பிதாமகரே எங்கள் குலதெய்வங்களும் தங்களை அறிந்திருக்கவேண்டும்” என்றான். அவர் சிரித்தபடி “ஆம், நாம் ஒரே குலம்” என்றார்.
சுலபரும் அசலனும் பீஷ்மரை வரவேற்று உள்ளே அழைத்துவந்தனர். சகுனி சென்று தலைவணங்கினான். “நேற்று நீங்கள் வேட்டைக்குச் சென்றதாக விருஷகன் சொன்னான். என்னை அழைத்திருக்கலாமே” என்றார் பீஷ்மர். சகுனி “நான் நினைத்திருக்காமல் கிளம்பினேன்” என்றான். “நான் இத்தகைய வீண்நிலத்தில் வேட்டையாடியதேயில்லை” என்றார் பீஷ்மர். சுபலர் வந்து அவரை வணங்கி அழைத்துச்சென்று பீடத்தில் அமர்த்தினார்.
“எங்கள் குருதிப்பூசனையில் பெண்டிர் கலந்துகொள்வதுண்டு” என்று சுபலர் சொன்னார். “கங்கைக்கரை ஷத்ரியர்களிடம் அவ்வழக்கமில்லை என்று அறிந்தேன்.” பீஷ்மர் சிரித்தபடி “பூர்வஆரியவர்த்தம் முழுக்கவே அவ்வழக்கம் முன்பு இருந்தது சுபலரே. இன்றும் சப்தசிந்துவின் இளவரசிகள் போருக்கும் வேள்விக்கும் தலைமை வகிக்கிறார்கள். எங்கள் கங்கர்குலங்களிலும் அவ்வழக்கமே” என்றார்.
அரசியர் வரும் முரசொலி எழுந்தது. சத்ரமும் சாமரமும் கொண்ட திறந்த ரதத்தில் காந்தாரிகளான பட்டத்து அரசி சுகர்ணையும் இளவரசி வசுமதியும் வந்திறங்கினர். பூசகர்களும் சூதர்களும் சென்று மங்கல இசையும் வாழ்த்துக்களுமாக அவர்களை அழைத்து கொண்டுசென்று பீடங்களில் அமரவைத்தனர். காந்தார வழக்கப்படி மன்னனும் இளவரசர்களும் அவர்களை வரவேற்றபோது பீஷ்மரும் இணைந்துகொண்டார்.
மூன்று ஆலயங்களில் முதல் ஆலயத்தில் கழுதையுடலும் சிறகுகளும் கொண்ட காற்றுத்தெய்வமான பலன் மீது அனலாகப் பறக்கும் சிகையும் செம்பருந்துச் சிறகும் கொண்ட அக்னிதேவனாகிய பாவகன் அமர்ந்திருந்தான். அவர்களுக்கு இருபக்கமும் அவர்களின் துணைவிகளான மருவும் இருணையும் அமர்ந்திருந்தனர். இரண்டாம் ஆலயத்தில் பறக்கும் ஒட்டக உடலுடன் அதிபலன் நின்றிருக்க அவன் மேல் பவமானன் அமர்ந்திருந்தான். இருபக்கமும் ஃபூர்ணியும் காமலையும் அமர்ந்திருந்தனர். மூன்றாம் ஆலயத்தில் குதிரைவடிவமான சண்டன் மீது சூசிதேவன் அமர்ந்திருக்க கிலையும் ஆரண்யையும் உடன் அமர்ந்திருந்தனர்.
விருஷகன் பீஷ்மரிடம் “இது எங்கள் குலதெய்வம் பிதாமகரே” என்றபின் “ஊர்ணரே சொல்லும்” என்றான். ஊர்ணர் என்னும் சூதர் வணங்கி “இந்த காந்தாரநிலமே இந்த ஆறு தெய்வங்களுக்கும் உரியவை என்பது புராணம். அத்ரி முனிவரின் சாபத்தால் வாயுதேவனின் மைந்தர்களான பலன், அதிபலன், சண்டன் மூவரும் மூன்று கொடுங்காற்றுகளாக மாறி அக்னியின் புதல்வர்களான பாவகன், பவமானன், சூசி ஆகியோரைச் சுமந்து ஓடிக்கொண்டிருக்கிறார்கள்” என்று சொல்லத் தொடங்கினார்.
