அன்புடையீர் நல்வரவு ,

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,
தேவாங்கர்களாகிய நாம் அனைவரும் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்து வந்தாலும் தேவாங்கர் என்னும் உணர்வு நம்மை ஓன்று சேர்க்கிறது. மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்ற வாக்கிற்கு இணங்க காலத்திற்கு ஏற்ப நாம் நமது குல நிகழ்வுகளை தகுந்த தொழில்நுட்பத்தை கொண்டு பதிவு செய்வது அவசியமான ஓன்று.

இந்த புதியபக்கம் நமது தேவாங்க சமூக செய்திகள்,சடங்குகள்,வரலாறு & அண்மை நிகழ்ச்சிகளை அறிந்துகொள்ளவும் தேவைப்படும் போது பார்க்கவும் உருவாக்கப் பட்டுள்ளது.
உறவுகள் தங்கள் பகுதியில் உள்ள கோவில்&குல தெய்வம் கோவில்களில் நடைபெறும் திருவிழா நிகழ்ச்சிகள் மற்றும் படங்களை இடம்பெற செய்யவும்.

தங்கள் கருத்துக்கள் இந்த தளத்தை மேன்படுத்த உதவும் ஆகயால் தயவுசெய்து கருத்திடவும் . ( தமிழில் கருத்திட தமிழ் எழுதியை பயன்படுத்தவும்)

நன்றி.

3/24/14

பகுதி மூன்று : புயலின் தொட்டில்[ 4 ]

பகுதி மூன்று : புயலின் தொட்டில்[ 4 ]
காந்தாரநகரியில் இருந்து கிளம்பிய தூதுப்புறா புருஷபுரத்தில் அரண்மனை உள்முற்றத்தில் காலைநேர பயிற்சிக்குப்பின் குளியலுக்காக அமர்ந்திருந்த சகுனியின் முன் சென்றமர்ந்தது. தன் சிறிய கண்களை நிழல்பட்டுமறைந்த செம்மணிகள் போல மூடித்திறந்து தலைசரித்து குக் குக் என்றது. சுஃப்ரை என்னும் அந்தப் புறா முதன்மையான செய்தி இல்லையேல் வராது என்றறிந்த சகுனி எழுந்து அதை அருகே வரவழைக்கும் குறியொலியை எழுப்பி, அதைப் பிடித்து அதன் கால்களில் மெல்லிய தவளைத்தோல் சுருளில் மந்தண எழுத்துக்களில் எழுதப்பட்டிருந்த செய்தியை வாசித்தான்.
பீஷ்மரின் தூதையும் அதன் நோக்கத்தையும் அவன் தம்பி விருஷகன் எழுதியிருந்தான். சகுனி அந்தத் தோல்சுருளை முதலில் இருந்து இறுதி வரி வரைக்கும் இறுதியிலிருந்து முதல்வரி வரைக்கும் மும்முறை வாசித்துவிட்டு தன்னருகே எரிந்துகொண்டிருந்த நெருப்பில் போட்டான். தன் உடலெங்கும் அப்யங்கத்துக்காக மருத்துவர் பூசியிருந்த மலைப்பாம்பின் நெய்யுடன் குளிக்கச்சென்றான்.
அதிகந்தப்புல் போட்டு கொதிக்கச்செய்த நீரில் அவனை சேவகர் நீராட்டுகையில் அவன் உடலை அவர்களிடம் ஒப்படைத்துவிட்டு சிந்தனையில் மூழ்கி இருந்தான். மானிறைச்சியும் பாலும் உண்டபின் கூந்தலை குதிரைவால் வலையால் மூடிக்கட்டி மான்தோல் அந்தரீயமும் பட்டுச்சால்வையும் அணிந்து குதிரைமேல் ஏறிக்கொண்டான். ஒற்றைச்சொல்லில் ‘காந்தாரநகரிக்கு’ என்றபின் விரைந்தான்.
அவனைத் தொடர்ந்து சென்ற அவனுடைய களத்தோழனான சுஜலன் சகுனி நிலையழிந்திருப்பதை உணர்ந்துகொண்டான். புரவியில் நிமிர்ந்து அமர்ந்து கண்களில் தொடுவானின் ஒளியுடன் அவன் சென்றுகொண்டிருந்தான். பாலைப்பொழில்களில் ஓய்வெடுக்க கண்களை மூடிக்கொண்டு படுத்திருக்கையில்கூட அவன் தாடை இறுகி இறுகி மீள்வதை சுஜலன் கவனித்தான்.
ஆறுநாட்களுக்கு முன்புதான் மகதத்தில் இருந்து குதிரைச்சவுக்கு வந்தசெய்தி புருஷபுரியின் தசவிருட்சத்துக்கு வந்து சேர்ந்தது. அதை தூதன் சகுனியிடம் சொல்லிக்கொண்டிருந்தபோது சுஜலன் சற்று அப்பால் நின்று கவனித்துக்கொண்டிருந்தான். தூதன் சென்றதும் அருகே சென்று சகுனியின் சொற்களை எதிர்பார்த்து நின்றான். சகுனி தூதனிடம் என்ன செய்தியென சுஜலனிடமும் சொல்லும்படி சொல்லிவிட்டு குடிலுக்குள் சென்றுவிட்டான்.
அச்செய்தியைக் கேட்டதுமே சுஜலனுக்கு அச்சம்தான் எழுந்தது. அவனுக்கு மகதத்தின் வல்லமையைப்பற்றிய புரிதலோ காந்தாரத்துடனான ஒப்பீடோ இருக்கவில்லை. ஆனால் அச்சம் கருமேகம் போல அவன் நெஞ்சை அடைத்துக்கொண்டது. அது ஏன் என்றும் தெரியவில்லை. சகுனியையே கவனித்துக்கொண்டிருந்தான். அன்று முதல் சகுனியிடம் இறுக்கமான அமைதி பரவியிருந்தது. அவன் உடலின் எடை பலமடங்கு அதிகரித்திருப்பதுபோல, அவன் சருமம் காய்ச்சலால் தகித்துக்கொண்டிருப்பதுபோலத் தோன்றியது.
காந்தாரபுரியை நெருங்க ஒரு பகல் எஞ்சியிருக்கும் தொலைவில் அவர்கள் காலகம் என்னும் சிறு பாலைப்பொழிலில் தங்கினார்கள். சகுனி அங்கே மல்லாந்து படுத்திருந்தபோது அவனுக்குமேல் நிழல்விரித்து நின்றிருந்த ஸாமி மரத்தின் கிளையில் அமர்ந்திருந்த பருந்து ஒன்றைப் பார்த்தான். பொருளாக மாறாத சொல்லோட்டங்களாக தன் உள்ளத்தை உணர்ந்தவனாக அதைப் பார்த்துக்கொண்டிருந்தான். சுஜலன் வந்து புரவிகள் ஒருங்கிவிட்டன என்று சொன்னதும் எழுந்து தன் சால்வையை இழுத்து தோள்மேல் போட்டுக்கொண்டு வில்லை எடுத்தான். மேலிருந்து எழுந்த பருந்து சிறகடித்தபடி ஒளிர்ந்துகொண்டிருந்த வானில் ஏறிச்சுழன்றது.
ஏதோ எண்ணத்தில் அதை நோக்கிக்கொண்டிருந்த சகுனி தன் வில்லை வளைத்து நாணில் அம்பேற்றி அதைக் குறிவைத்து எய்தான். வானில் நிலையழிந்து சிறகடித்த பருந்து கீழிறங்கி மேலும் சிறகடித்து பின் காற்றால் அள்ளப்பட்டு கிழக்காகக் கொண்டுசெல்லப்பட்டு வான் வளைவில் சரிந்து மறைந்தது. அக்கணம் வரை அவனில் இருந்த அனைத்து அமைதியின்மைகளும் மறைய சகுனி புன்னகை செய்தான். சால்வையை சரிசெய்தபடி சென்று புரவியில் ஏறிக்கொண்டு அதன் விலாவை கால்களால் தட்டி விசையுறச்செய்து புழுதிக்கடலாகக் கிடந்த பாலைநிலம் வழியாக பாய்ந்து சென்றான்.
VENMURASU_EPI_64
ஓவியம்: ஷண்முகவேல்
[பெரிதுபடுத்த படத்தின்மீது சொடுக்கவும்]
புறப்பட்டு நான்கு நாட்களுக்குப்பின் சகுனி காந்தாரநகரியை அடைந்தான். கோட்டை வாயிலில் அவனை எதிர்கொண்ட அமைச்சர் சத்யவிரதர் அவனருகே வந்து பணிந்து அவன் சொல் காத்து நின்றார். அவன் விழிகளால் வினவியதும் பீஷ்மரின் தூது வந்ததைச் சொன்னார். “விழியிழந்தவருக்கு மணக்கொடை கேட்டு வந்ததை மாமன்னர் ஓர் அவமதிப்பாகவே எண்ணுகிறார். உடனடியாக பீஷ்மரை திரும்பும்படி சொல்ல ஆணையிட்டார். மூத்த இளவரசரும் சினம் கொண்டிருக்கிறார். இளையவர்தான் அவர்களிருவரையும் தடுத்து தங்கள் ஆணைக்குப்பின் முடிவெடுக்கலாமெனச் சொன்னார்” என்றார்.
சகுனி “அந்தச் சவுக்கு எங்குள்ளது?” என்றான். அந்த வினாவினால் முதலில் திகைப்புடன் நோக்கிய சத்யவிரதர் மெல்ல “அதை அழித்துவிடும்படி மன்னர் சொன்னார்” என்றார். சகுனியின் கண்களில் ஏதும் தெரியாததனால் “அதை உடனே நம் வீரர்கள் அழித்துவிட்டனர்” என்று மேலும் தணிந்த குரலில் சொல்லி “அதை தங்களுக்கு அறிவிக்கலாகாது என ஆணை” என்றார்.
சகுனி கைகாட்டி “அது எரிக்கப்பட்ட இடத்தை எனக்குக் காட்டும்” என்றான். “இதோ விசாரித்துச் சொல்கிறேன்” என்று சத்யவிரதர் சொல்லி “தாங்கள் அரண்மனையில் இளைப்பாறுகையில்…” என்று இழுத்தார். சகுனி “நான் முதலில் பார்க்கவிரும்புவது அதைத்தான்’ என்றான்.
சத்யவிரதர் திரும்பி குதிரையில் பாய்ந்துசென்றார். சகுனி அரண்மனையை அடையும்போது அவர் மீண்டும் அவனை அணுகி “இளவரசே, அரண்மனையின் குப்பைகளை எரிக்கும் குழி தென்கிழக்கு மூலையில் அடுமடைகளுக்கு அப்பால் உள்ளது. அங்கே தேடிப்பார்க்க நான்கு வீரர்கள்…” என்று சொல்லிக்கொண்டிருக்கையிலேயே சகுனி புரவியைத் திருப்பிவிட்டான். ஒருவரை ஒருவர் விழிகளால் சந்தித்தபின் அவனுக்குப்பின்னால் சத்யவிரதரும் சுஜலனும் சென்றனர்.
அரண்மனையின் ஏழு அடுமடைகள் வரிசையாக அங்கே இருந்தன. உயரமான மரக்கூரை போடப்பட்ட கட்டடங்களுக்குமேல் செங்கல்லால் ஆன புகைகுழாய்கள் கசிந்துகொண்டிருந்தன. மதிய உணவுமுடிந்த நேரமாதலால் மடைவலர் துயின்றுகொண்டிருக்க அப்பகுதியே அமைதியாக இருந்தது. மையச்சாலைக்கு பின்னாலிருந்து சென்ற பாதை பின்பக்கம் உள்கோட்டைச் சுவரின் அருகே விரிந்திருந்த எரிகுழிக்குச் சென்றது.
எரிகுழியில் காலைநேரக்குப்பைகள் அனலாகக் குமுறி தழலின்றி எரிந்துகொண்டிருந்தன. அங்கே காற்று குவிந்து வீசும்படி கோட்டைவாயிலும் சுவர்களும் அமைக்கப்பட்டிருந்தமையால் புகையும் கரிச்சுருள்களும் மேலெழுந்து தென்கிழக்குத்திசையில் பறந்து அப்பால்சென்றன. காற்று வலுத்து வீசியபோது புகை அடங்கி வெங்காற்றில் கரித்திவலைகள் எழுந்து சுழன்றுசென்றன. மெல்லிய குரலில் “எரித்து எட்டுநாட்களாகின்றன இளவரசே” என்றார் சத்யவிரதர்.
குதிரையை நிறுத்தி இறங்கியபடி “அதில் ஒரு கழியைவிட்டு தேடச்சொல்லுங்கள்” என்று சகுனி ஆணையிட்டான். “அதன்மேல் மேலும் பல மடங்கு குப்பைகள் போடப்பட்டு எரிக்கப்பட்டிருக்கின்றன இளவரசே” என்று சொன்ன சத்யவிரதர் சகுனியின் விழிகளைப்பார்த்தபின் தலைவணங்கி நான்குசேவகர்களை வரவழைத்து அந்தக்குழியை துழாவச்சொன்னார்.
எரிந்து அடங்கி சாம்பலடுக்குகளாகவும் கரிவடிவுகளாகவும் எஞ்சிய இலைச்சருகுகளையும் தொன்னைகளையும் கழிகள் கிண்டியும் துழாவியும் புரட்டியபோது இறந்த கருநாகம்போல அதில் அந்த சவுக்கு சிக்கிக்கொண்டதை நம்பமுடியாதவராகப் பார்த்தபடி சத்யவிரதர் சகுனியிடமிருந்து சற்று பின்னடைந்து நின்றார். “அதை எடு” என்று சகுனி சொன்னான்.
சேவகன் “இளவரசே, இதை தழலாடிய நெருப்பில் நானேதான் வீசினேன். இது தழலுக்குள் கிடந்து எரிந்து நெளிவதை கண்டபின்னர்தான் நான் விலகிச்சென்றேன்…” என்றான். சகுனி சைகையால் அவனைத் தடுத்து அதை எடுக்கும்படி சொன்னான். கரையில் எடுத்துப்போடப்பட்ட சவுக்கு மேல் குடத்தில் நீர் கொண்டுவந்து விட்டபோது சாம்பல்பூச்சு கரைய அது கருமையாக பளபளத்தது.
சகுனி குதிகால்களில் அமர்ந்து குனிந்து அதைப்பார்த்தான். பின்பு மெல்ல கையால் அதைத் தொட்டான். அவன் விரல்கள் அதன் தோல்பட்டையில் நீவிச்சென்றன. அது தோல்தானா என்று சத்தியவிரதர் பார்த்தார். தோல்போலத்தான் தெரிந்தது. ஆனால் அந்த வெம்மை அதை ஒன்றுமே செய்யவில்லை. சற்று புதுப்பித்திருந்தது என்றுகூட பட்டது.
சகுனி அதை கையில் எடுத்து இலேசாகச் சுழற்றினான். அவனை நக்க விரும்புவதுபோல அதன் நுனி வளைந்து அவன் கையை அடைந்தது. அதைப்பற்றி சாட்டையைச் சுற்றி சுருட்டி எடுத்துக்கொண்டு திரும்பி தன் குதிரையில் ஏறிக்கொண்டான். குதிரை குளம்படிகள் கட்டடச்சுவர்களில் எதிரொலித்துப் பின்னால் தொடர அவன் விரைந்தான்.
அவன் பின்னால்சென்ற சுஜலன் சகுனி ஒரு சொல் கூட சொல்லாமல் குதிரையை நிறுத்திவிட்டு இறங்கி தன் மாளிகைக்குள் சென்றதைப் பார்த்து சற்றுநேரம் நின்றுவிட்டு சத்யவிரதரிடம் “இங்கே எப்போதும் அமைச்சகத்தில் இருந்து எவரேனும் காத்து நிற்கட்டும் சத்யவிரதரே. எந்தத் தகவலென்றாலும் எனக்குத் தெரிவியுங்கள்” என்றான்.
அந்தியில் வெளிவந்த சகுனி வெண்பட்டாடையும் மணிக்குண்டலங்களும் வைரஆரமும் அணிந்திருந்தான். அவனுக்காகக் காத்திருந்த ரதத்தில் ஏறி பந்தங்களின் ஒளியில் தீப்பிடித்த புதர்க்காடு போலத் தெரிந்த காந்தாரநகரியின் சாலை வழியாகச் சென்றான். இருள் மறைந்ததுமே காந்தாரத்தின் விரிநிலமெங்கும் வானில்இருந்து குளிர் இறங்கத்தொடங்கும் என்பதனால் நகரம் வேகமாக ஒலியடங்கிக்கொண்டிருந்தது. வணிகக்கூடாரங்களின் மேல் காற்று அலையடித்துக்கொண்டிருந்தது.
செதுக்கப்பபட்ட சேற்றுப்பாறைகளை அடுக்கிக் கட்டப்பட்ட உள்கோட்டைவாயிலுக்கு அப்பால் அரண்மனை மாளிகைகளின் தொகை சாளரங்கள் அனைத்தும் தீபங்கள் ஒளிர சிறியதோர் நகரம்போல அத்திசையை மறைத்துப் பரவியிருந்தது. வடக்கே கட்டப்பட்டுக்கொண்டிருந்த அரண்மனைப்பகுதியிலிருந்து யானைகளும் கழுதைகளும் பணிமுடிந்து திரும்பும் ஒலி கேட்டது.
அரண்மனை முற்றத்தில் ரதம் நின்றதும் முறைப்படி முகமன் சொல்லி சகுனியை எதிர்கொண்ட சத்யவிரதர். “மாமன்னர் மந்திரசாலையில் இருக்கிறார் இளவரசே. பீஷ்மரையும் அவரது அமைச்சரையும் தாங்கள் இன்றிரவு சந்திக்கவிருக்கிறீர்கள். அதற்குள் தங்களுடனான மந்திராலோசனை நிகழவேண்டுமென்று இளையவர் சொன்னார்” என்றார். சகுனி தலையசைத்து நடந்தான்.
“இன்னும் ஒருநாழிகையில் தட்சிண மண்டபத்திற்கு பீஷ்மர் வருவார்… அவருக்கு செய்திசென்றிருக்கிறது” என்று சத்யவிரதர் அவனைத் தொடர்ந்து வந்தபடி சொன்னார். “இன்றே ஒரு முடிவை அவர் எதிர்பார்ப்பார் என்று தெரிகிறது.”
மந்திரசாலையில் சுபலர் முன்னதாகவே வந்து பீடத்தில் அமர்ந்திருந்தார். ஏற்கனவே அவர் சிறிது மது அருந்தியிருந்ததை அவரது வாயின் கோணலைக் கண்டதுமே சகுனி ஊகித்தான். அசலன் தந்தையின் அருகே கைகளைக் கட்டியபடி நிற்க வாயிலில் விருஷகன் சகுனிக்காகக் காத்து நின்றிருந்தான். சகுனி உள்ளே வந்ததும் விருஷகன் சைகை காட்ட கதவு மூடப்பட்டது. “மூத்தவரே, தங்கள் வருகைக்குப்பின் முறையான ஆலோசனைகள் நிகழுமென பீஷ்மரிடம் சொல்லியிருந்தோம். இன்றிரவே அவருக்கு நாம் முடிவைச் சொல்லிவிடவேண்டும். ஏனென்றால் நீண்ட ஆலோசனையே அவமதிப்பாக கொள்ளப்படலாம்” என்றான்.
சகுனி சென்று தந்தையையும் தமையனையும் வணங்கி பீடத்தில் அமர்ந்துகொண்டான். அவன் பேசத்தொடங்குவதற்குள்ளேயே சுபலர் உரக்க “நீ என்ன சொல்லப்போகிறாய் என எனக்குத் தெரியாது. என் எண்ணத்தைச் சொல்லிவிடுகிறேன். இப்படி ஒரு மணத்தூது வந்ததே எனக்கும் என் குலத்துக்கும் அவமதிப்பு. விழியிழந்தவனுக்கு வேறு ஷத்ரியகுலங்கள் பெண்ணளிக்கப் போவதில்லை என்பதனால்தான் அவர்கள் இங்கே வந்திருக்கிறார்கள்…” என்றார்.