ஆறு தேவமைந்தர்களும் நூறு யுகங்களாக முன்னும்பின்னும் ஓடிக்கொண்டிருந்தபோது இங்குள்ள ஒரு மண்துகள் கூட பூமியில் அமரமுடியவில்லை. அவை மேகங்களாக மாறி காற்றிலேயே திரைகளாக நெளிந்துகொண்டிருந்தன. அந்த மண்துகள்கள் மனம் வருந்தி தங்கள் அன்னையாகிய பூமாதேவியிடம் மன்றாடின. “அன்னையே உன் மதலைகளாகிய எங்கள் பேரின்பம் என்பது அன்னையின் மடியில் அமர்வதேயாகும். ஆகவேதான் எங்கு எவ்வாறு விலகினாலும் நாங்கள் உன்னிடமே வந்தமைகிறோம். இங்கு மட்டும் யுகயுகங்களாக நாங்கள் உன் தொடுகையையே அறியாதவர்களாக இருக்கிறோம்” என்றனர்.
பூமாதேவி இந்திரனிடம் கோரிக்கை வைத்தாள். இந்திரன் அவளுக்கு அருளி வானில் தன் ஒளிமிக்க வில்லை நாட்டினான். இடிகளை மண்மீது பொழிந்தான். அவன் கருணை பூமாதேவியில் ஆறு பெண்களாகப் பிறந்தது. அவர்கள் மரு, இருணை, ஃபூர்ணி, காமலை, கிலை, ஆரண்யை என்று அழைக்கப்பட்டனர். அவர்கள் பூமியின்மேல் ஆறு பாலைநிலங்களாக விரிந்தனர். அவர்களைக் கண்டு காதல்கொண்ட ஆறுதேவர்களும் வேகமிழந்தனர். அந்த ஆறு பெண்களையும் அவர்கள் மணம்புரிந்துகொண்டனர். அவ்வாறாக காந்தாரநிலம் உருவாகிவந்தது.
அந்த ஆறு பாலைநிலப்பெண்களும் ஆறுதேவர்களுடன் கூடும் ஆறு பருவங்களில் மட்டும் காந்தார மண்ணில் அனல்காற்றுகள் வீசுவதில்லை. அந்த ஆறு இடைவெளிகளில்தான் இங்கே மழைபொழிகிறது. பயிர்கள் வாழ்கின்றன. உயிர்கள் தழைக்கின்றன. லாஷ்கரர் அந்த ஆறு அன்னையரை மட்டுமே வணங்குகிறார்கள். ஷத்ரியர் மூன்று அனல்களையும் மூன்று காற்றுகளையும் சேர்த்து வணங்குகிறார்கள்.
லாஷ்கர பூசகர்கள் மூன்று தெய்வங்களின் கோயில் முகப்பிலும் இருந்த முற்றத்தில் வெவ்வேறு நிறம்கொண்ட பன்னிரு கூழாங்கற்களை பரப்பி களம் அமைத்தனர். அவற்றின் நடுவே பலிபீடங்கள் அமைக்கப்பட்டன. பூசகர்கள் கைகாட்டியதும் பறைகள் பேரோசையுடன் உறுமின. ஒரு காட்டுஆட்டை இழுத்துவந்து முதற்கோயில் முன் நிறுத்தி அதற்குப் பூசையிட்டனர். அதன் நெற்றியில் நீர்தெளிக்கப்பட்டதும் அது தலையை அசைத்தது. பூசகர் தன் சிறிய கத்தியால் அதன் கழுத்தின் குருதிக்குழாயை வெட்டினார். ஒருவர் அதன் உதறி அதிர்ந்த கால்களைப் பற்றிக்கொள்ள இன்னொருவர் கொடிகளின் சிவந்த தளிர்முனைகள் போல பீரிட்ட குருதியை மண்கலத்தில் பிடித்துக்கொண்டார்.