விருஷகன் “தந்தையே, அது உண்மை. ஆனால் அஸ்தினபுரிக்கு அப்படி முற்றிலும் பெண் கிடைக்காமலும் போய்விடாது. பாரதவர்ஷத்தில் சிறிய அரசுகள் பல உள்ளன. கூர்ஜரத்தருகே புதியதாக உருவாகிவந்திருக்கும் யாதவ அரசுகளும் தெற்கே வேசரத்தில் தண்டக அரசுகளும் உள்ளன” என்றான். “அவர்கள் தகுந்த காரணத்துடன் மட்டும்தான் நம்மிடம் வந்திருக்கிறார்கள்…”
பொறுமையிழந்த அசலன் “தம்பி, இந்த சூழ்ச்சிகளை எல்லாம் நாம் ஏன் பேசவேண்டும்? நம் இளவரசியை நாம் ஒருபோதும் விழியிழந்த ஒருவனுக்கு அளிக்கப்போவதில்லை” என்றான். “விழியிழந்தவனுக்கு மனைவியாவதென்பதை குரூபிகூட விரும்பமாட்டாள். பாரதவர்ஷத்தின் பேரழகிகளில் ஒருத்தியான என் தங்கை அதை எண்ணிக்கூடப் பார்க்கமுடியாது…”
“மூத்தவரே, அரசகுல மணம் என்பது எப்போதும் அரசியல்நிகழ்வு மட்டுமே” என்று விருஷகன் சொன்னான். “இந்த மணம் நம் அரசுக்கு எவ்வகையில் நலம்செய்யும் என்று மட்டுமே நான் எண்ணுகிறேன். இதை மறுத்துவிட்டு நாம் எங்குசென்று இளவரசிக்கு மணமகனைத் தேடப்போகிறோம்? இன்று முளைவிட்டுக்கொண்டிருக்கும் ஏதேனும் சிற்றரசக்குலங்கள் நம் செல்வத்தையும் படைபலத்தையும் கண்டு நம்முடன் மணவுறவுக்கு வரக்கூடும். நம்மருகே அரியணை இட்டு அமரத் தகுதியற்றவர்களை நாம் பட்டத்து யானையை அனுப்பி வரவேற்க வேண்டியிருக்கும்.”
“ஆம், ஆனால் விழியிழந்த ஒருவனை…” என்று அசலன் தொடங்குவதற்குள்ளாகவே விருஷகன் உரக்க “மீண்டும் மீண்டும் அதைச் சொல்லாதீர் மூத்தவரே. விழியில்லை என்பதல்ல இங்கே வினா. அவரால் நாடாளமுடியுமா, நாடாள அங்கே நெறிநூல் அனுமதி உண்டா என்பது மட்டும்தான்.” அவனுடைய வேகத்தை சகுனி பொருள் ஏதும் வெளித்துலங்காத விழிகளுடன் பார்த்துக்கொண்டிருந்தான்.
விருஷகன் “நான் அதைப்பற்றி பலபத்ரரிடம் விரிவாகவே பேசினேன். நூல்நெறிகளில் விழியிழந்தோன் அரசனாக முடியாதென்று எங்கும் சொல்லப்படவில்லை. அஸ்தினபுரியின் இளவரசன் பெருவீரன் என்கிறார்கள். அவனுடைய அமைச்சனாகப் பணியாற்றப்போகும் அவனுடைய தம்பியாகிய ஒரு சூதன் அஸ்தினபுரியின் மாபெரும் அரசியல் அறிஞன் என்று சூதர்குலமே கொண்டாடுகிறது. ஐயமே தேவையில்லை தந்தையே, இன்னும் ஒரு தலைமுறைக்காலம் அஸ்தினபுரியே ஆரியவர்த்தத்தை ஆளும்.”
தந்தையின் தயங்கிய விழிகளைப் பார்த்துவிட்டு விருஷகன் தொடர்ந்தான். “தந்தையே தாங்கள் தயங்குவது ஏனென்று நான் நன்கறிவேன். நம்மை ஷத்ரியர் எள்ளி நகையாடுவர் என்று எண்ணுகிறீர்கள். ஆம், எள்ளிநகையாடுவர். ஏனென்றால் அவர்கள் எப்போதும் அதையே செய்துகொண்டிருக்கிறார்கள். துர்வசு அடைந்த அவமதிப்பின் சுமை நம் மீது என்றும் இருந்துகொண்டிருக்கிறது. சிந்துக்கரையின் மீனவமன்னர்களிடமோ இமயச்சரிவின் வேடர்மன்னர்களிடமோ நாம் மண உறவுகொண்டால் மட்டும் அந்த இளிவரல் இல்லாமலாகிவிடுமா என்ன?”
“ஆம் அது உண்மை” என சுபலர் பெருமூச்சுவிட்டார். “ஆனால் அஸ்தினபுரியிடம் நாம் மணம்கொண்டால் நம்மை அந்த ஷத்ரியர் அஞ்சுவார்கள். அந்த இளிவரல் அவர்களின் அவைக்களத்தில் இருந்து வெளிவராது” என்று விருஷகன் சொன்னான். “அவமதிப்புக்கு பதில் என்றும் அச்சமேயாகும்.”
சுபலர் சகுனியிடம் “நீ என்ன நினைக்கிறாய்?” என்றார். “நான் பீஷ்மரிடம் பேசியபின்னரே அதைப்பற்றிச் சொல்லமுடியும். என் எண்ணங்கள் இன்னும் முழுமைகொள்ளவில்லை” என்று சகுனி சொன்னான். சுபலர் “அவரை இங்கு இரவுணவுக்கு வரச்சொல்லியிருக்கிறேன். அவருக்காக காந்தாரத்தின் அஹிபீனா கலந்த மது கொண்டு வரச்சொன்னேன்” என்றார். சகுனி தலையசைத்தான்.
பீஷ்மர் வந்து தட்சிண மண்டபத்தில் காத்திருப்பதை சத்யவிரதர் வந்து சொன்னதும் சுபலர் எழுந்து “நல்ல மது அவரை மகிழ்விக்கும்” என்று சொல்லி நடந்தார். அசலனும் அவர் பின்னால் நடக்க விருஷகன் பின்னால் தங்கி சகுனி அருகே நின்றான். சகுனி எழுந்ததும் மெல்லியகுரலில் “பீஷ்மரை நான் மூன்றுமுறை சந்தித்து உரையாடினேன் மூத்தவரே. அவர் பெரிய அரசியல் சூழ்ச்சியாளர் அல்ல. மலைக்கங்கர்களின் எளிமை அவரிடம் உள்ளது…” என்றபின் சற்று தயங்கினான்.
“சொல்” என்றான் சகுனி. “அவரிடம் நாம் எண்ணமுடியாத ஒன்றுள்ளது… அவர் நம்மை அவருடைய சிந்தனைகளை நோக்கி வலுவாக ஈர்க்கிறார். அவர் குறைவாகவே பேசுகிறார். ஆனால் அவரது சொற்களை நம்முள் ஆழமாகவே விதைத்துச்செல்கிறார். அது ஏன் என்று நான் பலவாறாக எண்ணிப்பார்த்தேன். நேற்றுதான் எனக்கு ஒரு விடை கிடைத்தது.”
சகுனி சொல் என்பதுபோலப் பார்த்தான். “அவர் நம்மை அவரது மைந்தர்களாக உணரச்செய்கிறார். அவரது அமைச்சர் அஸ்தினபுரியில் அவரை படைவீரர்களும் பிதாமகரே என்றுதான் அழைக்கிறார்கள் என்றார்” என்ற விருஷகன் சற்றே சிரித்து “அவரது தந்தையேகூட அவரை அப்படித்தான் உணர்ந்ததாக சூதர்கள் பாடுகிறார்கள்” என்றான்.
சகுனி புன்னகைசெய்யவில்லை. அவன் நடந்தபோது “அவரைப்பார்க்கையில் தன்னை வீரனென்று எண்ணும் ஒவ்வொருவரும் தான் தேடும் தந்தைவடிவம் அவரே என்று உணர்வார்கள்” என்று சொன்னபடி விருஷகன் பின்னால் வந்தான். “அவர் வரும்போது நானும் ஒரு மூத்தவரைப்போல விழியிழந்த மைந்தனுக்காக வந்திருக்கிறார், அவரது சொற்களை நான் தாயக்கட்டைகளைப்போல உருட்டி விளையாடலாம் என்றுதான் எண்ணினேன். ஆனால் ஏதோ ஒரு இடத்தில் நான் அவரைப்போல எண்ணத் தொடங்கினேன்.”
தட்சிண மண்டபத்தை அடைந்ததும் சகுனி மெல்லியகுரலில் “இளையவனே, மகதனின் அந்த குதிரைச்சவுக்கு என் அறையில்தான் உள்ளது” என்றான். விருஷகன் திகைத்து நின்றபின் “மூத்தவரே” என ஏதோ சொல்லத்தொடங்க சகுனி “அது அவ்வளவு எளிதாக அழியாது” என்றபின் உள்ளே சென்றான். சிலகணங்கள் என்ன செய்வதென்றறியாமல் நின்றபின் விருஷகனும் தொடர்ந்தான்.
மண்டபத்துள் நுழைந்து அங்கே பீடத்தில் அமர்ந்திருந்த பீஷ்மரிடம் முகமன் சொல்லி வணங்கிவிட்டு சகுனி அமர்ந்துகொண்டான். காந்தாரத்தினர் உயரமானவர்கள் என்றாலும் அவரது உயரம் கொண்ட எவரையும் அவன் கண்டதில்லை.  வெண்மைகலந்து விரிந்த அவரது தாடியும் எளிய தோல்பட்டையால் கட்டப்பட்ட கூந்தலும் செவ்வெண்ணிறமும் யவன மூக்கும் அவரை கங்கைக்கரை ஷத்ரியர்களிடமிருந்து விலக்கிக் காட்டின.
சுபலரும் அசலனும் வந்ததுமே மதுக்கிண்ணங்களை கையில் எடுத்திருந்தனர். பீஷ்மர் மதுவை அருந்தும் பாவனையே காட்டுகிறார் என்பதைக்கூட அவர்கள் கருத்தில் கொள்ளவில்லை. தன்னை நோக்கிய பீஷ்மரின் விழிகளை சகுனியின் விழிகள் எதிர்கொண்டன. பேச்சுவார்த்தைகளின்போது எச்சரிக்கைக்காக கண்களில் சலிப்புற்று உள்வாங்கிய பாவனை ஒன்றை அணிந்துகொள்வதை பயின்றிருந்த சகுனி அவரது கண்களில் தன்னை கூர்ந்தறியும் முயற்சியே இல்லை என்பதைக் கண்டான். அது அவனை குழப்பியது. அவரது அந்தநோக்கு ஒரு தேர்ந்த பயிற்சியின் விளைவோ என்று அவன் எண்ணினான். வழக்கமான முகமன்களையும் துதிகளையும் சொல்லிக்கொண்டு மீண்டும் மீண்டும் அவரது விழிகளையே சந்தித்து அதை கூர்ந்துகொண்டிருந்தான்.
பின்பு அவன் அவரைப் புரிந்துகொண்டான். தன் பெருவல்லமையை அறிந்தமையால் எதிரியின் வலிமையை எடைபோடாமலிருக்கும் மல்லனைப்போன்றவர் அவர் என்று நினைத்துக்கொண்டான். ஆகவே பீஷ்மர் அவனிடம் நேரடியாக “சுபலரும் அசலரும் தங்கள் சொல்லையே முதன்மையாக எண்ணுகிறார்கள் சகுனிதேவரே. ஆகவே நானும் உங்கள் சொல்லை எதிர்நோக்குகிறேன்” என்றபோது அவன் வியப்புறவில்லை. மெல்லிய புன்னகையுடன் “நான் எளியவன்… என் தந்தை என்மேல் அன்புகொண்டிருக்கிறார்” என்று மட்டும் சொன்னான்.
பீஷ்மர் “தாங்கள் அறியாத எதையும் நான் சொல்லப்போவதில்லை இளவரசே. அஸ்தினபுரி இன்று பாரதவர்ஷத்தின் ஐம்பத்தாறு ஷத்ரிய நாடுகளில் தலையாயது. அதனாலேயே நாங்கள் சூழப்பட்டிருக்கிறோம். எங்கள் மன்னன் விழியிழந்தவன். நானோ முதியவன். தாங்கள் வல்லவர். எங்களுக்கு படையும் செல்வமும் உறவும் கொண்ட காந்தாரம் போன்ற நாட்டின் மணம் பெரும் நன்மை பயக்கும். அதேபோன்று காந்தாரத்துக்கும் அஸ்தினபுரி வலிமைசேர்க்கும்” என்றார்.
சகுனி மெல்ல அசைந்தான். அவனையறியாமலேயே வெளிப்பட்ட அவ்வசைவின் மூலம் அவன் அகம் பீஷ்மருக்குத் தெரிந்தது என்பதை உடனே அவன் உணர்ந்துகொண்டான். விழியிழந்த மன்னன், முதிய தளபதி, நீ வல்லவன் என்னும் மூன்று சொற்சேர்க்கைகளையும் அவன் அகம் இணைத்து அறிந்துகொண்டது என அவர் அறிந்ததை அவன் உணர்ந்தான்.
அவன் கேட்டவற்றிலேயே மிகநுணுக்கமான அரசியல் சூழ்மொழி அது. அச்சொற்களை அவர் திறமையாக அருகருகே அமைத்தாரா என்ற எண்ணம் எழுந்தது. எளிய மலைக்கங்கரால் அவ்வாறு மொழியை கையாள முடியுமா என்ன? ஒருவேளை அவரது இயல்பான மொழியே அவ்வாறானதாக இருக்கலாம். வாழ்நாளில் முதல்முறையாக சகுனி ஒரு மனிதரை அஞ்சினான்.
பீஷ்மர் அவனை நேரடியாக நோக்கி “நாங்கள் மகதத்தை அஞ்சுகிறோம் என்பது அனைவருமறிந்ததே. பழமையான ஷத்ரிய நாடான மகதம் கங்கையின் அனைத்துப்படகுகளிலும் சுங்கம் கொள்ளத் தொடங்கியிருக்கிறது. மகதத்தை வெல்லாமல் நாங்கள் கங்கைக்கரை வணிகத்தை தொடரமுடியாது. காந்தாரத்தின் உதவியுடன் மகதத்தை வென்றால் அது காந்தாரத்தின் வணிகத்துக்கும் உகந்ததே” என்றார்.
அவர் சூழ்ந்து சொல்லாற்றவில்லை, இயல்பாகவே வந்து சேர்ந்த சொற்களையே சொல்கிறார் என்றும், ஆனால் விருஷகன் சொன்னது போல அவனை அவர் தன் சொற்களை நோக்கி கொண்டுசென்றுவிட்டார் என்றும் சகுனி அறிந்தான்.
“திருதராஷ்டிரனைப்பற்றி இளவரசிக்கு தயக்கமிருக்கக்கூடும்” என்று பீஷ்மர் சொன்னார். “அவள் வயிற்றில் பிறக்கும் மைந்தன் பாரதவர்ஷத்தின் மாபெரும் சக்கரவர்த்தியாவான் என்று அவளிடம் சொல்லுங்கள். மாமனின் வில்லும் அவள் அளிக்கும் மணிமுடியும் ஐம்பத்தைந்து ஷத்ரியர்களையும் அந்த மைந்தன் முன் அடிபணியச்செய்யமுடியும்.” மீண்டும் ஓர் அழகிய சொல்லிணைவு. மாமனின் வில்லை முதலில் வைத்த கூர்மை. சகுனி புன்னகைசெய்தான்.
அவனுடைய புன்னகையைக் கண்டதும் விருஷகன் மேலும் விரிந்த புன்னகையுடன் “ஆம், அஸ்தினபுரியில் மூத்தவரின் வில் நிலைகொண்டால் பாரதமே அதை மையம் கொள்ளும்” என்றான். சுபலர் அசலனை நோக்கினார். அசலன் “தம்பி கூறும் முடிவையே இந்நாள்வரை இங்கே மேற்கொண்டிருக்கிறோம்” என்றான்.
சுபலர் தெளிவடைந்தவராக உடலை நெகிழச்செய்து பீடத்தின் கீழிருந்த காலை நன்றாக நீட்டியபடி “ஆம், அவன் அனைத்தையும் சூழ்பவன்” என்றார். “அவன் முடிவு காந்தாரத்தின் கொள்கை.”
“இனியமது” என்றார் பீஷ்மர். “அதன் வாசனை இளமையை மீட்டுக்கொண்டுவருகிறது.” அரசியல்பேச்சை அவர் இயல்பாகவும் அழகாகவும் முடித்துவிட்டார் என்பதை சகுனி உணர்ந்தான். மேற்கொண்டு பேசாமல் அம்முடிவை உறுதிசெய்ய விழைகிறார்.
சுபலர் சிரித்தபடி “ஆம், இளமையில் நாமறிந்த அனைத்துக் கன்னியரும் ஒன்றாகத்திரண்டு நம் முன் வந்துவிடுகிறார்கள்” என்றார். கையசைத்து அங்கே சுவர் அருகே நின்றிருந்த காதும்நாவுமற்ற சேவகனிடம் மதுவைப் பரிமாறும்படி சொன்னார். பீஷ்மர் கோப்பை நிறைய மதுவை வாங்கிக்கொண்டு சிரித்தபடி “அஹிபீனத்தில் கந்தர்வர்கள் வாழ்கிறார்கள்” என்றார்.
அனைத்து முகங்களிலும் புன்னகைகள் தெரிவதை சகுனி கண்டான். விருஷகன் “தமக்கையிடம் அந்தத் தயக்கமேதும் இல்லை பிதாமகரே. நான் தங்கள் தூதை அவளிடம் சொன்னேன். அவள் ஓவியம் வரைந்துகொண்டிருந்தாள். இளவரசருக்கு விழியில்லை என்றதும் அரசரின் விருப்பமே காந்தார அரசின் ஆணை என்று மலர்ந்த முகத்துடன் சொல்லிவிட்டு உள்ளே சென்றாள்” என்றான். சுபலர் “ஆம், அவள் முற்றிலும் அரசமகள்” என்றார்.
சகுனி மெல்ல இருக்கையில் முன்னகர்ந்து “தம்பி, அவள் வரைந்த அந்த ஓவியம் என்ன?” என்றான். “மலைகள் என நினைக்கிறேன். வண்ணம்தீட்டத் தொடங்கியிருந்தாள். தெளிவாக இல்லை.” சகுனி “அந்த ஓவியத்தை அவள் முழுமைசெய்யவில்லையா?” என்றான். “இல்லை மூத்தவரே, அதை திரையிட்டு மூடிவிட்டாள்” என்றான் விருஷகன்.
சகுனி எழுந்து வணங்கி “அஸ்தினபுரியின் பிதாமகரே தங்கள் அடிபணிந்து விடைகொள்கிறேன். தங்கள் தூது காந்தாரத்துக்கு வந்த பெரும் வாய்ப்பு என்றே எண்ணுகிறேன். காந்தாரத்தை தங்கள் வருகைமூலம் கௌரவித்திருக்கிறீர்கள். ஆனால் என் தமக்கையின் உள்ளம் ஏற்காத எதையும் இந்நாடு செய்யாது” என்றான். விருஷகன் “மூத்தவரே தமக்கை…” என்று சொல்லவந்ததை கையமர்த்தி “நான் அவள் உள்ளத்தை அறிந்துகொண்டேன்” என்று சொன்னபின்பு பீஷ்மரை வணங்கிவிட்டு வெளியேறினான்.

3/23/14

பகுதி மூன்று : புயலின் தொட்டில்[ 3 ]

பகுதி மூன்று : புயலின் தொட்டில்[ 3 ]
பீதாசலம் என்னும் மலையின் அடியில் இருந்த குகையில் காந்தாரத்து இளவரசனாகிய சகுனி வேசரநாட்டிலிருந்து வந்த நாகசூதனிடம் கதை கேட்டுக்கொண்டிருந்தான். நந்துனியை சுட்டு விரலால் மீட்டி தன்னுள் தானே மூழ்கி ரத்னாக்ஷன் என்னும் நாகசூதன் பாடினான்.
ஒரு மரம்கூட இல்லாத, ஒரு சிறுசெடிகூட முளைக்காத, அந்த மலை வெண்கலத்தை உருட்டி அடுக்கிவைத்ததுபோன்ற மஞ்சள்நிறப் பாறைகளால் ஆனதாக இருந்தது. அதற்குள் நூற்றுக்கணக்கான குகைகள் உண்டு என சகுனி அறிந்திருந்தான். ஆனால் அவை நெடுங்காலம் முன்னரே வேட்டைக்காரர்களால் முற்றிலும் விலக்கப்பட்டிருந்தன. அக்குகைகளில் கடும்விஷம் கொண்ட நெடுநாகங்கள் வாழ்கின்றன என்று அறிந்திருந்தனர். என்றோ ஒருநாள் அம்மலையில் ஒளி தெரியும்போது மட்டும்தான் தென்றிசை நாகர்களில் எவரோ அங்கே வந்து தங்கியிருக்கிறார்கள் என்பதை உணர்ந்துகொள்வார்கள்.
பீதாசலத்துக்குச் செல்லலாம் என்று அவனிடம் சென்ற மாதம் அவனைப் பார்க்கவந்த நிமித்திகன்தான் சொன்னான். பன்னிருகட்ட வினாக்களத்தில் அவனுடைய கோள்களின் நிலையையும் திரிபையும் கண்டு கணித்த நிமித்திகன் சிந்தனையில் சற்றுநேரம் அமர்ந்திருந்துவிட்டு “அரசே, தங்கள் வாழ்க்கை புதிய திக்கொன்று நோக்கி எழவிருக்கிறது. பெருமழையை தென்வானம் அதிர்ந்து அறிவிப்பதுபோல கோள்கள் எதையோ சொல்கின்றன. அது எது என அறியும் ஞானம் எனக்கில்லை. முக்காலமும் உணர்ந்த எவரோ அவற்றை சொல்லக்கூடும்” என்றான்.
சகுனி அவனிடம் “அப்படி எவர் இங்குள்ளனர்?” என்றான். “நானறியேன். ஆனால் அவ்வண்ணம் நீங்கள் அறியவேண்டுமென்பது ஊழின்விதி என்றால் அவர் தங்களைத்தேடி வரக்கூடும்” என்றான் நிமித்திகன். “நாகசூதர்களும் வேதமுனிவர்களும் மட்டுமே காலமும்மடிப்பை விரிக்கத் தெரிந்தவர்கள் என நான் அறிவேன்” என்று சொல்லி தலைவணங்கினான்.
நாகசூதர்கள் வரும்போது தன்னிடம் தெரிவிக்கும்படி சகுனி ஆணையிட்டிருந்தான். பீதாசலத்தில் இரவில் மின்மினி ஊர்வதுபோலச் சென்ற முதல் ஒளியைக் கண்டதும் ஒற்றர் வந்து சொன்னார்கள். தன் குதிரையில் தன்னந்தனியாக பீதாசல மலையை ஏறிக்கடந்து குகைகளின் முன்னால் வந்து நின்ற சகுனி “நாகசூதரே, நான் காந்தாரத்து இளவரசனாகிய சௌபாலன் என்னும் சகுனிதேவன். தங்கள் அருள்தேடி வந்தவன்” என்றான். அந்த ஒலி தேன்கூடு போல இருந்த அந்தக்குகைகளுக்குள் எதிரொலி செய்தது. மந்திரத்தைச் சொல்லும் தவச்செல்வரைப்போல அவனுடைய குரலை மலை மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டது.
சற்று நேரம் கழித்து அவனுக்கு மிக அருகே ஒரு குடைவுப்பாதை வழியாக உயரமற்ற கரிய மனிதன் கருஞ்சடைக்கற்றைகள் தோளில் விரிந்திருக்க நாகபடமுனைகொண்ட யோகதண்டும் புலித்தோலாடையும் நெற்றியில் வரையப்பட்ட செந்நிற மூன்றாம் கண்ணுமாக வந்து நின்றான். சகுனி அவனை மண்ணில் முழந்தாள்பட விழுந்து வணங்கினான். அவன் செந்நிற விழிகளால் சகுனியை கூர்ந்து நோக்கி “வருக!” என்றான். அக்குரல் இசைக்கருவி ஒன்றின் மீட்டல் போலிருந்தது.
நாகசூதன் அவனுடைய குடைவுக்குகையின் வாயிலில் புழுதியில் சகுனியை அமரச்செய்தான். தன் யோகதண்டை மடியில் வைத்துக்கொண்டு நிமிர்ந்து பத்மாசனத்தில் அமர்ந்து அவன் கண்களைக் கூர்ந்து நோக்கினான். “நீ அறியவேண்டியது என்ன?” என்றான். “பெருவெள்ளம் என்னை அள்ளுகிறதென்று உணர்கிறேன். அது என்னை கொண்டுசெல்லும் திசை எது?” என்றான் சகுனி.
நாகசூதன் “அதை அறிபவன் பெருவெளியின் அனைத்து விசைகளையும் அறிபவனாகிறான். அவன் முதற்பெரும் நாகமேயாவான்” என்றான். “நான் பெருவெளியை அறியவிழையவில்லை. நான் அறியவிழைவது என்னைப்பற்றி” என்றான் சகுனி. “இப்பெருவெள்ளத்தின் விசையை வெல்வேனா வீழ்வேனா?”
“இளவரசே அறிதல் ஆவதல்ல. உணர்தலின் முனையொன்றை நாம் இருவரும் சென்று தொடமுடியும்” என்றபின் தன் நாகபட யோகதண்டை மடியில் வைத்து திருப்பிக்கொண்டு அதையே நோக்கியிருந்தான். மெதுவாக அவன் விழிகள் விரிந்தன. கண்கள் இமைப்பை இழந்து ஒளிகொண்டன. அவை நாகவிழிகளாக மாறுவதாக சகுனி எண்ணினான்.
நாகசூதன் சொன்னது ஒரு கதை. “இளவரசே, முன்பொருகாலத்தில் தட்சிணவனத்தில் மாபெரும் பள்ளம் ஒன்றிருந்தது. பத்து யானைகள் படுக்கும் அளவுக்கே ஆழம் கொண்டிருந்த அந்தப்பள்ளம் ரக்தகிரி என்னும் மலையின் உச்சியில் இருந்தது. அதற்கு ரக்தாக்ஷம் என்று பெயர்” என அவன் தொடங்கினான்.
பிடிமானமற்ற பாறைகள் சூழ செங்குத்தான கிணறுபோல பதினைந்து வாரை ஆழத்தில் இருந்த அந்தக்குழிக்குள் விழுந்த எவரும் திரும்ப மேலேறி வரமுடியாது. மனிதர்களை சோதிப்பதற்காக கந்தர்வர்கள் உருவாக்கிய பொறி அது என்று கதைகள் சொல்லின. கந்தர்வர்கள் மேலே இருந்த கமலம் என்னும் பாறையின் உச்சியில் அமர்ந்தபடி உள்ளே நிகழ்வனவற்றை பார்த்துக்கொண்டிருப்பார்கள்.
ஒருநாள் மலையில் வேட்டைக்குச் சென்ற தசபாலன் என்னும் மன்னனும் பத்து துணைவர்களும் அக்குழியை நோக்கி இழுக்கும் ஒரு நீரோடையில் நீர் அருந்த முயன்றபோது வழுக்கி அதனுள் சென்று விழுந்தனர். வீழ்ச்சியின் அதிர்ச்சியை கடந்தபின் அவர்கள் எங்கு வந்திருக்கிறார்கள் என்று மதிப்பிட்டுக் கொண்டனர். அங்கே சாதாரணமாக மனிதர்கள் எவரும் வருவதில்லை. வேட்டைக்காக எவரேனும் வந்தாலொழிய எவருடைய உதவியையும் பெறமுடியாது. மேலிருந்து உதவி வராமல் எவரும் மேலேறிச்சென்று தப்புவதும் இயல்வதல்ல. அவ்வண்ணம் அங்கே ஒரு குழி இருப்பதும் எவரும் அறியாதது.
அவ்வாறு எவரேனும் ஏறிவந்து அவர்கள் அக்குழிக்குள் இருப்பதை அறிந்து உதவுவது வரை அங்கேயே காத்திருப்பதன்றி வேறு வழி இல்லை. அக்குழிக்குள் ஓடிய சிற்றோடை அவர்கள் உண்ண நீரை அளித்தது. அதுவன்றி அதற்குள் உணவு என ஏதுமிருக்கவில்லை. அங்கே முடிந்தவரை அதிகநாட்கள் உயிர்வாழ்வதே தப்புவதற்கான ஒரே வழி என அவர்கள் உணர்ந்தனர். தசபாலன் தன் அமைச்சனாகிய ஸ்மிருதன் என்பவனிடம் அங்கே உயிர்வாழ்வதற்காக என்னென்ன செய்யவேண்டுமென்று கேட்டான். கற்றறிந்தவனாகிய ஸ்மிருதன் அனைத்தையும் சிந்தித்து ஒரு வழியைச் சொன்னான்.
ஸ்மிருதன் வகுத்த முறைமையை தசபாலனின் சேனாதிபதியான ராஜஸன் அங்கே செயலாக்கினான். அதன்படி அங்கிருந்த பத்துபேரில் ஐவரை சிறைப்பிடித்து கைகால்களைக் கட்டி வைத்துக்கொண்டனர். எஞ்சிய ஐவரில் இருவர் இரவும் பகலும் முறைவைத்து கீழிருந்து கற்களைப் பொறுக்கி மேலே தெரியும்படி வீசி தொடர்ச்சியாக குரலெழுப்பியபடி இருக்கவேண்டும். என்றோ ஒருநாள் அதை வேட்டைக்கு வருபவர்கள் காண்பது வரை அச்செயல் தொடரவேண்டும்.
அதுவரை அவர்களுக்கான உணவு அங்கேயே விளையவேண்டும். அங்கே வளரக்கூடியதாக இருந்தது மானுட உடல் மட்டுமே. அதை வளர்ப்பது மட்டுமே உணவுக்கான வழியாகும் என்றான் ஸ்மிருதன். எனவே கைகால்கள் கட்டிப்போடப்பட்டிருக்கும் சேவகர்களின் தொடை, புட்டம், தோள், மார்பு போன்ற உறுப்புகளில் இருந்து பதினொருவரும் உண்பதற்குரிய இறைச்சியை வெட்டி எடுத்து அதை அவர்கள் பகிர்ந்து உண்ணலாம் என்றான் ஸ்மிருதன்.
ஊனுக்காக சேவகர்களைக் கொன்றால் அவ்வுடல் ஒருநாளிலேயே அழுகி உண்ணத்தகாததாக ஆகிவிடும் என்று சரகவிதிகளைக் கற்ற அமைச்சனான ஸ்மிருதன் அறிந்திருந்தான். ஆகவே அவர்கள் இறக்காதபடி மிகச் செம்மையாக சஸ்த்ர முறைப்படி அவர்களின் உடல்தசை வெட்டி எடுக்கப்பட்டபின் அவர்களின் தலைமயிராலேயே காயத்துக்கு தையல் போடப்பட்டது. அந்த ஊனை அவர்களும் பிறரும் உண்டனர். ஒருவனின் உடலை அவர்கள் மூன்றுநாட்களுக்குரிய உணவாகக் கொண்டனர். ஆகவே பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை ஒருவனின் உடல் வெட்டியெடுக்கப்பட்டது. அதற்குள் முந்தைய காயங்கள் ஆறிவிட்டிருந்தன.
ஒவ்வொருநாளும் ஒவ்வொரு கணமும் பெருவலியால் துடித்த சேவகர்களின் வாய்கள் அவர்களின் ஆடைகளாலேயே இறுகக் கட்டப்பட்டிருந்தன. முதற்சிலநாட்கள் அவர்கள் தப்பவிரும்பி திமிறிக்கொண்டிருந்தனர். கண்களில் இருந்து நீர் கொட்டிக்கொண்டிருந்தது. பின்னர் அந்த வலிக்குப் பழகி அதிர்ந்து நடுங்கிய உடல்களுடன் விழித்த கண்களுடன் அசைவில்லாமல் வானைநோக்கிப் படுத்திருந்தனர்.
இவ்வாறு ஆறுமாதகாலம் அவர்கள் அதற்குள் வாழ்ந்தனர். அதற்குள் அந்தச்சேவகர்களில் ஒருவன் முழுமையாகவே இறந்துபோயிருந்தான். பிற ஒன்பதுபேரும் மெலிந்து களைத்து அரைப்பிணங்களாக இருந்தபோதும் அங்கே வேட்டைக்கு வந்தவர்களால் உயிருடன் மீட்கப்பட்டனர். அவர்கள் தங்கள் நாட்டுக்குச் சென்று மேலும் பல ஆண்டுகாலம் நலமாக வாழ்ந்தனர்.
சகுனியை நோக்கி நாகசூதன் சொன்னான் “அரசே, எங்கள் கதைகளும் நாகங்களே. அவை விரைவாக வெளிப்பட்டு நெளிந்தோடி வளைக்குள் மறைந்துவிடுகின்றன. அவற்றை நீங்கள் காணமுடியாது, ஆனால் அவை வளை வாயிலில் விழிகளை நட்டு உங்களை இமையாது நோக்கியிருக்கும்.”
சகுனி “நான் எதை அறியவேண்டும் இக்கதையிலிருந்து?” என்றான். “எங்கள் கதைகளில் நீதிகளே இல்லை” என்று நாகசூதன் சொன்னான். “ஆனால் இக்கதையை நான் சொல்லும்போது நீங்கள் கண்டதென்ன?” சகுனி “உமது மடியிலிருந்த யோகதண்டம் நாகவிழிளுடன் என்னை நோக்கியது. கதைமுடிவில் அது நாகமாக ஆகி நெளிந்தது.”
நாகசூதன் புன்னகையுடன் “நீங்கள் திசைபிறழாது இலக்கை அடையும் அம்பு, சௌபாலரே” என்றான். சகுனி அவன் மேலும் சொல்வான் என்று காத்திருந்தான். நாகசூதன் எழுந்ததும் “அந்த இலக்கு என்ன என்று சொல்லமுடியுமா?” என்றான். நாகசூதன் புன்னகைமட்டும் புரிந்தான்.
சகுனி மீண்டும் கீழே வந்துகொண்டிருந்தபோது அக்கதையை அன்றி வேறெதையுமே எண்ணமுடியாமல் தன் அகம் ஆகிவிட்டிருப்பதை உணர்ந்தான். நாட்கள் செல்லச்செல்ல அக்கதை அவன் நெஞ்சில் மேலும்மேலும் வல்லமை கொண்டபடியே சென்றது. நாகத்தின் கண்கள் ஒளியுடன் தெரிந்தன. பின்பு மலையே மறைந்து நாகத்தின் கண்கள் மட்டுமே தெரிந்தன.
பதினெட்டு நாட்களுக்குப்பின்பு தெற்குப்பகுதி சிற்றூர் ஒன்றின் ஆட்சியாளனாகிய பிரமோதன் என்பவன் சகுனியின் விசாரணைக்கு வந்தான். அந்த ஆட்சியாளன் சுங்கத்தில் ஒருபகுதியை தனக்கென எடுத்துக்கொண்டு அதைக்கொண்டு மந்தணநிதி சேர்த்திருந்தான். அவன் ஆயுதங்களை வாங்கி படை ஒன்றை அமைக்க எண்ணுவதாக ஒற்றுச்செய்தி வந்தது. அச்செய்தியை அளித்தவன் பிரமோதனின் அமைச்சனாகிய சுதர்மன்.
பிரமோதன் கைவிலங்குகளுடன் சகுனியின் அவைக்கு முன் வந்து நின்றான். அச்சமற்ற விழிகளுடன் நின்ற பிரமோதனை சகுனி கூர்ந்து நோக்கினான். “நீ செய்தவற்றை எவ்வாறு நியாயப்படுத்துவாய்?” என்றான்.
“நான் ஷத்ரியன்… நாடாள்வதும் மண்கொள்வதும் எனக்கான அறமே. மண்ணாளும் கனவை இழந்தால் என்னால் வாழமுடியாது” என்றான் பிரமோதன். சகுனி அவனிடம் “என்னுடன் போர்புரி. நீ வென்றால் உன் நாட்டை உனக்களிக்கிறேன்” என்றான்.
வாளேந்தி களமிறங்கிய சகுனி பிரமோதனை வெட்டி வீழ்த்தினான். அந்த அமைச்சனுக்கு பத்தாயிரம் பொன்னளித்து அவைநடுவே பாராட்டினான். அவனை கூர்ஜர எல்லையில் சுங்கம் கொள்ளும் துறையதிபனாக அனுப்பினான். ஆனால் செல்லும் வழியிலேயே அவனை இன்னொரு ஒற்றனைக்கொண்டு அம்பெய்து கொல்ல ஆணையிட்டான்.
அவனருகே இருந்த அசலனும் விருஷகனும் அந்தத்தீர்ப்பைக் கண்டு வியப்பதை சகுனி கண்டான். அம்முடிவை அவன் எச்சிந்தனையும் இல்லாமல் கண்ணிமை நேரத்தில்தான் எடுத்திருந்தான். அதைப்பற்றியே அவனும் எண்ணிக்கொண்டிருந்தான். அகநிலையழிந்து தன்னைத் தொடர்ந்து வந்த சோதரர்களிடம் “தன்னை ஷத்ரியன் என உணர்ந்திருந்த பிரமோதன் தன் குடிகளுக்கு நல்லரசனாகவே ஆண்டிருப்பான். அவனை நான் சிறையிட்டாலோ கொன்றாலோ அம்மக்களின் நன்மதிப்பை இழந்தவனாவேன். ஷத்ரியமுறைப்படி அவனை நான் போரில் கொன்றால் அம்மக்கள் அதை இயல்பானதென்றே கொள்வார்கள்” என்றான்.