மூன்று காட்டுஆடுகளும் கழுத்து அறுக்கப்பட்டு குருதி கலங்களில் நிறைக்கப்பட்டது. பறைகள் உறுமி முழங்க அக்குருதியை தெய்வங்கள் மேல் ஊற்றினர். அம்மிருகங்களின் நெஞ்சு பிளக்கப்பட்டு அங்கே இருந்து இதயத்தை பிரித்தெடுத்தனர். பூசகர் தன் வாளால் அந்த இதயங்களை போழ்ந்து விரித்து உள்ளே கோதுமை அப்பங்களை வைத்து அவற்றை ஈச்சைஓலையை முடைந்து செய்யப்பட்ட தாலங்களில் வைத்து தெய்வங்களுக்குப் படைத்தார். நீரோ மலரோ தூபமோ தீபமோ படைக்கப்படவில்லை. மணியோசையும் மந்திரங்களும் ஏதுமில்லை. முதுபூசகர் தெய்வங்கள் முன் அமர்ந்து பலி ஏற்கும்படி சைகைகள் செய்தார். பின்னர் வாயில் கையை வைத்து ஓநாய்கள்போலவும் கழுதைகள் போலவும் குதிரைகள் போலவும் ஒட்டகங்கள் போலவும் ஒலி எழுப்பினர் பூசகர்கள். பறையடித்தவர்கள் முன்னும்பின்னும் பாய்ந்து நடனமிட்டு வெறிக்குரல் எழுப்பினர்.
பூசை முடிந்து பறைகள் அமைதியானபோது அங்கே ஒரு வேட்டைநிகழ்ச்சி நடந்து முடிந்த உணர்வுதான் எஞ்சியிருந்தது. பூசகர்கள் குருதிக்குடங்களில் எஞ்சியிருந்த குருதியை ஒரு கலத்திலாக்கி முதலில் அரசரிடம் கொண்டு சென்றனர். கோதுமை அப்பத்தை அந்தக்குருதியில் முக்கி அவருக்கு அளித்தனர். சுபலர் அதை பக்தியுடன் பெற்றுக்கொண்டு தலைமேல் வைத்துவிட்டு உண்டார். அதன் பின் அரசி சுகர்ணைக்கும் பட்டத்து இளவரசன் அசலனுக்கும் அளித்தனர். அடுத்து கலம் பீஷ்மர் முன் வந்தது. சகுனி அவரது கண்களை கவனித்தான். அதில் சிறுவனுக்குரிய ஆர்வம் மட்டுமே தெரிந்தது. மீசையை நீவியபடி அவர் குருதி தோய்ந்த அப்பத்தை உண்டார்.
சுகர்ணை பீஷ்மரிடம் “மூத்தவரே, தங்கள் வருகை இந்நகருக்கு அருளாக அமையவேண்டும். இவள் என் புதல்வி காந்தாரியான வசுமதி. இவளுக்கு தங்கள் வாழ்த்துச்சொல்லை நாடுகிறேன்” என்றாள். பீஷ்மரின் கண்களிலேயே தன் முழு கவனத்தையும் சகுனி நிலைநிறுத்தியிருந்தான். அவர் அவனுடைய பார்வையையோ அல்லது வேறு எவருடைய பார்வையையுமோ பொருட்டாக எண்ணவில்லை என்று தெரிந்தமையால் அவன் தன்னை மறைத்துக் கொள்ளவில்லை.
காந்தாரி குனிந்து பீஷ்மரின் கால்களைத் தொட்டு வணங்கினாள். பீஷ்மர் முகம் மலர்ந்து “வெண்தாமரை போலிருக்கிறாள் தேவி” என்றார். “உன் உள்ளம் உகக்கும் துணைவன் அமையட்டும். உன் மைந்தன் பாரதவர்ஷத்தை ஆளட்டும்” என்றார். சகுனி பந்த வெளிச்சத்தை அரசர் மறைத்ததனால் உருவான இருளுக்கு நகர்ந்துகொண்டான். காந்தாரி “தங்கள் அருள்” என்று சொல்லி வணங்கினாள்.