அவர்கள் நெஞ்சில் ஓடுவதை உணர்ந்து “அந்த அமைச்சன் பிரமோதனுக்குக் கட்டுப்பட்டவன். தன் அறத்தை மறந்து அவன் நம்மிடம் தன் அரசனை காட்டிக்கொடுத்தான். அத்தகையோரை நாம் ஊக்கப்படுத்தவேண்டும். பிறர் அவனைப்போல நம்மிடம் செய்திகளைச் சொல்ல அது உதவும். ஆனால் அவன் நமக்கும் வஞ்சகம் செய்யக்கூடும்” என்றகணமே புற்றுள் நோக்கியிருக்கும் பாம்பின் விழிகளை அவன் கண்முன் கண்டான். நாகசூதனின் கதையைச் சொல்லி “உடன்பிறந்தவர்களே, இந்த வினாவுக்கு பதில் சொல்லுங்கள். நீங்கள் அக்குழியில் இருந்து வெளிவந்ததும் என்ன செய்வீர்கள்?” என்றான்.
“அந்தச் சேவகர்களுக்கு விருதுகளும் பரிசுகளும் அளித்தபின் எங்கள் குலதெய்வத்தை வழிபட்டு நன்றி சொல்வோம்” என்றான் மூத்தவனாகிய அசலன். “அக்கணமே எஞ்சிய சேவகர்களைக் கொன்றுவிட ஆணையிடுவேன்” என்றான் விருஷகன். “ஏனென்றால் அவர்களுக்கு அரசு நிகழும் முறைமை ஒன்று தெரிந்துவிட்டது. ஒருபோதும் எளியகுடிகள் அதை அறியக்கூடாது. அறிந்தவன் அரசுக்குப் பணியமாட்டான்.”
சகுனி “மூத்தவரே, நீங்கள் இந்த அரசை கருணையுடன் ஆட்சி செய்யமுடியும். ஆனால் தம்பியர் இன்றி ஆண்டால் நீங்கள் ஒரு வருடத்துக்குள் முடியை இழப்பீர்கள்” என்றான். “தம்பி, நீ என்றும் மூத்தவருடன் இரு. உனது வாளும் மதியும் அவரைச் சூழ்ந்து காக்கவேண்டும்.” விருஷகன் தமையனை வணங்கினான்.
VENMURASU_EPI_63_
ஓவியம்: ஷண்முகவேல்
[பெரிதுபடுத்த படத்தின்மீது சொடுக்கவும்]
அன்றுமாலை தன் தமக்கையும் காந்தாரியுமான வசுமதியிடம் அவன் அன்று நிகழ்ந்ததைச் சொன்னான். “இந்தச்சிறு அரசுக்கு அவர்கள் இருவரும் இணைந்தால் நல்லாட்சியை அளிக்கமுடியும்” என்றான். “ஆயிரமாண்டுகளுக்கு முன் இந்த மண்ணுக்கு வந்த துர்வசு மன்னர் இங்குவாழ்ந்த பழங்குடிகளிடம் பெண்கொண்டு உருவாக்கிய குலம் நம்முடையது. நம்மில் இரு குருதிகள் ஓடுகின்றன. சந்திரகுலத்து துர்வசுவின் குருதியும் பசுமைகாணா மலைகளில் வேட்டையாடி வாழ்ந்த பஷுத்துரர்களின் குருதியும் இணைந்தவர்கள் நாம். அவையிரண்டும் என் இரு உடன்பிறப்புகளிடமும் உள்ளன.”
“தம்பி, நீ என்ன முடிவை எடுத்திருப்பாய்?” என்றாள் வசுமதி. சகுனி புன்னகைசெய்து “அவர்களை விடுதலைசெய்து அவர்கள் விரும்பும் சிற்றரசையோ படைப்பிரிவையோ அமைச்சையோ அளிப்பேன்” என்றான். “ஆனால் அவர்கள் செய்வதையும் சொல்வதையும் ஒற்றர்கள் வழியாக அறிந்துகொண்டிருப்பேன். தன் ஊனை தானே உண்டு சுவையறிந்தவன் அறியும் ஞானமென்ன என்பதை நான் அவன் வழியாக அறியமுடியும். அவன் திறக்கும் வாயில்கள் எனக்கு உதவக்கூடும்.”
“அந்த ஞானத்தை அறிந்து முன்சென்ற ஒருவனைமட்டும் என்னுடன் வைத்துக்கொள்வேன். பிறரை கொன்றுவிட ஆணையிடுவேன்” என்று சகுனி தொடர்ந்தான். “அவர்கள் ஒருபோதும் சமநிலை கொண்டவர்களாக இருக்கப்போவதில்லை.”
அவள் புன்னகை செய்தாள். “நீ பிறர் பாராதவற்றை பார்ப்பவன்” என்றாள். “தமக்கையே, என்னுள் உறக்கமில்லாத இரு நாகவிழிகளை உணர்கிறேன். அவை என்னை வழிநடத்தும்” என்று சகுனி சொன்னான். “என் இடம் இதுவல்ல. என் பணி இங்கும் அல்ல. நாகசூதனின் ஆரூடம் அதுவே.”
அவள் சிரித்து “இளமையிலேயே உன் விழிகள் கிழக்கு நோக்கித் திரும்பி இருக்கின்றன என நான் அறிவேன்” என்றாள். “ஆம், சந்திரகுலத்தில் இருந்து அவமதிக்கப்பட்டு துரத்தப்பட்ட துர்வசுவின் குருதி என்னுள் முதிர்வடைந்துவிட்டதுபோலும். அது திரும்பிச்செல்ல விழைகிறது. விட்டுவிட்டு வந்த அனைத்தையும் வெற்றி கொள்ளத்துடிக்கிறது” என்று அவனும் சிரித்தான்.
பின்னர் சகுனியும் வசுமதியும் இரு குதிரைகளில் மலையேறிச் சென்று பாறை விளிம்பில் நின்றார்கள். வசுமதியும் அவனைப்போலவே குதிரையில் நீண்ட பாலைவெளிப்பாதையில் விரைவதை விரும்புபவள். அவனுடன் குதிரையை விரையவைக்க அவளால் மட்டுமே முடியுமென அவன் இளமையிலேயே அறிந்திருந்தான். பகல்களும் இரவுகளும் சென்றாலும் அவள் களைப்படைவதுமில்லை. மலையுச்சியில் நின்று கண் எல்லை வரை விரிந்துகிடந்த பாலைநிலத்தில் மாலைச்சூரியன் சிவந்து அணைவதை பார்த்துக்கொண்டிருக்கும் கணங்களில் சகுனி எப்போதும் போல அவனுள் இருந்து அவன் நன்கறிந்த இன்னொருவன் எழுந்து பேருருவம் கொண்டு நிற்பதை உணர்ந்தான்.
“இந்த மண்மீது குதிரையில் விரைகையில் இதைத் தழுவிக்கொள்வதாகவே உணர்கிறேன். மைந்தனைத் தழுவித்தழுவி நிறைவுகொள்ளாத அன்னைபோலத்தான் நானும்” என்றாள் காந்தாரி. சகுனி முகத்தில் படர்ந்த செவ்வொளியுடன் “என் அகம் இந்த விரிநிலத்தை சிறு கொட்டில் என்றே உணர்கிறது” என்றான். “என் கனவுகளிலெல்லாம் நான் சிற்றறைக்குள் அடைபட்டவனாகவே உணர்கிறேன். கதவு சற்றே திறந்திருப்பதையும் காண்கிறேன்.” கண்முன் விரிந்துகிடந்த நிலத்துக்கு அப்பால் தொடுவான் கோட்டின் ஒளியை நோக்கி சகுனி பெருமூச்சுவிட்டான். “நான் அடையவேண்டியவை எல்லாம் அங்கே இருக்கின்றன. என் நிலம்…தென்குமரி முனைவரை செல்லும் பாரதவர்ஷம்.”
அவனுடைய கனவை அவள் மட்டுமே அறிந்திருந்தாள். அவளைவிட ஓராண்டு சிறியவனாகிய அவன் இளமையில் அவளுடன் அந்தப்புரத்திலேயே வளர்ந்தவன். எங்கும் எவரிடமும் சொல்லெண்ணிப் பேசுபவன் அவளிடம் மட்டுமே அகத்தை பொழிந்துகொண்டிருப்பான். அவனுடைய சொற்களை மெல்லிய புன்னகை ஒளியுறச்செய்த விழிகளுடன் அவள் கேட்டுக்கொண்டிருப்பாள். அவன் ஐயங்களைவிட அச்சங்களைவிட கனவுகளையே அவள் அதிகமும் அறிந்திருந்தாள். அக்கனவுகளே அவனாக அவள் எண்ணினாள். கொட்டில் வாயிலில் நின்று பொறுமையிழந்து கால்களை மண்ணில் தட்டி காதுகளைக் கூர்ந்து நாசிதூக்கி வாசனை பிடிக்கும் இளம்குதிரை.
பத்தாண்டுகளுக்கும் மேலாக சகுனி பாரதவர்ஷத்தின் அனைத்து அரசுகளைப்பற்றியும் உளவுச்செய்திகளை தொகுத்து ஆராய்ந்தான். மகதமே கங்கைக்கரையில் வளர்ந்து வரும் அரசு என்று அவன் அறிந்தான். மகதத்தின் கங்கைத்துறைகளில் நதி மிக ஆழமானது. அங்கே பெருங்கலங்கள் கடலில் இருந்து வரமுடியும். அங்கு உருவாகிவந்திருக்கும் துறைகள் வழியாக அங்கே செல்வம் குவிந்துகொண்டிருக்கிறது என்றனர் சூதர். ‘காராமணிகளும் கோதுமையும் செம்பயறும் கலந்து பரவியதுபோல மக்கள் நெரிசலிடும் மகதத்தின் துறைமுகங்களில் பொன் அறுவடையாகிறது.’
“இன்று வணிகத்தில் நிகழும் பெரும் மாறுதல் என்பது இதுதான் தமக்கையே! பீதர்கலங்கள் நம்மைவிட பற்பல மடங்கு பெரியவை. பெருங்கலங்கள் அணுகும் துறைகளே இனிமேல் பொருள்வல்லமை பெறும். பொருள்வல்லமையே படைவல்லமையாகவும் குலப்பெருமையாகவும் மாறும் யுகம் பிறந்துகொண்டிருக்கிறது. கலிங்கமும் கூர்ஜரமும் பெருநாவாய்களைக் கொண்ட நாடுகளாக ஆகும். ஆனால் அவை பிறநாடுகளில் இருந்தே பொருள் கொள்ள முடியும். மகதமோ கங்கைக்கரை விளைநிலங்களையும் இமயத்து மலைநிலங்களையும் கங்கையின் நாவாய்த்துறைகளையும் ஒருங்கே கொண்ட நாடு.”
மகதத்தை அனைத்து ஷத்ரியர்களும் இணைந்து அழிக்கமுயல்வார்கள் என்று சகுனி எண்ணினான். எங்கோ சொற்களும் படைகளும் குவிந்துகொண்டிருக்கின்றன. ஷத்ரியர்கள் மகதத்தை அஞ்சுவது அது தொன்மையான ஷத்ரிய நாடு என்பதனால்தான். குலமும் செல்வமும் இணைந்தால் அதன் வல்லமை எல்லையற்றது. அது பாரதவர்ஷத்தை ஒருகுடைக்கீழ் ஆளும். பிற ஷத்ரியகுலங்கள் அதன் கீழ் அடங்கி வாழ நேரும்.
“ஷத்ரியர்கள் புயலை கோட்டைகட்டி தடுக்கமுயல்கிறார்கள். ஆனால் அவர்களின் எண்ணிக்கை வல்லமை அதிகம். போர்புரியும் ஆற்றலும் அதிகம். அவர்களால் மகதத்தை அழித்துவிடமுடியும். அவ்விடத்தில் இன்னொரு புதியநாடு எழுவதைத் தடுக்க முடியாது” என்றான். “மகதம் இன்று வலுவான ஒரு துணைக்காக ஏங்கி நிற்கிறது. நாம் மகதத்துடன் கைகோர்த்துக்கொண்டால் பாரதவர்ஷத்தை மேற்கிலிருந்தும் கிழக்கிலிருந்தும் அள்ளிப்பற்றிவிடமுடியும்.”
புரு வம்சத்து உபரிசரவசுவின் குலத்தில் வந்த விருஹத்ரதனின் மைந்தனான மகத இளவரசன் பிருகத்ரதன் வல்லமைகொண்டவன் என்று சூதர்கள் சொன்னார்கள். அவனுடைய ஆட்சியில் மகதம் மேலும் விரிவடையும் என்றனர் அமைச்சர்கள். சகுனி தன் தந்தை சுபலரிடம் மகத இளவரசனுக்கு காந்தாரியை மணமுடித்துக் கொடுக்கலாமென்று சொன்னான்.
அரசவையில் அதை சகுனி சொன்னபோது “மைந்தா, நாம் இன்னமும் ஷத்ரியர்களால் அரசகுலமாக மதிக்கப்படவில்லை. ஆகவே நம் இளவரசிக்கு சுயம்வரம் அமைக்க நம்மால் முடியாது. தகுதியான ஷத்ரியகுலமொன்றில் அவளை மணமுடித்தனுப்புவதே நாம் செய்யக்கூடுவது. ஆனால் அவர்கள் நம்மிடம் வந்து மணம் பேசவேண்டும் என்பதே முறையாகும்” என்றார் சுபலர்.
“தந்தையே, நம்முடைய வல்லமை என்ன என்பது இன்னும் ஷத்ரியர்களுக்குத் தெரியாது. நம் உறவின் மூலம் அவர்கள் அடைவதென்ன என்றும் அவர்கள் அறிந்திருக்க மாட்டார்கள். அதை நாம் அவர்களுக்குத் தெரிவிப்போம். அதன்பின் அவர்கள் முடிவெடுக்கட்டும்” என்று சகுனி சொன்னான். “அவர்களிடம் ஒரே ஒரு அரசியல் சூழ்வினைஞன் இருந்தால்கூட அவர்களுக்கு நாம் அளிப்பதென்ன என்று புரியும்.”
சகுனியின் ஆணைப்படி பரிசுகளுடன் நாற்பதுபேர்கொண்ட தூதர்குழு அமைச்சர் சுகதர் தலைமையில் மகதத்துக்குச் சென்றது. அவர்கள் சப்தசிந்துவைக் கடந்து கங்கை வழியாக மகதத்துக்குச் சென்றனர்.
காப்பிரிநாட்டுப் பொன்னையும் சீனத்துப்பட்டுக்களையும் கொண்டுசென்ற அந்தத் தூதுவர்களை மகதமன்னன் விருஹத்ரதன் வரவேற்று தன் அவையில் அமரச்செய்தார். அவர்களுக்கு உயர்ந்த பரிசுகளையும் அளித்தார். பதினைந்துநாள் அங்கே விருந்துகளில் பங்கெடுத்துக்கொண்டபின்னர் ஒருநாள் விருஹத்ரதனிடம் சுகதர் அரண்மனை மந்திரசாலையில் தனியாகப் பேசினார். விருஹத்ரதனுடன் அவரது அமைச்சர் தேவபாலர் மட்டும் இருந்தார். காந்தாரத்தின் வல்லமைகளை விளக்கிய சுகதர் சகுனியின் உள்ளக்கிடக்கையை மகதமன்னனுக்குத் தெரிவித்தார். விருஹத்ரதனின் கண்கள் மாறுபடுவதைக் கண்டதுமே என்ன சொல்லப்போகிறார் என்று சுகதர் உணர்ந்துகொண்டார்.
ஆனால் விருஹத்ரதன் பேசுவதற்குள் தேவபாலர் புன்னகையுடன் “அரசரின் பதிலை காந்தார மன்னருக்கு முறையாகத் தெரிவிக்கிறோம் சுகதரே” என்றார். விருஹத்ரதன் புன்னகை புரிந்தார். சுகதர் அங்கிருந்து கிளம்பும்போது விருஹத்ரதன் அவரிடம் பொன்னாலான ஒரு பேழையை அளித்து அது காந்தார மன்னனுக்கு அவருடைய பரிசு என்று தெரிவித்தார்.
சுகதர் நிலைகொள்ளாத நெஞ்சுடன்தான் அந்தப்பேழையை காந்தாரத்துக்குக் கொண்டுவந்தார். அதை மகதனின் பரிசு என்று சொல்லி காந்தார மன்னன் சுபலரிடம் கொடுத்தபோதும் அவர் ஐயம் கொண்டிருந்தார். அது ஒரு தொடக்கம் என அவரது கனவுகள் அவரை எச்சரித்தபடியே இருந்தன.
அன்று அவையில் சகுனி இருக்கவில்லை. அவன் தன் படைகளுடன் வடஎல்லையில் பயணம் செய்துகொண்டிருந்தான். சுகதர் மன்னரிடம் “அரசே, மகத அரசரின் எண்ணம் சாதகமானது என நான் எண்ணவில்லை. அவரது அமைச்சர் தேவபாலர் கண்களில் விஷத்தைப்பார்த்தேன்” என்றார். “இப்பேழையை நாம் இளவரசர் வந்தபின்னர் திறப்பதே நல்லது.”
சுபலர் உரக்கச்சிரித்து “அமைச்சரே, இந்தப் பொற்பேழையில் வேறு என்ன இருக்குமென எண்ணுகிறீர்கள்? நாம் அளித்த நவமணிக்குவையைக் கண்டு மகதன் நாணியிருப்பான். ஆகவேதான் பொற்பேழையில் மணஓலையை வைத்து அனுப்பியிருக்கிறான்” என்று சொன்னபடி அவை நடுவே அதைத் திறந்தார்.
அதற்குள் தோல்விளிம்புகள் நைந்த பழைய குதிரைச்சவுக்கு ஒன்று இருந்து. சிலகணங்கள் சுபலருக்கு ஏதும் புரியவில்லை. பேழையை திரும்பத்திரும்ப நோக்கியபின் “அமைச்சரே இது என்ன?” என்றார். மூத்த இளவரசனாகிய அசலன் “குதிரைச் சவுக்கு என நினைக்கிறேன்” என்றான்.
இளையவனாகிய விருஷகன் சினத்துடன் எழுந்து “அமைச்சரே அதை அரசரிடமிருந்து வாங்கும்… இக்கணமே அதை எரித்து அழித்துவிடும்…” என்று கூவினான். “இச்செய்தியை சகுனிதேவருக்கு எவரும் தெரிவிக்கவேண்டியதில்லை. இது இங்கேயே மறைந்துவிடவேண்டும்” என்றான்.
ஆனால் மறுநாள் மாலையே சகுனியிடம் ஒற்றர்கள் அனைத்தையும் சொல்லெண்ணிச் சொன்னார்கள். காந்தாரத்தின் வட எல்லைத்தலைநகரான புருஷபுரியில் அரண்மனை மந்திரசாலையில் படுத்திருந்த சகுனி தலைகுனிந்து அதைக் கேட்டபின் ஒற்றனிடம் அவன் போகலாம் என தலையசைத்துவிட்டு எழுந்து சாளரம் வழியாக நெடுந்தொலையில் தெரிந்த உத்தரபதத்தின் மலைக்கணவாயை பார்த்துக்கொண்டு நின்றான்.

3/22/14

பகுதி மூன்று : புயலின் தொட்டில்[ 2 ]

பகுதி மூன்று : புயலின் தொட்டில்[ 2 ]
சந்திரகுலத்து அரசன் யயாதியின் இரண்டாவது மைந்தனாகிய துர்வசு தந்தையின் முதுமையை ஏற்றுக்கொள்ள மறுத்ததனால் தன் தந்தையால் குலமிழந்து நாடு துறக்கும்படி தீச்சொல்லிடப்பட்டான். அச்சொல்லைக் கேட்டதும் கண்ணீருடன் அரண்மனையைவிட்டு வெளியே வந்து சந்திரபுரியின் கோட்டைவாயிலில் நின்றான். ஒரேசொல்லில் அன்றுவரை அவனிடமிருந்த அனைத்தையும் தந்தை திரும்பப்பெற்றுவிட்டதை உணர்ந்தான். அரசும் குலமும் குடும்பமும் கனவெனக் கலைந்து மறைந்தன. வானேறிச்செல்லவோ பாதாளத்துக்குச் செல்லவோ அவனுக்கு மனமிருக்கவில்லை. ஆகவே நான்குதிசைகளும் அவன் முன் விரிந்துகிடந்தன. எத்திசைச் செல்வது என்று அவன் திகைத்து சிலகணங்கள் நின்றபின் மேற்குத்திசைநோக்கி காலடி எடுத்துவைத்தபோது அவனுடைய இளமைநண்பனும் சாலைத்தோழனுமாகிய ரணசிம்மன் குதிரையில் தன்னைநோக்கி வருவதைக் கண்டான்.
ரணசிம்மன் “இளவரசே, பதினைந்தாண்டுகளுக்கு முன் நான் ஒரு சூளுரை விடுத்தேன். என் வாழ்வும் சாவும் தங்களுடனேயே. நானும் வருகிறேன்” என்றான். “ரணசிம்மா, நான் உன்னுடன் பகிர்ந்துகொள்ள இப்போது ஒன்றுமில்லை. நான் இளவரசனுமில்லை” என்றான் துர்வசு. ரணசிம்மன் “இளவரசே, தங்களை நான் இளவரசன் என்பது இந்நிலம் இன்னும் மாமன்னர் யயாதிக்குரியது என்பதனால்தான். இதன் எல்லையை நாம் தாண்டியதுமே நான் உங்களை அரசே என்றுதான் அழைக்கப்போகிறேன். நிலத்தால் மன்னர்கள் உருவாவதில்லை. மன்னர்களுக்கு நிலம் வந்துசேர்கிறது. உங்கள் படைத்தலைவனாக நான் இந்த வாளை தங்கள் சேவைக்கெனத் தாழ்த்துகிறேன்” என்றான்.
அவர்களிருவரும் தனியாக கோட்டைமுன்னிருந்து நகர் நீங்கினார்கள். அவர்கள் செல்லும் செய்தி பரவி நகர எல்லையை அவர்கள் கடப்பதற்குள் ஆயிரம் வீரர்கள் தங்கள் வேல்களுடனும் வாள்களுடனும் அவர்களுடன் சேர்ந்துகொண்டார்கள். அவர்கள் ஒவ்வொரு நாட்டு எல்லைக்குள் நுழையும்போதும் அந்நாட்டு மன்னன் படைகளுடன் வந்து எதிர்கொண்டான். அவன் நாடுவழியாக கடந்துசெல்வதற்கு மட்டும் அனுமதியளித்தான். சப்தசிந்துவையும் கூர்ஜரத்தையும் கடந்து சென்றபோது நாடுகளே இல்லாத பெரும் பாலைநிலம் அவர்களை எதிர்கொண்டது. அவர்கள் அதன் வாயிலில் அஞ்சி நின்றனர்.
துர்வசு ‘என் தந்தையின் தீச்சொல்லையே நிலமாக ஆக்கி தெய்வங்கள் என் முன் அளித்திருக்கின்றன போலும்’ என்று எண்ணி திகைத்து நின்றான். அவனுடன் வந்த நிமித்திகர்களில் ஒருவனை அழைத்து அந்நிலம் எது என்று கணித்துச் சொல்லச் சொன்னான். நிமித்திகன் அன்றிரவு விண்மீன்களைத் தேர்ந்து அவ்விண்மீன்களை கூழாங்கற்களாக பன்னிரு நிலைத்திகிரிக்களத்தில் அமைத்துக் கணித்து அவ்விடத்தின் வரலாற்றைச் சொன்னான்.
ஆயிரம் கல்பங்களுக்கு முன்னர் விண்ணகத்தில் பிரஜாபதியான அத்ரி சஹஸ்ரம் என்னும் மாபெரும் வேள்வி ஒன்றைத் தொடங்கினார். அதற்கு திசைகளை செங்கற்களாக அடுக்கி எரிகுளம் அமைத்து மேகங்களை சமித்தாக்கி இடியையும் மின்னலையும் அரணிக்கட்டைகளாக்கி கடைந்தார். மூன்று எரிகுளங்களில் அக்னிக்கு ஸ்வாகாதேவியில் பிறந்த மகள்களான தட்சிணம் கார்ஹபத்யம் ஆஹவனீயம் என்னும் மூன்று இளநெருப்புகளையும் குடியேறச்செய்தார். ஆனால் அக்னியின் மூன்று மைந்தர்களான பாவகன் பவமானன் சூசி ஆகியோர் விளையாட்டாக வாயுவின் மைந்தர்களான பலன், அதிபலன், சண்டன் மூவரையும் துரத்தி வந்தனர். அவர்கள் மூன்று நெருப்புமங்கையரையும் அணைந்துபோகச் செய்தனர்.
அத்ரி மும்முறை வியானன் என்னும் வாயுபுத்திரனின் உதவியுடன் முந்நெருப்புகளையும் கடைந்து பற்றவைத்தார். மும்முறையும் விளையாடிவர்கள் அவற்றை அணைத்தனர். சினம் கொண்ட அத்ரி “என் வேள்வியைத் தடைசெய்த பாவம் உங்களைச் சேரட்டும். மூன்று வாயுக்களும் மூன்று நெருப்புகளையும் மாறிமாறிச்சுமந்தபடி ஆயிரம் கல்பம் மண்ணில் அலைவீர்களாக!” என்று தீச்சொல்லிட்டார். அவ்வாறாக மூன்று காற்றுகளும் மூன்று நெருப்புகளுடன் மண்ணில் வந்தன. அவை வீசுவதற்காக அவை கண்டடைந்த இடம் இந்த மலை முதல் மேற்கே ஆயிரம் யோஜனை தூரம் வரை ஆகும்.
வாயுவின் தலைநகரம் கந்தவதி என்றழைக்கப்படுகிறது. விண்ணகத்தில் முடிவில்லாத ஒளியால் ஆன மாமேருவில் ஒன்பது நகரங்கள் உள்ளன. பிரம்மனுக்குரிய மனோவதி நடுவிலிருக்கிறது. கிழக்கே இந்திரனின் அமராவதி அமைந்துள்ளது. தென்கிழக்கில் அக்னி அரசாளும் தேஜோவதி. தெற்கே யமன் அமைத்துள்ள சம்யமனி, தென்மேற்கில் நிர்யதியின் கிருஷ்ணாஞ்சனம், மேற்கே வருணனின் சிரத்தாவதி, வடக்கே குபேரனின் மஹோதயம், வடகிழக்கில் ஈஸானனின் யசோவதி ஆகியவை உள்ளன. வடமேற்கே வாயுவின் கந்தவதி அமைந்துள்ளது.
விண்ணிலிருந்து இறங்கிய காற்றின்மைந்தர்கள் மண்ணில் அவர்களுக்கென அமைத்துக்கொண்ட இடம் இது. இதன் பெயரும் கந்தபுரம். இங்கிருந்த மலைகளை குடைந்தும் அரித்தும் அவர்கள் தங்களுக்குரிய வழிகளையும் குகைகளையும் அமைத்துக்கொண்டனர். பலன், அதிபலன், சண்டன் மூவரும் எரிவடிவங்களான பாவகன், பவமானன், சூசி ஆகியோரைச் சுமந்தபடி இங்கிருந்து மேற்கே பாய்ந்தோடுகிறார்கள். அங்கிருந்து திரும்பவும் இங்கு வந்துசேர்கிறார்கள். மேற்கே செல்லச்செல்ல அவர்களின் வேகமும் வெம்மையும் அதிகரிக்கிறது.
பலன் பாறைகளை உடைக்கும் வல்லமை கொண்டவன். அதிபலன் பாறைகளைத் தூக்கி வீசும் பேராற்றலின் வடிவம். சண்டன் அனைத்தையும் தன் ஆயிரம் கைகளில் அள்ளி வீசி தாண்டவமாடுபவன். அரசே, நீரனைத்தையும் உண்ணும் பாவகனும் உயிர்களனைத்தையும் அழிக்கும் பவமானனும் அனைத்தையும் தூய்மைசெய்யும் சூசியும் அவர்களுடன் இணையும்போது அந்த மண்ணில் எவர் வாழமுடியும்?
நிமித்திகர் சொன்னதைக்கேட்டு அனைவரும் அஞ்சி நடுங்கி அமர்ந்திருக்க துர்வசு சொன்னான். “நிமித்திகரே, நானும் அந்த மூன்று நெருப்புகளையும் மூன்று காற்றுகளையும் போல தந்தையால் தீச்சொல்லிடப்பட்டு இங்கே வந்திருக்கிறேன். எத்தனை அழிக்கும்தன்மை கொண்டவர்களென்றாலும் அவ்வறுவரும் தெய்வ வடிவங்களும் கூட. அவர்கள் நம்மிடம் கருணை கொள்வார்கள். என்னுடன் வரவிரும்புபவர்கள் வரலாம்.”
ஆயிரம்பேரில் ஒருவர் கூட அஞ்சிப்பின்னடையவில்லை. அனைவரும் அந்த மண்ணுக்குள் நுழைந்தனர். வானகப்பிரஜாபதிகள் வேள்வி முடித்து சென்ற எரிகுளம் போல வெந்து சிவந்து கருகிக் கிடந்தது அந்நிலம். அதிலிருந்து பாதாளநாகங்களின் விஷமூச்சு போல அனல் வீசியது. தெய்வ வல்லமைகளை நோக்கி கைகளைக் கூப்பியபடி துர்வசு முன்னால் சென்றான். பின்னால் அவனது படைகள் வணங்கியபடி தொடர்ந்துசென்றன.
அவர்கள் வருவதை வானில் உலவிய அனல்காற்றுகள் கண்டன. பாவகனைத் தோளிலேற்றியபடி பலன் அவர்களை நோக்கி வந்தான். செம்புரவிகள் பிடரிபறக்கப் பறந்துவருவதுபோல செம்மண்புழுதிமேகமாக அவர்கள் வருவதை துர்வசு கண்டான். கண்களைமூடியபடி அசையாமல் நின்றான். ஒரு அடிகூட அவன் பின்னெடுத்து வைக்கவில்லை. அவர்களைச் சுற்றி தீத்தழல்கள்போல புழுதிக்காற்று வெறிகொண்டு சுழன்றாடியது. கோடிநரிகளின் ஊளைபோல அது ஒலித்தது.
துர்வசுவின் அசைவில்லாத பக்தியைக் கண்டு பாவகன் புன்னகையுடன் கடந்துசென்றான். செம்புழுதி அடங்கியபோது அவர்கள் களிமண்ணால் செய்யப்பட்ட சிலைகள் போல கூப்பியகரங்களுடன் அந்த வீண்நிலத்தில் நின்றிருந்தனர். ‘பக்தனை தண்டிக்கும் தேவன் என எவருமில்லை… நாம் முன்னே செல்வோம்’ என்று அவர்கள் மேலும் சென்றனர். அதைக்கண்டு அதிபலன் மேல் ஏறிய பவமானன் பறந்துவந்தான்.
வானையும் மண்ணையும் இணைக்கும் மாபெரும் தூண் போல தொலைவில் அவர்கள் வருவதை துர்வசு கண்டான். பாலைநிலத்து மண் முழுக்க அந்தச் சுழலால் மேலே தூக்கப்பட்டு வான்மேகங்களுடன் இணைந்து சுருண்டது. பெரும்பாறைகள் கூட அதிலெழுந்து ஆயிரம் யோஜனை உயரத்தில் சுற்றிப் பறந்து கொண்டிருந்தன. அதிபலன் மேலேறிய பவமானன் அவர்களனைவரையும் நிலத்திலிருந்து தன் துதிக்கையால் தூக்கி வானுக்குக் கொண்டுசென்றான். அவர்கள் சுழன்று சுழன்று மேலே சென்றுகொண்டிருந்தபோதும் கும்பிட்ட கைகளை விலக்கவில்லை.
அவர்கள் மேல் கனிந்த அதிபலன் அவர்களை கீழிறக்கினான். அவர்களைச்சூழ்ந்து பெரும்பாறைகள் மழைபோல விழுந்து மண்ணை அறைந்தன. அவர்களுடன் விழுந்த மண்ணால் அந்த இடம் ஒரு குன்றாகியது. அக்குன்றின்மேல் அவர்கள் நின்றிருந்தனர். அந்தக்குன்று இன்றும் பவமானனுக்குரிய ஆலயமாக வழிபடப்படுகிறது.
VENMURASU_EPI_62
ஓவியம்: ஷண்முகவேல்
[பெரிதுபடுத்த படத்தின்மீது சொடுக்கவும்]
கடைசியாக சண்டன் சூசியை தன் தோளில் ஏற்றியபடி ஆயிரம் கைகளையும் மண்ணில் ஓங்கி ஓங்கி அறைந்தபடி வந்தான். அந்த அதிர்வில் மலையுச்சிப்பாறைகள் பிளிறலுடன் பிளந்து சரிந்தன. பூமி வெடித்து உள்ளிருந்து நீர்வடிவில் நெருப்பு வெளிவந்தது. மலைகளின் உச்சிகளெல்லாம் தீப்பற்றிக்கொண்டன. அவர்களைச் சுற்றி சிறுவண்டுகளை இதழ்களுக்குள் பொதிந்திருக்கும் செந்தாமரைபோல நெருப்பின் பெருந்தழல்கள் ஆடின. அந்த வெளிச்சம் வானில் நின்றிருந்த நிலவின்மீது பட்டு நிலவும் செந்நிறமாகியது. மண்ணில் நிலவொளி விழுந்த இடங்களிலெல்லாம் மனிதர்கள் வெம்மையை உணர்ந்தனர்.
சண்டனும் அவர்களுக்குக் கனிந்தான். மூன்று காற்றுகளும் அவர்கள் முன் மூன்று மிருகங்களாக வந்து நின்றன. பலன் கழுதை வடிவிலும் அதிபலன் ஒட்டகத்தின் வடிவிலும் சண்டன் குதிரை வடிவிலும் வந்தார்கள். மூன்று நெருப்புகளும் ஸாமி, பிலு, கரிர் என்னும் மூன்று மரங்களாக வந்து காட்சியளித்தன. அவர்களிடம் ‘என்ன வரம் வேண்டும்?’ என்று அத்தெய்வங்கள் கேட்டன. ‘தந்தையரே நாங்கள் இங்கே வாழவேண்டும்’ என்று அவர்கள் கோரினர்.
‘இது எங்கள் விளையாட்டரங்கு. ஆனால் நீங்களும் இங்கே வாழ வழிசெய்கிறோம்’ என்று தெய்வங்கள் அருளின. அவர்களுக்கு தெய்வங்கள் இருண்டுகுளிர்ந்த குகைகளைக் காட்டின. அவற்றுக்குள் தெளிந்த நீர் சுனைகளாக ஓடிக்கொண்டிருந்தது. அவர்களுக்கு கழுதைகளும் ஒட்டகங்களும் குதிரைகளும் வசப்பட்டன. ஸாமியும் பிலுவும் கரிரும் அவர்களுக்கு நிழலையும் உணவையும் அளித்தன. அவர்கள் அங்கே வாழத்தொடங்கினர். அவர்கள் அமைத்த நகரம் கந்தபுரம் எனப்பட்டது. கந்தபுரத்தால் ஆளப்படும் நாட்டை மக்கள் காந்தாரம் என்றனர்.
பீஷ்மரும் பலபத்ரரும் நாடோடியான சூதர்கள் பாடிய கதையைக் கேட்டபடி அந்த பாலைப்பொழிலில் அமர்ந்திருந்தனர். சிபிநாட்டைக் கடந்து காந்தாரத்து விரிநிலத்தின் நுழைவாயிலிலேயே அவர்கள் பீதர்களின் வணிகர்குழுவுடன் சேர்ந்து கொண்டனர். தன்னந்தனியாக சென்றுகொண்டிருந்த அவர்களை பீத வணிகர்கள் கொடிகளை அசைத்துக்காட்டி நிறுத்தினர். நெடுந்தொலைவில் செம்புழுதி கிளம்ப பாலைநிலக்காற்று போல அவர்கள் வருவதைக் கண்டபோது பீஷ்மர் முதலில் அது ஒரு படை என்றுதான் நினைத்தார். கொடிகளைக் கண்டதும்தான் வணிகர்குழு என்று தெளிந்தார்.
பீதர்களுடன் பயணம் செய்த சூதர்கள் அவர்கள் பேசியதை மொழிமீட்சி செய்து சொன்னார்கள். பாலையில் தனியாகச் செல்வது சாவையும் உடனழைத்துச்செல்வது என்றான் பீதவணிகர்களின் தலைவன். நூறு ஒட்டகங்களும் நூறு குதிரைகளும் ஆயிரம் படைவீரர்களும் கொண்ட அவர்களின் குழுவில் உணவும் நீரும் படைக்கலன்களும் திசைகாட்டிக்கருவியும் இருந்தன. மூன்று நிமித்திகர்களுடன் இசைக்கருவிகள் ஏந்திய எட்டு சூதர்களும் இருந்தனர். தங்களுடன் சேர்ந்துகொள்ளும்படி பீதர்தலைவன் சொன்னான்.
பிருஷதர் என்னும் முதுசூதர் சூதர்களை தலைமை வகித்து கொண்டுசென்றார். அவர்கள் ஒருமுறை காந்தாரம் வழியாக மேற்கே பயணம்செய்து மீள்வதற்கு ஏழுவருடங்களாகும் என்றார் பிருஷதர். அதன் பின் ஏழுவருடங்கள் எங்கும் செல்லாமல் சொந்த ஊரிலேயே வாழுமளவுக்கு செல்வம் ஈட்டமுடியும். பீதவணிகர்களும் சோனக வணிகர்களும் சூதர்களுக்கு செல்வத்தை அள்ளி வழங்குவார்கள் என்றார். “மொழி மாற்றம் செய்வதற்கு அவ்வளவு செல்வமா?” என்றார் பீஷ்மர். “நாங்கள் மரக்கலங்களை காற்று கொண்டு செல்வதுபோல இந்த வணிகர்குழுவை பாலையில் கொண்டுசெல்கிறோம். நீங்களே அறிவீர்கள்” என்றார் பிருஷதர்.
அது எவ்வளவு உண்மை என்று பீஷ்மர் தெரிந்துகொண்டார். ஒவ்வொரு நிலத்தைப்பற்றியும் சூதர்கள் அறிந்திருந்தனர். அங்குள்ள சோலைகள் மலைகள் கணவாய்கள் மரங்கள் அனைத்தும் அவர்களின் சொற்களினூடாக எழுந்து வந்தன. பயணம் உருவாக்கிய அனைத்துச் சோர்வையும் இரவில் அவர்கள் பாடியபாடல்கள் களைந்து ஆன்மாவை குளித்தெழச்செய்தன. ஒருநாளுக்கு பத்து யோஜனை வீதம் இருபது நாட்கள் பயணம் செய்யவேண்டியிருந்தது. அதற்குள் சூதர்பாடல்கள் இல்லாமல் இரவு துயிலமுடியாது என்ற நிலை பீஷ்மருக்கு வந்தது.
பாலைநிலம் ஆன்மாவின் ஈரத்தையெல்லாம் உறிஞ்சி வானுக்கனுப்பிவிடுகிறது என்று அவருக்குத் தோன்றியது. மொழியிலும் கனவுகளிலும்கூட பசுமை இல்லாமலாகிவிடுகிறது. கண்களை மூடினாலும் வெறுமை. கற்பனையில்கூட முன்பு கண்டு வாழ்ந்திருந்த பசும்நிலங்களை மீட்கமுடியவில்லை. அந்நிலமெங்கும் ஏக்கமே நிறைந்திருந்தது. நீருக்கான ஏக்கம். பசுமைக்கான ஏக்கம். ஏக்கம் மட்டுமேயான ஏக்கம். அது நெஞ்சுக்குள் வறண்டகாற்றாக அலைந்து அனைத்தையும் உண்டது. பாலைவன மக்கள் ஏன் சாதாரணமான பேச்சுகளுக்குக் கூட நெகிழ்ந்து கண்ணீர்விடுகிறார்கள் என்று அவருக்குப் புரிந்தது. அத்தனை ஈரமானவர்கள் ஏன் அடுத்தகணமே சோதரன் கழுத்தை அறுக்க வாளெடுக்கிறார்கள் என்றும்.
அந்த வெறுமையை வாழ்வால் நிறைத்தவை சூதர்களின் பாடல்களே. அவை இரவின் தனிமையில் வானில் மந்திரவெளியில் இருந்து பசுமையையும் நீரலைகளையும் வண்ணங்களையும் கொண்டுவந்து ஆன்மாவில் நிறைத்தன. பாலைவனப்பயணம் முழுமையாக தொலைந்துவிட்டிருக்கிறோம் என்ற அச்சத்தை நெஞ்சின் ஆழத்தில் கரையாமல் நிறுத்திவைப்பது. சூதர்களின் பாடல்கள் சென்றுசேரவிருக்கும் பசுநிலத்தை கையெட்டும் அருகே கொண்டுவந்து நிறுத்தின. பாலைவனப்பயணம் மண்ணில் வேறு மனிதர்களே இல்லை என்ற பிரமையை ஆழநிலைநாட்டுவது. சூதர்களின் பாடல்கள் வழியே வாழ்ந்தவர்களும் வாழ்பவர்களுமான பல்லாயிரம்பேர் வந்து தோளோடு தோள்முட்டி அமர்ந்துகொண்டார்கள்.
சூதர்களின் பாட்டில் வந்த அனல் அமர்ந்து ஊரும் கொடுங்காற்றுகளை மூன்றுமுறை பீஷ்மர் கண்டார். நிமித்திகன் அவன் கையிலிருந்த கழியில் கட்டப்படிருந்த நீண்ட துணி பறக்க ஆரம்பித்ததுமே கையசைத்து அனைவரையும் நிறுத்தினான். கொடியை தரையில் நிறுத்தி அது பறப்பதை கூர்ந்து கவனித்தான். மாறிமாறி திசைகாட்டிய கொடி ஒரு கட்டத்தில் பாம்பின் நாவுபோல அதிர்ந்து ஒரே திசைநோக்கி பறக்கத் தொடங்கியது. குனிந்து அவன் நிலத்தைப்பார்த்தான். மண்ணில் மணல்பருக்கைகள் எறும்புகள் முட்டிமோதிச்செல்வதுபோல ஓடிக்கொண்டிருந்தன.
அவர்கள் உடனடியாகத் திரும்பி பக்கத்திலிருந்த மலையை அடைந்து அதைச் சுற்றிக்கொண்டு சென்று அங்கிருந்த பெரிய மலைமடிப்புகளிலும் குகைகளிலும் பதுங்கிக் கொண்டார்கள். பெருமழை வரப்போவதுபோல வானம் மங்கலடைந்து மண் கருமைகொண்டது. கழியிலிருந்து கொடி அறுபட்டு பறந்தது. உடைகள் சிறகுகளாக எழுந்து தூக்கிக்கொண்டு செல்ல விரும்புபவை போல படபடத்தன. சூழ இருந்த அனைத்துப் பாறைகளும் உயிர்கொண்டவை போல ஓலமிடத்தொடங்கின. பீஷ்மர் அம்மலைகள் மேல் மழைபோல மணல் வந்து மோதுவதைக் கண்டார். கடலெழுந்து வரும் இரைச்சலுடன் புயல் அனைத்தையும் அறைந்தபடி சூழ்ந்துகொண்டது.
நெடுநேரம் இருக்கிறேன் என்னும் உணர்வன்றி ஏதுமற்றவராக இருந்தபின் பீஷ்மர் அந்தப்புயல் இறங்கும் ஒலியை உணர்ந்தார். மாபெரும் பட்டுத்துணி இழுபட்டுச் செல்வதுபோல மணற்புயல் அவர்களைத் தாண்டிச்செல்வதைக் காணமுடிந்தது. சற்று நேரம் கழித்து அவர்கள் பாறைமறைவிலிருந்து வந்தபோது ஏதும் நிகழாததுபோல இருந்தது பாலை. ஆனால் வானம் அந்திச்சிவப்புடன் இருக்க மழைமூட்டம்போல இருள் மட்டும் எஞ்சியிருந்தது. “புழுதி இறங்குவதற்கு ஒருநாளாகும். அதுவரை வெயில் இருக்காது” என்று பிருஷதர் சொன்னார்.
பீஷ்மர் இருபதாவது நாள் பீதர்களுடன் காந்தார நகரத்துக்குள் நுழைந்தார். தாரநாகமென்று அழைக்கப்பட்ட ஆற்றைக் கடந்து செல்லும் பாதைக்கு அப்பாலிருந்தது அந்நகரம். அதை ஆறு என்றே சொல்லமுடியவில்லை. பாலைவெளி மெல்லச்சரிந்து மென்மணற்பரப்பாக ஆகி நெடுந்தூரம் சென்றபின்புதான் நீரொழுக்கு வந்தது. கங்கையின் மிகச்சிறிய ஓடை அளவுக்கே நீர் சென்றது. ஆனால் முற்றிலும் ஓசையே இல்லாமல் ஆழ்ந்த நீலநிறத்தில் கிடந்தது அது. துயிலும்ஆறு என்று தோன்றியது.
பிருஷதர் அதன் பெயர் தாரநாகம் என்றார். நாகத்தின் அமைதி கொண்டது அது. இரவில் விண்மீன்களை பிரதிபலிப்பது. அதன் நீர் வெம்மைகொண்டிருந்தது. அந்நீரை அப்படியே அள்ளிக்குடிக்கவோ உடலில் விட்டுக்கொள்ளவோகூடாது என்றனர் வணிகர். அதை மண்கலங்களில் அள்ளி நதிக்கரைச் சோலைகளில் சிறிதுநேரம் வைத்திருந்தால் குளிர்ந்து அருள் புரியத்தொடங்கிவிடும்.
நீலமாக நீர் பெருகிச்சென்றாலும் எந்த மிருகமும் அதில் வாய்வைத்து அருந்தவில்லை. “இரவில் பாலைநிலம் குளிர்ந்து விரைத்துவிடும். அப்போது மெல்லிய வெம்மைகொண்ட நதிநீர் அமுதுபோலிருக்கும். பாலையின் உயிர்களனைத்தும் நீரை அள்ளிக்குடிக்கும். நீரில் இறங்கித் திளைக்கும்” என்றார் பிருஷதர். “ஆகவே இந்நதிக்கு உஷ்ணவாகினி என்றும் கவிஞர்கள் பெயரிட்டிருக்கிறார்கள்.”
ஆற்றைக் கடந்து மேலேறியதுமே தெரிந்த காந்தாரநகரத்தின் கோட்டை புதியது என்பதை பீஷ்மர் தொலைவிலிருந்தே கண்டார். அதன் பலபகுதிகள் கட்டி முடிக்கப்படவேயில்லை. அங்கே புழுதி எழ நூற்றுக்கணக்கானவர்கள் வினையாற்றிக்கொண்டிருப்பதைக் காணமுடிந்தது. சாரங்கள் தொலைவிலிருந்து பார்க்கையில் சிலந்தி வலைபோலத் தெரிந்தன. அவற்றில் வடங்களால் கட்டப்பட்டு நூற்றுக்கணக்கான குதிரைகளால் இழுக்கப்பட்டு தூக்கி ஏற்றப்பட்ட பாறைகள் சிலந்திகள் போல எழுந்துசெல்வது தெரிந்தது.
மிகுந்த கனவுடன் கட்டப்பட்டுக்கொண்டிருக்கும் ஒரு நகரம் என்று அதைப் பார்த்ததுமே தெரிந்துகொண்டார். பழையநகரம் மிகச்சிறியது. மூன்று சிறிய குன்றுகளுக்கு நடுவே இருந்த பள்ளத்தாக்கு அது. அங்கே இருந்த இயற்கையான நீர்நிலையால் அங்கே குடியிருப்பு உருவாகியிருக்கலாம். அதைச்சுற்றி வளர்ந்த பழையநகரையும் அதைச்சுற்றியிருந்த குன்றுகளையும் உள்ளடக்கி கோட்டை கட்டப்பட்டிருந்தது. குன்றுகளின் செங்குத்தான சரிவுகளை மதில்சுவருடன் இணைத்துக்கொள்ள முயன்றிருந்தனர் சிற்பிகள். குன்றுகளின் உச்சியில் காவல் மாடங்கள் அமைத்திருந்தனர்.
“துர்வசு வம்சத்தவரன வர்க்கன், கோபானு, திரைசானி, கரந்தமன், மருத்தன், துஷ்யந்தன், வரூதன், காண்டீரன், காந்தாரன் என்னும் மன்னர்களால் ஆளப்பட்ட நகரம் இது. இன்று இதை மாமன்னர் சுபலர் ஆள்கிறார். அவருக்கு மூன்று மைந்தர்கள். அசலர், சகுனி, விருஷகர். பட்டத்து இளவரசர் அசலர்தான் என்றாலும் மூவரிலும் வீரரும் அறிஞருமான சகுனியே இந்நகரை உருவாக்கி வருகிறார். இன்று காந்தாரத்தை ஆள்வது இளவரசர் சகுனிதான்” என்றார் பிருஷதர்.
“அவனுடைய பேராசை இந்தக்கோட்டையைப் பார்த்தாலே தெரிகிறது” என்று தாடியைத் தடவியபடி பீஷ்மர் சொன்னார். “நகரின் தேவை என்ன, அதன் வாய்ப்புகள் என்ன எதைப்பற்றியும் அவன் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. பாரதவர்ஷத்தின் பெரியகோட்டை ஒன்றை கட்டிவிடவேண்டுமென ஆசைப்படுகிறான்.” பிருஷதர் “ஆம், இளவரசர் சகுனி ஆசைமிகுந்தவர் என்கிறார்கள்” என்றார்.
“இந்தப்பெரும்பாலையே மாபெரும் கோட்டை. இதன் நடுவே இவ்வளவு பெரிய கோட்டைக்கான தேவையே இல்லை. எதிரிகள் வருவதை எத்திசையிலும் நூறு யோஜனைக்கு அப்பாலேயே அறிந்துவிடமுடியும். அவர்களை பாலையிலேயே சென்று தாக்கமுடியும். அவர்கள் பாலைப்பயணத்தில் களைத்திருக்கையில் அனைத்து ஆயுதங்களுடனும் வளங்களுடனும் சென்று தாக்கி வெல்லமுடியும்… இது பாதுகாப்புக்கான கோட்டையே அல்ல. சகுனியின் அகந்தைதான் கல்லாக மாறி கோட்டையாக எழுந்து நிற்கிறது” பீஷ்மர் சொன்னார். “இந்தப்பாலையில் இக்கோட்டையைக் கட்டுவது கடினம். கட்டியபின் நிலைநிறுத்துவது அதைவிடக்கடினம்.”
“உண்மை” என்றார் பிருஷதர். “மன்னர் சுபலனுக்குக்கூட இந்தப் பெரும்கோட்டையைக் கட்டுவதில் உடன்பாடில்லை என்றார்கள். இதைக்கட்டுவதற்காக சகுனி பெரும் செல்வத்தை வீணடித்துவிட்டார் என்று அவர் சினம் கொண்டிருப்பதாக ஊரில் பேசிக்கொள்கிறார்கள். கோட்டைக்குள்ளேயே பெரும்பகுதி பாலையாகவே உள்ளது. அங்கெல்லாம் மக்கள் வாழவேண்டுமென்றால் நீர் தேவை. இப்போது கோட்டைக்கட்டுமானத்துக்காக வந்திருக்கும் அடிமைகளுக்குக் கூட தாரநாகத்தின் நீர் போதவில்லை.”
“சகுனி என்ன சொல்கிறான்?” என்றார் பீஷ்மர். “அப்பால் பள்ளத்தில் ஓடும் ஆரியகௌசிகா ஆற்றை இப்பகுதிக்கு திருப்பப்போவதாகச் சொல்கிறார்.” பீஷ்மர் சிரித்து “அதற்கு பதில் காந்தாரபுரியை அப்பகுதிக்கு கொண்டுசெல்லலாமே!” என்றார்.
பிருஷதர் “காந்தாரத்தின் பெரிய நகரம் வடக்கே குஃபாவதிக்கரையில் இருக்கும் புருஷபுரமும் அப்பாலிருக்கும் தக்‌ஷசிலையும்தான். அவை உத்தரபதத்தின் அருகே உள்ளன. அங்கிருந்துதான் காந்தாரத்தின் செல்வம் வருகிறது. ஆனால் இது புராணகாலத்து மன்னராகிய துர்வசு அமைத்த தொல்நகரம். இதைக்கொண்டுதான் இம்மன்னர்கள் காந்தாரர்கள் என அழைக்கப்படுகிறார்கள். ஆகவே இதுதான் தலைநகரம் என்பதில் சகுனி உறுதியுடன் இருக்கிறார்” என்றார்.
“எதிரிகள் இல்லையென்றாலும் உருவாக்கிக்கொள்ளும் ஆவல் கொண்டவர் சகுனி” என்று பிருஷதர் சிரித்தார். பீஷ்மரும் சேர்ந்து சிரித்தார்.

3/21/14

பகுதி மூன்று : புயலின் தொட்டில்[ 1 ]

பகுதி மூன்று : புயலின் தொட்டில்[ 1 ]
பீஷ்மர் பலபத்ரரை மட்டும் துணைக்கழைத்துக்கொண்டு தனியாகத்தான் காந்தாரத்துக்குச் சென்றார். அரசமுறையாக செல்வதாக இருந்தால் கூர்ஜரம், சௌவீர நாடுகளிடம் அரசஉத்தரவு வாங்கவேண்டும். அதற்குள் செய்தி பாரதவர்ஷம் முழுக்கப் பரவிவிடும். பீஷ்மருக்கு தூதின் வெற்றியைப்பற்றிய ஐயம் இருந்தது. காந்தாரத்திலும் பிற வடக்கு நாடுகளிலும் உடலூனமுற்றவர்கள் அரசனாக நெறிமுறைகள் ஒப்புக்கொள்வதில்லை. அஸ்தினபுரியில் திருதராஷ்டிரனை அரசனாக்க அது தடையில்லை என்று நிறுவுவதற்கான நூல்களையும் அவற்றின் வரிகளையும் விதுரனிடமிருந்து தெரிந்துகொண்டு சுவடிகளில் பிரதியும் எடுத்துக்கொண்டிருந்தார். ஆனாலும் அவராலேயே அதை முழுமையாக நம்பமுடியவில்லை.
பயணம் முழுக்க பீஷ்மர் ஒருசொல்கூட பேசாமல் மாறிவந்த நிலத்தையே பார்த்துக்கொண்டிருந்தார். சப்தசிந்துவின் நீர்பெருகிச்சுழித்த ஆறுகளையும் அவற்றைச்சூழ்ந்து கிடந்த அறுவடை முடிந்த சேற்று வயல்களையும் எருமைகள் நிழல்களாகச் சூழ்ந்த சிற்றூர்களையும் அவர்கள் தாண்டிச்சென்றனர். மூலத்தானநகரியிலிருந்து சிபிநாட்டுப்பாதையில் சென்று மேலும் தென்மேற்காகத் திரும்பினர். மண்ணின் நீர்வளம் முழுமையாகவே மறைந்தது.
கிராமங்கள் ஆங்காங்கே தெரிய பிற இடங்களில் புல்பரவிய செந்நிறமான வீண்நிலம் விரிந்திருந்தது. கழுதைகளும் வண்டிகளும் செல்லும் வணிகப்பாதையில் ஒரு யோஜனை தூரத்துக்கு ஒருமுறை குடிநீர்த் தொட்டிகளும் குதிரைகள் நீரரருந்தும் சிறிய குளங்களும் அமைக்கப்பட்டிருந்தன. அவற்றை நடத்தும் குடும்பமும் அருகே வாழ்ந்தது. அவ்வழிச்செல்பவர்கள் அனைவரும் அவர்கள் வைத்திருந்த குடத்தில் ஒரு செம்புநாணயத்தைப் போட்டுவிட்டுச் செல்லவேண்டுமென விதியிருந்தது.
பீஷ்மரும் பலபத்ரரும் அங்கே புல்லரிசிக்கூழ் அருந்திக்கொண்டிருந்தபோது மெலிந்து வளைந்த ஒருவன் அவர்களை நோக்கி வந்து “வணங்குகிறேன் வீரரே. நான் இப்பகுதியில் புகழ்பெற்ற வித்யுதத்தன் என்னும் பிராமணன். என்னை அனைவரும் இப்பகுதியின் வழிகளையும் ஊர்களையும் உள்ளங்கைபோல அறிந்தவன் என்று சொல்கிறார்கள்” என்றான்.
பீஷ்மர் சிரித்து “உங்கள் உள்ளங்கையில் இரு பெரும் ரேகைகளும் சேர்கிறதா இல்லையா என்று சொல்லுங்கள் பிராமணரே” என்றார். வித்யுதத்தன் திகைத்து “சேர்கிறது” என்றபின் தன் கையைப்பார்த்து “சேரவில்லை” என்றான். பீஷ்மர் புன்னகையுடன் “இதைப்போலத்தான் வழிகளையும் அறிந்திருக்கிறீர், இல்லையா?” என்றார்.
வித்யுதத்தன் வணங்கி “வீரரே, நீங்கள் நூலறிந்த ஷத்ரியர் என நினைக்கிறேன். எனக்கு நூலறிவு இல்லை. என்னை பிராமணன் என்று என் அன்னை ஓரளவுக்கு உறுதியாகச் சொன்னதனால் நான் அதை நம்புகிறேன். ஆனால் எனக்கு நெருப்புரிமையும் சொல்லுரிமையும் இல்லை. இங்கு வருபவர்களை நலம் வாழ்த்தி வாழ்கிறேன். இது கோடைகாலத்தின் முடிவு. இனிமேல் வணிகர்கள் வரமாட்டார்கள். தாங்கள் எனக்கு அளிக்கும் நாணயங்களைக்கொண்டு நானும் என் குடும்பமும் அடுத்த சிலமாதங்களைக் கழிப்போம்” என்றான்.
“சரி வாரும்” என்றபடி பீஷ்மர் எழுந்து தன் குதிரையை அவிழ்த்தார். அது உடலைச் சிலிர்த்து பெருமூச்சுவிட்டபடி அவர்மேல் தன் நீளமுகத்தைத் தேய்த்தது. பீஷ்மர் தன் குதிரையில் ஏறிக்கொண்டார். “நாங்கள் செல்லவேண்டிய ஊர் காந்தாரநகரி” என்றார் பீஷ்மர். “ஆம், இம்மலைகளுக்கு அப்பால் காந்தாரநகரி மட்டுமே உள்ளது. அதற்கப்பால் நிஷாதர்கள் வாழும் பெருமணல்நிலம். அங்கே உயிர்களே இல்லை” என்று வித்யுதத்தன் சொன்னான்.
“இங்கிருந்து ஒரு இயற்கையான பாதை உள்ளது. கிருதயுகத்தில் மண்வெடித்து உருவானது அது. அதன் வழியாகச் சென்றால் இருபதுயோஜனைத் தொலைவை குறைத்துக்கொள்ளமுடியும். வணிகர்கள் அதன் வழியாகச் செல்லமுடியாது. நீங்கள் பொதிகள் இல்லாமல் இருக்கிறீர்கள். நீங்கள் செல்லலாம்” என்றான் வித்யுதத்தன். “நான் அவ்வழியைக் காட்டுகிறேன்.”
“அந்தக்குதிரைமேல் ஏறிக்கொள்” என்று பீஷ்மர் பலபத்ரரின் குதிரையைக் காட்டினார். வித்யுதத்தன் “நான் மிருகங்களை அஞ்சுபவன். அவற்றுக்கு பிராமணர்களும் பிறரும் ஒன்றுதான். அறிவற்றவை” என்றபடி ஏறிக்கொண்டான். அதிக எடை ஏறியதை விரும்பாத குதிரை பர்ர் என்று ஒலியெழுப்பி குஞ்சிமயிரை குலைத்துக் கொண்டது. “செல்வோம்” என்றான் வித்யுதத்தன் .
“இந்த வீண்நிலத்தைத் தாண்டினால் வறண்ட மலைநிலம் வரும். அதற்கப்பால் பாழி. அதன் வழியாக நேராகச் செல்லவேண்டியதுதான்.” பீஷ்மர் “நீரும் வந்து வழிகாட்டமுடியுமா?” என்றார். வித்யுதத்தன் பதறி “நானா? நான் எப்படி? எனக்கு இங்கே குடும்பம் இருக்கிறது. அத்துடன் மலைநிலம் முழுக்க லாஷ்கரர் வாழ்கிறார்கள். அவர்கள் நூறுதலைமுறைக்காலமாக ஆறலைக்கள்வர்களாக வாழ்பவர்கள். ஏனென்றால் மலையில் எலி வேட்டைதவிர வேறு தொழிலே இல்லை. முதலில் மனிதர்களைக் கொல்வார்கள். அதன்பின்னர்தான் அவர்களிடம் கொள்ளையடிக்கமுடியுமா முடியாதா என்று சிந்திக்க ஆரம்பிப்பார்கள்.”
பீஷ்மர் புன்னகை செய்து “என்னை நீர் நம்பலாம்” என்றார். “நம்புகிறேன். ஆனால் அதைவிட நான் என்னையும் என் அறிவையும் நம்புவதல்லவா மேல்? உங்களை எனக்கு சற்றுமுன்னர்தான் தெரியும். என்னை நான் பிறந்தது முதலே தெரியும்” என்றான் வித்யுதத்தன். பீஷ்மர் சிரித்தார்.
கூழாங்கற்கள் நிறைந்த சாலையில் குதிரைக்குளம்புகள் அம்புகளைத் தீட்டுவதுபோல ஒலித்தன. அந்நிலத்தில் நிறைந்திருந்த அமைதியில் தொலைதூரத்தில் அவ்வோசை மறுபிறப்பு கொண்டு திரும்பி வந்தது.
தொடுவான் வரை விரிந்து காய்ந்த புல் மண்டிக்கிடந்த வீண்நிலத்திற்கு அப்பால் சுட்டசெங்கற்களாலான ஒரு கைவிடப்பட்ட ஊர் தெரிந்தது. பீஷ்மர் குதிரையை நிறுத்தி “அது என்ன? பெரிய ஊர் போலிருக்கிறதே. கைவிடப்பட்டிருக்கிறது… யாருடைய ஊர் அது?” என்றார்.
“அது இறந்தவர்களின் நகரம்” என்றான் வித்யுதத்தன். “மிருதஜனநகரம் என்று சொல்வார்கள். அங்கே சுயபுத்தி உடைய எவரும் செல்வதில்லை.”
VENMURASU_EPI_61_
ஓவியம்: ஷண்முகவேல்
[பெரிதுபடுத்த படத்தின்மீது சொடுக்கவும்]
பீஷ்மர் குதிரையைத் திருப்பி “அதைப்பார்த்துவிட்டுச் செல்வோமே” என்றார். வித்யுதத்தன் அச்சத்துடன் “அதையா? நான் சொல்வதைக் கேளுங்கள். அங்கு எவரும் செல்வதில்லை. அங்கே இறந்தவர்கள் வாழ்கிறார்கள்” என்றான். குதிரையின் கடிவாளத்தைப்பற்ற முயன்றபடி “அங்கே செல்வது தற்கொலைபோல… சொல்வதைக்கேளுங்கள்!”என்றான்.
“இறந்தவர்களுடன் உரையாடுவது நல்லது அல்லவா?” என்று பீஷ்மர் குதிரையைத் தட்டியபடிச் சொன்னார். பின்னால் பலபத்ரரின் குதிரையும் பெருநடையில் வந்தது. “அப்படியென்றால் என்னை இறக்கிவிட்டுவிடுங்கள். நான் இங்கேயே நின்று கொள்கிறேன். என்குழந்தைகளுக்கு வேறு தந்தை இல்லை… பிராமணப்பெண்கள் மறுமணம் புரிய ஊரார் அனுமதிக்கமாட்டார்கள்” என்று வித்யுதத்தன் கூவியபடியே வந்தான். பீஷ்மர் “அஞ்சவேண்டாம் பிராமணரே உங்களுக்கு உரிய உதகக்கிரியைகளைச் செய்யாமல் நாங்கள் செல்லப்போவதில்லை” என்றார்.
அந்த இடத்தில் இருந்து சில ஆண்டுகளுக்கு முன்னர்தான் மக்கள் கிளம்பிச்சென்றிருக்கவேண்டுமென்று தோன்றியது. ஐந்து நிவர்த்தன நீளமும் அதேயளவு அகலமும் கொண்ட நகரம் அது. முதலில் பெரிய கோட்டை ஒன்று நகரைச் சூழ்ந்திருந்தது. அது சுட்டசெங்கற்களால் கட்டப்பட்டு மேலே மண்ணாலான கட்டுமானம் கொண்டதாக இருந்திருக்கலாம். மண்கோட்டை கரைந்தபின் செங்கல் அடித்தளம் மட்டும் எஞ்சியிருந்தது. ஐந்தடி அகலம் கொண்ட அடித்தளம் அந்தக்கோட்டை எப்படியும் பதினைந்தடி உயரம் கொண்டிருக்கும் என்ற எண்ணத்தை உருவாக்கியது.
கோட்டைக்குள் அரண்மனைக்கோட்டை தனியாக இருந்தது. அரண்மனையின் அடித்தளம் பன்னிரண்டடி உயரத்தில் மண்கொட்டி மேடாக்கிய இடத்தில் அமைந்திருந்தது. அங்கிருந்த நகரத்தின் வீடுகள் முழுக்க சுட்ட செங்கற்களால் அடித்தளமும் முதற்தளமும் அமைக்கப்பட்டு மேலே மரத்தாலான எடுப்புகள் கொண்டவையாக இருந்திருக்கலாமென்று தோன்றியது. அவை முழுக்க எரிந்தழிந்து மழையில் கரைந்து மறைந்திருக்க சுட்ட அடித்தளங்களும் பாதி இடிந்த அடிச்சுவர்களும் மட்டும் எஞ்சியிருந்தன. அவை செந்நிறச் சதுரங்களாக மாபெரும் வேள்வி ஒன்று நடந்தபின் கைவிடப்பட்ட எரிகுளங்கள் போலிருந்தன.
பீஷ்மர் குனிந்து அச்செங்கற்களை தொட்டுப்பார்த்தார். மிகஉறுதியான கற்கள் அவை என்று தெரிந்தது. தரைமுழுக்க உடைந்த மண்பானைகளின் ஓடுகள் கால்களில் நொறுங்கின. கச்சிதமாக நூல்வைத்துக் கட்டப்பட்ட கட்டடங்கள் நேரான தெருக்களின் இருமருங்கிலும் இருந்தன. அரண்மனைக் கோட்டைக்குள் இருந்த கட்டடங்களின் அடித்தளங்கள் நான்கடி அகலம் கொண்டிருந்தன. அப்படியென்றால் அவை மூன்றடுக்காவது கொண்டிருக்கவேண்டும். செங்கல்லால் ஆன படிகள் இடிந்து கிடந்தன.
“இங்கு போர் அல்லது பெருவெள்ளம் வந்திருக்கிறது என்று நினைக்கிறேன்” என்றார் பீஷ்மர். “இந்நகரத்தை ஆண்டவர்கள் எங்கு சென்றார்கள்?” வித்யுதத்தன் “தெரியவில்லை வீரரே” என்றான். “உள்ளங்கைபோல அனைத்தையும் அறிந்தவர் நீர். நூறாண்டுகால வரலாறு தெரியாது என்கிறீர்?” என்று பீஷ்மர் புன்னகை செய்தார்.
“நூறாண்டுகாலமா? வீரரே, இந்த இடம் திரேதாயுகத்துக்கும் முன்னரே இப்படியே இருக்கிறது. இங்கே சில பழங்குடிப் பாடகர்கள் இருக்கிறார்கள். அவர்கள் ஆயிரம் வருடகாலம் பழைய பாடல்களையும் குலவரலாற்றையும் நினைவில் வைத்திருக்கிறார்கள். அவர்களின் ஆயிரம் வருடம் பழைமையான பாடல்களிலேயே இந்த இடம் ஆயிரம் வருடங்களுக்கு முன்னரே கைவிடப்பட்டு கிடக்கும் இறந்தவர்களின் நகரம் என்று சொல்லப்பட்டிருக்கிறது.”
பீஷ்மர் வியப்புடன் வித்யுதத்தனைப் பார்த்தார். அவன் பொய்சொல்கிறான் என்று தோன்றவில்லை. அச்சமும் பதற்றமுமாக அவன் உடல் நடுங்கிக்கொண்டிருந்தது. பதறும் குரலில் ‘இங்கே பொன்னும் வெள்ளியும் கிடைப்பதாக சிலர் சொன்னார்கள். ஆனால் இங்கே வந்து அவற்றைத் தோண்டிப்பார்த்தவர்கள் அனைவருமே பித்தர்களாக ஆகிவிட்டனர். அவர்கள் எதைக்கண்டு அஞ்சினார்கள் என்று தெரியவில்லை. ஆனால் சித்தம் கலங்கி பேச்சிழந்து அலைந்தார்கள். ஊரில் முதியவர் ஒருவர் இப்போதும் பித்தனாக இருக்கிறார்.”
மெதுவாக அந்த இடத்தின் தொன்மையை பீஷ்மர் உணரத்தொடங்கினார். அங்கே ஒவ்வொன்றும் முற்றிலும் வேறுபட்டிருந்தன. சதுரமான மையச்சதுக்கத்தில் கற்தூண் ஒன்று நீளமான நிழலுடன் நின்றிருந்தது. வீடுகளில் எல்லாம் களஞ்சியங்களும் நீர்நிறைத்துவைக்கும் தொட்டிகளும் இருந்தன. அனைத்துக் கட்டடங்களுடனும் ஒட்டியதுபோல சிறியகிணறுகள். அன்று ஆறு மேலும் அருகே ஓடியிருக்கலாம். நீர்வழிந்தோடுவதற்கான ஓடைகள் செங்கல்லால் அமைக்கப்பட்டு நகர்முழுக்க வளைந்துசென்றன. பின்காலைநேரத்து வெயில் இடிபாடுகள் மேல் பரவி நிழல்களைச் சரித்திருக்க யுகயுகமாக எதையோ சொல்லமுயல்வது போலிருந்தது அந்த இடம்.
பீஷ்மர் சுற்றி நடந்துசென்றார். காய்ந்த முட்செடிகளிலிருந்து விதைகள் அவரது காலில் ஒட்டிக்கொண்டன. அவர் நடந்த ஒலி அப்பகுதியில் நிறைந்திருந்த அமைதியில் ஒலித்தது. நீள்சதுர வடிவமான பெரிய குளம் ஒன்றைக் கண்டு நின்றார். அதற்கு நீர்வருவதற்கான பாதை அப்பால் தெரிந்தது. அப்போதும் அதில் முக்கால்பங்கு நீர் நிறைந்திருந்தது. இரவில் அங்கே ஓநாய்கள் வந்து நீர் அருந்துகின்றன என்பதை நீர்விளிம்பின் காலடித்தடங்கள் காட்டின.
வெளிக்கோட்டைக்கு அப்பால் விரிந்து கிடந்த காய்ந்தபுல் பரவிய நிலத்தில் காற்று அலையலையாக ஓடிக்கொண்டிருந்தது. அங்கே ஒற்றையடிப்பாதை ஒன்று செல்வதை பீஷ்மர் கண்டார். “இங்கே யார் வருகிறார்கள்?” என்றார். “புதைகுழிகளைத் தோண்டித் திருடுபவர்கள்… ஆனால் அவர்கள் அதிகநாள் வாழ்வதில்லை. இங்கே இறந்தவர்கள் வாழ்கிறார்கள். அவர்கள் திருடவந்தவர்களை விடுவதில்லை” என்று வித்யுதத்தன் சொன்னான்.
பீஷ்மர் அந்தப்பாதை வழியாகச் சென்றார். “வீரரே, அப்பகுதி இந்நகரின் இடுகாடு… நான் இங்கேயே நின்றுகொள்கிறேன்” என்றான் வித்யுதத்தன். “இடுகாட்டுக்குச் சென்றால் பிராமணன் குளித்தாகவேண்டும் அல்லவா!” ஆனால் பலபத்ரரும் பீஷ்மர் பின்னால் சென்றபோது “நான் எப்படி இங்கே தனியாக நிற்பது?” என்றபடி அவனும் பின்னால் வந்தான். “எதையும் தொடாதீர் வீரரே…” என்று கூவினான்.
அந்தப் புல்நிலத்தில் ஆங்காங்கே குழிகள் வெட்டப்பட்டு மண் வெளியேறிக்கிடந்தது. பீஷ்மர் ஒருகுழிக்குள் சென்று குனிந்து நோக்கினார். பெரிய தாழி ஒன்று உள்ளே தெரிந்தது. விளிம்புவட்டம் குயவனின் சக்கரம் இல்லாமல் கையால் செய்யப்பட்டதுபோல் ஒழுங்கற்று இருந்த கனமான தாழி. அது திறந்திருந்தது. “திருடர்கள்” என்று வித்யுதத்தன் சொன்னான். பீஷ்மர் உள்ளே பார்த்தபோது ஒரு மண்டைஓடும் சில எலும்புகளும் அடியில் கிடப்பதைக் கண்டார்.
பீஷ்மர் குனிந்தபோது வித்யுதத்தன் “வீரரே வேண்டாம்” என்றான். பீஷ்மர் உள்ளே கையைவிட்டு அந்த எலும்புகளில் ஒன்றை எடுத்துப்பார்த்தார். மிகத்தொன்மையான எலும்பு அது. உயிர்த்தன்மையை இழந்து எடையற்ற சுண்ணாம்பு மட்டுமாக ஆகியிருந்தது. அழுத்தியபோது எளிதாக உடைந்தது. உள்ளே கைவிட்டு அங்கிருந்த சிறிய பொருட்களை வெளியே எடுத்துப்பார்த்தார். களிமண்ணாலான சிறிய சிலைகள். முழங்காலைக் கட்டிக்கொண்டு அமர்ந்திருக்கும் தலையுறை அணிந்த மனிதர்கள். நின்றுகொண்டிருக்கும் இரு மாடுகள். ஒரு சிறிய நாய்.
“பொன்னும் வெள்ளியும் இருந்திருக்கும். அவற்றை திருடிச்சென்றிருப்பார்கள்” என்றான் வித்யுதத்தன். “ஆனால் அவர்கள் வாழப்போவதில்லை. இங்கே புதைக்கப்பட்டிருக்கும் மூதாதையின் ஆத்மாவும் அவர்களுடன் சென்றிருக்கும்.” பீஷ்மர் அவற்றை மீண்டும் உள்ளே போட்டுவிட்டு “இந்த நகரைப்பற்றி ஏதேனும் தெரிந்த எவரையாவது சந்திக்கமுடியுமா?” என்றார். “வீரரே நான் உறுதியாகச் சொல்கிறேன், இங்கே இந்த ஊரைப்பற்றியோ இதேபோன்று இப்பகுதியில் இருக்கும் பதினெட்டு நகரங்களைப்பற்றியோ ஒரு வரியேனும் அறிந்த எவரும் இங்கில்லை” என்றான் வித்யுதத்தன்.
“எப்படி ஒரு வரலாறு முழுமையாகவே அழியமுடியும்?” என்றார் பீஷ்மர். “வீரரே இங்கே வாழும் மக்களெல்லாம் ஆயிரம் வருடங்களுக்குள் கொஞ்சம் கொஞ்சமாக இங்கே வந்து குடியேறியவர்கள். நாங்கள் வரும்போதே இங்கே வாழ்ந்தவர்கள் இந்த இடங்களை விட்டுவிட்டுச் சென்றிருந்தார்கள்” என்றான் வித்யுதத்தன். “நீங்கள் இப்பகுதியிலேயே தங்கி வருடக்கணக்காக ஆராய்ந்தால்கூட இதைவிட அதிகமாக ஏதும் தெரிந்துகொள்ளமுடியாது.”
மீண்டும் குதிரையில் ஏறிக்கொண்டு கிளம்பியபோது வித்யுதத்தன் மூன்றுமுறை கைகளைத் தட்டினான். “என்ன செய்கிறீர்?” என்றார் பீஷ்மர். “இங்குவந்தால் இப்படிச் செய்யவேண்டும். நம் கைகளை மும்முறை தட்டி நாம் எதையும் கொண்டுசெல்லவில்லை என்று இங்கே தாழிகளில் துயிலும் மூதாதையருக்குச் செய்தி சொல்லவேண்டும்.” பீஷ்மர் புன்னகையுடன் தாடியை தடவிக்கொண்டார்.
மதியம் தாண்டியபின்புதான் அவரால் சிந்தனையில் இருந்து வெளிவர முடிந்தது. “இதுதான் சப்தசிந்துவிலும் கங்கையிலும் வாழும் அனைவருடைய மூதாதையரும் வாழ்ந்த இடம் என நினைக்கிறேன்” என்றார். “சூதர்களின் கதைகளில் கிருதயுகத்துக்கு முன்பு சத்யயுகத்தில் மூதாதையர் இறப்பதேயில்லை என்றும் அவர்கள் முதுமையால் குருதியிழந்து உலர்ந்துச் சுருங்கியதும் பெரியதாழிகளில் வைத்து மண்ணுக்குள் இறக்கிவிடுவார்கள் என்றும் சொல்லப்படுகிறது.”
பலபத்ரர் “ஆம், என் பாட்டியும் அவ்வாறு கதைகள் சொல்லியிருக்கிறாள். மூத்துச் சுருங்கிய மூதாதையர் உணவுண்ணுவதையும் நிறுத்திவிடுவார்கள். தவழும் குழந்தைகள் போல ஆகி பாவைகளுடன் விளையாடிக் கொண்டிருப்பார்கள். அந்தப்பாவைகளுடன் அவர்களை மண்ணுக்குள் வைப்பார்கள்” என்றார்.
பீஷ்மர் “அவ்வழக்கம் இன்றும் தட்சிணபாரதத்தில் இருக்கிறது. திருவிடத்திலும் அப்பால் தமிழ்நிலத்திலும் இன்றுகூட சீருடன் மறைந்த மூதாதையரை தாழிகளில்தான் வைக்கிறார்கள் என்று பயணிகள் சொல்கிறார்கள். இங்கும் அங்கும் மட்டுமே தாழிகள் கிடைக்கின்றன” என்றார்.
பலபத்ரர் “நாம் கற்கும் ஒவ்வொரு தொல்புராணமும் மேலும் தொன்மையான சிலபுராணங்களை ஆதாரமாகக் கொண்டது என்று சொல்லும். நம்முடைய புராணங்களுக்கு தொடக்கம்தான் என்ன என்று ஒருமுறை என் ஆசிரியரிடம் கேட்டேன். நம் சம்ஸ்கிருதிகள் எல்லாம் சிதல்புற்றுக்களைப்போல முளைத்தெழுந்தவை என்று அவர் சொன்னார். ஓரிடத்தில் ஒன்று அழிந்தால் இன்னொரு இடத்தில் இன்னொன்று முளைக்கும். வளர்பவை உண்டு தேய்பவை உண்டு. அவற்றை உருவாக்கும் சிதல்கள் மண்ணுக்கு அடியில் எங்கோ வாழ்கின்றன. ஒவ்வொரு புற்றும் கடலில் எழும் சிறு குமிழிபோலத்தான் என்றார்.” சிரித்தபடி “அஸ்தினாபுரி ஒரு குமிழி. மாளவமும் வேசரமும் குமிழிகள். அப்பால் திருவிடமும் தமிழகமும் குமிழிகள்” என்றார்.
பீஷ்மர் சிரித்து “பெரிய குமிழி சிறியவற்றை இழுத்து மேலும் பெரிய குமிழியாக ஆகும் தன்மை கொண்டிருக்கிறது” என்றார். பலபத்ரரும் உரக்கச் சிரித்தார். எதிரே பாதை வற்றிப்போன நதிபோன்ற ஒரு பள்ளத்துக்குள் நுழைந்தது. வித்யுதத்தன் “இதுதான் நான் சொன்ன பாதை. இது இருபது யோஜனை தூரமுள்ளது. மறுபக்கம் பெரிய வறண்டநிலம் வரும். வறண்டமலைகள் நடுவே ஒரேபாதைதான் இருக்கும். வழிதவற வாய்ப்பே இல்லை” என்றான். “நான் உங்களை அந்த எல்லைவரை கொண்டு விடும்போது நீங்கள் எனக்கு வணக்கப்பணம் மட்டும் அளித்தால்போதும்.”
சிவந்த மண்ணும் சரளைக்கற்களும் குவிந்துகிடந்த பாதையில் குதிரைகள் பெருநடையிட்டுச் சென்றன. “இந்த எல்லைக்கு அப்பால் காந்தாரம் இருக்கிறது என்பது நம்பிக்கை. ஆனால் இங்கே எல்லைகள் என ஏதும் இல்லை. ஏனென்றால் சுங்கம் இல்லை” என்றான் வித்யுதத்தன்.
பலபத்ரர் புன்னகைசெய்து “பொருளியல்தரிசனம் ஒன்றைச் சொல்லிவிட்டீர் வித்யுதத்தரே. எல்லை இல்லாததனால் சுங்கம் இல்லை என்றுதான் நான் சொல்லியிருப்பேன்” என்றார். வித்யுதத்தன் வணங்கி “கல்வியறிவில்லை என்றாலும் நான் சிறப்பாகப் பேசுவேன் என்று என் ஊரில் சொல்கிறார்கள்” என்றான்.
“காந்தாரத்தை இப்போது ஆளும் அரசனைப்பற்றி வணிகர்கள் என்ன சொல்கிறார்கள்?” என்று பீஷ்மர் கேட்டார். “வீரரே, விஷ்ணுவில் இருந்து பிரம்மா பிறந்தார். பிரம்மாவிலிருந்து சந்திரன். சந்திரனில் இருந்து புதன். புரூரவஸ், ஆயுஷ், நகுஷன், யயாதி என்று நீண்டு வந்த வம்சத்தில் வந்தவர் துருவசு. துருவசுவின் மைந்தர் வர்க்கன். வர்க்கனின் மைந்தர் கோபானு. அவரது குலவரிசை திரைசானி, கரந்தமன், மருத்தன், துஷ்யந்தன், வரூதன் என்று நீள்கிறது. வரூதனின் மைந்தரான காண்டீரன் காந்தாரன் என்னும் மாமன்னரைப் பெற்றார்” என்றான் வித்யுதத்தன்.
“காந்தாரருக்கு ஐந்து மைந்தர்கள் பிறந்தனர். மூத்தகுலம் காந்தாரகுலமாக ஆகி இந்த மண்ணை ஆள்கிறது. பிறநால்வர் சேரர் சோழர் பாண்டியர் கோலர் என்று சொல்லப்பட்டார்கள். அவர்கள் இங்கிருந்து கிளம்பி தட்சிணத்தை அடைந்து அங்கே எங்கேயோ நாடாள்கிறார்கள்” என்று வித்யுதத்தன் தொடர்ந்தான்.
“இது புதிய புராணமாக இருக்கிறதே. தமிழ்மன்னர்கள் இங்கிருந்தா சென்றார்கள்?” என்றார் பலபத்ரர். பீஷ்மர் “அது அக்னிபுராணத்தில் உள்ள செய்திதான்” என்றார். பலபத்ரர் வியந்து நெடுநேரம் சொல்மறந்துவிட்டார். பின்பு “இந்தத் தொல்நிலத்தின் வரலாற்றை என்றாவது எவராவது எழுதிவிடமுடியுமா என்ன?” என்றார். “நீர் சொன்னதுதான் உவமை. குமிழிகளைக்கொண்டு இதன் வரலாற்றை எழுதமுடியாது. அடியில் வாழும் அழிவற்ற சிதல்களைப்பற்றி எழுதவேண்டும்…”
பலபத்ரர் பெருமூச்சுவிட்டார். அதன் பின் அவர்கள் பேசவில்லை. அந்தப் பாதை சுருள் சுருளாகச் சென்றுகொண்டே இருந்தது. மாலையில் ஓர் ஓடைக்கரையை அடைந்தனர். அங்கே அவர்கள் இளைப்பாறினர். பீஷ்மர் அங்கிருந்த புதர்களுக்குள் சென்று நாணலைப் பிய்த்து வீசி நான்கு முயல்களை வேட்டையாடிக் கொண்டுவந்தார். கற்களை உரசித் தீ உண்டுபண்ணி அவற்றைச் சுட்டு உணவருந்தியபின் அங்கேயே இரவு துயின்றனர். மறுநாள் காலை வெயில் விரியத்தொடங்கியபோது அந்தப்பாதையின் மறுமுனை வந்தது.
“வீரரே, இதோ இதற்கு அப்பால்தான் காந்தாரத்தின் பாலைநிலம் தொடங்குகிறது” என்றான் வித்யுதத்தன். “என்னை அனுப்பினீர்கள் என்றால் நான் நடந்தே சென்று சேர்ந்துவிடுவேன். எனக்கு நல்லூழ் இருந்தால் வழியில் கழுதைமேல் செல்லும் வணிகர்களைப் பார்ப்பேன்.” வித்யுதத்தன் மேலும் பணம் கேட்டு கெஞ்சும் மனநிலையை உருவாக்கிக் கொண்டு “இத்தனை கடினமான பயணத்தை நான் என் வறுமையால் மட்டுமல்ல தங்கள் நலன் கருதியும்தான் செய்கிறேன்” என்றான்.
ஆனால் பலபத்ரர் அளித்த ஐந்து பொற்காசுகளைக் கண்டதும் அவனுடைய வாயும் கண்களும் நிலைத்துவிட்டன. நிமிர்ந்து “தேவா, இது பொன் அல்லவா? பொன்னேதானா?” என்றான். “ஆம், பொன்தான்…” என்றார் பலபத்ரர். “எனக்கா… நான் வேறு ஏதாவது கடினமான பணிகள் செய்யவேண்டுமா?” கண்களில் தந்திரத்துடன் “உளவுப்பணிகளைக்கூட நான் செய்வேன்” என்றான். பீஷ்மர் புன்னகையுடன் “நீர் இதுவரை செய்த பணிக்காகத்தான் இந்தப் பணம். சென்று வாரும்” என்றார்.
பலபத்ரர் “செல்லும் வழியில் எவரிடமும் பொன் இருப்பதைப்பற்றிச் சொல்லாதீர். யவன வணிகர்கள் தந்த பொன் என்று மட்டும் ஊரில் சொல்லும்” என்றார். பீஷ்மர் குதிரையை காலால் தட்ட அது கால்தூக்கிக் கனைத்தபின் பாய்ந்து சரிந்த நிலத்தில் ஓடியது. அதன் கால்பட்டு சிதறிய உருளைக்கற்களும் கூடவே ஓடின. பலபத்ரர் தன் குதிரையைத் தட்டி அந்தச் செந்நிறமான தூசுப்பரப்புக்குள் நுழைந்தார்.